22 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 22

“நில் அபிராமி!” வீட்டிற்குள் நுழைந்த மனைவியை அதட்டி நிற்க வைத்தார் ஞானசேகரன்.

மகளை மருமகன் வீட்டில் விட்டுவிட்டு, அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அப்போது தான் தங்கள் வீட்டிற்குள் நுழைந்திருந்தார்.

தந்தையின் கோபத்தைக் கண்டு அன்னைக்கு ஆதரவாக அவரின் கை பற்றி நின்று கொண்டான் தயா.

“உன் மகள் வாழ்க்கையை நீயே இப்படிப் பாழாக்கிட்டு வந்திருக்கியே… உனக்குக் கொஞ்சம் கூட உறுத்தலை?” என்று கேட்டார்.

“எனக்கு ஏங்க உறுத்தணும்? ஒரு நல்லவன் கையில் அவளைக் கொடுத்திருக்கேன்னு சந்தோஷமாத்தான் இருக்கேன்…” அபிராமி சொல்ல,

“நல்லவனா இருந்தால் மட்டும் போதுமா?” என்றவரின் கோபம் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.

“வேற என்ன நல்லா இருக்கணும்?” கூர்மையுடன் கேட்டார்.

“ஏன் உனக்கே தெரியாது? சும்மா நடிக்காதே அபிராமி…” சிடுசிடுத்தார்.

அபிராமி அமைதியாக அவரைப் பார்க்க, “கை ஊனமா இருக்குறவனுக்குப் பொண்ணைக் கொடுத்து அவளைக் காலம் முழுவதும் கஷ்டப்படும் நிலைக்குக் கொண்டு வந்துட்டியே… இது ஒரு நல்ல அம்மா செய்ற வேலையா?” என்று கேட்டார்.

“நான் நல்ல அம்மா என்பதால் தான் என் மகள் மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன். என்னை என்ன உங்களைப் போல நினைச்சீங்களா? அந்த அரவிந்த், கதிரை விட எந்த விதத்தில் ஒசத்தின்னு அவனுக்கு நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்க முடிவு எடுத்தீங்க?

அதுவும் எனக்கும் சொல்லாம, முக்கியமா நம்ம பொண்ணுக்கே தெரியாமல் திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்கத் துணிந்திருக்கீங்க. ஒருவேளை அரவிந்த் கூட நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் முடிந்திருந்தால் அவள் உயிரோட இருப்பாளான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா?” என்று அபிராமி கேட்க,

“மனசு ஊசல் ஆடிட்டு இருக்கிறப்ப தான் விபரீத முடிவு எல்லாம் எடுக்கத் தோணும். அரவிந்த் தாலி கட்டிய பிறகு ரொம்ப யோசிக்க மாட்டாள்னு தோணுச்சு. அதான் கல்யாணத்துக்கு ரெடி செய்தேன்…” என்றார்.

“உங்க கணக்கு ரொம்பத் தப்புங்க. அவள் மனசு கதிர் பக்கம் சாய்ந்து அதில் உறுதியாக இருந்ததால் தான் அவளைப் பொண்ணு பார்க்க வந்தப்ப அவன் முன்னாடி நிற்க கூடப் பிடிக்காமல் தான் தற்கொலை முடிவை எடுத்தாள்.

இதே கதிர் இல்லாமல் வேற ஒருத்தன் தாலி அவள் கழுத்தில் ஏறி இருந்தால் நம்ம பொண்ணு உயிரோட இருந்திருக்க மாட்டாள். அது ஏன் உங்களுக்குப் புரியாமல் போயிருச்சு?” என்று ஆதங்கமாகக் கேட்டார்.

ஞானசேகரன் மனைவி சொன்ன விஷயத்தைக் கிரகித்துத் தளர்ந்து இருக்கையில் தொப்பென்று அமர்ந்தார்.

“ஆனா இப்ப மட்டும் அவள் வாழ்க்கை?” என்று கேள்வியாக மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.

