23 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 23

காரை செலுத்திக் கொண்டிருந்த நித்திலன் முகம் இறுக்கத்தைச் சுமந்திருந்தது.

நேற்றிலிருந்தே அவன் அப்படித்தான் இருக்கிறான்.

அன்னையிடம் ஊருக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும் ஊருக்குச் செல்லும் எண்ணம் அவனுக்குச் சிறிதும் இருக்கவில்லை.

துர்காவிடம் நாளை கிளம்ப வேண்டும் என்று சொல்லி தயாராகச் சொன்னாலும், அவன் கிளம்புவதில் முனைப்பு காட்டவில்லை.

அவனின் மன இறுக்கம் முகத்திலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.

தனக்கும் குழந்தைக்கும் உடைகளை எடுத்து வைத்து விட்டு, “உங்க ட்ரெஸ் எடுத்து வைக்கலையா?” என்று நித்திலனிடம் கேட்டதற்கு,

“எடுத்து வைப்போம்…” என்று சுரத்தையின்றியே பதில் சொல்லி வைத்தான்.

கிளம்புவதற்குச் சில நொடிகள் இருக்கும் போதுதான் எடுத்து வைத்துக் கிளம்பியிருந்தான்.

அவனின் ஆர்வமின்மை அவளுக்கு விநோதமாக இருந்தது.

அவள் தான் புதிய இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று பயப்பட வேண்டும்.

மாறாக இங்கே நித்திலன் பயந்து கொண்டிருந்தான்.

ஆம்! பயம் தான்!

தான் காயப்பட்டு விடக்கூடாது என்பதை விட, தன்னால் துர்கா காயப்பட்டுவிடக் கூடாதே என்று பயந்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்த கணவன் முகத்தை ஓரக் கண்ணால் பார்த்தாள் துர்கா.

“எதுவும் வேணுமா துர்கா?” அவன் இருந்த மனநிலையிலும் அப்பார்வையையும் கவனித்துக் கேட்டான்.

“இல்லை… உங்களுக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கென்ன துர்கா? நல்லாத்தான் இருக்கேன்…” என்றான்.

“பார்த்தால் அப்படித் தெரியலை…” என்றாள்.

அவளுக்கு எந்தப் பதிலும் சொல்ல நித்திலன் முன்வரவில்லை.

என்னவென்று விளக்கம் சொல்ல என்றும் அவனுக்குப் புரியவில்லை.

“குட்டிம்மா எழுந்ததும் சாப்பிட நிறுத்தலாமா? இல்ல, இப்ப நிறுத்தட்டுமா?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினான்.

அவனுக்குப் பேச விருப்பமில்லை என்று தெரிந்ததும் இனி அது பற்றி அவனிடம் பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

“அவள் எழுந்ததும் சாப்பிடலாம்…” என்று முடித்துக் கொண்டாள்.

‘அப்பாவும் வராமல் போனாரே. வந்திருந்தால் அவருடனாவது பேசிக் கொண்டு வந்திருக்கலாம்…’ அந்தக் காருக்குள் மூச்சு முட்டுவது போல் இருக்க, தந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் கூடவே எல்லா இடத்திற்கும் செல்ல விருப்பமில்லாமல் தான் வரவில்லை என்று மறுத்திருந்தார் சபரிநாதன்.

நித்திலன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அசையவில்லை அவர்.

தன்னுடன் முன்பு வேலை பார்த்த நண்பர்களைச் சந்திக்கப் போவதாகவும், அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் சொல்லி வீட்டிலேயே இருந்து கொண்டார்.

அதனால் மூவர் மட்டும் ஊருக்கு கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர்.

பயணம் முழுவதும் இருவருக்கும் இடையே ஒரு வித அமைதி நிலவியது.

குழந்தை விழித்திருக்கும் போது மட்டும் அதனுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசினான்.

அதுவும் ஊர் நெருங்க நெருங்க குறைந்து நின்றே போனது.

