22- மின்னல் பூவே

அத்தியாயம் – 22

“இவளால் மட்டும் எப்படி இப்படித் தூங்க முடிகிறது?” என்று இரவிலிருந்து நூறு முறையாவது நினைத்திருப்பான் முகில்வண்ணன்.

சூரியன் உதிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. சற்று நேரம் தூங்குவதும், பின் விழிப்பதுமாக இரவை கடத்தியிருந்தான்.

தன் அருகில் படுத்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.

முதல் இரவு அன்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் உத்ரா.

இரவு அவள் அவனை முட்டாள் என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்க, அவனுக்கோ தூக்கம் வருவேனா என்றது.

முதலில் அவள் மேல் கோபம் இருந்த இடத்தில் நேரம் செல்ல செல்ல, தான் எங்கே படுத்து தூங்குவது என்ற சிந்தனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

அவன் அறையில் சோஃபா எல்லாம் இல்லை. படிக்க, வேலை பார்க்க உபயோகிக்க ஒரு மேஜையும், ஒரு நாற்காலியும் போட்டிருந்தான்.

ஒரு இரும்பு பீரோ இருக்க, சுவருடன் பதித்திருந்த ஒரு அலமாரி இருந்தது. அலமாரியின் கதவிலேயே பெரிய கண்ணாடி பதித்து அதன் முன் சிறு திண்டு போலச் சீப்பு, எண்ணெய் என்று பொருட்கள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கட்டில் போகத் தரையில் இருவர் படுக்கும் அளவில் இடம் இருந்தது தான். ஆனால் ‘இன்று வந்த அவளே கட்டிலில் ஒய்யாரமாக உறங்க, தான் மட்டும் கீழே படுப்பதா?’ என்ற வீம்பு தலை தூக்க ஆரம்பித்தது.

கட்டில் சுவர் ஓரமாக ஒட்டிப் போடப்பட்டிருக்க, உத்ரா சுவர் ஓரமாகச் சென்று படுத்திருந்தாள். பெரிய கட்டில் என்பதால் ஓரத்தில் தாராளமாகவே இடமிருந்தது.

அதனால் ஓரத்தில் படுத்துக் கொண்டான்.

ஆனாலும் தூக்கம் வராமல் அவனிடம் கண்ணாமூச்சி ஆடியது.

அசந்து உறங்குபவளைப் பார்த்து முறைப்பதும், புதிதாக ஒரு பெண், அதுவும் அவனின் மனைவி கையெட்டும் தூரத்தில் படுத்திருப்பதும் புதுவிதமான அவஸ்தையைக் கொடுக்கத் தூக்கத்தைத் தொலைத்து நின்றான்.

அவனையும் மீறி அசந்து உறங்கி எழுந்த போது சூரியன் தலை காட்ட தயாராகிக் கொண்டிருந்தது.

பின் தூங்கி அவன் முன் எழுந்து விட, முன் தூங்கியவளோ இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“எப்படி உறங்குகிறாள் பார்…” என்று முணுமுணுத்துக் கொண்டே குளியலறை சென்று குளித்துத் தயாராகி வந்தான்.

அப்பொழுதும் உத்ரா முழிக்காமல் இருக்க, ‘பேசாம மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்புவோமா?’ என்று சிறுபிள்ளைத்தனமாக யோசிக்க ஆரம்பித்தான்.

‘வேண்டாம் டா முகிலு. அவளே சரியான திமிர்க்காரி. அவளும் பதிலுக்கு உன் மூஞ்சில தண்ணியை ஊத்தினாலும் ஊத்திடுவா?’ என்று அவனின் மனமே அவனை உஷார்ப்படுத்தியது.

அதனால் அந்த ஐடியாவை தனக்குள்ளேயே குழி தோண்டி புதைத்துக் கொண்டான்.

‘நான் எழுந்து அவள் இன்னும் தூங்கிட்டு இருந்தால் பெரியவங்க அவளைத் திட்டுவாங்கல? நீங்க திடீர்ன்னு கூட்டிட்டு வந்த மருமகள் எப்படித் தூங்கி வழியிறாள்னு பாருங்கன்னு சொல்லி மாட்டி விடுவோமா?’ என்று சில்லித்தனமாகவும் யோசித்தான்.

