20 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

தம்பதிகளுக்குள் நட்பும் இருக்கலாம். ஆனால் நட்பு மட்டுமே தம்பதிகளுக்குள் சாத்தியப்படாது! என்ற உண்மையை அறியாமல் திருமணமான முதல் நாள் இரவில் நித்திலன், துர்கா இருவருமே அந்தப் பெரிய படுக்கையில் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்திருந்தனர்.

அவர்களுக்கு நடுவில் படுத்திருந்தாள் வருணா.

அந்த அறையில் வெளியுலகின் எந்தக் கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை மட்டுமே!

துர்காவோ புது இடம், புது உறவு, ஒரே அறையில் நித்திலனுடன் அவள்! எல்லாம் மனதில் ஒருவித இடறலை கொடுத்திருந்தது.

திருமணப் பந்தம் எப்படி இருக்கும் என்று அறியாதவள் அல்ல அவள்!

கணவன், மனைவிக்கான உரிமைகள், கடமைகள் கூடத் தெரியும்.

ஆனால் அவளால் இந்தத் திருமணப் பந்தத்தில் இணைய முடியாது என்று தெரிந்தே அவனின் மனைவியாகி இருந்தாள்.

தான் செய்வது அவனுக்கு நியாயமானது இல்லை என்று தெரியும்.

ஆனாலும் அவளின் மனது இன்னொரு சாதாரணத் திருமண வாழ்க்கையை வாழ தயாராகியிருக்கவில்லை.

ஏதேதோ எண்ணங்கள்! ஏதேதோ குழப்பங்கள்!

தான் இந்தத் திருமண வாழ்க்கையில் நுழைந்தது சரியா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு குழம்பிக் கொண்டாள்.

தந்தைக்காக என்று அவசரப்பட்டிருக்கக் கூடாதோ? என்ற சிந்தனை வேறு!

குழப்பமான மனநிலையில் இருந்தாள் துர்கா.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

நித்திலனோ அவளுக்கு எதிர்பதமான மனநிலையில் இருந்தான்.

அவன் மனதை ஆக்கிரமித்த பெண் இப்போது மனைவியாக அவனின் அருகில்!

அவனைத் தந்தையாக்கிய அவனின் குட்டிம்மா. இப்போது அவன் அருகில்!

அந்தச் சந்தோஷத்தில் அவனால் தூங்க கூட முடியவில்லை.

துர்கா தன்னிடம் தயங்கித் தயங்கிப் பேசுவதும், பழகுவதும் புரிந்தாலும் அவளின் மனநிலையையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவளைத் தான் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்குத் தன்னால் எந்தச் சங்கடமும் வந்து விடக்கூடாது.

அப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்! இப்படி நடந்து கொள்ள வேண்டும்! அவளைத் தான் எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விதவிதமாகக் கற்பனை செய்தான்.

குழந்தைக்கு எப்படித் தான் ஒரு நல்ல தகப்பனாக இருக்கலாம். அவளை எப்படி வளர்க்கலாம் என்றும் அவனின் கற்பனைகளும், கனவுகளும் நீண்டு கொண்டே சென்றன.

நினைவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகம் பார்த்தான்.

தன் குட்டி வாயை லேசாகத் திறந்து அழகாக உறங்கிக் கொண்டிருந்தாள் அவனின் குட்டி பூச்செண்டு!

தன் வாழ்வின் ஆதாரம் இவள்! என்று நினைத்துக் கொண்டவன் கனிவுடன் குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

அந்த மெல்லிய முத்த சத்தத்தில் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்திருந்த துர்கா திரும்பிப் பார்த்தாள்.

குழந்தையின் நெற்றியில் மீண்டும் ஒரு முத்தம் வைத்துக் கொண்டிருந்த நித்திலன் துர்காவை பார்த்து மென்மையாகச் சிரித்தான்.

“குட்டிம்மா தூங்கும் போது இன்னும் அழகா இருக்காள்…” என்றான் பாசமாக.

அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் துர்கா அமைதியாக இருக்க, “மனைவி, மகள்னு நான் வாழ்வேன்னு நினைத்து கூடப் பார்க்காமல் இருந்தேன். ஆனால் இப்ப நீங்க இரண்டு பேரும் என் பக்கத்தில்!

சந்தோஷத்தில் தூக்கம் கூட வர மாட்டிங்குது. இப்ப இந்த நிமிஷம் இந்த உலகத்தில் ரொம்பச் சந்தோஷமான மனுஷன் யார்ன்னு கேட்டால் நான் தான்னு சொல்வேன். தேங்க்ஸ்! தேங்க்ஸ் துர்கா! இந்த அழகான வாழ்க்கையை எனக்குத் தந்ததற்கு!” என்று மனம் நெகிழ்ந்து மனைவியானவளுக்கு நன்றி தெரிவித்தான் நித்திலன்.

அவனின் வார்த்தைகளும், நெகிழ்ச்சியும் துர்காவை ஏதோ செய்தது.

சொல்ல போனால் அவன் இவ்வளவு நெகிழும் அளவிற்கு அவள் ஒன்றுமே செய்யவில்லை. தந்தையின் பேச்சுக்குக் கட்டுப்பட்டுத் தான் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாள்.

அதோடு அவன் நாம் நண்பர்களாக இருப்போம் என்று சொன்னதால் மட்டுமே அவனைத் திருமணம் செய்யச் சம்மதித்தாள்.

திருமணச் செலவு கூட அவன் தான் பெரும்பாலும் செய்தான்.

இப்போதும் அவனுக்குத் திருமணத்தில் முதலிரவு. ஆனால் அவனை அவள் தள்ளி வைத்திருக்கிறாள். அவனுடன் இன்னும் மூன்றாம் மனுஷி போல் தான் பட்டும் படாமல் பேசுகிறாள். அவனுக்காக என்று அவள் எதுவுமே செய்யவில்லை.

ஆனால் எல்லாம் அவள் செய்தது போல் நன்றி சொல்கிறான். என்ன விநோதம் இது? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

“எனக்கு எதுக்குத் தேங்க்ஸ்? நான் எதுவும் பண்ணலை” என்றாள் மெல்ல.

“என்ன துர்கா இப்படிச் சொல்லிட்டீங்க? எனக்கு நீங்க செய்தது சின்ன விஷயமே இல்லை. இந்தக் குட்டிம்மா என்னை அப்பான்னு கூப்பிட அனுமதி கொடுத்திருக்கீங்க. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணான உங்களுக்குக் கணவன் ஸ்தானத்தைக் கொடுத்திருக்கீங்க. இதை விட எனக்கு வேற என வேணும்? இது போதுமே எனக்கு! இது போதுமே எனக்கு!” என்று வாழ்க்கையில் முழுத் திருப்தி அடைந்தது போல் சொன்னான் நித்திலன்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவனின் இந்த மகிழ்ச்சிக்கு துர்கா என்ன சொல்வாள்? அவளால் ஒன்றும், ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

மனம் எல்லாம் பாரமான உணர்வு! அவனுக்குத் தான் நியாயம் செய்யவில்லை என்று அவனுக்குப் புரியவே இல்லையா? என்பது போல் மெல்லிய விடிவிளக்கின் ஒளியில் கணவனைக் கூர்ந்து பார்க்க, அவனோ அவளைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் பொக்கிஷம் தன் கை சேர்ந்த நிறைவு அவனிடம்!

அவனின் அந்தக் காதல் கண்களைப் பார்க்க முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவள், “தூங்குங்க…” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவள் தன் கண்களைச் சந்திக்காமல் தவிர்த்தது கூடச் சுகமாகத்தான் இருந்தது.

ஒருவித மகிழ்ச்சியான மனநிலையுடனே கண்களை மூடி நித்திரையைத் தழுவினான் நித்திலன்.

காலையில் துர்கா கண் விழிக்கும் போது, “குட்டிம்மாவுக்குப் பசிக்குதா? இதோ பால் குடிக்கலாம்…” என்ற குரல் கேட்டு விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

கட்டிலின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்து குழந்தைக்குப் பாட்டிலில் அடைத்த பாலை புகட்டிக் கொண்டிருந்தான் நித்திலன்.

