2 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 2

“வாங்க அத்தை…” என்று வரவேற்றாள் துர்கா.

“ம்ம்ம்…” என்று இறுக்கமாக முனங்கிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் காவேரி.

“எப்படி இருக்கக் காவேரி?” நலம் விசாரித்தார் சபரிநாதன்.

“ஏதோ இருக்கேன். ஆசை ஆசையா பெத்து வளர்த்து ஆளாக்கின மகன் அல்பாயிஸில் போய்ச் சேர்ந்துட்டான். அப்புறம் நான் என்ன சந்தோஷமாவா இருக்க முடியும்?” வெடுக்கென வந்தது அவரின் வார்த்தைகள்.

சபரிநாதன் அடுத்த வார்த்தை பேச வகையற்று வாயடைத்துப் போனார்.

துர்காவின் முகம் சுருங்கியது.

“சரி, கிடக்கிறது கிடக்கட்டும். இப்போ நான் வந்த விஷயத்தைப் பேசிட்டு கிளம்புறேன். இந்த வீட்டில் ரொம்ப நேரம் இருந்தால் கூட என் ஆயுசுக்கும் உத்திரவாதம் இல்லை…” என்று துர்காவை பார்த்துக் கொண்டே சுருக்கென்று சொன்னார்.

“ஏன் இப்படி எல்லாம் பேசுற காவேரி? என் பொண்ணை மருமகளா தான் நினைக்க முடியாதுன்னு அவள் புருஷன் செத்ததும் வீட்டில் சேர்க்காம பிறந்த வீட்டுக்கே அனுப்பி வச்சுட்ட. ஆனா வந்த இடத்திலாவது அவள்கிட்ட இரண்டு வார்த்தை நல்லவிதமா பேசலாமே?

மருமகளா நினைக்க முடியலைனாலும் உன் கூடப் பொறந்த அண்ணாவோட பொண்ணுகிற நினைப்பிலாவது பேசலாமே?” ஆற்றமாட்டாமல் கேட்டுவிட்டார் சபரிநாதன்.

“போதும் நிறுத்துண்ணா. அண்ணா பொண்ணுன்னு பார்த்து தான் உன் பொண்ணை என் பையனுக்குக் கட்டி வச்சேன். ஆனா என்ன ஆச்சு? இரண்டு மாசம்… இரண்டே மாசம்… நல்லா இருந்த என் புள்ள ஆக்சிடெண்ட்ல போய்ச் சேர்ந்துட்டான்.

பிறந்த போதே அம்மாவை முழுங்கிய ராசியில்லாதவ உன் மக. அது எதையும் மனசில் வச்சுக்காம என் மகனுக்கு அவளைக் கட்டிவச்சேன் பார்த்தியா? அதுதான் நான் செய்த பெரிய தப்பு. சொல்ல போனால் இவ முகத்துல நான் காலத்துக்கும் முழிக்கவே கூடாது. ஆனா என்ன செய்ய? சொந்த அண்ணன் ஆகிட்டியேன்னு தான் வீடு தேடி வந்துருக்கேன்…” என்று கோபமாகப் பொரிந்தார்.

அவரின் இப்படிப்பட்ட பேச்சுப் பழக்கம் தான் என்றாலும், துர்காவின் மனது வலித்தது.

ஆனால் தன் வலியைக் காட்டிக் கொள்ளாமல் வெறுமையாக அவரைப் பார்த்தாள்.

வந்து இவ்வளவு நேரமாகியும் தன் இடுப்பில் அமர்ந்திருந்த தன் பேத்தியைக் கூடக் காவேரி கண்கொண்டு பார்க்கவில்லை.

துர்காவுடன் அந்தப் பிஞ்சு குழந்தையும் விலக்கி வைக்கப்பட்டவள் ஆகிப்போனாள்.

அதுவும் வருணா, துர்கா வயிற்றில் கருவாக உருவானது தெரிந்த இரண்டாவது நாளே வருணாவின் தந்தை விபத்தில் இறந்து விட, வயிற்றில் உருவான ஒன்றும் அறியாத குழந்தைக்கு ராசி இல்லாத குழந்தை என்ற முத்திரையைக் குத்தினார் காவேரி.

