18 – இதயத்திரை விலகிடாதோ?
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
மனைவியை ஊரில் விட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்த சூர்யா, வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல, இருள் சூழ்ந்த வீடு தான் அவனை வரவேற்றது.
காலை ஐந்து மணி தான் ஆகியிருந்ததால் இருட்டாக இருக்க, விளக்கை போட்டு விட்டு, தன் உடைகள் இருந்த பையைப் படுக்கையறையில் ஓரமாக வைத்து விட்டு, குளியலறை சென்று வந்து, உடையை மாற்றி விட்டுப் படுக்கையில் விழுந்தான்.
கண்களில் உறக்கம் இன்னும் மீதமிருக்க எட்டு மணி வரை தூங்க நினைத்தான்.
ஆனால் படுக்கையில் எப்போதும் அவன் அருகில் படுத்திருக்கும் மனைவி இல்லாமல் வெறுமையாக இருக்க, அவளின் ஞாபகம் வந்தது.
‘இந்நேரம் என்ன செய்துட்டு இருப்பாள்?’ என்று யோசித்தவன், ‘அம்மா வீட்டில் இருக்கோம்னு நல்லா ஜாலியா குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பாள்…’ என்று அவனே பதில் சொல்லிக் கொண்டான்.
அவளின் தலையணையை எடுத்து அணைத்தவன் கண்களை மூடிக் கொண்டான்.
அப்போது அவனின் கைபேசி இசை எழுப்ப, ‘இந்த நேரம் யார்?’ என எடுத்துப் பார்த்தான்.
யுவஸ்ரீ தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
‘இவள் தூங்கலையா?’ என வியப்பாக நினைத்தவன், அழைப்பை ஏற்றான்.
“ஏங்க, ஊருக்கு போயிட்டீங்களா?” என்று யுவஸ்ரீ கேட்க,
“ம்ம், வந்துட்டேன்…” என்றான்.
“எனக்கு ஏன் போன் பண்ணி சொல்லலை?”
“நீ இந்த நேரம் தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன். தூங்கலையா?
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இப்பத்தான் எழுந்தேன். நீங்க ஊருக்கு இந்த நேரம் போயிருக்கணுமேன்னு நினைச்சு தான் போன் போட்டேன். சரி, இப்ப என்ன செய்றீங்க?”
“படுத்துட்டேன்டி. உறக்கம் வருது. கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்…”
“அலாரம் வச்சுட்டு தூங்குங்க. அப்பத்தான் ஆபிஸ் கிளம்ப சரியா இருக்கும்…”
“சரி, நான் பார்த்துக்கிறேன். என்னைத் தூங்க விடு!” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
அலாரம் வைக்காமலே சற்று நேரத்தில் தூங்கியும் போனான்.
மீண்டும் அவனின் அலைபேசி அழைக்க, அந்தச் சத்தத்தில் தான் கண்விழித்தான்.
எடுத்துப் பார்க்க, இப்போதும் யுவஸ்ரீ தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“தூங்க விடுடி! சும்மா சும்மா போன் போட்டுட்டு இருக்க…” என்று கடுப்படித்தான்.
“என்ன இன்னும் தூங்க போறீங்களா? அப்போ இன்னும் நீங்க கிளம்பலையா?” என்று கேட்டாள்.
“இன்னும் விடியவே இல்லை. எங்க கிளம்ப?”
“சூர்யா, மணி ஒன்பது ஆச்சு…” என்றதும் பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தான்.
அப்போது தான் ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தைப் பார்த்தான்.
“அலாரம் வைக்க மறந்து அசந்து தூங்கிட்டேன். நான் கிளம்புறேன். நீ போனை வை!” என்றான்.
“ஆபிஸ் போன பிறகு மறக்காம சாப்பிட்டு விடுங்க. நேரமாகிடுச்சுன்னு சாப்பிடாம இருந்துடாதீங்க…” என்றாள்.
