21 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 21
சிணுங்கிய மகளை அமைதிபடுத்தித் தூங்க வைத்து அரைமணி நேரம் கடந்த பிறகும் நித்திலன் அறைக்குள் வரவில்லை.
அவனாக வந்து விடுவான் என்று முதலில் அமைதியாகப் படுத்திருந்த துர்காவால் நேரம் செல்ல செல்ல அப்படி இருக்க முடியவில்லை.
‘என்ன செய்கிறான்?’ என்று பார்க்க அறையிலிருந்து வெளியே சென்று பார்த்தாள்.
வரவேற்பறை இருட்டில் சோஃபாவில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கி குனிந்து அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு, தலை ரொம்ப வலிக்குதா? பாப்பா அழுததால் தலைவலி தாங்காம இங்கே வந்து உட்கார்ந்துட்டீங்களா?” என்று அவனின் அருகில் சென்று கேட்டாள்.
அவள் குரல் கேட்டு நிமிர்ந்தவன் பொருள் விளங்கா பார்வை வீச்சினை அவளின் மீது செலுத்தினான்.
அந்த அறையின் மெல்லிய ஒளியில் அவனின் பார்வையின் அர்த்தம் அவளுக்கு விளங்கவில்லை.
“ரொம்பத் தலை வலிச்சா ஒரு மாத்திரை போட்டுட்டு தூங்குங்க. காலையில் விட்டுடும். பாப்பா இப்படித்தான் சில நேரம் அழுவாள். தூங்கிட்டாள்னா காலையில் வரை நல்லா தூங்கிடுவாள். இப்ப அவள் தூங்கிட்டாள். வந்து படுங்க…” என்றவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவன் தலைவலியில் தான் குழந்தையின் அழுகை தாங்காமல் வெளியே சென்றுவிட்டான் என்று நினைத்துக் கொண்டாள்.
அவனும் எழுந்து சென்றவன், அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்த துர்காவின் முதுகை சில நொடிகள் வெறித்துப் பார்த்தான்.
அவனுக்கு எப்படித் தன் மனவலியை அவளிடம் சொல்வது என்று புரியவில்லை.
பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், படுக்கையில் சாய்ந்தான்.
ஏதேதோ நினைத்துக் குழம்பிக் கொண்டவன் மெல்ல கண்ணயர்ந்தான்.
நள்ளிரவான வேளையில் குழந்தையின் சிணுங்கல் ஒலி கேட்க, வேகமாகக் கண்விழித்துப் பார்த்தான்.
வருணா எழுந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“என்னடா குட்டிம்மா, தூங்கலையா?” என்று பதறி போய்க் குழந்தையைத் தூக்க,
அவளோ கண்களைக் கூடத் திறக்காமல் அவன் கைகளில் இருக்காமல் துள்ளி அழ ஆரம்பித்தாள்.
“அப்பா டா குட்டிம்மா. அழாதே! பசிக்குதாடா?” என்று கேட்டான்.
ஆனால் தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு அவனின் பேச்சு எல்லாம் கேட்காமல் இன்னும் ஓங்கி அழ ஆரம்பிக்க, நித்திலன் அவள் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்துப் போக, அடித்துப் பிடித்து எழுந்தாள் துர்கா.
“கண்ணுமா, என்னாச்சுடா?” என்ற அவளின் ஒற்றைக் குரலில் அன்னையின் பக்கம் தாவினாள் குழந்தை.
“என்னடாமா, கனவு எதுவும் வந்துச்சா? பூச்சி எதுவும் கடிச்சுருச்சா? கொஞ்சம் லைட்டை போடுங்க, ப்ளீஸ்!” என்று குழந்தையிடம் பேசிக் கொண்டே நித்திலனிடம் சொன்னாள்.
தான் தூக்கியதும் இன்னும் அதிகமாக அழுத குழந்தை, அவள் தூக்கியதும் சிறிது அழுகை குறைந்து அன்னையிடம் அடைக்கலம் ஆனதில் அடிப்பட்ட பாவனையில் அமர்ந்திருந்த நித்திலன், துர்கா விளக்கை போட சொன்னதும் போட்டு விட்டான்.
குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டே அவளின் உடையைக் கழற்றிப் பார்த்தாள். வயிறு, முதுகு, கை இடுக்கு என ஆராய்ந்து விட்டுக் கால்களைப் பார்க்க, தொடையில் ஓர் இடத்தில் சிவந்திருந்தது.
“எறும்பு ஏதோ கடிச்சிருக்கு…” என்றவள் குழந்தையின் உடையைத் தனியாக எடுத்து வைத்தாள்.
“எறும்பா? இங்கே எப்படி வந்தது?” என்று பதறி போய்க் குழந்தையின் காலை பிடித்துப் பார்த்தான் நித்திலன்.
“அவள் ட்ரெஸ் எல்லாம் உதறித்தான் போட்டு விட்டேன். எப்படி வந்ததுன்னு தெரியலை. கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொடுக்குறீங்களா? ப்ளீஸ்…” என்று கேட்டாள்.
வேகமாக எடுத்துக் கொடுத்தான்.
எண்ணெயை தடவியதும் குழந்தையின் அழுகை குறைந்து லேசான சிணுங்கல் மட்டும் இருந்தது.
“குட்டிம்மாவை எறும்பு கடிச்சிருச்சா? இங்கே வாங்க, அப்பா பார்க்கிறேன்…” என்று குழந்தையை அழைத்தான்.
ஆனால் அவளோ நான் வர மாட்டேன் என்பது போல் அன்னையை ஒட்டிக் கொண்டாள்.
“உனக்கும் கூட என்னைப் பிடிக்கலையா குட்டிம்மா?” என்று வேதனையுடன் சொன்னவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் துர்கா.
‘என்ன பேச்சு இது அர்த்தமில்லாமல்?’ என்று அவனைப் புரியாமல் பார்த்தவள், “என்ன சொல்றீங்க? குழந்தை தூக்க கலக்கத்தில் இருக்கா. அதான் உங்ககிட்ட வரலை. அப்படி இருக்கும் போது ஏன் இப்படிப் பேசறீங்க?” என்று கேட்டாள்.
“இல்ல, இப்ப மட்டுமில்லை. நேத்து விளையாடும் போதும் என்கிட்ட சரியா வரலை. அவளுக்கு என்கிட்ட வரப் பிடிக்கலை. உங்களுக்கு என்கிட்ட அவளைக் கொடுக்கப் பிடிக்கலை. என்னை யாருக்கும் பிடிக்காது. என் பொறப்பு அப்படி…” என்றவன் அங்கிருந்த பால்கனி கதவைத் திறந்து அங்கே போய் நின்று கொண்டான்.
‘இதென்ன அபாண்டமான பழி!’ என்பது போல் விக்கித்து அவன் சென்ற திசையைப் பார்த்தாள் துர்கா.
ஆனால் அவனைப் பார்க்க விடாமல் குழந்தை சிணுங்கிக் கொண்டே இருக்க, அவளைத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்தாள்.
வேறு உடையை எடுத்துப் போட்டு விட்டு மகளைத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்கப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தன.
அதுவரையிலும் நித்திலன் பால்கனியை விட்டு அகலவில்லை.
தூங்கிய குழந்தையைப் படுக்கையில் விட்டு, தலையணையை அணைவாக வைத்து விட்டுத் துர்கா பால்கனிக்கு வந்த போது சுற்று கம்பியைப் பிடித்த வண்ணம் இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் நித்திலன்.
“ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்று அவனின் பின்னால் நின்று கேட்டாள்.
“உண்மையைத்தானே சொன்னேன்…” என்றவன் குரல் மட்டும் வந்தது கரகரப்பாக.
‘அழுகிறானா என்ன?’ என்று நினைத்தவள், “என்ன உண்மை?” என்று விடாமல் கேட்டாள்.
