2 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 2
தன் கையில் மணிக்கட்டு அருகே மாட்டியிருந்த மூன்றாவது காலான ஊன்றுகோலின் மாட்டியை கழற்றி சுவரின் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு தன் அலுவலக இருக்கையில் அமர்ந்தான் தர்மா.
அவன் அமர்ந்த அடுத்த நிமிடம் அங்கே வந்த இளைஞனைப் பார்த்து லேசாகப் புன்னகை புரிந்து வரவேற்ப்பாகத் தலையசைத்தான்.
“என்ன சிவா கஸ்டமர் கிளம்பிட்டாங்களா…?”
“கிளம்பிட்டாங்கண்ணா… நீங்க இந்த ஸ்கூல் ஆரம்பித்த மறுநாளே உங்களுக்குக் கஸ்டமர் வந்து சேர்ந்தது அதிர்ஷ்டம் தான்ண்ணா…” என்று சிரித்தபடி சொன்னான்.
“உண்மைதான் சிவா. நேற்று இந்த ஸ்கூல் ஆரம்பித்ததுமே நீ வேலையில் சேர்ந்தது கூட எனக்கு அதிர்ஷ்டம் தான். நான் யாரை ட்ரைவிங் சொல்லிக் கொடுக்க டிரைவர் போடலாம்னு யோசித்துக் கொண்டிருக்கும் போது, நீயே வேலை தேடி வந்து இங்க சேர்ந்துகிட்டது எனக்குச் சந்தோசம் சிவா. இன்னைக்கு நல்லபடியா கிளாஸ் ஆரம்பித்து விட்டிருக்க. இன்னைக்கு போல எந்தக் குறையும் இல்லாமல் இனிவரும் நாட்களிலும் உன் வேலையை நீ சரியா செய்து கொடுக்கணும்…”
“இந்த வேலை எனக்கு உடனே கிடைச்சது கூட என்னோட அதிர்ஷ்டம் தான்ணா. காலேஜ் படிச்சுக்கிட்டே வேலை பார்க்க பார்ட் டைம் ஜாப் தேடிக் கொண்டிருக்கும் போது, உங்க ஸ்கூல் வெளியே போட்டுயிருந்த வேலைக்கு ஆள்தேவை போஸ்டர் பார்த்துட்டு வந்து கேட்டேன். என்னோட விவரத்தை எல்லாம் கேட்டுட்டு என்னை நம்பி இந்த வேலையைக் கொடுத்திருக்கீங்க. இது எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் அண்ணா. என் வேலையை நான் கரெக்டா செய்துருவேன்…” என்றான் சிவா.
“ஓகே சிவா… சந்தோசம்! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை என்கிறதால யாராவது நம்ம ஸ்கூல்லை கேள்விப்பட்டு வரலாம். அப்படி வந்தா நான் பார்த்துப் பேசிக்கிறேன். நாளையிலிருந்து கிளாஸ் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தாலும் இருக்கும். அதனால் இன்னைக்கு நீ கிளம்பு. நாளைக்கு வந்தா போதும்…” என்றான்.
“ஓகேண்ணா… போய்ட்டு வர்றேன்…” என்று சிவா கிளம்பவும், தர்மா தான் சிறிது நேரத்திற்கு முன் எடுத்து வந்த பிரதியை எல்லாம் சரி பார்த்து அங்கிருந்த கோப்பில் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் போதே கடையில் பார்த்த பெண்ணின் முகம் மனக் கண்ணில் வந்தது.
‘நல்ல திருத்தமான முகம். களையான பெண். ஆனால்…’ என்று யோசனை ஓடும் போதே… ‘அதை எல்லாம் நீ ஏன் நினைக்கிற? அடங்கு…!’ என்று மனம் அவனை அதட்ட, அதற்கு மேல் வேறு எதையும் சிந்திக்க மறுத்து விட்டான்.
அதற்கு மேல் அவனை வேறு எதுவும் சிந்திக்க விடாமல் அப்பொழுது ஒருவர் வந்து கார் ஓட்டும் பயிற்சிக்குத் தேவையான விவரங்களை விசாரிக்க ஆரம்பித்தார். அவருக்குத் தேவையான தகவலை சொன்னவன் அவர் சேர முடிவு எடுப்பாரா என்று வெளிப்படையாகத் தெரியாத ஆர்வத்துடன் அவரைப் பார்த்தான்.
