23 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 23

மங்கல வாத்தியம் முழங்க சத்யவேணியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மணவாட்டியாக மாற்றிக் கொண்டான் தர்மேந்திரன்.

அவனின் முகத்தில் விரும்பியவளையே கை பிடித்த பூரிப்பு இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கண்டு மனம் மகிழ்ந்தனர் நீலகண்டன், சாவித்திரி தம்பதியினர்.

சத்யாவோ தன் கழுத்தில் உராய்ந்த தர்மாவின் விரல்களின் ஸ்பரிசத்தில் சிலிர்த்து, கழுத்தில் புதிதாக ஏறிய மங்களநாணை பார்க்க முடியாதென்றாலும் கழுத்தில் இருந்து மார்பு வரை தன் மேனியுடன் உறவாடிக் கொண்டிருந்த தாலியை மனக் கண்ணால் உணர்ந்து கையால் மென்மையாக வருடி பார்த்துக் கொண்டாள்.

படபடத்த இமைகளுடன், மங்கள நாணை உணரும் உணர்வை முகத்தில் காட்டிக் கொண்டு இதழோரம் சுளித்த சந்தோச சிரிப்பும் என இருந்தவளை இமைகொட்டாமல் பார்த்தான் தர்மா.

சத்யாவின் மனநிலை புரிந்தவன் போல் அவளின் உள்ளங்கையுடன் தன் உள்ளங்கையைக் கோர்த்தவன் விரல்கள் பத்தும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து உறவு கொண்டாட விட்டு விரல்களை நெருக்கி தன் உரிமையைக் காட்டினான்.

அவனின் உரிமையில் இன்பமாய் உணர்ந்தாள் சத்யா. ‘தன் கணவன் இவன்!’ உள்ளத்தில் இன்ப பிரவாகம் எடுத்தது.

பற்றிய கையை விடாமல் எழுந்து சென்று பெற்றவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, சத்யாவின் பெற்றோர் இருந்த பக்கம் அழைத்துப் போனான்.

வசந்தாவும், தியாகராஜனும் சொல்லில் அடங்கா உணர்வுகளுடன் கண்ணில் கண்ணீர் தேங்க நின்றிருந்தனர்.

மகளுக்கு ஒரு திருமணத்தை முடித்து விட மாட்டோமா என்று அவர்கள் தவித்த தவிப்பு இன்று அடங்கியதில் பூரித்த மனதுடன் நின்றிருந்தனர்.

மகளின் கன்னத்தைக் கைகளில் தாங்கிய வசந்தா அவளின் நெற்றியில் முத்தமிட்டு உச்சி முகர்ந்தார்.

தியாகராஜன் வார்த்தைகளின்றித் தர்மாவின் கையைப் பிடித்துக் கொண்டார்.

அவரின் மனநிலை புரிந்தது போல அவரைப் பார்த்து தன் அக்மார்க் மென்னகையைச் சிந்தினான்.

சத்யா “அப்பா…” என்றழைத்து தந்தையின் முழங்கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த தியாகராஜனுக்கு மகளை மணக்கோலத்தில் பார்த்துக் கண்ணோரம் கசிந்தது. ஆனாலும் அதை மறைத்தவர் “நல்லாருடா சத்யா…” என்றார் குரல் நெகிழ.

தர்மாவிடம் பேசிய பிறகு தந்தையிடம் மனம் விட்டு பேசியிருந்தாள் சத்யா. தர்மா கடைக்கு வரும் போதெல்லாம் அவனைப் பற்றிய விவரம் எதுவுமே தெரியாதது போல், புதிதாகத் தெரிந்து கொள்வது போல் ஏன் நடந்து கொண்டார் என்று கேட்டாள்.