அவனுக்குத் தலைவலி வந்ததால் தான் அன்று முழுவதும் சோர்வாக இருந்தான் என்று அவள் நினைத்திருக்க, இப்போது அப்படி இல்லையோ என்று தோன்றியதால் அவனிடமே தெளிவு பெற கேட்டாள்.
நித்திலனின் மனம் என்னவோ தேவையில்லாத சஞ்சலத்தில் சிக்கியிருந்தது.
துர்காவின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் நண்பர்களாக இருப்போம் என்று சொன்ன பிறகும், ஒரே அறையில் தங்க ஏற்பாடு செய்தான். பெரிய கட்டிலாக இருந்தால் அவளும் சங்கடப்படாமல் தங்குவாள் என்று நினைத்து தான் பெரிய கட்டிலாகச் செய்து வாங்கிப் போட்டான்.
அவன் நினைத்தபடி முதலில் சங்கடப்பட்டாலும் துர்கா அதன்பிறகு சுணக்கம் இல்லாமல் இருந்ததில் அவனுக்கு நிம்மதி உண்டாகியிருந்தது.
ஆனால் காலையில் தான் குழந்தையைப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொன்னதும், குழந்தையை உடனே அவள் வாங்கிக் கொண்டதும் அடுத்தடுத்து நடந்த சில செயல்களையும் அவள் தன்னை ஒதுக்கி வைப்பதாக அவனை நினைக்க வைத்துவிட்டன.
“என்ன உண்மையா?” என்றவன் மெல்ல அவள் புறம் திரும்பி, “நாம நண்பர்களாக இருப்போம்னு சொன்னேனே தவிர அந்நியர்களாக இருப்போம்னு சொல்லலை…” என்று அவளைக் கூர்ந்து பார்த்துச் சொன்னான்.
“அந்நியர்னு நான் எங்கே நினைச்சேன்?” புரியாமல் கேட்டாள்.
“என்னைப் பிரண்ட்டா நினைச்சிருந்தால் குழந்தையைப் பார்த்துக்கிட்டதுக்குத் தேங்க்ஸ் சொல்லியிருக்க மாட்டீங்க. அதோட ஒரு சின்னச் சின்னப் பொருள் எடுத்துக் கொடுப்பதற்குக் கூட ப்ளீஸ் போட்டுருக்க மாட்டீங்க…” என்றான்.
‘என்ன இது, இப்படி எல்லாம் சொல்கிறான்?’ என்று தான் துர்காவிற்குத் தோன்றியது.
“அதெல்லாம் பேச்சு வாக்கில் வந்த வார்த்தைகள். அதுக்கேன் இவ்வளவு பீல் பண்றீங்க? அதோட இப்போ குழந்தைகிட்ட ஏன் அப்படிச் சொன்னீங்கன்னு தான் கேட்டேன். ஆனா நீங்க வேற ஏதேதோ சொல்லிட்டு இருக்கீங்க…” என்றாள்.
“இதுவும் முக்கியம் தான் துர்கா. நம்ம வாழ்க்கை இனி ஒரே அறைக்குள் என்று ஆகிவிட்டது. அப்படி இருக்கும் போது நீங்க எப்பவும், தேங்க்ஸும், ப்ளீஸும் சொல்லிக் கொண்டிருப்பது, என்னை ரொம்பத் தூரம் தள்ளி நிறுத்துகிறது…” என்றான்.
“ஒரே நாளில் எல்லாம் மாறிடாது. இப்படி எந்தச் சங்கடமும் வேண்டாம்னு தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். நீங்களும், என்னோட அப்பாவும் தான் கேட்கலை. இப்ப இப்படிச் சொல்றீங்க?” என்றாள்.
“எனக்குத் தேங்க்ஸும், ப்ளீஸூம் சொல்லாதீங்கன்னு தான் சொன்னேன். அதுக்கேன் நடந்த கல்யாணத்தைப் பத்தி பேசுறீங்க?” என்று திருப்பிக் கேட்டான்.
இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இந்தப் பேச்சுக்கு முடிவென்பதே இல்லாமல் போகும் என்று நினைத்தவள் முக்கியமானதை மட்டும் பேச நினைத்தாள்.