“சரி, சரி… வை…!” என்றவன் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான்.
அவன் அலுவலகம் சென்று சேரும் நேரத்தை கணித்து, மீண்டும் அழைத்து, அவன் காலை உணவை உண்டுவிட்டானா? என்று விசாரித்தாள்.
அவன் சாப்பிட்டு விட்டதாகச் சொன்ன பிறகு தான் விட்டாள்.
மதியமும் அதே போல் அழைத்துக் கேட்டு பதிலை பெற்றுக் கொண்டாள்.
மாலை அவன் வீட்டிற்குக் கிளம்பி விட்டானா என்று கேட்க திரும்ப அழைத்தாள்.
“ஏன்டி அலாரம் வச்சது போல டான்னு நேர நேரத்துக்குப் போன் போடுற?” என்று கேட்டான்.
“தனியா இருக்கீங்க. நீங்க சாப்பிட்டீங்களா இல்லையான்னு நான் தெரிந்து கொள்ள வேணாமா?” எனக் கேட்டாள்.
“நான் என்ன சாப்பிடாமல் பட்டினியாகவா இருந்துட போறேன்? இப்பத்தான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். வைடி போனை…!” என்று வைத்து விட்டான்.
வெளியே சாப்பிட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி மீண்டும் அழைத்தாள் யுவஸ்ரீ.
“யுவா நீ என்னை ரொம்பக் கடுப்படிக்கிற. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு தூங்கப் போறேன். போதுமா என்னோட அப்டேட்? என்னை நிம்மதியா விடுடி. என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாள்னு என்னை எஞ்சாய் பண்ண விடுறியா? சும்மா நச்சு நச்சுன்னு போன் பண்ணிட்டே இருக்க…” என்று எடுத்ததும் அவளைப் பேச விடாமல் கத்தினான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அந்தப் பக்கம் சில நொடிகள் அமைதியாக இருந்த யுவஸ்ரீ, பின் தொண்டையை லேசாகச் செருமி கொண்டு, “பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாள்னு எஞ்சாய் பண்ணுங்க…” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவள் குரல் கரகரப்பாக ஒலித்ததோ? என்று ஒரு நொடி புருவங்களைச் சுருக்கினாலும் அதற்கு மேல் அதைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டான்.
அதன் பிறகு யுவஸ்ரீ கணவனுக்கு அழைக்கவே இல்லை.
அவனுக்கும் அவள் அழைக்காதது முதலில் நிம்மதியாகவே இருந்தது
மறுநாள் வெள்ளி அன்று வேலையை முடித்து விட்டு, நண்பர்களுடன் சென்று குடித்து விட்டு, இரவு பதினொரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தான் சூர்யா.
மனைவி ஊரில் இருப்பதை மறந்து வழக்கம் போல் போதையில் கதவை தட்டினான்.
ஊரில் இருக்கும் மனைவி எப்படிக் கதவை திறப்பாளாம்?
சிறிது நேரம் தட்டி விட்டு ஓய்ந்தவன், ‘புருஷன் வீட்டுக்கு வரும் போது கதவை திறந்து விடணும்னு நினைக்காம தூங்கிட்டியாடி பொண்டாட்டி?’ என்று முனங்கிக் கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் சாவியைத் தேடி எடுத்தான்.
தடுமாறி கதவை திறந்து உள்ளே சென்றவன், விளக்கை போட்டு விட்டு, “ஏய் பொண்டாட்டி, அதுக்குள்ள உனக்கு என்ன தூக்கம்?” என்று கத்திக் கொண்டே நேராகப் படுக்கையறைக்குச் சென்றான்.
அங்கே விளக்கை போட்டு விட்டு கட்டிலை பார்க்க, வெறுமையாக இருந்தது.
‘எங்கே போனா இவ?’ என்று முனங்கிக் கொண்டே தடுமாறி மீண்டும் வரவேற்பறைக்கு வந்தவன், சோஃபாவில் படுத்திருக்கிறாளா என்பது போல் பார்த்து ஏமாந்து, சமையலறைக்குச் சென்றான்.