“உன்னை வரன் கேட்டு வந்தப்ப, அவரைப் பற்றிய பொதுவான விவரம் மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்மா. ஆனா கால் எப்படி அவருக்கு அப்படி ஆனது. புதுசா அவர் டிரைவிங் ஸ்கூலில் செய்த முயற்சி எல்லாம் அன்னைக்குக் கடையில் வைத்துப் பேசிய போது தெரிந்து கொண்டது தான்.

அதுக்குப் பிறகும் மாப்பிள்ளையை நான் தனியா சந்திச்சு இன்னும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். உன் முன்னால அவரைப் பற்றிப் பேசினா உனக்கும் அவரைப் பிடிக்கலாம்னு தான் உன் முன்னாடியே கால் பற்றி எல்லாம் விவரமா கேட்டேன். அவர் ரொம்பத் தங்கமானவர்மா. அவரை நீ கைபிடிச்சா ரொம்பச் சந்தோஷமா இருப்பனு தோணுச்சு. அதான் அவரைப் போல ஒரு மாப்பிள்ளை நானே தேடினாலும் கிடைக்காதுனு தான் உன்கிட்ட நானும், உன் அம்மாவும் திரும்ப, திரும்பப் பேசினோம். அவர் தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சா வேண்டாம்னு சொல்லி, எங்க நீ தனிமரமா நின்னுடுவியோனு தான் நாங்க உண்மையை மறைச்சோம்…” என்று அவரின் நிலையை விளக்கமாகச் சொல்லியிருந்தார்.

சத்யாவும் தாய், தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டாள்.

“இங்க நானும் ஒரு பெரிய மனுஷி இருக்கேன். அப்படியே என்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க…” என்று குறும்புடன் கேலி செய்து தந்தை, மகளின் பாச பரிமாற்றத்தை கலைத்தாள் கார்த்திகா.

“ஆசீர்வாதம் தானே? வாங்கிட்டா போச்சு… இங்கே பக்கத்தில் வா…!” என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு அழைத்தான் தர்மா.

அவனின் தீவிரத்தை பார்த்து நிஜமாகத் தான் சொல்கின்றானோ என்று பயந்து துள்ளி குதித்து விலகி போனாள்.

அவளின் ஓட்டத்தைக் கண்டு இறுக்கமான முகத்துடன் இருந்த தர்மாவின் கண்கள் கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தது.

அவனின் கேலியை கண்டு கொண்டவள், “என்ன மாமா அசராம இருந்தே அசர வைப்பீங்க போல? நிஜமாத்தான் சொல்றீங்களோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்…” என்று நெஞ்சில் கை வைத்து பயந்தவள் போல் சொன்னாள்.

“நிஜமாத்தான் சொல்றேன்… எங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கக் காரணமே நீ தான். உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கலைனா தான் தப்பு…” என்று அவளின் பக்கம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்து வர,

“ஐயா சாமி! ஆளை விடுங்க…! காலில் விழுந்து என்னைக் கிழவியாக்கிட்டு நீங்க சின்னப் பையனா மாறிடலாம்னு ஐடியாவா? நான் இந்த ஆட்டத்துக்கு வரலை சாமி…” என்று அலறியவள் வேகமாகத் தாயின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்.

“ஆஹா! என் ஐடியாவை சரியா கேட்ச் பண்ணிட்டியே… இது நல்லதுக்கு இல்லையே…” என்று வில்லன் குரலில் பேச, சுற்றியிருந்தவர்கள் அவர்களின் விளையாட்டில் சிரித்தார்கள்.

முதலில் மகளின் பேச்சில் அவளை அதட்ட நினைத்த வசந்தா மருமகன் கண்ணில் தெரிந்த கேலியை பார்த்து அவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவர் இப்போது சிரித்துக்கொண்டே மகளின் காதை பிடித்துத் திருகினார்.

“ஐயோ! அம்மா விடுங்க!” என்று அவள் பொய்யாக அலற, மீண்டும் அவ்விடத்தில் சிரிப்பலை எழுந்தது.

