20 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

தன் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் அமர்ந்து ஏதோ கணக்கு எழுதி கொண்டிருந்தான் தர்மா.

அது மதிய வேளை என்பதால் அவன் மட்டுமே தனியாக இருந்தான்.

தீவிரமாக ஏதோ யோசித்த படி எழுதி கொண்டிருந்தவனுக்கு வாசலில் யாரோ நிற்பது போலத் தோன்ற தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

வாசலில் அவனையே முறைத்த வண்ணம் கையில் புத்தகப் பையுடன், பள்ளி உடை அணிந்து நின்று கொண்டிருந்தாள் கார்த்திகா.

அவளை அங்கே பார்த்ததும் “கார்த்திமா, என்னடா இந்த நேரத்தில் இங்கே?” என்று பதட்டமாகக் கேட்டபடி வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தான்.

தன் ஊன்றுகோலை எடுத்து வேகமாக நடந்து வந்தவன், “ஏன் வாசலிலேயே நிற்கிற? வா… உள்ளே வா…!” என்று அழைத்தான்.

அவன் பதட்டமாக எழுந்து வந்ததைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், வெளியே முறைத்துக் கொண்டும், விறைத்துக் கொண்டும் தான் நின்றிருந்தாள்.

அவள் சிறிதும் அசையாமல் நிற்பதை பார்த்து யோசனையுடன் நெற்றியை சுருக்கியவன், “கார்த்தி, சுத்தி கடைங்க இருக்குடா. நீ இப்படி வாசலில் நிற்கிறதை பார்த்து யாராவது ஏதாவது நினைக்கப் போறாங்க. என்னை முறைக்கிறதை உள்ளே வந்து முறை…” என்று அக்கறையுடனே சொன்னான்.

அவன் சொன்னதும் விறுவிறுவென்று உள்ளே வந்து மேஜையின் மீது புத்தகபையைத் தொப்பென்று வைத்தவள், அவன் மீண்டும் மேஜையின் அருகே நடந்து வரும் வரை காத்திருந்தாள். அந்த நேரத்திலும் அவனை முறைக்கத் தவறவில்லை அவள்.

அவளின் முறைப்பை பார்த்த தர்மா நீ எப்போ தான் என்னை முறைக்காம பார்க்கப் போறீயோ? என்று நினைத்தான்.

பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள் என்றால் அப்படி என்ன அவசர விஷயமாக என்று நினைத்தவன் தன் யோசனையைக் கைவிட்டுத் தீவிரமாக அவளைப் பார்த்து “இந்த நேரம் இங்கே என்ன பண்ற கார்த்திகா? ஸ்கூலில் இருந்து இந்த நேரத்தில் ஏன் வெளியில் வந்த?” என்று விசாரித்தான்.

“நான் உங்களைக் கேள்வி கேட்க வந்தால் நீங்க என்னைக் கேள்வி கேட்குறீங்களா? நீங்க ஏன் இந்த ஊருக்கு வந்தீங்க தர்மா சார்? வந்தா உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருக்க வேண்டியது தானே? ஏன் என் அக்கா வாழ்க்கையோடு விளையாடுறீங்க? என் அக்கா உங்களுக்கு என்ன கெடுதல் செய்தா? அவளை ஏன் இப்படி அழ வைக்கிறீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“சத்யா அழுதாளா? எப்போ அழுதாள்? எதுக்கு?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“உங்களால் தான்! உங்களால் மட்டும் தான் அவள் இப்போ எல்லாம் அழுகுறாள். முன்னாடி எல்லாம் ரொம்பக் கலகலன்னு இல்லைனாலும் என் அக்கா சந்தோஷமா இருந்தாள். ஆனா எப்போ உங்க வரன் பத்தின பேச்சு எங்க வீட்டில் ஆரம்பிச்சுச்சோ அப்போ இருந்து என் அக்காவோட நிம்மதியே போயிருச்சு…” என்றாள் ஆத்திரமாக.

“என்னால் தான் சத்யா அழுகுறாள்னு எதை வச்சு சொல்ற கார்த்தி? அப்படி அழ வேண்டிய அவசியம் தான் என்ன? உண்மையைச் சொல்லணும்னா நான் தான் இப்போ தினம் தினம் அழுதுக்கிட்டு இருக்கேன். உன் அக்காவோட அழுகையை நீ கண்ணால் பார்த்துட்ட. ஆனா என் அழுகையை நீ கண்ணால் பார்க்கலை. அவ்வளவு தான் வித்தியாசம்…!” என்றான் வேதனை சுமந்த குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போய்ப் பார்த்தாள் கார்த்திகா.

