17 – மின்னல் பூவே

அத்தியாயம் – 17

“கிளம்பலாமா உத்ரா? விமலா நாலு தடவை போன் பண்ணிட்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவோம்னு சொல்லிச் சமாளிச்சு வச்சுருக்கேன்…” என்று சொல்லிய படி மகளின் முகத்தைப் பார்த்தார் அஜந்தா.

உத்ராவின் முகம் என்றுமில்லாமல் இன்று வெளிப்படையாகக் கலங்கிப் போயிருந்தது.

அவளின் தைரியம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது போல் வேதனையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தாள்.

“உத்ரா, என்னடாமா?” என்று மகளின் கலக்கத்தைப் பார்த்துத் துடித்துப் போய்க் கேட்டார்.

உத்ராவின் உதடுகள் துடித்தன. பேச முடியாமல் தடுமாறினாள்.

“என்… என்னால் அங்கே வர முடியும்னு தோணலை மா…” என்று தொண்டையில் இறுக்கிப் பிடித்து வருவேனா என்று அடம்பிடித்த வார்த்தைகளை வம்படியாக வரவைத்து திணறிய படி பேசினாள்.

“என்னடா நீ…” என்று தானும் கலங்கிய அஜந்தா மகளின் முகத்தைப் பிடித்து இழுத்து வயிற்றோடு அழுத்திக் கொண்டார்.

அவரின் கண்கள் கலங்கி சொட்டு சொட்டாக மகளின் தலையில் விழ ஆரம்பித்தது.

அன்னையின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவரைக் கட்டிக் கொண்ட உத்ரா தன்னைத் தேற்றிக் கொள்ளத் திணறிப் போனாள்.

‘நடக்கப் போவதை நீ ஏற்றுக் கொண்டு தான் ஆகவேன்டும். உன்னை வேண்டாம் என்று சொன்னவனைத் தூக்கி எறிந்து விட்டு இயல்பாக இரு!’ என்று அவளின் மனமே அவளைத் தேற்ற முயன்றது.

“என்னாச்சு? அம்மாவும், பொண்ணும் கிளம்பாமல் என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி அப்போது உள்ளே வந்தார் வீரபத்ரன்.

மகளை அணைத்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மனைவியையும், அவரின் வயிற்றில் முகம் புதைத்திருந்த மகளையும் பார்த்தவருக்கு விஷயம் உடனே பிடிப்பட்டது.

அவருக்கும் மகளை நினைத்து வேதனை நெஞ்சை அடைத்தது. ஆனால் தானும் கலங்கி நிற்கும் நேரம் இது இல்லை என்று நினைத்தவர் அவர்களைத் தேற்ற தன் வேதனையை மறைத்துக் கொண்டு அவர்களின் அருகில் சென்றார்.

“என் பொண்ணு உத்ரா எங்கே? அவள் ரொம்பத் தைரியமானவளாச்சே. அவள் இங்கே இல்லையே. எங்கே போனாள்? அவளை நீ பார்த்தியா அஜ்ஜு?” என்று மனைவியைப் பார்த்துக் கொண்டே விளையாட்டாகக் கேட்டார்.

உத்ரா அன்னையின் வயிற்றிலிருந்து நிமிர்ந்தவள் தந்தையைப் பார்த்துச் சோபையாகச் சிரித்தாள்.

அவளின் அருகில் வந்து அமர்ந்த வீரபத்ரன் மகளின் தலையை வாஞ்சையுடன் வருடி,”நம்மை ஒருத்தர் வேண்டாம்னு சொன்னா நஷ்டம் நமக்கு இல்லைடா. வேண்டாம்னு சொன்னவங்களுக்குத் தான். வேண்டாம்னு சொன்னவங்க முன்னாடி நீ அப்படிச் சொன்னதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லைன்னு கெத்தா வாழ்ந்து காட்டணும். எங்க உத்ரா பொண்ணு வாழ்ந்து காட்டுவாள்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றார்.

“கண்டிப்பா அப்பா!” என்று உறுதியுடன் சொல்லி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள் உத்ரா.

குளியலறைக்குச் சென்று முகம் கழுவ சென்றாள்.

மகள் உள்ளே சென்றதும் மனைவியின் புறம் திரும்பியவர், “என்னமா இது?அவளைத் தேத்தாம நீயும் சேர்ந்து அழுதுட்டு இருக்க?” என்று மனைவியை மென்மையாகக் கடிந்து கொண்டார்.