“கார்த்திமாவை விடுங்க அத்தை. பாவம் அவளுக்கு வலிக்கும்…” என்று தர்மா பரிந்து கொண்டு வர, ‘எனக்குக் கேட்க என் மாமா இருக்காராக்கும்’ என்று அன்னையைக் கெத்துப் பார்வை பார்த்து வைத்தாள்.

தர்மாவின் கேலி பேச்சையும், தங்கைக்குச் சரியாக அவன் விளையாடுவதும் காதால் கேட்டு ஆச்சரியத்துடன் நின்றிருந்தாள் சத்யவேணி.

அவனின் குரலில் இருந்த துள்ளலும், உற்சாகமும் சத்யாவிற்குப் புதியது. அவனின் பேசும் தன்மையை வைத்துச் ‘சீரியஸ் டைப் போல’ என்று நினைத்திருக்கின்றாள். ஆனால் அப்படி இல்லாது இருந்த அவனின் இந்தப் புது முகம் சத்யாவிற்குப் புதுமையாக இருந்தது.

அவளின் யோசனையைக் கலைப்பது போல “ரொம்ப நாளைக்குப் பிறகு உன் முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை பார்க்கிறேன் அண்ணா. இனி எப்பயும் நீ இப்படிச் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்…” மனமும், குரலும் நெகிழ சொல்லிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

‘ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தோசமா இருக்கிறாரா? அப்போ இத்தனை நாளும் ரொம்பக் கஷ்டப்பட்டாரோ?’ என்று சத்யாவிற்கு யோசனை ஓடியது.

‘அவனின் முதல் மனைவியை இழந்திருக்கின்றான். அப்போ சந்தோசமாவா இருக்க முடியும்?’ என்றும் தோன்ற, ‘ப்ச்ச்… இப்போ எதுக்கு அந்த முதல் மனைவியோட நினைவு?’ என்று தன்னையே மானசீகமாகத் திட்டிக் கொண்டாள்.

அவளை மேலும் சிந்திக்க விடாமல் திருமண நிகழ்வுகளும் அவளுக்குத் துணை புரிந்தன.

சத்யா திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டாலும் இன்னும் தர்மாவின் முதல் திருமணத்தைப் பற்றிய சஞ்சலம் அவளின் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அவன் மேல் வைத்த காதலால் அவனுடனான திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாலும் அவளின் மனம் அனைத்திலும் தான் இரண்டாவது தான் என்ற எண்ணத்தை விடுவதாக இல்லை. இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்தவனுடன் நானும் வாழ போகின்றேன் என்ற உறுத்தல் அவளின் மனதின் ஓரம் இருந்து கொண்டு அவளைக் குடைந்து கொண்டே இருந்தது.

அவனின் முந்தைய வாழ்க்கை பற்றித் தெரிந்து அதை மனதில் சுமந்து கொண்டு திருமணம் செய்யக் கூடாது என்ற அவளின் எண்ணத்தை அவளின் மனமே சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருந்தது.

நினைக்கக் கூடாது என்று நினைக்க நினைக்கத் தான் அதைப் பற்றிய நினைவு நம் மனதை பெரிதும் ஆக்கிரமிக்கும் என்று தெரிந்தே அதைச் செய்யும் மனிதமனம் சத்யாவையும் விட்டுவைக்க வில்லை.

அவனிடம் முன்பே பேசியிருந்தால் கூட இவ்வளவு சஞ்சலம் அவளின் மனதை ஆட்கொண்டிருக்காது போல்.

அவள் தள்ளி போட போட தான் இன்னும் அந்த விஷயம் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டதோ?

அன்று பூங்காவில் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு இரு வீட்டு பெரியவர்களிடமும் தர்மாவே பேசினான்.

சத்யாவின் சம்மதம் கிடைத்ததும், அடுத்து இருந்த முகூர்த்தத்திலேயே திருமணத்தைப் பெரியவர்கள் பேசி முடிவு செய்தார்கள்.

கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டுக் கோவில் மண்டபத்திலேயே விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருமணத்திற்குப் பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து புகழேந்தியும் வந்திருந்தான்.

முதலில் தர்மாவின் காலின் நிலையை யோசனையுடன் பார்த்தவன், அவர்கள் இருவரும் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அந்த யோசனையைக் கைவிட்டான்.

அதோடு திருமண நிகழ்வில் பூரித்திருந்த சத்யாவின் முகம் அவனின் மனதில் இருந்த நெருடலையும் விலக்கி தள்ளியது.

‘அவரை விரும்பியதால் தான் என்னை மறுத்தாங்க போல. இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் கேட்டுருக்கவே மாட்டேனே. பாவம் சத்யாவிற்குச் சங்கடத்தைக் கொடுத்து விட்டேன். இனியாவது அவங்க நல்லா இருக்கட்டும். எனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்காமயா போவா? அவளைத் தேடி கண்டு படிச்சு குடும்பஸ்தனா ஆகிக்க வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டான்.

கிடைப்பதை தனக்குப் பிடித்ததாக மாற்றிக் கொள்ளும் அவனின் குணம் அவனுடன் இருக்கும் போது சில தோல்விகள் கூட அவனுக்குச் சுகமானதே!

அவனின் துணை அவனைத் தேடி வரும் காலமும் வெகு தூரத்தில் இல்லை!

திருமண நிகழ்வுகளை முடித்துக் கொண்டு முதலில் தர்மாவின் இல்லத்திற்கு மணமக்களை அழைத்து வந்தார்கள். பால், பழம் கொடுக்கும் சடங்கு முடியவும், சத்யாவின் வீட்டிற்கும் சென்று அந்தச் சடங்கை முடித்துக் கொண்டு மீண்டும் தர்மாவின் வீட்டிற்கு வர மாலையானது.

அன்றைய நேரம் இறக்கை கட்டியது போல் பறக்க, இரவு உணவிற்குப் பிறகு சத்யாவிற்கு மிதமான அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் அனு. வசந்தாவும் கூடவே இருந்தவர் அவள் தயாராகவும், “நாங்க இப்போ கிளம்பிருவோம் சத்யா. திரும்பக் காலையில் வர்றோம்…” என்று சொன்னவர் மகளின் கன்னத்தை வருடி கொடுக்க, அவரின் கையைத் தன் கன்னத்தோடு அழுத்தி பற்றிக் கொண்டவள் “தேங்க்ஸ் மா…” என்றாள்.

இத்தனை நாளும் அவளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவளின் குறையை நினைத்து அவள் ஏங்காத வண்ணம், அடுத்தவர்களின் பேச்சுக்கள் எதுவும் பாதிக்காத வண்ணம் கவனித்து வளர்த்து இப்போது அவளின் திருமணத்தையும் சிறப்பாக முடித்து வைத்த பெற்றவர்களின் மகளாகத் தான் பிறந்ததை நினைத்து அவளின் மனம் நிறைந்திருந்தது.

“அம்மாவுக்குப் போய் யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா? நீ எதையும் மனதில் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா வாழ்ந்து காட்டு! அது தான் அம்மாவுக்கும் சந்தோசம்…” என்றார் அவளின் மன சஞ்சலங்களை அறிந்தவராக.

அம்மாவிற்குத் தெரியாதா மகளின் மனகிலேசம்? அவள் திருமணத்திற்கு மறுத்த காரணம் என்னவென்று தெரிந்தவர் வேறு. தர்மாவை திருமணம் செய்யச் சம்மதித்து இருக்கிறாள் என்றால் அவனை அவள் விரும்பியதால் தான்!

