19 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 19

“என்ன சாப்பிடுற ஸ்வீட்டி?” என்று தன் எதிரே அமர்ந்திருந்த நயனிகாவிடம் கேட்டான் அரவிந்த்.

“எனக்கு ஒரு பைனாப்பிள் ஜூஸ் போதும் அரவிந்த்…”

“வெறும் ஜூஸ் மட்டுமா? சாட் ஐட்டம் ஏதாவது சாப்பிடலாமே?”

“இல்லை அரவிந்த், எனக்கு ஜூஸ் போதும். உங்களுக்கு வேணும்னா சாட் ஐட்டம் சொல்லிக்கோங்க…”

“ஓகே, எனக்கு ஒரு சமோசா மசாலா வாங்க போறேன்…” என்றவன் சர்வரை அழைத்துத் தங்களுக்குத் தேவையானதை சொன்னான்.

நயனிகாவோ வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நிறைய நாள் கூப்பிட்டு இன்னைக்குத் தான் மனசு வந்து என் கூட வெளியே வந்திருக்க. ஏதாவது பேசலாமே…” என்றதும் அவனின் புறம் திரும்பினாள்.

“என்ன பேச?”

“ஓ! என்கிட்ட பேச உனக்கு ஒன்னுமே இல்லையா?” என்றவன் குரல் வித்தியாசமாக ஒலித்ததோ?

நயனிகா அதையெல்லாம் ஆராயும் நிலையில் இல்லை.

அவளின் எண்ணம் எல்லாம் கதிர்நிலவனைச் சுற்றியே வந்தது.

அவளிடம் பேச வேண்டும் என்று பல முறை முயன்று விட்டான். ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது.

சற்று முன் கூட அவளைத் தன் வீட்டிற்கு வர சொல்லியிருந்தான். அவள் கிளம்பும் போது சரியாக அரவிந்த் வந்துவிட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அதோடு ஏற்கனவே அரவிந்த் பலமுறை வெளியே அழைத்தும் நயனிகா சென்றிருக்கவில்லை.

ஆனால் இன்று வந்தே ஆகவேண்டும். உன்னிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும் என்று அழைத்து வந்திருந்தான்.

கதிர்நிலவனுக்கு ‘அப்புறம் பார்ப்போம்’ என்று ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு வந்திருந்தாள்.

அவளுக்கும் அவனுடன் பேச முடியாமல் தள்ளி சென்று கொண்டே இருப்பது வருத்தத்தைக் கொடுத்தது.

அவனின் மனதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தவளுக்கு அது ஏமாற்றத்தையும் தந்து கொண்டிருந்தது.

“என்ன ஸ்வீட்டி, என்ன யோசனை?” என்று அரவிந்த் கேட்ட பிறகு தான் தன் எதிரில் இருந்தவனையே கவனித்தாள் நயனிகா.

“ஜூஸ் வந்திருச்சு. எடுத்துக்கோ…” என்றவன் தனக்கு வாங்கிய சமோசா மசாலாவை உண்ண ஆரம்பித்தான்.

அவளும் பழச்சாறை அருந்த ஆரம்பித்தாள்.

“ரொம்பப் பெரிய விஷயம் எல்லாம் செய்த போல இருக்கு?” என்று கீழ்க்கண்ணால் அவளைப் பார்த்தபடி கேட்டான் அரவிந்த்.

“ம்ம், என்ன?” அவள் புரியாமல் கேட்க,

அவன் அவள் கையைச் சுட்டிக் காட்டினான்.

அவள் வெட்டிக் கொண்ட இடத்தில் தழும்பு விழுந்திருந்தது.

அதைப் பார்த்து முகத்தைச் சுருக்கியவள் அவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“ம்ம், நீ ரொம்ப மாறிட்ட ஸ்வீட்டி. எல்லாம் காதல் படுத்தும் பாடு போல இருக்கு…” என்றவன் குரல் ஒருமாதிரியாக ஒலித்தது.