இரவில் தூங்க நேரமானதால் காலையில் குழந்தை எழுந்து அழுதது கூட அறியாமல் உறங்கியதை உணர்ந்து, “ஸாரி, தூங்கிட்டேன். அவள் எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று கேட்டாள்.

“இல்லை துர்கா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எழுந்தாள். அம்மாவும் எழுந்துட்டாங்க. அவங்க தான் குட்டிம்மாவுக்குப் பசிக்கும், பால் கொடுக்கலாம்னு பால் ஆத்திக் கொடுத்தாங்க…” என்றான்.

“என்னை எழுப்பி இருக்கலாமே?”

“நீங்க அசந்து தூங்கிக் கொண்டிருந்தீங்க. தூங்கட்டும்னு தான் எழுப்பலை…” என்றான்.

“தேங்க்ஸ்…” என்றவள் எழுந்து வந்து “கொடுங்க, நான் கொடுக்கிறேன்…” என்றாள்.

அவளிடம் குழந்தையையும், பால் புட்டியையும் கொடுத்து விட்டு எழுந்து சென்றவனின் முகம் சுருங்கிப் போயிருந்தது.

குழந்தையைக் கவனிக்காமல் தூங்கி விட்டோமே என்ற பதட்டத்தில் அவனின் முக மாற்றத்தை கவனிக்காமல் போனாள் துர்கா.

வருணா பால் குடித்து முடித்ததும் வெளியே தூக்கி சென்றாள்.

சோஃபாவில் நித்திலனும், சபரிநாதனும் ஆளுக்கு ஒரு செய்தித்தாளை கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.

நித்திலனை தாண்டி அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்றவள், “இவளைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்கபா. நான் போய் வேலையைப் பார்க்கிறேன்…” என்று குழந்தையை நீட்ட, அவரும் செய்தித்தாளை மடித்து வைத்து விட்டுக் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

நிமிர்ந்து கூடப் பார்க்காமல் செய்தித்தாளில் மூழ்கிப் போனதாகக் காட்டிக் கொண்ட நித்திலன் இப்போதும் தன் வாட்டத்தை யாருக்கும் காட்டாமல் மறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டான்.

சபரிநாதன் குழந்தையை மடியில் அமர்த்தி அவளிடம் ஏதோ பேச ஆரம்பிக்க, துர்கா சமையலறைக்குச் சென்றாள்.

அதனால் இருவருமே நித்திலனை கவனிக்கவில்லை.

சமையலறையில் செவ்வந்தி காலை உணவை செய்ய ஆரம்பித்திருந்தார்.

“ஸா… ஸாரி… கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்…” என்றாள் அவரிடம்.

“தூக்கம் வரும் போது தூங்குவதில் தப்பு இல்லைமா. அதுவும் நேத்து கல்யாண வேலை, வீடு ஒதுக்கி வைக்கும் வேலைன்னு நிறைய இருந்தது. நானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எழுந்தேன்…” என்றார்.

“நான் சமைக்கிறேன். நீங்க போய் உட்காருங்க…” என்றாள்.

“பரவாயில்லைமா. இரண்டு பேரும் சேர்ந்தே வேலையை முடிப்போம். வேலை செய்யாமல் என்னால் இருக்க முடியாது…” என்றார்.

மருமகள் வீட்டிற்கு வந்துவிட்டால் அவளே அனைத்து வேலைகளும் பார்க்க வேண்டும் என்று சொல்லாமல், அவரும் உடன் வேலை பார்க்கிறேன் என்றது அவளுக்கு வியப்பாக இருந்தது.

கூடவே காவேரியின் ஞாபகம் வந்தது. திருமணம் முடிந்த அடுத்த நாள் நேரம் கழித்து எழுந்ததற்கு முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். அதோடு வீட்டு வேலை எல்லாம் இனி நீ தான் பார்க்க வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாமல், அவளையே செய்ய வைப்பதில் கெட்டிக்காரர் அவர்.