ஆனாலும் அவள் மறுத்த காரணம் மட்டும் அப்படியே தான் இருக்கின்றது. அந்தக் காரணத்தில் அவளின் விருப்பத்தையும் மீறி மாப்பிள்ளையிடம் அவள் வெறுப்பைக் காட்டிவிடக் கூடாது என்று அந்தத் தாயின் மனம் தவித்தது. அதைத் தான் மறைமுகமாக மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘சரி’ என அவள் தலையசைக்கவும், வசந்தா கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் “நாங்களும் இப்போ கிளம்பிருவோம் அண்ணி. அப்பாவும், அம்மாவும் எங்க கூடத்தான் இன்னைக்குத் தங்குவாங்க. உங்களுக்குத் தேவையானதை அண்ணா பார்த்துப்பான். ஆல் தி பெஸ்ட்…!” என்று அனுசுயா சொல்ல,

“என்ன நாங்க மட்டும் இங்கே தனியாவா? ஏன் அத்தை, மாமா இங்கே இருக்கட்டுமே?” அனைவரும் சென்று விட்டால் எப்படி என்பது போலச் சத்யா தயங்கினாள்.

“எங்க வீடு இங்க பக்கத்தில் இந்தத் தெரு கோடில தான் இருக்கு அண்ணி. அதனால் எந்தப் பயமும் இல்லாம ரிலாக்ஸா இருங்க. அண்ணாவே உங்களை நல்லா பார்த்துப்பார்…” என்று சத்யாவின் பதட்டமான முகத்தைப் பார்த்து அவளின் கையைப் பிடித்து அழுத்தி பேசினாள்.

“ஹம்ம்… சரி…” என்று தயக்கத்துடன் சொன்னவள் “நீங்க என்னைப் பேர் சொல்லியே கூப்பிடுங்களேன் அனு…” என்றாள்.

“ம்கும்… அது முறை இல்லை அண்ணி. அன்னைக்குத் திறப்பு விழா அப்பவே அண்ணினு கூப்பிடலாம்னு இருந்தேன். ஆனா அப்போ அண்ணா தான் வேண்டாம்னு சொல்லிட்டான்…” என்றவள் நாக்கை கடித்து “ஸ்ஸ்ஸ்… ஸாரி அண்ணி அண்ணாவை ஒருமையில் கூப்பிட்டே பழகிருச்சு… அதான்…” என்றாள் சத்யா என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்துடன்.

அவளின் முகத்தைப் பார்த்த வண்ணம் தான் சத்யா பேசிக் கொண்டிருந்ததால் மென்மையாகச் சிரித்து, “நீங்க பிறந்ததில் இருந்தே பழகின பழக்கத்தை எனக்காக மாத்திக்க வேண்டாம் அனு. எப்பயும் போலப் பேசுங்க. நான் வந்ததால் உங்களுக்குள் அண்ணா, தங்கை உறவு இல்லைனு ஆகிடாது. நீங்க எப்பவும் போலப் பேசுறது தான் எனக்கும் பிடிக்கும்…” என்ற சத்யாவின் தோளை அழுத்தி பிடித்தாள் அனுசுயா.

அவள் வலிக்கும் படி பிடிக்கவில்லை என்றாலும், முன்பை விட இருந்த கூடுதல் அழுத்தத்தை உணர்ந்து சத்யாவின் நெற்றிச் சுருங்கியது.

அவளுக்குப் பார்வை இருந்திருந்தால் அனுவின் கண்ணீரையும் கண்டிருப்பாள்.

சத்யாவின் நெற்றி சுருக்கத்தைப் பார்த்து தன் கையைத் தளர்த்திய அனு, அவளின் தலை முடியை சீர் செய்து விட்டு, மல்லிகையைச் சூடி பின்னையும் குத்தியவள், “தேங்க்ஸ் அண்ணி… நேரமாச்சு, நாங்க கிளம்புறோம்…” என்று லேசாகச் சிரித்தபடியே கிளம்பினாள்.

சாவித்திரியும் அவளிடம் சொல்லி விட்டு செல்ல வர, அவரிடம் முதல் முதலில் தங்கள் வீட்டிற்கு வந்த போது தான் கோபமாக நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டாள் சத்யா.

“மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சத்யா. ஒரு பொண்ணா உன் மனநிலையை என்னால் புரிஞ்சுக்க முடிஞ்சது. உன் மாமாவும் நான் எடுத்துச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். அதனால் அதைப் பற்றிக் கவலைப்படாம சந்தோஷமா இருக்கணும்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் வெளியே கேட்ட பேச்சுச் சத்தம் குறைந்து வெளி கதவை மூடும் சத்தம் கேட்டது.

தொடர்ந்து தர்மாவின் நடையின் சத்தம் கேட்க, இங்கே சத்யாவின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவள் இருந்த அறையின் கதவும் மூடும் சத்தம் கேட்க, சத்யாவின் உடலில் மெல்லிய நடுக்கமே ஓட ஆரம்பித்தது.

அவன் ஏன் இவ்வளவு மெதுவாக வருகின்றான் என்பது போலவும் மனம் தவித்தது. அச்சோ! வருகின்றானே என்பது போல உள்ளம் வேகமாகத் துடிக்கவும் செய்தது.

இரு வேறு மனநிலையில் தவித்தவளின் பின்புறம் வந்து நின்று அவளின் தோளின் மீது கை வைத்தான்.

அவன் கையை வைத்த அடுத்த நொடி இருக்கையில் இருந்து பதட்டமாக எழுந்தாள்.

“உன் தர்மாடா… என்கிட்ட ஏன் இந்தப் பதட்டம்?” மென்மையாகக் கேட்டான்.

“ஹான்… ஒன்னுமில்லை… சும்மா…” என்று ஏதோ வாய்க்கு வந்ததை அவள் உளற,

அவளின் உளறல் அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

“இந்தப் பதட்டத்தை நான் சரி பண்ணட்டுமா?” என்று குறும்புடன் கேட்டான்.

அவளுக்கு இருந்த பதட்டத்தில் என்ன சொல்கிறோம் என்று சட்டென்று பிடிபடாமல் ‘சரி… ‘ என்று தலையசைத்தாள்.

அதில் உற்சாகமாக இன்னும் அவளின் பின்புறமாக நெருங்கியவன் முன்னால் கையை நீட்டி அவளின் வயிற்றைச் சுற்றி போட்டு தன் உடலோடு உரச தன்னுடன் பிணைத்துக் கொண்டவன் அவளின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

“ஹா… என்ன… என்னதிது…?” என்று கூச்சத்துடன் தடுமாறினாள்.

முதல் முறையான தன்னவனின் நெருக்கமான ஸ்பரிசம். கையைத் தாண்டி அவன் தீண்டல் இருந்தது இல்லை. கையில் அடிப்பட்ட போது லேசாக அணைத்தது எல்லாம் அப்போதிருந்த வலியில் அவனின் ஸ்பரிசத்தை உணரும் நிலையில் அவள் இல்லை. காலையில் மாங்கல்யம் சூட்டும் போதும், குங்குமம் வைக்கும் போதும் பட்டும் படாத தீண்டல் இருந்தது.

இப்போது உடலோடு உடல் முழுவதும் உரச அவனின் தேகம் முழுவதையும் உணரும் இத்தருணம் அவளைத் திகைத்து திக்கு முக்காட வைத்தது.

வயிற்றில் அழுத்தியதோடு மட்டும் இல்லாமல் வீணையை மீண்டுவது போல் விரல்களால் வருடியவனைத் தடுக்கக் கூட முடியாமல் திணறி போனாள்.

கழுத்தில் வேறு அவனின் மீசை ரோமங்கள் உராய வார்த்தை இல்லா பரவசம் அவளை ஆட்கொண்டது.

இமைகளை இறுக மூடி ஊன்றுகோலை தாங்கியிருந்த அவனின் கையை இறுக பிடித்தாள்.