வீடு வர, வாசலில் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்கள்.

கார் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த செவ்வந்தி, “ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க. இதோ வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வேகமாகச் சென்றவர் திரும்பி வரும் போது ஆரத்தி தட்டுடன் வந்தார்.

“எதுக்குமா இதெல்லாம்?” ஆட்சேபனை தெரிவித்தான் நித்திலன்.

“சும்மா நில்லுப்பா…” என்றவர் ஆரத்தி எடுத்தே இருவரையும் உள்ளே அழைத்தார்.

“ம்க்கும், ரொம்ப முக்கியம்!” என்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்ட முதல் வாக்கியமாக இருந்தது.

சோஃபாவில் அவர்களைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த ஹேமாவின் வார்த்தைகள் தான் அவை.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்னமோ புதுப் பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வந்தது போலவும், இவரு என்னவோ அப்படியே வாழ்ந்து வம்சத்தைப் பெருக்கப் போறது போலவும் இந்த வரவேற்பு தேவைதான்…” அனைவருக்கும் கேட்கும் வகையில் முணுமுணுத்துக் கொண்டே வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஹேமா எழுந்து ஒரு அறைக்குள் சென்றாள்.

செவ்வந்தி பெரிய மருமகள் பேச்சில் பதறிப் போக, நித்திலன் கண்கள் சிவக்க, கையை இறுக்கி மூடிய படி நிற்க, இருவருக்கும் கிடைத்த வரவேற்பில் அடிப்பட்ட பாவனையில் நின்றாள் துர்கா.

“அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா நித்திலா? நீ உள்ளே வா. துர்காவை அழைச்சுட்டுப் போய் உன் ரூமை காட்டு…” என்று நிலைமையைச் சமாளிக்க முயன்றார் செவ்வந்தி.

“இந்தச் சுடுச்சொல் கேட்க வேண்டாம்னு தான் நான் வரலைன்னு சொன்னேன் மா. ம்ப்ச்…” என்றான் எரிச்சலும் வருத்தமுமாக.

“நீ இந்த அம்மாவுக்காகத்தான் வந்துருக்க நித்திலா…” என்றவருக்கு வேறு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்று தான் நித்திலன் வரும் நேரத்தில் ஹேமாவை அவள் அம்மா வீட்டிற்கு நிரஞ்சன் மூலம் அனுப்ப முயன்றார் செவ்வந்தி.

ஆனால் நிரஞ்சன் எவ்வளவோ முயன்றும் ஹேமா நகரவில்லை.

“துர்கா, குழந்தையோட உள்ளே போமா. போய்க் கை, கால் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்…” என்றார்.

அங்கே வெறும் பார்வையாளராக நின்ற துர்கா, நித்திலனை பார்க்க, “ஸாரி துர்கா, உங்களை அவங்க வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால் மன்னிச்சுடுங்க…” என்றவன் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

துர்கா இப்படிப் பேச்சை எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்தாள் தான். அதுவும் புதுப் பொண்ணா என்ற வார்த்தையை விடவும், நித்திலனின் குறையைச் சுட்டிக்காட்டிய பேச்சு அவளை உறைய வைத்திருந்தது.

நித்திலன் இங்கே வர ஏன் ஆர்வம் காட்டவில்லை என்ற காரணமும் புரிந்தது.

காயப்பட்டவனே அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். இதை என்னவென்று சொல்ல?

அமைதியாகத் தலையசைத்து அவனுடன் நடந்தாள்.

நித்திலன் தன் அறை என்று அழைத்துச் சென்றது அவன் அண்ணன் அறைக்கு எதிர்திசையில் இருந்தது.

அவ்வீடு நான்கு படுக்கை அறைகளுடன் பெரிதாகவே இருந்தது. மாடி அறை இல்லை. கீழ் தளம் மட்டுமே.

