19 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 19
“நீங்க போய் உட்காருங்க சத்யா. கைல இடிச்சுக்காதீங்க. இந்த வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…” என்றான் புகழேந்தி.
“பத்து நாளா நீங்க தான் தனியா பார்த்துக்கிறீங்க புகழ் சார். இன்னைக்காவது நான் கொஞ்சம் உதவி செய்றேனே…” என்றாள் சத்யவேணி.
“உதவி எல்லாம் தேவைப்படாது சத்யா. இதோ கொஞ்சம் தான் இருக்கு. நானே முடிச்சுருவேன்…”
“என்ன சார் நீங்க? ஏன் ஒத்தை ஆளா இழுத்துப் போட்டு கஷ்டப்படுறீங்க?”
“எனக்கு இந்த வேலையில் ஒரு கஷ்டமும் இல்லை சத்யா. நீங்க உங்க கையை வேலை செய்றேன்னு இடிச்சுக்குவீங்களோனு நினைச்சா தான் கஷ்டமா இருக்கு…” என்றவன் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் சத்யா வேலை செய்யும் பார்வையற்றோர் பள்ளியில் ஆண்டு விழா நடப்பதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
கடந்த பத்து நாட்களும் சத்யா விடுமுறை எடுத்திருந்தாள். இன்று ஆண்டு விழா காரணமாகவே கிளம்பி வந்திருந்தாள்.
பட்டு ஜரிகை வைத்த சுடிதார் அணிந்திருந்தாள். தலையைத் தளர்வாகப் பின்னி அளவாக மல்லிகையைச் சூடியிருந்தாள்.
கை இன்னும் கழுத்தோடு இணைக்கப் பட்டிருந்தாலும் விழாவிற்காக அவள் கிளம்பியிருந்த விதம் முக லட்சணத்தை மிகைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்க, புகழேந்தியின் பார்வை அவன் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே சத்யாவின் மீது நிலைத்து நிலைத்து மீண்டு கொண்டிருந்தது.
சத்யா வராத நாட்களில் குழந்தைகளின் நாடகத்திற்கு ஒத்திகை பார்க்க வைக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக அவனுடையதாக மாறியதால் மருத்துவமனையில் சத்யாவை சந்தித்த பிறகு மீண்டும் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு புகழேந்திக்குக் கிடைக்காமல் போனது.
அதோடு தான் கேட்ட திருமண விஷயத்திற்குச் சிறிது கூட அவள் பக்கம் இருந்து எந்தத் தகவலும் வெளிப்படையாகச் சொல்லாத நிலையில் தானாக வீடு சென்று பார்க்கவும் தயக்கத்தைக் கொடுத்திருக்க அவளைப் பார்க்க முடியாமல் போனது.
சில நாட்களுக்குப் பிறகு பார்ப்பதால் ஒருவித ஆர்வத்துடனேயே அவளைப் பார்த்தான்.
அதோடு திருமண விஷயமாகவும் அவளின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள அவளுடன் தனிமையில் பேச தவிப்புடன் காத்திருந்தான்.
அவன் தவிப்புடன் காத்திருக்கச் சத்யாவோ அவன் தன்னிடம் திருமணத்திற்குக் கேட்டதையே மறந்தவள் போலச் சாதாரணமாகவே அவனுடன் உரையாடினாள்.
சிறிது நேரத்தில் ஆண்டுவிழா ஆரம்பமாக அதன் பிறகு வேறு எதையும் பேச கூட நேரமில்லாமல் மணித்துளிகள் ஓட, விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
விழாவிற்குச் சத்யாவுடன் வசந்தா மட்டும் வந்திருந்தார். தியாகராஜன் கடையில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட, கார்த்திகா படிக்க வேண்டும் என்று வர மறுத்திருந்தாள்.
வசந்தா மட்டுமே சத்யாவுடன் வந்திருப்பதைக் கவனித்த புகழ் யோசனையுடன் பார்த்தான்.
விழா முடிந்து பிள்ளைகளை அவர்கள் இடத்தில் விட்டுவிட்டு சத்யாவை அழைத்துப் போகக் காத்திருந்த வசந்தா இருந்த இடம் நோக்கி வந்தான் புகழேந்தி.
தெரிந்தவன் என்ற முறையில் அவனைப் பார்த்து புன்னகைத்த வசந்தா, “சத்யா எங்கே தம்பி? விழா முடிஞ்சிருச்சு, இன்னும் அவளைக் காணோம்…” என்று விசாரித்தார்.