“இத்தனை நாளில் நம்ம பொண்ணு வெளிப்படையா கலங்கியது இல்லைங்க. ஆனா இன்னைக்கு அவள் கலங்கி நின்னதைப் பார்த்து என்னால் தாங்கவே முடியலைங்க…” என்று தேம்பியவர்,

“நம்ம பொண்ணை ஒருத்தர் பிடிக்கலைன்னு சொல்ற அளவுக்கு அப்படி என்னங்க அவள் குறைந்து போய்ட்டாள்?” என்று வருத்தமாகக் கேட்டார்.

“நமக்குப் பிடிச்சது மத்தவங்களுக்கும் பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை மா. எனக்கும் முகில் நம்ம பொண்ணை வேண்டாம்னு சொன்ன வருத்தம் இருக்கு. ஆனால் அதுக்காக என்ன பண்ண முடியும்?

அதிலும் நாளைக்கு இந்த நேரம் இன்னொரு பொண்ணோட புருஷனா ஆகப் போறவனைப் பத்தி இப்ப நாம பேசுறதே சரியில்லை. விட்டுடு… நாம கிளம்பலாம். அங்கே வந்து உத்ராவை உன் கண் பார்வையிலேயே வச்சுக்கோ…” என்றார்.

‘ம்ம்…’ என்று தயக்கத்துடன் தலையை ஆட்டினார் அஜந்தா.

மகள் கலங்கியதை பார்த்தவருக்குக் கிளம்பவே மனதில்லை.

“நானும் இப்போ இங்கே வந்திருக்கும் நிலையில் நம்மால் போகாமல் இருக்க முடியாது அஜ்ஜூ. கிளம்பு…” மனைவியின் முகம் பார்த்தே அவரின் தயக்கத்தை உணர்ந்த வீரபத்ரன் சொல்ல,

வேறு வழியின்றி, “சரிங்க…” என்றார் அஜந்தா.

அதே நேரம் முகம் கழுவி விட்டு வந்த உத்ரா “நேரம் ஆகிடுச்சுமா. போகலாம் வாங்க…” என்ற போது அவளின் குரல் திடனாக வந்தது.

மகளின் தெளிவு அஜந்தாவையும் நிம்மதியடைய வைக்க, கிளம்ப ஆயத்தமானார்.

முதலில் கமலினியின் வீட்டிற்குச் சென்றனர்.

மாலையளவில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் அழைக்க வரும் போது அவர்களுடன் மண்டபத்திற்குச் செல்வதாக இருந்தனர்.

“வாங்க… இவ்வளவு லேட்டாவா வருவது?” என்று வரவேற்ற விமலா உத்ராவின் புறம் திரும்பி, “நீ தான் இன்னைக்கு நலுங்கிலும், நாளைக்குக் கல்யாணத்திலும் கமலி கூடத் துணைப் பொண்ணா நிக்கணும் உத்ரா…” என்றார்.

‘நானா?’ என்று நினைத்த உத்ரா அன்னையைப் பார்த்தாள்.

“கமலி ப்ரண்ட்ஸ் யாராவது நின்னா சரியா இருக்குமே விமலா. கமலிக்கும் அது கம்படபிளா இருக்கும்…” என்றார் அஜந்தா.

“நம்ம வீட்டு பொண்ணு இருக்கும் போது எதுக்கு அவள் ப்ரண்டை நிறுத்தணும் அக்கா? அதுவும் இல்லாம இனி உத்ராவுக்கும் வரன் பார்க்கணுமே. இப்போ கமலி கூட நின்னா நம்ம பொண்ணைப் பத்தி நாலு பேருக்குத் தெரியவரும். அடுத்து உத்ரா கல்யாணமும் சீக்கிரம் நடக்கும். அதனால் அவளே நிக்கட்டும்…” என்று முடித்து விட்டார் விமலா.

அடுத்து அவர்களால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

கல்யாண வேலைகள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்க, ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துச் செய்ய ஆரம்பித்தனர்.

வீரபத்ரன் அவரின் தம்பி கிரிதரனுடன் வெளி வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க, அஜந்தா விமலா உடன் வீட்டு வேலைகளைப் பார்த்தார்.

உத்ராவை கமலினியுடன் இருக்கச் சொல்லியிருந்தார் விமலா.

