19 – மின்னல் பூவே

அத்தியாயம் – 19

கமலினி இப்படிச் செய்வாள் என்று உத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நேற்று வரையிலும் கூடக் கல்யாண வேலைகளில் எப்படியெல்லாம் கலந்து கொண்டாள்? அந்தப் பொருள் வாங்க வேண்டும், இந்தப் பொருள் வாங்க வேண்டும் என்று தன்னையும் போட்டு எப்படி அலைக்களித்தாள்.

அவளால் எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடிந்தது?

நினைக்க நினைக்க அவளால் தாளவே முடியவில்லை.

அதிலும் முகில்வண்ணன் அனைவர் முன்பும் வேதனையுடன் கூனி குறுகி நின்றிருந்த கோலம்?

அவளை வருத்தியவன் தான் என்றாலும், அவன் அப்படி வருந்தி நின்றிருந்த கோலத்தைப் பார்த்து அவளால் மகிழ முடியவில்லை.

அவனின் வேதனை அவளையும் தாக்கியது.

கமலினி அவனை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு அதுவும் திருமணத்தன்று ஓடிப் போனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

காதலித்தவள் அதை வீட்டில் சொல்லி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டு பெற்றவர்களையும் ஏமாற்றி, இன்னொரு குடும்பத்தையும் ஏமாற்றி, முக்கியமாக மாப்பிள்ளையானவனுக்கு நம்பிக்கை கொடுத்து, அவனை அவமானப்படுத்திவிட்டு, ஊரார் முன் தலை குனிய வைத்து விட்டு சென்றதை நினைத்து கமலினியின் மீது கோபமாக வந்தது.

வேறு ஒருவனை விரும்பியதால் தான் அன்று மாலில் முகிலிடம் பேசாமல் ஓடினாள் போலும். நேற்று கூட அவள் முகத்தில் மகிழ்ச்சி இல்லாததற்குக் காரணம் பெற்றவர்களை விட்டுப் பிரிய போவதால் இல்லை. அவர்களை ஏமாற்றி விட்டு செல்ல போவதை நினைத்து தான் அப்படி இருந்தாள் போலும்.

எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறாள்? என்று நினைத்து நினைத்து மாய்ந்து கொண்டே மண்டபத்தை விட்டுக் கிளம்பப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் உத்ரா.

கமலினி சென்றதுடன் அடுத்து முகில்வண்ணனிற்கு வேறு பெண்ணைத் திருமணம் முடிக்கப் பெரியவர்கள் பேசிக் கொண்டதும் அவளின் மனதில் ஓடியது.

ஆனால் அதைப் பற்றித் தான் நினைத்து என்ன ஆகப் போகிறது? என்று நினைத்தவள் முயன்று தன் யோசனையை அதில் இருந்து வெளியே கொண்டு வர முயன்று கொண்டே அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்து அன்னையைப் பார்த்தாள்.

“எல்லாம் எடுத்து வச்சுட்டேன்மா. நாம கிளம்பலாம்…” என்றாள்.

“விமலா ரூம்லயும் எல்லாம் நான் எடுத்து வச்சுட்டேன் உத்ரா. இன்னும் ரூமில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்காள். நம்ம பேக்கை அங்கே கொண்டு போயிட்டு அப்படியே அவங்களையும் அழைச்சுட்டு கிளம்புவோம்…” என்றார் அஜந்தா.

“எல்லாம் எடுத்தாச்சுன்னா வாங்க மா போகலாம்…” என்று அப்போது தான் அறை வாசலுக்கு வந்த வீரபத்ரன் அழைத்தார்.

அவர்கள் அறையை விட்டு வெளியே வந்த போது முகிலுடன் அங்கே வந்தார் ரகுநாதன்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே வீரபத்ரன்…” என்று ரகுநாதன் சொல்ல,

“வாங்க, என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்று அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்ற யோசனையுடன் வரவேற்றார் வீரபத்ரன்.

“உள்ளே உட்கார்ந்து பேசுவோம்…” என்று ரகுநாதன் உள்ளே வர, அவரை வரவேற்று அங்கிருந்த இருக்கையில் அமர சொன்னார்.