குழந்தை உருவாகி தான் தன் மகனை முழுங்கிவிட்டது என்று அவர் மனசாட்சி இல்லாமல் பேச, அப்போதே மொத்தமாக உடைந்து போனாள் துர்கா.

அதன் பிறகு ராசி இல்லாத அம்மாவும், மகளும் மகன் இல்லாத வீட்டில் வேண்டாதவர்களாகிப் போக, பிறந்த வீட்டிற்கே விரட்டியடிக்கப்பட்டாள்.

மாலையும் கழுத்துமாக வாழப்போனவள், இரண்டாவது மாதமே தாலியை இழந்து, வயிற்றில் மகளுடன் திரும்பி வந்தாள் துர்கா.

அன்று முதல் தந்தையும், அவளும், குழந்தையும் என்று தான் அவளின் குடும்பம் ஆகிப்போனது.

“என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சுருக்கேன். அண்ணா முறைக்கு உனக்குப் பத்திரிக்கை வைக்காம இருந்தால் சொந்தப்பந்தம் எல்லாம் ஜாடை பேசும். அதுதான் பத்திரிக்கை வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன். இந்தா, அண்ணனா நீ மட்டும் கல்யாணத்துக்கு வந்து சேர்…”

காவேரி நீட்டிய பத்திரிக்கையைக் கையை நீட்டி வாங்கவே இயலவில்லை சபரிநாதனுக்கு.

வேண்டா வெறுப்பாக ஒரு அழைப்பு. அதிலும் தன் மகளை அழைத்து வரக்கூடாது என்று வெளிப்படையாகச் சொன்ன காவேரியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட அவருக்கு விருப்பமில்லை.

ஆனால் தான் வாங்கவில்லை என்றால் தன் கண் முன்னே தங்கை தன் மகளை இன்னும் பேசுவார் என்பதால் பெயருக்குப் பத்திரிக்கையை வாங்கினார்.

“நான் வந்த வேலை முடிந்தது. கிளம்புறேன்…” அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் கிளம்பிவிட்டார் காவேரி.

தளர்ந்து அப்படியே தரையில் அமர்ந்தாள் துர்கா. அவள் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

அவளின் மடியில் வருணா அமர்ந்திருந்தாள்.

மகளின் மேனியை மென்மையாக வருடியவள், “அவங்க மகனுக்குப் பிறந்த இந்தப் பச்சை மண்ணைக் கூட ஒரு பார்வை பார்க்கணும்னு தோணலையேப்பா? அப்படி என் பொண்ணு என்ன தப்பு பண்ணினாள் பா?” என்று வலியுடன் கேட்ட மகளுக்குப் பதில் சொல்லும் வகையற்று தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்தார் சபரிநாதன்.

அவருக்கு வேதனை நெஞ்சை அடைத்தது.

மகளின் வாழ்க்கையே போய்விட்டது என்ற வலி ஒரு புறம் இருக்க, தன் சொந்த தங்கையே தன் மகளையும், பேத்தியையும் இப்படி விலக்கி வைப்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது.

மகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? எல்லாம் தலைவிதி என்று நினைத்து வருத்த பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

“விடுமா. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். போய் வேலையைப் பார். குட்டிக்குச் சாப்பாடு கொடுக்குற நேரமாச்சு…” மகளின் மனதை திசை திருப்ப முயன்றார்.

அவளும் அப்படியே அமர்ந்திருக்காமல் எழுந்து வேலையைப் பார்க்க சென்றாள்.

இங்கே இவர்கள் பேசியது அனைத்தும் பக்கத்து வீட்டில் இருந்த நித்திலனின் காதில் விழுந்தது.

இரண்டு வீட்டிற்கும் பொதுவான ஒரே சுவர் தான் என்பதால் பேச்சுச் சப்தம் காதில் விழுவது உண்டு. அதுவும் காவேரி பேசியது துல்லியமாக விழ, அவன் மனதிலும் மெல்லிய வருத்தம் உண்டானது.

