22 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 22
நேரம் அப்பொழுதே பத்துமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் வினய் அப்படி வேகமாக வெளியே சென்றதில் பவ்யா அதிர்ந்து தான் போனாள்.
தான் அப்படிப் பேசியது அவனைக் காயப்படுத்தி விட்டதோ என்று எண்ணி வருத்தமடைந்தாள்.
“அவனோட வெளிநாட்டு ஆசையை எல்லாம் விட்டுட்டு இப்போ தான் எப்படியோ மனசு மாறி வந்திருக்கான். அவன்கிட்ட போய்ச் சும்மா பழசையே பேசி அவனையும் கஷ்டப்படுத்தி நானும் கஷ்டப்படுறேன். இது எல்லாம் தேவையா?” என்று தன்னையே கேட்டுக் கொண்டு வினய்யின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
பக்கத்தில் எங்கேயாவது போயிருப்பான் உடனே வந்து விடுவான் என்று அவள் காத்திருக்க, அவனோ பன்னிரெண்டு மணியளவில் தான் வீடு வந்து சேர்ந்தான்.
கதவை திறந்து விட்டதுமே அவனிடம் தெரிந்த மாற்றத்தில் பவ்யா இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்து திகைத்துப் போய் நின்றாள்.
வினய்யிடம் இருந்த வந்த மதுவின் மணம் பவ்யாவின் நாசியைத் தாக்க, ‘இவன் குடிப்பானா? அதுவும் நிதானமே இல்லாத அளவிற்கு?’ என்று நினைத்தவளுக்கு ஒருவேளை தன் பேச்சு தான் அவனைக் குடிக்க வைத்து விட்டதா என்று நினைத்தும் வருந்தினாள்.
மனைவியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு தன் பார்வை திருப்பிக் கொண்ட வினய் “சாரி பவி பேபி…” என்று முணங்கிய படி அங்கிருந்து செல்லப் போனான்.
அவன் பேச்சில் குடியின் குழறல் லேசாகத் தெரிய பவ்யா சென்றவனைக் கையைக் காட்டி நிறுத்தி “என்ன வினய் இதெல்லாம்? இப்படிக் குடிச்சிட்டு வந்துருக்கீங்க?” என்று பேசவே முடியாமல் திணறிய படி கேட்டாள்.
“ஹ்ம்ம்…! என்ன பண்றது பேபி? என்னால தாங்க முடியலையே? வலிக்குதே…! அந்த வலியை போக்க மருந்து வேணும். இது தான் இப்ப என் மருந்து. ஆனாலும் பாரு இதோ இங்கே இன்னும் குத்தி குத்தி வலிக்குது” என்று நெஞ்சில் கை வைத்து காட்டியவன்
“இந்த வலி போகவே போகாது போலயே! இந்த வலி போறதுக்கு என்ன பண்ணனும் பேபி? தெரிஞ்சா சொல்லேன்….” என்று பரிதாபமாகக் கேட்டான்.
என்ன புதுசா பேபின்னு சொல்றான் என்னையவா? வலிக்கு மருந்து மது மட்டும் தானா? என்று எண்ணம் ஓட அப்படியே நின்றிருந்தாள்.
“உனக்கும் மருந்து தெரியலையா பவி பேபி?” என்று அவனே கேட்டுவிட்டு “ஆமா உனக்கு எப்படித் தெரியும்? உனக்கே நான் அதிக வலியை கொடுத்துட்டேன். நீயே அந்த வலியோட கஷ்டப்படும் போது நீ எப்படி எனக்கு மருந்து தர முடியும்? இதை நான் முதலில் யோசிக்கலை பாரேன்” என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
வினய் உளறுவதாகத் தோன்ற மேலும் இந்த நிலையில் பேச்சை வளர்க்க விரும்பாமல் “போய்த் தூங்குங்க. வலி போய்ரும்…” என்று அவனை அங்கிருந்து அனுப்ப பார்த்தாள்.
ஆனால் அவனோ மெல்ல பவ்யாவின் அருகில் வந்தவன் “ஏன் பேபி என்னைத் தனி ரூம்க்குப் போகச் சொல்ற? நான் உன் கூடவே இருக்கேனே…” என்று கெஞ்சலாகக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் அவனை முறைத்த பவ்யா “உங்களை எல்லாம் இப்படிக் குடிச்சுட்டு வந்ததுக்கு இப்ப உள்ள விட்டதே தப்பு. இதுல என் கூட வேற இருக்கணும்னு ஆசை வருதோ? ஒழுங்கா உங்க ரூம்ல போய்ப் படுங்க. இல்லனா இங்க ஹாலிலேயே படுங்க…” என்று கடுப்புடன் சொன்னாள்.
அவள் கடுப்பில் வினய்யின் முகம் விழுந்து விட, தலையைத் தொங்க போட்டு நின்றிருந்தவன் கண்ணை மட்டும் நிமிர்த்தி மனைவியைப் பார்த்தான். அந்தப் பார்வை கவின் சில நேரம் பார்ப்பது போலவே இருக்க, ‘அப்படியே பிள்ளை போலவே பார்க்குறதை பார்’ என்று முணங்கினாள்.