“அப்பா, நீங்க இங்கே பேசிட்டு இருங்க. அதுக்கு முன்னாடி நான் உத்ராகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்றான் முகில்வண்ணன்.

‘இப்போது அவன் என்ன பேசப் போகிறான்?’ என்பது போல அனைவருமே கேள்வியாகப் பார்த்தனர்.

மகனை முதலில் கேள்வியுடன் பார்த்த ரகுநாதன் மகன் உத்ராவிடம் திருமணத்திற்கு நேரடியாகச் சம்மதம் வாங்க நினைக்கிறான் என்று நினைத்துக் கொண்டார்.

“அதுவும் சரிதான். அவன் உங்க பொண்ணுகிட்ட தனியா பேசட்டும் வீரபத்ரன். அதுக்குள்ள நாம இங்கே பேசி முடிச்சுடுவோம்…” என்றார்.

அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள். என்ன பேசப் போகிறார்கள் என்று புரியாமல் முழித்தாலும் ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்ததால் ‘சரி’ என்றார் வீரபத்ரன்.

“வா, மாடியில் நின்னு பேசுவோம்…” என்று உத்ராவை அழைத்தான் முகில்வண்ணன்.

‘என்கிட்ட என்ன பேசப் போகிறான்?’ என்ற கேள்வியுடன் அவனின் பின் நடந்தாள் உத்ரா.

கீழே பெரியவர்கள் பேச ஆரம்பிக்க, மண்டபத்தின் மாடியில் எதிரெதிரே நின்றிருந்தனர் உத்ராவும், முகில்வண்ணனும்.

“நீ நினைச்சதை வெற்றிகரமா நடத்தி முடிச்சுட்ட போல?” என்று எடுத்ததும் இளக்காரமாகக் கேட்டான்.

“என்ன முகில்? நான் என்ன நினைச்சேன்? என்ன வெற்றிகரமா முடிச்சேன்?” குழப்பத்துடன் கேட்டாள்.

“என்னமா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற? உன் நடிப்பை என் வீட்டு ஆளுங்க வேணும்னா நம்பலாம். ஆனா நான் நம்ப மாட்டேன்…” என்றான் கோபமாக.

“நீங்க என்ன பேசுறீங்கன்னே எனக்குப் புரியலை முகில். நான் என்ன நடிச்சேன்? புரியுற மாதிரி பேசுங்க…” என்றாள்.

“என் வாயினால் நான் சொல்றதையும் கேட்டுச் சந்தோஷப்பட நினைக்கிற போல? சரிதான். நான் அவமானப்பட்டதை நானே என் வாயால் சொல்லும் போது உனக்குக் குளுகுளுன்னு தானே இருக்கும். இனி நான் தனியா அவமானப்பட என்ன இருக்கு? அதான் அத்தனை பேர் முன்னாடி பட்டுட்டேனே…” என்று கோபமாகச் சொன்னவன்,

“அது தான் என் கல்யாணத்தை நிறுத்தி பல பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்தி நான் கூனி குறுகி நிற்கிறதை பார்க்க நினைச்சது போலவே செய்து முடிச்சுட்ட தானே. அதைச் சொன்னேன்…” என்றான்.

“வாட்! என்… என்ன உளர்றீங்க?” என்று அதிர்வுடன் கேட்டாள் உத்ரா.

அவளின் அதிர்வை கூட, ‘என்னமாக நடிக்கிறாள் இவள்? அது சரி அவள் திட்டம் போட்டதை நான் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுருப்பாள். இப்போ நான் சொல்லிக் காட்டவும் குத்துது போல’ என்று மனதிற்குள் இளப்பமாக நினைத்துக் கொண்டான்.

“உங்க கல்யாணத்தை நான் நிறுத்தினேனா? என்ன உளறல் இது? என்ன பேசுறீங்கன்னு புரிந்து தான் பேசுறீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“நல்லா புரிந்து அறிந்து தான் பேசுறேன் உத்ரா. புவனா, குரு எல்லாம் பேசியதை கேட்டு நான் கூட உன்னைக் கொஞ்சம் நல்லவள்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லைன்னு இன்னைக்கு என் மூஞ்சில கரியைப் பூசியே நிரூபிச்சுட்ட…” என்றான்.