சொந்த மருமகள் என்று கூடப் பார்க்காமல் அந்தப் பெண்மணியால் எப்படி அப்படி நினைக்க முடிகிறது? அதிலும் அவர் குழந்தையிடம் பேசாதது, துர்கா அதற்காக வருத்தப்பட்டது எல்லாம் நினைத்துப் ‘பாவம் குழந்தை’ என்று வருணாவிற்காக வேதனைப்பட்டான்.

இப்படியும் மனிதர்கள் என்று நினைத்தவனுக்குத் தன் வீட்டு மனிதர்கள் நினைவும் வந்து போனது.

அதிலும் அவனின் அண்ணி? வெறுப்பாக முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

அப்போது அவனின் கைபேசி அழைத்தது. யார் என்று எடுத்துப் பார்த்தான். அவனின் அன்னை அழைத்துக் கொண்டிருந்தார்.

உடனே அவனின் முகம் மென்மையானது.

“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க?”

“இருக்கேன் பா. நீ எப்படி இருக்க?” பரிவுடன் வந்தது அன்னையின் விசாரிப்பு.

“நல்லா இருக்கேன் மா. அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? ஷிவானி, சிவா எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. ஷிவானி உன்னைப் பத்தி என்கிட்ட அடிக்கடி கேட்பாள்…”

“ம்ம், நானும் கேட்டதா சொல்லுங்கமா…”

“சரிப்பா, நீ சாப்பிட்டியா? என்ன சாப்பிட்ட?”

“மணி ஏழு தானே ஆகுதுமா? இன்னும் கொஞ்ச நேரத்தில் கடைக்குப் போவேன்…” என்றான்.

“கடை சாப்பாடு உடம்புக்குச் சேருதாப்பா?”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைமா…”

“தம்பி ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போயேன். உன்னைப் பார்க்கணும் போல இருக்கு…” என்று பேச்சோடு பேச்சாக அன்னை ஏக்கமாகக் கேட்க, நித்திலன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“நித்திலா?”

“அம்மா…”

“என்னப்பா பதிலே சொல்ல மாட்டேங்குற? வர்றீயா?”

“நான் எதுக்குமா அங்கே? அங்கே வந்து நான் என்ன செய்யப் போறேன்?”

“இந்த அம்மாவை பார்க்க காரணம் இருந்தால் தான் வரணுமாபா?” ஆதங்கமாகக் கேட்டார்.

“எனக்கும் உங்களைப் பார்க்கணும் போலத்தான் இருக்குமா. ஆனா நான் அங்கே வரலை. திரும்பத் திரும்ப ரணப்பட என் மனசில் தெம்பு இல்லைமா…” என்றவன் குரல் இறுக்கமாக இருக்க, அதற்கு நேர்மாறாக அவனின் முகம் கலக்கத்தைச் சுமந்திருந்தது.

“நித்திலா…” என்ற அன்னையின் குரல் விசும்பியது.

“இப்ப எதுக்கு அழறீங்கமா? என்னைப் பார்க்கணும், அவ்வளவு தானே? நான் ட்ரைன்ல டிக்கெட் போடுறேன். இங்கே கிளம்பி வாங்க. கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டுப் போங்க…”

மகன் சொன்னதைக் கேட்டு அந்தப் பக்கம் அவனின் அன்னை தயங்கினார்.

“என்னமா வர்றீங்களா? டிக்கெட் போடட்டுமா?”

“இல்லப்பா ஷவானிக்கும், சிவாவுக்கும் இன்னும் இரண்டு நாளில் எக்ஸாம் வருது. இந்த நேரத்தில் உன் அண்ணி பிள்ளைக்குப் பாடம் சொல்லி கொடுக்கணும். வீட்டு வேலை எல்லாம் நான் தான் பார்க்கணும். அவளுக்குப் பிள்ளைகளுக்குச் சொல்லியும் கொடுத்து, வீட்டு வேலையும் பார்க்க முடியாது…” என்றார் தயங்கி தயங்கி.