அது அவன் காதிலும் விழ உடனே மலர்ச்சியுடன் அதரங்கள் விரிய சிரித்தவன் “தப்பா சொல்ற பேபி! அப்பாவை போலத் தான் மகனும் பார்க்கிறான். அவன் யாரு என் ரத்தமாக்கும்” என்று பெருமையாகச் சட்டையின் கழுத்து மடிப்பை தூக்கி விட்டுக் கொண்டான்.
அவனின் அந்தப் பெருமை கூடப் பவ்யாவிற்குக் கடுப்பை தான் தந்தது. இந்த நிலையில் அவன் இருக்கும் போது பேச வேண்டாம் என்று நினைத்தவள் இப்போது முடியாமல் போக “ஓகோ…! உங்க ரத்தம்…?” என்று வியப்பாகக் கேட்டவள்,
“உங்க ரத்தம்கிறதால தான் அப்படி அவன் பிறந்ததும் ஓடி வந்து பார்க்க வந்தீங்களோ?” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.
அந்தக் கேள்வியில் வினய்யின் மனது மீண்டும் அடி வாங்கியது.
ஆனாலும் குடியின் போதை அவனைப் பேச தூண்ட, “நீ என்னை மட்டும் குறை சொல்லாதே பவி. எனக்குத் தான் நீயும், அப்பாவும் என்னை ஏமாத்திட்டீங்களேனு கோபம். ஆனா நீயும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம் தானே…?
ஏன் அதைப் பத்தி கொஞ்சம் கூட நீ யோசிக்கலை? நான் ஒரு வழில தப்பு பண்ணினா நீயும் தான் உன் பக்கத்தை எடுத்து சொல்லாம வீம்பா இருந்து தப்புப் பண்ணிருக்க. உன் மேலயும் தப்பு இருந்தும் நான் தான் இறங்கி வந்திருக்கேன்.
என்னை டிவோர்ஸ் பண்ணினா அது உன் உயிர் விடுறதுக்குச் சமம்னு உங்க அத்தைகிட்ட சொன்ன நீ… என்கிட்டே கவினுக்காக மட்டும் தான் உங்ககிட்ட வர முடிவெடுத்தேன்னு உன் மனசை மறைச்சவ தானே? நம்ம இரண்டு பேர் மேலையும் தப்பை வச்சுக்கிட்டு என்னை மட்டும் குறையா சொல்லாதே பவி…” என்று சொல்ல இப்போது பவியின் மனது அடி வாங்கியது.
கணவன், மனைவி என்று இருந்தாலே அங்கே விட்டுக் கொடுத்துப் போவது என்ற ஒன்றும் இருக்க வேண்டும்!
அது இல்லாத பட்சத்தில் இப்படிதான் ஒருவரை ஒருவர் மாற்றி, மாற்றிக் காயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீ விட்டுக் கொடுத்தால் தான் நானும் விட்டுக் கொடுப்பேன் என்பது வாழ்க்கை அல்ல.
‘தன் துணை தனக்காக விட்டுக்கொடுத்துப் போவதை உணரும் போதே… நீ மட்டும் எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். நானும் உனக்காக விட்டுக் கொடுப்பேன்’ என்று மற்றொருவரும் விட்டுக் கொடுத்து தன் செய்கையில் அதை உணர்த்தும் போது அங்கே கணவன், மனைவியின் வெற்றிகரமான தாம்பத்தியம் மிளிர்கிறது.
அதை விடுத்து நீ மட்டும் எனக்காக விட்டுக் கொடு. நான் என் நிலையில் தான் இருப்பேன் என்ற வீம்பு வந்து விட்டால்… அங்கே தாம்பத்திய வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பித்துவிடுகின்றது.
இங்கே வினய் இனி மனைவி, மகன் உடன் தான் தன் வாழ்க்கை என்ற முடிவுடன் கிளம்பி வந்து விட்டான். அப்படி வந்தும் பவ்யா மனதில் வடுவாகத் தங்கிவிட்ட வலி இருவரையும் சேர விடாமல் தடுத்து, ஒருவர் காயத்தை மற்றவர் பெரிதாக்கிக் கொள்கின்றனர்.
இப்போது வினய் நீயும் தானே தப்பு செய்தாய்… என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறாய்? என்று மனைவியைக் கேட்க, அது பவ்யாவின் மனதில் அழுத்தமாக ஏறியது.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் பவ்யா மௌனமாகத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் அப்படிப் போனதும் தன் தலையில் தானே தட்டிக் கொண்ட வினய், “ச்சே…! அவளைக் கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைச்சு வந்துட்டு இப்ப நானே அவளைக் கஷ்டப்படுத்துறேனே…” என்று தன்னையே சத்தமாகத் திட்டிக் கொண்டவன் “சாரி பவிமா…!” என்று அவளின் பூட்டிய அறையைப் பார்த்துக் கத்தினான்.
அது அவளின் காதில் விழுந்தாலும் அமைதியாகப் படுக்கையில் சென்று விழுந்தாள்.
