23 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 23
“எக்ஸாம் நல்லா எழுது ராகா. ஆல் தி பெஸ்ட்!” என்று வாழ்த்தினான் பிரபஞ்சன்.
“தேங்க்ஸ் அத்தான்…” என்றவளின் கண்கள் குறும்புடன் மீசைக்குக் கீழ் இருந்த கணவனின் உதடுகளை வருடிச் சென்றன.
“ம்கூம்…”
அவளின் பார்வையை உணர்ந்து கண்டிப்புடன் தலையை அசைத்தான்.
“இப்ப மட்டும் தான் ம்கூம்… நான் எக்ஸாம் எழுதிட்டு வந்ததும் ம்ம்ம்…. ம்ம்ம்ம்… மட்டும் தான்…” என்று கண்சிமிட்டி உதடுகளைக் குவித்துப் பறக்கும் முத்தமொன்றை பறக்க விட்டாள்.
‘நானும் அந்த நேரத்துக்காகத்தான் காத்திருக்கேன் ராக்கம்மா…’ என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டான்.
இத்தனை நாட்களும் அவள் அருகாமையில் தன் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததே அவனுக்குப் பெரிய மலையைப் புரட்டிப் போட்டது போல் இருந்தது.
அவ்வளவு அவனைப் படுத்தி எடுத்திருந்தாள் ராகவர்தினி.
ஆனாலும் வரம்பு மீறி அவளின் சேட்டை செல்லவே இல்லை.
பேச்சிலேயே அவனை அலற வைப்பாள்.
அதற்கு அவன் முறைத்தாலும் அசால்டாகச் சமாளிப்பாள்.
அவனும் வெளியே தான் முறைத்துக் கொண்டு திரிவானே தவிர உள்ளுக்குள் அவள் சேட்டைகளை ரசிக்கவே செய்தான்.
அவளைத் தன் மனம் விரும்ப ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்தாலும் அவளிடம் அதை அவன் காட்டிக் கொள்ளவில்லை.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவள் படிப்பு முடியும் வரை சொல்வதாக இல்லை என்ற உறுதியுடன் இருந்தான்.
இன்றுடன் அவளின் படிப்பு முடிய, மாலை அவளிடம் தன் மனதை சொல்ல அப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தான்.
“இன்னைக்கு எக்ஸாம் முடிந்த பிறகு பிரண்ட்ஸோட வெளியே போயிட்டுத்தான் வருவேன் அத்தான்…” என்று தகவல் சொன்னாள் ராகவர்தினி.
“எங்கே போறீங்க?”
“சினிமாவுக்குப் போகலாம்னு பிளான் அத்தான்…”
“ஓகே, போயிட்டு வா. வீட்டுக்கு வரும் போது ஒரு போன் போடு…”
“ஓகே அத்தான், பை!” என்று ராகவர்தினி கிளம்பினாள்.
ஆனால் அவளின் திட்டப்படி அன்று பரீட்சை முடிந்த பிறகு நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த நேரத்தில் சைலண்ட்டில் அவளின் கைப்பேசி அதிர்ந்தது.
எடுத்துப் பார்க்க, அவளின் தந்தை அழைத்துக் கொண்டிருந்தார்.
“அப்பா, என்னப்பா?” அழைப்பை ஏற்றுக் கேட்க,
“உனக்கு எக்ஸாம் முடிஞ்சிருச்சாமா?” என்று கேட்டார்.
“ஆமாப்பா. இப்பத்தான் எழுதிட்டு வெளியே வந்தேன்…”
“ராகா, அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கேன்…” என்று மாதவன் சொல்ல,
“என்னப்பா, சொல்றீங்க? என்னாச்சு அம்மாவுக்கு?” என்று பதறினாள்.
“பயப்படும் படியா ஒன்னுமில்லம்மா. நைட்ல இருந்து ஃபீவர் இருந்தது. அதான் காலையில் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தேன். இங்கே செக் செய்த டாக்டர் ஃபீவர் ரொம்ப இருக்கு. ரொம்ப வீக்கா இருக்காங்க அட்மிட் பண்ணனும்னு சொல்லி அட்மிட் பண்ணிட்டாங்க.