அதை அவள் இனம் கண்டு கொள்ளும் முன் சட்டென்று தன் முகபாவனையை மாற்றினான்.

“உங்களுக்கு யார் சொன்னா?” என்று மெல்ல கேட்டாள் நயனிகா.

“அங்கிள் தான் என் அப்பாகிட்ட சொல்லி வருத்தப்பட்டார்…” என்றான்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவள் அமைதியாகிவிட, “சரி, நான் உன்கிட்ட சொல்ல வந்த விஷயத்துக்கு வர்றேன். எனக்கு நீ ஒரு ஹெல்ப் செய்யணுமே ஸ்வீட்டி. முடியுமா?” என்று கேட்டான்.

“என்ன ஹெல்ப்? சொல்லுங்க அரவிந்த், என்னால் முடிந்தால் செய்றேன்…”

“உன்னால் முடியும் ஸ்வீட்டி. எனக்கும் உனக்கு இருக்கும் அதே பிரச்சனை தான்…”

“என்ன பிரச்சனை?” கண்களைச் சுருக்கி யோசனையுடன் கேட்டாள்.

“காதல் தான்…” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“ஓ, சூப்பர்! யார் அந்தப் பொண்ணு? என்ன பண்றாங்க?”

“எனக்கு ரொம்ப வருஷமா தெரிஞ்ச பொண்ணு தான். ஆனா காதல்னு வந்ததும் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிடுச்சு. இப்போ அவளுக்கு ஒரு பிரச்சனை. அவங்க அப்பா, அம்மா அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

என்னை உடனே வந்து உங்க கூடக் கூட்டிட்டுப் போயிடுங்கன்னு அழறாள். நான் வீட்டில் பேசினால் எங்க அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டோம்னு பிடிவாதம் பிடிக்கிறாங்க. அவள் அழுகை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டுப் போகுது…” என்றான்.

“ஓ! இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”

“கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். கல்யாணம் பண்ணிட்டு அப்பா, அம்மா முன்னாடி போய் நின்னா எப்படியும் சம்மதிச்சுத்தானே ஆகணும்? நானும் அவங்களுக்கு ஒரே பிள்ளை தான். என் வழிக்கு வந்து தானே ஆகணும்?

அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். ஆனா சாட்சி கையெழுத்துப் போட தான் ஆள் இல்லை. என் ஃபிரண்ட் ஒருத்தன் வர்றேன்னு சொல்லியிருக்கான்.

இன்னொரு ஆளுக்குத் தான் என்ன செய்றதுன்னு தெரியலை. அதான் உன் ஹெல்ப் கேட்டு வந்திருக்கேன். எனக்காகச் சாட்சி கையெழுத்துப் போட வர முடியுமா?” என்று கேட்டான்.

“ஓ!” என்றவள் உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

“உனக்கு இஷ்டம் இல்லைனா வேண்டாம். ஆனா இனி நான் யார்கிட்ட போய் ஹெல்ப் கேட்பதுன்னு தான் தெரியலை. மத்த சில ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் அவங்களை எல்லாம் கூப்பிட யோசனையா இருக்கு.

யாராவது என் அப்பா காதில் விஷயத்தைப் போட்டுட்டால் அப்புறம் என் லவ்வை மறந்துட வேண்டியது. அவள் இல்லைனா என்னால் வாழவே முடியாது…” என்று சோகமாகச் சொன்னவனை வருத்தமாகப் பார்த்தாள்.

‘அவன் காதல் கைகூட ஒரு சின்னக் கையெழுத்து தானே?’ என்று நினைத்தாள்.

“கவலைப்படாதீங்க அரவிந்த். நான் கையெழுத்துப் போட வர்றேன். என்னைக்கு வரணும்?”

“தேங்க்யூ…. தேங்க்யூ சோ மச் ஸ்வீட்டி. இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. எங்கே நீ சம்மதிக்க மாட்டியோன்னு பயந்துட்டே இருந்தேன்…” என்றான் நெகிழ்வாக.