‘என்ன பேசுகிறான் இவன்? இவன் கல்யாணத்தில் நான் என்ன செய்ய முடியும்? ஓடிப் போனவள் அவள். அவளை விட்டுவிட்டு இவன் எதற்கு அர்த்தமே இல்லாமல் என்னைக் குறை சொல்லிக் கொண்டு நிற்கிறான்’ என்பதாக அவனைக் கோபத்துடன் பார்த்தாள் உத்ரா.

“அப்படி என்ன புரிந்து கொண்டீங்க? நான் உங்க கல்யாணத்தை நிறுத்த அப்படி என்ன செய்தேன்னு கொஞ்சம் நீங்களே சொல்லுங்களேன், கேட்போம்…” என்று கேட்டாள்.

அவளுக்கும் அவனை விட மேலாகக் கோபம் வந்தது. ஆனாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டாள்.

“நக்கல் அடிக்கிற, ம்ம்ம்? அதானே உனக்கு நக்கலா தானே இருக்கும். நீ, அந்தக் கமலினி, அவளோட லவ்வர்ன்னு நீங்க மூணு பேரும் பேசி வச்சு என் கழுத்தை அறுத்துட்டீங்க இல்லை…”

“என்ன உளர்றீங்க?” என்று உத்ரா கேட்க,

“எல்லாம் திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்றேன்…” என்றான்.

“ஏதாவது உளறாதீங்க முகில். கமலினி அவள் அம்மாவுக்கு வாட்ஸ்அப்ல அனுப்பிய மெசேஸை நீங்களும் தானே பார்த்தீங்க. அதில் அவளே தானே போறேன்னு எழுதி இருக்காள். அது கூட யோசிக்க மாட்டீங்களா?”

“அதுவும் உன் வேலையா இருக்காதுன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்டவனை அலுப்புடன் பார்த்தாள்.

“என்ன தேவைக்குன்னு கேட்டேன்?” என்று கேட்டாள்.

“உன் தேவை என்னன்னு எனக்குத் தெரியாதா என்ன? நான் உன் காதலை மறுத்துட்டேன் என்பதற்காகக் கமலினி, அவள் லவ்வர், அவங்க கூட நீ எல்லாம் சேர்ந்து திட்டம் போட்டு வேலை பார்த்துருக்கீங்க. இது புரியாம எங்க வீட்டில் உன்னை…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“வெயிட்… வெயிட்… என்ன சொல்றீங்க, கமலினியோட லவ்வர் கூடச் சேர்ந்து வேலை பார்த்தேனா? யார் அவன்? எனக்கே தெரியாத கமலியோட லவ்வர்?” என்று கேட்டாள்.

“உனக்கே தெரியாதா? இதை என்ன நம்பச் சொல்றீயா? அவன் கூட உன்னை நான் நேரிலேயே பார்த்திருக்கேன் உத்ரா. ஒன்னும் தெரியாதவள் போல நடிக்காதே…” என்றான் உக்கிரமாக.

“அய்யோ! ஆண்டவா! கல்யாணம் நின்னு போனதில் மூளை எதுவும் குழம்பிப் போயிருச்சா முகில்? கமலினி காதலிச்சதே எனக்கு அவள் ஓடிப் போன பிறகு தான் தெரியும் என்னும் போது, அவளோட லவ்வர் கூடச் சேர்ந்து நானும் பிளான் போட்டேன்னு சொல்றீங்க. நீங்க சொல்றது உங்களுக்கே அபத்தமா தெரியலையா?” என்று கேட்டாள்.

“ஏய்! என்னை என்ன பைத்தியம்னு சொல்றீயா? நேத்து நைட் கூட நீ அவன் கூடப் பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன். அன்னைக்குக் காஃபி ஷாப்லயும் பார்த்தேன். அன்னைக்கு என்ன பேசினீங்க? முகில்வண்ணன்னு ஒரு முட்டாள் மாட்டியிருக்கான்.

