2 – மின்னல் பூவே!

அத்தியாயம் – 2

“என்ன உத்ரா, இன்னைக்கு என்னென்ன லிஸ்ட் வச்சுருக்க?” என்று மதிய உணவைத் தயார் செய்து டப்பாவில் போட்டு மூடி தன் கைபையில் வைத்தபடியே கேட்டார் உத்ராவின் அன்னை அஜந்தா.

“என்ன? என்ன லிஸ்ட்?” இடுப்பில் கைவைத்து முறைத்தபடி கேட்ட மகளின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல்,

“இன்னைக்கு நீ போட போற சண்டையோட லிஸ்ட் தான். நேத்து உங்க காலேஜ்ல ஒரு பையனை அடிச்சதில் நேத்து கணக்கு முடிஞ்சது. இன்னைக்கு அது போல ஒரு கணக்கு வரணுமே? ஏற்கனவே இன்னைக்கு யாரை அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா? இல்லை இனிதான் லிஸ்ட் எடுக்கணுமா?” என்று கிண்டலாகக் கேட்டார்.

“ஏன்மா, நீங்க கணக்கு டீச்சருங்கிறதை நான் என்னென்ன பண்ணினேன்னு தெரிஞ்சிக்கிறதில் தான் காட்டணுமா? போங்கம்மா… போய் உங்ககிட்ட படிக்க வர்ற பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்க…” அலட்டலாகச் சொன்னவள் கல்லூரிக்குக் கிளம்பும் வேலையைத் தொடர்ந்தாள்.

“ஏய், சும்மா சொல்லுடி! நீ சொல்ற கதையெல்லாம் சுவாரசியமா இருக்கும். லிஸ்ட் வச்சிருந்தால் ஒரு ஹிண்ட் கொடு. ஈவ்னிங் வந்ததும் டீடைலா சொல்லு…” என்று ஆர்வமாகக் கேட்டவரைப் பார்த்து, தன் தலையில் லேசாக அடித்துக் கொண்டாள் உத்ரா.

“ஏன்டி, எவ்வளவு ஆசையா கேட்கிறேன். பதில் சொல்லாம தலையில் அடிச்சுக்கிற?”

“பொறுப்பான அம்மா மாதிரி பேசுங்கமா. பொண்ணு சண்டைப் போட்டு வந்தால் ஏன் இப்படி அடங்காப்பிடாரியா சுத்துறனு திட்டாம… தினமும் ஆர்வமா கதை கேட்குற உங்களை எல்லாம் என்ன செய்றது?”

“திட்டணும்? நானு? உன்னைய? ஏதாவது நடக்குற கதையைப் பேசுடி. உன்னைத் திட்ட தான் உங்க அப்பா விட்டுருவாரா? இல்ல நீ தான் நான் சொல்றதை கேட்டு அடக்க ஒடுக்கமா இருக்கப் போறியா? இரண்டுமே நடக்காதுன்னு தெரிஞ்சு தானே நானும் உங்க வழிக்கே வந்துட்டேன்…” என்று சடைப்பாகச் சொன்னவரை பார்த்து சிரித்தாள் உத்ரா.

பதிலுக்கு அஜந்தாவும் சிரித்தாலும் அவரின் முகத்தில் சிறிது கவலையும் வந்து போனது.

“என்னம்மா?”

“நீ செய்றது எல்லாம் நியாயமான விஷயம் தான். ஆனா எதுக்கு எடுத்தாலும் கை நீட்டுவதை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோ உத்ரா…” என்றார்.

அதற்கு அவள் பதில் சொல்லும் முன், “என்னமா, உன் அம்மா என்ன சொல்றா?” என்று கேட்டபடி தன் முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டே அங்கே வந்தார் மேஜர் வீரபத்ரன்.

உத்ரா பற்றிய பேச்சும் அப்படியே திசை மாறியது.

“வந்துட்டாரு… முறுக்கு மீசை முனியாண்டி…” என்று கேலியாக உதட்டைச் சுழித்தார் அஜந்தா.