தாத்தா காலத்து வீடு. காலத்திற்கு ஏற்ப சில மாறுதல்களுடன் இருந்தது.

வருணா தூங்கிக் கொண்டிருக்க, நித்திலன் காட்டிய அறை கட்டிலில் அவளைப் படுக்க வைத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டாள்.

கட்டிலுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து தலையைக் கையால் தாங்கி அமர்ந்தான் நித்திலன்.

அவன் மனதில் சொல்லொண்ணா வேதனை கசிந்து வழிந்தது.

கேட்டு கேட்டுப் பழகி போனது தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் துடித்துத்தான் போகிறான்.

அவனின் கைகளில் மெல்லிய நடுக்கம் கூட ஓடி மறைந்தது.

சில நொடிகள் எடுத்து நிதானத்திற்கு வந்தவன், “அண்ணி பேச்சை கேட்டுருப்பீங்களே துர்கா? இதுதான் அவங்க. அவங்க வார்த்தைகள் ஒவ்வொன்னும் இப்படித்தான் ஈட்டியா வந்து குத்தும். இதனால் தான் இந்த ஊரை விட்டே நான் போனேன்…” என்று வேதனையுடன் சொன்னான்.

“உங்க அண்ணா என்னன்னு கேட்க மாட்டாரா?” என்று கேட்டாள்.

“அண்ணாவுக்குத் தெரிந்தால் அவங்களைத் திட்டத்தான் செய்வான்…”

“அப்பவும் இப்படிப் பேசுவாங்களா?”

“நான் தான் சொன்னேனே அண்ணாவுக்குத் தெரிந்தால் மட்டும் தான். அண்ணி பேசுவது பெரும்பாலும் அண்ணனுக்குத் தெரியாமல் தான். இப்ப கூட அண்ணா வீட்டில் இல்லை போல. அதான் இந்தப் பேச்சு…”

“நீங்களோ, அத்தையோ உங்க அண்ணாகிட்ட சொல்ல மாட்டீங்களா?”

“ஒரு முறை சொன்னோம். ஆனால் அப்ப அண்ணி எடுத்த விபரீத முடிவுக்குப் பிறகு சொல்வதில்லை…”

“விபரீத முடிவா?”

“ம்ம்ம்… என் ரிப்போர்ட் வந்த புதிதில் ஒரு பொண்ணு பார்த்து அதை முடிவு பண்ணலாம்னு அம்மா சொன்னாங்க. எனக்கு இப்படின்னு தெரிந்த பிறகு அம்மாகிட்ட உண்மையைச் சொல்லி கல்யாணப் பேச்சை நிறுத்தச் சொல்லிட்டேன். அண்ணா ஏன்னு கேள்வி கேட்கவும் அவன்கிட்டயும் உண்மையைச் சொன்னேன். நாங்க தனியா பேசும் போது அண்ணி அதைக் கேட்டுட்டாங்க.

அதில் இருந்தே என்னை மட்டம் தட்டி, குறை சொல்லி பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க பேச்சு நாளுக்கு நாள் அதிகமாகிருச்சு. அவங்க குழந்தைகளை என்னைப் பார்க்க கூட விட மாட்டாங்க. என்னை ஏதோ தீண்ட தகாதவன் போல நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. நான் பார்த்தாலே குழந்தைகளுக்கு முடியாமல் போகுதாம்.

நான் என் குறையால் அவங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் பார்த்துக் கண் வைக்கிறேனாம். இது போலப் பல பேசினாங்க. அது பொறுக்க மாட்டாம அண்ணன் கிட்ட அண்ணி இப்படிப் பேசும் விஷயத்தை அம்மாவும் நானும் சொல்லிட்டோம்.

அன்னைக்கு அண்ணனுக்கும் அண்ணிக்கும் பயங்கரச் சண்டை. உங்க தம்பிக்குப் பரிந்து பேசி என்கிட்ட சண்டைக்கு வருவீங்களான்னு கேட்டு அண்ணி தூக்குல தொங்க போயிட்டாங்க.