அப்போது அவளுக்கு அவனின் காலின் நிலை ஞாபகம் வர, “ஹம்ம்…” என்று முனங்கி கொண்டே மெல்ல விலக முயன்றாள்.

“ஹகும்…” என்று மறுப்பாய் முனங்கி கொண்டே இன்னும் நெருக்கமாகத் தன்னுடன் அவன் பிணைத்துக் கொண்டதில் காலின் ஞாபகம் அவளுக்கு அப்பால் போனது.

“உன் பதட்டத்தைப் போக வைக்கிறேன்டா. தள்ளி போனா பதட்டம் போகாது. இன்னும் பக்கத்தில் வா…” என்று கிசுகிசுப்பாக அவளின் காதில் உதட்டால் உரசிக் கொண்டே ரகசியம் பேசினான்.

அதில் சிலிர்த்துப் போனவள் “பதட்டம் போயிருச்சு…” என்று முனங்கி தர்மாவிடமிருந்து விடுபட முயன்றாள் சத்யா.

“அப்படியா? அப்போ…” என்று சொல்லிக் கொண்டே அவள் வயிற்றில் இருந்த கையை வைத்தே இழுத்து தன் பக்கம் வேகமாக ஒரு சுழற்றுச் சுழற்றினான்.

அவன் திருப்பிய வேகத்தில் அவனின் மீதே மோதி “ஆ…” என அதிர்ந்து லேசாகக் கத்தினாள்.

“ஒன்னுமில்லை சக்திமா…” அவளின் பயத்தைப் போக்க தன் மார்பிலேயே சாய்த்து முதுகை இதமாகத் தடவி விட்டான்.

மார்பில் சாய்ந்திருந்தவளுக்கு அதிர்வு நீங்கி ரசனை உண்டானது.

‘சரியான கேடியா இருப்பார் போலயே?’ என்று நினைத்தவளுக்கு இதழின் ஓரம் சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

தன்னவனின் மார்பில் இதமாகத் தலையைச் சாய்த்து அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தாள்.

அதை உணர்ந்தவன் மெல்ல குனிந்து அவளின் முகத்தைப் பார்த்து விட்டு “உன் பதட்டம் முழுசா போயிருச்சுடா. அடுத்து பாட்டு பாடலாமா?” என்று காதில் தன் இதழை அழுத்தி முத்தமிட்டு கிசுகிசுத்தான்.

இதழின் ஸ்பரிசத்தில் கூசியவள், “பாட்டா? என்ன பாட்டு?” என்று தானும் கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

அவளின் முகத்தைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தியவன், சத்யாவின் முகத்தை ஆசையாகப் பார்வையால் பருகி கொண்டே, “காதல் பாட்டுடா… நீயும் நானும் மட்டுமே பாடும் பாட்டு…” என்று அவன் சொன்னதின் அர்த்தம் முழுதாக விளங்காத பாவனையில் அவள் நிற்க…

தன் கையை அவளின் மேனியில் தீண்ட விட்டு என்ன பாட்டு என்பதைச் செயலில் காட்டினான்.

“இந்தப் பாட்டு…” என்று சொன்னவன் “சக்திமா இப்போ முத்தம் கொடுக்கப் போறேன்…” என்றான் குறும்புடன்.

‘அச்சோ! இதைக் கூடச் சொல்லுவாங்களா…?’ என்ற பாவனையில் அவளின் முகம் சிவக்க,

“அப்போ சுழற்றும் போது பயந்த இல்லையா? அதான் சொல்லிட்டுச் செய்யப் போறேன். நான் திடீர்னு முத்தம் கொடுத்து, நீ அதில் பதட்டமாகி, திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியது வந்தால் நேரம் வேஸ்ட் ஆகும்ல…” என்று சிரிப்புடன் சொன்னான்.