“இல்லைனாலும் வீட்டு வேலை எல்லாம் அவங்க தான் செய்வாங்க. இல்லையாமா?” என்று நக்கலாகக் கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியானார் அவனின் அன்னை செவ்வந்தி.

அவனுக்குத்தான் அவனின் அண்ணியைப் பற்றி நன்றாகத் தெரியுமே?

வீட்டிற்கு இரட்டை பிள்ளைகளை வாரிசாகத் தந்திருக்கிறோம் என்று அவளுக்கு ஒரு தலைக்கனம் உண்டு.

சாதாரணமாகவே வீட்டு வேலைகளைச் செய்யாதவள், ஷிவானி, சிவா என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மொத்த வேலைகளையும் மாமியாரின் தலை மேல் கட்டிவிட்டாள்.

குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பவள் அதையும் உருப்படியாகச் செய்ய மாட்டாள்.

குழந்தைகளைக் குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று அதையும் அவனின் அன்னைதான் செய்வார்.

மாமியார் உடன் இல்லை என்றால் தன்னால் தனியாக வேலை பார்க்க முடியாது என்று செவ்வந்தியை எங்கேயும் விட மாட்டாள்.

அதை அறிந்த நித்திலன் விரக்தியாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“நீங்க வர முடியாதுன்னு தெரியும்மா. என்னாலும் வர முடியாது. கடவுள் கிருபை இருந்தால் என்னைக்காவது பார்ப்போம். கவலைப்படாம இருங்க. இங்கே நான் எந்தக் கஷ்டமும் இல்லாமல் நல்லா இருக்கேன். என்னைப் பத்தி யோசிச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. என்ன, சரியாம்மா?” என்றான்.

“ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவர், “சரிப்பா, நான் வச்சுடுறேன்…” என்று அழைப்பை துண்டித்தார்.

அன்னையுடன் பேசி முடித்துவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

அப்போது பக்கத்து வீட்டிலிருந்து வருணாவின் அழுகுரல் கேட்டது.

“என்னடா கண்ணும்மா, எதுக்கு அழுதுட்டே இருக்க? வயிறு வலிக்குதா?” என்ற துர்காவின் குரலும் மெலிதாகக் கேட்டது.

‘பாவம் பாப்பாவுக்கு வயிறு வலிக்குது போல?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் நித்திலன்.

தொடர்ந்து வருணாவின் அழுகை குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவள் அழுகை கேட்டு மனதை பிசைவது போல் இருக்க, இருப்புக் கொள்ளாமல் எழுந்து வாசலில் வந்து நின்றான்.

இப்போது அழுகை சத்தம் இன்னும் அதிகமாகவே கேட்டது.

அப்போது பக்கத்து வீட்டு கதவும் திறக்கப்பட்டது.

“சரிடா பாப்பா, அழாதே! நாம கடைக்குப் போகலாம்…” என்று சொல்லிக் கொண்டே வருணாவுடன் வெளியே வந்தார் சபரிநாதன்.

வாசலில் இறங்கி கடை வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நித்திலனும் சாப்பிட செல்ல வேண்டும் என்பதால் கதவை மூடிவிட்டுக் கடைக்குச் சென்றான்.

அவர்களின் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்குச் சென்றால் தான் கடைகள் உண்டு.

சபரிநாதன் குழந்தையுடன் முன்னே நடக்க, நித்திலன் அவர்களின் பின்னே நடந்தான்.

அவன் பின்னால் வருவதைப் பார்த்து தெரிந்தவன் வருகிறான் என்றதும் அழுது கொண்டே அவனைப் பார்த்தாள் வருணா.

‘அழாதே குட்டி’ என்று குழந்தையைப் பார்த்து வாயை மட்டும் அசைத்தான் நித்திலன்.

அவனின் குரல் வராமல் வாயை மட்டும் அசைக்கவும் புதிதாக உணர்ந்த வருணா, அழுகையை நிறுத்திவிட்டு அவனை வித்தியாசமாகப் பார்த்தது.

‘சமத்துக் குட்டி’ அழுகையை நிறுத்தியதும், வாயசைத்துக் கொஞ்சி சிரித்தான்.

