17 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 17

காலை விடிந்த பிறகும் கணவனின் மார்பை விட்டு விலகாமல் பற்றுக்கோல் தேடும் கொடி போல் கணவனைப் பற்றிக் கொண்டாள் சக்தி.

தான் அணைத்ததும் கணவன் விழித்துக் கொண்டு பதிலுக்கு அணைப்பான் அல்லது ‘என்ன இன்னைக்கு இந்த மாற்றம்?’ என்று கேட்பான் என்ற அவளின் எண்ணம் எதுவும் நிறைவேறவில்லை.

அவள் அணைத்ததும் சர்வேஸ்வரன் விழித்துக் கொண்டான் தான். ஆனால் தான் விழித்துக் கொண்டதை அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.

மனைவியின் அருகாமையில் சிலிர்த்தெழுந்த தன் உணர்வுகளைக் கடினத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு முயன்று நித்திரையைத் தருவித்துக் கொண்டான்.

காலையில் கண்விழித்த போதும் சக்தி அப்படியே இன்னும் அவனை அணைத்துக் கொண்டு படுத்திருக்க, சர்வேஸ்வரன் விழி திறந்து அவளின் நிலையைப் பார்த்தவன் லேசாக அலுங்கினான்.

அதில் அவன் விழித்துவிட்டதை உணர்ந்த சக்தி வேகமாக விலகி அவளின் தலையணையில் தலை வைத்து உறங்குவது போல் காட்டிக் கொண்டாள்.

அவளின் முயற்சியைக் கண்டவனுக்குப் புன்னகை எட்டிப் பார்த்தது.

அதரங்களில் தவழ்ந்த புன்னகையுடன் மனைவியின் அருகில் முகத்தைக் கொண்டு சென்றவன் உறங்குவதாகக் காட்டிக் கொள்ள மூடியிருந்த அவளின் இமைகளின் மீது தன் அதரங்களைப் பதித்து விட்டு மெல்ல விலகினான்.

அவனின் உதடுகள் தீண்டியதும் இன்னும் அழுத்தமாக இமைகளை மூடிக் கொண்டாள் சக்தி.

அதில் அவனுக்குச் சப்தம் போட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஆனாலும் அவளைச் சீண்ட மனதில்லாமல் விலகி படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குச் சென்றான்.

அவன் கதவை மூடும் சப்தம் கேட்டதும் விழிகளைத் திறந்த சக்தியின் கண்கள் கலக்கத்தை வெளிப்படுத்தின.

‘இன்றைய நாள் நடக்கப் போகும் சம்பவங்களுக்காக என்னை மன்னிச்சுடுங்க ஈஸ்வர். எனக்கு வேற வழி தெரியலை…’ என்று மானசீகமாகக் கணவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

கணவன் அறைக்குள் சுற்றி வந்த போதெல்லாம் சக்தியின் கண்கள் அவனைச் சுற்றி வந்தன.

அவள் பார்வை தன்னைத் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்ந்தே இருந்தாலும் அவளிடம் அவன் என்னவென்று கேட்டுவிடவில்லை.

முதலில் குளித்துக் கிளம்பி சர்வேஸ்வரன் கீழே செல்ல, அவனைப் பின்பற்றித் தானும் தயாராகிக் கீழே சென்றாள் சக்தி.

காலை உணவை உண்ணும் நேரத்தில் சக்தியிடம் லேசான பதட்டம் தெரிவதை பார்த்தவன், “எதைப் பத்தியும் நினைக்காம சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும் கவனம் வை சக்தி. பார் ஒரு இட்லி கூட முழுசா சாப்பிடலை. நல்லா சாப்பிடு…” என்றான்.

‘சரி’ என்று அவனுக்குத் தலையை ஆட்டினாலும் சக்தியால் சாப்பிடவே முடியவில்லை.

தொண்டைக்குள் இறங்க சிரமப்பட்ட உணவை வம்படியாக வயிற்றுக்குள் தள்ளினாள்.