அவனுக்குப் பார்த்த பொண்ணைக் கல்யாணம் அன்னைக்கு இழுத்துட்டு ஓடிப் போய்டு. அதுக்கு முன்னாடி அவனுக்குச் சந்தேகம் வராம இருக்க அவன் போன் போட்டு பேசும் போதெல்லாம் அவன்கிட்ட நல்லா பேசுன்னு அந்தக் கமலினிக்கு சொல்லிக் கொடுத்தியா?

ஹான்… இப்போ கூட நல்லா ஞாபகம் இருக்கு. எப்பவும் நான் போன் போடும் போதெல்லாம் என்கிட்ட சரியா பேசாம பூசி மழுப்பும் கமலினி, அன்னைக்கு உன்னையும், அவளையும் அவள் லவ்வர் கூட நான் காஃபி ஷாப்ல பார்த்த அன்னைக்குத் தான் அவளா எனக்குப் போன் போட்டு பேசினாள்.

அப்புறமா நான் அவள்கிட்ட பேசும் போதெல்லாம் அந்த நேரம் பார்த்து நீ அவளுக்குப் போன் போடுவதாகச் சொன்னாள். இதிலிருந்து என்ன தெரியுது? அன்னைக்குத்தான் நீங்க மூணு பேரும் பிளான் போட்டு காய் நகர்த்தி என் கழுத்தை அறுக்க ஆரம்பிச்சுருக்கீங்க.

அவளை என்கிட்டே பேச விட்டுட்டு, அப்படியும் முழுசா பேச விடாம அந்த நேரத்தில் சரியா நீயும் பேசியிருக்க. அதுக்குக் காரணம், நான் அவள் கூட ரொம்ப நேரம் பேசுறது உனக்குப் பிடிக்கலை.

அது மட்டுமா? அன்னைக்கு மாலில் நீ தான் கமலினியை என் கூடப் பேச விடாம பண்ணிருக்க.

என்னைக் கமலினி ஏமாத்தவும் செய்யணும். அதே நேரம் அவள் என் கூடச் சரியா பேசிட கூடாதுன்னும் நினைச்சி ஒவ்வொரு விஷயமா பண்ணிருக்க. இது புரியாம நானும் இத்தனை நாள் முட்டாள் மாதிரி இருந்திருக்கேன்.

இதுக்கெல்லாம் உச்சம் போல நேத்து நைட் அவள் லவ்வரை மண்டபத்துக்கே வர வைத்து அவன் கூட அவளை அனுப்பி வச்சுருக்க. நேத்து நைட் வரை ரொம்ப நேரம் இந்த மண்டபத்தில் அவன் இருந்ததைப் பார்த்தேன். உன் ஃபிரண்டு தான் கல்யாணத்துக்கு வந்திருக்கான்னு நினைத்தேன் .

ஆனா இப்போ அவன் மண்டபத்தில் இல்லை. அப்போ அவன் தான் கமலினியோட லவ்வரா இருக்க முடியும். அப்போ எப்படி எந்த நேரம் அனுப்புறதுன்னு தான் நைட் இரண்டு பேரும் பேசிட்டு இருந்தீங்களோ?” என்று கோபமாக அவளின் மீது அவனுக்கு இருக்கும் சந்தேகத்தை எல்லாம் வார்த்தைகளாகக் கக்கியவன், நக்கலாகக் கேட்டு முடித்தான்.

அவன் பேச பேச மலைத்துப் போய் நின்றிருந்தாள் உத்ரா.

அவன் சொன்னதின் சாராம்சம் புரியவே அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

அன்றைக்குக் கமலினியுடனும், அந்த நிவேதனுடனும் காஃபி ஷாப்பில் பேசியது உண்மை தான். நேற்றும் அந்த நிவேதன் திருமணத்திற்காக வந்திருந்தான். அவனுடன் இரவு பேசிக் கொண்டிருந்ததும் உண்மை தான்.