“சத்யா வேற டீச்சர்கிட்ட பேசிட்டு இருக்காங்க ஆன்ட்டி. இப்போ வந்துடுவாங்க…” என்றான்.
“சரிங்க தம்பி வரட்டும்…” என்று வசந்தா சொல்ல, புகழ் ஏதோ பேச நினைத்து எப்படிப் பேச என்று புரியாமல் தடுமாறினான்.
பின்பு பேசி விடுவதே நல்லது என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “ஆன்ட்டி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே…” என்றான் தயக்கத்துடன்.
‘இந்தத் தம்பி நம்மகிட்ட பேச என்ன இருக்கு?’ என்பது போல் பார்த்த வசந்தா அவன் பேச தடுமாறி கொண்டிருப்பதைப் பார்த்து “என்ன தம்பி, சொல்லுங்க…” என்றார் யோசனையுடன்.
அடுத்து புகழேந்தி சொன்னதை எல்லாம் கேட்ட வசந்தாவின் முகம் மாறியது.
அவன் பேசி முடிக்கும் போது சத்யா அங்கே வர, “சரி ஆன்ட்டி, யோசிச்சு சொல்லுங்க…” என்றான்.
அவன் சொன்னது காதில் விழ “என்ன விஷயம் புகழ் சார்?” என்று கேட்டாள் சத்யா.
“சும்மா தான் பேசிட்டு இருந்தோம் சத்யா. நீங்க கிளம்புங்க. ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிருச்சு…” என்றான்.
சத்யாவிடம் மீண்டும் அதைப் பற்றி இப்போது பேசும் துணிவு அவனுக்கு இல்லை. அவள் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது தான் கேட்டு உடனே மறுத்துவிட்டால் என்ன செய்வது? வசந்தாவிடம் சொல்லிவிட்டாயிற்று. இனி அவர் மகளிடம் பேசி நல்ல முடிவாகச் சொல்லட்டும் என்று நினைத்தவன் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
மகளின் முகத்தையும், புகழின் முகத்தையும் ஆராய்ச்சியாகப் பார்த்தார் வசந்தா.
சத்யாவின் முகம் எப்போதும் போல் அமைதியாக இருந்தது. புகழின் முகம் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருந்தது.
மகளின் முகம் நிர்மலமாக இருப்பதைப் பார்த்து குழம்பி போனவர் “சரி தம்பி, நாங்க கிளம்புறோம். வா சத்யா…” என்று மகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
பள்ளியை விட்டு சிறிது தூரம் வெளியே வந்ததும், “புகழ் சார் என்னம்மா சொன்னார்?” என்று கேட்டாள்.
“வீட்டில் போய்ப் பேசுவோம் சத்யா…” என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார் வசந்தா.
அதன் பிறகு அமைதியாகவே இருவரின் நடையும் தொடர்ந்தது.
வசந்தா யோசனையுடன் வர, சத்யா கடந்த ஒரு வாரமாக இருந்த மௌனத்துடன் நடந்தாள்.
ஆம்! கடந்த ஒரு வாரத்தில் சத்யாவின் பேச்சு வெகுவாகக் குறைந்து விட்டது.
தர்மாவின் விஷயம் தெரிந்து கோபம் கொண்டவள் இன்னும் அந்தக் கோபத்தை விட்டபாடில்லை.
கார்த்திகாவிடம் மட்டுமே வழக்கம் போலப் பேசினாள். வசந்தாவிடம் தேவைக்கு மட்டுமே அவளின் பேச்சு இருந்தது. அதுவும் கை இந்த நிலையில் இருக்க, அன்னையின் உதவி அவளுக்கு மிகுதியான தேவையாக இருந்தது.
உடை மாற்ற, தலை வாற என்று அன்றாடத் தேவைக்கும் வசந்தாவின் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் போக, அவரிடம் பேசுவதைத் தவிர்க்க முடியாமல் போனது.
ஆனால் தியாகராஜனிடம் சுத்தமாகப் பேச்சை நிறுத்தியிருந்தாள். அவராகப் பேச வந்தாலும் பேசாமல் அவரைக் கடந்து சென்றாள்.
தர்மா கடைக்கு வந்த முதல் நாளில் இருந்து அவனைத் தெரியாத நபர் போலப் பேசியது. அதை இத்தனை நாட்களும் மறைத்தது என்று அவரின் மீது கோபம் மிகுதியாக இருக்க அவரிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.