அங்கேயும் அவள் இல்லை என்றதும், பால்கனிக்குச் சென்று தேடினான்.
வீட்டில் இல்லாதவள் எப்படிக் கிடைப்பாள்?
வீட்டைச் சுற்றி சுற்றி வந்தவன், “ஏய் பொண்டாட்டி, எங்கடி போன? பசிக்குதுடி. வெஜ்ஜா இருந்தாலும் ஓகே. கொண்டு வா! உன் கையால சாப்பிட்டால் தான் எனக்குத் தூக்கம் வரும்…” கத்திக் கொண்டே சமையலறைக்கு மீண்டும் சென்றான்.
அங்கே இருந்த பாத்திரங்களை உருட்டினான்.
“சோறு ஆக்கி வைக்காம எங்கடி போன? இரு, உன்னை எப்படிக் கண்டு பிடிக்கிறேன் பார்…” என்றவன் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று யோசித்தான்.
பின் ஏதோ ஞாபகம் வந்தது போல் தான் கைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தான்.
அழைப்பு மணி ஓயும் நேரத்தில் தான் அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றாள் யுவஸ்ரீ.
“புருஷனுக்குச் சோறு ஆக்கி வைக்காம எங்கடி போன பொண்டாட்டி? இப்ப எனக்குப் பசிக்குது. வந்து சாப்பாடு போடு…” என்று குழறலாகக் கேட்ட கணவனின் குரலில் அந்தப் பக்கம் அமைதியாக இருந்தாள் யுவஸ்ரீ.
“ஏய், பேசுடி! எங்க போன? இப்ப பதில் சொல்ல போறீயா? இல்லையா?” என்று கத்தினான்.
“நீங்க வெளியே சாப்பிட்டீங்களா இல்லையா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“சாப்பிட்டேனா?” என்று யோசித்தவன், “ஹான், சாப்பிட்டேன்… சாப்பிட்டேன்… ஆனா இப்ப பசிக்குது…” என்றான் வயிற்றைத் தடவிக்கொண்டே.
“கிச்சன் கபோர்டில் பிஸ்கட் பாக்கெட் இருக்கும். அதை எடுத்து சாப்பிட்டுவிட்டு படுக்க…” என்றாள்.
“அடியேய்! சாப்பாடு கொடுன்னு சொன்னா பிஸ்கட் சாப்பிட சொல்ற? பிஸ்கட் சாப்பிட நான் என்ன சின்னப் பாப்பாவா?” என்று கடுப்பாகக் கேட்டான்.
“நான் இப்ப ஊரில் இருக்கேன். அது ஞாபகம் இருக்கா, இல்லையா? ஊரில் இருக்கிறவகிட்ட சாப்பாடு கொடுன்னா எப்படிக் கொடுக்கிறது?” அவளும் இப்போது எரிச்சல் பட்டாள்.
“என்ன ஊரில் இருக்கியா? அங்கே எதுக்குப் போன? உடனே கிளம்பி வா! வந்து எனக்குச் சாப்பாடு வச்சு கொடு…” சிறு பையன் போல் அடம் பிடித்தான்.
“நீங்க தானே பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாள்னு எஞ்சாய் பண்ண போறதாகச் சொன்னீங்க? எஞ்சாய் பண்ணுங்க…” என்றாள்.
“அப்படியா சொன்னேன்? சும்மா சொல்லியிருப்பேன். இப்ப சாப்பாடு தருவியா, இல்லையா?” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்தான்.
“சூர்யா… என்ன இது? சின்னப் பையன் மாதிரி அடம் பிடிச்சுட்டு இருக்கீங்க? பிஸ்கட் எடுத்து சாப்பிட்டுட்டு படுத்து தூங்குங்க…” என்றவள் மேலும் பேசிக் கொண்டிருக்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.