“ஏன் அவள் வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்? அதெல்லாம் நல்லா வாழ்வாள்…” என்றார்.

“எப்படி? எப்படி நல்லா வாழ முடியும்? ஒரு கை இல்லாதவனைக் கல்யாணம் பண்ணிருக்காள். இப்ப காதல் மயக்கத்தில் அவன் குறை அவளுக்குப் பெருசா தெரியலை. இனி அவன் கூடவே வாழப் போறாள். அப்போ அவன்கிட்ட இருக்குற குறை கண்ணுக்கு தெரியவரும்.

நாலு ஆளுங்க அவள் முன்னாடி அவன் குறையைப் பத்தி பேசினால் உடைஞ்சி போய்டுவாள். அதனால் அவங்களுக்குள்ள கூடப் பிரச்சனை வரும்.

அதை விட முக்கியமா, அவளுக்குப் பிறக்க போற குழந்தைக்கும் குறை வந்திட்டால் அவள் காலமெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது இருக்குமே? இதையெல்லாம் யோசிச்சு தானே அவள் காதலுக்கு நான் மறுப்பு சொன்னேன்.

இதில் என் சுயநலம் எங்கே இருக்கு? என் பொண்ணு காலமெல்லாம் நல்லா இருக்கணும். குறை இல்லாம வாழணும்னு நினைத்தது தப்பா? சொல்லு அபிராமி, நான் நினைத்தது தப்பா?

அவளுக்காக மட்டும் தானே நான் யோசிச்சேன். ஒரு தகப்பனா நான் அது கூட நினைக்கக் கூடாதா? ஆனா என்னைப் பத்தி என் பிள்ளைங்க தான் சரியா புரிஞ்சிக்கலைனா நீ கூடச் சரியா புரிஞ்சிக்கலையே அபிராமி?” என்று வேதனையுடன் கேட்ட கணவரின் அருகில் வேகமாகச் சென்று அமர்ந்தார் அபிராமி.

“என்னங்க, உங்களை என்னை விட யாருங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்க முடியும்? உங்களைப் பத்தி எனக்குப் புரியாதா என்ன? நல்லா புரிஞ்சதால் தாங்க உங்களை எதிர்த்துக்கிட்டு நம்ம மகளுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணி வச்சுருக்கேன்…” என்றார்.

“இது தான் நீ என்னைப் புரிஞ்சி வச்சிருக்கிற லட்சணமா?” கடுப்புடன் கேட்டார் ஞானசேகரன்.

“உங்களுக்கு என்ன வேணும்? நம்ம மகள் சந்தோஷமா வாழணும். அதானே?”

“அதைத்தானே அப்ப இருந்து சொல்லிட்டு இருக்கேன்…”

“நீங்க நினைச்ச மாதிரி என்ன? அதை விட நல்லா நம்ம பொண்ணு வாழ்வாங்க. என்னை நம்புங்க…” என்ற மனைவியை நம்பமுடியாமல் பார்த்தார்.

“ஒருவேளை குழந்தை குறையோடு பிறந்தால் எப்படி அவள் சந்தோஷமா வாழ்வாள்? எனக்கு நம்பிக்கை இல்லை..” என்று தலையை அசைத்தார்.

“நீங்க ஏங்க அப்படி யோசிக்கிறீங்க? நல்லதா யோசிங்களேன்…”

“எந்த நம்பிக்கையில்?” என்று கேட்ட கணவனை அமைதியாகப் பார்த்தார்.

“இதுக்கு நான் ஒரு உண்மையைச் சொல்லித்தாங்க ஆகணும். உங்களுக்கு இருக்கும் அதே கவலை எனக்கும் இருந்தது. இதே கேள்வியை ஒரு நாள் நான் நம்ம பொண்ணுகிட்டயும் கேட்டேன்…”

“அதுக்கு உன் பொண்ணு என்ன சொன்னாள்?”