அவங்களை அன்னைக்குச் சமாளிக்கவே பெரும் போராட்டமா போயிருச்சு. என்னால் என் அண்ணன் வாழ்க்கை பாழாக வேண்டாம்னு தான் அங்கே வேலை மாற்றி வந்துட்டேன்.

இப்பவும் அண்ணாவுக்குத் தெரிந்தால் திட்டத்தான் செய்வான். ஆனால் அவன் திட்ட வாயை திறந்தாலே சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் அண்ணாவாலும் எதுவும் பேச முடியலை…” என்றான்.

அவனுக்கு என்ன ஆறுதலாகப் பேசுவது என்று கூட அறியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.

ஒரு ஆண்மகனாய் அவனின் வலி அதிகம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

அவனின் உடல்குறை ஒன்றும் சாதாரணமாக வெளியே சொல்லக் கூடியது இல்லை.

அதையும் மறைக்க நினைக்காமல் வீட்டில் சொல்லி தன் கல்யாணத்தையே நிறுத்தியிருக்கிறான்.

அண்ணன் வாழ்க்கைகாகத் தன்னை ஒதுக்கிக் கொண்டான்.

தங்கள் திருமணத்திற்கு முன் கூட மறைக்க நினைக்காமல் உண்மையைச் சொல்லித்தான் கல்யாணத்திற்கே கேட்டான்.

அவனின் அந்தக் குணம் அவளை ஒரு வகையில் வசீகரித்தது.

ஒரு நல்ல மனிதனுடன் தன் திருமணம் நடந்திருக்கிறது என்ற அவள் மனம் ஆசுவாசம் கொண்டது உண்மை.

சிறிது சிறிதாக அவனின் குணத்தால் அவள் மனதில் அவளின் கணவன் குடியேறிக் கொண்டிருக்கிறான் என்பதைத் துர்கா உணரவில்லை என்பதும் முற்றிலும் உண்மை!

“ம்ப்ச்… அவங்களைப் பற்றிப் பேச கூட எனக்குப் பிடிக்கலை. ஆனால் இதை எல்லாம் நீங்க தெரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். காரில் வரும் போதே சொல்லிருப்பேன். அப்போ பேசினால் ரொம்ப டிஸ்டெப் ஆகியிருப்பேன். வண்டி ஓட்ட முடிந்திருக்காது. நீங்க கேட்டப்பவே சொல்லாததுக்கு ஸாரி…” என்றான்.

பெரிய தவறு செய்துவிட்டது போல் மன்னிப்பு கேட்டவனைப் பரிவுடன் பார்த்தாள் துர்கா.

இப்போது கூடக் கண்டாளே… அவன் கைகள் நடுங்கியதை… இதுவே கார் ஓட்டும் போதும் நடுங்கியிருந்தால் அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்க மாட்டான் என்று புரிந்தது.

“பரவாயில்லை. எப்ப சொன்னால் என்ன?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நித்திலா…” என்று அறைக்கு வெளியே இருந்து நிரஞ்சன் குரல் கேட்டது.

“அண்ணா வந்துட்டான். நான் போய்ப் பேசிட்டு இருக்கேன். நீங்க ப்ரெஸ் ஆகிட்டு வாங்க…” என்று துர்காவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

“எப்ப வந்த நித்திலா? துர்கா, குழந்தை எங்கே?” என்று நிரஞ்சன் விசாரிக்க, அதனைக் காதில் வாங்கிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள் துர்கா.

அண்ணன் கேட்ட விவரத்தை சொல்லிவிட்டு, “இன்னைக்கு லீவ் தானே அண்ணா? எங்கே போன?” என்று கேட்டான்.

“அம்மா உங்களுக்குச் சாப்பிடும் போது இலையில் வைக்க ஸ்வீட் வேணும்னு கேட்டாங்க. அதான் வாங்க போனேன்…” என்றான்.