படுத்து விட்டாளே தவிர உறக்கம் என்பதே அவளின் அருகில் கூட வராமல் ஆட்டம் காட்டியது.
வினய் சற்று முன் சொன்னதை யோசித்துப் பார்த்தாள். ஆம்…! என் மீதும் தானே தவறு இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
எனக்கு எப்படி அவன் கூடச் செல்லாமல் தவிர்க்க காரணம் இருந்ததோ, அதே போல அவனுக்கும் ஒரு காரணம் இருந்தது. எதிர்கால வாழ்க்கை பற்றிக் கனவு கண்டு அதற்கு ஏற்றார் போலத் திட்டம் போட்டு செயல்படும் நேரத்தில் அவனின் கனவே கலைந்து போனதில் ஏற்பட்ட ஏமாற்றம் அவனை என்னென்னமோ பேச செய்து விட்டது.
அவன் அங்கே சென்ற பிறகாவது தான் பேசி அவனுக்குத் தன் மனநிலையையும் புரிய வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்போது வந்தவனையும் சொல்லி குத்தி காட்டி பழைய வலியை கிளறி விட்டு, இப்போது உள்ள வாழ்க்கையையும் தான் கெடுத்துக் கொள்கிறோனோ? என்று தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.
வெகு நேரம் யோசனையிலேயே சென்றிருக்க, வெளியே வினய் ஏதோ பேசும் சத்தம் கேட்டது. ‘என்ன இவன் தனியாக என்ன பேசுகிறான்?’ என்று நினைத்தபடி எழுந்து வந்து லேசாகக் கதவை திறந்து பார்த்தாள்.
சத்தம் வந்ததே தவிரக் கணவன் எங்கே என்று தெரியாமல் போக, அறையை விட்டு வெளியே வந்து கண்களைச் சுழல விட, அங்கே இருந்து சோஃபாவில் வினய் படுத்திருப்பது தெரிந்தது.
என்ன பேசுகிறான் என்று அறிந்து கொள்ள மெல்ல அவன் தலை பக்கம் சென்று நின்றாள்.
மல்லாந்து படுத்திருந்த வினய் தூக்கத்தில் இருந்தான். ஆனால் அவன் வாய் மட்டும் பேசிக் கொண்டே இருந்தது.
“எத்தனை நாள் என்னை இப்படி விலக்கி வைப்ப பவி பேபி? என் அணு ஒவ்வொண்ணும் நீ வேணும்னு துடிக்கிதே…” என்று இன்னும் அவன் அந்தரங்கமாகப் புலம்ப ஆரம்பிக்க, கேட்டுக் கொண்டிருந்த பவ்யா “அடப்பாவி…! எப்படி எல்லாம் தூக்கத்தில் பேசுறான் பார்” என்று எண்ணிக் கொண்டவளுக்கு வெட்கமே வந்து விட்டது.
“உனக்கு ஒன்னு தெரியும் பவிமா? உன் மேல நான் கோபமா இருந்தப்பவும் உன் ஞாபகத்தை மறக்க முடியாம தான் நான் குடிக்கவே ஆரம்பிச்சேன். ஆனா குடிச்ச பிறகு நீ என் கூடவே இருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்குவேன். அந்தக் கற்பனை தான் தனியா இருந்த எனக்கு நிம்மதியை தந்துச்சு.
ஊரில் இருந்து வரும் போது இனி உன் கூடவே இருக்கலாம். கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையை நிஜமா வாழலாம்னு ஆசை பட்டு வந்தேன். ஆனா இப்பவும் கற்பனையில் தான் வாழ்றேன். நிஜமா எப்போ வாழலாம் பவிமா?” என்று பேசிக் கொண்டே போனவன்,
“ச்சு…! பவி பேபி நான் தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல… அங்கே கையை வச்சு கிச்சு மூட்டாதே…!” என்று தன் கையை வைத்து அவன் நெஞ்சில் லேசாகத் தட்டிக் விட்டுக் கொண்டான்.
‘அடப்பாவி புருஷா…! விட்டா கனவுலயே குடும்பம் நடத்தி பிள்ளை வரை போயிருவ போல இருக்கே’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவளுக்கு அவனின் தொடர்ந்த உளறல்கள் வெட்கத்திற்கே வெட்கம் வந்துவிடும் அளவிற்குச் சென்றது.
அதற்கு மேல் அவன் பேச்சை கேட்க முடியாமல் தன் அறைக்குள் ஓடி ஒளிந்தாள் பவ்யா. அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. அவள் சற்றுமுன் எடுத்திருந்த முடிவு வேறு நாளையில் இருந்து தங்கள் வாழ்க்கை இன்னும் வண்ணமயமாக மாறி விடும் என்ற நினைவில் அவள் முகம் செந்தாமரையாக மலர்ந்திருந்தது.
ஆம்…! தன் சுய அலசலின் முடிவில் தாங்கள் இதுவரை அனுபவித்த துன்பங்களே போதும். இனியாவது குத்தல்களைத் தவிர்த்து அன்பை மட்டும் பிரதானமாக வைத்துத் தங்கள் வாழ்க்கையைத் தொடர நினைப்போம். தொலைந்த காலங்களை விடுத்து… வரும் காலத்திலாவது நல்ல தம்பதிகளாக, சிறந்த பெற்றோராக வாழ்ந்து காட்டுவோம் என்று முடிவெடுத்திருந்தாள்.