அவன் சொன்னதை எல்லாம் கிரகித்துக் கொண்டவர் “நீங்க சொன்ன விவரமெல்லாம் எனக்குச் சரி தாங்க தம்பி… ஆனா இன்னும் ஒரே ஒரு விவரம் மட்டும் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
“சொல்லுங்க சார்… என்ன விவரம் வேணும்?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என் பொண்ணுக்காகத் தான் விசாரிக்க வந்தேன் தம்பி. அவளுக்குச் சொல்லிக் கொடுக்க இங்கே வேற யாரும் லேடீஸ் டிரைவர் இருக்காங்களா? அப்படி இருந்தால் நான் நாளைக்கே வந்து கூட அவளைச் சேர்த்து விட்டு விடுவேன்…” என்றவரை தர்மா யோசனையுடன் பார்க்க,
“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. வயசு பொண்ணு…நாம சரியா இருந்தாலும் பார்க்கிற பார்வை எல்லாம் சரியாக இருக்கும்னு சொல்ல முடியாது. அவளுக்குப் பின்னாடி எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்…” என்று மேலும் பேசப் போனவரை, தடுத்து நிறுத்துவது போல் கையைக் காட்டினான்.
“நீங்க சொல்ல வர்ற விஷயம் எனக்கும் புரியுது சார். எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். உங்க நிலைமையில் நான் இருந்தாலும் இப்படித் தான் யோசிப்பேன். நானும் உங்களை மாதிரி வர்றவங்களுக்காகத் தான் என்னிடம் வேலைக்கு ஏற்கனவே ஒரு ஜென்ட்ஸ் டிரைவர் இருந்தாலும், இன்னொரு லேடி டிரைவரை வேலைக்கு வைக்கலாம்னு நினைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த ஸ்கூல் ஆரம்பிச்சு இப்ப ரெண்டு நாள்தான் ஆகுது. இன்னும் வேலைக்கு ஆள் கிடைக்கலை. கிடைச்ச பிறகு கூட உங்க பொண்ணை இங்கே வந்து சேர்த்து விடுங்க…!” என்று தன்மையாகவே பதிலைச் சொன்னான்.
அவனின் தன்மையான பதிலில் திருப்தியானவர் “நல்லதுங்க தம்பி… அப்ப ஒண்ணு செய்யுங்க. இது என்னோட போன் நம்பர். இதைக்குறித்து வச்சுக்கோங்க. உங்க கிட்ட வேலைக்கு ஆள் சேர்ந்ததும் எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா போதும். நான் வந்து என் பெண்ணைச் சேர்த்து விட்டு விடுவேன்…” என்று அவரின் தொலைபேசி எண்ணை சொல்ல அதைக் குறித்து வைத்துக் கொண்டான்.
“அப்புறம் தம்பி ஊருக்கு புதுசுங்களா? உங்களை இதுக்கு முன்னாடி இந்த ஏரியாவில் பார்த்தது இல்லையே?”
“ஆமாங்க, இந்த ஊருக்குப் புதுசு தான்…”
“அப்படிங்களா? சொந்த ஊர் எது?”
“ஈரோடு…”
“ஓ…! ஈரோடா? நல்லதுங்க தம்பி… அங்க இருந்து இங்க வந்து தொழில் தொடங்கிருக்கீங்க. நல்லதே நடக்கட்டும். அதுவும் இது சேலத்தின் அவுட்டர் ஏரியா என்பதால் இந்த இடத்தில் இதுவரை எந்த ட்ரைவிங் ஸ்கூலும் இல்லாமல் இருந்தது. எல்லாத்துக்கும் டவுனுக்குள்ள போய்த்தான் இதுவரை கத்துக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரம் பிள்ளையை அனுப்புறதானு ரொம்ப நாளா தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தேன். இனி இங்கனக்குள்ளயே கத்துக்கிடலாம்…” ௭ன்று சந்தோஷமாகப் பேசிவிட்டு சென்றார்.
அவர் கிளம்பி சென்றதும், ‘சிவா வேலைக்குக் கிடைச்ச மாதிரி ஒரு லேடி ட்ரைவரும் சீக்கிரம் வேலைக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான்.
மேலும் ஒரு மணிநேரம் பொழுது வெறுமையாகச் சென்றது. தன் கைபேசியை நோண்டிக் கொண்டும், வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த செய்தி தாளை வாசித்த படியும் நேரத்தை கடத்தினான்.
ஒரு மணிநேரத்திற்குப் பிறகு தன் குழந்தையுடன் ஒருவர் வர அவரை வரவேற்றான்.
“ஹலோ சார்… ஸ்டேஷ்னரி கடையில் உங்க விளம்பர நோட்டீஸ் பார்த்தேன். இன்னும் கொஞ்ச நாளில் புதுக் கார் வாங்குற ஐடியால இருக்கேன். அதுக்கு முன்னாடி ட்ரைவிங் கத்துக்கணும். என்ன என்ன பிரசீஸர் இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா…?” என்று கேட்டவருக்கு அவருக்குத் தேவையான தகவலை சொன்னான்.
தகவலை வாங்கிக் கொண்டவர் நாளையே வகுப்பில் சேருவதாகச் சொல்லிவிட்டு சென்றார்.