அவர் அப்படிச் சொன்னதும் இரண்டு கையாளும் இரண்டு பக்கமும் மீசையை இழுத்து முறுக்கிக் விட்டுக் கண்ணை விரித்து மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

“இப்படிப் பார்த்தா நாங்க பயந்துடுவோமா? நீங்க பயமுறுத்த ஏதாவது பச்சைப்பிள்ளை ரோட்டில் போகுதான்னு போய்ப் பாருங்க. அதுகூடப் பயப்படுமான்னு தெரியல. உங்க மீசை வைத்து விளையாடலாம் வான்னு கூப்பிட்டாலும் கூப்பிடும்…” என்று மேலும் கேலி செய்து சிரித்தார்.

அவருடன் சேர்ந்து உத்ராவும் சிரிக்க ஆரம்பித்தாள்.

மனைவியும், மகளும் கேலி செய்து சிரித்ததைக் கண்டு “நான் ஒருபக்க மீசையை முறுக்கிட்டு நின்னாலே என் முன்னாடி நிக்கிற என் ட்ரைனர்ஸ் நடுங்குவாங்க. அப்பேர்பட்ட என்னைப் பார்த்து நான் இரண்டு பக்கமும் மீசையை முறுக்கி விட்ட பிறகும் சிரிக்கிறீங்க… ஹ்ம்ம்ம்!” என்று கண்கள் சிவக்க கர்ஜனையுடன் கேட்டார்.

அவரின் கர்ஜனையைக் கணக்கில் எடுக்காமல் இன்னும் ஒரு கேலி சிரிப்பை உதிர்த்து விட்டு “ஹலோ, முறுக்கு மீசை முனியாண்டி… நீங்க மீசையை முறுக்கியதும் பயந்து நடுங்க நான் ஒன்னும் உங்க ட்ரைனர்ஸ் இல்லை உங்க பொண்டாட்டி…” என்று அஜந்தாவும்,

“நான் உங்க ஒரே செல்ல பொண்ணு…” என்று உத்ராவும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தார்கள்.

“அதனால நீங்க எங்களை மிரட்டினாலும் இப்படித்தான் சிரிப்போம்…” என்றார் அஜந்தா.

“க்கும்… க்கும்…” என்று மனைவியின் பேச்சைக் கேட்டு செரும்பியவர், “என் மனைவியும், மகளும் இப்படித்தான் தைரியமா இருக்கணும். கீப்பிடப்!” என்று அவர்களைப் பாராட்டுவது போல, அவர்கள் தன்னைக் கேலி செய்து காலை வாரியதை மறைத்து தன் கொடியை நிலைநாட்ட முயன்றார்.

அது புரிந்ததும் “அம்மா, இதைத்தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டலைன்னு சொல்றதோ?” என்று தந்தையைக் கேலியாகப் பார்த்துக்கொண்டே அன்னையிடம் கேள்வியைக் கேட்டாள்.

“ஆமா உத்ரா. ஆமாவே ஆமாம்…” என்று பெரிதாகத் தலையாட்டி மகளுக்கு ஒத்து ஊதினார் அஜந்தா.

“இது சரியில்லை மகளே… சரியே இல்லை… நீ இந்த அப்பாவோட செல்லப் பொண்ணுன்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்படி அந்தர் பல்டி அடித்து அம்மா பிள்ளையா ஆகக்கூடாது…” என்று பொய்யாக மிரட்டினார் வீரபத்ரன்.

“அதெல்லாம் உங்களைக் கேலி பண்ணும் போது மட்டும் நான் அம்மா பிள்ளையாக மாறிக்கலாம். தப்பே இல்லைபா…” என்று தந்தைக்குப் பழிப்புக் காட்டினாள்.

“ச்சே… ச்சே… இந்த வீட்டில் பொம்பளைங்க ராஜ்ஜியம் அதிகம் ஆகிருச்சு. நான் எனக்கு வரப் போற மருமகன் கூடக் கூட்டணி போட்டு ஆம்பளைங்க ராஜ்ஜியம் நடத்த போறேன்…” என்று போர்க்கொடித் தூக்கினார்.

“நோ…நோ…! எனக்கு வரப் போறவன் என் பக்கம் நின்னு எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவான்…” என்று தானும் போர்க்கொடித் தூக்கினாள் உத்ரா.