“கொழுப்பெடுத்த பொண்டாட்டி!” என்று கோபமாகக் கத்தியவன், “பிஸ்கட் சாப்பிடணுமாம்… பிஸ்கட். யாருக்கு வேணும் பிஸ்கட்…” என்று புலம்பிக் கொண்டே சாப்பிடாமல் சென்று படுக்கையில் விழுந்தான்.
ஆனாலும் அவனால் உறங்க முடியவில்லை.
அருகில் மனைவி இல்லாதது குறையாக இருக்க, “ஏன்டி என்னை விட்டுட்டு ஊருக்குப் போன?” என்று அவளின் தலையணையிடம் கேள்வி கேட்டான்.
உடனே மீண்டும் மனைவிக்கு அழைத்தவன், தலையணையிடம் கேட்ட அதே கேள்வியை அவளிடமும் கேட்டான்.
அவனுக்கு யுவஸ்ரீ எந்தப் பதிலும் சொல்லவில்லை.
“பதில் சொல்லுடி. ஏன் என்னை விட்டுட்டு போன? உடனே வா! உன்னைக் கட்டிக்கிட்டு தூங்கணும்…” என்றான்.
இப்போது தன் மௌனத்தை உடைத்தாள் யுவஸ்ரீ.
“இதுக்கு மட்டும் உங்களுக்கு நான் வேணுமா சூர்யா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்.
“என்னது இதுக்கு மட்டும்? எல்லாத்துக்கும் தான் நீ வேணும். நீ வீட்டில் இல்லாம வீடே வெறிச்சோடி இருக்கு. பாரு, நீ இல்லாம என்னால தூங்க கூட முடியலை…” என்று போதையில் புலம்பினான்.
அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா? என்றே யுவஸ்ரீக்கு புரியவில்லை.
நிதானமாக இருக்கும் போது தான் போன் செய்ததற்கு நச்சுச் செய்வதாகச் சொன்னவன், போதையில் அதுவும் நள்ளிரவில் தன்னைத் தேடி நிமிஷத்திற்கு ஒரு போன் செய்கிறான். தன்னைத் தேடுகிறான். நீ இல்லாமல் நன்றாக இல்லை என்று உருகுகிறான்.
இதை அவன் நிதானமாக இருக்கும் போது சொல்லியிருந்தால் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்பாள்.
போதையில் அவன் தேடும் தேடலை ஏனோ அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“கண்ணை மூடி தூங்குங்க சூர்யா. தூக்கம் வரும்…” என்றாள் குரல் கம்ம.
“நீ வா! நீ வந்து என்னைத் தூங்க வை! தலை கோதி விடு!” என்று பிடிவாதமாக அழைத்தான்.
“இன்னும் இரண்டு நாளில் வந்துருவேன். இப்ப தூங்குங்க. சரியா தூங்கலைனா உங்களுக்குத் தலைவலி வந்திடும்…”
“ஆமா, காலையில் எனக்குத் தலைவலிக்குமே? அப்ப யாரு காஃபி போட்டு கொடுப்பா? காஃபி போட்டுக் கொடுக்கக் காலையில் வந்திரு…”
“குடிக்காதீங்க! குடிக்கலைனா தலைவலி வராது. நானும் தேவைப்பட மாட்டேன்…”
“அடியே பொண்டாட்டி, காஃபி போடுறதுக்கு இல்லைனாலும் நீ வேணும்டி. அது எப்படி நீ தேவைப்பட மாட்டன்னு சொல்லுவ?” என்று கத்தினான்.
“அப்படியா சூர்யா? நான் உங்களுக்குத் தேவையா?”
“ஆமா… ஆமா… இப்படிக் கேள்வி கேட்டுட்டு இருந்தீனா இனிமே உன்னை ஊருக்கே விட மாட்டேன்…” என்றான் அதிகாரமாக.