“நீ சின்னப் பொண்ணு கார்த்தி. இவ்வளவு சின்னப் பொண்ணான உன்கிட்ட இதைப் பேச கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் சொல்றேன். ஒருத்தரை நாம நிராகரிக்கும் வலியை விட, நம்மை ஒருவர் நிராகரிக்கும் போது அனுபவிக்கிற வலி அதிகம் கார்த்தி. அப்படிப் பார்த்தா உன் அக்காவை விட, அவளால் நிராகரிக்கப்பட்ட எனக்கு ரொம்ப வலிக்குது…” என்றவன் குரல் அப்பட்டமாக வலியை காட்டியது.

கோபத்தோடு அவனைத் திட்ட வந்த கார்த்திகாவிற்கு அவனின் வலி தாங்கிய பேச்சை கேட்டதும் அடுத்து என்ன பேசுவது என்று கூடப் புரியாமல் கைகளைப் பிசைந்தாள்.

சிறிது நேரம் அமைதியே அங்கு ஆட்சி செய்ய, இருக்கையில் அமர்ந்த தர்மா, அவளையும் அமர சொல்லி தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்து அமைதியாகப் பார்த்திருந்தான்.

“இப்போ உனக்கு என்ன தெரியணும் கார்த்தி? இந்த ஊருக்கு வந்து என் வேலையைப் பார்க்காமல் ஏன் உன் அக்காவோட நிம்மதியை கெடுக்குறேன்னு தானே?” என்று அவளின் அமைதியைப் பார்த்து தானே பேச்சை ஆரம்பித்தான்.

அவனின் கேள்விக்கும் அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “இந்த ஊருக்கு வர நான் முடிவெடுத்ததற்குப் பாதிக் காரணம் என் வீட்டு சூழ்நிலைனா, மீதி காரணம் சத்யா தான்…” என்றான்.

‘என்ன?’ அவன் சொன்னதை நம்ப முடியாமல் கார்த்திகா விழி விரித்துப் பார்க்க, “உண்மைதான்! நான் சத்யாவிற்காக இந்த ஊருக்கு வந்தேன்னு சொல்றதை விட என் வாழ்க்கையைத் தேடி இந்த ஊருக்கு வந்தேன்னு சொல்லலாம்.

ஆம்! என் வாழ்க்கை சத்யா தான்னு முடிவெடுத்த பிறகு தான் இங்கே வந்திடலாம்னு உறுதியான முடிவு எடுத்தேன்…” என்றவன் அடுத்து அவளுக்குத் தெரிய வேண்டிய சில விஷயங்களை மட்டும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

சண்டை போட வந்தவளுக்கு அவனின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு அடுத்து பேச வார்த்தைகள் வராமல் தேங்கி நின்றது.

‘தன் அக்கா தான் அவனின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையைத் தேடி தான் வந்தேன் என்று சொல்லும் போது இதை விடத் தன் அக்காவிற்கு என்ன வேண்டும்?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவளுக்காகவே ஒருத்தர்! அவளைத் தேடும் ஒருத்தர்! என்பதே மனதிற்கு நிறைவாக இருந்தது. ஆனாலும் ஏதோ தோன்ற, “என் அக்காவுக்காகவே வந்தவர் ஏன் அவளை அழ விடுறீங்க? ஏன் இந்த ஒரு மாதமா அவளை வந்து நீங்க பார்க்கலை?” என்று கேட்டாள்.

ஆம்! சத்யா புகழேந்தியிடம் பேசிய பிறகு ஒரு மாதம் கடந்திருந்தது. சத்யாவின் கை கட்டுப் பிரிக்கப்பட்டு, கைக்கு மெள்ள மெள்ள அசைவுகள் கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.

“அவளை நான் பார்த்துட்டு தான் இருக்கேன் கார்த்திமா…” என்று அமைதியாகச் சொன்னான்.

அவள் நம்பாமல் பார்க்க, “தினமும் அவள் ஸ்கூல் விட்டு வரும் போது பார்த்துட்டு தான் இருக்கேன். அவகிட்ட பேசியதில்லை…” என்றான்.

“ஏன்?”