‘மடையா, மடையா… பர்ஸ்ட் நைட் முடிஞ்சு மறுநாள் பொண்ணு ரொம்ப நேரம் தூங்கினால் வேற அலுப்புன்னு நினைச்சுக்குவாங்கடா முட்டாள்’ என்று இப்பொழுதும் அவனின் மனசாட்சி இடிந்துரைக்க, அவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“என்னை இப்படி லூசுத்தனமா எல்லாம் யோசிக்க வச்சிட்டு எப்படி நிம்மதியா தூங்குறாள் பார்…” அவனின் சில்லித்தனமான யோசனைக்கும் அவளையே குறை சொன்னான்.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் போதே உத்ரா மெல்ல அசைய ஆரம்பிக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் வேகமாக அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தான்.

அவன் வெளியே சென்ற போது அவனின் குடும்பத்தினர் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

“வா முகில்… காஃபி குடிக்கிறயா?” என்று வளர்மதி கேட்க,

“கொடுங்கமா…” என்றவன் சோஃபாவில் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

“உத்ரா இன்னும் தூங்குறாளா முகில்?” என்று இலக்கியா கேட்க,

அவனின் மனம் இடிந்துரைத்தது ஞாபகத்தில் வர, “எழுந்துட்டா…” என்று வேகமாகச் சொன்னவனை வினோதமாகப் பார்த்தாள் இலக்கியா.

“உங்களுக்கு உடம்பு இப்போ எப்படி இருக்குப்பா?” என்று அக்காவின் பார்வையைக் காணாதவன் போலத் தந்தையிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.

“இன்னைக்கு நல்லா இருக்கேன் முகில். இனி எனக்கு என்ன கவலை? உன் வாழ்க்கை என்னாகுமோன்னு தான் பயந்தேன். இப்போ ஒரு நல்ல பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்திட்டாள்னு திருப்தியா இருக்கேன்…” என்றார் ரகுநாதன்.

“அப்பா உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். அம்மா நீங்களும் உட்காருங்க…” என்றாள் இலக்கியா.

அனைவருக்கும் காஃபி கொடுத்து விட்டு வளர்மதியும் அமர,

“முகிலா நான் பேச போறதை கேட்டு நேத்து போலக் கோபத்தில் கத்தாதே! இது அப்பா, அம்மாவுக்கு இப்பவாவது நான் சொல்ல வேண்டிய விஷயம்…” என்று தம்பியிடமும் முன்னெச்சரிக்கை செய்து வைத்தாள் இலக்கியா.

அவள் வைத்த முஸ்தீபே அவள் என்ன பேசப் போகிறாள் என்பதை முகிலுக்கு எடுத்துரைக்க, “போனவளை பத்தி ஏன்கா தேவையில்லாம பேசணும்னு நினைக்கிற? அவளைப் பத்தி நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு…” என்று முகத்தைச் சுளித்தான் முகில்வண்ணன்.

“அவள் எப்படி எல்லாம் நம்மளை ஏமாத்தி இருக்காள்னு அப்பா, அம்மாவுக்கும் தெரியணும் முகிலா. அதோட எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. அவள் மேல சந்தேகம் வந்தும் நான் அமைதியா இருந்தது தான் நேத்து நாம எல்லாரும் அவமானப்பட்டு நிற்க காரணம் ஆகிடுச்சோன்னு…” என்றாள்.

“என்ன இலக்கியா சொல்ற? உனக்கு என்ன சந்தேகம் வந்தது?” என்று விசாரித்தார் வளர்மதி.

“அந்தக் கமலினி அன்னைக்கு நாம கல்யாண புடவை எடுக்கப் போனப்ப ஒதுங்கி ஒதுங்கிப் போனாள் மா. அவள்கிட்ட ஒரு ஒட்டாத தன்மை இருந்தது. ஏன் இப்படி நடந்துகிறாள்னு புரியாம குழம்பி போய் அவளைக் கண்காணிச்சுட்டே இருந்தேன்…”

“என்னமா சொல்ற? நான் அந்தப் பொண்ணு ரொம்ப அமைதியான பொண்ணு என்பதால் அப்படி இருக்காள்னு நினைச்சேனே…” என்றார் ரகுநாதன்.