மகனை பார்க்க தான் வந்தேன் என்று வினய் சொன்னதால் ஏற்பட்ட மன சுணக்கம் கூட ‘உன் கூடச் சந்தோஷமா வாழ ஆசை பட்டு தான் வந்தேன்’ என்ற இப்போது கேட்ட அவனின் உளறல் அந்தச் சுணக்கத்தையும் விரட்டி அடித்திருந்தது.
அதில் அவள் மனது எந்தக் கலக்கமும் இல்லாமல் நிர்மலமான நிலையில் இருக்க… வர போகும் சுகமான நாட்களை எண்ணிக் கொண்டே நித்திரையின் வசம் செல்ல தயாரானாள்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பவ்யா கவினின் சிணுங்கல் சத்தம் கேட்டு அரை உறக்கத்தில் அவனைத் தட்டிக் கொடுத்து மீண்டும் உறங்க வைத்தாள். அவன் நன்றாக உறங்க ஆரம்பிக்கவும், புரண்டு படுத்து மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர போனவள் காதில் மீண்டும் ஏதோ சத்தம் கேட்க திரும்பி மகனை பார்க்க… அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
‘அப்போ என்ன சத்தம் அது?’ என்று கூர்ந்து கவனித்தவளுக்குச் சத்தம் வெளியே இருந்து தான் வருகிறது என்று புரிந்தது.
‘திரும்பவும் தூக்கத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டானா என்ன?’ என்று நினைத்துக் கவனித்துக் கேட்க, இல்லை அது புலம்பலாக இல்லாமல் வேதனை குரலாகக் கேட்டது.
அதைக் கேட்டதும் சட்டெனப் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். அங்கே சென்று வினய் இருந்த நிலையைப் பார்த்து பதறிப் போனவள் வேகமாக அருகில் சென்றாள்.
அங்கே சோஃபாவில் தன்னைக் குறுக்கி கொண்டு வயிற்றை இறுக பிடித்தபடி “ஆ…! ப்ச்ச்…!” என்று வித விதமாக வேதனையில் முணங்கிய படி தன் வலியை பொறுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் வினய்.
அதைக் கண்டு அவன் அருகில் ஓடியவள் “வினு…! என்னாச்சு வினு? என்ன செய்யுது?” என்று பதட்டமாகக் கேட்டாள்.
மனைவியை அருகில் பார்த்ததும் தன் வலியை மறந்து சிரிக்க முயன்றவன் முடியாமல் அவளை நோக்கி ஒரு கையை நீட்டினான்.
எதற்கு என்று புரியாமலேயே கணவனிடம் தன் கையைக் கொடுத்தாள். அவள் கையைப் பிடித்தவன் தன் இரண்டு கைகளுக்குள் அடக்கிக் கொண்டு அவள் கையையும் சேர்த்து தன் வயிற்றில் அழுத்தி வைத்துக் கொண்டான்.
அவன் செய்கை புரியாமல் “என்ன வினு செய்யுது…?” என்று கலக்கமாகக் கேட்டாள்.
“வயிறு வலிக்குது பவி. தாங்கவே முடியலை…” என்று அனத்தலுடன் பதில் சொன்னவன் அந்த வலியிலும் மனைவி தன்னை அழைத்த விதத்தைக் கவனித்து, “நீ என்னை வினுன்னு கூப்பிட்ட பவி…” என்று சந்தோஷமாகச் சொல்ல முயன்றான்.
ஆனால் அவனின் வலி அந்தச் சந்தோஷத்தை வெளிக்காட்ட விடாமல் அவனின் முகத்தைச் சுருங்க வைத்தது.
அதனைக் கண்டவள் “இப்ப அதுவா முக்கியம்? எதுக்கு வயிறு வலிக்குது…? இப்பதான் வலிக்குதா? இதுக்கு முன்னேயும் வலிக்குமா?” என்று விசாரித்தாள்.
அவள் கேள்வியில் முகத்தை யோசிப்பது போல வைத்தவன் பின்பு “இதுக்கு முன்ன ஒரு முறை வலிச்சது” என்றான் வலியுடன்.
“ஓ…!” என்றவள் பின்பு ஏதோ நினைத்தது போல “நைட் குடிச்சுட்டு வந்தீங்களே… அதனால வலிக்குதா…?” என்று கேட்டாள்.
“தெரியலையே…!” என்று சொன்னவன் “ஆ…!” என்று மீண்டும் வலியினால் துடிக்க ஆரம்பித்தான்.
“அவனின் வலி கண்டு பவ்யாவும் துடித்தவள் அவன் வயிற்றில் இருந்த தன் கையைக் கொண்டு தடவிக் கொடுத்து “ஒன்னும் இல்ல… வினு சரியாகிரும்” என்று சொல்லி தடவி விட்டுக் கொண்டே இருந்தாள்.