“குட்டீஸ் எங்கே அண்ணா?” என்று தணிந்த குரலில் விசாரித்தான்.

“என் கூடத் தான் கடைக்குக் கூட்டிட்டுப் போனேன். வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேமா ரூமுக்கு கூட்டிட்டுப் போயிட்டாள்…” என்றதும், அவனின் பார்வை குழந்தைகளைப் பார்க்க அண்ணன் அறைப்பக்கம் சென்றது.

ஆனால் ஹேமா கதவை மூடி தாழ் போட்டுக் குழந்தைகளுடன் உள்ளே இருக்க, அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

“அப்புறமா உன் ரூமுக்கு கூட்டிட்டு வர்றேன்…” என்று தம்பியின் மனம் அறிந்து அவனின் தோள் தட்டி நிரஞ்சன் சொல்ல, லேசாகப் புன்னகைத்துக் கொண்டான் தம்பிக்காரன்.

துர்காவும் வெளியே வர, அவளிடமும் நலம் விசாரித்தான்.

பின் துர்கா, நித்திலன், நிரஞ்சன் சாப்பிட அமர, செவ்வந்தி பரிமாறப் போனார்.

அப்போது அறை கதவைத் திறந்து வெளியே வந்த ஹேமா, “சிவாவுக்கும், ஷிவானிக்கும் பசிக்குதாம். முதலில் குழந்தைகளுக்கு ஊட்டி விடுங்க…” என்றாள் மாமியாரிடம்.

“இவங்களுக்குப் பரிமாறிட்டு ஊட்டி விடுறேன்மா…” செவ்வந்தி சொல்ல,

“இவங்க என்ன சின்னக் குழந்தையா? அவங்களே போட்டு சாப்பிட்டுப்பாங்க. நீங்க குழந்தைகளைப் பாருங்க…” என்றாள் பிடிவாதமாக.

“இன்னைக்கு ஒரு நாள் நீ ஊட்டி விடு ஹேமா…” என்று நிரஞ்சன் சொல்ல,

“உங்க பிள்ளைங்க என் கையால் எங்கே சாப்பிடுறாங்க? அவங்களுக்கு அத்தை ஊட்டி விட்டே பழகிட்டாங்க. இப்ப நான் கொடுத்தால் சாப்பிட மாட்டிங்கிறாங்க…” என்று நொடித்துக் கொண்டாள்.

உள்ளுக்குள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டான் நித்திலன்.

குழந்தைகளுக்கு ஊட்டி விட வலித்துப் போய், அம்மாவின் மேல் வேலையைச் சுமத்துபவர் என்னவோ இப்போது அவர் வேலையை அம்மா பறித்துக் கொண்டது போல் பேச்சை பார் என்று நினைத்துக் கொண்டான்.

“பிள்ளைகளை இங்கே அழைச்சுட்டு வாமா. இங்கேயே ஊட்டி விடுறேன்…” என்றார் செவ்வந்தி.

“அவங்க உள்ளே டீவி பார்த்துட்டு வர மாட்டேன்னு சொல்றாங்க. எல்லாத்திலும் அடம், அப்படியே உங்க பிள்ளை போல. நீங்க அங்கே வந்து ஊட்டி விடுங்க…” நீங்க வந்தால் தான் இங்கே இருந்து நகருவேன் என்பது போல் அடமாக நின்றாள்.

தங்களுக்குப் பரிமாறுவது பிடிக்காமல் வீம்பு பிடிக்கிறாள் என்று அங்கே இருந்த எல்லாருக்குமே புரிந்தது.

நிரஞ்சன் மனைவியிடம் சூடாகப் பேச போக, அருகில் அமர்ந்திருந்த அண்ணனின் கையைப் பிடித்து அழுத்தி பேசவிடாமல் தடுத்தான்.

