25 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 25

தர்மா அவனின் முதல் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன போதே அவனின் மனதை ஓரளவு ஊகித்திருந்தாள் சத்யா.

ஆனால் அவனின் மனதை அவனே சொல்லி கேட்கும் போது உறைந்து தான் போனாள்.

அதுவும் முதல் காதலே அவள் தான் என்பதே எத்தனை பெரியதான விஷயம்? ஏற்கனவே திருமணம் ஆனவன் எனும் போது முதல் மனைவியின் மீதி சிறிதாவது அவனுக்கு விருப்பம் வந்திருக்கலாம் இல்லையா?

அப்படி இல்லை என்று அவன் சொல்லும் போது இன்னும் சத்யாவிற்குத் தித்திப்பாக இருந்தது.

எந்த ஒரு பெண்ணிற்கும் இருக்கும் நியாயமான ஆசை தான் சத்யாவிற்கும் இருந்தது.

என் கணவன் மனதாலும், உடலாலும் எனக்கு மட்டுமே உரியவனாக இருக்க வேண்டும் என்பது.

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்திருக்கும் கணவன் மீது இன்னும், இன்னும் அவளின் காதல் பொங்கியது.

அவனின் மார்பில் அடைக்கலம் ஆகியிருந்தவள் சிறிது நிமிர்ந்து தானே முதல் முறையாக அவனை இறுக அணைத்திருந்தாள்.

இருவருக்கும் இடையில் நான் காற்றைக் கூட விட மாட்டேன் என்பது போல இறுக்கத்துடன் தன்னோடு அவனைப் பிணைத்திருந்தாள். சந்தோஷத்தில் வாய் விட்டே அழ தோன்றியது அவளுக்கு.

பார்வையில்லா குறையினால் திருமண வாழ்க்கையே கேள்வி குறிதானோ என்ற நிலையில் இருந்தவள் சத்யா. இரண்டாந்தாரமாக வரன் வந்திருக்கிறது என்று வீட்டில் பேச்சு அடிபடவும் தன் நிலைக்கு இப்படிப்பட்ட சம்மதம் தான் கிடைக்குமா என்று எவ்வளவு வருந்தியிருக்கின்றாள்?

தர்மாவின் மீது மட்டும் அவளுக்குக் காதல் வரவில்லை என்றால் தீவிரமாகத் திருமணத்திற்கு மறுத்திருப்பாள். அவளின் பிடிவாதத்தையும் மீறி தர்மாவை கரம்பிடித்தாள் என்றால் அது அவளின் காதலினால் மட்டுமே சாத்தியம் ஆகிற்று.

அந்தக் காதல் அவளுக்குக் கொடுத்த பரிசு மனதாலும், உடலாலும் பரிசுத்தமான கணவன்.

அக்கணவன் மீது பெருகிய காதலை தன் அணைப்பின் மூலம் காட்டினாள்.

அவ்வளவு நேரமாகத் தான் மட்டுமே மனைவியைத் தீண்டிய நிலை போய் மனைவியும் காதலுடன் அணைத்தது தர்மாவிற்குப் பேரின்பமாக இருந்தது.

அதே நேரம் மனைவியின் மனநிலையும் புரிந்தது.

அவளை அணைத்த படியே “கல்யாணம் பேசினப்ப நம்ம வாழ்க்கையில் ஒரு பொண்ணு வர போறாள்னு எதிர்பார்ப்பு இருந்ததுடா. என்னை நம்பி வர போற பொண்ணு. அவளைப் பொறுப்பா பார்த்துக்கணும். என்னோட பொறுப்பும் கூடுதுனு எண்ணம் ஓடியதே தவிரக் காதல் கொண்டு கசிந்துருகினு அப்போ எதுவும் எனக்குத் தோணலை.

சரி கல்யாணத்துக்குப் பிறகு நேசம் தன்னால் வரும்னு நினைச்சுக்கிட்டு அதைப் பெருசாவும் அப்போ எடுத்துக்கலை. அதுக்குப் பிறகு கல்யாணம் அன்னைக்கு இருந்தே மனசுக்கு நெருடலா அந்தப் பொண்ணு நடந்து கொண்டதில் எனக்கு இருந்த எதிர்பார்ப்பு கூட எட்ட நின்னுருச்சுனு தான் சொல்லணும்.