“பரவாயில்லை அரவிந்த். உங்க காதலாவது ஜெயிக்கட்டுமே…” என்று விரக்தியாகச் சொன்னாள்.

“உன் காதலும் ஜெயிக்கும் ஸ்வீட்டி. அங்கிள் சீக்கிரம் உன்னைப் புரிஞ்சிப்பார்…” என்றான் ஆறுதலாக.

“சரி, அதை விடுங்க. என்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்?”

“அது மட்டும் தான் இன்னும் ஃபிக்ஸ் பண்ணலை ஸ்வீட்டி. சாட்சிக்கு இன்னொரு ஆள் கிடைக்காம நாள் முடிவு பண்ண முடியலை. இப்பத்தான் நீ சரின்னு சொல்லிட்டியே. இனி சீக்கிரம் நாள் முடிவு பண்ணிட்டு சொல்றேன். தேதி ஃபிக்ஸ் ஆனதும் உன் வீட்டில் ஏதாவது சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திடு. உங்க வீட்டில் யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறம் அவங்க என் அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டால் பிரச்சனை…” என்றான்.

“நான் சொல்ல மாட்டேன் அரவிந்த்…”

“தேங்க்யூ ஸ்வீட்டி. சரி வா கிளம்பலாம்…” என்று அவளை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டான்.

அரவிந்த் மேலே வராமல் கீழேயே அவளை விட்டுவிட்டுக் கிளம்பி விட, நயனிகா தன் வீட்டை நோக்கி சென்றாள்.

அவள் தன் வீட்டுக் கதவைத் தட்டும் முன் பின்னால் இருந்து இழுக்கப்பட்டாள்.

அவள் பயந்து கத்தும் முன் தன் வீட்டிற்குள் அவளை இழுத்து கதவை அடைத்தான் கதிர்நிலவன்.

அவன் முகத்தைப் பார்த்ததும் தன் கத்தலை நிறுத்திக் கொண்டாள்.

“நானும் உன்கிட்ட பேச முயற்சி பண்ணி ஏமாந்துட்டே இருக்கேன். அதான் வேற வழியில்லாம இப்படி. எப்படி இருக்க நயனிமா? உன் முகத்தைப் பக்கத்தில் பார்த்து எத்தனை நாளாச்சு?” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“ம்ம், நல்லா இருக்கேன்…” என்றவளின் கையைப் பற்றி மென்மையாகத் தழும்பை வருடினான்.

“இதைப் பார்க்க பார்க்க மனசு வலிக்குதுடா. இப்படி எனக்காகச் சாகுற அளவுக்கு நான் உனக்கு என்ன செய்தேன்? ஒன்னுமே இல்லையே. அப்புறமும் ஏன் இப்படி?” என்று இன்று நடந்தது போல் அதே வலியுடன் கேட்டான்.

அவள் அமைதியாக இருக்க, அந்தத் தழும்பை மெல்ல தன் உதட்டின் அருகில் கொண்டு சென்றவன், அதன் மேல் மென்மையாக இதழ் பதித்தான்.

உடலும், உள்ளமும் சிலிர்க்க கண்களை மூடிக் கொண்டாள் நயனிகா.

“நான் இதைச் செய்யலைனா இந்த ஜென்மத்துக்கும் நீங்க இப்படி என் பக்கத்தில் வந்திருக்க மாட்டீங்கல?” இமைகள் மூடியிருந்தாலும் அவளின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

முத்தமிட்டவனின் உதடுகள் விலகிக் கொண்டன.

இமைகளைப் பிரித்து அவன் முகம் பார்க்க, மனதின் வலி அவன் முகம் முழுவதும் பரவி விரிந்திருப்பதைக் கண்டவளுக்கு வருத்தமாக இருந்தாலும், ரணமாக வலித்துக் கொண்டிருக்கும் தன் வேதனைக்கு மருந்து அவனால் தான் போட முடியும் என்பதால் மௌனமாக அவனின் வதனம் கண்டாள்.