கையில் மெகந்தி வைக்க அழகு நிலையத்தில் இருந்து ஒரு பெண் வந்திருக்கக் கமலினிக்கு மெகந்தி வைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் அருகில் அமர்ந்திருந்தாள் உத்ரா.

மெகந்தி வைக்க அந்தப் பெண்ணிடம் கையைக் கொடுத்திருந்தாலும், கமலினியின் கண்களோ அவளின் அருகில் வைத்திருந்த அவள் கைபேசியின் மீது தான் இருந்தது.

நொடிக்கு ஒரு முறை அதைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன கமலி யார்கிட்ட இருந்தாவது போன் எதிர்பார்க்கிறயா? போனையே பார்த்துக்கிட்டு இருக்க?” என்று அவளைக் கவனித்த உத்ரா விசாரித்தாள்.

“ஹான்… இல்லை உத்ரா சும்மா தான்…” என்று மழுப்பலாகப் பதில் சொன்னவளை யோசனையாகப் பார்த்தாள் உத்ரா.

கமலினியின் முகத்தில் ஒரு மணமகளுக்கு உரிய உற்சாகமே இல்லை.

“என்ன கமலி உன் முகமெல்லாம் ஏன் சோர்வா இருக்கு? ஒருவேளை அம்மா, அப்பாவை விட்டு வேற வீட்டுக்குப் போற வருத்தமா?” என்று கேட்டாள்.

“ம்ம்… ஆமா உத்ரா. இனி அவங்க வேற, நான் வேற குடும்பம்னு ஆகிடுவேன். அதான் வருத்தமா இருக்கு…” என்றாள்.

“ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போகப் போகப் பழகிடும் கமலி…” என்று ஆறுதலாக அவளின் தோளை அழுத்தினாள் உத்ரா.

“எல்லாம் சொல்வது ஈஸி தான். ஆனா அது நடக்கும் போது ரொம்பக் கஷ்டமா இருக்கும். உன் கல்யாணம் அப்போ நீயும் இப்படி உணர்வ பார்…” என்று கமலினி சொல்ல உத்ரா இப்போது அமைதியாகிப் போனாள்.

‘என் வாழ்க்கையில் கல்யாணம்னு ஒன்னு எனக்கு நடக்குமா என்ன?’ என்று விரக்தியுடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

ஒருதலை காதல் தான். ஆனாலும் காதல் காதல் தானே! அது கொடுத்த நினைவுகளும், ஆசையும், ஏமாற்றமும், வெறுப்பும், வலியும் அவளின் நெஞ்சத்தில் உறைந்து போயிருந்தது.

தந்தை அன்று அவளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகச் சொன்ன போது கூட, அவருக்கு அவளால் எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

அன்று வீரபத்ரன் மகளை அருகில் அமர வைத்து ‘உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்கள் முடிவு செய்திருக்கோம்’ என்று தெரிவித்த போது திகைத்து திண்டாடித் தான் போனாள் உத்ரா.

காதல் தோல்வியை ஜீரணத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருப்பவள் திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

“நடந்ததை எல்லாம் மறக்க முயற்சி பண்ணுமா. எல்லாக் காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. அதுக்காக எப்பவும் தனியாவும் இருக்க முடியாது…” மகளின் அதிர்வை கவனித்துக் கொண்டே தீர்வாகச் சொன்னார் வீரபத்ரன்.

“எனக்கும் புரியுதுப்பா. ஆனா…” என்ற உத்ராவால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

எதையுமே சொல்வது சுலபம் தான். ஆனால் செய்வது?

அதிலும் மனம் சம்பந்தப்பட்டவற்றில் மனதிற்கும், நடப்பிற்கும் இடையே போராடி அதிலிருந்து மீண்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்து முடிவெடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லையே?

உத்ராவின் போராட்டமும் அன்றில் இருந்து ஆரம்பித்திருந்தது.

அதிலும் தன்னைக் கண்டாலே தீயாய் காய்பவன் என்று அறிந்தும் அவளின் மனம் அவனைச் சுற்றியே வந்து நேசிப்பதை தான் எந்த வரைமுறையில் சேர்ப்பது என்று அவளுக்கே தெரியவில்லை.