அவள் உண்டு முடிக்கும் வரையிலுமே பொறுமையாகவே காத்திருந்தான். அதில் அவனின் அக்கறை தெரிய, அந்த அக்கறை சக்தியை கலங்க வைத்தது.

தான் இன்று மிகவும் உணர்ச்சி வசப்படுகிறோம் என்று சக்தி உணர்ந்தே இருந்தாலும் அதில் இருந்து அவளால் மீள முடியவில்லை.

உண்டு முடித்து இருவரும் கூடத்திற்குச் சென்ற போது வாசலில் பேச்சுச் சப்தம் கேட்டது.

யார் என்று சர்வேஸ்வரன் பார்க்க, அவனுடன் வழக்கின் போது மேடையில் அமரும் பெரியவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை வியப்பாகப் பார்த்தவன், பின் வரவேற்றான்.

“வாங்க ஐயா, வாங்க பெரியப்பா, வாங்க மாமா…” என்று அவன் அவர்களை அழைக்கும் முறை சொல்லி வரவேற்றான்.

அவர்களின் வரவை கண்டதும் அவ்வளவு நேரம் இளகி இருந்த தன் மனதை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தாள் சக்தி.

“என்னங்க ஐயா, எதுவும் பிராது வந்திருக்கா? இல்ல ஊர் விஷயமா?” என்று அவர்களிடம் கேட்க, அவர்களோ அங்கிருந்த ஒரு பெரியவரை பார்த்தனர்.

“நம்ம சந்தானம் ஐயா தான் ஏதோ பிராது வந்திருக்கிறதா சொல்லி எங்களையும் இங்கே அழைச்சுட்டு வந்தார் நாட்டாமை தம்பி. இன்னும் என்ன விவரம்னு சொல்லலை…” என்றார் ஒருவர்.

“அப்படியா அய்யா? என்ன பிராதுன்னு இப்ப சொல்லுங்க அய்யா. எல்லாரும் தெரிஞ்சிக்கிறோம்…” என்று சர்வேஸ்வரன் சந்தானம் பெரியவரிடம் கேட்கவும், அவரின் பார்வை தயக்கத்துடன் மெல்ல சக்தியின் புறம் திரும்பியது.

அவரின் பார்வை சக்தியின் புறம் திரும்பவும் சர்வேஸ்வரனும் மனைவியின் புறம் திரும்பினான்.

சக்தியோ முதல் முறை பிரேமுடன் பஞ்சாயத்தின் முன் நின்ற அதே இறுக்க முகப்பாவத்துடன் நின்றிருந்தாள்.

இரவு இருந்து கலங்கிப் போயிருந்த சக்தியையும், இப்போதைய சக்தியையும் கண்டவனுக்கு விஷயம் உடனே பிடிப்பட்டது.

‘அவசரப்பட்டுட்டீயே சக்தியாரே…’ என்று தனக்குள் மட்டும் சொல்லிக் கொண்டவன் சந்தானம் பக்கம் திரும்பினான்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சந்தானம் அய்யா. யார் பிராது கொடுத்தாலும், யார் மேல பிராது கொடுத்திருந்தாலும் அதை விசாரிக்க வேண்டியது இந்த ஊர் பெரியவங்களோட பொறுப்பு…” என்றான்.

அவன் நாட்டாமையின் பொறுப்பு என்று சொல்லாமல் ஊர் பெரியவர்கள் என்று சொல்லவுமே அவன் புரிந்து கொண்டான் என்பதை உணர்ந்து கொண்ட சக்தியின் முதுகு விறைப்புடன் நிமிர்ந்தது.

“இந்த ஊருல இதுவரைக்கும் இப்படி ஒரு பிராது வந்தது இல்லை தம்பி. ஆனா இப்போ…” என்று சந்தானம் தயங்கினார்.

“நடக்காததும் நடந்து தான் தீரட்டுமே அய்யா…” என்று இலகுவாகவே சொன்னான் சர்வேஸ்வரன்.

“ஆனா தம்பி, இந்த ஊர் நாட்டாமை பேருக்கு ஒரு களங்கம் வருவதை எப்படி என்னால பொறுத்துட்டு போக முடியும்?”