சிறிது நேரத்தில் வீடு வந்திருக்க, சத்யா உடையை மாற்ற உதவிவிட்டு, யோசனையுடனும், குழப்பமான முகத்துடனேயும், மாலையே தயார் செய்து வைத்துவிட்டு போன இரவு உணவை சூடு படுத்த ஆரம்பித்தார்.
கார்த்திகா உணவை உண்டு விட்டு உள்ளே சென்றதும், “சத்யா உன்கிட்ட பேசணும். படுக்கப் போய்டாதே…” என்று மெல்ல பெரிய மகளிடம் பேச்சை ஆரம்பித்தார்.
வசந்தா பேச வேண்டும் என்று சொன்னாலே இப்போதெல்லாம் சத்யாவின் மனது இறுகி போக ஆரம்பித்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகத் தட்டில் கையைக் கழுவி கொண்டிருக்க, “சத்யா…” என்று மீண்டும் அழைத்தார்.
“ம்ம்… சொல்லுங்கமா…” இறுகிய குரலிலேயே சொன்னாள்.
“தர்மா தம்பி விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்க?” என்று கேட்டார்.
மாப்பிள்ளை என்ற அழைப்பு தம்பியானதை மனதில் குறித்துக் கொண்டே, “என்னமா முடிவு எடுக்கணும்? நான் தான் மாப்பிள்ளை யாருன்னு தெரியுறதுக்கு முன்னாடியே தெளிவா சொன்னேன்னே? எனக்கு இரண்டாந்தாரமா போக விருப்பம் இல்லைனு. அதே தான் இப்பயும் என் முடிவில் மாற்றம் இல்லை…” என்றாள் உறுதியுடன்.
“ஓ…!” என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தவர் “புகழ் தம்பியை பத்தி என்ன நினைக்கிற சத்யா?” என்று அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டார்.
அவரின் கேள்வியில் சத்யாவின் முகம் சட்டென்று சுருங்கியது. “அவரைப் பத்தி நினைக்க என்னமா இருக்கு? எனக்கு ஒரு நல்ல பிரண்டு. அவ்வளவுதான்…!” என்றாள்.
“ஓ…!” என்று மீண்டும் இழுத்தார்.
அவர் அமைதியானதும் “என்னமா, இப்ப அவரைப் பத்தி எதுக்கு இந்தக் கேள்வி?” என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் தெரியாதது போலவே கேட்டாள்.
“என்னனு உனக்குத் தெரியாதா சத்யா? அந்தத் தம்பி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டாராமே? நீ இன்னும் பதில் சொல்லலையாம். வீட்டு பெரியவங்க கிட்ட கேட்காம உன்கிட்ட கேட்டதால் நீ தயங்குற போலன்னு நினைத்து அந்தத் தம்பி இன்னைக்கு என்கிட்ட அவர் விருப்பத்தைச் சொன்னார். நீ ஏன் அவருக்கு இன்னும் பதில் சொல்லலை?” என்று கேட்டார்.
அவர் கேள்விக்குச் சத்யா பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, “பதில் சொல்லு சத்யா. உன் மனசில் என்ன நினைப்பு ஓடுது? தர்மா தம்பிக்கு இரண்டாவதா உன்னைக் கேட்டாலும் நல்லவரா தெரிஞ்சார். அவங்க குடும்பமும் நல்ல மாதிரியா தெரியுது. உன்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்கன்னு தான் உன்னை எப்படியாவது தர்மா தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வச்சுருவோம்னு நினைச்சோம். அன்னைக்கு நாலு பெரியவங்க பக்கத்தில் இருக்கோம்னு கொஞ்சம் கூடக் கவலைப்படாம தர்மா தம்பி அவரோட விருப்பத்தை உன்கிட்ட சொன்னார்.
ஆனா அவர் அப்படிச் சொன்னதைதே காதில் வாங்காம அவங்களை வீட்டை வீட்டு விரட்டுவதிலேயே குறியா இருந்த. நீ அப்படிச் சொல்லியும் உனக்காக அவங்க அமைதியா போனாங்க. ஆனாலும் நீ முகம் குடுத்து பேச மாட்டீங்கிறனு தெரிந்தும் தினமும் உன்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் அந்தத் தம்பி கண்ல கூடப் படாம ஓடி ஒளியுர. தர்மா தம்பி சொன்ன மாதிரி நீ அவர விரும்புற போலனு ஒரு நப்பாசை எனக்கு இருந்தது. ஆனா நீ ஓடி ஒளியிறதை பார்த்தா அவர் மேல கொஞ்சம் கூட உனக்கு விருப்பம் இல்லை போலன்னு எனக்குத் தெரிஞ்சு போயிருச்சு.
