20 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 20

கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வினய். அவன் உடை உடுத்தியிருந்த விதம் வெளியே கிளம்பத் தயாராக இருக்கிறேன் என்று சொல்வதாக இருந்தது.

தலை வாரி முடித்து விட்டு டையை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தவன் காலை பிடித்து ‘என்னைத் தூக்கு’ என்ற படி நின்று கொண்டிருந்தான் கவின்.

“இருடா குட்டி! அப்பா இதோ கிளம்பிட்டு தூக்குறேன்” என்று மகனிடம் பேசிக் கொண்டே தான் கிளம்புவதில் அவன் முனைப்பாக இருக்க, அது பொறுக்காமல் “ப்பா தூக்கு…!” என்று விடாமல் பிடித்து இழுத்தான்.

“கவின் வெளியே வா! சாப்பிடணும்…” என்று அழைத்துக் கொண்டிருந்த பவ்யாவின் குரல் காதில் விழுந்தும் கவின் கொஞ்சமும் அசையாமல் அப்பா தான் இப்போது முக்கியம் என்பது போல நின்றிருந்தான்.

“அம்மா கூப்பிடுறா பாரு. அம்மாகிட்ட போடா குட்டி…!” என்று வினய் சொல்லியும் “ஹுகும்… போவ மாட்தேன்…” என்று தலையைச் சிலுப்பிய படி கவின் பிடிவாதம் பிடித்தான்.

தான் தான் இப்போது முக்கியம் என்று நிற்கும் மகனின் பிடிவாதம் தந்தையவனுக்குப் பெருமையாக இருந்தாலும், மகனின் செயல் அவனை வருந்தவும் வைத்தது.

டையை முழுதாகக் கூடக் கட்டி முடிக்காமல் கவினை கைகளில் அள்ளிக் கொண்டவன் “என்னடா குட்டி நீ இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? அம்மா கூப்பிட்டா போகணும்டா…” என்று தகப்பன் சொல்லியதை ஏதோ பாராட்டு போல நினைத்த கவினோ குட்டி இதழ்கள் விரிய அழகாகச் சிரித்தான்.

மகனின் மழலை சிரிப்பில் வினய்க்கு மற்றதெல்லாம் மறைந்து போக, மகனை உச்சி முகர்ந்தான்.

“சரி… சரி… வாங்க அம்மாகிட்ட போகலாம்…” என்று மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கண்களில் தன் அறையையே பார்த்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்த மனைவி பட அருகே சென்றவன் மகனை மேஜையின் மீது அமர வைத்துவிட்டு தான் மனைவியின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அமர்ந்தவனுக்கு அமைதியாகக் காலை உணவை பரிமாறி விட்டுப் பவ்யா தன் மகனை அமர வைத்து அவனுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்தாள்.

வினய்யின் பார்வை முழுவதும் மனைவியின் மீது தான் இருந்தது. அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்வையால் தொடர்ந்து கொண்டே தன் காலை உணவை முடித்தான்.

கதை சொல்லிக் கொண்டே மகனை மட்டும் பார்த்து உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாலும் கணவன் பார்வை முழுவதும் தன் மேல் இருப்பதை உணர்ந்தும் கண்டு கொள்ளாதது போல இருந்தாள்.

அவளின் அந்தச் செய்கை வினய்யை மேலும், மேலும் வலிக்க வைத்துக் கொண்டிருந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வினய் ஊரில் இருந்து வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்றைக்கு இரவு தன் வேதனையைக் கொட்டிவிட்டு அழுத பவ்யாவை பார்த்து மண்டியிட்டு யாசகமாகக் கைகளை ஏந்தி பவிமா என்று அழைத்த கணவனைச் சில நொடிகள் அதிர்ந்து பார்த்த பவ்யா,

கணவனை அப்படிப் பார்க்க முடியாமல் இறுகி இருந்த தன் இதழ்களை மெல்ல விரித்து, “இப்போ நீங்க இப்படிச் செய்றது தான் நாடக தனமா இருக்கு. போதும் கையைக் கீழே போடுங்க” என்றாள்.