“என் மேல் உனக்கு வருத்தமும், கோபமும் இருக்கும். நீ சொன்னது உண்மை தான். நீ உயிரையே விடத் துணிவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைந்தால் என்னை மறந்துட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வன்னு தான் தயா வந்து பேசிய போது கூட அப்படிச் சொல்லி அனுப்பினேன்.

ஆனா அதைச் சொல்லும் போது எனக்குள் வலிச்சதே ஒரு வலி? அது என் வாழ்நாளில் நான் அனுபவிச்ச வலிகளை விட ரொம்ப ரொம்ப அதிகம்…” என்றான்.

முகம் வேதனையைப் பிரதிபலிக்க, கண்களோ சிவந்து மெல்லிய நீர் ததும்பச் சொன்னவனைக் கண்டவளுக்கும் வலித்தது.

அவனின் வலி உணர்த்திய செய்தி அவன் காதலின் அளவையும் எடுத்துக் கூற, மனதின் ஓரம் ஓர் இதத்தையும் தந்து காயமிட்ட மனதிற்கு ஒத்தடமிட்டது.

“இவ்வளவு வேதனையை மனதில் வச்சுகிட்டு ஏன் என்னை வேண்டாம்னு சொன்னீங்க கதிர்?” என்று கேட்டாள்.

“காரணம் இருக்கு நயனிமா. எனக்கு நீ வேணும்னு என் மனசு துடித்தாலும், உன்னைப் பிரிந்திருக்க வேண்டிய வேதனையில் உயிரே போற மாதிரி வலிச்சாலும் நான் உன்னை விட்டு விலகிப் போனதுக்குக் காரணம் நான் இத்தனை வருஷங்களாக அனுபவிச்ச வலி தான் நயனிமா…” என்றான்.

“ஏன், என்னாச்சு?”

“இங்கே வா, இப்படி வந்து உட்கார்…” என்று அவளைச் சோஃபாவில் அமர வைத்தவன், “ஏதாவது குடிக்கிறயா?” என்று கேட்டான்.

“இல்லை, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க சொல்லுங்க…” என்றவளின் அருகில் அமர்ந்து கொண்டான்.

“என்னோட அப்பா, நான் ஒரு வயதாக இருக்கும் போதே இறந்துட்டார். அதுக்குப் பிறகு அம்மா தான் தனியா போராடி என்னை வளர்த்தாங்க. அம்மாவுக்குப் பிறந்த வீட்டு ஆதரவு இருந்தாலும், அவங்களும் ரொம்பச் சாதாரணக் குடும்பம் தான் என்பதால் கஷ்டப்பட்டுத் தான் அம்மா குடும்பத்தைக் கொண்டு போனாங்க. எனக்குப் பிறக்கும் போதே இந்தக் கை இப்படித்தான் இருந்தது…” என்றவன் தன் வலது கையைக் காட்டினான்.

அவனின் அந்தக் கையை மெல்ல பற்றிக் கொண்டாள் நயனிகா.

“ஆரம்பத்தில் என் கையைப் பார்த்து அழுது புலம்பின அம்மா, அப்புறம் போகப் போக மனசு தேறிக்கிட்டாங்க. ஒரு நாளும் என் குறையைச் சொல்லி அவங்க குத்திக் காட்டியதே இல்ல.

நீ எப்படி இருந்தாலும் என் பிள்ளை ராஜா. அம்மா உன்னை நல்ல பார்த்துப்பேன்னு சொல்வாங்க. சொன்னது போலவே என்னை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினாங்க…” என்றவன் அன்னையின் நினைவில் மனம் நெகிழ்ந்தான்.

“காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு போலத்தான். ஆனா மற்ற ஆட்களும் அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாதே?” என்றவன் முகம் வேதனையில் கசங்க ஆரம்பிக்க,

“என்னாச்சுபா?” என்று பரிவுடன் கேட்டாள்.

“ஸ்கூலிலும் சரி, காலேஜிலும் சரி, என் குறையைக் கேலி செய்து பேசியவங்க பல பேர். ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அதுவும் சாப்பிடவும் ஒரே கை, அதுக்கும் ஒரே கை…” என்றவன் மேலும் சொல்ல முடியாமல் லேசாகத் தடுமாறினான்.