“அமைதியான பொண்ணு தான்பா. அதில் எதுவும் எனக்கு டவுட் இருக்குற மாதிரி தெரியலை. ஆனா அமைதியா இருந்தாலும் ஒரு கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு எப்படி இருப்பாள்?

தனக்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைகிட்ட பேசலைனாலும், ஒரு ஓரப்பார்வை, தயக்கம் இதெல்லாம் இருக்குமே? ஆனா அவள்கிட்ட எதுவுமே இல்லையே?

வேற ஒருத்தனை காதலிச்சுட்டே தான் அவள் நிச்சயம் வரை வந்திருக்காள். எப்படி அமுக்கினியா இருந்திருக்காள் பாருங்க…” என்றாள்.

“அவளைக் கவனிச்ச நீ அன்னைக்கே எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே இலக்கியா? என்ன ஏதுன்னு நாங்க விசாரிச்சிருப்போமே?” என்று கேட்டார் வளர்மதி.

“அதில் தான் நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன் மா. அவள் குணமே அப்படி இருந்து நான் தான் ஏதோ தவறா புரிந்து கொண்டு அதை உங்ககிட்ட சொல்லித் தேவையில்லாம குழப்ப வேண்டாம்னு நினைச்சேன்…” என்று வருத்தப்பட்டாள் இலக்கியா.

“இதுக்கும் நான் முகில்கிட்ட விசாரிச்சேன்மா. அவன்கிட்ட அவள் நல்லா பேசுறாள்னு சொன்னான். அதனால் தான் நானும் அமைதியானேன். ஆனா இப்பத்தானே தெரியுது. அவள் ஏதோ தகிடுதத்தம் பண்ணத்தான் முகில்கிட்ட நல்லா பேசுற போல் நடிச்சுருக்காள்னு…” என்று இலக்கியா புலம்ப,

முகிலின் முகமோ யோசனையைச் சுமந்தது.

கமலினி ஆரம்பத்திலிருந்தே தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்திருப்பாளோ? நிச்சயம் அன்றும் அவள் அவ்வளவு கலகலப்பாக இருந்த மாதிரி ஞாபகம் இல்லை.

அதன் பிறகும் அவனாகத் தான் அவளைப் போனில் அழைத்துப் பேசினானே தவிர அவளாகப் பேச முயற்சி செய்யவில்லை. அவன் பேசும் போதும் அவள் சரியாகப் பேசவில்லை.

அதை அவன் தயக்கம், நாணம் என்று அவனாக ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருந்திருக்கிறான். ஆனால் உண்மையில் தன்னிடம் பேசப் பிடிக்காமல் அப்படி இருந்திருப்பாளோ? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

‘அவள் செய்த தப்பிற்கு உத்ராவை குறை சொன்னாயே?’ என்று அவனின் மனம் இடிந்துரைக்க,

“இல்ல, உத்ராவும் இதில் ஏதோ சதி பண்ணிருக்காள். அந்தக் காதலன் உத்ராவின் ஃபிரண்டுனு தானே அந்தக் கமலினி சொன்னாள்…” என்று மீண்டும் வீணாக உத்ராவின் மீது சந்தேகப்பட்டான் முகில்வண்ணன்.

காஃபி ஷாப்பில் மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது வேறு அவனை வேறு சிந்திக்க விடாமல் செய்து கொண்டிருந்தது.

அவன் யோசனையில் இருக்க, இன்னும் இலக்கியா பெற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“கமலினி காணோம்னு ஆனதும் எனக்குக் குலையே நடுங்கிப் போயிருச்சு பா. அடுத்து ஒரு பொண்ணு பாருங்கன்னு அந்தத் தாத்தா சொல்லவும் நானும் நம்ம சொந்தக்கார பொண்ணை எல்லாம் பார்த்தேன். எனக்கு என்னவோ யாருமே முகிலுக்குச் செட் ஆவாங்கன்னு தோணலை.

அந்த நேரம் உத்ராவை பார்த்தேனா? அவள் தான் முகிலுக்கு சரியா இருக்கும்னு என் உள்மனசு சொல்லுச்சு. உத்ரா கூட நம்ம பழக்கம் கொஞ்ச நாள் தான். ஆனா அவள்கிட்ட நான் பார்த்த குணாதிசயங்களும் சரி, அவள் இயல்பா பழகும் விதமும் சரி எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது.