பவ்யா தன் செயலை நாடகதனம் என்று சொல்லவும் அந்த வார்த்தை வினய்யின் மனதை குத்தியது. தனக்குக் குத்தியது போலத் தான், தான் அன்று அந்த வார்த்தையைச் சொன்ன போது அவளுக்கும் குத்தியிருக்கும் என்று நினைத்தவனுக்கு அவளின் வலி புரிய மெதுவாக எழுந்து நின்றான்.

“பவி ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் கேளு! முன்னாடி நான் பேசினது உன்னைக் காயப்படுத்திருக்குன்னு நினைக்கிறேன். ஆனா…” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை நிறுத்தி…

“போதும் வினய் நிறுத்துங்க…! இப்போ எந்த விளக்கத்தையும் கேட்குற நிலையில் நான் இல்லை. என் மனசெல்லாம் ரணமாகி போய் இருக்கு. அதை ஒரு நாள்ல சரி பண்ணனும்னு நினைச்சா நிச்சயம் அது முடியாது.

விட்டுருங்க ப்ளீஸ்! இப்போ பேசினாலும் நம்ம மனசு தான் மாத்தி, மாத்தி காயப்பட்டுப் போகுமே தவிர எல்லாம் சரியாகாது” என்றவள் அவ்வளவு தான் பேச்சு என்பது போலத் தன் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

வலியோடு பேசி சென்ற மனைவியை விரட்டி சென்று சமாதானம் பேச மனமில்லாமல் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் மீதம் இருந்த ஜெட்லாக்கை சமாளித்து, மகனுடன் தன் முழுநேரத்தையும் செலவிட்டு மகனையும் மகிழ்வித்துத் தானும் அதில் மகிழ்ந்து போனான்.

முன்பு பார்த்த திரைப்படப் பாடல் மூலம் தான் கண்ட கனவை எல்லாம் நனவாக்க முயன்றான். அந்த அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே இருந்த நீச்சல் குளத்தில் மகனுடன் விளையாடி, பக்கத்தில் இருந்த சில இடங்களுக்கு அழைத்துச் சென்று அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்து என்று அவனின் நாட்கள் மகனுடன் நிறைவாகக் கழிந்து கொண்டிருந்தன.

கணவன் மகனை அழைத்துப் போவதை வெறும் பார்வையாளராக இருந்து கவனித்தாளே தவிரப் பவ்யா எதிலும் கலந்துக் கொள்ளவில்லை.

மனைவியையும் தங்களுடன் அழைத்துக் கொள்ள ஆர்வம் இருந்த போதும் அவளின் பார்வையைப் பார்த்தே அமைதியாக விலகி போனான் வினய்.

மூன்றாவது நாள் சொந்தமாக ஒரு காரை வாங்கி நிறுத்திய வினய் அதில் மகனை அழைத்துச் சென்று அவனின் சந்தோஷத்தைக் கண்டு மகிழ்ந்தான்.

அன்றே தந்தையிடம் கேட்டு மறுநாளில் இருந்து அலுவலகம் வருவதாகச் சொல்லி இதோ இப்போது கிளம்பி தயாராகி விட்டான்.

கடந்த இரண்டு நாளும் பவ்யா முடிந்த வரை கணவனிடம் பேசுவதைத் தவிர்த்தாள். அப்படியே அவளுக்குச் சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தாலும் மகனிடம் பேசுவது போலக் கணவனுக்குத் தகவல் சொன்னாள்.

கணவன், மனைவி தங்குதலும் தனித் தனி அறையில் இருக்க, இரு அறைக்கும் பாலமாக இருந்தது கவின் மட்டுமே.

ஒரே அறையில் இருக்க வினய்க்கு ஆவல் இருந்த போதும் பவ்யாவிற்காகத் தன்னைப் பொறுத்துக் கொண்டிருந்தான்.