அவனின் மனநிலை புரிந்தது போல மெல்ல அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள் நயனிகா.

“அந்த மாதிரி சொல்லும் போது அப்படியே செத்துடலாம் போல இருக்கும்…”

“ச்சே, என்ன இது?” என்று நயனிகா பதற,

“சின்ன வயதில் மா. அப்போ பக்குவம் இல்லை தானே? சோ, சட்டுன்னு மனசு உடைஞ்சி போயிடுவேன். அம்மாகிட்ட சொல்லி அழுவேன். மனுசங்க மனசில் தான் குறை இருக்கக் கூடாது ராஜா. உன் உடல் குறை எல்லாம் பெரிய விஷயமே இல்லைன்னு தேற்றுவாங்க.

நான் ஒவ்வொரு முறை வேதனையில் துவண்டு போகும் போதும், அம்மாவோட வார்த்தைகள் தான் என்னை உயிர்ப்போடு இருக்க வைக்கும். என்னைச் சுற்றி உள்ளவர்களின் கேலி, கிண்டலால் என்னால் யாரிடமும் ஒன்றி பழக முடியலை. என் குறையையும் சாதாரணமா எடுத்துக்கிட்டு என்கிட்ட பழகியது சிலர் தான். அவங்க மட்டும் தான் இப்ப வரை என் நண்பர்களாக இருக்காங்க…” என்றான்.

“அம்மா எப்போ இறந்தாங்க கதிர்?” என்று கேட்டாள்.

“நான் படிச்சு முடிச்சு வேலைக்குச் சேர்ந்து ஒரு நிலைக்கும் வந்துட்டேன். அதுவரை நாங்க இருந்தது வாடகை வீடு தான். வேலைக்குச் சேர்ந்த பிறகு இந்தப் பிளாட் லோன் போட்டு வாங்கினேன். அம்மாவும் நானும் இந்த வீட்டில் சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கும் போது தான் அம்மா என்னை விட்டுப் போயிட்டாங்க.

ஒரு முறை இந்த வீட்டுக்கு வந்து பார்த்தாங்க. அப்போ இந்த வீட்டு வேலை நடந்துட்டு இருந்தது. அம்மா இங்கே வந்து பார்த்து நாம இனி சொந்த வீட்டில் இருக்கப் போறோம்னு சொல்லும் போது அவங்க முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தைப் பார்த்தேன்.

ஆனா அந்தச் சந்தோஷம் நிலைக்கவே இல்லை. இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடியே திடீர்னு உடம்பு சரியில்லாம என்னைத் தனியா தவிக்க விட்டு…” என்றவன் இப்போதும் அன்னையின் இழப்பை தாங்க முடியாதவனாக உடைந்து கண் கலங்கினான்.

அவனின் மனநிலை அவளுக்குப் புரிந்தது. தனக்கென இருந்த ஒரே உறவும் இல்லாமல் போவது கொடுமை அல்லவா?

அவன் தோளை ஆறுதலாக அழுத்திக் கொடுத்தாள்.

சற்றுநேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டான்.

“அம்மாவோட இழப்பு என்னை இன்னும் முடக்கிப் போட்டுருச்சுன்னு தான் சொல்லணும். வீட்டில் அம்மா இருந்தவரை எல்லாம் அவங்க பார்த்துக்கிட்டாங்க. ஆனா அதுக்குப் பிறகு என் தனிமை வாழ்க்கை ரொம்பக் கொடுமையானது.

அதிலும் நம்மளை வலிக்க வைக்கவே இந்த உலகத்தில் சிலர் உண்டு நயனிமா. அம்மா இல்லாமல் போன பிறகு பழைய வீட்டில் அக்கம் பக்கத்தில் எல்லாம் எப்பவாவது பேசுவாங்க. ஏதாவது செய்தால் கொண்டு வந்து கொடுப்பாங்க. அப்போ எல்லாம் இடது கையை நீட்டி வாங்கினால் அப்போ ஒரு மாதிரி முகத்தைச் சுளிப்பாங்க பார்.