“குழந்தைகிட்ட ஏன் அப்படிச் சொன்னீங்க? நான் ஏன் எப்போ குழந்தையைத் தர மாட்டேன்னு சொன்னீங்க?” என்று மீண்டும் கேட்டு வைத்தாள்.
அவள் தன்னிடம் குழந்தையைத் தராமல் புறக்கணித்த நிகழ்வுகளைச் சொன்னான்.
அவனின் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிய, விநோதமாகப் பார்த்து வைத்தாள்.
சிறு குழந்தை அந்தப் பொம்மையை என்னிடம் தரவில்லை என்று சொல்வது போல் இருந்தது அவன் சொன்னது.
ஆனால் அவனின் முகம் வேதனையை அப்பட்டமாகக் காட்ட, தான் நினைத்ததை அவனிடம் சொல்லாமல், “நீங்க இவ்வளவு வருத்தப்படுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. நான் உங்களை ஏன் தொந்தரவு செய்யணும்னு நினைச்சேன். அதோட குழந்தை அப்படித்தான் ரொம்ப நேரம் யார் கையிலேயும் இருக்க மாட்டாள்…” என்றாள்.
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் நான் தூக்கும் போதெல்லாம் உடனே ஆசையா வருவாளே?” என்று கேட்டு வைத்தவனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு தான் வரும் போல் இருந்தது.
“முன்னாடி நீங்க அவள் கூடவே இருந்தது இல்லை. எப்பவாவது பார்க்கவும் ஆர்வமா வருவாள். அதோட, இப்ப நாலு பேர் வீட்டில் இருக்கவும் எல்லார்கிட்டவும் போறதால் அவளுக்குக் கொண்டாட்டமா இருக்கு. இதே கொஞ்ச நேரம் அவளை விட்டு தள்ளி இருந்தால் திரும்பப் பார்க்கும் போது தாவிக்கிட்டு வருவாள்…” என்றாள்.
“ஓ!” என்றான் சிறிது சமாதானம் ஆனா பாவனையில்.
“ஆனா இப்ப கூப்பிட்டப்ப வரலையே?” என்று சுணக்கத்துடன் கேட்டான்.
“உங்ககிட்ட மட்டுமில்ல. நைட் தூக்கம் வந்தால் யார்கிட்டயும் போக மாட்டாள். கல்யாணத்துக்கு முன்னாடி அப்பா தான் அவளைப் பகலில் எல்லாம் பார்த்துப்பார். ஆனா அவர்கிட்டே நைட் தூக்கம் வந்துருச்சுனா போக மாட்டாள்…” என்றாள்.
“ஆனா அன்னைக்கு மாமாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருந்தப்ப நைட் என்கிட்ட வந்தாளே? நான் தானே தோளில் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…” என்று கேட்டான்.
“அன்னைக்கு அந்த ஹாஸ்பிட்டல் வாசம் பிடிக்காமல் வெளியே போனால் போதும்னு உங்ககிட்ட வந்தாள். சில பிள்ளைங்க அப்படித்தான். அப்பா… அப்பான்னு சுத்தும் அப்பா பிள்ளையா இருந்தாலும், நைட் அம்மாகிட்ட தான் ஒட்டிப்பாங்க. அதுவும் நீங்க இன்னும் அவளுக்கு அவ்வளவா இரவில் பழகலை. அதான் வர மாட்டேன்னு அழுதாள்…” என்று சிறுபிள்ளைக்கு விளக்கம் சொல்வது போல் சொன்னாள்.
“ஓ, நான் பயந்தே போயிட்டேன். எங்கே என்னை அவளுக்குப் பிடிக்கலையோன்னு…” என்றான் நிம்மதியுடன்.
“அவளுக்கு உங்களை அப்பான்னு கூப்பிடுற அளவுக்குப் பிடிச்சுருக்கு…” என்று இதை விட வேறு விளக்கம் வேண்டுமா? என்பது போல் துர்கா சொல்ல, நித்திலனின் முகம் மென்மையானது.
