18 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
அன்றைய காலை அனைவருக்கும் புத்துணர்வுடன் விடிந்தது போல் இருந்தது.
அனைவரையும் விட நித்திலனுக்கு என்று சொன்னால் அது மிகையல்ல.
தான் பிறந்த பலனை அடைந்து விட்ட சந்தோஷ மிதப்பு அவன் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.
பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை அணிந்து தயாராகி, கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தவன் திருப்திப் பட்டுக் கொண்டான்.
“கிளம்பிட்டியா நித்திலா?” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்க்க, கதவருகில் நின்றிருந்தான் முரளி. அவன் கையில் குட்டி பட்டுப் பாவாடை, சட்டை அணிந்து பாந்தமாக அமர்ந்திருந்தாள் வருணா.
“குட்டிம்மா, நீயும் ரெடி ஆகிட்டியா? வா… வா… அப்பாகிட்ட வா…” என்று கண்ணில் ஆர்வ மின்ன அழைத்தான்.
“ப்பா…” என்றவள் முரளியின் கையில் இருந்து இறங்க முயல, அதற்கு முன் அவனே அவளை இறக்கி விட, தன் குட்டிப் பாதங்களை முடிந்த மட்டும் வேகமாக நகர்த்தி அவனிடம் வந்தாள்.
ஒரு பூச்செண்டே தன்னிடம் வந்தது போல ஆசையாகக் குழந்தையை அள்ளிக் கொண்டான்.
“துர்கா கிளம்பிட்டு இருக்காங்க. இந்தக் குட்டியும், என் பொண்ணும் எல்லாத்தையும் போட்டு இழுத்துகிட்டு இருந்தாங்க. அதான் தூக்கிட்டு வந்தேன். இவளை நீ பார்த்துக்கோ. நான் போய் என் வாண்டுவை பார்க்கிறேன்…” என்றான் முரளி.
“அங்கிளும், அண்ணனும் கோவிலுக்குக் கிளம்பிட்டாங்களா முரளி?”
“ஆமா, முன்னாடி அங்கே யாராவது இருக்கணுமே? அதான் அவங்க கிளம்பிட்டாங்க. அடுத்த வண்டியில் உன் அம்மா, அண்ணி, குழந்தைங்க எல்லாம் கிளம்புறாங்க. உன் கூட நானும், துர்கா கூட ஷாலினியும் வருவாள்…” என்று விவரம் தெரிவித்தான்.
“நம்ம ஆபிஸ் ஆளுங்க வரும் போது நீ தான் அவங்களைக் கவனிக்கணும் முரளி…” என்றான்.
“இதை நீ சொல்லணுமா என்ன? நான் பார்த்துக்கிறேன். நீ எதைப் பத்தியும் நினைக்காம, மாப்பிள்ளையா ஜம்முன்னு இரு…” என்றான்.
“ரொம்பத் தேங்க்ஸ் முரளி. நீயும், ஷாலினி சிஸ்டரும் இல்லனா இந்தக் கல்யாணமே கேள்விக்குறி ஆகியிருக்கும். உங்க இரண்டு பேருக்கும் கடமைப்பட்டுருக்கேன்…” என்றான்.
“என்ன நித்திலா பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க? என் ஃபிரண்டு வாழ்க்கை நல்லா இருக்க இது கூடச் செய்யலைனா எப்படி?” என்று சாதாரணமாக உரைத்த நண்பனை நன்றியுடன் பார்த்தான் நித்திலன்.
இரண்டு மாதங்களுக்கு முன் துர்காவின் வீட்டில் பேசிவிட்டு வந்த பிறகும் அந்தப் பக்கமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றதும் சோர்ந்து போனான் நித்திலன்.
யோசித்துச் சொல்கிறேன் என்ற சபரிநாதனுக்கு மகளின் பின்னாள் வாழ்க்கை பற்றி ஒரு பயம் இருந்தது.
மகளை நித்திலனுக்கு மணம் முடித்துக் கொடுத்த பின் அவர்கள் வாழ்க்கை சரியாக இருக்குமா? அவர்கள் வாழ ஆரம்பித்த பிறகு குழந்தை பிறக்காமல் அதனால் எதுவும் பிரச்சனை வருமா? என்று பல விதத்தில் யோசித்தார்.
கல்யாண முடிவு ஒரு நாள் கூத்து அல்ல. வாழ்நாள் முழுவதும் தொடரப் போகும் பந்தம். மகளைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்த பின் அவள் வாழ்க்கை எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் அவரின் சிந்தனை அவ்வாறு சென்றது.