இப்போது அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“இதை நீங்க போதையில் இல்லாம சொல்றீங்களான்னு பார்ப்போம். இப்ப தூங்குங்க…” என்றாள்.
தூக்கம் வரவில்லை என்று புலம்பியவனைப் பேசி பேசியே தூங்க வைத்த பின் தான் அழைப்பை வைத்தாள் யுவஸ்ரீ.
காலையில் எழும் போதே தலை வலிக்க, சூர்யாவின் மனது மனைவியைத் தேடியது.
‘புருஷன் தனியா இருக்கானே, என்ன செய்வான்னு கொஞ்ச கூட அக்கறை இல்லாம இரண்டு நாளா போன் போடாமல் இருக்கா பாரு. இப்ப தலைவலிக்குது. காஃபிக்கு என்ன செய்வேன்?’ என்று இரவில் அவளையும் தூங்க விடாமல் போனில் பேசியதை மறந்து கடுப்பாக முனங்கிக் கொண்டான் சூர்யா.
‘வெளியே சாப்பிட்டு அப்படியே ஒரு காஃபி குடிக்க வேண்டியது தான்’ என்று நினைத்தபடி எழுந்து கிளம்பினான்.
பகலில் நண்பர்களுடன் சுற்றி விட்டு, இரவு குடித்து விட்டு வந்து, அன்று இரவும் மனைவிக்கு அழைத்து, அவனும் தூங்காமல், அவளையும் தூங்க விடாமல் ஒரு வழி ஆக்கினான்.
அவனைப் பேசியே சமாளித்து வைத்தாள் யுவஸ்ரீ.
திங்கள் அன்று அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்தாள் யுவஸ்ரீ.
இரவு ரயிலில் வரும் போதும் அவளிடம் போதையுடன் பேசிக் கொண்டிருந்தான் சூர்யா. தான் காலையில் வந்து விடுவதாகச் சொல்லி அவனைத் தூங்க வைத்திருந்தாள்.
இரவு போதையில் இருந்தவன், காலையில் தன்னை அழைக்க வர மாட்டான் என்று ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ பிடிக்க வெளியே சென்ற போது, எதிரே வந்தான் சூர்யா.
அவனை எதிர்பார்க்காமல் அவளுக்கு இன்ப அதிர்ச்சியானது.
“சூர்யா, நீங்க இங்கே?” என்று வியப்பாகக் கேட்டாள்.
“நீ தான் இன்னைக்கு வர்றேன்னு சொல்லியிருந்தியே… அலாரம் வச்சு எழுந்து வந்தேன். வா, போகலாம்…” என்று அவளைப் பைக் அருகில் அழைத்துச் சென்றான்.
“நைட் குடிச்சிருந்தீங்க? இப்ப வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டாள்.
“போதை எல்லாம் இறங்கிடுச்சு. தலை தான் வலிக்குது…” என்றான்.
அவன் அவளை அழைக்க வந்ததே மகிழ்ச்சியாக இருக்க, அவனின் தோளை பிடித்துப் பின்னால் அமர்ந்து கொண்டவள், “வீட்டுக்குப் போய்க் காஃபி போட்டு தர்றேன். தலைவலி சரியா போயிடும்…” என்றாள்.
செல்லும் வழியில் பால் பாக்கெட் வாங்கிச் சென்று சொன்ன படி காஃபியும் போட்டு கொடுத்தாள்.
காஃபியைக் குடித்ததும் புத்துணர்ச்சியாக உணர்ந்தவன், “இரண்டு நாளா இந்தக் காஃபியை மிஸ் பண்ணினேன்…” என்றான்.
“காஃபியைத்தான் மிஸ் பண்ணிருக்கீங்க. என்னை இல்லை?” இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டு கேட்டாள்.
“உன்னை எதுக்கு மிஸ் பண்றேன்? என் பொண்டாட்டி ஊருக்குப் போட்டாள்னு ஜாலியா இருந்தேன்…” கேலியாகச் சொல்லி சிரித்தான்.