இப்போ சில மாத்திரை மருந்து எல்லாம் வாங்கிட்டு வரச் சொல்றாங்க. ஆனால் அவளைப் பார்த்துக்க ஆள் இல்லை. தனியா விட்டுட்டு போக முடியலை. நீ கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வர்றீயாமா?” என்று கேட்டார்.
“இதோ வர்றேன்பா. எந்த ஹாஸ்பிட்டல்?” என்று கேட்டவள் தனக்காகக் காத்திருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
ராகவர்தினி மருத்துவமனை சென்ற போது கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கச் சோர்வுடன் தூங்கிக் கொண்டிருந்தார் மீரா.
“டாக்டர் என்ன சொன்னாங்கபா?” என்று விசாரித்தாள்.
“டீஹைட்ரேட்டா இருக்காள்னு குளுக்கோஸ் போட்டாங்கமா. ஆனால் குளுக்கோஸ் போட்டதும் திரும்ப ஃபீவர் அதிகமாகுதுன்னு குளுக்கோஸை நிறுத்திட்டாங்க. ஃபீவர் குறைய ஊசி போட்ட பிறகு கொஞ்சம் பரவாயில்லை. அதுக்குப் பிறகு இப்ப திரும்பக் குளுக்கோஸ் போட்டுருக்காங்க…” என்றார்.
“வீட்டுக்கு எப்ப போகலாம் பா?”
“ஃபீவர் இன்னைக்குக் குறைந்து விட்டால் ஈவ்னிங் போகலாம்னு சொல்லிட்டாங்கமா. ஆனால் திரும்ப ஃபீவர் வந்தால் நாளை வரை பார்த்துட்டுத்தான் அனுப்புவாங்க…”
“சரிப்பா, அத்தானுக்குச் சொல்லிட்டீங்களா?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இன்னும் சொல்லலைமா. நீ சொல்லிடு. ஒரு மருந்து கேட்டாங்க. நான் போய் அதை வாங்கிட்டு வர்றேன்…” என்று கிளம்பினார்.
தந்தை சென்றதும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள், பிரபஞ்சனுக்கு அழைத்தாள்.
அழைப்பு போனதே தவிர எடுக்கப்படவில்லை.
வகுப்பில் இருப்பான் என்பதால் பின் அழைப்போம் என்று விட்டுவிட்டாள்.
அடுத்து மாமனாருக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.
அவர் மருத்துவமனை வருவதாகச் சொல்ல, வேண்டாம், வீட்டிற்கு வந்த பின் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்து விட்டாள்.
மேலும் அரைமணி நேரம் சென்ற பிறகு பிரபஞ்சனே அழைத்தான்.
“கிளாஸில் இருந்தேன் ராகா. எக்ஸாம் எப்படி எழுதின?” என்று விசாரித்தான்.
“நல்லா எழுதியிருக்கேன் அத்தான்…”
“அப்புறம் சினிமா தியேட்டர் போயிட்டியா பிரண்ட்ஸ் கூட ஒரே கொண்டாட்டமா?”
“இல்ல அத்தான், நான் போகலை. இங்கே ஹாஸ்பிட்டல் வந்திருக்கேன்…”
“என்ன ராகா, என்னாச்சு உனக்கு? எதுக்கு ஹாஸ்பிட்டல்?” என்று பதறினான்.
“எனக்கு ஒன்னுமில்லை அத்தான்…” என்றவள் அன்னைக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரியப்படுத்தினாள்.
“ஓ, அத்தை இப்ப எப்படி இருக்காங்க?”
“இப்ப ஃபீவர் இல்லை அத்தான். தூங்குறாங்க…” என்றாள்.
“ஓகே, எனக்கும் இங்கே கிளாஸ் முடிந்தது. நான் கிளம்பி வர்றேன்…” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
பிரபஞ்சன் வந்த போது மீரா தூங்கி எழுந்திருந்தார்.
அவரிடம் நலம் விசாரித்தவன், மாதவனிடம் மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டறிந்து கொண்டான்.