நித்திலன் காவல்காரனாக மட்டுமே இருக்கிறேன் என்று மகளிடம் சொன்னதை அவரும் கேட்டார் தான். ஆனாலும் ஒரே வீட்டில் இருக்கும் தம்பதியர் எத்தனை நாள் அப்படி ஒதுங்கி இருக்க முடியும்? என்றாவது இருவருமே வாழ ஆரம்பிப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
நித்திலன் குணத்தைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. முக்கியமாக மகளையும், பேத்தியும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
அதோடு முரளியிடமும் கலந்து ஆலோசித்தார்.
அவன் நித்திலன் சார்பாக நிறையப் பேசி, அவரின் சிந்தனைக்கும் கூடச் சிறிது தெளிவு கொடுத்திருந்தான்.
அதன் பிறகே மகளிடம் பேசினார்.
துர்கா மறுப்புத் தெரிவித்துக் கொண்டே தான் இருந்தாள்.
மகளின் மறுப்பு எங்கே மகள் காலம் முழுவதும் தனிமையில் இருந்து விடுவாளோ என்ற பயத்தை அவருக்குக் கொடுக்க, நித்திலனின் குறை பற்றிய சிந்தனை பின்னால் சென்று மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.
மகள் காலம் முழுவதும் தனியாக இருப்பதற்கு நித்திலன் போல் ஒரு நல்லவன் அருகில் இருப்பதே பெரிதாக அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.
அதோடு குழந்தையும் அப்பா, அப்பா என்று நித்திலன் பாட்டு படிக்க… ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் ஷாலினியை மகளிடம் பேச சொன்னார்.
ஷாலினிக்குத் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இருக்கவில்லை.
நித்திலனின் குறை அவளுக்குத் தெரியாது என்றாலும் கூட, கணவன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்திலும், துர்கா மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினாலும் பேசி பேசியே துர்காவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தாள்.
துர்காவும் முழு மனதுடன் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கவில்லை.
தந்தையின் விருப்பம், தோழியின் அறிவுரைக்குச் சிறிதளவு சேவி சாய்த்த அதே வேளையில், நித்திலன் பேசிவிட்டு சென்ற வார்த்தைகள் அவளை அசைத்துப் பார்த்திருந்தது.
அவன் மனதில் முதல் முதலாக நுழைந்த பெண் என்றதும், நீயும் குழந்தையும் தவிர வேற யாருக்கும் என் வாழ்கையில் இடமில்லை என்று சொன்னதும், அதோடு நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம், உனக்குப் பாதுகாவலனாக நான் இருக்கிறேன்… என்று அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் அவளைத் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைத்திருந்தது.
அவள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன அன்று அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தான் நித்திலன்.
துர்காவிடம் பேசிவிட்டு ஊருக்குச் சென்றிருந்த அன்னைக்கு உடனே தகவல் தெரிவித்தான்.
அவர் உடனே பெரிய மகனுடன் வந்து சபரிநாதனிடம் பேசி திருமணத் தேதியை குறித்து விட்டார்.
இதோ சற்று நேரத்தில் இருவருக்கும் அருகில் இருந்த ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இரண்டு வீட்டு பக்கமும் திருமணம் எளிமையாக இருந்தால் போதும் என்று முடிவு எடுத்திருந்தனர்.
நித்திலனின் சில நெருங்கிய உறவுகள் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்வதைக் குறித்த முணுமுணுப்புகள் எழத்தான் செய்தன.
அவர்களை எல்லாம் செவ்வந்தி தான் ஏதோ சொல்லி சமாளித்து வைத்திருந்தார்.
என்ன சமாளித்தாலும் பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள் என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அன்னையைச் சமாதானம் செய்து வைத்திருந்தான் நித்திலன்.
“கார் வந்துருச்சு நித்திலா, கிளம்பு…” என்று முரளி வர,
“துர்கா கிளம்பியாச்சா?”
“அவங்க காரும் வாசலில் நிக்கிது. இரண்டு காரும் ஒரே நேரத்தில் தான் கிளம்பும்…” என்றான்.
நித்திலன் முரளியுடன் கிளம்பி வெளியே வந்த போது துர்காவும் தனது வீட்டிலிருந்து மணப்பெண் கோலத்தில் வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் நித்திலன் கண்களில் ஓர் மின்னல் வந்து போனது.