“என்ன சொல்றீங்க சந்தானம்? நம்ம நாட்டாமை பேருக்குக் களங்கம் வருவது போலப் பிராது வந்திருக்கா? யார் கொடுத்தது? இந்த ஊருக்குள்ள யாருக்கு அம்புட்டு தைகிரியம்?” என்று மற்ற பெரியவர்கள் எல்லாம் கோபத்துடன் எழுந்தனர்.

“அய்யா, எல்லாரும் பொறுமையா இருங்க. இன்னும் விஷயம் என்னன்னு சந்தானம் அய்யா சொல்லலையே? அவர் முதலில் சொல்லட்டும். அதுவரை அமைதியா இருங்க…” என்று அனைவரையும் அமைதிபடுத்தினான் சர்வேஸ்வரன்.

அனைவரும் அமைதி காத்தாலும் அனைவரின் முகத்திலும் இன்னும் கோபம் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் அவர்களுக்கிடையே நிதானமாக இருந்தவன் சர்வேஸ்வரன் மட்டுமே.

அவனின் அந்த நிதானம் சக்திக்கு வியப்பை தந்தது.

இவன் என்ன விஷயம் என்று தெரிந்தும் இவ்வளவு நிதானமாக இருக்கிறான் என்றால் காரணம் இல்லாமல் இருக்காதே என்று கணவனைச் சிந்தனையுடன் பார்த்தாள்.

“விஷயம் பொதுவில் வந்த பிறகு தயக்கம் தேவையில்லைங்கய்யா. தயங்காம சொல்லுங்க…” என்று சந்தானத்தைச் சொல்ல சொல்லி ஊக்கினான்.

“நேத்து பொழுது சாய உம்ம பொஞ்சாதி என்னோட வயலுக்கு என்னைய பார்க்க வந்தாகத் தம்பி. அவுக அப்பாவுக்கு இந்த ஊரு பஞ்சாயத்து நியாயம் செய்யலைன்னும், பெரிய நாட்டாமை தீர விசாரிக்காம தீர்ப்புச் சொல்லிட்டதாகச் சொல்லி உம்ம மாமா தாமு பத்தி அம்புட்டு விவரமும் சொன்னாக. இப்ப அவுக அப்பாவுக்கு நியாயம் வேணும், இந்த ஊருக்கு வர அவருக்கு அனுமதி வேணும்னு கேட்டுக்கிட்டாக…” என்று அவர் சொல்லவும் சர்வேஸ்வரனின் பார்வை சலனமே இல்லாமல் மனைவியைத் தழுவி மீண்டது.

“அதுக்கு நீங்க என்ன அய்யா சொன்னீங்க?” என்று சந்தானத்திடம் கேட்டான்.

“தம்பி, உம்ம அய்யா அதான் பெரிய நாட்டாமை வாக்கு என்னைக்கும் பொய்யா போனது இல்லை. நியாயத் தீர்ப்பு சொல்றதுக்குப் பெயர் போனவர்னு இந்தச் சுத்துப்பட்டு ஊருல எல்லாருக்கும் தெரியும்.

அப்படி இருக்கும் போது இத்தனை வருசம் செண்டு பெரிய நாட்டாமை மேல இப்படி ஒரு குறை வருவதை என்னால ஏத்துக்க முடியாது தம்பி…” என்று அவர் சொல்ல,

“எங்களாலயும் ஏத்துக்க முடியாது தம்பி…” என்று விஷயம் அறிந்த மற்ற பெரியவர்களும் குரல் கொடுத்தனர்.

“இப்ப திரும்ப அவுக அப்பாவுக்கு நியாயம் வேணும்னு பஞ்சாயத்தைக் கூட்ட சொல்றாக. பஞ்சாயத்தைக் கூட்டினா பெரிய நாட்டாமைக்குப் பல வருசமா இருக்குற நல்ல பேரு கேள்விகுறியாகும். அதனால பஞ்சாயத்தைக் கூட்ட எனக்கு விருப்பமில்லை தம்பி…” என்று சந்தானம் சொல்ல,

“ஆமா தம்பி பஞ்சாயத்து எல்லாம் வேண்டாம்…” என்று மற்றவர்களும் குரல் கொடுத்தார்கள்.