மீண்டும் காய்ச்சல் வரவில்லை என்பதால் மாலையில் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
“நான் இன்னைக்கு அம்மா கூட இருந்துட்டு வரட்டுமா அத்தான்? ரொம்பச் சோர்வா இருக்காங்க. நான் இருந்தால் ஹெல்ப்பா இருக்கும்…” என்று கணவனிடம் கேட்டாள்.
“இருந்துட்டு வா ராகா…” என்றதும் அன்னை தந்தையுடன் கிளம்பினாள்.
அவளை அனுப்பி வைத்து விட்டு தான் மட்டும் வீடு வந்து சேர்ந்தான் பிரபஞ்சன்.
மீராவை பற்றி விசாரித்த தந்தையிடம் பதில் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றான்.
அவள் கேட்டதும் அன்னையின் வீட்டிற்குச் செல்ல சொல்லிவிட்டான் தான். ஆனால் அவள் இல்லாத அறை வெறுமையாக உணர வைக்க, உடையை மாற்றி விட்டு அப்படியே படுக்கையில் படுத்துவிட்டான்.
எப்போதும் மாலையில் அடுத்த நாள் வகுப்பிற்கான குறிப்புகள் எடுப்பான். ஆனால் இன்று எதுவுமே செய்யத் தோன்றவில்லை.
நேரம் செல்ல செல்ல ராகவர்தினி அருகில் இல்லாத தனிமை அவனை இம்சித்தது.
இன்று அவளிடம் தன் மனதை சொல்ல வேண்டும், தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்தான். ஆனால் இன்று அந்த ஆசையெல்லாம் நிறைவேறாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.
இரவு ஆகிவிட, அவனின் கைபேசி அழைத்தது.
எடுத்துப் பார்த்தவன் முகம் குப்பென்று மலர்ந்தது.
“ராகா…” என்று ஆவலாக அழைத்தான்.
“அத்தான்… என்ன செய்றீங்க அத்தான்?” என்று அந்தப் பக்கமிருந்து ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள் ராகவர்தினி.
அவளின் அந்தக் குரல் அவனை ஏதோ செய்ய, “ஹோய், என்ன இப்படிப் பேசுற?” என்று தானும் ரகசியமாகக் குரலை தாழ்த்தி பேசினான்.
“அதுவா அத்தான், என் அத்தான் இல்லாம தவிச்சு போயிருக்கிறேன்…” என்றவள் குரல் அப்பட்டமாக ஏக்கத்தை வெளிப்படுத்தியது.
“ராகா…” என்று காதலுடன் அழைத்தான்.
“அத்தான்…” என்றாள் அவளும் காதலுடன்.
அதன் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவர்களுக்கிடையே நிலவிய மௌனம் கூட அவர்களின் காதல் பேசியது.
“நைட்டுக்கு சாப்பாடு அப்பாகிட்ட கொடுத்து விடுறேன் அத்தான். சாப்பிட்டு தூங்குங்க. நான் நாளைக்கு வந்திடுவேன். இப்ப வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.
“ம்ம், சரி ராகா…” என்று மனமே இல்லாமல் அழைப்பைத் துண்டித்தான்.
இரவு உணவை மாதவன் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்ல, தந்தையும், மகனுமாக உண்டு முடித்தனர்.
இரவு படுக்கையில் விழுந்தவனுக்கு மனமெல்லாம் ஏதேதோ எதிர்பார்த்த ஏமாற்றத்தை பிரதிபலித்தது.
ராகவர்தினி வீட்டில் இருந்தால் அவளின் பேச்சுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டே இருப்பாள். இல்லை என்றால் அவனை வம்புக்கு இழுத்து அவனையும் பேச வைப்பாள்.
அதுவும் இரவு படுக்கையில் வேண்டுமென்றே அவனைச் சீண்ட அவனின் மீது கை, காலை தூக்கிப் போடுவாள்.
அதற்கு அவன் முறைத்து இரண்டு அறிவுரை சொன்ன பிறகுதான் கையைக் காலை எடுத்து விட்டு அமைதியாகப் படுப்பாள்.