பிரிந்து இருந்த போது ஆளுக்கு ஒரு வீம்பினால் போனில் பேசிக் கொள்வதைத் தவிர்த்து வந்தவர்கள் இப்போது அருகருகே இருந்தும, இத்தனை நாள் வாழ்க்கையில் அனுபவித்த வலி பவ்யாவை பேச விடாமல் தவிர்க்க வைத்தது.

வினய்க்கு பேச ஆர்வம் இருந்தும் மனைவிக்காக மௌனம் கடைபிடித்தான்.

காலை உணவை முடித்தவன் “கவின் குட்டி அப்பா ஆபிஸ் போய்ட்டு வர்றேன். டாட்டா சொல்லுங்க பார்ப்போம்…” என்றான்.

ஆனால் கவினோ “ப்பா நானு…” என்று அவனும் வருவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

வினய் தொடர்ந்து ஏதேதோ சமாதானம் செய்த போதும் “நானு… நானு…” என்று தானும் உடன் வருவேன் என்று குதித்தானே தவிர “டாட்டா…!” என்ற வார்த்தை மட்டும் அவன் வாயில் இருந்து வரவே இல்லை.

தந்தையின் கம்பெனியே என்றாலும் இவனை வைத்துக் கொண்டு எப்படி வேலை பார்க்க முடியும் என்று வினய்க்குத் தயக்கமாக இருக்க, தன் அவஸ்தையைத் தூரத்தில் இருந்து கண்டும் அமைதியாக இருக்கும் மனைவியைப் பாவமாகப் பார்த்தான்.

இரண்டு நாட்களும் தந்தை, மகன் உலகத்திற்குள் நுழையாமல் எப்படி விலகி இருந்தாளோ, அதே போல் தான் இப்போதும் இருந்தாள்.

இப்போது கணவனின் பாவ பார்வையில் பவ்யாவின் இதழ்கள் சிரிப்பிற்கு அடையாளமாக லேசாகச் சுளிக்க ஆரம்பிக்க, அதை வேகமாக மறைத்தவள் கண்ணில் இருந்த சிரிப்பு மட்டும் மறைய மறுத்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அதைக் கண்ட வினய் ‘பார்றா! என் அவஸ்தை இவளுக்குச் சிரிப்பா இருக்கு’ என்று நினைத்தவனின் அதரங்களும் சிரிப்பில் விரிந்தன.

மனைவியின் கண்ணில் இருந்த சிரிப்பு வினய்க்கு உந்துதலாக இருக்க, “பவிமா காப்பாத்தேன்…” என்றான் கெஞ்சுதலாக.

அவனின் கெஞ்சலில் இப்போது இதழ்கள் விரியவே சிரித்து விட்டாள். சிரிப்போடு ‘எனக்குத் தெரியாது உங்க பாடு. உங்க பையன் பாடு’ என்ற பார்வை பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையில் இருந்த கேலியில் வினய்க்குக் கோபம் வராமல், மனதில் இதம் வந்தது. அந்தத் தருணமும் கூட அவனுக்கு ஆனந்தமாக இருந்தது.

தன்னைக் கெஞ்ச வைக்கும் மகன், தன் கெஞ்சலை கேலி செய்யும் மனைவி. இதையும் விட வேறு சொர்க்கம் இருக்க முடியுமா என்ன?

தன் வறட்டு பிடிவாதத்தால் நான்கு வருடம் அனுபவித்த வெறுமை நான்கே நாட்களில் தவுடுபொடி ஆனதில் அவனின் மனதை மயிலிறகு கொண்டு வருடியது போல இருந்தது.

தன்னைக் கேலி செய்து சிரிக்கும் மனைவியை ஓரப் பார்வை பார்த்த வினய், “சரி குட்டி நீயும் வா போகலாம். ஆனா கூட அம்மாவையும் கூப்பிட்டுப் போகலாம் சரியா? போய் அம்மாவை கூப்பிட்டு வா” என்று மகனிடம் சொல்லி அனுப்பி வைத்தான்.