எனக்கு அப்படிக் காதல்னு வராம இருந்தது கூட நல்லதுக்குத் தான்னு பின்னாடி புரிஞ்சது. அதனால் தான் அந்தப் பொண்ணு பிரிஞ்சு போனப்ப எனக்கு வாழ்க்கையே வெறுத்து போற அளவுக்கு வலிக்கலை. ஆனா நீ என்னைச் சில நாள் அவாய்ட் பண்ணியதை கூட என்னால் தாங்க முடியலை. ஒரு போதும் உன் சம்மதம் கிடைக்கவே கிடைக்காதுங்கிற நிலைமை வந்திருந்தால், கண்டிப்பா இன்னொரு பொண்ணு என் வாழ்க்கையில் வந்திருக்க மாட்டாள்.

அதே நேரம் என் வாழ்க்கையில் நீ வர என்ன செய்யணுமோ அதை எல்லாம் செய்துருப்பேன். அதில் ஒண்ணுதான் உன்கிட்ட நான் தான் மாப்பிள்ளைங்கிற விஷயத்தை மறைச்சது. அது உனக்குத் தப்பா தெரிஞ்சா மன்னிப்பு கேட்கும் கடமை எனக்கு இருக்கு சத்யாமா. ஆனா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்…” என்று சொல்லி நிறுத்தினான்.

எனக்கு உன்னிடம் மட்டுமே காதல் வந்தது. நீ விலகியதை தாங்க முடியாமல் தவித்தேன் என்று சொன்னவனை அவனுக்குள்ளே சென்று விட மாட்டோமா என்பது போல இறுக அணைத்துக் கொண்டிருந்த சத்யா அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு மெல்ல முகத்தை மட்டும் பிரித்து அவனைப் பார்ப்பது போல் நிமிர்ந்தவள் “மன்னிப்பு கேட்க தேவையில்லை…” என்றாள் அழுத்தமாக.

“தேவையில்லையா?” என்று புருவத்தை உயர்த்திக் குரலிலும் ஆச்சரியம் பிரதிபலிக்கக் கேட்டான்.

“ஹ்ம்ம்… நீங்க என் வாழ்க்கையில் வர உண்மையை மறைச்சதே நல்லதுங்கும் போது மன்னிப்பு எதுக்கு?” என்று அவன் சொன்னதையே சொல்ல…

அவளின் பூமுகத்தைத் தன் கைகளில் ஏந்தி பார்வையற்ற அந்தக் கண்களின் மீது அழுந்த முத்தமிட்டான்.

உணர்ச்சி வசத்தால் அவளின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் துளிகள் முத்தமிட்டவனின் அதரங்களுக்குள் அடைக்கலம் புகுந்தது.

அவளை விட்டு மெள்ள விலகியவன் “இரண்டாவது சம்பந்தம் வேணாம்னு நீ மறுத்த பிறகும் நான் விடாமல் முயற்சி பண்ணியதற்குக் காரணமே நான் இரண்டாந்தாரமே தவிர என்னுள் இருக்கும் நான் இரண்டாவது இல்லைகிறதால் தான் சத்யா. நான் உடலாலும், மனசாலும் பரிசுத்தமா இருந்ததால் தான் உன் மறுப்பைத் தள்ளி வச்சேன்…” என்றான்.

“ஹ்ம்ம்… புரியுதுங்க. நீங்க உணர்வோடும், உடலோடும் எனக்கு மட்டுமே உரிமையா கிடைச்சது நீங்க எனக்குக் கொடுத்த பரிசு. இந்தப் பரிசு எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு…” என்று குரல் நெகிழ சொல்லியவள் கண்ணோரம் நீர் கோர்த்தது.

அதைக் கண்டவன் மீண்டும் தன் இதழால் அவளின் கண்ணீரை துடைத்தான்.
கண்களின் மீது மீண்டும் முத்தமிட்டதும் இன்னும் உணர்ச்சி வசப்பட்ட சத்யா, “இந்தப் பார்வையில்லாதவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா?” என உதடுகள் துடிக்கக் கேட்டாள்.

“வருத்தமா? எனக்கா? என் வாழ்க்கையின் சக்தியே என் கை வந்து சேர்ந்ததில் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு வார்த்தையில் சொன்னா கூடப் புரியாதுடா. இனி அனுதினமும் என் செயலில் உனக்கே புரியும். நான் சும்மா ஏதோ செல்ல பேருக்கு சக்தின்னு உன்னைக் கூப்பிடுறேன்னு நினைச்சியா?”