“நல்லா இருக்குங்க உங்க ஊர் நியாயம். எல்லாரும் பெரிய நாட்டாமை கௌரவத்தைத் தான் பார்க்கிறீகளே தவிர, என்னோட அப்பாவுக்கு அநியாயம் நடந்ததை நினைக்க மாட்டீங்கிறீங்களே…” என்று கொதித்துப் போய்க் கேட்டாள் சக்தி.

“சக்தி பொறுமையா இரு…” என்று நிதானமாகவே சொன்னான் சர்வேஸ்வரன்.

“என்ன பொறுமையா இருக்கணும்? இல்ல என்ன பொறுமையா இருக்கணும்னு கேட்குறேன்? உங்களைப் போல் தான் உங்க ஊர் பெரியவங்களும் நினைக்கிறாங்க. நீதி, நேர்மை, நியாயஸ்தருன்னு சொல்ற உங்க அப்பா கௌரவம் முக்கியம்னு நீங்க பிடிவாதம் பிடிக்கவும் தான் இந்தப் பெரியவர்கிட்ட விஷயத்தைக் கொண்டு போனேன்.

இந்த ஊர் பெரியவங்க எல்லாம் சேர்ந்து என் அப்பாவுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது வழி செய்வாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்களும் உங்க பக்கம் நிக்கிறாங்க. இது நியாயமே இல்லை…” என்று ஓங்கி குரல் கொடுத்தாள் சக்தி.

“தாயி…” என்று அவள் குரல் கேட்டு ஓடி வந்த மீனாம்பிகை அதிர்வாக அழைத்தார்.

“இப்படிப் பேசாதே தாயி. இந்த ஊருல தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் ஏ புருசன். அவருக்கு ஒரு கௌரவக் குறைச்சல் வருவதை எப்படித் தாயி ஏத்துக்க முடியும்?” என்று கேட்டார்.

“ஓஹோ! செத்துப் போனவருக்காக நீங்க எல்லாரும் இவ்வளவு பார்க்கும் போது கடைசி மூச்சுக்காகப் போராடிட்டு இருக்க என்னோட அப்பாவுக்காக நான் பார்க்க மாட்டேனா? நீங்களும் கூட உங்க இறந்து போன கணவரை தான் நினைக்கிறீங்களே தவிர, உயிருக்கு போராடிட்டு இருக்க உங்க தம்பியை நினைக்க மாட்டீங்க இல்லையா? இவ்வளவு தானா உங்க ரத்த பாசம்?” என்று கேட்க, மீனாம்பிகை பேச திராணியற்று வாயடைத்துப் போனார்.

ஒரு பக்கம் கணவர், இன்னொரு பக்கம் தம்பி. யாருக்காகப் பேசினாலும் தான் சுயநலவாதியாகி போவோம் என்று உணர்ந்தவருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“சக்தி, போதும்!” என்று அதட்டிய சர்வேஸ்வரன், “இப்ப என்ன செய்யணும்னு நினைக்கிற? சொல்லு, நான் செய்றேன்…” என்ற கணவனை நம்பமுடியாமல் பார்த்தாள்.

“நிஜமா எனக்கு நியாயம் கிடைக்குமா?” என்று சந்தேகமாகக் கேட்டதும் அவனின் புஜங்களும், தாடையும் சினத்துடன் இறுகின.

“கிடைக்கும்…!” என்றான் உறுதியான குரலில்.

ஆனால் சக்தியால் நம்பத்தான் முடியவில்லை. பல நாட்களாகத் தான் கேட்டும் மறுத்தவன் தானே இவன். இப்போது மட்டும் எப்படி? என்ற கேள்வி தான் அவளுள் எழுந்தது.