சமாதானமான குழந்தையின் மென்மை அவனிடம் தெரிய, இவன் வளர்ந்த குழந்தை தானோ? என்று தான் துர்காவிற்கு அந்த நேரம் தோன்றியது.
“நீங்களா ஏதாவது மனசை போட்டுக் குழப்பிக்காமல் படுத்து தூங்குங்க…” என்ற துர்கா உள்ளே செல்ல திரும்ப,
“துர்கா, ஒரு நிமிசம்…” என்று அவளை நிறுத்தினான்.
‘இன்னும் என்ன?’ என்பது போல் அவள் திரும்பிப் பார்க்க,
“ஸாரி…” என்றான்.
“நண்பர்களுக்குள் ஸாரி மட்டும் சொல்லலாமோ?” என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் போய்ப் படுத்து விட்டாள்.
அசட்டு சிரிப்புடன் தானும் சென்று படுத்தவன், “அப்பா பயந்தே போயிட்டேன் குட்டிம்மா…” என்று தூங்கிய குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, நிம்மதியுடன் நித்திரை தழுவினான் நித்திலன்.
அவன் பேசியது துர்காவின் காதிலும் விழ, தான் இனி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் அவளும் உறக்கத்தின் வசமானாள்.
காலையில் தன் மீசை முடிகள் சுள்ளென்று இழுக்கப்பட்டதில் “ஷ்ஷ்…” என்று முனங்கிக் கொண்டே கண் விழித்தான் நித்திலன்.
தன் மேல் பஞ்சு பொதியாய் படுத்து, மீசையை இழுத்துக் கொண்டிருந்த வருணாவை கண்டதும் அவனின் முகம் மலர்ந்து போனது.
“குட்டிம்மா… எழுந்துட்டீங்களாடா? குட் மார்னிங்…” என்று அவள் கன்னத்தில் மென்மையாக முத்தம் ஒன்றை வைத்தான்.
குழந்தையும் பதிலுக்கு அவனின் கன்னத்தை எச்சில் படுத்த, நேற்று முழுவதும் புழுங்கிப் போயிருந்த அவனின் மனதிற்கு மருந்திட்டது போல் இருந்தது.
“குட்டிம்மா பால் குடிச்சீங்களா?” என்று கேட்டான்.
“ம்மா, பா…” என்று அம்மா பால் கொடுத்து விட்டதாகச் சொல்ல, துர்கா எங்கே என்று பார்த்தான்.
“பால் குடிச்சுட்டாள். உங்ககிட்ட கொடுத்துட்டுப் போகத்தான் வந்தேன். அவளைப் பார்த்துக்கோங்க. எனக்கு வேலை இருக்கு…” என்று அறை வாசலில் நின்று சொல்லிவிட்டுச் சென்றாள் துர்கா.
அவள் தன்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னதில் மகிழ்ந்து போனவன், “அப்பா கூட விளையாட வந்தீங்களா குட்டிம்மா? வாங்க விளையாடலாம்…” என்று எழுந்து அமர்ந்து குழந்தையைக் கொஞ்சி அவளுக்கு விளையாட்டுக் காட்டினான்.
“என்ன நித்திலா இன்னைக்கு வேலைக்குப் போகணும்னு சொன்ன, இன்னும் கிளம்பாம இருக்க?” என்று காலையில் உணவு உண்ண அமர்ந்த மகனிடம் கேட்டார் செவ்வந்தி.
“நீங்க தானே மா லீவ் போட சொன்னீங்க? அம்மா சொல்லி செய்யாமல் இருக்க முடியுமா? அதான் லீவ் போட்டுட்டேன்…” என்றவன் மடியில் அமர்ந்திருந்தாள் வருணா.
அவளுக்குத் தன் தட்டில் இருந்து இட்லியைப் பிய்த்து ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்.
நேற்று அவனை ஊட்ட விடவில்லை என்று வருத்தப்பட்டதால் இன்று அவனுக்கே குழந்தைக்கு ஊட்டி விடும் பொறுப்பைக் கொடுத்து விட்டிருந்தாள் துர்கா.