அவளின் அந்தச் சீண்டலுக்குக் கோபத்தை வெளியே காட்டினாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வான். இப்பொழுது அவள் கையும், காலும் தன்மீது விழாதா என்று ஏங்கினான்.
“ராட்சசி… என்னை எப்படி மாற்றி வைத்திருக்கிறாள்…” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டான்.
தானுமே இப்படி மாறிப் போயிருக்கிறோமே என்று அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
அவள் அருகில் இல்லாத நிலை இவ்வளவு வெறுமையைத் தனக்குத் தரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
மனதில் வருத்தத்துடன் கூடிய இதம் பரவியது.
இதமும், இம்சையும் தாக்கிய உணர்வுடன் மனைவியின் சுகமான நினைவுகளுக்குள் சிக்கி தவித்து எப்படியோ நித்திரையைத் தழுவினான் பிரபஞ்சன்.
மறுநாளும் அவனின் பொழுதுகள் மெதுவாகவே நகர்ந்தன.
அன்று மாலை ஆறுமணி அளவில் கணவனுக்கு அழைத்தாள் ராகவர்தினி.
“அத்தைக்கு எப்படி இருக்கு ராகா? இன்னைக்கு இங்கே வர்றீயா?” என்று கேட்டான்.
“இல்ல அத்தான், அம்மாவுக்கு இன்னைக்கு முழுவதும் காய்ச்சல் விட்டுவிட்டு வந்துட்டே இருக்கு…” என்றாள் தயக்கத்துடன்.
“ஓ, அப்போ அத்தை கூட இருந்து பார்த்துக்கோ ராகா…” என்றான்.
ஆனாலும் அவள் இன்றும் வரமாட்டாள் என்பதை ஏமாற்றமாக உணர்ந்தான்.
“என்னாச்சு அத்தான்? நான் வரலைன்னு கோபமா?” அவன் அமைதியை உணர்ந்து கேட்டாள்.
லேசாகத் தொண்டையைச் செருமி கொண்டவன், “மிஸ் யூ ராகா…” என்றான் உளமார்ந்து.
அவன் தன்னைத் தேடுவது அவளை உவகைக் கொள்ள வைத்தது.
“ஆஹா! என் அத்தான் தானா இது? அவருக்குப் பாடம் தானே எடுக்கத் தெரியும். இப்படிப் பேச தெரியாதே?” என்றாள் கேலியாக.
“இந்த வாத்திக்கு பாடமும் எடுக்கத் தெரியும் ராகா…” என்றான் ரகசிய குரலில்.
“அதான் எனக்கு நல்லா தெரியுமே! பேச வாயை திறந்தால் காதில் ரத்தம் வரும் வரை பாடம் எடுப்பீங்களே. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் அத்தான். நீங்க கெமிஸ்ட்ரி வாத்தி தானே? ஆனால் நமக்குள் வரும் கெமிஸ்ட்ரி மட்டும் உங்களுக்கு வரவே இல்லையே… ஏன் அத்தான்?” என்று கேட்டாள்.
“ஹோய், நான் சொன்னது புரியலையா? அப்போ உனக்குத் தான் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகலை…” என்றான் கிண்டலாக.
“அப்படி என்ன சொன்னீங்க?” என்று அவன் சொன்னதை மறுபடியும் யோசித்துப் பார்த்தாள்.
‘இந்த வாத்திக்கு பாடமும் எடுக்கத் தெரியும் ராகா’ இதைத் தான் சொன்னான். இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பான் என்று யோசித்துப் பார்த்தவளின் முகம் குப்பென்று மலர்ந்து போனது.
‘அட! வாத்தி, உங்களுக்கு டபுள் மீனிங் எல்லாம் பேச தெரியுமா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
“அப்போ உங்களுக்குக் கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சா அத்தான்?” என்று ஆர்வமாகக் கணவனிடம் கேட்டாள்.
“எனக்குச் சொல்ல விருப்பமில்லை…” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
“அப்போ செயல் தானா?” என்று கூச்சமே இல்லாமல் கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
“உடனே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு ராகா…” மனம் திறந்து தன் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டான்.