சோஃபாவில் அமர்ந்திருந்த கவின் இறங்கி சந்தோஷமாக ஓடி வர, பவ்யா கணவனின் பேச்சில் அவனை முறைத்துப் பார்த்தாள்.

இப்போது வினய் தனக்கு வந்த நமட்டுச் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அறியாபிள்ளை பார்வை பார்த்து வைத்தான்.

கணவனின் கள்ளத்தனத்தைப் பவ்யா உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியே என்னை ஏன் மாட்டி விடுகிறாய் என்ற பார்வையுடன் எதிர்பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையைக் கண்டதும் ஓடிக்கொண்டிருந்த மகனை காட்டி ‘நீயும் கொஞ்சம் சமாளி!’ என்று கண்ணால் சேதி சொன்னவன் சட்டென மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அதை எதிர்பாராத பவ்யா “ஆ…!” என்று வாயை திறந்து திகைத்தவள் வேகமாகத் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.

அவளின் திகைப்பு வினய்க்கு தித்திப்பாக இருந்தது. தன் கண் சிமிட்டலில் லேசாகச் சிவக்க ஆரம்பித்த மனைவியின் வதனத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

அதற்குள் அம்மாவிடம் ஓடி வந்திருந்த கவின் அவளின் கையைப் பிடித்து இழுத்து “ம்மா வா… ப்பாட்ட கார் போலாம்…” என்று அழைத்தான்.

அது தான் சாக்கென்று “ஆமா பவி… வா…! கார்ல போகலாம்…. புதுக் கார் வாங்கி நீ இன்னும் அதிலே ஏறவே இல்லையே. இன்னைக்கு என் கூட வா!” என்று தன் ஆசையை இந்தச் சந்தர்ப்பத்தில் நிறைவேற்றிக் கொள்ள முனைந்தான்.

நேற்று கார் வாங்கி வந்தயுடனேயே பவ்யாவை அழைத்தும் அவள் வர மறுத்து விட்டாள். அதனால் மகனின் பேச்சை பற்றிக் கொண்டு தானும் அழைத்தான். அவனுக்கு இப்போது அலுவலகம் போவதை விட மனைவி காரில் வருவது முக்கியமாகப் பட அதைச் செயல் படுத்திவிட நினைத்தான்.

ஆனால் கணவனின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் காட்டிக் கொண்டு தன்னருகில் இருந்த மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள், “கவின் செல்லம் அப்பாக்கு டாட்டா சொல்லுவாங்களாம்… அப்புறம் நீயும் நானும் வண்டில கடைக்குப் போவோமாம்.

அங்கே போய்க் குட்டி கேட்குறதை அம்மா வாங்கித் தருவேனாம். இப்ப எங்க செல்லத்துக்குக் கடைக்குப் போகணுமா? இல்லை அப்பா கூட ஆபீஸ் போகணுமா?” என்று கவினிடம் கேட்டாள்.

அந்தச் செல்ல குட்டி நாடியில் கைவைத்து யோசிப்பது போல நடித்தவன் பின்பு தந்தையின் புறம் திரும்பி, “ப்பா டாட்டா…!” என்றான்.

அவன் சொன்ன வேகத்தில் பவ்யா சட்டெனச் சிரித்துவிட, “விவரம்டா மகனே நீ…!” என்றான் வினய்.

அதில் பவ்யாவிற்கு இன்னும் புன்னகை வர, அதை அடக்கிக் கொண்டு மகனை அணைத்துத் தன்னை மறைத்துக்கொண்டாள்.

பவ்யா தன் புன்னகையை மறைக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்த்தவன் அவள் நன்றாகச் சிரித்துக் கொள்ளட்டும் என்று நினைத்து “டாட்டா டா குட்டி…” என்று மகனிடம் சொன்னவன் “போய்ட்டு வர்றேன் பவி” என்று சொல்லிவிட்டு கிளம்பியவனுக்கு மனம் நிறைவாக இருந்தது.