அப்போது அவனின் கைபேசி ஒலிக்க, குழந்தையுடன் அதை எடுக்க எழுந்தான்.
“நீங்க இருங்க. நான் போய் எடுத்துட்டு வர்றேன்…” என்று துர்கா எழுந்து அவன் கைபேசியை எடுத்து வந்து கொடுத்தாள்.
ஒருகையில் உணவும், இன்னொரு கையில் குழந்தையும் இருந்ததால், துர்காவையே மேஜையில் வைத்து ஸ்பீக்கரை ஆன் செய்யச் சொன்னான்.
“ஹலோ நித்திலன்…” என்று முரளியின் குரலில் அலைபேசியில் கேட்க,
“சொல்லு முரளி…” என்றான்.
“அன்னைக்கு ஒரு பைல் உன் மேஜையில் வச்சுருந்தேன். அந்த டெண்டர் பைல். ஆனா இப்போ உன் மேஜையில் காணோம்…” என்றான்.
“அதைக் கபோர்ட்ல வச்சுருக்கேன் முரளி. இன்னைக்கு என்ன சீக்கிரமே வேலைக்குப் போயிட்டியா?”
“ஹான், இதோ இருக்கு. எடுத்துட்டேன். ஆமா நித்திலா, நீ லீவ் போட்டுருக்கியே. உன் பொறுப்பும் இப்போ என்கிட்ட. அதான் சீக்கிரம் வந்துட்டேன். சரி, அதை விடு… அப்புறம் நித்திலா கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது, சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்டான்.
“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் முரளி…” என்றான் உண்மையான மகிழ்ச்சியுடன்.
அவனின் மகிழ்ச்சி முரளிக்கு வெகு நிம்மதியாக இருந்தது.
இருவரும் பேசி முடித்ததும் செவ்வந்தி தான் முரளியிடம் பேச வேண்டும் என்று சொல்லி கைபேசியை வாங்கினார்.
நல விசாரிப்புக்குப் பின், “இன்னைக்கு வேலைக்கு வர்றேன்னு சொல்லிட்டு நித்திலன் லீவ் போட்டதால் உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையேபா?” என்று முரளியிடம் கேட்க,
நித்திலன் இங்கே மாட்டிக் கொண்ட பாவனையில் திருதிருவென முழித்தான்.
“இன்னைக்கு வேலைக்கு வர்றேன்னு சொன்னானா? என்னம்மா சொல்றீங்க? அவன்தான் இந்த வாரம் முழுவதும் கல்யாணத்துக்காக முன்னாடியே லீவு சொல்லிட்டானே… அப்புறம் ஏன் அப்படிச் சொன்னான்?” குழப்பத்துடன் கேட்டான் முரளி.
கைபேசி ஸ்பீக்கரில் இருக்கச் சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்தவர்களின் பார்வை அவன் மீது விழுந்தது.
தப்புச் செய்துவிட்டு மாட்டிக்கொண்ட சிறுவனைப் போல் முழித்த கணவனைப் பார்த்து துர்காவிற்குச் சிரிப்பு வரும் போலிருந்தது.
அதே நேரம் அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்ற காரணமும் புரிய, நேற்று மனதளவில் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பான் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
இரவு தான் பேசியிருக்கவில்லை என்றால் இன்று வேலைக்குக் கிளம்பியிருப்பான் என்றும் புரிந்தது.
“நித்திலன் கிட்ட போனை கொடுங்கமா. நான் என்னன்னு கேட்குறேன்…” என்று அலைபேசியில் முரளி சொல்ல,
“அவனும் கேட்டுட்டு தான்பா இருக்கான். சும்மா என்கிட்ட விளையாடிப் பார்க்க அப்படிச் சொல்லிருக்கான். நான் தான் அது புரியாமல் கேட்டுட்டேன். சரிப்பா, நீ வேலையைப் பாரு. நாம அப்புறம் பேசுவோம்…” என்று அழைப்பை துண்டித்து விட்டு,
“எனக்காக லீவ் போட்ட? சரிதான்…” என்றார் மகனிடம்.