முகம் மலர, “நம்ம நேத்து தான் பார்த்துக்கிட்டோம் அத்தான்…” என்றாள்.
“நாம பார்த்துக்கிட்டு ஒரு நாள் தான் ஆகுதுன்னு என்னால் நம்பவே முடியலை ராகா. நீ இல்லாத தனிமை என்னை ஏதோ செய்து…” என்றான்.
எப்போதும் அவளின் படிப்பை முன்னிறுத்தி தன் மனதை மறைப்பவன் இன்று தங்கு தடையின்றித் தன் எண்ணத்தை வெளியிட்டான்.
அவன் மனதில் நினைப்பதையே நிறைவேற்றி வைக்க நினைப்பவள் அவள்.
வாய்விட்டே கேட்ட பிறகு அவளால் அமைதியாக இருக்க முடியுமா என்ன?
“அத்தான், நான் கிளம்பி வந்திடட்டுமா?” என்று கேட்டாள்.
வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் மனம் சொல்லியது.
ஆனால் சூழ்நிலை உறைக்க, “அத்தையைப் பார்த்துக்கோ ராகா. நாம நாளைக்குப் பார்க்கலாம்…” என்றான் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.
“பேசாம நீங்க இங்கே வந்துடுங்க அத்தான். நீங்க இங்கே வந்து தங்கியதே இல்லையே? இன்னைக்கு நாம இங்கே தங்கலாம்…” என்று ஆசையும், எதிர்பார்ப்புமாகக் கேட்டாள்.
“அப்பா தனியா இருப்பாரே ராகா?” என்று தயங்கினான்.
அதென்னவோ அன்னை இறந்ததில் இருந்து தந்தையைத் தனியாக விட அவனுக்குப் பயமாக இருந்தது.
அதனால் மனைவியின் வீட்டிற்கு அவளுடன் சென்றாலும் இரவு தன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவான்.
சுபேசன் அவர்களைத் தங்கி விட்டு வர சொல்லியும் அவன் கேட்கவே இல்லை.
“மாமாவையும் அழைச்சுட்டு வாங்க அத்தான். நைட் இங்கே சாப்பிட்டு, இங்கேயே தங்குங்க. நீங்க இங்கே தங்கினால் அப்பா, அம்மாவும் சந்தோஷப்படுவாங்க…” என்றாள்.
அவனுக்கும் அவளை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.
அவனின் மன ஆசை நிறைவேறவில்லை என்றாலும் அவள் அருகாமையே போதும் என்று நினைத்தவன் அங்கே செல்ல முடிவெடுத்துவிட்டான்.
தந்தையிடம் சொல்லி இரவு உணவுக்கு மனைவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
மீராவிடம் நலம் விசாரிக்க வேண்டும் என்று அவரும் கிளம்பிவிட்டார்.
மாதவன் இருவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
“வாங்க அத்தான், நானும் ரொம்ப நாளா வீட்டுக்கு வாங்கன்னு அழைச்சுட்டு இருக்கேன். இன்னைக்குத்தான் வந்துருக்கீங்க…” என்று சுபேசனிடம் சொன்னார் மாதவன்.
“நேத்தே தங்கச்சிக்கு எப்படி இருக்குன்னு கேட்க வரலாம்னு நினைச்சேன் மாதவா. இப்ப எப்படி இருக்கு? காய்ச்சல் விட்டுருச்சா?” என்று கேட்டார்.
“இப்ப விட்டுருச்சு அத்தான். உள்ளே இருக்காள். இப்பத்தான் ராகா அவ அம்மாவுக்குச் சாப்பாடு கொடுத்து படுக்க வச்சாள்…” என்றார்.
“சரி ரெஸ்ட் எடுக்கட்டும் மாதவா…” என்றார்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, பிரபஞ்சனின் விழிகள் மனைவி எங்கே என்று ஆவலுடன் தேடின.
அவன் வந்ததிலிருந்து அவளைப் பார்க்கவில்லை.
அன்னையுடன் அறைக்குள் இருக்கிறாள் போல என்று மனதை தேற்றிக் கொண்டாலும் அவன் மனம் அடங்க மறுத்தது.
