2 – லாக் டவுன்

லாக் டவுன்
ஆர்த்தி ரவி


அத்தியாயம் 02:

ஆறு மாதங்களாக ஆன்சைட்டில் இருந்த வினித் திரும்பி வந்த அந்த நாளில் தான் வினித்தும் சைந்தவியும் முதல் முதலாகப் பார்த்துக் கொண்டது.

அன்று அதிகாலையிலே லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினான் வினித். வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து அடித்துப் போட்டதைப் போலத் தூங்கினான்.

படுக்கையில் விழுகும் முன்னர் ஞாபகமாக வைத்த அலாரம், சரியாக ஒலித்து அவனை எழுப்பி விட்டது. ஆனால், ஜெட் லாக் (நேர வித்தியாசத்தால் ஏற்படும் பகல் இரவு குழப்பம் தரும் உடல் சோர்வு) அவனை நிரம்பப் படுத்தியது.

சாதாரணமாகவே சில மணிநேரங்களில் இந்த மாதிரியான பயணக் களைப்பு சமன்படாது. இதில் வினித், ஆன்சைட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேலேயே காலம் நேரம் பாராமல், தூக்கத்தைத் துறந்து வேலையிலே மூழ்கியிருந்தான்.

அப்படித் தூக்கத்தைத் துறந்தது, பிறகு பிரயாண அலைச்சல் எல்லாம் சேர்ந்து கொண்டு அவனை மேலும் கண் மூடி அலுப்பாற்றச் சொன்னது.

ஆனால், தொடர்ந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வினித்திற்கு முடியாமல் போனது. தூக்கத்தைத் தொடர முடியாமல் அவனுடைய கடமை அழைத்தது.

அவன் அன்றே அலுவலகத்திற்குப் போக வேண்டியது அவசியமாயிருந்தது. மேலிடத்திற்குத் தேவையான அறிக்கைகளை உடனே சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான்.

மற்றவைகளைக் கூடத் தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ சாதித்துக் கொள்ளலாம். முக்கியமான அடுத்தக் கட்டத் திட்டமிடலுக்குத் தேவையான அறிக்கைகள் இவன் வசமிருந்தன. அவற்றை நேரில் சென்று உரியவர்களிடம் கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்திற்கு அதன் பொருட்டு ஏற்பாடாகியிருக்கும் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். அச்சந்திப்பைத் தள்ளிப் போட முடியாது.

ஆன்சைட் ஆஃப் ஷோர் நிலை மாற்றம் கால மாற்றம் எல்லாம் சில நேரங்களில் சங்கடங்களைத் தருபவை. ஆனாலும் அப்படிப் பறப்பவர்கள் பழகிவிடுகின்றனர். வினித் பல முறை ஆன் சைட் போய் வருபவன்.

ஒரு வழியாக எழுந்திருந்தான் வினித். கண்கள் எரிந்தன. பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான். அவனுடைய உடல் சோர்வை ஒதுக்கினான். கவனமெல்லாம் அலுவலகத்தை அடைவதிலே இருந்தது. அவன் தயாராகி அலுவலகத்தைச் சென்றடைந்த போது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது.

எப்போதும் போலவே பளிச்சென்று அலுவலக உடையில் வந்திருந்தான். நன்றாக உடுத்திக் கொண்டு வந்திருந்தாலும் அவனிடம் சோர்வு தென்பட்டது. கண்கள் சிவந்து; இமைகள் வீங்கி; முகம் உப்பலாகக் காணப்பட்டது.

வண்டியை நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு, தன்னுடைய அலுவலகக் கட்டிடத்தை நோக்கிச் சென்றான். சில மாதங்கள் கழிந்து அங்கு வருவதால் வித்தியாசமாய் உணர்ந்தான். சுற்றுப்புறத்தைப் புன்னகையுடனே உள்வாங்கிக் கொண்டு நடந்தான்.

கண்களுக்குக் குளிர்ச்சியாய் அந்தப் பசுமை; சுவரோர நீர்வீழ்ச்சிகளின் அடுக்குகளிலிருந்து தெரித்த நீரின் தீண்டல் என்று சூழ்நிலை அவனை வரவேற்கும் விதமாய் உணரச் செய்தது. கையிலிருந்த அறிக்கைகள் அடங்கிய ஃபைலை ஆட்டியபடி முன்னேறினான்.

ஒரு திருப்பத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பெண்ணிற்கு வழிவிட்டு சற்று நகர்ந்தவனின் கையிலிருந்த ஃபைல், அலங்கார வளைவில் தட்டிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் சிதறிய காகிதங்களைக் கண்டு அவனுக்குப் பதற்றம் வந்தது.