அவளின் கண்களில் நம்பிக்கையின்மையைக் கண்டவன், “என் பேச்சு உண்மையானது. என்னை நம்பி சொல். இப்ப நான் என்ன செய்யணும்?” என்று மீண்டும் கேட்டான்.

அவனின் குரலில் இருந்த உறுதி அவளை அசைத்துப் பார்த்தது.

“நான் வேற என்ன கேட்க போறேன்? என்னோட அப்பா எந்தத் தப்பும் செய்யலைன்னு இந்த ஊர்காரங்களுக்குத் தெரியணும். ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அப்பாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வாபஸ் வாங்கணும். எந்தக் குற்றசாட்டும் இல்லாதவரா இந்த ஊருக்கு அப்பா வரணும். இது தான் எனக்கு வேணும். உங்களால் கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“முடியும்! இன்னைக்கே அதுக்கு ஏற்பாடு பண்றேன்…” என்று சக்தியிடம் சொன்னவன், “அய்யா, இன்னைக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு பஞ்சாயத்து கூடுது. ஊருக்கு அறிவிச்சுடுங்க…” என்று உடனே சொன்ன கணவனை விழிகளை அகட்டி நம்ப முடியாமல் பார்த்தாள்.

“தம்பி, கொஞ்சம் யோசிச்சு செய்யலாமே? உங்க வீட்டோட பேசி தீர்த்துக்கலாமே? உம்ம பொஞ்சாதியோட அப்பாவா தாமு இந்த ஊருக்கு வரட்டும். ஆனா இந்தப் பஞ்சாயத்து தேவைதானா? பெரிய நாட்டாமை பேரு புகழை பத்தியும் கொஞ்சம் யோசிங்க…” என்றார் ஒருவர்.

‘அதானே நீங்களாவது மாறுவதாவது’ என்பது போல் பார்த்தாள் சக்தி.

‘இதுக்கு நீ என்ன சொல்ல போகிறாய்?’ என்பதாகக் கணவனைப் பார்த்தாள்.

அவன் அவள் புறமே திரும்பவில்லை.

“இல்லைங்க அய்யா, பெரிய நாட்டாமை பக்கம் இருந்து தான் நானும் சொல்றேன். என்னோட அப்பா உயிரோட இருந்திருந்தாலும் இப்ப நான் சொன்னதைத்தான் செய்துருப்பார். அதனால் பஞ்சாயத்தைக் கூட்டுங்க…” என்றான் முடிவாக.

அவனின் உறுதியான முடிவு தெரிந்த பிறகு யாராலும் ஒன்றும் பேச முடியவில்லை. மாலை பஞ்சாயத்துக்குத் தயாராவதாகச் சொல்லிவிட்டு சென்றனர்.

கணவனின் மீதிருந்த நம்பிக்கையின்மையை விரட்டிவிட்டு வியப்பில் ஆழ்ந்து போனாள் சக்தி.

இவ்வளவு சீக்கிரம் அவன் சம்மதிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அன்றைய நேரம் நத்தை போல் நகர்ந்தது.

பெரியவர்களிடம் பேசிவிட்டு வெளியே சென்ற சர்வேஸ்வரன் மாலை வரை வீடு வரவில்லை. மதிய உணவிற்கும் அவன் வரவில்லை என்றதும் தானும் சாப்பாட்டைத் துறந்தாள் சக்தி.

மாலையும் வந்தது. பஞ்சாயத்தும் கூடியது.

சக்தியை நேராகப் பஞ்சாயத்துக்கு வந்து விடும் படி தகவலை மட்டும் அவளுக்கு ஒருவரின் மூலம் சொல்லி அனுப்பியவன், வெளியில் இருந்த படியே அவனும் பஞ்சாயத்திற்கு வந்து சேர்ந்தான்.

வழக்கமாகப் பஞ்சாயத்திற்கு வந்ததும் அந்தக் கருங்கல் கட்டிடத்தின் திண்ணையில் பெரியவர்களுக்கு நடுநாயகமாக அமர்ந்து கொள்வது தான் நாட்டாமையின் வழக்கம்.