அவனின் குரலில் இருந்த சிரிப்பையும் கேலியையும் உணர்ந்து கொண்டவளுக்கு மேனி முழுவதுமே சிவப்பது போலத் தோன்றியது.

அவளை மேலும் சிவக்க வைக்கும் பொருட்டு, அவளின் சிவந்திருந்த இதழ்களைப் பட்டும் படாமல் மென்மையாகத் தீண்டி, அப்படியே அழுத்தத்தைக் கூட்டி வன்மைக்குத் தாவினான்.

முத்தம் என்றதும் கன்னத்தில் தான் கொடுப்பான் போல என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் நினைப்பை பொய்யாக்கி, தன் இதழ்களில் மையம் கொண்டிருந்த அவனின் அதரங்களின் அதிரடியில் இன்பமாய் அதிர்ந்து தான் போனாள்.

நின்று கொண்டே இதழில் ஆரம்பித்து வைத்த முத்த பாட்டை, நீள வைத்துப் படுக்கையில் தாம்பத்தியம் என்னும் காதல் பாட்டில் முடித்து வைத்தான் தர்மா.

தன்னையும் அறிய வைத்து அவளையும் புதிதாக அறிந்து கொள்ள வைத்தான்.

சத்யா தங்களின் தாம்பத்தியத்தின் போது அவனின் முதல் மனைவியுடன் அவன் வாழ்ந்த நினைவு தனக்கு வருமோ என்று ஒரு நாள் பயந்தது உண்டு. அது ‘என் கணவன் எனக்கு மட்டுமே’ என்ற ஒரு பெண்ணின் சாதாரண மனநிலை.

அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும், ஏனோ அந்த நினைவை ஒதுக்கி தள்ள முடியாமல் அன்று தவித்துத் தான் போனாள்.

அவன் தன்னைத் தீண்டும் போது அப்படி எதுவும் நினைவு வந்தால் தங்கள் வாழ்க்கையே நெருடலில் அல்லவா ஆரம்பிக்கும். அப்படி மட்டும் நடந்து விடக் கூடாதே என்று தவிப்புடன் நினைத்திருக்கின்றாள்.

ஆனால் இன்று அவள் பயந்தது போல் இல்லாமல், அவனும், அவளும் மட்டுமே ஆன உலகம் மட்டும் தன்னைச் சுற்றிச் சுழல்வதாகத் தர்மா அவளை உணர வைத்தான்.

அவன் அந்த அறைக்குள் வந்ததில் இருந்து அவளுக்கு வேறு எந்த எண்ணமும் அண்டவில்லை. என்னவன் என் அருகில் வருகின்றான். என்னவன் தன்னைத் தீண்டுகின்றான் என்பது மட்டுமே அவளுக்குள் இருந்தது.

தர்மா, சத்யா இருவரின் உன்னதமான காதலும் அவளை வேறு எதையும் நினைக்க விடாமல் அவனுடையவனை மட்டுமே நினைக்க வைத்து இருவரின் காதலையும் ஜெயிக்க வைத்தது.

சத்யாவின் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தமிட்டு தங்களின் காதல் பாட்டை முடித்து வைத்தவன், அவளைத் தன் தோள் வளைவில் கொண்டு வந்து “ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் சக்திமா… முதல் முறையாக நான் பாடும் இந்தக் காதல் பாட்டில் எதுவும் சொதப்பிருவேனோனு பயந்துட்டே இருந்தேன். ஆனா என் பயத்தைத் தேவையில்லாத பயமாக்கி என்னை முழுமையா உணர வச்சுட்டடா…” என்று சொல்லிக் கொண்டே அவளின் இதழ்களை மீண்டும் சந்தோஷத்துடன் தீண்டினான்.

அவனின் தீண்டலை கூட உணராது அவன் சொன்ன ‘முதல் முறை’ என்ற வார்த்தையில் மட்டும் சத்யாவின் மனம் சிக்கி கொண்டு அங்கேயே தேங்கி நின்று கொண்டிருந்தது.