ஆனால் துர்கா யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் காரில் ஏறினாள்.
“இனி காலம் முழுவதும் பார்த்துட்டு தான் இருக்கப் போற, வா… வா…” என்று கேலியாகச் சொல்லி நண்பனை அழைத்துச் சென்றான் முரளி.
இருவரின் காரும் ஒரே நேரத்தில் கோவில் சென்று சேர்ந்தது.
மணமக்கள் உள்ளே நுழைந்ததும் நேராகக் கோவில் சந்நதிக்குச் சென்றனர்.
அங்கே ஏற்கனவே சில உறவினர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுடன் இறைவனைத் தொழுதனர்.
பின் இறைவன் முன் ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க, துர்காவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் மணவாட்டி ஆக்கிக் கொண்டான் நித்திலன்.
அவர்கள் மீது விழுந்த அச்சதையின் பின் தான் தனக்குத் தாலி கட்டியவனையே நிமிர்ந்து பார்த்தாள் துர்கா.
அவள் தன் முகத்தைப் பார்த்ததும் மென்மையாகச் சிரித்தான் நித்திலன்.
அவனின் சிரிப்பு அவளையும் சிரிக்கச் சொல்லி தூண்டுவதாக இருந்தது.
ஆனால் சிரிக்கவில்லை துர்கா.
அதற்குள் அவர்களைக் கோவிலைச் சுற்றி வர சொல்ல, இருவரும் சந்நதியைச் சுற்ற செல்லும் முன், அதுவரை சபரிநாதனிடம் இருந்த வருணாவை தான் தூக்கி கொண்டான் நித்திலன்.
“குழந்தை இங்கே இருக்கட்டும் நித்திலா. நீங்க மட்டும் போயிட்டு வாங்க…” என்று முரளி சொல்ல,
“இருக்கட்டும் முரளி. இனி எங்களுக்கு எல்லாமே இவள் மட்டும் தான். எங்க நல்லது எல்லாத்துலயும் கூட இருக்கப் போறது இவள் தான்…” என்றவன் குழந்தையை யாரிடமும கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.
துர்காவின் பார்வை ஒரு நொடி அவனைத் தழுவி மீண்டது.
“குட்டிம்மா, சாமி கும்பிட்டீங்களா?” என்று குழந்தையுடன் பேசிக் கொண்டே நித்திலன் முன்னால் நடக்க, அவனின் பின் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் துர்கா.
அவள் பின்னால் வந்தாலும் அவளை விட்டுவிட்டு ஓடவில்லை நித்திலன். அவள் வேகத்துடனே மெதுவாகவே நடந்தான்.
அதையும் அவள் கவனிக்கவே செய்தாள்.
அவர்கள் சந்நதியைச் சுற்றி விட்டு வந்ததும் அங்கிருந்த மண்டபத்தில் சென்று நிற்க, உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கடைசியாக நிரஞ்சனும், அவனின் மனைவியும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்க வந்தனர்.
அண்ணனை பார்த்து சிரித்த நித்திலன் அண்ணியைப் பார்த்ததும் முகம் இறுகிப் போனான்.
“என்ன கொழுந்தனாரே உங்களுக்குக் கூடக் கல்யாணம் ஆகிருச்சு போலிருக்கு?” என்று கேட்ட அவனின் அண்ணி ஹேமாவின் குரலில் ஒருவித நக்கல் தெறிக்க, அதுவரை அவனின் அருகில் ஏனோ தானோ என்று நின்றிருந்த துர்கா அவளைக் கூர்ந்து பார்த்தாள். உடனே அவளின் பார்வை கணவனின் மீது விழ, அவன் முக மாற்றத்தை யோசனையுடன் பார்த்தாள்.
“ஹேமா…” என்று நிரஞ்சன் அதட்டலாக அழைக்க,
“என்னங்க நீங்க, கல்யாணமே முடியாம இருந்த என் கொழுந்தனாருக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சேன்னு சந்தோசமாத்தானே சொன்னேன். அதுக்கு எதுக்குக் கோபப்படுறீங்க? நல்லதுக்கே காலம் இல்லப்பா…” என்று நொடித்துக் கொண்டாள்.
“சரிதான், நீ நல்லதுக்குத்தான் சொன்னன்னு நாங்க நம்புறோம். இப்போ போட்டோ எடுக்க நில்லு…” என்று நிரஞ்சன் சொல்லவும், துர்காவின் பக்கம் போய் நின்று கொண்டாள்.