பவ்யாவிற்கு நிறைய நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுச் சிரிக்கத் தோன்றியது. மகனிடம் சொன்னது போல அவனைக் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் வந்தாள். அன்று மாலைவரை அவள் முகத்தில் உற்சாகம் தெரிந்தது.

ஆம்…! மாலை வரை மட்டுமே…!

மலர்ந்த முகத்துடன் அலுவலகத்தில் நுழைந்த மகனை உற்சாகமாக வரவேற்றார் ரங்கநாதன்.

“வா… வா வினய்…! எங்க நீ இங்க வராமலேயே போயிருவியோனு நிறைய நாட்கள் நினைச்சிருக்கேன். ஆனா வெகு நாள் கனவு இன்னைக்கு நிறைவேறியதில் என் உள்ளம் குளிர்ந்திருச்சு வினய்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

தந்தையின் மகிழ்வை கண்டு அவரை வாஞ்சையாகப் பார்த்தான்.

அப்போது அறைக்குள் வந்த ரங்கநாதனின் உதவியாளர் “எல்லாம் ரெடியா இருக்கு சார். வந்தீங்கனா மீட்டிங்கை ஆரம்பிச்சுரலாம்” என்று சொல்லவும் “வா வினய் போகலாம்…” என்று மகனை அழைத்தார்.

அவரை யோசனையாகப் பார்த்த வினய் “அப்பா நான் இப்பதான் வந்துருக்கேன். எதைப் பத்தி மீட்டிங்னு கூடத் தெரியாம நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்?” என்று கேட்டான்.

“எல்லாம் நீயும் தெரிஞ்சுக்க வேண்டிய மீட்டிங் தான். அங்கே வந்து என்ன விஷயம்னு நீயே தெரிஞ்சுக்கோ” என்றார்.

அவன் தயங்க “வா வினய்…!” என்று அழைத்துச் சென்றார்.

மீட்டிங் அறைக்குச் செல்ல அங்கே அந்தக் கம்பெனியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் அனைவரும் இருக்கக் கண்டு தந்தையின் எண்ணத்தை ஊகித்தவன் ‘இந்த அப்பா அடங்க மாட்டாரே. நான் என்ன சொன்னா? இவர் என்ன செய்து வைச்சுருக்கார்?’ என்று தந்தையை உள்ளுக்குள் அர்ச்சனை செய்தபடி,

அந்தக் கம்பெனியின் எம்.டி.யுடன் வந்ததால் தனக்கும் மரியாதை செலுத்தியவர்களுக்கு அவனும் பதிலுக்கு மரியாதை செய்து தந்தை காட்டிய இடத்தில் போய் நின்றான்.

“எல்லாருக்கும் வணக்கம். இப்ப உங்க எல்லாரையும் எதுக்குக் கூப்பிட்டுருக்கேன்னு குழப்பமா இருக்கலாம். இவன் தான் என் மகன் வினய். இனி இந்தக் கம்பெனிக்கு ஒரு எம்.டி. இல்லை. இரண்டு எம்.டி.

என்னோட சேர்ந்து இனி என் மகன் வினய்யும் எம்.டி. பொறுப்பில் செயல்படுவான். அவனை இன்னைக்கு உங்க முன்னாடி அறிமுகப்படுத்துறதில் பெருமை படுறேன்” என்று சொல்லி அவர் தன் உரையை நிறுத்தியவுடன் கைத்தட்டி வினய்யை வரவேற்றார்கள்.

அறிமுகம் முடிந்து மீண்டும் தந்தையின் அறைக்குச் சென்றதும் அவரை முறைத்துப் பார்த்தான் வினய். உன் முறைப்பு எல்லாம் என்னை ஒன்னும் செய்யாது என்பது போலப் பதில் பார்வை பார்த்த ரங்கநாதன் “அப்புறம் சொல்லு வினய். வரும் போதே சிரிச்சுட்டே வந்த என்ன விஷயம்…?” என்று சற்று முன் ஒன்றும் நடவாதது போலப் பேச்சை துவக்கி வைத்தார்.

அவரின் அந்த விசாரிப்பில் இன்னும் உக்கிரமாக முறைத்து “என்னப்பா நக்கலா? இங்க என்ன நடக்குது? நான் வேலை கேட்டா எம்.டி.னு அறிமுகப்படுத்துறீங்க? நான் தான் சொன்னேன்ல எனக்குத் தனியா பிசினஸ் செய்யத் தான் விருப்பம். கொஞ்ச நாள் மட்டும் வேலைக்கு வர்றேன்னு” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.

“வேலை தான் கொடுத்துருக்கேன் வினய். எம்.டி. வேலை” என்று ரங்கநாதன் அசராமல் பதில் சொல்ல…

“அப்பா…!” என்று கடுப்பாக அழைத்தான்.

“கோபப்படாதே வினய்…! இந்தக் கம்பெனியை எப்ப இருந்தாலும் எனக்குப் பிறகு நீ தான் பார்த்துக்கணும். அப்படி இருக்கும் போது உன்னைச் சாதாரண ஸ்டாப்பா நான் எப்படி அறிமுகப் படுத்த முடியும்? இங்க உனக்குரிய மரியாதை கிடைக்கணும். அதை என் ஆயுள் இருக்கும் போதே நான் என் கண்ணால பார்க்கணும். தனியா நீ கம்பெனி தாராளமா ஆரம்பி. வேண்டாம்னு சொல்லலை. ஆனா இந்தக் கம்பெனி மேலேயும் ஒரு கண்ணு வச்சுக்கோ போதும்” என்றார்.

தந்தையின் ஆசையும் நியாயமானதாகத் தெரிய… அதற்கு மேல் அவரிடம் வாதாடாமல் சரி என்றவன் அங்கே எம்.டி. பதவியுடன் தன் வேலையை ஆரம்பித்தான்.

மாலை தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு மனைவி, மகனை பார்க்க ஆவலுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வினய்.

காலையில் இருந்த சிரிப்புடன் இல்லை என்றாலும், இத்தனை நாளும் இருந்த இறுக்கம் தளர்ந்து கணவனுக்குக் காட்சி தந்தாள் பவ்யா. தந்தையைக் கண்டவுடன் தாவி அவன் மேல் ஏறிக் கொண்டான் கவின்.

காலையில் ரசித்த அழகான தருணம் போல, இத்தனை நாளும் இல்லாத வகையில் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் சொர்க்கத்தில் நுழைந்தது போல ஆனந்தமாக உணர்ந்தான் வினய்.

“என் செல்ல குட்டி அப்பாவை தேடினீங்களா? இன்னைக்கு என்னவெல்லாம் செய்தீங்க?” என்று கேட்டபடி மகனிடம் பேசிக் கொண்டே தன் அறைக்குள் சென்றான். செல்லும் முன் சமையலறையில் இருக்கும் மனைவியையும் பார்க்க தவறவில்லை.

மகனிடம் பேசிக் கொண்டே வினய் அறையினுள் இருக்க, பவ்யா அடுப்பில் பாலை சுட வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அழைப்பு மணி ஓசை எழுப்ப, போய் லென்ஸ் வழியாகப் பார்த்தவள் ஆச்சரியமாகக் கதவை திறந்து கொண்டே “மாமா எப்போ வந்தீங்க? அடுத்த வாரம் தானே நீங்க வர்றதா இருந்தது. வாங்க மாமா…! உள்ளே வாங்க…!” என்று அழைத்தவளின் மலர்ந்திருந்த முகம் சட்டென உறைந்து போனது.

அங்கே கணவனை விலக்கி விட்டு முன்னால் வந்த கனகதாரா வந்த வேகத்தில் கோபத்துடன் “பளார்…!” என்று பவ்யாவை ஒரு அறை விட்டிருந்தார்.