“இன்னும் வராத மருமகனுக்குச் சண்டை போட்டது போதும். போங்க… போங்க… போய்ப் பொழப்ப பாருங்க…” என்று இருவரையும் ஒருசேர விரட்டினார் அஜந்தா.

“டீச்சரம்மாவுக்கு வேலைக்கு டைம் ஆகிடுச்சுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களாம். என்னப்பா?” என்று தந்தையுடன் சேர்ந்து அன்னையைக் கலாய்க்க கூட்டணி அமைக்க ரெடியானாள் உத்ரா.

“அம்மா, மகளே! உன் அப்பனுக்குப் பசிக்குதும்மா. கிரவுண்ட்ல போய் எக்ஸஸைஸ் பண்ணிட்டு இப்ப தான் வர்றேன். வயித்துக்கு ஏதாவது போட்டாதான் நான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும். என் சாப்பாட்டுக்கே உலையை வச்சுடாதே…” என்று அலறி மகளின் கூட்டணியில் சிக்காமல் துள்ளி குதித்து வெளியே வர எத்தனித்தார்.

அவரின் பேச்சைக் கேட்டு அஜந்தாவிற்குச் சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டே கண்ணில் முறைப்பை தேக்கி “அது! அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று கெத்தாகச் சொன்னார்.

“உன்மேல பயம் எல்லாம் ரொம்ப இருக்குமா எனக்கு. அதே பயத்தோடே சாப்பிட வர்றேன். போ… போய்ச் சாப்பாடு எடுத்து வை…” என்று மென்மையாகச் சொன்னார் வீரபத்ரன்.

மனைவி சமையலறைக்குள் செல்லவும், மகளின் அருகில் வந்தவர், “நாம சாப்பிட்டு தெம்பா அம்மாவைக் கலாய்க்க கூட்டணி போட்டுக்குவோம் உத்ரா குட்டி…” என்று மெல்லிய குரலில் ரகசிய கூட்டணி போட்டார்.

“சூப்பர் பா…” என்றவள் தந்தைக்கு ஹைஃபை கொடுத்தாள்.

அதன் பிறகு அமைதியாகச் சாப்பிட்டு, பின்பு வெற்றிகரமாக அஜந்தாவைச் சிறிது கலாட்டாவும் செய்து விட்டு அவரவர் அலுவலை பார்க்க கிளம்பினார்கள்.

உத்ராவின் தந்தை மேஜர் வீரபத்ரன் இன்னும் ராணுவப் பணியில் இருந்தார். ஒரு மாத விடுமுறையில் சென்னை வந்திருந்தார். அந்த ஒரு மாதமும் வீடு கலகலப்பாக இருக்கும். அவர் கிளம்பிச் சென்ற பிறகு தாயும், மகளுமாக இயந்திரகதியில் நாட்களை ஓட்டுவார்கள்.

வழக்கமாக வீரபத்ரன் வரும் ஒரு மாதமும் விடுமுறை எடுத்துக் கொள்வதுதான் பள்ளியில் கணித ஆசிரியையாக இருக்கும் அஜந்தாவின் வழக்கம்.

ஆனால் இந்த முறை தேர்வு நேரம் என்பதால் அவரால் விடுப்பு எடுக்க முடியாமல் போக, வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். இன்னும் ஒரு நாள் மட்டும் பரீட்சை இருக்க, அதுவரை சமாளித்து விட்டு அதன் பிறகு கணவர் கிளம்பும் வரை விடுமுறை எடுக்க முடிவு செய்திருந்தார்.

கணிணி பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வருடத்தில் இருந்த உத்ராவிற்குப் பகல் இரண்டு மணி வரைதான் கல்லூரி என்பதால் அதன்பிறகு இருக்கும் மீதி நேரங்களில் தந்தையுடன் செலவழித்து விட்டுத் தந்தை கிளம்பும் நாட்கள் நெருங்கி வரும்போது இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்வது அவளின் வழக்கம்.

அதற்கு மேல் விடுமுறை எடுக்க வீரபத்ரனும் அனுமதிப்பதில்லை.

விலகியே இருந்தாலும் உத்ராவிற்கு அவளின் தந்தையுடன் தான் அதிகப் பற்று இருந்தது.