உத்ராவின் திருமணத்தைப் பற்றி வீரபத்ரன் அவளிடம் பேசியிருந்த அதே நேரத்தில், முகில்வண்ணன் அலுவலகத்தில் அவளைப் பார்த்த நேரமெல்லாம் எரிந்து விழுந்தான்.

கமலினி தன்னிடம் ஒதுக்கம் காட்டுவது அவளால் தான் என்று உறுதியாக நம்பினான்.

அதிலும் அன்று மாலில் கமலினி தன்னிடம் பேசாமல் சென்றது உத்ராவால் தான் என்று நினைத்தவன் மறுநாளில் இருந்து அலுவலகத்தில் அவளின் மீது தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினான்.

வேலையில் எதுவும் சந்தேகம் கேட்டால் பதில் சொல்லாமல் இழுத்தடித்தது மட்டுமில்லாமல் அவளுக்கு அதிகமான வேலைகளும் கொடுத்தான்.

புதிதாக வேலையில் சேர்ந்தவள் என்பதால் அவன் கொடுத்த வேலைகளைச் செய்யத் திணறிப் போனாள்.

அதுவும் விரைவிலேயே முடித்துக் கொடுக்கும் படி அழுத்தமும் கொடுத்தான்.

அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவனின் கோபம் தெரிய, எதற்குத் தன் மீது இத்தனை கோபம் என்று தெரியாமலேயே திண்டாடி போனாள் உத்ரா.

அப்படியும் ஒரு நாள் தைரியமாக “எதுக்கு முகில் எனக்கு இவ்வளவு பிரஷர் தர்றீங்க? என் மேல் அப்படி என்ன கோபம்?” என்று நேரடியாகக் கேட்டும் விட்டாள்.

அவன் எவ்வளவு வேலை கொடுத்திருந்தாலும் முயன்று செய்திருப்பாள் தான். ஆனால் அவன் ஏதோ வஞ்சம் வைத்து வேலை கொடுப்பதும் இல்லாமல் அதில் எதுவும் சந்தேகம் வரும் போது அதைக் கேட்டால் சொல்லாமல் தட்டிக் கழிப்பதும் அவளை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியது.

அவ்வுளச்சல் தந்த தாக்கமும், அவளின் தைரியமும் சேர, நேரடியாகவே கேட்டு விட்டிருந்தாள்.

“உன்னோட திமிர்த்தனத்தை எல்லாம் என்கிட்ட காட்டாதே உத்ரா. நான் என்ன வேலை சொல்றேனோ அதைச் செய்றது தான் உன் வேலை. இப்படி என்கிட்ட திமிரா கேள்வி கேட்குறது இல்லை.

வேலையை ஒழுங்கா முடிச்சுக் கொடுக்க முடிந்தால் கொடு. இல்லனா நான் ஹைச்.ஆர்கிட்ட கம்ளைண்ட் கொடுப்பேன். அப்புறம் அவங்க கேட்குற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவள் நீ தானே தவிர நான் இல்லை. என்ன கம்ளைண்ட் எழுதி கொடுக்கட்டுமா?” என்று நக்கல் இழைந்தோட கேட்டான்.

வேண்டுமென்றே அவ்வாறு பேசுபவனிடம் அதற்கு மேல் நின்று பேச பிரியபடாத உத்ரா அங்கிருந்து நகர்ந்து தன் இருக்கைக்குச் சென்று விட்டாள்.

மேலிடத்தில் சொல்வதால் அவளுக்கு எந்தப் பயமும் இல்லை தான். ஆனால் வேலைக்குச் சேர்ந்த புதிதிலேயே அவளின் மீது புகார் வருவதை அவள் விரும்பவில்லை.

அதோடு தன்னால் வேலை செய்ய முடியாமல் தான் இப்படிப் பேசுவதாக அவன் நினைப்பதையும் வளர விடக் கூடாது என்று நினைத்தவள் அமைதியாகச் சென்றாள்.

சென்றவளை பார்த்து அலட்சியமாகச் சிரித்துக் கொண்டான் முகில்வண்ணன்.

‘உன் திமிர்த்தனத்தை என்கிட்ட காட்டினால் இப்படித்தான் ஒட்ட நறுக்குவேன்’ என்று முனங்கிக் கொண்டான்.

“என்னாச்சு உத்ரா, எதுவும் பிரச்சனையா?” அவர்கள் பேசிக் கொண்டதை கவனித்த புவனா, உத்ராவின் இருக்கை அருகில் வந்து கேட்டாள்.