நீ முன்னாடி சொன்ன மாதிரி இரண்டாந்தாரமா போக வேண்டாம். தர்மா தம்பியை நாளைக்குக் கூப்பிட்டு உனக்கு விருப்பம் இல்லைங்கிற விஷயத்தைச் சொல்லிடுவோம். அப்புறம் புகழ் தம்பியை கூப்பிட்டு உனக்கும் அவருக்கும் சீக்கிரம் நிச்சயம் வச்சுருவோம்…” என்று நீளமாகப் பேசியதோடு சத்யாவின் தலையில் இடியையும் இறக்கினார்.
“என்னமா விளையாடுறீங்களா?” சத்யா அதிர்ந்து கத்தினாள்.
“இப்போ எதுக்குக் கத்துற சத்யா? உன் வாழ்க்கை பத்தி பேசிக்கிட்டு இருக்கேன். விளையாடுறியானு கேட்குற? உன் வாழ்க்கையோட விளையாடுற எண்ணம் எனக்கு இல்லை…”
“விளையாடாம? இவன் இல்லன்னா அவன், அவன் இல்லனா இவன்னு என்னோட இணைச்சு பேசுறதுக்குப் பேர் என்னமா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“சும்மா கோபப்பட்டுக் கத்தாதே சத்யா. என்னை இப்படி மாத்தி மாத்தி பேச வைக்கிறதே நீ தான். எனக்கு யார் மாப்பிள்ளைங்கிறது விட, என் பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம். நாங்க பார்த்த மாப்பிள்ளை தான் வேண்டாம்னு சொல்லிட்ட. சரி உனக்கு ஏத்த மாதிரி வர்ற வரனை ஏன் விடணும்னு தான் நான் யோசிக்கிறேன். அதுவும் நீ விரும்பிய மாதிரி முதல் தாரம். நான் உனக்காகத் தான் பார்க்கிறேன்னே தவிர, என் சுயநலத்துக்காகக் மாத்தி மாத்தி பேசலை. அதை முதலில் புரிஞ்சுக்கோ…” என்றார் கண்டிப்புடனே.
அவர் சொல்ல வருவது புரிந்தாலும் அவர் மாத்தி மாத்தி பேசுவது பிடிக்காமல் முகம் இறுகினாள் சத்யா.
அவளின் முக இறுக்கத்தைக் கண்டாலும் மகளின் எதிர்காலம் ஒன்றே முக்கியமாகப் பட, மேலும் பேச ஆரம்பித்தார் வசந்தா.
“தர்மா தம்பி இரண்டாவதா கேட்டாங்கனு அவங்களை விரட்டி அடிக்காத குறையா பேசி அனுப்பிட்ட. திரும்பி உன்னைப் பார்க்க ஓடி வர்றவரையும் பார்க்காமல் விரட்டி விடுற. இதுக்கு என்ன அர்த்தம்? அவரைப் பிடிக்கலைனு தானே? அப்போ பிடிக்காதவரை ஏன் இன்னும் எதிர்பார்க்க வைத்து அலைய விடணும்? விருப்பம் இல்லனு சொல்லி முடிச்சு விட்டுடலாம்…” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இடையில் சத்யா ஏதோ பேச வர,
“இரு! நான் சொல்லி முடிச்சுறேன்…” என்று அவளை நிறுத்தியவர், “புகழ் தம்பி நீ கேட்ட மாதிரி கல்யாணம் ஆகாதவர். அவரைப் பற்றித் தெரிந்தவரை நல்லவர், நல்ல குணமும் இருக்கு. என்ன பெரியவங்க யாரும் இல்லாத குறை மட்டும் தான். ஆனா அது கூட எனக்குப் பெரிய விஷயம் இல்லை தான். உனக்குப் பிடிச்ச மாதிரி கல்யாணம் ஆகாதவர். அது ஒன்னே போதும். பேசி முடிச்சிடலாம்…” என்றார் உறுதியுடன்.