அவரிடம் எதையும் தயங்காமல் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உரிமையுடன் இருப்பாள்.

அன்னையிடமும் அதிகப் பற்று இருந்தாலும் முதலில் தந்தையிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிய பிறகே அன்னைக்குத் தெரியவரும்.

சிறுவயதிலிருந்தே அவளுக்கு அந்தப் பழக்கம் தான் என்பதால் அஜந்தாவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

மகளைத் தைரியம் உள்ளவளாக வளர்க்க வேண்டும் என்று கணவர் சொன்னதற்கு அவரும் கட்டுப்பட்டு மகளுக்குத் தேவையான வகுப்புகளில் எல்லாம் அவளைச் சேர்த்து விட்டவரே அஜந்தா தான்.

வளர, வளர மகள் சில வம்புகளையும் இழுத்துக்கொண்டு வர, அதன் பிறகுதான் அஜந்தாவிற்குச் சிறுபயம் மனதில் எட்டிப்பார்த்தது.

அதை விடுமுறையில் ஒரு முறை கணவன் வந்திருந்தபோது சொல்லி கவலைப்பட, உத்ராவை அழைத்து விசாரித்தார் வீரபத்ரன்.

மகள் தான் எது எதற்காகச் சண்டை போட்டேன் என்று காரணத்தை விலாவாரியாகத் தந்தைக்கு எடுத்துச் சொன்னாள்‌. அவள் சொன்ன காரணம் அனைத்துமே நியாயம் உள்ளதாக இருந்தது.

அதுவும் அவளாக எந்தச் சண்டைக்கும் சென்றதில்லை. அதே நேரம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது என்றால் நியாயம் கேட்க ஆரம்பித்து அது சண்டையாக வலுத்ததையும் சொன்னாள்.

அவள் சொன்னதெல்லாம் முக்கியக் காரணங்களாக இருக்கச் ‘சரிம்மா, உன் விருப்பம் போலச் செய். ஆனால் உன் பாதுகாப்பிலும் அக்கறை வைத்துக்கொள்…’ என்று வீரபத்ரனே அவள் பக்கம் நின்றார்.

அதை மனைவியிடமும் எடுத்துச் சொல்லி ‘நம்ம பொண்ணால யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. அவள் செய்வது எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இனியும் சரியாகத்தான் செய்வாள். கவலைப்படாதே!’ என்று மனைவியைத் தேற்றி விட்டுச் சென்றிருந்தார்.

அதன்பிறகு உத்ராவே அன்னையிடம் தான் ஏதாவது செய்தால் அன்றைக்கே வந்து என்ன காரணத்திற்காக அதைச் செய்தேன் என்று சொல்லிவிடுவாள்.

அதுவே இப்பொழுது ஒரு வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. அதை வைத்துதான் ‘இன்றைக்கு என்ன லிஸ்ட் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டு அவளைக் கேலி செய்தார் அஜந்தா.

அன்னை பட்டியல் கேட்டதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டே மலர்ந்த முகத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தாள்.

‘இந்த அம்மாவுக்கு வர வரச் சேட்டை அதிகமாகிடுச்சு. நான் என்ன தினமும் சண்டை போடணும்னு வேண்டுதலா வச்சிருக்கேன்? அம்மா இப்படிக் கேட்டதுக்காகவே இன்னைக்கு எந்த வம்பும் இழுக்காமல் வீட்டுக்குப் போகணும்’ என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள்.

ஆனால் அவள் முடிவு செய்த பிறகு தான் அவளைத் தேடியே வம்பு வந்து கொண்டிருந்தது.

அவள் வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்த போது, அவளின் எதிரே வந்தான் முகில்வண்ணன். அவளைப் பார்த்ததும், அவள் யாரென்றே தெரியாதவள் போல விலகிப் போனான்.

அதே கணிணி பாடப்பிரிவில் முதுகலை இறுதி வருடத்தில் இருந்தான் முகில்வண்ணன்.

அவன் உத்ராவைப் பார்க்க நேர்ந்த நேரமெல்லாம் யாருடனாவது சண்டைப் போட்ட வண்ணம் தான் இருந்திருக்கிறாள் என்பதால் ஏனோ அவளைக் கண்டாலே அவனுக்குப் பிடிப்பது இல்லை.