“நான் முன்னாடி சொன்னதே தான் கார்த்திமா. அவள் ஒரு வாரமா என்னைப் பார்க்க விடாம நிராகரிச்சாள். நிராகரிப்பின் வலி என்னால அதுக்கு மேல தாங்க முடியலை. அது தான் நானே விலகி நிற்கிறேன். அது சரி சத்யா அழுகுறா அழுகுறாள்னு சொல்றீயே, எப்போ அழுதாள்? அவள் எனக்காகத் தான் அழுகுறாள்னு என்ன நிச்சயம்?” என்று கேட்டான்.

“நிச்சயம் தான்!” என்று உறுதியாகச் சொன்னாள் கார்த்திகா.

“எப்படி?” என்று தர்மா கேட்க,

“தினமும் நைட் நான் தூங்கிட்டேன்னு நினைச்சு தனியா அழுகுறாள். அது மட்டும் இல்லாம தர்மா எனக்குப் பிடிச்ச மாதிரி ஏன் இல்லாம போனீங்க? ஏன் என்கிட்ட உண்மையை மறைச்சு பழகினீங்கனு புலம்பிட்டே அழுகுறாள். இது நீங்க பார்க்க வராதப்ப இருந்தே நடக்குது. நானும் ஒரு நாள் நீங்க பார்த்து பேசினா சரியா போகும்னு நினைச்சேன். ஆனா நீங்களும் வரலை. அவ அழுகையும் நிற்கலை…” என்றாள் வருத்தமாக.

“சத்யா என்னைத் தேடுகிறாள்னு நினைக்கும் போது சந்தோசமா தான் இருக்கு. ஆனா…” என்று தர்மா இழுக்க,

“என்ன? என்ன இழுவை? மாமானு கூடப் பார்க்க மாட்டேன். இழுத்துட்டு போய் என் அக்கா முன்னாடி நிறுத்திடுவேன். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இனி என் அக்கா அழ கூடாது. அவளை இனியும் நீங்க அழ வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்றாள் மிரட்டலாக.

அவளின் மிரட்டலை கேட்டு அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து வாய் விட்டுச் சிரித்தான் தர்மா.

“ஹா…ஹா…! மாமாவா? இது எப்போ இருந்து?” சிரித்துக்கொண்டே கேட்டான்.

“ஹ்ம்ம்… என் அக்கா உங்களையே நினைக்க ஆரம்பிச்சதிலிருந்து…” என்று நொடித்தாள் கார்த்திகா.

“நீ தான் சொல்ற அவள் என்னை நினைச்சுக்கிட்டு இருக்காள்னு. ஆனா அவள் என்னை விரட்டி அடிப்பதை பார்த்தா அப்படித் தெரியலையே…” சிரிப்பு மறைந்து தீவிரமாகவே கேட்டான்.

“என் அக்காவோட நினைப்பை பத்தி குறைவா நினைக்காதீங்க மாமா. இரண்டாந்தாரமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்தவள் அவள். அப்படிப்பட்டவளே உங்களை மனதில் நினைச்சி அதை மறக்க முடியாமல் அவளைப் பிடிச்சுருக்குனு சொல்லி பொண்ணு கேட்டவரையே வேண்டாம்னு சொல்லியிருக்காள்…” என்று புகழேந்தியை பற்றிச் சொன்னாள்.

“என்ன? இது எப்போ நடந்தது?” என்று அதிர்வாகக் கேட்டான்.

“அப்போவே தான். உங்களை இந்தப் பக்கம் பார்க்காமல் விரட்டி விட்டுட்டு, அந்தப் பக்கம் அவரையும் ஒரு வழி ஆக்கிட்டாள். அவள் பேசிய பேச்சில் உன் நட்பே போதும் சத்யானு அவர் பின் வாங்கிட்டார். என் அக்கா நினைச்சா அவரைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லியிருக்கலாமே?

அதுவும் அவளுக்குப் பிடிச்ச முதல் தாரம்! அப்படி இருந்தும் அவரை மறுத்துட்டு, உங்களையே அவள் நினைத்து நைட் எல்லாம் புலம்பி அழுகுறாள்னா உங்க மேல் அவளுக்கு எவ்வளவு பிடித்தம் இருக்குனு எனக்குப் புரிஞ்சது. அவள் அப்படி அழுது புலம்பி கொண்டிருக்க, நீங்க என்னன்னா அவளைப் பார்க்க கூட வராம இருக்கீங்களே என்ற கோபத்தில் தான் உங்களைப் பார்க்க வந்தேன்…” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தவன், “எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே கார்த்தி…” என்றான்.