அதில் இதமாக உணர்ந்தவன் கண்களை இறுக மூடி படுத்திருந்தான். ஆனாலும் வாய் அவ்வப்போது வலியில் முணங்கி கொண்டே இருந்தது.
அவனின் முணங்கல் தாங்க முடியாமல் பதறிய பவ்யா “என் கையை விடுங்க வினு! தண்ணி எடுத்துட்டு வர்றேன் குடிங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. கொஞ்ச நேரம் பார்ப்போம். சரியாகலைனா ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றாள்.
அவள் கையை அழுத்தி தன் வயிற்றில் வைத்திருந்தவன் விடவே மனமில்லாமல் மெதுவாக விடுவித்து விட்டான்.
வேகமாகச் சமையலறை சென்ற பவ்யா சிறிது நேரத்தில் தண்ணீரை ஆற்றிக் கொண்டே வந்தாள். கணவனின் அருகில் வந்தவள் “எழுந்து உட்காருங்க வினு…” எனவும் எழுந்து அமர்ந்தவன் கையில் டம்ளரை தர அதை வாங்கிப் பருகும் முன் தண்ணீரை பார்த்து “என்ன பவி தண்ணி நிறம் மாறி இருக்கு?” என்று கேட்டான்.
“தண்ணி சுட வச்சு அதில் கொஞ்சம் தேன் விட்டு ஆத்தி எடுத்துட்டு வந்தேன். இப்படிக் குடிச்சா வயிறு வலி குறையும்னு கேள்வி பட்டிருக்கேன். உங்களுக்கு இப்படிக் கைவைத்தியம் பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும் எனக்காகக் குடிச்சு பாருங்க” என்றாள்.
அவள் எனக்காக என்று சொல்லவும் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் அமைதியாகத் தண்ணீரை பருகினான்.
‘எங்கே வேண்டாம் என்று சொல்லுவானோ?’ என்று நினைத்த பவ்யாவிற்கு அச்செயல் நிம்மதியை தந்தது.
தண்ணீரை பருகிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்ட வினய் மீண்டும் கையை நீட்டினான். டம்ளரை அருகில் இருந்த மேஜையில் வைத்தவள் அமைதியாகக் அவனுக்குத் தன் கையைத் தந்தாள்.
மனைவியின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்ட வினய் மீண்டும் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டான். பவ்யா அப்படியே சோஃபா அருகில் கீழே அமர்ந்து கொண்டாள்.
அப்படியே படுத்திருந்தவன் சிறிது நேரத்தில் வலி குறைய ஆரம்பித்ததால் மெல்ல தூங்க ஆரம்பித்தான். அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த பவ்யாவிற்கு அவனின் வலி குறைந்த முகம் திருப்தியை தந்தது.
எதற்காக வயிற்று வலி வந்திருக்கும் என்று யோசித்தாள். இரவு சாப்பாடும் மிதமான சாப்பாடு தான். அதனால் பிரச்சனை இருக்காது. ஒருவேளை குடி தான் காரணமா? என்று நினைத்தாள்.
கணவன் குடித்து விட்டு வந்ததே அவளுக்கு அதிர்ச்சி தான். ஆனால் மேலும் மேலும் வாக்குவாதம் பண்ண வேண்டாம் என்று நினைத்து தான் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள். ஆனால் இந்தக் குடிப்பழக்கத்தை இப்படியே விட முடியாதே? குடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன? என்று எண்ணியவள் அவன் எழுந்ததும் கேட்டு விட நினைத்தாள்.
அடுத்த ஒரு மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்த வினய் மெல்ல கண் விழித்தான். மனைவி இன்னும் கீழே அமர்ந்திருப்பதைப் பார்த்து வேகமாக எழுந்து அமர்ந்தவன் தன் வயிற்றில் இருந்த அவளின் கையை மெல்ல விட்டு “சாரி பவி…! அப்படியே தூங்கிட்டேன். மேல எழுந்து உட்கார்…!” என்று அழைத்தான்.
“இப்ப வலி எப்படி இருக்கு வினு” என்று அமைதியாகக் கேட்டாள். “இப்போ பரவாயில்லை பவி. குறைஞ்சிருக்கு…” என்று சொன்ன மறுநொடி அவனை முறைத்துப் பார்த்தாள்.
எதற்கு இந்த முறைப்பு என்று அவன் புரியாமல் மனைவியைப் பார்க்க “இந்த வலி எதனால் வினய் குடிச்சதாலா…?” என்று கோபத்துடன் கேட்டாள்.
வினு, வினய் ஆகிவிட்டதைக் கவனித்துக் கொண்டே “தெரியலை பவி. இருக்கலாம். இதுக்கு முன்ன வலிச்சதும் நான் டிரிங் பண்ணின அன்னைக்குத் தான்” என்று சொன்னதும் உக்கிரமாகப் பார்த்தாள்.
“எப்படி இந்தப் பழக்கம் வந்தது வினய்?” என்று உக்கிரம் குறையாமல் அவன் உறக்கத்தில் உளறியதை காட்டி கொள்ளாமல் அவன் மூலமே தெரிந்து கொள்ளக் கேட்டாள்.