அவசரமாகக் குனிந்து அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினான். ஒன்றிரண்டு காகிதங்கள் பறந்து தூரம் செல்ல, எதிரே வந்த அப்பெண் விரைவாக நகர்ந்து அவற்றைப் பற்றி எடுத்து வந்தாள். வினித்திற்கு அவளின் செய்கை பேருதவி. சரியான நேரத்தில் அறிக்கைகளைப் பறக்கவிடாமல் தடுத்தவளுக்கு நன்றி சொன்னான்.

“தாங்க் யூ வெரி மச்! ரொம்ப முக்கியமான ரிபோர்ட்ஸ். நல்ல சமயத்தில் உதவியிருக்கீங்க மிஸ்…”

நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். பதிலுக்கு எதிரே இருந்தவள் புன்னகைக்கவும் இல்லை. தன்னுடைய பெயரை அவன் நிறுத்திய இடத்தில் பொருத்தவும் இல்லை. வினித்தின் சில மணித்துளிகளின் பதற்றம் அவளை அண்டியதாகத் தெரியவில்லை.

வினித்தும் அவளுடைய பதிலையோ பிரதிபலிப்பையோ எதிர்பார்க்கும் நிலையிலில்லை. முக்கியமான அறிக்கைகளை வேறு எந்தச் சேதாரமும் இல்லாமல் கைகளில் தந்தவளின் மீது அவனுக்கு மிகுந்த நன்றிவுணர்வு வந்திருந்தது.

அச்சந்தோசத்தில் எட்டி அவளுடைய கைகளைப் பற்றி, “ஐ’ம் வினித்! தாங்க்ஸ் அகெயின்!” சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவனுக்கு மீட்டிங் தொடங்குவதற்கு முன்னர் அலுவலகத்திற்குள்ளே இருக்க வேண்டிய அவசரம். அதனால் உடனே அவளைக் கடந்துவிட்டான்.

அவளுடைய பெயர் சைந்தவி. அதே நேரத்தில் குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்களாவது உடற்பயிற்சி மற்றும் தூய்மையான வெளிக்காற்றின் சுவாசத்திற்காக அலுவலக வளாகத்தைச் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவள்.

இன்றும் அப்படி வந்த போது வினித்திற்கு உதவினாள். வினித் அவளுடைய கவனத்தில் பட்டான். கருத்தில் பதியவில்லை. அவள் அப்படித்தான். நட்புக்கரத்தை எளிதில் நீட்டிவிட மாட்டாள். சுருக்கமான நட்பு வட்டம். பெரும்பாலும் அவளே அவளுடைய உலகம். தனியாகத் தான் காணப்படுவாள்.

அவளுடன் பணி புரியும் சிலர் இவளை நன்றாக அறிந்தவர்கள். அளவான அளவிலேயே பழகினர். அவள் கூப்பிட்டால் ஒன்றிரண்டு பேர் இந்த மதிய நேர வாக்கிங்கிற்கு வரக் கூடியவர்களே. தனக்குப் பிடித்த நேரத்தில் தன்னுடைய சௌகரியத்திற்கு நடைப்பயிற்சியை மேற்கொள்பவள் அதைத் தாண்டி யோசிப்பதில்லை.

பேசுவாள், அவளுக்குத் தோன்றும் போது. புன்னகைப்பாள், அவசியத்திற்கு. கொண்டாட்டம்; அரட்டை; கலகலப்பு; சிரிப்பு… சைந்தவி தூரம் பண்ணிக் கொண்டாளா? இல்லை, இவையெல்லாம் அவளைக் கண்டு தயங்கியதோ?

வினித், தானே அவளுடைய கையைப் பிடித்துக் குலுக்கி, அறிமுகம் செய்து கொண்ட போதும், அவள் அவனுடன் பேசவில்லை. சாதாரணப் புன்னகை கூடச் சைந்தவியின் உதடுகளில் தோன்றவில்லை. நட்புணர்வு என்பது அவளுக்கு வரவில்லை.

வினித் இருந்த அவசரத்திலே இச்செயல் அவனைப் பாதிக்கவில்லை. ஆனால், அவனைக் கடந்து சில அடிகளை எடுத்து வைத்ததும் சைந்தவி நினைத்தாள், ‘நான் ஏன் இப்படி?’. அவளுக்கே அவளுடைய நடவடிக்கைகள் சில சமயங்களிலே புதிராய்!