“கதிரை எப்படி அவங்க அம்மா, அவர் குறையைப் பத்தி பெருசா நினைக்காம நல்லபடியா வளர்த்து இப்போ லெக்சரர் ஆக்கியிருக்காங்களோ, அது போல் என் குழந்தை இருந்தால் அவங்க அம்மாவை விட நான் என் பிள்ளையை இன்னும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்குமா. அதனால் அதைப் பத்தி கவலைப்படாதீங்கன்னு சொன்னாள்…”

“இப்ப சொல்ல, கேட்க நல்லாத்தான் இருக்கும். ஆனா நடக்கும் போது?” என்று கவலையுடன் கேட்டார் ஞானசேகரன்.

“நடக்கும்னு நினைக்காம நாம நல்லதே நினைப்போம்ங்க. அவங்களை ஏத்துக்கோங்க…” என்றார்.

“இல்லை முடியாது. இப்ப நான் ஏத்துக்கிட்டால் கதிரையும் நான் ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடும். என் பொண்ணு எப்படி வாழ்வாள்ன்னு பார்க்காமல் என்னால் ஏத்துக்க முடியாது. ஒருவேளை அவனுடன் வாழ முடியாத நிலை அவளுக்கு வந்தால்?” என்று நிறுத்தினார்.

“நீங்க ரொம்ப யோசிச்சு குழம்பிக்கிறீங்க. நீங்களே கவனிச்சு பாருங்க. உங்க பொண்ணு வருத்தப்பட்டால் அப்போ என்னை நிக்க வச்சுக் கேள்வி கேளுங்க. ஆனா அவள் ரொம்பச் சந்தோஷமா வாழ்றாள்னு நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கனா அதுக்குப் பிறகும் அவங்களை விலக்கி வைக்கக் கூடாது…” என்றார் அபிராமி.

‘சரி’ என்று தலையை அசைத்தார் ஞானசேகரன். கூடவே தன் மகள் எந்த மனக்கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக வாழவேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டார்.

அவரின் கையை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார் அபிராமி.

“நயனி நம்ம வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படலையா?” என்று மெதுவாகக் கேட்டார் ஞானசேகரன்.

“உங்க பொண்ணு எப்படி இருப்பாள்? உங்களுக்கு இருக்கும் அதே பிடிவாதம் இருக்கத்தானே செய்யும். நானும் கூப்பிட்டேன். அப்பா கதிரை எப்போ ஏத்துக்கிறாரோ அப்பத்தான் வருவேன்னு சொல்லிட்டாள். அவள் வரலைனா என்ன? எதிர் வீடு தானே. நாம எப்ப வேணும்னாலும் பார்த்துக்கலாம்…” என்றார் அபிராமி.

“ம்ம்” என்று பெருமூச்சு விட்டு எழுந்து போனார் ஞானசேகரன்.

“அப்பா திடீர்ன்னு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணவும், என்னடா அப்பா இவ்வளவு டெரரா இருக்காரேன்னு நினைச்சேன் மா. ஆனா அப்பா நல்லவர் தான் இல்லமா?” என்று அன்னையிடம் கேட்டான் தயா.

மகனை பார்த்து மென்மையாகச் சிரித்துக் கொண்டார் அபிராமி.

“உங்க அப்பா எப்பவும் நல்லவர் தான்டா. அவருக்கு நாம தான் உலகம். நமக்கு எது நல்லதோ அதைத்தான் யோசிச்சு யோசிச்சு செய்வார். உங்க அப்பா மட்டும் என்ன பெரும்பாலான அப்பாக்கள் அப்படித்தான். வெளியே பார்க்க தான் கரடு முரடா தெரிவாங்க.

ஆனா அவங்க மனசுக்குள்ளும் மென்மை இருக்கும். உங்க அப்பாவுக்குள்ளும் அந்த மென்மை இருக்கு. அதனால் தான் தன் மகள் கஷ்டப்படுவாளேன்னு தவிச்சு போய் இந்த மாதிரி எல்லாம் செய்துட்டார்.

இன்னும் எங்கே கதிரால் உன் அக்கா அழுது கண்ணீர் விட வேண்டியது வந்திடுமோன்னு பயம் அவருக்கு இருக்கு. அந்தப் பயம் தெளியும் போது மாப்பிள்ளைன்னு கதிர் தம்பியை எப்படித் தாங்க போறார்னு நீ பார்க்கத்தான் போற பார்…” என்றார் அபிராமி.

“அப்பாக்குச் சீக்கிரம் அந்தப் பயம் போகணும்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்…” என்றான் தயா.

மகனின் தலையைச் செல்லமாகக் கலைத்து விட்டுச் சிரித்தார் அபிராமி.

“அப்புறம் மத்தியானத்துக்கு அம்மா சமைச்சுக் கொண்டு வர்றேன்னு சொல்லிட்டாங்க. இப்ப என்ன பண்ணலாம்?” என்று கேட்டாள் நயனிகா.

“கடைக்குப் போகலாமா நயனிமா? உனக்குச் சில ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வரலாம்…” என்றான் கதிர்நிலவன்.

“ஏன் கதிர், என் வீட்டில் இருந்து அம்மாவை கொண்டு வரச் சொல்ல கூடாதா? அங்கே இருந்து கொண்டு வர வேண்டாம்னு நினைக்கிறீங்களா?”

“ச்சே… ச்சே… அப்படி இல்லை நயனிமா. என்னைக்கு இருந்தாலும் பிறந்த வீட்டுச் சொந்தம் விட்டுப் போகாது. விட்டுவிடுன்னு நானும் சொல்ல மாட்டேன். இப்ப கூட நீ போகணும்னு நினைச்சால் போயிட்டு வரலாம். நான் தடுக்க மாட்டேன்…” என்றான்.

“அப்போ நீங்களும் வர்றீங்களா?” ஆர்வமாகக் கேட்டாள்.

“நானா? நான் எப்படி வர முடியும்? உன் அப்பா நம்ம கல்யாணத்தை ஏத்துக்கிற வரை நான் வர மாட்டேன். நீ மட்டும் போயிட்டு வா…”

“நீங்க இல்லாம நான் மட்டுமா? அப்படியெல்லாம் நான் போக மாட்டேன்…” என்று உடனே மறுப்பு தெரிவித்தாள்.

“சரி விடு, நீ போகணும்னு நினைக்கிறப்ப போ. இப்ப நாம சும்மா வீட்டில் இருப்பதற்கு வெளியே போய்ட்டு வரலாமேன்னு கேட்டேன். போகலாமா?”

“இல்லை கதிர். நாம வீட்டிலேயே இருப்போம்…” என்றாள்.

“வீட்டில் இருந்தால் நான் சும்மா இருக்க மாட்டேனே… பரவாயில்லையா?” என்று குறும்புடன் கேட்டான்.

“ஏன், என்ன செய்வீங்க?” என்று அறியாபிள்ளை போல் கேட்டவள், அவனின் குறும்பில் சட்டென்று சிவந்தவளாகிப் போனாள்.

“இப்போ எனக்கு உன் மடியில் படுத்துக்கணும் போல இருக்கு. அதைத்தான் செய்வேன்னு சொன்னேன். நீ வேற என்ன நினைச்ச?” என்று அவனின் குறும்பும், காதலும் தொடர,

“ச்சு… விளையாடாதீங்கபா…” என்று சிணுங்கினாள்.

“எனக்கும் விளையாட ஆசை தான். ஆனா அது நைட் தான்…” என்று கண்சிமிட்டி சொன்னவன், “உன் மடியில் படுக்கட்டுமா நயனிமா?” ஆசையும் ஆர்வமுமாகக் கேட்டான்.

“ம்ம், வாங்க…” என்று தன் மடியை வாகாகக் காட்டி அமர்ந்து கொண்டாள் நயனிகா.

மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவனுக்கு மனமும், உடலும் நெகிழ்ந்து போனது.

அவன் தலையை மெல்ல கோதி கொடுத்தாள் நயனிகா.

“என் வாழ்க்கையை அழகாக்க வந்த பொக்கிஷம் நீ நயனிமா! எனக்குன்னு ஒரு உறவு. நான் மடி சாய, என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, என் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க நீ! இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே உடல் எல்லாம் இலவம் பஞ்சாகப் பறப்பது போல் உணர்வு…” என்று உணர்ச்சி வசத்துடன் சொன்னவனின் நெற்றியில் காதலுடன் முத்தமிட்டாள் நயனிகா.

அவளின் முத்தத்தை விழி மூடி ரசித்துக் கொண்டவன், அவளின் முகத்தை மெல்ல தன்னை நோக்கி இழுத்து, அவளின் இதழ்களில் தன் முத்திரையைப் பதித்தான்.

முதல் இதழ் முத்தத்தில் காதல் கிளிகள் சிறிது நேரம் ரசித்துச் சுவைத்திருந்தனர்.

சற்று நேரத்தில் அபிராமி மதிய உணவுடன் வர, ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

“அப்பா என்ன சொன்னார்மா?” என்று நயனிகா விசாரித்தாள்.

“அவர் என்ன சொல்ல போறார்? நீ நல்லா வாழ்ந்தால் சரின்னு தான் சொன்னார்…” என்றார் அபிராமி.

“உங்க அப்பாவுக்கு என் குறையைப் பத்தி தான் கவலையா இருக்கும் நயனிமா. அந்தப் பயம் தான் நம்மை ஏற்றுக்கொள்ள முடியாமல் தள்ளி வைக்கச் சொல்லுது. கொஞ்ச நாளில் மாறிடுவார். கவலைப்படாதே!” அவர் எண்ணத்தை சரியா சொல்லிய கதிர்நிலவன் மனைவியைத் தேற்றினான்.

அன்றிரவு கட்டிலில் நயனிகா தயக்கத்துடன் அமர்ந்திருக்க, வீட்டுக்கதவை மூடி விட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு படுக்கையறைக்குள் வந்தான் கதிர்நிலவன்.

படுக்கையறை கதவையும் மூடியவன், அப்படியே ஜன்னல் சரியாக மூடியிருக்கிறதா என்றும் பார்த்தான்.

அந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனின் கண் மனைவியையும் கண்டுகொண்டிருக்க, அவளோ தலையைக் கூட நிமிர்த்தாமல் குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவளிடம் ஒருவித பதட்டம் தெரிவதை கண்டவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவன் அருகில் வர வர அவளின் பதட்டம் அதிகரித்தது.

“என் நயனிமாவுக்கு என்கிட்ட என்ன பயம்?” என்று மென்மையாகக் கேட்டபடி அவளின் அருகில் அமர்ந்து அவள் கையை மெல்ல பற்றிக் கொண்டான்.

“பயமெல்லாம் ஒன்னுமில்லையே…” என்று வேகமாகச் சொன்னவளின் உதடுகள் லேசாக நடுங்கின.

அதைக் கண்டவன் அவளின் இதழ்களை ஒற்றை விரலால் லேசாக வருட, தன் இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

மூடிய அவளின் இமைகள் அங்குமிங்குமாய் அலைபாய ஆரம்பிக்க, அவனின் மூச்சுக் காற்றுத் தன்னை நெருங்கியதை உணர்ந்து அவளின் உடல் கூசி சிலிர்த்துக் கொண்டது.

“உனக்கு இன்னைக்கு நம்ம வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம்னு தோணுச்சுனா வேண்டாம்…” என்று அவளின் காது மடலின் அருகில் ரகசியமாகக் கூறினான்.

“இல்லை… அப்படியெல்லாம் இல்லை…” என்று வேகமாக விழிகளைத் திறந்து மறுப்பு சொன்னவளின் காது மடலில் சிரிப்புடன் ஒரு முத்தத்தை வைத்தான்.

அவனின் சிரிப்பில் இன்னும் நாணம் கூடிக் கொள்ள, மீண்டும் இமைகளைச் சுகமான அவஸ்தையுடன் மூடிக் கொண்டாள்.

“அப்போ வேண்டாமா?” என்று கேட்டவனின் குரலில் குறும்பு கூத்தாட, “நான் அப்படிச் சொல்லவே இல்லையே?” என்று மென்று விழுங்கியபடி சொன்னாள்.

“நீ என்கிட்ட முன்னாடி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டாமான்னு கேட்டேன்…” என்று கண்சிமிட்டி கேட்டவனை விழிகளை மலங்க மலங்க சிமிட்டி பார்த்தாள்.

“என்ன கேள்வி?” அவனின் அருகாமையில் அவளுக்கு எதுவுமே சட்டென்று புரியவில்லை.

“இயல்பா இருடா…” என்று அவளின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டு சொன்னவன், எழுந்து அங்கிருந்த அலமாரி அருகே சென்றான்.

திரும்பி வரும் போது அவனின் கையில் சாட் பேப்பர் சுருள் இருந்தன.

‘என்ன அது?’ என்று அவள் கேள்வியுடன் பார்க்க, அவளின் கையில் அதைக் கொடுத்தவன் அருகில் மீண்டும் அமர்ந்தான்.

“பிரிச்சுப் பார்…” என்றதும் சாட் போல் இருந்த அந்தச் சுருளை பிரித்துப் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன.

அதில் அவளின் ஓவியம் இருந்தது.

அவனிடம் தன் மனதை சொல்லிய அன்று, அவன் கையை நீட்டி தன் குறையைச் சொன்ன போது அந்தக் கையைப் பற்றி அவள் தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட காட்சி அது. அதைத் தத்ரூபமாக வரைந்திருந்தான்.

“என்னால் மறக்கவே முடியாத நிகழ்வு இது. என் மனசு எப்ப உன் பக்கம் சாய்ந்தது என்று இந்த நேரம் தான்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனாலும் இந்தக் காட்சி பல நாட்கள் என் மனதை விட்டு அகலவே இல்லை. அதை ஓவியத்தில் கொண்டு வந்தேன்…” என்ற கதிர்நிலவன், “அதையும் பார்…” என்று அடுத்து இருந்த சாட்டைப் பார்க்க சொன்னான்.

அதையும் அவள் பார்க்க, அதில் பானு கல்யாணத்தன்று மேடையில் சேலையுடன் நின்று கதிர்நிலவன் வரும் போது அவனை அவள் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சி அது.

அன்று சேலையில் அவன் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் அவள் இருந்ததை எல்லாம் அவன் இப்போது ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தான்.

“நீங்க அன்னைக்கு என்னைப் பார்க்கவே இல்லைன்னு நினைச்சேன்…” என்றாள்.

“மண்டபத்திற்குள் நுழைந்ததும் முதலில் உன்னைத்தான் என் பார்வை தேடுச்சு. மேடையில் நீ சேலை கட்டி நின்றிருப்பதைப் பார்த்ததுமே, என் பார்வை உன்னை மட்டும் தான் பார்க்கணும்னு தவிச்சது. ஆனா நமக்குள் சரிவராதுன்னு என் மனசுக்கு நானே கடிவாளம் போட்டுக்கிட்டேன்…” என்றான்.

“நீங்களும் தவிச்சு என்னையும் தவிக்க விட்டுட்டீங்கல?” என்று இப்போதும் வருத்தத்துடன் கேட்டாள்.

“அதை விடுடா. அப்ப மனசில் நிறையக் குழப்பம். அதனால் அப்படி நடந்துடுச்சு…” என்றான் சமாதானமாக.

“நீ அடுத்ததைப் பார்…” என்றான்.

அவளும் அதை அத்துடன் விட்டுவிட்டு அடுத்ததைப் பார்த்தாள்.

“இதை ஏன் வரைஞ்சீங்க?” அந்த ஓவியத்தைப் பார்த்ததும் அவள் கேட்ட முதல் கேள்வி அதுவாகத்தான் இருந்தது.

“இதை வரையாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. நீதான் என் வாழ்க்கைன்னு நெத்தியில் அடிச்சது போல் எடுத்துச் சொன்னது இது தான்…” என்றவன் அந்த ஓவியத்திலிருந்த அவளின் உருவத்தை வருடினான்.

அது அவள் கையை வெட்டிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவளை அவன் பார்த்த காட்சி. நலுங்கிய தோற்றத்தில், ஒரு கையில் கட்டும், ஒரு கையில் குளுகோஸும் ஏறிக் கொண்டிருந்தது.

“இதை வரைய உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?” என்று கேட்டாள்.

“கஷ்டமாகவா? இதை வரையும் போது எத்தனை முறை என் கை நடுங்குச்சு தெரியுமா? உன் இந்தத் தோற்றம் நான் சாகும் வரை என் மனதில் இருந்து மறையாது. என்னையும் நேசிச்சு எனக்காகவே உயிரை கூடத் துச்சமாகத் தூக்கி எறிய இருந்த உன் காதலுக்கு நான் என்ன செய்யப் போறேன்? எனக்குத் தெரியவே இல்லை…” என்றான்.

“என்னைக் காதலிச்சுக்கிட்டே இருங்க. எனக்கு அது தான் வேணும்…” என்றவள் அவனின் அருகில் நெருங்கி அவனைச் சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு மனதிற்கு நிறைவாக இருந்தது.

தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அன்று தான் தன் உருவத்தை வரைந்து கொடுக்கச் சொன்ன போது புகைப்படம் கேட்டவன், இப்போது தன் உருவத்தை அச்சுப்பிசறாமல் வரைந்திருக்கிறான் என்றால் அவன் மனதில் தான் எந்த அளவு பதிந்திருக்கிறோம் என்பதில் அவளின் மனது துள்ளாட்டம் போட்டுக் காதலில் ததும்பி கொண்டிருந்தது.

தன் எண்ணத்தை அவனிடமும் பகிர்ந்து கொண்டாள்.

“அதுக்குக் காரணம் நீ என் சிந்தையில் முழுவதும் ஆக்கிரமிச்சுட்ட நயனிமா. என் சிந்தையில் பதிந்த உன்னைச் சித்திரமாகப் படைத்து விட்டேன். சிந்தையில் பதிந்த சித்திரம் போல் உன் நினைவு எப்போதும் எனக்குள் நிறைந்திருக்கும்…” என்றான் காதலுடன்.

அவன் பேச்சில் மனம் நெகிழ்ந்து இன்னும் இறுக்கமாகக் கணவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் அடங்கியதோடு தனக்குள்ளும் அவளை அடக்கிக் கொண்டான் கதிர்நிலவன்.

“நம்ம வாழ்க்கையை இன்னைக்கு ஆரம்பிப்பதில் உனக்குச் சம்மதம் தானே டா?” சிறிது நேரத்திற்குப் பிறகு ரகசியமாக அவள் காதில் கேட்டான்.

“ம்ம்…” என்று தானும் ரகசியமாக முனங்கினாள்.

அவள் சம்மதம் கிடைத்ததும் அவளின் முகத்தை நிமிர்த்தியவன் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவளின் இதழில் தன் அதரங்களைப் பதித்துத் தங்கள் இல்லற வாழ்வை ஓவியம் போல் தீட்ட ஆரம்பித்தான் கதிர்நிலவன்.

அவனின் கைகளில் அழகான சித்திரமாய் மிளிர ஆரம்பித்தாள் நயனிகா.