அவங்களைப் பொறுத்தவரை அது சின்ன முகச்சுளிப்பு. ஆனால் அது என்னை எவ்வளவு காயப்படுத்தும்னு அவங்க நினைக்கக் கூட மாட்டாங்க.

சரின்னு இந்த வலது கையில் வாங்கினால், செயற்கை கையை அவங்க பார்க்கும் பார்வை வித்தியாசமா இருக்கும். அது அவங்க சாதாரணமாகச் செய்வது தான். அது எனக்கும் புரியத்தான் செய்யும். ஆனால் அந்த நேரம் சுருக்குன்னு ஒரு வலி வரும் பார்…” என்றவன் அழுத்தமாகக் கண்களை மூடி திறந்தான்.

அவனின் வலியை புரிந்து கொண்டவளுக்கு வேதனையாக இருந்தது.

“நிறைய வலிகளை வாங்கிப் பழகிப் பழகி ஒரு கட்டத்தில் என்னை நானே ஒளிச்சு வச்சுக்கப் பழகிட்டேன். அடுத்தவங்ககிட்ட பழகினால் தானே இந்த வலியும் வேதனையும்?

ஒரு கை தான் இருக்குன்னு வெளியே சொல்ல எனக்கு இருக்குற தைரியம் அதைச் சரியான முறையில் கேட்டுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை தான் பல பேருக்கு இல்லை…” என்றான்.

“அதனால் தான் நாங்க முதல் நாள் இங்கே வந்த போது, அம்மா பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தப்ப வேண்டாம்னு சொன்னீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம் ஆமா, சிலர் இந்த மாதிரி நல்ல நாளில் ரொம்பச் செண்டிமெண்ட் பார்ப்பாங்க. இடது கையில் வாங்கினால் அபசகுணமா நினைப்பாங்க. வலது கையை நீட்டினால் ஒன்னு இரக்கப்படுவாங்க. இல்லையா வித்தியாசமா பார்ப்பாங்க. அது எதுக்குன்னு தான் இப்ப எல்லாம் யார் என்ன கொடுத்தாலும் வாங்குவது இல்லை…” என்றான்.

“அம்மா அப்படி வித்தியாசம் பார்க்கிறவங்க கிடையாது கதிர்…”

“அது எனக்கும் பழகின பிறகு தானே தெரியும். அதோட அம்மா பெத்த பொண்ணும் வித்தியாசம் பார்க்கிறவ இல்லை…” என்று மெல்லிய சிரிப்புடன் சொன்னவன், அவள் கையைப் பிடித்து இழுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“நான் வித்தியாசம் பார்க்கிறவ இல்லைன்னு தெரிஞ்சும் உங்க கையைக் காரணம் காட்டி ஏன் வேண்டாம்னு சொன்னீங்க கதிர்?” என்று கேட்டாள்.

“நீ வித்தியாசமா பார்க்க மாட்டத்தான். ஆனால் அதையும் தாண்டி இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சொன்ன காரணம் தான் நயனிமா. அடுத்தவங்க பார்வையில் என் வலியும், வேதனையும் எனக்குப் பழகிப் போனது தான். ஆனால் நீ என்னைக் கல்யாணம் செய்த பிறகு, என் வலி உன்னையும் தாக்கும் டா.

உன் மேல் இரக்கமான பார்வை பதியும். கையில்லாதவன் பொண்டாட்டி தானேன்னு உன்னைக் கேலி செய்யவும் வாய்ப்பு உண்டு. அந்த வலி உனக்கு வேண்டாம்னு தான் உன்னை நான் வேண்டாம்னு சொன்னேன்…” என்றான்.

“இதெல்லாம் ஒரு காரணமா?” என்று சாதாரணமாகக் கேட்டவளை காதல் பொங்க பார்த்தான் கதிர்நிலவன்.