ஆனாலும் அவளை விட்டு சில அடிகள் தள்ளியே நின்றாள். தன் இரட்டை குழந்தைகளையும் கூடத் தன் இரண்டு கைகளிலும் இறுக பற்றிக் கொண்டாள்.
என்னவோ விட்டால் அவர்கள் ஓடி விடுவார்கள் என்பது போல் இருந்தது அவளின் செய்கை.
வருணாவை தூக்க அதீத ஆர்வம் காட்டும் நித்திலன், தன் அண்ணன் குழந்தைகளைத் திரும்பி கூடப் பார்க்கவில்லை என்பதையும் கவனித்தவளுக்கு ஏதோ வித்தியாசமாகப்பட்டது.
“ரொம்பச் சந்தோஷமா இருக்குடா இப்ப உன்னைப் பார்க்க. எப்பவும் இதே சந்தோஷத்தோட இரு…” புகைப்படம் எடுத்து முடித்ததும் தம்பியை அணைத்து தன் சந்தோஷத்தை வெளியிட்டான் நிரஞ்சன்.
“தேங்க்ஸ் அண்ணா…” அண்ணனின் அணைப்பில் நெகிழ்ந்து போனான் நித்திலன்.
“போதும்… போதும்… அண்ணன் தம்பி கட்டிப்புடிச்சுப் புரண்டது. சீக்கிரம் வாங்க. காலக் காலத்தில் ஊர் போய்ச் சேரணும்…” என்று ஹேமா எரிச்சலுடன் சொல்ல, அண்ணன் தம்பி இருவரின் முகமுமே மாறியது.
“சாப்பிட்டு கிளம்புங்க அண்ணா. சாப்பிடாமல் போனால் எனக்குக் கஷ்டமா இருக்கும்…” என்று அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் நித்திலன்.
அது துர்காவின் காதிலும் விழுந்தது.
‘தம்பி திருமணத்திற்கு வந்து விட்டுச் சாப்பிடாமல் கூடப் போவார்களா என்ன?’ என்பது போல் அண்ணனையும், தம்பியையும் விநோதமாகப் பார்த்தாள் துர்கா.
“நீ கவலைப்படாம இரு. சாப்பிட்டு தான் கிளம்புவோம். அவளை நான் சமாளிச்சுக்கிறேன்…” என்று நிரஞ்சனும் மெதுவான குரலில் சொல்லி விட்டுத் துர்காவைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்து விட்டு மனைவி மக்களுடன் கிளம்பினான் நிரஞ்சன்.
அருகில் இருந்த உணவகத்தில் தான் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே தங்கள் பக்கம் வந்திருந்த உறவினர்களை எல்லாம் நிரஞ்சன் அழைத்துச் சென்று சாப்பிட வைத்திருந்தான்.
அலுவலகத்திலிருந்து வந்தவர்களை முரளி கவனித்துச் சாப்பிட வைத்துவிட்டான்.
துர்காவின் வீட்டின் பக்கமிருந்து சொற்பமாகச் சிலரே வந்திருந்தனர்.
துர்கா மறுமணம் செய்யப் போகிறாள் என்று கேள்விப்பட்டு, அவளின் மாமியார் காவேரி அவள் வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, “உன்னோட ராசியினால் என்னோட பையன் போய்ச் சேர்ந்தது பத்தாதுன்னு இப்போ இன்னொருத்தன் உயிரையும் எடுக்கப் போறீயாக்கும்?” என்று வெடுக்கென்று கேட்டார்.
அவரின் பேச்சில் துர்காவின் மேனி சட்டென்று நடுங்கிப் போனது.
“என்ன பேசுற காவேரி? ஒரு நல்லது நடக்கப் போகுது. வாழ்த்த மனசு இல்லைனாலும் பரவாயில்லை சாபம் கொடுக்காமல் இருக்கலாமே?” என்று தங்கையிடம் கேட்டார் சபரிநாதன்.
“ஆமா, உன் மகளுக்கு நான் தனியா வேற சாபம் கொடுக்க வேணுமாக்கும்? அவள் பொறப்பே சாபம் தான். அதோடு அவள் பெத்ததும் சாபம் தான். இரண்டு சாபம் பிடிச்சதும் சேர்ந்து ஒருத்தன் உயிரை எடுத்துட வேண்டாமேன்னு அக்கறையில் வந்து சொன்னா, நீ இதுவும் சொல்வ… இதுக்கு மேலயும் சொல்வ…” என்று நொடித்துக் கொண்டார்.