குழந்தையும் அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

‘குட் கேர்ள்’ என்று அவன் பாராட்ட, புரிந்தது போல் நன்றாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

நித்திலனின் முகமும் மலர்ந்து போனது.

குழந்தையின் முகத்தை ஆசையாகப் பார்த்தான்.

தன்னைப் பார்த்து சிரிக்கும் அப்பிஞ்சு குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அதைச் செயல்படுத்த முடியாது என்பதால் வேதனையுடன் தன் ஆசையைத் தனக்குள் புதைத்துக் கொண்டான்.

ஆனால் அவனாகக் குழந்தையைத் தூக்கி கொள்ளும் நிகழ்வு சற்று நேரத்திலேயே நிகழ்ந்தது.

அந்தத் தெருவை கடந்து மெயின் ரோட்டுக்குச் செல்லும் சாலையில் சபரிநாதன் திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்தச் சாலையில் ஒரு பைக் திரும்பியது.

பைக்கை ஒரு பதினைந்து வயது சிறுவன் தனியாக ஓட்டி பழகிக் கொண்டிருந்தான். திருப்பத்தில் திரும்பும் போது சரியாக ஓட்ட தெரியாமல் சபரிநாதன் மீது வேகமாக மோதினான். அதில் பக்கத்தில் இருந்த சாக்கடையில் கால் சறுக்கி விழுந்தார் சபரிநாதன்.

பாதிச் சாலையிலும். கால்கள் முழுவதும் சாக்கடையிலுமாக விழுந்து கிடக்க, அவர் கையில் இருந்த குழந்தை பயந்து வீரிட்டு அழ ஆரம்பித்தாள்.

அந்த விபத்து நொடியில் நடந்து விடப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலன் வேகமாக அவருக்குச் சென்று உதவினான். முதலில் அவர் கையில் இருந்த குழந்தையைத் தூக்கியவன், இன்னொரு கையால் சபரிநாதனை தூக்கி விட முயன்றான்.

“ஆ… கால் என்னவோ ஆகிருச்சு தம்பி. ஏற முடியலை…” என்று வலியுடன் முனகினார் சபரிநாதன்.

அதற்குள் அந்தப் பக்கம் சென்றவர்கள் சிலர் வந்து உதவி செய்து சபரிநாதனை தூக்கிவிட்டனர்.

அவர் மேல் மோதிய சிறுவன் பயந்து எப்போதோ அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்.

சபரிநாதனுக்கு ஆட்கள் முதல் உதவி செய்ய, சபரிநாதனோ ‘ஒரு காலை அசைக்கவே முடியவில்லை’ என்று வலியுடன் சொன்னார்.

“ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும் போலப்பா. அதோ அந்த ஆட்டோவை நிறுத்துங்க…” என்று ஒருவர் சொல்ல, ஒருவர் ஆட்டோவை அழைத்து வந்தார்.

“இவர் கூட யாருப்பா போறது?” என்று கேட்க,

“நான் பார்த்துக்கிறேன்…” என்று நித்திலன் முன்வந்தான்.

“பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு இவரைக் கூட்டிட்டுப் போறேன். அந்தக் காம்பவுண்டு வீட்டுல இவர் பொண்ணுகிட்ட யாராவது விஷயத்தைச் சொல்லி அங்கே வர சொல்லுங்க…” என்று அங்கிருந்தவர்களிடம் தகவல் சொல்லிவிட்டுச் சபரிநாதனுடன் ஆட்டோவில் ஏறினான் நித்திலன்.

“தாத்தாவுக்கு ஒன்னுமில்லை குட்டி, அழாதீங்க…” என்று ஆட்டோவில் செல்லும் போது குழந்தைக்குச் சமாதானம் செய்து கொண்டே வந்தான்.

“வலி ரொம்ப இருக்கா சார்? இதோ ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்று சபரிநாதனையும் தேற்ற மறக்கவில்லை அவன்.

ஆட்டோ அருகில் இருந்த மருத்துவமனை முன் நின்றது.

சபரிநாதனை அவசரசிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றனர்.