“அப்போ செல்லமா அப்படிக் கூப்பிடலையா?” அவள் அந்த அழைப்பை செல்ல, பிரத்யேக அழைப்பு என்று தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹகூம்… கண்டிப்பா இல்லை. நான் சொன்னனே உன்னைப் பார்த்து நாலு வருஷம் ஆச்சுன்னு. அப்போ உன்னை எப்படிப் பார்த்தேன் தெரியுமா?”

“எப்படி?”

“நான் நல்லா நடந்து வெளியுலகத்திற்குத் திரும்ப வந்தப்ப ஒரு வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் இல்லையா… அப்போ இனியா பிறந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. என் பிரச்சனையில் ஏற்கனவே மனம் உடைந்திருந்த நேரத்தில் அனுவுக்கும் குழந்தை பார்வையில்லாம பிறக்க, அந்த நேரத்தில் எங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை…”

“ஹ்ம்ம்… புரியுதுங்க…”

“அனுவோட தலைப்பிரசவம் நாங்க தான் பார்த்து இருக்கணும். ஆனா நான் இருந்த சூழ்நிலையில் எங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு மாப்பிள்ளை நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். அதனால் குழந்தை பிறந்ததும் முதலில் அப்பாவும், அம்மாவும் குழந்தையைப் பார்த்துட்டு வந்தாங்க. நான் நடக்க ஆரம்பிச்ச பிறகு பார்க்க வந்தேன்.

நான் பார்க்க வந்தப்ப குழந்தைக்குச் செக்கப் பண்ணனும்னு சேலம் டவுனில் இருக்கும் அந்தப் பெரிய ஹாஸ்பிடலுக்கு அனு கூட நானும் வந்தேன். அங்க வச்சு தான் இந்தத் தேவதையைப் பார்த்தேன்…” என்றவன் அவளின் முகத்தை விரல்களால் வருடினான்.

“அந்த ஹாஸ்பிடலில் வைத்தா பார்த்தீங்க?” என்று மருத்துவமனையின் பெயரை சொல்லி ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… யெஸ்… அங்கே தான்…”

“அங்கே அன்னைக்குத் தான் முதல் முறையா வந்திருந்தேன். அதுவும் கொஞ்ச நேரம் தானே அங்கே இருந்தேன்?”

“அந்தக் கொஞ்ச நேரத்தில் தான் எனக்குத் தேவையான சக்தியை நீ கொடுத்த…”

“என்ன சொல்றீங்க? உங்களுக்கா? உங்ககிட்ட நான் பேசியதே இல்லையே?”

“என்கிட்ட நீ பேசலை. ஆனா நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்காகவே பேசியது போல இருந்தது. அப்போ எதுக்காக நீ ஹாஸ்பிடல் வந்த?”

“அது என் கூட வேலை பார்க்கிற அக்கா. அவங்களுக்கும் கண்ணு தெரியாது. எனக்காவது பார்த்து பார்த்துச் செய்ய அப்பா, அம்மா, தங்கச்சி இருக்காங்க. ஆனா அவங்களுக்குப் பார்வை தெரியாத காரணத்தாலேயே அனாதையா விடப்பட்டவங்க.

ஆசிரமத்தில் படிச்சு வளர்ந்து எங்க ஸ்கூலில் டீச்சர் வேலைக்குச் சேர்ந்தாங்க. அவங்களின் அந்தக் குறையைச் சாக்கா வச்சு யாரோ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்தி மிஸ்பிகேவ் பண்ணிருப்பான் போல. அந்த அக்கா சூசைட் அட்டம்ட் பண்ணிட்டாங்க. ஹாஸ்பிடலில் சேர்த்து காப்பாத்தின பிறகு அங்கே வந்து அவங்ககிட்ட பேசினேன்…”

“நீ அவங்ககிட்ட பேசின வார்த்தை ஒவ்வொண்ணும் இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்குற மாதிரி தான் இருக்கு. குறை இருக்குங்கிற காரணத்தை வைச்சு ஒருத்தர் ஏமாத்தி நிராகரிச்சுட்டு போனா நம்ம வாழ்க்கையே போனதா அர்த்தம் இல்லை. உங்க அன்பை புரிஞ்சுக்காம போனவனுக்குத் தான் இழப்பு. நமக்குக் கடவுள் குறை கொடுத்திருக்கிறார்னா அதுக்கும் எதுவும் காரணம் இருக்கும். நமக்குன்னு ஒரு குறையையும் கொடுத்திட்டு நம்மை மத்தவங்களை விடத் திறமை வாய்ந்தவரா வேற படைச்சுருக்கார்னா அந்தத் திறமையை நாம சரியான விதத்தில் பயன் படுத்துறோமானு பார்க்கவும் செய்வார்.