“சாபம் இல்லங்க… துர்காவும், வருணாவும் என் வாழ்க்கையில் வரப் போகும் வரம். அவங்களால் நான் புதுசா பிறந்து இருக்கேன். இனி அவங்களை இப்படிப் பேசாதீங்க. கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்…” குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றிருந்த நித்திலன் அவளை விட அந்த நேரம் வர, அவருக்குச் சரியான பதிலடி கொடுத்தான்.
“ஓஹோ! நீங்க தான் இவளை கட்டிக்கப் போறவரா? உங்களைப் பார்க்கத்தான் தம்பி வந்தேன். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். இவங்க இரண்டு பேருமே ராசி இல்லாதவங்க. இவளைக் கட்டிக்கிட்டா உங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை. உங்க உயிரை காப்பாத்திகோங்க…” என்றார் காவேரி.
“நீங்க நான் சொன்னதைக் கவனிக்கலைன்னு நினைக்கிறேன். என் உயிரே அவங்க இரண்டு பேரும் தான். அப்படி என் உயிர் அவங்களால் போனாலும் என் மரணத்தைச் சந்தோஷமாக ஏத்துக்குவேன்…” என்றவனைக் காவேரி விநோதமாகப் பார்க்க, சபரிநாதன் நெகிழ்ந்து போக, ‘எங்கள் மீது இவனுக்கு இவ்வளவு அன்பா?’ என்பது போல் அவனைப் பார்த்தாள் துர்கா.
“சரிதான். மயங்கிப் போயிருக்கீங்க போல இருக்கு. நல்லது சொல்ல வந்த என்னைச் சொல்லணும்…” என்று அவனிடம் சொன்னவர்,
“இதோ பார் அண்ணா, கல்யாணம் கச்சேரின்னு கூப்பிட என் வீட்டுப் பக்கம் கூட வந்துடாதே. எங்க வீட்டிலிருந்து யாரும் வர மாட்டோம். அதே மாதிரி நம்ம பக்க சொந்த பந்தமும் என் பேச்சை தான் கேட்கும். யார் வீட்டுக்கும் போய் அவமானப்படாதே…” என்று சொல்லி விட்டு உடனே அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
“அவங்களை விட்டு விலகித்தானே பா இருக்கேன். அப்புறமும் ஏன்பா ஒவ்வொரு முறையும் வீடு தேடி வந்து என்னைக் காயப்படுத்தி விட்டுப் போறாங்க. அப்படி என்ன வன்மம் என் மேல?” என்று தந்தையிடம் வருத்தமாகக் கேட்டாள்.
“விடுமா, எங்கே நீ நல்லா வாழ்ந்துவிடுவியோனு அவளுக்கு வயித்தெரிச்சல். சிலர் எந்த ஜென்மத்திலும் திருந்த மாட்டாங்க. என் தங்கச்சி அந்த வகைத் தான். அவள் பேசிட்டுப் போனதை பத்தி கவலைப்படாம இரு…” என்று மகளைச் சமாதானப்படுத்தியிருந்தார் சபரிநாதன்.
காவேரி சொல்லவில்லை என்றாலும் திருமணத்திற்கு அவரை எல்லாம் அழைக்கும் எண்ணமே சபரிநாதனுக்கு இருக்கவில்லை. தங்கள் பக்கமும் நிற்கும் சில உறவுகளை மட்டும் அழைத்திருந்தார்.
அதனால் பெரிய கூட்டம் இல்லாமல் சிம்பிளாகத் திருமணம் நடந்து முடிந்திருந்தது.
“வருணாவுக்கு இட்லி ஊட்டலாம் தானே?” என்று தன்னருகில் அமர்ந்திருந்த துர்காவிடம் கேட்டான் நித்திலன். அவனின் மடியில் குழந்தை அமர்ந்திருந்தாள்.
“என்கிட்ட கொடுங்க. நான் ஊட்டிவிடுறேன். நீங்க சாப்பிடுங்க…” என்றாள் துர்கா.