பின்பு மதியம் வரை அலுவலகத்தில் இருந்தவன் மூடி விட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.
வெளியில் வந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தவன் மீண்டும் அந்த ஸ்டேஷ்னரி பக்கம் வண்டியை விட்டான்.
அவனின் கால்கள் ஒரு பக்கம் சாய்ந்து ஊன்றுகோலுடன் நடக்க நேரிட்டாலும் வாகனங்கள் ஓட்டுவதில் அவனுக்கு இந்தச் சில நாட்களாக எந்தச் சிரமமும் ஏற்படுவதில்லை. ஆரம்பத்தில் அந்தக் காலுடன் ஓட்ட சிரமப்பட்டிருந்தாலும் விடாமுயற்சியுடன் வாகனத்தை ஓட்ட கற்றுக் கொண்டான்.
அவனின் நடையைப் பார்ப்பவர்கள் :இந்தக் காலுடன் இவன் எப்படி ஓட்டுனர் பயிற்சி நிலையம் நடத்துக்கின்றான்?’ என்ற கேள்வி அவர்களிடம் வந்து செல்லும் என்பதை நன்றாகவே அறிந்திருந்தான்.
இன்று அந்த ஸ்டேஷ்னரி கடையில் கூட, ஒரு நொடி தந்தையும், மகளும் தன்னை ஆச்சரியமாக நோக்கியதை நினைத்துப் பார்த்தவனுக்கு அவர்கள் அதை வாய்விட்டே கேட்காமல் விட்டது அவர்களின் புரிதலின் தன்மை என்பதால்தான் என்று புரிந்தவன் உதட்டில் புன்னகையின் சாயல் வந்து போனது.
சில நொடிகளில் ஸ்டேஷ்னரி கடையின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி நடந்துகொண்டே ‘தியாகராஜன் இருக்கிறாரா?’ என்று பார்த்தான்.
சத்யவேணி மட்டும்தான் இருந்தாள்.
அவள் மட்டும் இருக்கவும், மேலும் நடக்காமல் தயங்கி நின்றான்.
பின்பு அவர் இருக்கும் போது வருவோம் என்று நினைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடக்கவும் “என்ன தர்மா சார்… கடை வரை வந்துட்டு ஒன்னும் வாங்காம போறீங்க?” என்ற சத்யவேணியின் கேள்வி அவனை மேலும் நடக்க விடாமல் தடுத்து நிறுத்தியது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆச்சரியமாகத் திரும்பி அவளைப் பார்த்து “உங்களுக்கு எப்படி… வந்தது நான் தான்னு…?” என்று மேலும் கேட்க முடியாமல் வார்த்தையைத் தடுமாறி நிறுத்தினான்.
“நீங்கதான் வந்ததுனு எப்படி நான் கண்டுபிடிச்சேன்னு கேட்க வர்றீங்களா?” என்று கேட்டவளுக்கு ‘ஆமாம்’ என்று சொல்ல முடியாமல் தடுமாறினான்.
“என் கண்களுக்குத்தான் உணர்வுகள் இல்லை. என் காதிற்கும், மூக்கிற்கும் அதிகப்படியான உணர்வுகள் இருக்கின்றன…” என்று நிமிர்வுடனே சொன்னாள்.
அவளின் அந்த நிமிர்வை வியப்பாகப் பார்த்தான் தர்மா.
“உங்க ஸ்டிக்கின் சத்தமும், நீங்க போட்டிருக்கும் டியோடரன்டின் வாசனையும், நீங்க தலையில் தடவியிருக்கும் ஆண்களுக்கான ஜெல்லின் மணமும்… மூன்றும் சேர்ந்து வந்திருப்பது நீங்கதான்னு எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டது…” என்றாள்.
“ஓ…! ஆச்சரியமா இருக்குங்க. நான் இன்னைக்குத் தான் உங்க கடைக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்தேன். அதுவும் கொஞ்ச நேரத்தில் இவ்வளவு அப்சர்வ் பண்ணி இருக்கீங்கலே…” என்று வியப்புடன் சொன்னான்.
“இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைங்க. ஒரு உணர்வை எடுத்துக்கொண்ட கடவுள் மற்ற உறுப்புகளுக்கு அதிகம் கவனிக்கும் சக்தியை கொடுத்து விடுகிறார். அவ்வளவுதான்…” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு “நீங்க சொல்லுங்க… கடைக்கு வந்துட்டு ஒன்னும் வாங்காமல் போனீங்க. ஏன்…?” என்று கேட்டாள்.
அவளின் பார்வையில்லா கண்களுக்குக் கண்ணாடி அணிந்திருந்தாலும், களையாக இருந்த அந்த முகத்தில் வந்து போன உணர்வுகள் அவளிடம் ஒரு குறையும் இல்லை என்று சொல்வது போலவே இருந்தது.
தன் குறையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக அவள் நிமிர்வுடன் பேசியது தர்மாவிற்கு ஆச்சரியத்தைக் கூட்டிக்கொண்டே போனது.
இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் எதிரே அவன் எந்தத் தூரத்தில் நிற்கிறான். அவனின் தலையின் உயரம் எந்த அளவு உள்ளது என்று உணர்ந்து அவனின் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் காட்டி பேசினாள்.
அதுவும் அவள் அப்படி முகத்தைக் காட்டிய விதம்? ‘நீ யாராக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் என் முகத்தைப் பார்த்தே பேசு!’ என்று சொல்லாமல் சொல்லியன அவளின் முகத்தில் தெரிந்த ஒரு கம்பீரம்!
ஓவியத்தை ரசிக்கும் ரசிகன் போல் அவளின் அந்தக் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“நான் கடையில் பொருள் வாங்க வரலைங்க. உங்க அப்பாகிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்தேன். அவர் கடையில் இல்லைனு தெரியவும், சரி… அவர் இருக்கும்போது வரலாம்னு கிளம்பினேன்…” என்றான்.
“ஓ…! அப்பா வீட்டுக்கு சாப்பிட போயிருக்கார். என்ன உதவின்னு சொல்லுங்க. நான் அப்பா வந்ததும் சொல்லி வைக்கிறேன்…”
“முதலில் ஒரு ஸாரி சொல்லிக்கிறேங்க. நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவன். பார்த்த ஒரே நாளில் இரண்டாவது உதவி கேட்டு வந்து விட்டேன். நான் கேட்பது உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால் என்னை மன்னிக்கணும்…” என்று தயவாகவே பேச்சை ஆரம்பித்தான்.
“என்னங்க இது…? நோட்டீசை ஒரு ஓரமா வச்சுட்டு போறதுக்குச் சரின்னு சொன்னதெல்லாம் ஒரு உதவியா? இதுக்கெல்லாம் மன்னிப்புன்னு பெரிய வார்த்தை பேச வேண்டாம் சார். அடுத்து நீங்க கேட்கப்போவதும் ஒன்னும் பெரிய உதவியா இருக்காதுன்னு தான் எனக்குத் தோணுது. என்னன்னு சொல்லுங்க… அப்பாவால் முடியுற விஷயமாக இருந்தால் கண்டிப்பா செய்து கொடுப்பார்…” என்றாள்.
“உங்க பெருந்தன்மைக்கு நன்றிங்க. என்னோட டிரைவிங் ஸ்கூலுக்கு ஒரு லேடி டிரைவர் வேலைக்குத் தேவைப்படுது. நான் என் ஆஃபீஸுக்கு வெளியே அதுக்குப் போர்டு வச்சிருக்கேன். ஆனாலும் நானும் ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி வச்சா வேலைக்கு ஆள் சீக்கிரம் கிடைப்பாங்கன்னு தோன்றியது. அதுவும் நான் இந்த ஊருக்குப் புதுசு. யார்கிட்ட எப்படிச் சொல்லி வைக்கிறதுன்னு தெரியலை. அதான் இங்க ஒரு நாலு கடையில சொல்லி வைக்கலாமுன்னு வந்தேன்…” என்றான்.
“ஓ…! அப்படீங்களா…?” என்றவள் ஏதோ யோசித்து விட்டு, “நீங்க நாலு கடையில் சொல்லி வைக்கிறதை விடக் கம்ப்யூட்டர்ல உங்க தேவையை டைப் செய்து, உங்க போன் நம்பர் கொடுத்துப் பிரிண்ட் பண்ணி கடையில் நோட்டீஸ் கொடுத்து வைத்தது போல, சில கடைகளின் வெளியே ஒட்டி விட்டீங்கனா… ரோட்டில் நடந்து போறவங்க கூடப் பார்த்துட்டு உங்களைத் தொடர்பு கொள்ளலாம்…” என்றாள்.
அவள் சொன்ன யோசனையில மகிழ்ந்தவன், “நல்ல ஐடியாங்க… அப்படியே செய்கிறேன்…” என்றவன், “உங்க யோசனைக்கு நன்றிங்க. அப்படியே உங்க கடையின் முன் நோட்டீஸ் ஓட்ட அனுமதி கிடைக்குமா?” என்று கேட்டான்.
“ஒட்டிக்கோங்க…” என்று அனுமதி தந்தவள் சினேகமாகச் சிறு புன்னகை சிந்தினாள்.
இதழ்கள் பிரியாமல் அவள் சிந்திய மென்புன்னகை அவளின் முகத்திற்குக் கூடுதல் அழகு சேர்த்தது.
அவளின் அந்தப் புன்னகையை இமைக்க மறந்து ஒரு நொடி பார்த்து அப்படியே நின்றுவிட்டான் தர்மேந்திரன்.