அவர் கொடுத்த திறமையை நல்லபடியா யூஸ் பண்ணாம வாழ்க்கையை நாம வெறுத்து என்ன சாதிக்கப் போறோம்? இப்படி இன்னும் நிறையப் பேசி நான் கேட்டேன். நான் பிறவி குறைபாடு உள்ளவன் இல்லனாலும் திடீர்னு ஏற்பட்ட குறையினால் இனி எப்படி வாழ்க்கையை ஓட்ட போறோம்? என் காலு ஏன் இப்படி ஆகணும்னு என்னை நானே வெறுக்குற ஸ்டேஜில் அப்போ இருந்தேன்.

ஆனா நீ பேசிய வார்த்தைகள் ‘உனக்கு இருக்குற குறையை ஒதுக்கி வச்சுட்டு உனக்குன்னு காத்திருக்கிற வாழ்க்கை என்னனு தேடு’ன்னு சொன்னது போல இருந்தது.

அப்புறம் தான் எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கணும்னு உத்வேகம் வந்தது. நான் ஊருக்கு போன மறுநாள் தான் அந்த மாற்று திறனாளியின் டிரைவிங் பற்றிய கட்டுரையைப் பார்த்தேன். அப்புறம் என்ன நடந்ததுனு உனக்கே தெரியுமே?

அப்பாவை தேற்றி விட்டுட்டு அதுக்குப் பிறகு திரும்ப டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கிறதுக்கு நினைச்சப்ப தான் அனு விஷயம் நடந்தது. அனு குழந்தையைக் கலைக்கப் போறேன்னு சொன்னதும் அவளைப் பார்க்க வந்தோம். அவளை அப்படி எல்லாம் பேசாதேனு சொல்லி கண்டிச்சு சரி பண்ணி வச்சோம். அதுக்குப் பிறகு திரும்ப மறுநாள் இனியா சேர போற ஸ்கூல் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்க நேரில் பார்த்துட்டு போகலாம்னு அனுவை கூட்டிக்கிட்டு உங்க ஸ்கூலுக்கு வந்தோம்.

அப்ப தான் ஸ்கூல் கிரவுண்ட்ல திரும்ப உன்னைப் பார்த்தேன். கடந்த நாலு வருஷத்தில் நானும் சாதிக்கணும்னு நினைக்கிறப்ப எல்லாம் உன்னைப் பத்தி ஒரு விவரமும் தெரியாமயே என் ஞாபக அடுக்கில் நீ இருந்துட்டே இருப்ப. அப்போ எல்லாம் தன் குறையைப் பற்றியே பெரியதாக நினைக்காம உத்வேகமா பேசுற பொண்ணுன்னு ஒரு நன்மதிப்பு உன் மேல எனக்கு இருந்தது.

அதைத் தாண்டி வேற எந்த நினைப்பும் இருந்தது இல்லை. திரும்ப உன்னைப் பார்த்தப்ப உன்னைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் வந்தது. அப்போ திரும்பக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அம்மா கேட்டுட்டு இருந்தாங்க. எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன்.

உன்னைப் பார்த்ததும் மனசுக்கு இதமா ஒரு எண்ணம். ஏன் சொன்னேன் எதுக்குச் சொன்னேன்னு கூடத் தெரியாது. அனுக்கிட்ட உன்னைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். அனு என்னை வினோதமா பார்த்தாள். நான் அதை எல்லாம் கண்டுக்கக் கூட இல்லை. விசாரிச்சு உனக்கு இன்னும் மேரேஜ் ஆகலைனு தெரியவும், அடுத்த நிமிஷம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு கேட்க சொன்னேன். நீ என் வாழ்க்கையில் வரணும்னு நினைச்சதை விட உன் வாழ்க்கையோட நானும் இருக்கணும்னு ஒரு பரபரப்பு. அது காதலா இல்லையானு எல்லாம் அப்போ நான் யோசிக்கவே இல்லை.