ஏனோ தேவையில்லாமல் ஒரு வித ஒப்பீடு வந்து போக, தலையை உலுக்கி சிந்தனையைக் கலைந்தவள், வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

உணவு தயாரித்து முடித்ததும், “நீ போய்க் குழந்தைக்கு முதலில் சாப்பாட்டை ஊட்டுமா. அப்புறம் நம்ம எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்…” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க அத்தை. நான் அவளுக்கு ஊட்டிட்டு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்…” என்றாள்.

“தனியா எல்லாம் சாப்பிட வேண்டாம். நாம சேர்ந்தே சாப்பிடுவோம். நாளைக்கு நான் ஊருக்குப் போயிருவேன். அங்கே போய் நான் தனியாத்தான் சாப்பிடணும். இன்னைக்காவது நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும் போல இருக்கு…” என்றார்.

“ஏன் தனியா சாப்பிடுவீங்க? அவங்க கூடச் சேர்ந்து சாப்பிட மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லைமா. குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுக்கவே எனக்கு நேரம் ஆகிடும். அவங்க சாப்பிட்டு முடிக்கிறதுக்கு முன்னாடி நிரஞ்சன் சாப்பிட்டு அவன் வேலையைப் பார்க்க போய்டுவான். ஹேமாவும் அவன் கூடவே சாப்பிட்டு விடுவாள். அதனால் நான் தனியாத்தான் சாப்பிடுவேன்…” என்றார்.

‘ஏன் அந்த ஹேமா குழந்தைகளைச் சாப்பிட வைக்க மாட்டாரா?’ என்ற கேள்வி தோன்றியது. ஆனால் அதைக் கேட்க தயக்கமாக இருக்க, அப்படியே அந்தப் பேச்சை விட்டுவிட்டு, குழந்தைக்கு உணவு ஊட்ட சென்றாள்.

அவள் சென்ற போது நித்திலன் மடியில் அமர்ந்திருந்தாள் வருணா.

“கண்ணுமா, வா சாப்பிடலாம்…” என்று குழந்தையை அழைத்தாள்.

“குடுங்க, நான் ஊட்டி விடுறேன்…” என்று நித்திலன் ஆர்வமாகக் கேட்க,

“இல்ல, நான் ஊட்டுறேன். உங்களுக்கேன் சிரமம்?” என்றவள், குனிந்து மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு அவளிடம் ஏதோ பேசிக் கொண்டே ஊட்ட ஆரம்பித்தாள்.

நித்திலன் அடிப்பட்ட பாவனையில் அவளைப் பார்த்தவன் பட்டென்று எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.

குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்துவிட்டு அனைவரும் சேர்ந்து உணவு உண்ண அமர, மகனின் முகம் சுருங்கி இருப்பதைக் கண்டு விட்டார் செவ்வந்தி.

“என்ன நித்திலா, முகம் எப்படியோ இருக்கு?” என்று கேட்க,

‘என்னாச்சு?’ என்பது போல் அவன் முகம் பார்த்தாள்.

“என்ன மாப்பிள்ளை, உடம்பு எதுவும் சரியில்லையா? காலையில் இருந்தே ரொம்ப அமைதியா வேற இருந்தீங்க…” என்று சபரிநாதனும் விசாரிக்க,

‘அப்படியா என்ன? அத்தையும், அப்பாவும் ஏதோ சொல்றாங்க. எனக்கு ஒன்னும் தெரியலையே?’ என்று அவன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் துர்கா.

அவன் முகத்தில் அவளால் எந்த வித்தியாசத்தையும் கண்டறிய முடியவில்லை.

அவன் எப்பவும் இருப்பது போல் தான் இருக்கிறான் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

“ஒன்னுமில்லை அம்மா, மாமா. லேசா தலைவலி வர்ற போல இருக்கு, அதான்…” என்றான்.

“நேத்து அலைச்சலில் அப்படி இருக்கும். இன்னைக்கு வீட்டில் தானே இருப்ப. சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. சரியாகிடும்…” என்றார் செவ்வந்தி.

“எத்தனை நாள் லீவ் போட்டுருக்கீங்க மாப்பிள்ளை?” என்று சபரிநாதன் விசாரிக்க,

“இன்னைக்கு மட்டும் தான் மாமா. நாளைக்கு வேலைக்குப் போகணும்…” என்றான்.

“என்ன நித்திலா உன்னை ஒரு வாரம் லீவ் போட சொன்னேன்ல? துர்காவுக்கு இது புது இடம். அவளுக்கு இந்த இடம் பழக நீயும் வீட்டில் இருந்தால் ஒத்தாசையா இருக்குமே…” என்றார் செவ்வந்தி.

“எனக்கு லீவ் ரொம்பப் போட முடியாதுமா. இன்னைக்கு என் வேலையவே, அசிஸ்டெண்ட் மேனேஜரா இருக்கும் நம்ம முரளிகிட்ட பொறுப்பை ஒப்படைச்சுருக்கேன். அதனால் நான் நாளைக்கு வேலைக்குப் போய்த் தான் ஆகணும். அதான் மாமா வீட்டில் இருக்காரே. அதனால் பிரச்சனை இல்லை…” என்றான்.

“என்ன இருந்தாலும் நீ கூட இருப்பது போல் வராதே…” என்ற செவ்வந்திக்கு மகன் உடனே வேலைக்குச் செல்வதில் உடன்பாடு இல்லை.

ஏற்கனவே இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று பேசி வைத்திருக்கிறார்கள். அதில் துர்கா தன்னிடம் கூட அத்தை என்று அழைத்துப் பேசவே தயங்கித் தயங்கித்தான் பேசுகிறாள்.

அவனிடமும் தேவைக்கு மேல் பேசாமல் ஒதுங்குகிறாள். இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பது போல் இருக்கின்றனர். இன்று காலையிலிருந்து மகனின் முகமும் சரியில்லை. இந்த நிலையில் நாளையிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டால் எப்போது தான் பேசிப் பழகுவார்கள் என்று நினைத்தார்.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்மா. ஈவ்னிங் சீக்கிரம் வர பார்க்கிறேன். லீவ் மட்டும் போட முடியாது…” என்றான் உறுதியாக.

“நீ வேலைக்குப் போவதை பற்றி என்னமா முடிவு எடுத்திருக்க?” என்று துர்காவிடம் விசாரித்தார்.

“அப்பா வேலையை விடச் சொல்றார் அத்தை. இத்தனை நாளும் வருணாவை அப்பாகிட்ட விட்டு வேலைக்குப் போவேன். ஸ்கூலும் அந்த வீட்டுக்குப் பக்கத்தில் என்பதால் அவள் அழுதால் அப்பா என்கிட்ட கொண்டு வந்து விட்டுவிடுவார். ஆனால் இப்போ இந்த வீட்டுக்கும், ஸ்கூலுக்கும் தூரம். அவள் அழுதால் சமாளிக்க முடியாதுன்னு சொல்றார்…” என்றாள்.

“அப்பா சொல்வதும் சரிதான்மா. குழந்தை இன்னும் கொஞ்சம் வளரும் வரை வீட்டில் இரு. அப்புறம் வேணும்னா வேலைக்குப் போ. பொண்ணுங்களுக்கு ஒரு வேலை கைவசம் இருப்பது நல்லது மா. அதனால் நீ வீட்டோட இருன்னு நானோ, நித்திலனோ சொல்ல மாட்டோம். என்ன நித்திலா சரி தானே?” என்று மகனிடமும் கேட்டார்.

“ஆமாம்மா. அவங்க விருப்பம் தான். எப்ப வேணும்னாலும் வேலைக்குப் போயிட்டு வரட்டும்…” என்று சொன்ன போதும் கூட அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்.

அப்போது தான் அவன் வெகுநேரமாகத் தன் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசவில்லை என்பதை உணர்ந்தாள் துர்கா.

‘ஏன்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

‘எவ்வளவு நேரமாக அப்படி இருக்கிறான். இரவு கூட முகம் பார்த்துப் பேசினான், சிரித்தான். அப்படியிருக்க, இப்போது என்ன வந்துவிட்டது?’ என்று நினைத்தாள்.

அவன் அப்படி இருக்கக் காரணமே அவள் தான் என்று அறியவில்லை.

நித்திலன் குழந்தையை வைத்திருக்கும் நேரமெல்லாம் அவள் வந்து தூக்கிக் கொள்வதும், அவன் பாலையும், உணவையும் கொடுக்க ஆர்வம் காட்டிய போது அவனிடம் கொடுக்காததும் அவனைக் காயப்படுத்தியிருந்தது.

அதுவும், தன்னிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி கொடுக்காமல், அவனைத் தாண்டி சென்று அவள் தன் தந்தையிடம் கொடுத்தது அவனை அடி வாங்கியது போல் உணர வைத்தது.

அதனால்தான் அவன் அப்படி இருக்கிறான் என்று துர்காவிற்குப் புரியவில்லை.

அவளும் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. இதற்கு முன் அவளின் பழக்கம் எப்படியோ அப்படியே நடந்து கொண்டாள்.

குழந்தைக்குப் பால் கொடுக்கவும், உணவு ஊட்டவும் அவனை வேலை வாங்க வேண்டாமே என்ற எண்ணம் தான் அவளுக்கே தவிர, அவனைக் குழந்தையிடமிருந்து ஒதுக்கி வைக்கும் எண்ணமில்லை.

ஆனால் அவள் தன்னைக் குழந்தையிடமிருந்து ஒதுங்கி இருக்க வைக்க நினைக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டான்.

அதனால் தான் அந்த வாரம் முழுவதும் விடுப்பு எடுத்திருந்தும் நாளையே வேலைக்குச் செல்வதாகச் சொன்னான்.

குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க ஆசை கொண்டே, விடுமுறை எடுத்திருந்தான்.

ஆனால் துர்கா தன்னைக் குழந்தையிடமிருந்து ஒதுக்கி வைக்க நினைக்கும் போது தான் விடுமுறை எடுத்து இன்னும் மனம் வலிக்கவா என்று எண்ணிக் கொண்டவன் நாளையே வேலைக்குப் போக முடிவு எடுத்துவிட்டான்.

இதற்கு முன் வேலைக்குச் சென்று கொண்டிருந்த துர்கா, இப்போது வீட்டில் இருக்கவும், குழந்தையுடனே அன்று முழுவதும் இருந்தாள்.

நித்திலனிடம் குழந்தை சென்றாலும், அடுத்து அவளாக விளையாட ஆசை கொண்டு அவனிடமே எந்த நேரமும் இருக்கவில்லை. வீட்டில் நான்கு பேர் இருக்கவும் அவளுக்குக் கொண்டாட்டமாகி நான்கு பேரிடமும் மாறி மாறி இருந்தாள்.

அதனால் குழந்தை தன்னிடம் அதிக நேரம் இருக்கவில்லை என்று இன்னும் தான் சோர்ந்து போனான் நித்திலன்.

சிறு குழந்தைகள் அப்படித்தான் இருக்கும் என்பது கூட அவனுக்குப் புரியவில்லை.

அதனால் தேவையில்லாமல் தன்னைத்தானே வருத்திக் கொண்டான்.

அன்று இரவு படுக்கையில் வருணா சரியாகத் தூங்காமல் லேசாகச் சிணுங்கி கொண்டே இருக்க, “நான் கொஞ்ச நேரம் பார்த்துக்கட்டுமா?” என்று துர்காவிடம் கேட்டான்.

“இல்ல, நீங்க தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்…” என்று துர்கா சொன்னதும் பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அறைக்கு வெளியே சென்றுவிட்டான் நித்திலன்.

‘என்ன, எதுக்கு இவ்வளவு வேகமாகப் போறாங்க?’ என்று புரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் துர்கா.

அவன் கோபத்துடன் செல்கிறான் என்று கூட அவள் உணரவில்லை.

திருமணம் முடிந்த அடுத்த நாளே அவளின் கணவன் ஒரு வித மனவுளைச்சலுக்கு உள்ளாகிவிட்டான் என்பதை அறியாமல் போனாள் துர்கா.