ஆனால் அதற்கு இவன் சொல்லும் காரணங்கள்? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

“ஆனா எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை. அன்னைக்குக் காஃபி ஷாப்ல நீங்க பார்த்துக்கிட்ட பிறகு தான் அந்தக் கமலினி உன் ஃபிரண்டை காதலிச்சாளா? இல்லை அதுக்கு முன்னாடியேவா? ஏன் கேட்குறேன்னா எனக்கு நிச்சயம் நடந்தப்ப கூட அந்தக் கமலினி மறுப்பு சொல்லவே இல்லையே? அப்போ அதுக்குப் பிறகு தான் அவங்களுக்குள்ள காதல் வந்ததா? அப்போ நீ தான் மாமா வேலை பார்த்தியோ?” என்று கடுமையாகக் கேட்டான்.

“ஷட்அப் முகில்! வரம்பு மீறி பேசுறீங்க…” என்று கோபமாகக் கத்தினாள் உத்ரா.

“நான் பேசுறதே வரம்பு மீறி இருக்கா? அப்போ நீ செய்தது?” என்று அவளை விடக் கோபமாகக் கேட்டான்.

“நிவேதன் என் ஃபிரண்டுன்னு உங்களுக்கு யார் சொன்னா?”

“அந்தக் கமலினி தான்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே படிகளில் யாரோ ஏறி வரும் சப்தம் கேட்டது.

அவன் குற்றம் சாட்டிய விதத்தில் கோபமும், அவன் சொன்ன விஷயத்தில் யோசனையுமாக உத்ரா நின்று கொண்டிருக்க, யார் வருவது என்று பார்க்க படியருகில் சென்றான் முகில்வண்ணன்.

இலக்கியா தான் வந்து கொண்டிருந்தாள்.

“என்ன முகில் பேசியாச்சா, இல்லையா? வேற எதுவும் பிரச்சனையா? நான் வேணும்னா பேசி உத்ராகிட்ட சம்மதம் வாங்கட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்ப்ச்… பேசிட்டு தான் இருக்கேன்கா. நீ போ, நாங்க வர்றோம்…” என்றான்.

“முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுதுடா. சொந்தக்காரங்களை எல்லாம் சமாளிச்சு உட்கார வச்சுருக்கோம். சீக்கிரம் வாங்க…” என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள்.

மீண்டும் உத்ராவின் எதிரே வந்த முகில் யோசனையுடன் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“இதோ பார் உத்ரா, நீயும் என் வாழ்க்கையில் எப்படியெப்படியோ விளையாடிட்ட. ஆனா நீ செய்த எந்தச் சூழ்ச்சியும் தெரியாம என் வீட்டு ஆளுங்க இப்போ உன்னைத் தான் எனக்குப் பொண்ணா தேர்ந்தெடுத்து இருக்காங்க. இது நானே எதிர்பாராத ஒன்னு.

என் அப்பா நெஞ்சை பிடிச்சுக்கிட்டு உன்னைக் கட்டிக்க என்கிட்ட சம்மதம் கேட்ட போது என்னால் மறுக்க முடியலை. இப்போ உன்னோட அப்பா, அம்மாகிட்ட என்னோட அப்பா உன்னைப் பொண்ணு கேட்டுருப்பார்.

உன்னோட அடாவடி குணத்தையே பிடிக்காம உன் காதலை நிராகரித்தவன் நான். ஆனா இப்போ என் கல்யாணத்தையே சூழ்ச்சி செய்து நிறுத்திய அளவுக்குப் போன உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணமே நடக்காம போனாலும் பரவாயில்லை. ஆனா நீ மட்டும் என் மனைவியா வருவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இப்போ என் அப்பாகிட்ட போய் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு என்னால் சொல்ல முடியாது. அவர் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு விழுந்தால் என்னால் தாங்க முடியாது.

அதனால் நீ உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்து…” என்று சொல்லிவிட்டு அவளின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

‘நீ செய்து தான் ஆகவேண்டும்’ என்று அழுத்தமாகச் சொன்னது அவனின் பார்வை.

அவளைத் தான் பெண்ணாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த உத்ரா, அடுத்தடுத்து அவன் சொன்னதைக் கேட்டு உறைந்து போனாள்.

அவனுக்குக் கல்யாணமே நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நீ மட்டும் வேண்டாம் என்று அவன் சொன்னதைக் கேட்டு அவளின் நெஞ்சம் வலித்தது.