“அம்மா, நீங்க போய்க் குழந்தைகளைப் பாருங்க. நாங்களே பரிமாறி சாப்பிட்டுக்கிறோம்…” என்றான் நித்திலன்.

செவ்வந்தி மனதே இல்லாமல் குழந்தைகளுக்கு ஒரு தட்டில் உணவை போட்டுக் கொண்டு நகர, அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துர்கா எழுந்து பரிமாற ஆரம்பித்தாள்.

நிரஞ்சன் தட்டில் உணவை வைக்கப் போக, அதுவரை பரிமாறும் எண்ணமே இல்லாமல் தள்ளி நின்றிருந்த ஹேமா, “அவருக்கு நான் பரிமாறினால் தான் பிடிக்கும்…” என்று வேகமாகத் தான் கைப்பற்றிக் கணவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.

இதென்ன சிறுபிள்ளைதனம் என்று தோன்றினாலும் கணவனுக்கு மட்டும் பரிமாற ஆரம்பித்தாள் துர்கா.

“நீங்க உட்காருங்க துர்கா. நாமே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கலாம்…” என்றான் நித்திலன்.

“ஏங்க, இது என்ன கொடுமையா இருக்கு? இன்னும் உங்க தம்பி, பொண்டாட்டியை ‘ங்க’ போட்டுட்டு இருக்காரு. அப்படித்தான் கூப்பிடணும்னு ஆர்டரா இருக்குமோ? இல்லை, அவங்களுக்குள்ள அவ்வளவு இடைவெளி இருக்கா?” என்று நக்கலாகத் தன் கணவனிடம் கேட்டு வைத்தாள் ஹேமா.

“எதுவா வேணுமானாலும் இருந்துட்டு போகுது. உனக்கென்ன? எனக்குப் பரிமாறத்தானே இங்கே நிற்கிற? அந்த வேலையை மட்டும் பாரு. இல்லையா, போ… நானே போட்டு சாப்பிட்டுகிறேன்…” என்றான் நிரஞ்சன்.

“க்கும்… யார் மேலேயும் எனக்கு என்ன அக்கறை? எனக்கு என் புருஷன், புள்ளைங்க தான் முக்கியம்…” என்றவள் ‘என்’ என்பதில் ஓர் அழுத்தம் கொடுத்தாள்.

குத்திக் காட்டுகிறாள் என்று புரிந்தாலும் நித்திலனோ, துர்காவோ அதற்கு எந்த எதிர்வினையும் காட்டவில்லை.

ஆனாலும் இனி நித்திலனை தன்னைப் பன்மையில் அழைக்க வேண்டாம் எனச் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் துர்கா.

நித்திலனும், துர்காவும் விரைவில் உண்டு விட்டு அறைக்குள் சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வருணா முழித்து விட, அவளுக்கும் உணவை எடுத்து வந்து ஊட்டிவிட்டாள்.

வருணா உண்டு முடித்ததும் அறைக்குள்ளேயே விளையாட ஆரம்பிக்க, “ஏன் இன்னும் என்னைப் பன்மையிலேயே கூப்பிடுறீங்க? நீ, வா, போ-ன்னே கூப்பிடுங்க…” என்றாள்.

வருணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து துர்காவை பார்த்தான்.

அவன் பார்வையில் ஏதோ கேள்வி தொக்கி நின்றது. ஆனால் அந்தக் கண்கள் வெளிப்படுத்திய கேள்வி புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“அடுத்தவங்க பேசுறாங்கன்னு நம்மை மாத்திக்கத் தேவையில்லை துர்கா. ஒருமையோ, பன்மையோ… அழைப்பு எல்லாம் ஆத்மார்த்தமாக வரணும். நமக்குள் இன்னும் அந்த ஆத்மார்த்தம் வரலை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவன் கண்களால் பேசியது மட்டுமில்லை. வார்த்தைகளால் பேசியதும் துர்காவிற்குப் புரியவே இல்லை.