தன்னுடன் பேசியவனைக் கடந்து அவளுடைய மூளை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

அப்போது தட் என்று ஓர் அதிர்வைத் தந்தபடி சத்தம் கேட்டது. மெதுவாகக் கேட்டாலும், யாரோ எதுவோ விழுந்துவிட்டதை மிகத் துல்லியமாக அந்த அதிர்வு சைந்தவிக்கு உணர்த்தியது.

உடனே திரும்பிப் பார்த்தாள் சைந்தவி. சற்று முன்னர்த் தன்னிடம் பேசியவன் தரையில் கிடந்ததைக் கண்டாள். ஃபைல் கைகளில் கெட்டியாகப் பற்றப்பட்டிருந்தது. வெளியே எட்டிப் பார்த்த காகிதங்கள் காற்றில் படபடத்தன.

அவளுடைய உள்ளுணர்வு அவளிடம் சொன்னது, ‘என்னாச்சுன்னு போயி பாரு சைந்து’.

வேகமாகச் சைந்தவி அவனருகில் சென்றாள். விழுந்தது தலைக்குப்புற என்றாலும் அவனுடைய முகத்தின் ஒரு பக்கம் மட்டும் தரையிலிருந்தது. பாதி முகம் அவளுடைய கண் பார்வையில் தெரிய, சலனமில்லாமல் விழுந்து கிடந்தான்.

சைந்தவி, ஃபைலில் ஒரு கையை வைத்தபடி அவனைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள்.

“மயக்கமாகிட்டானா? ஹலோ ஹலோ…”

அவளையும் மீறி, அவளுடைய ஹலோ சற்று உரக்கவே வந்தது. இருந்தும் அவனிடம் அசைவே இருக்கவில்லை. அவள் உதவிக்காகச் சுற்றும் முற்றும் பார்வையால் அலசினாள். அந்த நேரம் யாரும் அருகே தென்படவில்லை.

“என்ன பேர் சொன்னான்? வி… வினோத்தா? வினோத் வினோத்!”

அவளுக்கு அவன் அறிமுகப்படுத்திய பெயர் நினைவிலில்லை. ஆகையால், வினித் வினோத் ஆனான்.

சில வினாடிகள் சென்றிருக்க, அவனுக்கு மூச்சிருக்கிறதா என்று ஆராய முகம் அருகே குனிந்தாள். மூச்சு வந்தது. அத்துடன் வாசனை ஒன்றும் வந்தது. அவனுடைய பெர்ஃப்யூமில் மெல்லிய வகையில் (low note) வெளிப்பட்ட சிகார் வாசத்தைத் துல்லியமாய் உணர்ந்தவள் மூக்கைச் சுறுக்கிக்கொண்டே சொன்னாள்.

“குடிச்சிட்டு ஆஃபீஸ் வந்திருக்கானா!”

‘சிகார் எப்படித் தண்ணி அடிச்சதாச்சோ!’ ஆண்டவனுக்கே வெளிச்சம். மாஸ்குலின் தன்மையை ஆழமாய் எடுத்துக்காட்டிய பெர்ஃப்யூம்மில் மிதமான வகையில் (medium note) வெளிப்பட்ட மற்ற வாசனைகள் யாவையும் அவளுடைய நாசி உதாசீனப்படுத்தியது போல.

“என்ன கூத்தோ போ. இப்ப உன்னை எப்படி எழுப்ப? தண்ணீ…”

தண்ணீர் பைப்பைத் தேடி அலைந்தன கண்கள். ஞாபகம் வந்தவளாகச் சட்டெனத் தலையில் அடித்துக் கொண்டாள்.

“மடியிலேயே வாட்டர் பாட்டிலை வச்சிட்டு எங்கே தண்ணீன்னு தேடிட்டிருக்கேன். களஞ்சியம்!”

போற்றிக் கொண்டாள் தன்னுடைய மறதியை.

“எச்சி தண்ணியை முகத்தில் தெளிக்கவா? ம்ப்ச்… ஆபத்துக்குப் பாவமில்லைன்னு சொல்வாங்களே…”

முணுமுணுத்துக் கொண்டே இடுப்புப்பட்டியிலிருந்த பாட்டிலை உருவி வினித்தின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவனிடம் பிரதிபலிப்பு ஒன்றுமில்லை. சற்றுத் தயங்கி அடுத்து, கை நிறையத் தண்ணீரை எடுத்து அவனுடைய முகம் முழுவதும் சட்சட்டென வேகமாக அடித்தாள்.