“ஹிஹி… சும்மாம்மா…” என்று அசடுவழிந்த மகனை ஆதூரத்துடன் பார்த்தார் செவ்வந்தி.
மகன் இப்படி விளையாடி மகிழ்ந்து பல மாதங்கள் ஆகியிருந்தன.
நேற்று இருந்த சுணக்கம் கூட இல்லாமல் இன்று அவன் முகம் தெளிவுடன் இருக்க, அந்தத் தாயின் மனம் நிம்மதி அடைந்து கொண்டது.
அன்று இரவு ரயிலில் ஊருக்குக் கிளம்புவதால், செவ்வந்தி மகனை தனியே அழைத்துப் பேசினார்.
“இந்த வாரம் முழுவதும் வீட்டில் இருந்தால் நம்ம ஊருக்கும் வரலாமே நித்திலா?” என்று அவர் கேட்டதும், அவனின் முகம் மாறியது.
“இல்லைமா, நான் வரலை…” என்றான் பட்டென்று.
“முன்னாடி நீ வரலைனா அப்போ ஒரு நியாயம் இருந்தது. இப்ப வர ஏன்பா தயங்கணும்? நம்ம ஊரிலிருந்து நிறையப் பேரை கல்யாணத்துக்கு அழைக்க முடியலை. இப்ப நீ குழந்தை, துர்காவோட வந்தால் ஒரு விருந்து மாதிரி ஏற்பாடு செய்யலாம்…” என்றார்.
“இல்லம்மா… அது சரிவராது…” என்றான்.
“புரிஞ்சிக்கோ நித்திலா. நீ நிரஞ்சனையும் கொஞ்சம் யோசித்துப் பாரு. நீ வீட்டுக்கே வராம போனதுக்கு அவன் தான் காரணம்னு சில நேரம் உடைஞ்சு போயிடுறான். நீ ஏன் மத்தவங்களை நினைக்கிற? நானும், நிரஞ்சனும் உனக்காக அங்கே இருக்கோம்…” என்றார்.
“ஆனா அந்த மத்தவங்க பேசும் வார்த்தைகளைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லைமா. முன்னாடியாவது நான் தனி மனுஷனா அந்த வார்த்தைகளை வாங்கிக்கிட்டேன். ஆனா இப்ப துர்காவையும் அந்த வார்த்தைகள் தாக்குச்சுனா நான் தாங்கமாட்டேன்மா.
துர்காவிற்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கணும்னு மனதில் உறுதி எடுத்திருக்கேன் மா. அங்கே துர்கா நிம்மதிக்குக் கண்டிப்பா பாதகம் வரும்னு தெரிந்தே ஏன் வரணும்? அண்ணா உறவு எனக்கு வேணும் தான். ஆனா அது இப்படி விலகி இருந்தால் தான் ஒட்டும் அம்மா…” என்றான்.
“இப்படிச் சொன்னால் எப்படி நித்திலா? துர்காவும் இப்ப நம்ம வீட்டு மருமகள். அவளுக்கும் அந்த வீட்டில் ஒரு அங்கீகாரம் வேண்டும்னு நினைக்கிறேன். அது உன் வீடு நித்திலா. உன் வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு யோசிக்கணும்? நீ வா… நீயும், துர்காவும் காயப்படாம நான் பார்த்துக்கிறேன்…” என்றார்.
“என்னமா நீங்க?” என்றான் சலிப்பாக.
“இந்த அம்மாவுக்காக நித்திலா. நீ இப்படி மொத்தமா பிரிந்து இருப்பது மனசுக்கு கஷ்டமா இருக்குபா. இந்த ஒரு முறை மட்டும் வா. அப்புறம் அம்மா தொந்தரவு பண்ண மாட்டேன்…” என்றார் இறைஞ்சுதலாக.
அன்னை கெஞ்சி கேட்க, அதற்கு மேல் அவனால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
அரைமனதாக ஊருக்குச் செல்ல சம்மதம் தெரிவித்தான் நித்திலன்.