அவர் சொன்னதைக் கேட்டு ஒன்றும் பேசாமல் இறுகிய முகத்துடன் இருந்தாள் சத்யா.
“என்ன சத்யா நான் சொல்றது சரி தானே?” என்று கேட்டார்.
ஆனால் அவருக்குப் பதில் சொல்லாமல் மனதுடன் முகமும் இறுகி போக அறைக்குள் எழுந்து போனாள் சத்யா.
“பதில் சொல்லிட்டு போ சத்யா…” என்ற வசந்தாவிற்கு மௌனமே பதிலாகக் கிடைத்தது.
உள்ளே சென்ற சத்யா தன் பட்டன் மாடல் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தியவள் “ஹலோ… புகழ் சாரா?” எனக் கேட்டாள்.
“சத்யா என்னங்க இப்போ தான் கிளம்பினீங்க அதுக்குள்ள போன்?” என்று புகழேந்தி அவசரமாகக் கேட்க,
“நீங்க என்கிட்ட கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல தான் போன் போட்டேன் புகழ் சார்…”
“சொல்லுங்க சத்யா…” என்று ஆர்வமாக அந்தப் பக்கம் இருந்து கேட்டான்.
“நீங்க வேற ஆரோக்கியமான நல்ல பொண்ணைப் பார்த்துக்கோங்க புகழ் சார். இதே தான் அன்னைக்கும் சொன்னேன். ஆனா நீங்க தான் டைம் எடுத்துக்கோனு சொல்லி தள்ளி போட்டீங்க. இன்னும் எத்தனை நாள் எத்தனை வருஷம் கழிச்சுக் கேட்டாலும் என் பதில் இதே தான் புகழ் சார். நீங்க எனக்கு நல்ல பிரண்ட். அதுக்கு மேல ஒன்னும் இல்லை…” என்று தன் முடிவை உறுதியாகச் சொன்னாள்.
“சத்யா…” என்று புகழ் மேலும் ஏதோ பேச வர, “உங்களுக்கு ஏத்த பொண்ணு நான் இல்லை புகழ் சார். இந்தப் பேச்சை இத்தோடு விட்டுடலாம். இனி என் பெத்தவங்கட்ட பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம உங்களுக்கு ஏத்த பொண்ணா தேட ஆரம்பிங்க. இனி நான் ஒரு நண்பரா உங்களை நினைக்கிறது உங்க நடவடிக்கையில் தான் இருக்கு. உங்களுக்கு என் மேல் உண்டான எண்ணம் மாறலைனா நமக்குள்ள இருக்கிற நட்புக்கும் முழுக்கு போட வேண்டியிருக்கும்…” என்றாள் சற்று கடுமையாகவே.
அவன் வேறு பெண்ணைத் தேட வேண்டும் என்ற எண்ணத்திலேயே கொஞ்சம் கடுமையைக் காட்டியே பேசினாள்.
அவள் அப்படிப் பேசியதில் வருத்தம் இருந்தாலும் விருப்பம் இல்லை என்பவளை அதற்கு மேல் வற்புறுத்தப் பிடிக்காமல் “உங்க நட்பு எனக்கு வேணும் சத்யா…” என்று மட்டும் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு எழ, “நம் நட்பு தொடரட்டும் புகழ் சார். நன்றி…!” என்றவள் அலைபேசியை வைத்தாள்.
அவள் பேசுவதையே அறையின் வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வசந்தா “உன் தலையில் நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிற சத்யா…” என்றார் வருத்தத்துடன்.
“ஹா… அடுத்தவங்க நம்ம வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடுறதை விட எனக்கு நானே போட்டுக்கிறது எனக்குத் தப்பா தெரியலைமா…” என்று வறட்சியான சிரிப்புடன் சொன்னாள்.
“ஆமா… நல்லா வியாக்கியானம் பேசு. இப்போ என்னதான் செய்றதா உத்தேசம் சத்யா?” என்று கேட்டார்.
“இப்போதைக்கு நான் எதுவும் முடிவு எடுக்கிறதா இல்லைம்மா. என்னைத் தனியா விடுங்க…” என்றவள் அவர் மேலும் பேச இடம் கொடாமல் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையில் வசந்தா புலம்பி கொண்டே அங்கிருந்து செல்ல, வெளியே திடமாகப் பேசினாலும் உள்ளுக்குள் கலங்கி போய்ப் படுத்திருந்த தன் அக்காவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கார்த்திகா.