ஆனால் அவனோ உளறியதை அறியாமல் உன்னை மறக்க முடியாமல் தான் குடித்தேன் என்று சொல்ல தயங்கி “அது… அங்க தனிமை… உங்க மேல இருந்த கோபம்… நான் நினைச்சது நடக்காம போனது… எல்லாம் சேர்ந்து எனக்கு ட்ரின்க் பண்ண தோனுச்சு” என்றான். அதுவும் குடிக்க அவனின் காரணமாக இருந்ததினால் அதையே சொன்னான்.
அவனின் பதிலில் “ஓஹோ…! அப்படியா…?” என்று ஆச்சரியமாகக் கேட்டவள், “அப்போ எனக்கும் தனிமை… என் புருஷன் என்னை விட்டுட்டு போன வருத்தம்… நீங்க என் பேச்சை கேட்காம போன கோபம் எல்லாம் தான் இருந்தது. அப்போ நானும் உங்களைப் போல ட்ரின்க் பண்ணிருக்கணுமோ?” என்று கடும் கோபத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதும் சட்டென எழுந்து அவள் அருகில் வந்த வினய் “என்ன பேசுற பவி…?” என்று அவனும் கோபப்பட்டான்.
“ஏன் இப்போ கோபப்படுறீங்க வினய்? உங்களுக்கு இருந்த மாதிரி தானே எனக்கும் இருந்தது? ஆம்பளைனா குடிக்கலாம்… நான் குடிக்கக் கூடாதா? வலினா அது ஆணுக்கும், பொண்ணுக்கும் பொதுத் தானே? நைட் குடிச்சுட்டு வந்தப்ப சொன்னீங்களே எனக்கு வலிக்குதுனு… எனக்கும் தான் உயிரே போற மாதிரியான வலியும் வந்தது.
அப்ப எல்லாம் நானும் குடியை தேடி போனா என்ன ஆகிருக்கும் வினய்? உங்களுக்கு அமெரிக்க மோகம் இருந்தாலும் இன்னும் இந்திய பண்பாடு உங்களை விட்டு போகலை. போகவும் செய்யாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்படிப்பட்ட நீங்க கண்டிப்பா நான் குடிக்கிறதை விரும்ப மாட்டீங்கனு நினைக்கிறேன்.
நான் குடிக்கணுமானு கேட்டதுக்கே உங்களுக்குக் கோபம் வருதே? நீங்க ஒரு குடிகாரனா என் முன்னாடி நிக்கிறது மட்டும் எனக்கு அப்படியே சந்தோஷத்தையா தரும்?” என்று கேட்டாள்.
மனைவியின் கேள்விக்குப் பதிலே பேச முடியாமல் சோஃபாவில் சென்று அமர்ந்தவன் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
அவனின் அந்த நிலை மனைவியவளுக்கு வருத்தத்தைத் தந்தாலும், இன்றே குடி பழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடும் நோக்கத்துடன் மேலும் பேச ஆரம்பித்தாள்.
“பதில் சொல்லுங்க வினய்? குடி குடியை கெடுக்கும்னு சும்மா சொல்லி வைக்கலை. வாழ்க்கையில் பலர் பட்ட அடி தான் அந்த வார்த்தை வருவதற்கே காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க நம்ம குடி கெடுறதுக்குத் தான் அப்போ குடிக்கிறீங்களா?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.
அவள் கேள்வியில் திகைத்து தலையை நிமிர்த்தியவன் “இப்படியெல்லாம் பேசாதே பவி… நம்ம குடும்பத்தை நான் கெடுக்க நினைப்பேனா?” என்று வருத்தமாகக் கேட்டான்.
“நீங்க நினைக்க மாட்டீங்க வினய். ஆனா உங்க பழக்கம் அதை ஒரு நாள் செய்யும். உங்களோட குணமே உங்களுக்குத் தேவையானது தடங்கல் இல்லாம கிடைக்கணும்னு நினைக்கிற பிடிவாத குணம் தான். அது ஒன்னே நம்ம வாழ்க்கையை இத்தனை நாளும் சிக்கலில் கொண்டு வந்து விட்டுச்சு. இப்போ அதோட குடியும் சேர்ந்தா என்ன ஆகும் வினய்?
எனக்குப் பயமா இருக்கு வினய். ஒவ்வொரு விஷயத்துக்கும் போராடியே நம்ம வாழ்க்கை போய்ருமோ? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் இனியாவது தேவையில்லாத குத்தல் பேச்சை விட்டு நாமளும் நார்மல் வாழ்க்கையை ஆரம்பிப்போம். இனியாவது நம்ம குடும்ப வாழ்க்கை சந்தோஷமா போகட்டும்னு நினைச்சேன். ஆனா இப்போ இந்த உங்களோட குடி பழக்கமும், நீங்க இப்படி வலியில் துடிக்கிறதும் எனக்குப் பயத்தைத் தான் தருது. இதுக்கு என்ன தான் வழி வினய்? நீங்களே சொல்லுங்க” எனக் கேட்டாள்.