வருணா இன்னும் அழுது கொண்டுதான் இருந்தாள். பயந்து போயிருக்கிறாள் என்று புரிந்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

அப்போது அரக்க பறக்க அங்கே ஓடி வந்தாள் துர்கா.

தன் குழந்தையுடன் நின்றிருந்த நித்திலன் அருகில் வந்தாள். அன்னையைப் பார்த்ததும் வேகமாக அவளிடம் தாவினாள் வருணா.

மகளைக் கையில் வாங்கிக் கொண்டவள், “அப்பாவுக்கு என்னாச்சு சார்?” என்று நித்திலனிடம் கேட்டாள்.

நடந்ததைச் சொன்னவன், “காலில் நல்ல அடி போல. டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க…” என்றான்.

தந்தையை நினைத்து வேதனையுடன் கண்கலங்க நின்றாள் துர்கா.

“இவ அழுதுட்டே இருக்காள்னு தான் கடைக்குத் தூக்கிட்டுப் போனார். இப்படியா ஆகணும்…” என்று புலம்பிக் கொண்டாள்.

“ஒன்னும் ஆகாதுங்க. கவலைப்படாதீங்க…” என்றான் நித்திலன்.

அப்போது மருத்துவர் அழைப்பதாகச் சொல்ல, துர்காவுடன் நித்திலனும் சென்றான்.

“அவருக்குக் காலில் பிராக்ஸர் ஆகியிருக்கு. ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ணனும்…” என்றார் மருத்துவர்.

“ஆப்ரேசனா?” பயந்து போய்க் கேட்டாள் துர்கா.

“ஒரு எலும்பு விலகியிருக்கு. ஆப்ரேசன் பண்ணா சீக்கிரம் சரியாகிடும்…” என்றார்.

துர்காவின் கண்ணிலிருந்து கடகடவென்று கண்ணீர் இறங்கி வந்தது.

“ஆப்ரேசனுக்கு எவ்வளவு ஆகும் டாக்டர்?” என்று விசாரித்தாள்.

அவர் சொன்ன தொகையைக் கேட்டு, திணறிப் போனாள்.

ஆப்ரேசனுக்குத் தேவையான பணம் இப்போது அவளின் கையில் இல்லை. வங்கியில் இருப்பும் அவ்வளவாகத் தேறாது. அவளின் ஒரு ஆள் சம்பாத்தியம் வீட்டு செலவிற்கே சரியாக இருக்கும்.

இப்போது என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்.

“நான் கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன் டாக்டர்…” என்று மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவளுடன் நித்திலனும் வெளியே வந்தான்.

“இதில் யோசிக்க என்னங்க இருக்கு? டாக்டர்கிட்ட ஆப்ரேசனுக்குச் சரின்னு சொல்லிருக்கலாமே?” என்று வெளியே வந்ததும் கேட்டான்.

அப்போது தான் அவனும் அங்கே தான் இருக்கிறான் என்பதையே உணர்ந்து அவனைத் தயக்கத்துடன் பார்த்தாள்.

அவனிடம் என்னவென்று சொல்வது? புரியவில்லை அவளுக்கு.

“பணம் எடுத்துட்டு வரலையா? அதான் தயங்குறீங்களா?” அவனாக யூகித்துக் கேட்க, அவனைச் சங்கடமாகப் பார்த்தாள்.

“நான் இப்ப பணம் கட்டுறேன். நீங்க அப்புறம் கொடுங்க…” என்றவன் அவள் மறுப்பைக் கேட்க அங்கே நிற்கவில்லை.

“நான் போய்ப் பணம் கட்டிட்டு வர்றேன்…” என்றவன் நிற்காமல் பணம் கட்டும் இடத்தை நோக்கி நகர்ந்தான்.

சற்று நேரத்தில் சபரிநாதனுக்கு அறுவை சிகிச்சை ஆரம்பிக்க, அழுது அழுது அலுத்துப் போய்த் தூங்கிய குழந்தையுடன் துர்கா வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, அவளை விட்டு இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்தான் நித்திலன்.