“இல்ல, நானே ஊட்டுறேன். எனக்கு அவளுக்கு ஊட்டி விட ஆசையா இருக்கு…” என்று நித்திலன் சொல்ல, அதற்கு அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
அவர்கள் மூவரும் மட்டும் அந்த உணவகத்தில் தனியாக ஒரு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடுவதைப் பற்றிப் பேசாம, குழந்தைக்கு ஊட்டி விடுவதைப் பற்றிப் பேசிட்டு இருக்காங்க…” அவர்களுக்கு நேராக இன்னொரு மேஜையில் அமர்ந்திருந்த ஷாலினி கணவனிடம் முணுமுணுத்தாள்.
“அப்படியாவது இரண்டு பேரும் பேசிக்கிறாங்கன்னு சந்தோஷப்படு” என்றான் முரளி.
“அதென்னவோ சரிதான்…” என்றாள்.
அவர்களுடன் சபரிநாதனும், செவ்வந்தியும் அமர்ந்திருந்ததால் அதற்கு மேல் பேசாமல் சாப்பிடும் வேலையைத் தொடர்ந்தனர்.
செவ்வந்தி மட்டும் இரண்டு நாட்கள் இளைய மகனுடன் இருப்பதாக முடிவாகியிருக்க, நிரஞ்சன் சற்று முன் தான் தன் குடும்பத்துடன் ஊருக்குக் கிளம்பியிருந்தான்.
வருணாவிற்குப் பொறுமையாக ஊட்டிவிட்டான் நித்திலன். மகளும் அடம் பிடிக்காமல் சாப்பிடுவதை வியப்புடன் பார்த்தாள் துர்கா.
மகள் உண்ட பிறகே அவன் உண்டான். அனைத்தையும் கவனித்தாலும் எதிலும் தலையிடாமல் அமைதியாக இருந்தாள் துர்கா.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்குக் கிளம்பினர்.
“இங்கே எங்கே போறோம்? வீடு இந்தப் பக்கம்ல இருக்கு…” தங்கள் வீட்டின் பக்கம் கார் செல்லாமல், வேறு பக்கம் சென்றதும் அவனிடம் மெல்ல கேட்டாள் துர்கா.
“இப்பவும் நம்ம வீட்டுக்குத்தான் போறோம்…” என்று மென்மையான சிரிப்புடன் சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள்.
அவளுக்கு அதற்கு மேல் அவன் விளக்கம் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை.
கார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன் நின்றது.
அதைப் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினாள். அங்கிருந்த மின்தூக்கியில் அவளை அழைத்துச் சென்றான்.
ஐந்து அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் இருந்த பிளாட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அவர்களுக்கு முன் அங்கே வந்திருந்த ஷாலினி இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள்.
மனைவி மகளுடன் சந்தோஷமாகத் தங்கள் புது வீட்டிற்குள் நுழைந்தான் நித்திலன்.
“இனி இதுதான் நம்ம இருக்கப் போற வீடு…” என்றவனை விலுக்கென்று திரும்பி அவன் முகம் பார்த்தாள் துர்கா.
“வாடகைக்கு எடுத்து இருக்கீங்களா? ஏன்? பழைய வீடே நல்லாத்தானே இருந்தது?” என்று கேட்டாள்.
“வாடகை வீடு இல்ல. சொந்த வீடு தான்…” என்றவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.
அந்தப் பிளாட் பெரியதாக இருந்தது. இன்னும் வீட்டை சுற்றி பார்க்கவில்லை என்றாலும், நிறைய அறைகள் இருப்பதை அனுமானிக்க முடிந்தது.
அந்தச் சாதாரணக் காம்பவுண்டு வீட்டில் இருந்தவன், இவ்வளவு பெரிய பிளாட் வாங்கியிருக்கிறானா? என்பது போல் பார்த்தாள்.
அதோடு தந்தையின் ஞாபகமும் வந்தது.
திருமணம் முடிந்த பிறகும் பக்கத்து வீட்டில் தான் இருக்கப் போகிறோம் என்று நினைத்தவளுக்குத் தந்தையைப் பற்றிப் பெரிதாகக் கவலை இருக்கவில்லை.
ஆனால் இப்போது? என்று கலக்கத்துடன் அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தாள்.
“இந்தப் பிளாட்ல மூணு பெட்ரூம் இருக்கு. மாமாவும் நம்ம கூடத்தான் இருக்கப் போறார்…” என்று அவள் கலக்கத்தை அறிந்தவன் போல் பதில் சொன்னான் நித்திலன்.
பட்டென்று திரும்பி அவன் கண்ணோடு கண் நோக்கினாள் துர்கா.
அவள் கண்களில் சுகமாய்த் தொலைந்து போனான் நித்திலன்.