“அதானே! நீங்க என்னை மிஸ் பண்ணிட்டால் நம்ம நாட்டுப் பக்கம் எல்லாம் கொரானா வராமல் ஓடிப் போயிடாது?” என்று நொடித்துக் கொண்டவள், கோபத்துடன் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவள் அருகில் தானும் படுக்கையில் சென்று விழுந்தவன், அவளின் இடையைச் சுற்றி கையைப் போட்டு, தன் அருகில் இழுத்து, அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.
“தள்ளிப்போங்க! என்னைத் தான் நீங்க மிஸ் பண்ணலைல? போங்க அந்தப் பக்கம்!” அவனின் முடியைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.
“ஏய், முடியை விடுடி! வலிக்குது…” என்று அலறினான்.
“நல்லா வலிக்கட்டும். இனி முடியை வெட்டாதீங்க. இப்படிப் பிடித்து இழுக்க இதுதான் வசதியா இருக்கு…” என்று கிண்டலாகச் சொன்னவள், அவனின் பிடரி முடியைக் கொத்தாகப் பிடித்தாள்.
“ஷ்ஷ்! அடியேய்! அடி போட போறேன் பாரு. முடியை விடு!”
“உங்களை எத்தனை நாளா முடியை வெட்ட சொல்லிட்டு இருக்கேன். வெட்டுறீங்களா? இனி முடியை வெட்டலைனா இப்படித்தான் பிடிச்சு ஆட்டுவேன். அடுத்து குடுமி போட்டு விடுவேன்…”
“என்னை மாதிரி ஸ்டைலா இருக்கத் தெரியலைன்னு உனக்குப் பொறாமைடி. அதான் என் ஸ்டைலான முடியை வெட்ட நினைக்கிற. சரியான பட்டிக்காடு…” என்றவன் அவளின் இடையில் கிச்சு கிச்சு மூட்டினான்.
“அச்சோ! என்ன செய்றீங்க? விடுங்க…” அவள் துள்ளி விலக, அவளை விலக விடாமல் தடுத்தவன், விடாமல் அவளைச் சீண்டினான்.
அதில் அவனின் முடியைப் பிடித்திருந்த அவளின் கை தன்னால் விலகியது.
‘அது!’ என்று நினைத்துக் கொண்டவன், தன் சீண்டும் வேலையை வேறு வகையில் தொடர்ந்தான்.
“சூர்யா, என்ன பண்றீங்க? விடுங்க!” என்று அவனிடமிருந்து விலக நினைத்தாள்.
“உன் பக்கத்தில் வந்தே நாலு நாள் ஆச்சுடி பொண்டாட்டி…” என்று தாபமாகச் சொன்னான்.
“நீங்க தானே நான் ஊருக்கு போயிட்டேன்னு சந்தோஷப்பட்டீங்க? இப்ப மட்டும் எதுக்குப் பக்கத்தில் வர்றீங்க? போங்க அந்தப் பக்கம். இன்னும் ஒரு வாரத்துக்கு என் பக்கத்தில் நீங்க வரக் கூடாது…” என்று தள்ளிவிட்டாள்.
“ரொம்பப் பண்ணாதேடி…” என்று அதட்டி அருகில் இழுக்க,
“நான் பேசினால் நச்சு பண்றேன்னு சொல்றீங்க. என் பக்கத்தில் மட்டும் வரலாமா?” என்றாள் ஊடலாக.
“அதான் அதுக்குப் பதில் தினமும் நைட் நான் தானே உனக்குப் போன் போட்டு பேசினேன். நீயா பேசின?”
“அது போதை செய்த வேலை. இல்லனா என்கிட்ட பேசிருப்பீங்களா என்ன?” நொடித்துக் கொண்டாள்.
“பேசினேன்ல? அதான் மேட்டர். நீ சும்மா பேச்சை மாத்தாதே…” என்றவன், அதற்கு மேல் அவளைப் பேச விடவில்லை.