அதுக்குப் பிறகு நான் ஒரு நிமிஷம் கூட யோசிக்காம அம்மாகிட்ட போய் உத்ராவை பொண்ணு கேளுங்கன்னு சொல்லிட்டேன். ஆனாலும் உள்ளுக்குள் லேசா பயம் இருந்தது. அவள் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம இப்படிக் கேட்க சொல்லிட்டோமே. அவள் அதுக்கு என்ன பதில் சொல்வாளோன்னு. ஆனா நான் பயந்த மாதிரி இல்லாம, அவள் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன பிறகு தான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருந்தது…” என்றாள் இலக்கியா.

“பரவாயில்லை இலக்கியா நல்ல காரியம் பண்ணிருக்க. அந்த நேரம் எனக்கு எல்லாம் கையும் ஓடலை. காலும் ஓடலை. திகைச்சு போய் அழுகை மட்டும் தான் வந்தது. நீ உத்ரா பேரை சொன்ன பிறகு தான் எனக்கு உணர்வே வந்தது…” என்றார் வளர்மதி.

“சரிமா, எப்படியோ நல்லபடியா உத்ரா கூட முகில் கல்யாணம் முடிந்தது, இனி அந்தக் கமலினி பத்தி நம்ம வீட்டில் பேச்சே இருக்கக் கூடாது…” என்று மகளிடமும், வளர்மதியிடமும் சொன்ன ரகுநாதன், மகனின் புறம் திரும்பினார்.

“இன்னைக்கு நீயும், உத்ராவும் உன் மாமனார் வீட்டுக்கு மறுவீடு போகணும் முகில். இரண்டு நாள் நீங்க அங்கே தான் இருக்கணும். மூணாவது நாள் எங்களையும் விருந்துக்கு வர சொல்லியிருக்காங்க. விருந்து முடிந்து வரும் போது உங்களையும் நாங்க அழைச்சுட்டு வருவோம்…” என்றார்.

“என்னப்பா சொல்றீங்க? இரண்டு நாள் அங்கே இருக்கணுமா? அதெல்லாம் முடியாது. அவங்களை எல்லாம் எனக்கு யாருன்னே தெரியாது. அவங்க வீட்டில் போய் எப்படிப்பா இரண்டு நாள் இருக்க முடியும்?” என்று நியாயம் பேசியவனை விநோதமாகப் பார்த்தனர் அவனின் குடும்பத்தினர்.

“மகனே, நீ சொன்னதே தான் அவங்களுக்கும் பொருந்தும். நம்ம கூட அவங்களுக்கு அவ்வளவா பழக்கம் இல்லை. ஆனாலும் அவங்க பொண்ணையே நம்மளை நம்பி கட்டிக் கொடுத்து இங்கே அனுப்பி வச்சுருக்காங்க.

அந்தப் பொண்ணும் இனி காலம் முழுவதும் நம்ம வீட்டில் தான் வாழப் போறா. உனக்கு ஒரு இரண்டு நாள் இருந்துட்டு வர முடியாதா? இந்த இரண்டு நாளில் அவங்க கூடப் பழகி அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கோ…” என்று முடிவாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார் ரகுநாதன்.

“என்னமா இது?” என்று சிறுபையன் போல் வளர்மதியிடம் புகார் வாசிக்க அன்னையின் புறம் திரும்பினான்.

“அப்பா சொன்ன பிறகு இன்னும் என்ன என்னமா? போய்க் கிளம்பு முகில். இதே ஏரியா தானே? இங்க இருக்கிறதுக்குப் பதில் அங்க இருக்கப் போற. அவ்வளவுதான்…” என்றார்.

அப்போது குளித்து முடித்து உத்ரா அங்கே வர, “வாமா உத்ரா. இந்தா இதில் உனக்குக் காஃபி இருக்கு. எடுத்துக்கோ…” என்று பிளாஸ்கில் இருந்த காஃபியை அவளுக்கு ஊற்றிக் கொடுத்தார் வளர்மதி.