ஆனால் இன்றோ பஞ்சாயத்திற்கு வந்த சர்வேஸ்வரன் சக்திக்கு எதிராகக் கூட்டத்தின் முன் நிற்க, ஊரே வாயில் விரல் வைத்து அதிர்ந்து நோக்கினர்.

அங்கே எதிரணியினர் நிற்பது வழக்கம் என்பதால் சக்தியும் அவனின் செய்கையில் விக்கித்துப் போனாள்.

குற்றவாளி போல் அவன் நிற்பதை காண சகிக்காமல் மேடையில் இருந்த பெரியவர்கள் நாட்டாமை இல்லாமல் மேடையில் அமராமல் எழுந்து நின்றனர்.

“அய்யா எல்லாரும் உட்காருங்க. இப்ப பிராது என் மேல தான். அதோட நான் தப்பு செய்தவன். அப்ப நான் இங்கே தான் நின்னு ஆகணும்…” என்றான்.

“நீங்க என்னய்யா தப்பு செய்தீங்க?” என்று பெரியவர் கேட்க,

“அய்யா முதலில் இந்த ஊரார் முன்னாடி நான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்றவன் மேடையில் இருந்த பெரியவர்களிடமும், ஊர் மக்களின் புறமும் திரும்பி கை கூப்பி மன்னிப்புக் கேட்டான்.

அவன் கையைக் குவித்ததும் அனைவரும் அதிர்ந்து போயினர்.

“என்னங்க…” என்று சக்தி அதிர்ச்சியில் முதல் ஆளாகக் கத்த,

“எய்யா சர்வேஸ்வரா…” என்று மீனாம்பிகை கதறி அழ,

“தம்பி…

“நாட்டாமை…

“எய்யா சாமி…” என்று மக்கள் ஆளாளுக்கு அதிர்ந்து கூக்குரலிட்டனர்.

அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பாராத சக்தி கண்கள் கலங்க அவனின் அருகில் ஓடி வந்து அவனின் கையைப் பிடித்துக் கீழே இறக்கினாள்.

“என்ன காரியம் பண்றீங்க? எங்க அப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும்னு தான் எதிர்பார்த்தேனே தவிர, நீங்க இப்படி…” என்றவள் உதடுகள் நடுங்க வார்த்தையை முடிக்காமல் திணறினாள்.

சக்தியின் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அவளை விலக்கி நிறுத்தியவன், ஊராரை பார்த்தான்.

“நான் என்ன தப்பு செய்தேன்னு கூடத் தெரியாம எனக்காக இத்தனை பேர் பதறும் போது நான் செய்த தப்பு இன்னும் என் முகத்தில் அறையுதுங்கய்யா. இப்ப நான் என்ன தப்பு செய்தேன்னு சொல்றேன்.

என் மாமா தாமோதரனை என்னோட அப்பா ஊர் நாட்டாமையா ஊரை விட்டு ஒதுக்கி வச்சுத் தீர்ப்புச் சொன்னது இந்த ஊரில் நிறையப் பேருக்கு தெரிந்து இருக்கும்.

இந்த ஊர் நாட்டாமையோட தீர்ப்பு படி ஊரை விட்டு ஒதுக்கி வச்சவங்க பிள்ளைகளும் ஒதுக்கி வைக்கப்பட்டவங்க தான். ஆனா அப்படிக் கட்டுப்பாடு இருந்தும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தாமு மாமா பொண்ணான சக்தியை நான் கல்யாணம் முடிச்சது இந்த ஊர் கட்டுப்பாடு படி தவறு…” என்று சொல்லி அவன் நிறுத்தவும், ஆட்கள் அனைவரும் அவர்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.

“ஆனா ஒரு உண்மையை நீங்க தெரிந்து கொண்டே ஆகணும். சக்தியை நான் லவ் பண்ணி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த போது அவள் என் மாமா பொண்ணுன்னு எனக்கே தெரியாது. ஆனா இந்த ஊரில் நான் அவளுக்கு உங்க முன்னாடி தாலி கட்டிய போது அவள் என் மாமா பொண்ணுன்னு எனக்குத் தெரியும்.

தெரிஞ்சே தான் உங்க யார்கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்ககிட்ட எல்லாம் மறைத்த அந்தத் தப்புக்காகத்தான் இப்ப நான் மன்னிப்பு கேட்டேன்…” என்றவன் மீண்டும் சில நொடிகள் இடைவெளி விட்டான்.

அவன் இதெல்லாம் சொல்லுவான். இப்படி மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் சக்தி நினைக்கவே இல்லை.

தான் பஞ்சாயத்தைக் கூட்டினால் ஏதாவது மறுப்புச் சொல்லுவான். தந்தையின் கௌரவம் தான் முக்கியம் என்று பேசுவான். ஊரார் முன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் செய்வான் என்று தான் எதிர்பார்த்திருந்தாள்.

அப்படி அவன் மறுக்கும் போது, தன்னைப் பேசவிடாமல் செய்யும் போது ‘ஒதுக்கி வைத்தவர் பெண்ணைத்தானே நீ மணந்தாய்’ என்று சொல்லி அவனின் வாயை அடைக்க வைக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தாள்.

அப்படித் தான் அவனைக் குற்றம் சாட்டும் போது ஊராரின் முன் அவன் தலை குனிய நேரிடும் என்று தான் நேற்று இரவு எல்லாம் கலங்கி போயிருந்தாள்.

ஆனால் இன்றோ அவளே முற்றிலும் எதிர்பாராத விதமாகத் தானே அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தன்னையே ஒப்புக் கொடுத்து உண்மையைச் சொல்வான். கை கூப்பி மன்னிப்பு கேட்பான் என்பதெல்லாம் அவள் கனவிலும் எதிர்பாராதது.

தான் அவன் தலைகுனிய வைக்கும் படி பேசப் போகிறோமே என்று தவித்துக் கிடந்தவளுக்கு இப்போது வேறு விதமான தவிப்பு உண்டானது.

‘இதை இப்பொழுது இவன் பேசாவிட்டால் தான் என்ன?’ என்று தான் தற்சமயம் தோன்றியது.

பேசாமல் இனி ஒன்றும் நீ சொல்ல வேண்டாம் என்று அவனை அழைத்துப் போய் விடுவோமா என்று கூட நினைத்தாள்.

கூடவே தந்தையின் ஞாபகமும் வந்தது.

தந்தையிடம் ஏதாவது சொல்லி தேற்றிக் கொள்ளலாம். தன் கணவன் இப்படி ஊரார் முன் மன்னிப்பு கேட்பதை தந்தையே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைத்தவள் அவனின் கையைப் பிடித்து நிறுத்த முயன்றாள்.

ஆனால் அவளின் கையை நாசுக்காக விலக்கியவன் அவள் பேச வருவதைக் கவனியாதவன் போல் தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தான்.

“ஆனா இந்த இடத்தில் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லியே ஆகணும் அய்யா. தாமு மாமா மகள்னு தெரிந்தே ஊர் முன்னாடி நான் தாலி கட்ட துணிய இன்னொரு காரணமும் இருக்கு.

அந்தக் காரணம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தாமோதரன் மாமா எந்தக் குற்றமும் செய்யாதவர்…” என்று சொல்லி நிறுத்த, மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

சலசலப்பு சற்று அடங்கியதும் முன்பு தாமோதரன், தேவி வாழ்க்கையில் நடந்ததைச் சொன்னான். தேவி வாழ்க்கையில் மோகன் இருந்தது இந்த ஊர் மக்களுக்குத் தெரியாமல் போனதும், அதனால் நடந்த அனர்த்தங்களையும் சொன்னவன், மக்கள் நிறையப் பேரின் சாட்சி இருந்ததால் தன் தந்தை சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதையும் தெரிவித்தான்.

“அப்பயே மோகன் அங்கிள் வந்ததும் அவங்க வந்து உண்மையைச் சொல்லியிருந்தால் அந்த நேரத்திலேயே அப்பாவே அந்தத் தீர்ப்புக்குத் தீர்வு சொல்லியிருப்பார்.