முகம் முற்றிலும் ஈரமாகி தண்ணீர் வழிய, அதற்குப் பலன் கிடைத்தது. அவனிடம் மெல்லிய அசைவு தெரிந்தது.

அதைப் பார்த்ததும் அவனுடைய தோளைத் தட்டி, “வினோத்… வினோத்… கெட் அப்.” என்றாள்.

அவளுடைய குரல் அவனை எட்டியது. விழிக்கத் துடித்தவனால் உடனே முடியவில்லை. ஆனால் யோசித்தான்.

‘வினோத்தா… யாரு? யாரு யாரைக் கூப்பிடுறாங்க…’

புரியாமலேயே கண்களைத் திறந்தான். அவனுடைய முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த சைந்தவிக்கு அந்தக் கண்ணின் சிவப்பு நிறம் தான் முதலில் பட்டது.

வினித்தின் கண்ணைக் கூர்மையாகப் பார்த்தவாறே சைந்தவி சொன்னாள்.

“தண்ணியடிச்சிட்டு ஆஃபீஸ் வந்தா இப்படித் தான்.”

வினித்தை நோக்கிச் சொன்ன வார்த்தைகள் அவனைச் சரியாகச் சென்றடைந்து புலன்களை ஊக்குவிக்க, “வாட்! என்ன சொன்ன இப்போ?” அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து வினவினான்.

“நீ… நீங்க குடிக்கலையா?”

‘தவறாக எண்ணிவிட்டேனா’ நினைத்துக்கொண்டாள்.

“பாகல் (பைத்தியம்)!”

ஏற்கெனவே வேதனையில் இருந்தவன் கடிந்தான். அவன் சொன்ன ஹிந்தி வார்த்தைப் புரிந்தும் சைந்தவியோ சலனமில்லாமல் அவனைப் பார்வையிட, அவனே சொன்னான்.

“ஒன்னுமே குடிக்காம வந்தாலும் மயக்கம் வரும்.”

கண்களை மூடிக்கொண்டான். அவளுடைய பாட்டில் தண்ணீரைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று சைந்தவி நினைக்கும் போது வினித் சொன்னான், “ஜெட் லாக்! ஆன்சைட்ல இருந்து மார்னிங் தான் வந்தேன்.”

சைந்தவி உடனே தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டாள்.

“சாரி!”

“ம்ம்… கையைப் பிடிச்சி ஹெல்ப் பண்ணு… நான் எழுந்திருச்சிக்கிறேன்.”

“இதோ…”

வலது கையை அவனை நோக்கி நீட்டினாள். வினித் ஒரு கையைத் தரையில் ஊன்றி, மறு கையால் அவளைப் பற்றிக்கொண்டு எழுந்தான். அப்போது தான் சைந்தவிக்கு நெற்றியோரத்தில் இருந்த அவனுடைய காயம் கவனத்தில் விழுந்தது.

“ப்ளட் வருது வினோத். உன் நெத்தியிலே காயம் பட்டிருக்கு. அந்தப் பெஞ்சில் உட்கார்ந்துக்கோ. நான் யாரையாவது கூட்டிட்டு வர்றேன்.”

நெற்றியைத் தொட்டுப் பார்த்தவாறே அருகில் தெரிந்த இருக்கையில் அமர்ந்த வினித் சொன்னான்.

“நான் வினித். வினோத் இல்லை. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அவசரமா போகணும். தா… தண்ணி குடிச்சிட்டுப் போறேன்.”

அவளுடைய தண்ணீர் பாட்டிலைச் சுட்டிக் கேட்டுவிட்டு, கைக்குட்டையை உருவி நெற்றிக்காயத்தில் வைத்துக்கொண்டான். தயங்கியபடியே பாட்டிலை நீட்டினாள்.

“இட்ஸ் ஓகே தா” அவளுடைய தயக்கத்தைப் புரிந்தவனாக வாங்கிக் குடித்தான்.

நேரத்தை உணர்ந்தவன், மறுபடியும் அவளுக்கு நன்றி கூறி விடைபெற, “இப்போ பரவாயில்லையா… ஹாஸ்பிட்டல் போக வேண்டாமா?” யோசனையுடன் சைந்தவி கேட்டாள்.

“ஐ’ம் ஓகே… நோ நீட் டு கோ டு தி ஹாஸ்பிட்டல்.”

அந்த நேரத்தில் அருகே அரவம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்க்கையில் அந்தப்பக்கமாகச் சிலர் வந்தனர். அதில் வினித்துடன் வேலை பார்ப்பவர்கள் இரண்டு பேர் இருக்க, வினித்தை அந்தக் கணம் அந்த இடத்தில் எதிர்பாராதவர்கள், அவனைக் கண்டதும், “ஹே வினித் டா!” என்று ஆச்சரியத்துடன் சொல்லிக்கொண்டே அவனை அணுகினர்.