சில மணி நேரங்கள் பிரிவிற்கே தான் இவ்வளவு தவித்துப் போவோம் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.
அன்னையின் அறையிலிருந்து ராகவர்தினி அப்போது வெளியே வர, அவளை இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தான்.
அவளின் கண்களும் அவனின் கண்களுடன் கலந்து கவி படத் துடித்தன.
ஆனாலும் பெரியவர்கள் முன் அடக்கி வாசித்தவள், “வாங்க மாமா…” என்று அழைத்தாள்.
அப்போது மீராவும் எழுந்து வெளியே வர, அவரிடம் நலம் விசாரித்தனர்.
“ரொம்ப டயட்டா தெரியுறீங்க அத்தை. நீங்க போய்ப் படுங்க…” என்றான் பிரபஞ்சன்.
“ஸாரி பிரபா, அண்ணா… வந்தவங்களை என்னால் கவனிக்க முடியலை…” மீரா வருத்தம் தெரிவிக்க,
“நம்ம வீடுமா, இதில் கவனிக்க என்ன இருக்கு? போய் ரெஸ்ட் எடுமா…” என்றார் சுபேசன்.
“கவனிச்சுக்கோ ராகா…” என்ற மீரா உள்ளே சென்று படுத்து விட்டார்.
“எல்லாரும் வாங்க, சாப்பிடலாம்…” என்றழைத்தாள் ராகவர்தினி.
அனைவரும் உணவருந்தி முடித்தனர்.
ராகவர்தினியுடன், மாதவனும் சுபேசனை அங்கேயே தங்க சொல்ல, அவரும் முதலில் மறுத்தாலும், மகனிடம் தெரிந்த எதிர்பார்ப்பில் அங்கேயே தங்க சம்மதித்தார்.
“அத்தானை நான் கீழ் உள்ள ரூமில் தங்க வைக்கிறேன்மா. நீ பிரபாவை உன் ரூமில் தூங்க சொல்லு…” என்றார் மாதவன்.
“அம்மாவுக்கு எதுவும் வேணும்னு சொன்னால் உடனே என்னைக் கூப்பிடுங்கபா…” என்று சொல்லிவிட்டு, கணவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“நீங்க படுங்க அத்தான். கிச்சன்ல ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வர்றேன்…” என்று அவனை அறையில் விட்டதும் வேகமாக வெளியேறினாள்.
‘ஆசையாக வந்தால் என்னைக் கவனிக்காம அப்படி என்ன வேலை?’ என்று புலம்பிக் கொண்டவன், அவள் அறையில் சென்று மேஜை அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அப்போது மேஜையின் மீதிருந்த அவளின் சில புத்தகங்களைப் பார்த்தவன், ஒரு புத்தகத்தை எடுத்து விரித்துப் பார்த்தான்.
முதல் பக்கம் இருந்ததைப் பார்த்தவன், ‘இதை ஏன் இன்னும் தூக்கிப் போடாம இப்படி வச்சுருக்கா?’ என்று முணுமுணுத்துக் கொண்டே அதை எடுத்துப் பார்த்தான்.
‘தேவையில்லாததை எதற்குப் பத்திரமா வச்சிருக்கணும்?’ என்று தோன்ற, தன் கையில் இருந்ததை விரித்துப் பார்த்தான்.
பார்த்தவன் விழிகள் விரிந்தன.
‘இதை எப்ப எழுதியிருப்பாள்?’ என்ற யோசனையுடன் அவன் பார்த்துக் கொண்டிருந்த போது, “அத்தான் அதை ஏன் எடுத்தீங்க? கொடுங்க…” என்று அவன் கையில் இருந்ததைப் பிடிங்கினாள் ராகவர்தினி.
“இதை ஏன் இன்னும் வச்சுருக்க ராகா? தூக்கி குப்பையில் போட வேண்டியது தானே?” என்று கேட்டான்.
“நோ அத்தான், அது என் பொக்கிஷம்! என்னால் தூக்கிப் போட முடியாது?” என்று அவள் சொன்னதும் அவன் முகம் மாறியது.