அதோடு இப்போது குரு விஷயத்தில் சண்டை வந்த பிறகு, இன்னும் அவளைப் பார்த்தாலே பல அடிகள் அவளை விட்டு விலகிப் போனான்.

முகில்வண்ணன் அமைதியான குணமுள்ளவன். வழிய சண்டை வந்தாலும் அதை விட்டு விலகத்தான் நினைப்பானே தவிர, அதில் தலையிட்டு மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டான்.

அப்படிப்பட்டவன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த வகுப்பு தோழனும், நண்பனுமான குருவை, உத்ரா திடீரென்று வந்து அடித்ததாலேயே குருவுடன் நேற்று துணை நின்றான்.

தொடர்ந்து உத்ரா பேசியதிலேயே தவறு நண்பன் பக்கம் தான் என்று தெரிந்து விட்டாலும், பாதியில் நண்பனை விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் தான் அங்கேயே நின்றான்.

ஆனால் அதற்காக உத்ரா தன்னை ஆண்பிள்ளையா என்று கேட்டுப் பேசியதை ஏனோ அவனால் பொறுக்கவே முடியவில்லை.

அப்படியிருந்தும் சண்டை மேலும் வழுக்காமல் இருக்கவே அவளிடம் நண்பன் சார்பாக மன்னிப்பு கேட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

ஆனால் அதன் பிறகு குருவுடனான அவனின் நட்பு முறிந்து விட்டது என்றே சொல்லலாம்.

உத்ராவிற்கு ஆதரவாகப் பேசி தன்னை அடித்ததற்காக, நண்பனை விரோதியைப் பார்ப்பது போல் முறைத்துக் கொண்டு திரிந்தான் குரு.

அவனின் கோபம் ஒன்றும் முகில்வண்ணனை பெரிதாகப் பாதித்து விடவில்லை.

பாதிக்கும் அளவிற்கு மிக மிக நெருங்கிய நட்பும் இல்லை.

உடன்படிக்கும் வகுப்பு தோழன் என்பதாலேயே இருவருக்கும் இடையே சிறு நட்பு இருந்தது. குருவின் முரட்டுக் குணத்திற்காகவே நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொள்ள முகில் விரும்பியது இல்லை.

அதனாலேயே குருவின் வெறுப்பு அவனை அதிகம் பாதிக்கவில்லை.

‘போனால் போகிறான்’ என்கிற எண்ணம் தான்.

ஆனால் குருவும் அப்படி நினைக்க வேண்டும் அல்லவா?

வகுப்புத் தோழன் தனக்கு ஆதரவு தெரிவிக்காமல் எப்படி ஒரு ஜூனியர் மாணவிக்கு ஆதரவாகப் பேசலாம்? என்ற எண்ணத்தோடு அவன் தன்னை அடித்த கோபமும் சேர்ந்து கொள்ள முகிலின் மீதும் வன்மம் வளர்த்துக் கொண்டான் குரு.

இருவரையும் பலி வாங்க நல்ல சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருந்தான்.

இப்போது தன்னைப் பார்த்தும் பார்க்காமல் முகம் திருப்பிக் கொண்டு போன முகில்வண்ணனை தொடர்ந்தது உத்ராவின் பார்வை.

அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கும் புரியத்தான் செய்தது.

ஆனாலும் அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அவனுக்கு அமைதியான குணம் என்றால், தன் குணம் இது தான் என்ற உறுதியுடன் இருந்தாள்.

ஆனால் முகில்வண்ணனிற்கோ உத்ராவைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றுவது ஒன்றே ஒன்று தான்.

‘எப்படி இவளால் சளைக்காமல் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்க முடிகிறது?’ என்பதே.

அவள் என்னவோ அதே வேலையாக மட்டுமே இருப்பதாக அவனுக்கு ஒரு நினைப்பு.

அவன் அப்படி நினைக்கும் படி சூழ்நிலையும் அமைந்து கொண்டே இருந்தது.

அன்றே இன்னொரு சூழ்நிலையும் அமைய, உத்ராவை ‘திமிர்ப்பிடித்தவள்!’ என்று உறுதியே செய்து கொண்டான் முகில்வண்ணன்.