என் வாழ்க்கை உன்னோடு அமையணும். உன்னில் ஒரு அங்கமா நானும் இருக்கணும்னு மட்டும் தான் தோன்றியது. அப்போ தான் அனுக்காக இங்க வருவதா வேண்டாமான்னு இரண்டு மனநிலையில் குழம்பி இருந்தேன். ஆனா உனக்குன்னு இங்கே ஒரு அடையாளம் இருக்கு. அதை விட்டுட்டுக் கல்யாணம் முடிச்சு என் கூடக் கூட்டிக்கிட்டுப் போய்த் திரும்ப முதலில் இருந்து கஷ்டபடுத்தணுமானு இருந்தது. அதான் நீ இருக்கும் ஊரிலேயே எனக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படித்திக்கலாம்னு வந்துட்டேன்.

கார்த்திக்கிட்ட சொன்ன மாதிரி என் வாழ்க்கையான உன்னைத் தேடி தான் இங்கே வந்தேன்னு சொன்னா பொருத்தமா தான் இருக்கும். உன் கூட வந்திடணும்னு நினைச்சப்பயே என் ‘நெஞ்சம் உன்னில் வீழ்ந்து’ விட்டதை உணர்ந்தேன்…” என்றவன் முகத்தைத் தாங்கி அவளின் பட்டிதழில் மென்மையாக இதழ் பதித்து நிமிர்ந்தான்.

இதழ் முத்தத்தை விட அவன் சொன்ன விஷயத்தில் கிறங்கி தான் போனாள் சத்யா. என் வாழ்க்கையான உன்னைத் தேடி வந்தேன்! எவ்வளவு பெரிய அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகள்? அவளுக்கே அவளுக்கான துணையைத் தானே அவளும் எதிர்பார்த்தாள். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதில் தானே இந்த நிமிடம் அதிக மகிழ்ச்சியான மனுஷியாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டாள்.

“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேங்க. அப்படியே சிறகில்லாமல் பறப்பது போல…” என்றாள் மனம் நெகிழ.

“நானும் தான் ரொம்ப ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் சக்திமா. அதுவும் என்னைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே கல்யாணம் பண்ணிட்டு, உன்னையும் என்கிட்டே கொடுத்த பார். அதில் இன்னும் திக்குமுக்காடி போய் இருக்கேன். அதுவும் எந்தக் காரணத்துக்காகக் கல்யாணம் வேண்டாம்னு நீ சொன்னன்னு ஓரளவு எனக்குப் புரிஞ்சது. இன்னொருத்தி கூட வாழ்த்திருப்பேன்னு உனக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். என்ன சரிதானே?” என்று சத்யாவிடமும் கேட்டான்.

அவள் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை அசைக்க, “ஹ்ம்ம்… அப்படித் தயக்கம் இருந்துமே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன்னையும் கொடுத்து, இது எல்லாம் நீ என் மேல் வைத்த காதலால் தான் சாத்தியம் ஆகிருக்கு…” என்று அவளின் காதலை குறித்த பெரிமிதத்துடன் சொன்னான்.

“நீங்க சொன்னது சரிதான். அந்த விஷயத்தைப் பற்றி எனக்கும் தயக்கம் இருந்தது. ஆனா எந்த நிலையிலும் உங்களை விட்டு கொடுக்க முடியாது தெரிஞ்ச பிறகு, உங்க முதல் வாழ்க்கையைப் பற்றித் தெரிஞ்சு நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அப்படித் தெரிஞ்சு ஒரு வேளை உங்க மனைவி இறந்த… நான் இறந்துட்டாங்கனு தான் நினைச்சுட்டு இருந்தேன். இறந்த துக்கத்தில் இருக்கும் உங்கள் மேல் அனுதாபம் ஏற்பட்டு நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நம்ம காதலால் நாம் ஒன்னு சேர்ந்ததா இருக்கணும். வேற எந்தக் காரணமும் நடுவில் வர கூடாதுனு நினைச்சேன். ஆனா அப்படி இருந்தும் என் மனசில் சின்னத் தடுமாற்றம் வந்தது.