“என்ன மாமா சொல்லுங்க…”

“சத்யாகிட்ட நான் தனியா பேசணும். ஆனா நான் பேச வருவேன்னு முன்னாடியே அவளுக்குத் தெரிய கூடாது…” என்றான்.

“பேசலாம் மாமா. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. அக்கா இப்போ எல்லாம் கடைக்கே போறதில்லை. நானும் அவளும் இங்க பக்கத்தில் இருக்கும் பார்க் போவோம். அங்க வந்திடுங்க பேசலாம்…” என்றாள்.

அவளிடம் நேரத்தை கேட்டு தெரிந்து கொண்டவன், “உன் அக்காவுக்கு என் மேல் இருக்கும் கோபம் குறையட்டும். அதுவரை விட்டு பிடிக்கலாம்னு தான் இத்தனை நாள் விலகி இருந்தேன். ஆனா விட்டா அவளைப் பிடிக்க முடியாது. விடாமல் இருந்தால் தான் அவளைப் பிடிக்க முடியும்னு தெரிஞ்சு போயிருச்சு. இனியும் நான் அமைதியா தள்ளி நின்னு கை கட்டி வேடிக்கை பார்க்க போறதில்லை…” என்றான் தீர்மானமாக.

“நீங்க எதுனாலும் செய்ங்க. எனக்கு என் அக்கா அழக் கூடாது. அவ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவு தான்…!” என்றவளை வாஞ்சையுடன் பார்த்தான் தர்மா.

சிறியவளாக இருந்தாலும் அவளிடம் இருக்கும் பொறுப்பு, அக்காவின் மீதான அவளின் பாசம், அவளின் கண்ணீரை காண சகிக்காத அவளின் குணம் என எல்லாமும் தான் தர்மாவை ‘சிறியவள் இவளிடம் ஏன் தன் மனநிலையைச் சொல்ல வேண்டும்?’ என்று நினைக்காமல் மனம் விட்டு பேச வைத்தது.

சிறியவள் என்பதையும் தாண்டி ‘சத்யாவின் அக்கறையை நாடும் ஒருத்தி!’ என்ற எண்ணமே அவனைப் பேச வைத்தது.

சத்யாவிற்குக் குடும்ப உறவுகள் சிறப்பாகவே கிடைத்ததில் அவனுக்கு நிம்மதி உணர்வை தந்தது.

அவர்களை விட இன்னும் பல மடங்கு சத்யாவை தான் நன்றாகவே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியே எடுத்துக் கொண்டான்.

“சரி மாமா, நாளைக்கு மறக்காம வந்திடுங்க. நான் கிளம்புறேன்…” என்று கார்த்திகா கிளம்ப, “கார்த்திகா இன்னைக்குச் சனிக்கிழமையா இருந்தாலும் உனக்குப் புஃல்டே தானே ஸ்கூல்?” என்று கேட்டான்.

“ஆமா மாமா….”

“அப்புறம் எப்படி இந்த நேரம் இங்கே வந்த?” லேசாகத் துளிர்த்த கோபத்துடனே கேட்டான்.

“உடம்பு சரியில்லைனு பர்மிசன் போட்டு வந்தேன் மாமா…” அவனின் கோபம் கொண்டு தயங்கியே பதிலை சொன்னாள்.

“தப்பு கார்த்திமா. இனி இந்தத் தப்பை செய்யாதே. காலம் கெட்டு கிடக்கு. நீ ஸ்கூலில் இருப்பனு வீட்டில் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. நீ இப்படி வந்ததில் எதுவும் உனக்கு ஆபத்து வந்தால் என்ன செய்ய முடியும்? இனி இப்படி வர கூடாது…” என்றான்.

எந்தளவு அவளைப் பெரியவள் போல நினைத்து அவளிடம் மனம் விட்டு பேசினானோ, அதே போலச் சிறியவளாக நினைத்து உரிமையாக, அவளின் தப்பை உணர்த்திக் கண்டித்தான்.

அவன் உரிமையுடன் அதட்டியதில் சந்தோசமாகவே உணர்ந்த கார்த்திகா “சரி மாமா…” என்று சமர்த்தாகவே தலையை ஆட்டிவிட்டு அவனிடம் இருந்து விடை பெற்றாள்.

மறுநாள் சத்யாவை சந்தித்துத் தன்னைப் பற்றிச் சொல்லி சமாதானம் செய்து விட வேண்டும் என்ற முடிவுடன் தர்மா கிளம்ப அவனைப் பேசவே விடாமல் அதிர வைத்து அதகளமாக்கினாள் சத்யா.