ஆனால் பதில் சொல்லும் நிலையில் அங்கே வினய் இல்லை. மீண்டும் அவனுக்கு வலி வர ஆரம்பித்திருந்தது. அந்த வலியை காட்டி கொள்ளாமல் மனைவி பேசிய அனைத்தையும் கேட்டவன் அந்த நேரத்திலும் ‘சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்க நினைச்சேன்’ என்ற அவளின் வார்த்தை அவனை மகிழ்ச்சி கடலில் தள்ளியது. ஆனால் அதை மேலும் அனுபவிக்க விடாமல் அவனின் வலியே அவனுக்கு விரோதியானது.
எதிரே நின்றிருந்த கணவனிடம் பவ்யா பதிலுக்காகக் காத்திருக்க, பதில் வராமல் போனதில் அவனின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள். கவனித்துப் பார்க்கும் பொழுது தான் அவனிடம் வித்தியாசம் தெரிந்தது. வலியை அடக்கி கொண்டிருப்பனின் முகம் சிவந்து கண்களில் கண்ணீர் கோர்த்து ஒரு மாதிரியாக இருந்தான்.
அதைக் கண்டவள் “என்ன செய்து வினு?” என்று பதறி அருகில் செல்ல, நின்று கொண்டிருந்தவன் பதில் சொல்ல கூட முடியாமல் அப்படியே சட்டெனச் சோஃபாவில் அமர்ந்தான்.
வயிற்றைக் குறுக்கினான். ஒரு மாதிரி நெளிந்தான். அவனின் ஒவ்வொரு செய்கையும் பவ்யாவை பதற வைக்க, “வினு…?” என அழைத்துக் கொண்டே அவனின் வயிற்றில் தானாகக் கை வைத்துத் தடவி கொடுக்க ஆரம்பித்தாள்.
வயிற்றினுள் வலிக்கும் வலி வெளியே தடவினால் சரியாகிவிடுமா என்ன? வயிற்று வலி கூடியதே தவிரச் சிறிதும் குறைவில்லை என்றதும், பல்லை கடித்துக் கொண்டு “என்னால முடியலை பவி…” என்றவனின் கண்கள் மேலும் கலங்கி இருந்தது.
அங்கே சின்னஞ்சிறு கவினாக உருமாறி நின்றான் வினய்.
இன்னொரு கையினால் அவன் கண்ணைத் துடைத்து விட்டவள் அதற்கு மேலும் வேறு எதையும் யோசிக்காமல் “எந்திரிங்க வினு… ஹாஸ்பிட்டல் போய்ருவோம்” என்றழைத்தாள்.
“எப்படிப் போகப் பவி? என்னால கார் ஓட்ட முடியுமான்னு தெரியலையே?” என்று கேட்டான்.
“நீங்க வாங்க… நான் ஓட்டிருவேன்…” என்றவள் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிந்த கவினை தூக்கிக் கொண்டு தன் கைப்பையையும், கார் சாவியையும் எடுத்துக் கொண்டவள் வினய்யின் அருகில் வந்து “வாங்க…!” என்று அழைத்துக் கொண்டு காரின் அருகில் வந்து “நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கோங்க” என்று விட்டு மகனை அவனின் அருகில் படுக்க வைத்து காரை எடுத்து மருத்துவமனை நோக்கி வண்டியை விடடாள்.
சற்று முன் அவனிடம் கோபப்பட்டதெல்லாம் அவளுக்கு மறந்து போயிருந்தது. கணவனின் வலியே பிரதானமாகத் தெரிய அதில் மட்டும் கவனத்தை வைத்தாள்.
செல்லும் வழியெல்லாம் “ரொம்ப வலிக்குதா வினய்? இதோ போயிடலாம்…” என்று அவனிடம் கேட்டுக் கொண்டே விரைந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
அவளின் அந்தக் கரிசனம் தான் வினய்யை வயிற்று வலியை தாண்டி இன்னும் கலங்க வைத்தது.
இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தார்கள். அப்பொழுது தான் காலை ஏழு மணியை நெருங்கி கொண்டிருந்ததால், அவசர கால மருத்துவர் மட்டுமே இருந்தார்.
முழுமையாக அவனைப் பரிசோதித்து விவரங்களை அறிந்து கொண்ட மருத்துவர் அவனின் குடிப்பழக்கத்தைப் பற்றி மேலும் விசாரித்தார்.
வினய் தான் குடிக்கும் நடைமுறையைச் சொல்ல, அவனின் அருகில் இருந்த பவ்யாவுக்கு மீண்டும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு வந்தது.
அனைத்தையும் கேட்ட டாக்டர் “ஓகே.. அப்போ நீங்க லாஸ்டா இருபது நாளைக்கு மேல குடிக்காம இருந்துட்டு இப்போ நேத்து குடிச்சிருக்கீங்க” என்று கேட்க “ஆமாம்…” என்றான்.
“சரி… வார வாரம் குடிச்சவர் எப்படி இருபது நாளா குடிக்காம இருந்தீங்க?” என்று கேட்டார்.
“அது…” என்று தயங்கியவன் மெல்ல பவ்யாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “சில வருஷம் நான் இந்தியா வரலை சார். ரொம்ப நாள் பிறகு என் மனைவி, குழந்தையைப் பார்க்க போற சந்தோஷத்தில் ட்ரிங் நினைப்பே எனக்கு வரலை டாக்டர். ஆனா நேத்து சின்ன மன கஷ்டம் வரவும் என்னைக் கட்டுப்படுத்த முடியாம குடிச்சிட்டேன்” என்றான்.
“ஹ்ம்ம்… உங்க குடிப்பழக்கம் தான் இப்போ பிராப்ளம். இந்தப் பழக்கத்தால் உங்க வயிற்றில் புண் வந்திருக்கு. அதனால் தான் வயிற்று வலி. அதுவும் நடுவில் சில நாள் குடிக்காம இருந்துட்டு நேத்து அதிகம் குடிக்கவும் அந்தப் புண் அதிக வலியை கொடுத்திருக்கு.
இப்போ நான் அந்தப் புண் ஆற மருந்து எழுதி தர்றேன். ஆனா நீங்க திரும்பக் குடிச்சா திரும்பப் புண் வர தான் செய்யும். அதோட கல்லீரலும் கூடப் பாதிக்க வாய்ப்பு இருக்கு. அதுக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று வீட்டில் பவ்யா கேட்ட கேள்வியை டாக்டரும் கேட்டார்.
தொடர்ந்து “உங்க உடம்பு மேல உங்களுக்கு அக்கறை இருந்தா நீங்க குடிக்கிற பழக்கத்தை விட்டாகணும்” என்று டாக்டர் சொல்ல, வினய் திரும்பி பவ்யாவின் முகத்தைப் பார்த்தான்.
பவ்யா முகத்தில் அவன் இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டுமே என்ற தவிப்புத் தெரிந்தது. அதோடு இன்னும் தூங்கிக் கொண்டிருந்த கவினை பவ்யா பிடித்துத் தடவி கொடுத்துக் கொண்டிருந்த விதம் ‘இந்தப் பிள்ளைக்கு நல்லா அப்பாவாக இரு…’ என்று மனைவி சொல்ல வருவது போலவும் இருக்க,
“விட்டுறேன் டாக்டர். முழுசா விட்டுவிட முயற்சி பண்றேன். ஆனா ஒருவேளை என்னை மீறி ட்ரிங்க் பண்ண தோணினா அதைக் கட்டுப்படுத்த ஏதாவது நடைமுறை இருக்கா டாக்டர்?” என்று கேட்டான். அவனின் அந்தக் கேள்வியிலேயே பவ்யாவிற்கான பதிலும் கிடைத்து விட அருகில் இருந்த கணவன் கையை அழுத்தி பிடித்துத் தன் மகிழ்வை காட்டினாள்.
அவனைப் பார்த்து மென்னகை புரிந்த மருத்துவர் அவர்களின் கையைக் காட்டி “இதோ… இது தான் அந்த நடைமுறை. குடிக்கணும்னு ஆசை வர்றப்ப உங்க குடும்பத்தை முதலில் நினைங்க. அது தான் முதல் மருந்து. நம்ம குடும்பம் கூட நிறைவான வாழ்க்கை வழணும்னு நினைப்பிருக்குற யாருக்கும் குடிக்கத் தோணாது.
ஒருவேளை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை தான் குடிக்கத் தூண்டுதுனா அந்தப் பிரச்சனையை முதலில் பேசி தீர்க்குற வலியை பாருங்க. நீங்க குடிச்சுட்டு வந்தாலும் அந்தப் பிரச்சனை எல்லாம் அப்படியே தான் இருக்குமே தவிர… அது தானா தீரப் போறதில்லை. அப்படி இருக்கும் போது அந்தக் குடி தேவைதானான்னு யோசிச்சு பாருங்க” என்று வினய்யிடம் சொன்னவர்,
பவ்யாவின் புறம் திரும்பி “உங்க கணவர் முழுசா மது பழக்கத்தில் இருந்து மீண்டு வர, உங்க ஒத்துழைப்பும் வேணும் மிசஸ்.வினய். அமைதியான குடும்பச் சுழல் இருந்தாலே அவருக்குக் குடிக்கத் தோணாதுனு தான் நினைக்கிறேன். உங்களைப் பார்க்க போற ஆர்வத்தில் எப்படிக் குடிக்காம இருந்திருக்கார் பாருங்க.
அப்படி இருந்தவர் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷ சூழ்நிலை வரும் போது கண்டிப்பா முழுசா மாறிருவார்” என்ற டாக்டர் மேலும் குடியை நிறுத்த வழிமுறையைச் சொல்லி அவனின் வயிற்றுப்புண்ணிற்கு மருந்து எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.
திரும்ப அவர்கள் காருக்கு வரும்போது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது. வயிற்று வலி குறைய ஊசி போட்டிருந்ததால் வலி குறைய ஆரம்பித்திருக்கத் தானே கார் ஓட்டுவதாகச் சொன்னான் வினய்.
‘சரி’ என்று அவனின் அருகில் அமர்ந்த பவ்யா… காரை ஓட்டிக் கொண்டு வந்த கணவனைக் காதலாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.