ஆனால் தாமு மாமா அப்பா பேருக்குக் களங்கம் வர வேண்டாம். அவர் தப்பான தீர்ப்பு சொன்னவர்னு பேரு வர வேண்டாம்னு விலகி போனார். அந்த மாதிரியான மனுஷன் இப்போ சாவின் விளிம்பில் நிற்கிறார். அவருக்கு இந்த ஊர் மண்ணைக் கடைசியா ஒரு முறை மிதிக்கணும்னு ஆசை. அதை இந்த ஊர் மக்கள் நீங்க தான் நிறைவேற்றி வைக்கணும்…” என்று பேச்சை முடித்தான்.

“தீர்ப்பு சொல்ல வேண்டியவர் நீங்களே கீழே நிக்கும் போது நாங்க என்னய்யா தீர்ப்பு சொல்வது?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“தெரிந்தோ தெரியாமலோ என் அப்பா சொன்ன ஒரு தீர்ப்புத் தப்பா போயிருக்கு. இப்போ உங்களுக்கு எல்லாம் சொல்லாமல் நான் ஒரு விஷயம் செய்துருக்கேன். அப்படியிருக்கும் போது நான் இங்கே என்ன பேச முடியும் அய்யா?” என்று கேட்டான்.

“அப்படிச் சொல்லாதீங்க தம்பி. நீங்க சொன்ன மாதிரி உங்க அப்பா இப்ப இருந்திருந்தால் உடனே தாமோதரனை வர சொல்லி உத்தரவு கொடுத்திருப்பார். அவர் நியாயஸ்தர். நியாயம் எந்தப் பக்கம் நிற்குமோ அந்தப் பக்கம் தான் இருப்பார்.

அதே போல் நீங்களும் எங்களிடம் ஒரு விஷயத்தை மறைச்சுக் கல்யாணம் பண்ணிருந்தாலும், தாமோதரன் குற்றமற்றவர்னு தெரிந்த பிறகு தான் தாலி கட்டியிருக்கீங்க.

தாமோதரன் குற்றமற்றவர்னா உங்க மேலயும் குற்றம் இல்லைனு இதில் உறுதியாகுது…” என்றார் வயதில் மூத்த முதியவர்.

“என்னங்க யா நான் சொல்றது?” என்று ஊராரை நோக்கியும் கேட்டார்.

“சரிதானுங்க அய்யா…” என்று குரல் கொடுத்தனர்.

“அப்புறம் என்ன இப்ப பெரிய நாட்டாமை இருந்தால் என்ன செய்வாரோ அதே தான் தீர்ப்பு. தாமோதரன் இந்த ஊருக்குள் வரலாம். அதே மாதிரி தேவியும், தேவி குடும்பமும் ஊருக்குள் வரலாம்…” என்றார் பெரியவர்.

அவர் சொன்னதைக் கேட்டதும் சக்திக்கு ஆசுவாசப் புன்னகை அரும்பியது.

உடனே கணவனின் புறம் திரும்பி, “நீங்களே இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வருவீங்கன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை. தேங்க்ஸ். ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்…” என்று துள்ளலுடன் சொன்ன தன்னவளை வறண்ட பார்வை பார்த்தான்.

அவனின் பார்வையின் அர்த்தம் விளங்காமல் சக்தி பார்க்க, தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.

“அப்புறம் என்ன நாட்டாமை. இனி மேடைக்கு வாங்க. நீங்க பேச எதுவும் இருந்தால் இங்கே இருந்தே பேசுங்க. இனியும் நீங்க அங்கே நிக்கிறதை எங்களால் பார்த்துட்டு இருக்க முடியாது…” என்று அவனை அழைத்தார்.

“இல்லைங்க அய்யா. நான் இனி அந்த மேடைக்குத் தகுதி இல்லாதவன். அதனால் இனி நான் அந்த மேடையில் அமர மாட்டேன்…” என்று சர்வேஸ்வரன் அதிரடியாகச் சொல்ல, அந்த இடமே நிசப்தமாய் உறைந்து போனது.