தன் மீது அவன் பல குற்றசாட்டுகள் சாட்டிய பிறகும் அவன் தன்னை வேண்டாம் என்றதற்காக எதற்காக இந்த நெஞ்சம் வலிக்கிறது? அந்த அளவு ரோசம் கெட்டுப் போய்விட்டேனோ?

‘இவ்வளவு பலவீனமானவளா உத்ரா நீ?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

இதில் அவன் நீ தான் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல, அவனைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தாள்.

“ஏன் சாருக்குத் தைரியம் இல்லையோ? இந்தத் திமிர்ப்பிடித்தவள்கிட்ட கேட்குறீங்க?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி உதட்டை சுழித்துக் கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் கோபம் உச்சத்தில் ஏற, “ஏய்…” என்று கத்தினான்.

“முகில், நேரமாகுதுபா…” என்று இப்போது கீழிருந்து அவனின் தந்தையின் குரல் கேட்க, கோபத்துடன் காலை உதைத்து தலையை அழுந்த கோதிக் கொண்டு அவளை முறைத்தவன்,

“நீ மட்டும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னன்னு வச்சுக்கோ, அப்போ திட்டம் போட்டு என் கல்யாணத்தை நிறுத்தியது நீ தான்னு இன்னும் உறுதியா நம்புவேன். நீ எந்தத் தப்பு செய்யலைன்னு நிரூபிக்க நினைச்சா இந்தக் கல்யாணத்தை நிறுத்து…” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கி சென்றான் முகில்வண்ணன்.

அவன் சென்ற சில நொடிகளுக்குப் பிறகு நிதானமாகக் கீழே இறங்கி சென்றாள் உத்ரா.

அவளின் உள்ளத்தில் கலவையான உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தன.

அவளின் முகமோ நிர்மலமாக இருந்தது.

அறையில் அவளின் அன்னையும், தந்தையும் மட்டுமே இருந்தனர்.

“உத்ரா, முகில் வீட்டில் அவங்களே உன்னைப் பொண்ணு கேட்டாங்கடா. அம்மாவுக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நானே அவங்க வேற பொண்ணுன்னு பேசும் போது உன்னைப் பத்தி நினைச்சேன்.

ஆனா நாமளா கேட்க தயங்கிப் பேசாம இருந்தேன். ஆனா இப்போ அவங்களே உன்னை விருப்பப்பட்டுக் கேட்டுருக்காங்க. என் மகள் விரும்பின பையனையே கல்யாணம் பண்ணிக்கப் போறாள்…” என்று மகளைக் கண்டதும் உற்சாகமாகச் சொன்னார் அஜந்தா.

உதட்டில் லேசாகப் புன்னகை நெளிய அன்னையைப் பார்த்த உத்ரா, திரும்பி தந்தையைப் பார்த்தாள்.

வீரபத்ரன் முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“அவங்களுக்கு என்ன பதில் சொன்னீங்கப்பா?” என்று கேட்டாள்.

“நீயே ஆசைப்பட்டவன் வேற, இப்ப அவங்களே விரும்பி பொண்ணு கேட்டுருக்காங்க. அப்படி இருக்கும் போது நான் என்ன பதில் சொல்லுவேன்னு உனக்குத் தெரியாதா உத்ராமா?” என்று வீரபத்ரன் பதிலுக்குக் கேட்டார்.

“ஆனா நீங்களும் கூட ஒரு விஷயத்தை மறந்துட்டீங்களே அப்பா…” என்று தந்தையிடம் நிதானமாகக் கேட்டாள்.

“என்னம்மா?” என்று வீரபத்ரன் யோசனையுடன் கேட்க,

“இன்னும் என்னை முகில் மறுத்த காரணம் அப்படியே தான்பா இருக்கு. நான் இன்னும் அதே உத்ரா தான்பா…” என்று சொல்ல,

“உத்ரா, என்னடா? என்ன சொல்ல வர்ற?” என்று அஜந்தா பதறி போய்க் கேட்க,

மகள் சொல்ல வருவதை ஊகித்தது போல “உத்ரா மா…” என்று அதிர்ந்து அழைத்தார் வீரபத்ரன்.

“இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லைப்பா…” என்று அழுத்தமாகச் சொன்னாள் உத்ரா.