“உங்கள் முதல் மனைவி கூட எப்படி எல்லாம் வாழ்ந்தீங்களோனு…” என்று மேலும் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“உன் மனநிலை புரியுதுடா. அது சாதாரண மனித இயல்பும் கூட. அப்படி நினைப்பு வராம இருக்கவும் முடியாது. அதனால் உன் மேல தப்பு இல்லடா. அதை நினைச்சு வருத்தப்படாதே…” என்றான் அவளைப் புரிந்து கொண்டவனாக.

“இன்னைக்கு நைட் கூட நீங்க என் கூட இருக்கும் போது அப்படி எதுவும் எனக்கு எண்ணம் வந்திடுமோனு பயமா இருந்தது. ஆனா ஒரு நொடி கூட உங்களைத் தவிர எனக்கு எந்த நினைப்பும் வரல. என் தர்மா… என் தர்மானு மட்டும் தான் என் மனசு உச்சரிச்சுக்கிட்டே இருந்தது…” என்று அவள் சொல்லி முடிக்கும் போது அவளின் இதழ்கள் தர்மாவின் அதரங்களுக்குள் மாட்டி கொண்டு தவித்துக் கொண்டிருந்தது.

இதை விடத் தங்களின் காதலை பெருமை படுத்த என்ன வேண்டும்? என்று நினைத்தவன் தன் மகிழ்வை அவளின் இதழ்களில் காட்டினான்.

சிறிது நேரத்தில் பிரிந்து அமர்ந்த சத்யா “அத்தையும் மாமாவும் எப்படி ஈஸியா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாங்க. இனியா அப்படி இருப்பதால் என் குறை அவங்களுக்குப் பெரிசா தெரியலையா?” என்று கேட்டாள்.

“இனியாவும் ஒரு காரணம்டா. ஆனா எனக்குக் குறை வந்ததுக்காகவே முதல் வாழ்க்கை அப்படி ஆனதில் அவங்களுக்கு ரொம்ப வருத்தம் இருந்ததே. குறையால் நிராகரிக்கப்பட்ட வலியை என்னுடன் சேர்ந்து உணர்ந்தவங்கடா அவங்க. அதனால் உன்னைப் பற்றி அவங்களுக்கு எந்தக் குறையும் தெரியலை. நான் கல்யாணத்துக்கு உன்னைப் பொண்ணு கேட்க சொல்லவும், கொஞ்சம் அவங்களுக்குத் தயக்கம் இருந்தது. நல்லா யோசிச்சு தான் கேட்க சொல்றீயானு கேட்டாங்க. என்னோட வருங்கால வாழ்க்கையாவது நல்லா அமையணும்னு ஒரு எண்ணம். இப்போ அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டு இனியொரு முறை கஷ்டப்படக் கூடாதுனு தான் சொல்றோம். அதே மாதிரி பொண்ணுக்குக் கண் தெரியலைனு பரிதாபப்பட்டுக் கல்யாணம் முடிக்க நினைக்காதே.

பரிதாபப்பட்டுக் கல்யாணம் பண்றது அந்தப் பொண்ணுக்கு நரகம் மாதிரி ஆகிடும். அந்தத் தப்பை மட்டும் செய்துடாதே. அப்படினு உனக்காகவும் பார்த்தாங்க. அவங்க அப்படிச் சொன்னதுக்குப் பரிதாபப்பட்டு எல்லாம் கல்யாணம் முடிக்க நினைக்கலை. இனி கல்யாண வாழ்க்கையில் சந்தோஷம்னு ஒன்னு வரும்னா அது சத்யா மூலமா தான்னு எனக்குத் தோணுது. அதுக்காகத் தான் பொண்ணு கேட்க சொல்றேன்னு சொன்ன பிறகு தான் பொண்ணு கேட்டாங்க… என்றவன், “கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மனநிலையும் யோசிச்சுட்டு தான் சரினு சொன்னாங்க. இனி பாரு அனுவை போல உன்னையும் அப்பா, அம்மா தாங்குவாங்க…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்துடன் தர்மாவின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

தர்மா மட்டும் இல்லாமல் அவனின் குடும்பமும் அவளுக்காக யோசிப்பது மனதை உருக்கியது.

தனக்கு நல்ல புகுந்த வீடும் கிடைத்திருக்கிறது என்ற நிறைவு உண்டாகக் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் முகத்தைத் திருப்பி அவனின் இதயப்பகுதியில் தன் இதழை அழுத்தி வைத்து தன் மன மகிழ்வை காட்டினாள்.