அருகே வந்ததும் அவனுடைய நிலையைப் பார்த்துச் சற்றுப் பதறித் தான் போனார்கள். என்ன நடந்தது என்று வினித் மற்றும் சைந்தவியிடம் கேட்டறிந்து, சைந்தவிக்கு நன்றி சொல்லிவிட்டு, வினித்தைத் தங்களுடனே அழைத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தனர்.

வினித், அங்கிருந்து போகும் முன்னர் அவளுக்குப் புன்னகையுடன் தலையசைப்பைக் கொடுத்துவிட்டே நண்பர்களுடன் சென்றான். இப்போதும் அவளுடைய பெயர் அவனுக்குத் தெரியாமலேயே!

வினித் தன்னுடைய வேலையில் ஒன்றி பிஸியாக, மூன்று வாரங்கள் விரைந்திருந்தன. அப்போது ஒரு மதிய வேளை… புதிய கிளையண்ட் ஒப்பந்தத்தை முன்னிட்டு ஏற்பாடாகியிருந்த லன்ச்சான்னிற்குப் புறப்பட்டு வெளியே வந்த வினித்தின் கண்களில் சைந்தவி விழுந்தாள்.

புன்னகையுடன் அவளை நெருங்கினான்.

“ஹலோ!”

அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தாள் சைந்தவி. அவனை அடையாளம் கண்டு கொண்ட சலனமில்லை அவளிடம். வெறுமனே பார்த்தாள்.

வினித் குழம்பிப் போனான்.

“என்னைத் தெரியலையா? வினித்… அன்னைக்கு மயக்…”

அவளுக்கு அவனை நன்றாகத் தெரிந்தது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அவனே வந்து பேசி, நினைவுப்படுத்திய பின்னர் “ஹலோ” சொன்னாள். வேறு பேசவில்லை. பேசி உரையாடலை வளர்க்கும் எண்ணம் தோன்றாதவளாக நின்றிருந்தாள்.

அவளுடைய முகத்தையே சில வினாடிகள் பார்த்தவன் கேட்டான்.

“இப்பவாச்சும் உன் பெயரைச் சொல்லலாமில்லையா?”

“சைந்தவி” என்றாள்.

“நைஸ் டு மீட் யூ அகெயின் சைந்தவி!” வலது கையை அவளை நோக்கி நீட்டியபடி நின்ற வினித்தின் உதடுகளிலிருந்த புன்னகை, அவளிடம் இல்லை. ஆனால், அவனுடைய கையைப் பற்றிக் குலுக்கி நின்றாள்.

அப்போது வினித் நினைத்தான்.

‘இவளிடம் எதுவோ வித்தியாசமாப்படுது.’

“மீண்டும் சந்திப்போம் சைந்தவி. கொலீக்ஸ் காத்துக்கிட்டிருப்பாங்க. லன்ச்க்குப் போகணும். பை! டேக் கேர்!”

அவன் சொன்ன ‘டேக் கேர்’ அவளிடம் சேர்ந்தது.

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

வினித்தின் அந்த ‘டேக் கேர்’ கொண்டு வந்த இதத்தில், அவன் போனதும் சைந்தவியின் உதடுகளில் மெலிதாய்ப் புன்னகை உதித்தது. அந்தக் கணத்தில் அவளுடைய மனத்தில் தோன்றிய இதம், வெளிப்படையாகவே முகத்தில் வெளிச்சம் பரப்பியது.

அதன் பின்னர் வந்த நாட்களில் வினித்தின் நினைவில் சைந்தவி அவ்வப்போது வந்தாள். தனக்குத் தக்க சமயத்தில் உதவி செய்தவளை அவன் மறக்கவில்லை.

அவளை நினைக்கும் போது ஏனோ அவனுக்குள் சிந்தனை.

‘நாம் அன்றாடம் சந்திக்க நேரிடும் பெண்களைப் போல் இந்தச் சைந்தவி இல்லையோ? இல்லை நான் தான் அப்படிக் கற்பனைப் பண்ணிக்கிறேனா? எது எப்படி இருந்தாலும் இவளை என் நண்பி ஆக்கிக்கணும்.’

அவனுக்கு அவளிடம் நல்லுணர்வு பிறக்க, தன் நட்புக்கரத்தை நீட்டும் வாய்ப்பை எதிர்பார்க்கத் தொடங்கினான்.