“தேங்க்ஸ் அத்தை…” என்று அவள் வாங்கிக் குடிக்க ஆரம்பிக்க,

“காலை சாப்பாடு சாப்பிட்டு இரண்டு பேரும் உங்க வீட்டுக்கு கிளம்பணும் உத்ரா. உன்னோட அப்பா, அம்மா உங்களை அழைக்க இப்போ வர்றதா சொல்லியிருக்காங்க. முகிலுக்கு இன்னும் மாத்து ட்ரெஸ் எடுத்து வைக்கலை. அவங்க வருவதுக்குள்ள எடுத்து வைக்க அவனுக்கு நீ கொஞ்சம் உதவி பண்ணுமா…” என்ற வளர்மதி,

“இலக்கியா வா, நாம போய் டிபன் செய்வோம்…” என்று மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

இப்போது உத்ராவும், முகிலும் மட்டும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ‘இவள் வீட்டில் போய் நான் இருப்பதா?’ என்பது போல் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

அவனின் முறைப்பை உணர்ந்தாலும், அவன் புறமே திரும்பாமல், காஃபியை மிடறு மிடறாக ரசித்துப் பருக ஆரம்பித்தாள் உத்ரா.

“திமிர்! திமிர்! உடம்பு முழுக்கத் திமிர்!” பற்களைக் கடித்துக் கொண்டு அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

காஃபி குடிப்பதை நிறுத்திய உத்ரா, தன் கையில் இருந்த காஃபி கப்பையும், தன்னையும், மாறி மாறி பார்த்தவள் திரும்பி முகிலைப் பார்த்தாள்.

அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல், “என்ன?” என்று உறுமலாகக் கேட்டான்.

“இல்ல, உங்க வீட்டுல ஒரு நேர காஃபி குடிச்சதிலேயே என் உடம்பு முழுவதும் திமிர் ஏறி போயிருச்சான்னு பார்த்தேன்…” என்று உதட்டை வளைத்து நக்கலாகச் சொல்ல,

“ஏய், என்ன தி…” என்று அவன் கத்த ஆரம்பிக்க,

“திமிரே தான்! என் உடம்பு பூராமே திமிர் மட்டும் தான் இருக்கு. அதுக்கு இப்போ என்ன செய்யனுங்கிறீங்க?” என்று புருவத்தை உயர்த்தித் தெனாவட்டாகக் கேட்டாள்.

அவன் அதற்கும் கோபமாக ஏதோ சொல்ல வர, அப்போது அங்கே யாரோ வருவது போலிருக்க, அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் எழுந்து அறைக்குள் சென்றான்.

அவளும் சற்று நேரத்தில் அறைக்குள் சென்ற போது முகில் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

“எங்க அப்பா, அம்மா வர்ற நேரமாச்சு முகில். உங்களுக்கு எந்தெந்த ட்ரெஸ் எடுத்து வைக்கட்டும்?” என்று கேட்டாள்.

“என்னால் உங்க வீட்டுக்கு எல்லாம் வர முடியாது…” என்றான் விறைப்பாக.

“ஓ!” என்று அவனைக் கூர்ந்து பார்த்தவள், “உங்களுக்கு என்ன பிரச்சனை முகில்?” என்று நிதானமாகக் கேட்டாள்.

‘இவ இப்படி நிதானமா பேசினாலே என் மூக்கை தானே உடைப்பாள்’ என்று நினைத்த முகில் அவளுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பினான்.

“நான் ஒன்னு கேட்கலாமா?” என்று கேட்டாள்.

“என்ன கேட்க போற?”

“நீங்க கமலியை விரும்பினீங்களா?” என்று உத்ரா கேட்க, முகிலின் முகம் செந்தணலாக மாறிப்போனது.

“அடுத்தவன் பொண்டாட்டியைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீ என்னை ரொம்பச் சீண்டுற உத்ரா. போதும் இதோட நிறுத்திக்கோ…” என்றான் கோபமாக.

சில நொடிகள் அவனை அமைதியாகப் பார்த்த உத்ரா, பின் ஒன்றும் சொல்லாமல் அலமாரியைத் திறந்து அங்கே அடுக்கி வைத்திருந்த அவனின் உடைகளில் பார்க்க நல்லதாக இருந்ததாகப் பார்த்து எடுத்து ஒரு பேக்கில் வைக்க ஆரம்பித்தாள்.

“நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்…” என்று அவன் கத்த,

“முகில், உன் மாமனார், மாமியார் வந்துட்டாங்க. வாப்பா…” என்று வெளியே இருந்து அவனின் தந்தையின் குரல் கேட்க, கப்பென்று வாயை மூடியவன், வெளியே எழுந்து சென்றான்.

வீரபத்ரனையும், அஜந்தாவையும் பார்த்து, “வாங்க…” என்று மட்டும் அவன் சொல்ல,

“மாமா, அத்தைன்னு சொல்லிப் பழகு முகில்…” என்று அருகில் இருந்த வளர்மதி அவனின் காதில் முணுமுணுத்தார்.

நேற்று தங்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காதவன் இன்று ‘வாங்க’ என்று அழைத்ததே உத்ராவின் பெற்றோருக்கு சற்றுத் திருப்தியாக இருந்தது.

“அப்பா, அம்மா வாங்க…” என்று உத்ரா வந்து அழைத்த போது அவளிடம் ஒரு உற்சாகம் இருந்ததைக் கவனித்த பெற்றோருக்கு கூடுதல் திருப்தியாக இருந்தது.

காலை உணவை அங்கேயே உண்டு முடித்து விட்டுச் சோஃபாவில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“சீர் பத்தி நேத்தே உங்ககிட்ட கேட்டேன் சம்பந்தி. அதைப் பத்தி அப்புறமா பேசுவோம்னு சொல்லிட்டீங்க. அதைக் கொஞ்சம் பேசி முடிச்சுட்டா எங்க பொண்ணுக்கு நாங்க செய்ய வேண்டியதை செய்துடுவோம்…” என்றார் வீரபத்ரன்.

“நாங்க அதெல்லாம் எதிர்பார்க்கலைன்னு நானும் சொல்லிட்டேன் முகில். ஆனாலும் சம்பந்தி பிடிவாதமா இருக்கார். அப்புறமா உன்னை வச்சுக்கிட்டு பேசுவோம்னு தான் நான் தள்ளிப் போட்டேன். நீ என்ன நினைக்கிற முகில்?” என்று மகனிடம் கேட்டார் ரகுநாதன்.

“இதுல நான் நினைக்க என்ன இருக்குப்பா? நீங்களே சரியா தான் சொல்லியிருக்கீங்க…” என்றான் முகில்.

“நீங்க இப்படிச் சொன்னாலும் எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளுக்குன்னு சேர்த்து வச்சதை அவளுக்குச் செய்றது தான் முறை…” என்று வீரபத்ரன் பிடிவாதமாகச் சொல்ல,

“வேணும்னா இப்படிப் பண்ணலாமா?” என்று கேட்டார் வளர்மதி.

“சொல்லு வளர்…” ரகுநாதன் கேட்க,

“முகிலும், உத்ராவும் ஒரே ஆபிஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. இங்கே இருந்து இரண்டு பேருக்குமே ரொம்பத் தூரம். பேசாம அவங்க ஆபிஸ் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து அவங்களைக் குடி வச்சுட்டால் என்ன?

வீட்டுக்குத் தேவையான சாமான்களை வேணும்னா நீங்க வாங்கிப் போட்டுடுங்க. உங்களுக்கும் மகளுக்குச் செய்த திருப்தி இருக்கும். தனியா இருப்பதால் உத்ராவும், முகிலும் ஒருத்தருக்கு ஒருத்தரை புரிஞ்சு வாழ தனிமை உதவும்.

இங்கே இருந்து தினமும் வேலைக்குப் போய்ட்டு அலுத்து களைச்சு வந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேச கூட நேரம் இருக்காது. நீங்க என்ன சொல்றீங்க?” என்று கணவரிடம் கேட்டார் வளர்மதி.

“இது நல்ல ஐடியாவா இருக்கே. நீங்க என்ன நினைக்கிறீங்க சம்பந்தி?” என்று அவர் வீரபத்ரனிடம் கேட்டார்.

அவருக்கும் அது சரியாகத் தோன்றியது.

‘என்னது இவள் கூடத் தனியா இருக்கணுமா? நோ…’ என்று உள்ளுக்குள் அலறியவன்,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்க இங்கே இருந்தே வேலைக்குப் போய்ட்டு வர்றோம்…” என்று வேகமாக மறுத்திருந்தான் முகில்வண்ணன்.