அவளைத் தனக்குள் பொதித்துக் கொண்டவன், “இந்தப் பரிசை வேற இடத்தில் கொடுத்திருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்…” என்றான் குறும்புடன்.

“எங்கே?” கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

அவளின் விரலை எடுத்து தன் உதட்டின் மீது வைத்து, “இங்கே…” என்றான்.

அதில் வெட்கம் வர “அதான் இவ்வளவு நேரம் கொடுத்தீங்களே?” என்று முனங்கினாள்.

“அது நான் தானே கொடுத்தேன். நீ கொடுக்கவே இல்லையே…?” என்றான் வருத்தம் போல. அவனின் கண்ணில் மட்டும் குறும்பு மின்னியது. அதைச் சத்யாவால் பார்க்க முடியவில்லை என்றாலும் குரலில் தெரிந்த வேறுப்பாட்டை வைத்து கண்டு கொண்டாள்.

கூச்சத்துடன் இன்னும் அழுத்தமாக அவனின் மார்பில் புதைந்து கொண்டாள்.

“ஹ்ம்ம்… என் அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல. ஏற்கனவே முதல் ராத்திரியில் பாதி நேரம் பேசியே போய்டுச்சு. இப்போ இரண்டாவது பகல் வரவும் நேரம் வந்திடுச்சு. இன்னும் ஒரு முத்தத்துக்குக் கூட வழியைக் காணோம்…” என்று புலம்பினான்.

“ஆமா பேசுறதுக்கு முன்னாடி ஒண்ணுமே நடக்காத மாதிரி புலம்பலை பார்…” மார்பில் உதடுகள் உரச முணுமுணுத்தாள்.

“ஒண்ணுமே நடக்காத மாதிரியா. ஆமா நமக்குள்ள என்ன நடந்தது?” அறியாபிள்ளை போலக் கேட்டு வைத்தான்.

அவன் கேட்ட கேள்வியில் சட்டெனத் தன் கையால் அவனின் வாயை மூடி “ஷ்ஷ்… இப்படியெல்லாம் கேட்க கூடாது…” என்றாள் வெட்கத்துடன்.

“சரி கேட்கலை, செயல் படுத்தலாம்…” என்று அவளின் காதில் முனங்கியவன் மென்மையாக அவளின் மேனியை தீண்ட ஆரம்பித்தான்.

அவனின் கையைப் பிடித்துத் தடுத்தவள் “எனக்கு உங்க முகம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்…” என்றாள்.

“எப்படிடா தெரிஞ்சிப்ப?” என்று மெல்லிய வருத்தம் இழைந்தோட கேட்டான்.

அவனை விட்டு பிரிந்து அமர்ந்து கையை நீட்டி அவனின் முகத்தைப் பற்றி “இப்படி…” என்று சொல்லிக் கொண்டே அவனின் நெற்றி, கண், காது, மூக்கு, கன்னம் என்று தடவி பார்த்துக் கொண்டே வந்து அவனின் மீசை அருகில் வந்ததும் அவளின் கை தேங்கி நின்றது.

தன்னை அறிந்து கொள்ள அவள் செய்வதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அமர்ந்திருந்தவன், “அப்படியே ஒரு இன்ச் கையை இறக்கினா, நான் கேட்டது கிடைக்கும் இடம் வந்திடும்…” என்று குறும்பாகச் சொல்லிக் கொண்டே தானே அவளின் கையைப் பிடித்து உதட்டின் மீது வைத்து அதில் அழுந்த இதழ் பதித்தான்.

இதழ் பதித்ததில் கூச்சம் ஏற்பட்டதைக் காட்டி கொள்ளாமல் அவனின் உதட்டை விரல் கொண்டு வருடி பார்த்தாள். பின்பு மெல்ல அவனை நெருங்கி அவன் கேட்ட இதழ் முத்தத்தை அந்த முரட்டு அதரங்களில் பதித்தாள்.

அதில் சந்தோஷமடைந்த தர்மா இன்னும் இன்னும் அவளின் இதழை பிரிய விடாமல் தீண்ட வைத்தான்.

மீண்டும் அவர்களுக்கேயான சுருதி, பல்லவி, லயம் எல்லாம் சேர்ந்த காதல் பாட்டு பாடுவதற்கான ஆயத்தங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன.