21- மின்னல் பூவே

அத்தியாயம் – 21

“ரூபி பேபி இன்னைக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று தன் மடியிலிருந்த குழந்தையிடம் கொஞ்சலாகக் கேட்டாள் உத்ரா.

“இன்னைக்கு அவள் சரியாவே சாப்பிடலை உத்ரா. எனக்குப் பொறுமையா ஊட்டி விட்டவும் நேரமில்லை. வீட்டுக்குப் போய்த் தான் நல்லா ஊட்டிவிடணும்…” என்றாள் முன்னால் அமர்ந்திருந்த இலக்கியா.

பெண், மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

கார்த்திக் அவர்களின் காரை ஓட்ட, அவனின் அருகில் இலக்கியா அமர்ந்திருந்தாள்.

பின்னால் முகில்வண்ணனும், உத்ராவும் அமர்ந்திருக்க, அவளின் மடியில் அபிரூபா அமர்ந்திருந்தாள்.

“அச்சோ! எங்க குட்டி இன்னைக்கு சரியா சாப்பிடலையா? இந்தக் குட்டி வயித்துக்குப் பசிக்குமே?” என்று அபியின் வயிற்றை லேசாகத் தடவியபடி கேட்க,

அவள் தனக்குக் கிச்சுக்கிச்சு மூட்டுவதாக நினைத்துக் கிளுங்கி சிரித்தாள் அபிரூபா.

கார் இருக்கையில் பின்னால் தலை சாய்த்துக் கண்மூடி அமர்ந்திருந்த முகில், குழந்தையின் சிரிப்புச் சப்தத்தில் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.

குழந்தையின் சிரிப்பை முதலில் ஆசையாகப் பார்த்தவன், பின் அவளைச் சிரிக்க வைத்தவளைப் பார்த்தான்.

குழந்தையிடம் பேசும் போது உத்ராவின் குரல் மட்டுமில்லாது அவளின் முகத்திலும் மென்மை தவழ்ந்து கொண்டிருந்தது.

அந்த மென்மையைக் கண்டவன், அவளின் விரலைப் பற்றும் போது விரலும் மென்மையாக இருந்ததை இப்போது நினைத்துப் பார்த்தான்.

குரலும், முகமும், விரலும் மென்மையாக இருந்து என்ன செய்வது? அவள் மனதும், செய்கையும் அப்படியா இருக்கிறது?

‘எப்படி எல்லாம் ஏமாற்றி என் வாழ்க்கையில் நுழைந்து விட்டாள்? இவளை சும்மா விடுவதா?’ என்று நினைத்தவன் கோபத்துடன் பற்களைக் கடித்தான்.

பின் அவளைப் பார்க்க பிடிக்காதவன் போல் மீண்டும் இருக்கையில் பின்னால் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டான்.

“அந்தக் கமலினி இப்படிச் செய்வாள்னு…” என்று இலக்கியா ஏதோ பேச ஆரம்பிக்க, கண்களை அப்போது தான் மூடிய முகில் பட்டென்று விழித்தான்.

“அக்கா…” என்று ஆத்திரமாகக் கத்தியவன், “இப்போ இந்தப் பேச்சு முக்கியமா? வாயை மூடிட்டு வாக்கா. தலை எல்லாம் வலிக்குது. நான் கொஞ்ச நேரம் கண் அசரணும்…” என்று கடுப்படித்தான் முகில்வண்ணன்.

“நீ ஏன்டா, இன்னும் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுந்துகிட்டு இருக்க? நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்காம எதுக்குக் கோபப்படுற? இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருக்கீயா? அதான் இப்போ உத்ரா உன் வாழ்க்கையில் வந்துட்டாளே, இனி உன் வாழ்க்கை நல்லா இருக்கும் பார்…” என்றாள் இலக்கியா.

“போனவளைப் பத்தி இனி ஏன் நான் நினைக்கிறேன்? இப்போ எனக்குத் தலைவலிக்குது பேசாம வான்னு தான் சொன்னேன்…” என்றான் எரிச்சலாக.

அதற்கு இலக்கியா ஏதோ பேச போக, மனைவியின் கையைப் பிடித்து அழுத்தி அமைதியாக இருக்கச் சொன்னான் கார்த்திக்.

“சில அவமானங்களை எல்லாம் கடந்து வர டைம் ஆகும் லக்கி. அவனை அவன் போக்கில் விடு…” என்று மனைவியிடம் மெதுவான குரலில் சொல்ல இலக்கியா அதன் பிறகு அமைதியாக வந்தாள்.

“வந்தவளே என்ன வினையை இழுத்து வைக்கக் காத்திருக்காளோ? இதில் போனவள் மேல் கோபப்படவா எனக்கு நேரமிருக்கு?” என்று எரிச்சலுடன் மெதுவான குரலில் முனங்கினான் முகில்.

அவன் பேசியது சரியாக உத்ராவின் காதிற்குச் சென்று சேர்ந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் குழந்தையிடம் மெதுவான குரலில் பேசிக் கொண்டு வந்தாள்.

அதன் பிறகு வீடு வரும் வரை குழந்தையின் குரல் மட்டுமே அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

வீடு வந்ததும் முதலில் இறங்கிய இலக்கியா, “வா உத்ரா, இனி நீ வாழ போற வீடு இது தான்…” என்று உத்ராவை வரவேற்றவள்,

“முன்னாடி ஓடி வராம உத்ராவையும் உன் கூடவே கூட்டிட்டு வரணும் முகில்…” என்று அவனுக்கு உத்தரவு இட்டுவிட்டு கணவனின் புறம் திரும்பியவள்,

“இவங்களை இன்னும் பைவ் மினிஸ்ட் அப்புறம் கூட்டிட்டு வாங்க. நான் போய் ஆரத்தி ரெடி பண்ணி கொண்டு வர்றேன்…” என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

“உங்களுக்கும் சேர்த்து அக்காவே பேசிட்டா நீங்க எப்போ பேசுவீங்க அத்தான்?” அவள் உத்தரவிட்டுச் சென்றதில் கடுப்புடன் கேட்டான் முகில்வண்ணன்.

“என் பொண்டாட்டி பேச வேண்டிய நேரத்தில் தான் சரியா பேசுவாள் முகில். அதுக்கு உதாரணமே உருப்பெற்று உங்கள் பக்கத்தில் இருக்கு…” என்ற கார்த்திக் உத்ராவும், முகிலும் ஜோடியாக நின்றிருந்ததைக் குறிப்பிட்டுக் காட்டினான்.

“அதானே நீங்க உங்க பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே அத்தான்…” என்று அலுத்துக் கொண்டான் முகில்.

“நமக்குப் பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட எப்பயும் விட்டுக் கொடுத்துப் பேசிட கூடாது முகில். பிடிக்காத பொண்டாட்டியே அப்படினா எனக்கு ரொம்பப் பிடிச்ச என் பொண்டாட்டியை விட்டுக் கொடுத்துடுவேனா என்ன?” என்று கார்த்திக் கேட்க, கப்பென்று வாயை மூடிக் கொண்டான் முகில்.

கார்த்திக்கின் பதிலைக் கேட்டு அவனைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்தாள் உத்ரா.

முகிலையும் அர்த்தத்துடன் பார்க்க மறக்கவில்லை அவள்.

அவளின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் முகில்.

குழந்தையைக் கார்த்திக் தூக்கிக் கொண்டு முன்னால் சென்று விட, முகிலும், உத்ராவும் மாலையுடன் ஜோடியாக வாசலில் நிற்க, இருவருக்கும் ஆரத்தி சுற்றினாள் இலக்கியா

மணமக்கள் வீட்டிற்குள் வந்ததும் உத்ராவை விளக்கேற்ற சொல்ல, அவளும் விளக்கேற்றினாள்.

அடுத்து மணமக்களுக்குப் பாலும், பழமும் கொடுக்க ஏற்பாடு செய்ய, “இதெல்லாம் இப்ப தேவையாக்கா?” என்று இலக்கியாவிடம் கேட்டான்.

அவனால் எதிலும் ஒன்ற முடியவில்லை. அவனால் உத்ராவை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மனமெல்லாம் கசந்து வழிந்தது.

அதனுடன் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் சடங்குகளை அவனால் மனமொத்துச் செய்ய முடியவில்லை.

கடமைக்குச் செய்யவும் விருப்பம் இருக்கவில்லை. அதனால் கழன்று கொள்ள நினைத்தான்.

“இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறைதான் செய்ய முடியும் முகிலா. உன் மனசும் எங்களுக்குப் புரியுது. ஆனால் முறைன்னு ஒன்னு இருக்குல? கல்யாண நாள் நம்ம வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்னு. இப்போ இதெல்லாம் செய்யாமல் விட்டால் ஒரு நாள் நீயே ஃபீல் பண்ணுவ. இன்னும் கொஞ்ச நேரம் தான். இரண்டு பேரும் பால், பழம் மட்டும் சாப்பிடுங்க. அதுக்குப் பிறகு உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்…” என்றாள் இலக்கியா.

“ஆளாளுக்கு அட்வைஸ்… ச்சே…” என்று சலித்தபடி சோஃபாவில் அமர்ந்தான்.

உத்ராவும் அவனின் அருகில் அமைதியாக அமர்ந்தாள்.

உத்ரா மணமேடையில் அவனுடன் பேசியதுடன் சரி. அதன் பிறகு அவனிடம் மட்டுமல்ல, வேறு யாருடனும் அவ்வளவாகப் பேசவில்லை.

மிக அமைதியாக இருந்தாள். அவர்கள் செய்யச் சொன்னதைச் செய்தாள்.

அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று யாராலும் அனுமானிக்க முடியவில்லை.

நெருங்கிய உறவினர்கள் சிலரும், உத்ராவின் பெற்றோரும், முகிலின் பெற்றோரும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

இலக்கியா பாலும், பழமும் எடுத்து வந்து கொடுக்க, அவர்கள் சொன்ன படி பாலும், பழத்தையும் உண்டு விட்டு உத்ராவிடம் மீதியைக் கொடுத்து விட்டு அவள் உண்டாளா இல்லையா என்பதைக் கூடக் கண்டுகொள்ளாமல் எழுந்து விட்டான்.

“நான் என் ரூமுக்குப் போறேன்…” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

“என்னங்க இது?” என்று முகிலின் நடவடிக்கையைப் பார்த்து வருத்தமாகக் கணவனிடம் கேட்டார் அஜந்தா.

“விட்டுத்தான் பிடிக்கணும்மா. நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்…” என்றார் வீரபத்ரன்.

“மாப்பிள்ளை இப்படி எல்லாம் செய்வார்ன்னு தெரிஞ்சு தான் நம்ம பொண்ணு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாள். ஆனால் நீங்க தான் என்னென்னவோ பேசி அவளைச் சரி கட்டிட்டீங்க. இப்ப அவள் தான் அவஸ்தை படணும் போலயே?” என்றார்.

“நீயே பார்த்தாயே அஜ்ஜூ? கல்யாணத்துக்குக் கிளம்பும் போது கூட என்னைக்கும் இல்லாம எவ்வளவு வருத்தப்பட்டாள்? முகில் வேண்டாம்னு சொல்லிட்டார்னு இவள் விலகிட்டாலும் அவள் மனசு விலகலைமா. அதனால் தான் அவ்வளவு வருத்தப்பட்டாள். நாம அவளுக்குக் கல்யாணம் முடிச்சு வைக்க நினைக்கிறோம். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கப் போறேன்னு நான் சொன்னப்ப கூட அதை அவளால் ஏத்துக்க முடியலை.

முகில் தவிர வேற யாரையும் அவள் மனசு ஏத்துக்காதுன்னு தெரிஞ்சு போயிருச்சு. ஆனாலும் அப்போ நம்மளால் அவள் ஆசைப்பட்டவனுக்கே கட்டி வைக்க முடியலை. ஆனா இப்போ சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் நின்னு நம்ம பொண்ணை அவங்களே விரும்பிக் கேட்ட பிறகு தானா வந்த சம்பந்தத்தை எப்படி விட முடியும்?

அதனால் தான் அவங்களுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இனி மீற முடியாதுன்னு சொல்லிக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைத்தேன்.

அதுவும் இல்லாம அவள் கல்யாணம் தான் வேண்டாம்னு சொன்னாலே தவிர முகில் வேண்டாம்னு அவள் சொல்லவே இல்லை. சொல்லவும் அவளால் முடியலை. முகில் மேல அவளுக்கு வருத்தம் இருந்தாலும் அவன் மேலே அவளுக்கு இருக்கும் காதல் சொல்லவும் விடாது.

இப்போ ஆரம்பத்தில் எல்லாமே கஷ்டமாகத் தான் இருக்கும். முகிலுக்கு இன்னும் முழுசா நம்ம பொண்ணைப் பத்தி தெரியலை. அதனால் தான் இந்த விலகல். என்ன அதைத் தெரிஞ்சிக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகலாம். தெரியும் போது நம்ம பொண்ணு நல்லா வாழ்வாள்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

கவலைப்படாதே! நீ போய் அவள்கிட்ட பேசிட்டு இரு. நான் சம்பந்திகிட்ட பேசிட்டு வர்றேன். சீர் எல்லாம் இப்போ நாம ரெடி பண்ணனும். அந்த வேலையைப் பார்க்க கிளம்பணும். உத்ராவுக்குத் துணிமணி எல்லாம் எடுத்துட்டு வரணுமே? அதை அவள்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பி வீட்டுக்கும் போய்ட்டு வந்திடுவோம்…” என்று சொல்லிவிட்டு ரகுநாதனிடம் பேச சென்றார்.

முகில் தன்னை மறுத்த காரணம் இன்னும் அப்படியே இருக்கிறது. அதனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்று மட்டுமே தந்தையிடம் சொல்லியிருந்தாள் உத்ரா.

அவன் தன் மீது இப்போது சாட்டிய குற்றச்சாட்டையோ, அவனின் கோபம் இப்போது தன் மீது அதிகரித்து இருப்பதையோ அவள் சொல்லியிருக்கவில்லை. சொல்ல விருப்பமும் இல்லை.

அதனால் முன்பு முகில் மகளை மறுத்த காரணத்தைப் பெரிதாக எடுக்காமலும், மகளின் மனது எந்த அளவு முகிலை விரும்புகிறது என்பதை மட்டுமே வைத்துக் கல்யாணத்திற்கு முடிவெடுத்திருந்தனர்.

அஜந்தா மகள் அருகில் சென்று அமர்ந்தார்.

“எதுவும் கஷ்டமா இருக்காடாமா?” என்று மகளிடம் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சது தானே? சமாளிச்சுடலாம். அதை விடுங்க. சித்தி, சித்தப்பா எங்கே? கமலி பத்தி எதுவும் நியூஸ் தெரிஞ்சதா?” என்று கேட்டாள்.

“அவங்க இரண்டு பேரும் அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க உத்ரா. கமலி பத்தி ஒரு விவரமும் இன்னும் தெரியலை. அவள் போனுக்குப் போன் போட்டால் ஸ்விட்ச் ஆப்னு வருது. யார் கூடப் போனாள். இப்ப எங்க இருக்காள்னு ஒன்னும் தெரியலை. ஆனாலும் இவள் இப்படிப் பண்ணுவாள்னு நினைக்கவே இல்லை உத்ரா…” என்றார்.

“ம்ம், எல்லாம் பிளான் பண்ணி பக்காவா பண்ணிருக்காள் மா. நிவேதன்னு ஒருத்தனை பத்தி சித்தி, சித்தப்பாவை விசாரிக்கச் சொல்லுங்க…” என்றாள்.

“அவன் யாரு உத்ரா?” என்று அஜந்தா கேட்க, அவள் தனக்குத் தெரிந்த சில தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டாள்.

“சரிடா விசாரிக்கச் சொல்லுவோம். இப்போ நானும் அப்பாவும் வீடு வரை போய்ட்டு உனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றோம் உத்ரா. அதுவரை இந்தப் பட்டுச் சேலையில் சமாளிச்சுப்ப தானே?” என்று கேட்டார்.

“இருந்துப்பேன் மா. நீங்க போய்ட்டு வாங்க. அடுத்து நம்ம வீட்டுக்கு எப்போமா நாங்க வருவோம்?”

“அதைப் பத்தியும் அப்பா சம்பந்தி வீட்டில் பேசுறேன்னு சொல்லியிருக்கார். தெரிஞ்சதும் உனக்குத் தகவல் சொல்றேன்…” என்றார்.

அதன் பிறகு நேரம் கடந்து செல்ல வீரபத்ரனும், அஜந்தாவும் தங்கள் வீட்டிற்குச் சென்று உத்ராவிற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தனர்.

மறுவீட்டு அழைப்பிற்குப் பெண்ணையும், மாப்பிள்ளையையும் மறுநாள் அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருந்தார் ரகுநாதன்.

அன்றைய நாள் ஒரு வித அமைதியுடனும், அழுத்தத்துடனுமே கடந்து சென்றது.

முகில் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். ஆனாலும் உத்ராவின் நடவடிக்கையையும் கண்கொத்தி பாம்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

இரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்ய, முகில்வண்ணனின் முறைப்பு தான் பதிலாகக் கிடைத்தது.

ஆனாலும் பெரியவர்களின் முடிவின் படி ஏற்பாடு எந்தச் சுணக்கமும் இல்லாமல் நடைப்பெற்றது.

இரவு மிதமான அலங்காரத்துடன் உத்ரா அறைக்குள் வர, லேசாக அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலில் கோபத்துடன் அமர்ந்திருந்தான் முகில்வண்ணன்.

கதவை மூடிவிட்டு அவள் அறை நடுவே வந்ததும் “உன்னால் எப்படி முடியுது? இல்ல எப்படி முடியுதுன்னு கேட்டேன்?” என்று கோபத்துடன் அவளை அடிக்கப் போவது போல நெருங்கி வந்து கேட்டான் முகில்வண்ணன்.

அவன் வந்த வேகத்தில் உத்ராவே ஒரு நொடி அரண்டு விட்டிருந்தாள்.

பின் சுதாரித்து “உப்ப்…” என்று பெருமூச்சை இழுத்து விட்டவள், “இருங்க, வந்துடுறேன்…” என்று சொன்னவள், நிதானமாக அவனைத் தாண்டி சென்று கையில் இருந்த பால் டம்ளரை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு மீண்டும் அவனின் எதிரே வந்தவள், சுவற்றில் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

“இப்ப சொல்லுங்க. என்னால் என்ன முடியுது?” என்று கேட்டாள்.

அவளின் நிதானத்தில் முகிலுக்குத்தான் நிதானம் தப்பிக் கொண்டிருந்தது.

“நானும் காலையிலிருந்து பார்க்கிறேன். உன்னோட திமிர்த்தனத்தை எல்லாம் சரியா என்கிட்ட மட்டும் தான் காட்டிட்டு இருக்க. ஆனா மத்தவங்ககிட்ட ரொம்ப நல்லவள் போல வேஷம் போட்டுட்டு இருக்க. இப்படி வேஷம் போட்டு, வேஷம் போட்டு இன்னும் எப்படி எல்லாம் ஏமாத்த பிளான் போட்டுருக்க?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி கண்களை மூடி நின்றாள். அடுத்த நொடி பட்டென்று விழிகளைத் திறந்தவள் கூர்மையாக அவனைப் பார்த்தாள்.

“நீங்க என்கிட்ட கேள்வி கேட்பது எல்லாம் இருக்கட்டும். நான் உங்ககிட்ட கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டாள்.

‘என்ன கேட்கப் போகிறாய்?’ என்பது போல் அவன் பார்க்க,

“என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.

“ஏன் தெரியாம…” என்று அவன் அலட்சியமாக ஆரம்பிக்க,

“ஒரு நிமிஷம்…” என்று அவனின் பேச்சை நிறுத்தினாள்.

“நான் எல்லார்கிட்டயும் சண்டை போடுவேன். அதனால் நான் ஒரு கோபக்காரி! சட்டுசட்டுன்னு மனதில் தோன்றுவதைப் பேசி விடுவேன். அதனால் திமிர்ப்பிடித்தவள்! இப்போ உங்க கல்யாணத்தை நிறுத்திட்டேன். அதனால் நான் ஒரு சதிகாரி!

இது எல்லாம் நீங்க என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இது தவிர என்னைப் பற்றி என்ன தெரியும்? என் குணாதிசயங்கள் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?

“அதைத் தெரிந்து நான் என்ன பண்ண போறேன்? எனக்கு ஒன்னும் தேவையில்லை…” என்றான் அலட்சியமாக.

“சரி, அதை விடுங்க. என் மேல குற்றம் சாட்டினீங்களே… அதுவாவது உண்மையா பொய்யான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“இன்னும் அதைப் பொய்ன்னு என்னை நம்ப வைக்க இந்தப் பிளானாக்கும்? நான் எதையும் ஆராயாம உன் மேல் குற்றம் சொல்லலை. எல்லாம் ஆராய்ந்து அறிந்து தான் சொல்லியிருக்கேன். என் காதில் பூ சுத்த நினைக்காதே!

இப்பயே என் குடும்பத்து ஆளுங்ககிட்ட நீ தான் கமலினியை ஓட வச்சு, அந்த இடத்துக்கு வர நீ பிளான் போட்டன்னு சொன்னேன்னு வச்சுக்கோ… அடுத்த நிமிஷம் நடக்குறதே வேற…” என்றான்.

“ஓ! அப்படியா? சரி, போய்ச் சொல்லுங்க…” என்றாள் நிறுத்தி நிதானமாக.

“என்ன சொல்ல மாட்டேன்னு திமிரா?” என்று அவன் எகிற,

“ச்சே, ச்சே… சொல்லுங்க. எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால் ஒன்னு சொல்லட்டுமா? உங்க பேமிலி ஒன்னும் அவ்வளவு முட்டாள் இல்லை…” என்று சொன்னவள்,

“எனக்குத் தூக்கம் வருது. இந்தக் கீழே படுப்பது, சோபாவில் படுப்பது, பால்கனியில் படுப்பது இது எல்லாம் எனக்குச் செட்டே ஆகாது. ஏன்னா, நான் தான் திமிர்ப்பிடித்தவள் ஆகிற்றே? அதனால்…” என்றவள் பொறுமையாகக் கட்டிலில் சென்று படுத்தாள்.

‘இவள் என்ன சொல்கிறாள்? என் பேமிலி முட்டாள் இல்லையா? இதுக்கு என்ன அர்த்தம்?’ என்று அவன் இன்னும் யோசித்துக் கொண்டிருக்க, அதற்குள் அவள் படுத்துவிட்டிருந்தாள்.

“அப்போ என்னை முட்டாள் என்று சொல்கிறாளா?” என்று பல்பு எரிந்தது போல் கத்தியவன், அவள் எங்கே என்று பார்க்க, அவனின் கத்தலை கண்டுகொள்ளாமல் அவள் கண்மூடி உறங்கியிருக்க,

இவனோ உறக்கத்தைத் தொலைத்து ‘என்னை இப்படித் தனியாகப் பேச வைத்து விட்டாளே’ என்று உறங்குபவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் முகில்வண்ணன்.