“நான் திமிர்த்தனம் பிடித்தவளாம் புவனா. அதான் எனக்கு நிறைய வேலை கொடுத்து என் திமிர்த்தனத்தை முகில் அடக்கப் போறாராம்…” என்று உணர்ச்சிகளற்ற குரலில் சொன்ன தோழியைப் புரியாமல் பார்த்தாள் புவனா.

“திமிர்த்தனத்தை அடக்கப் போறாரா? என்ன உத்ரா சொல்ற?”

“ம்ம்…” என்ற உத்ரா முகில் தன்னிடம் சொன்னதையும், அவன் தனக்குக் கொடுக்கும் வேலை அழுத்தத்தையும் சொன்னாள்.

புவனா அவளுக்காக வருத்தப்பட, ” எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை புவனா. நான் தைரியமா இருப்பது திமிர்த்தனமா ஏன் பார்க்கப்படுது?

ஒரு ஆண் தைரியமானவனா இருந்தா அவன் கம்பீரமானவன், கெத்தானவன்னு வரையறுக்கும் உலகம்,

அதே ஒரு பெண் தைரியமானவளா இருந்தா அகங்காரி, சண்டைக்காரி, திமிர்ப்பிடித்தவள்னு முத்திரை குத்துதே ஏன்?

பெண் என்றால் அடங்கிப் போக வேண்டியவள் என்று எந்த அகராதியிலாவது எழுதி வைத்திருக்கிறதா?

நான் நானாக இருப்பது தான் திமிர்த்தனம் என்றால் நான் திமிர்ப்பிடித்தவள் தான்! இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஆனா அதுக்காக என்னை அவமதிப்பது போல் ஒவ்வொரு முறையும் முகில் பேசும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.

வேற யாரும் என்னை இப்படிப் பேசினால் கூட என்னால் அதைத் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டுப் போக முடிஞ்சிருக்கும். ஆனால் முகில் பேசுவது தான்…” என்று வேதனையுடன் சொன்னவள் அதற்கு மேல் பேச முடியாமல் வருத்த பெருமூச்சு விட்டாள்.

“நான் இப்படியெல்லாம் பேசுறது கூடப் பெண்ணுரிமை பேசுறதா நினைக்க வைக்கும். ஆனா நான் பெண்ணுரிமை பேசல. பெண்ணுக்கும் உணர்வுகள் இருக்கு. அதை மதிக்கத் தெரியலைனாலும் போட்டு மிதிக்க வேண்டாமேன்னு நினைக்கிறேன்.

ஆனா முகில் ஒவ்வொரு முறையும் என் உணர்வுகளைப் போட்டு மிதிச்சுக்கிட்டு இருக்கார். ரொம்ப வலிக்குது புவனா…” என்றவளின் குரலில் வலியும், வேதனையும் ததும்பி நின்றது.

அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற முயன்றாள் புவனா.

“என்ன உத்ரா, என்ன யோசனை?” என்ற விமலாவின் குரல் கேட்டு நினைவிலிருந்து கலைந்தாள் உத்ரா.

“ஒன்னுமில்லை சித்தி. சும்மா தான்…” என்று சொல்ல,

“இந்தா இந்தக் காஃபியைக் குடி. கமலிக்கு மெகந்தி வச்சு முடிச்சுட்டாங்க பார். அடுத்து நீ வச்சுக்கோ…” என்று சொல்லி விட்டுச் சென்றார் விமலா.

அடுத்து உத்ராவும் மெகந்தி வைத்துக் கொண்டாள்.

அதன்பிறகு சில உறவினர்களும் வர ஆரம்பிக்க நேரம் வேகமாக நகர்ந்து சென்றது.

மாலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் அழைக்க இலக்கியா, கார்த்திக்குடன் சில உறவினர்களும் வந்திருந்தனர்.

“எப்படி இருக்க உத்ரா?” இலக்கியா உத்ராவை பார்த்ததுமே ஆவலுடன் பேச ஆரம்பித்தாள்.

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? எங்கே என் ரூபி பேபியைக் காணோம்?” என்று விசாரித்தாள்.

“அவளை என் மாமியார்கிட்டயே விட்டுட்டு வந்துட்டேன். இப்போ மண்டபத்தில் இருப்பாங்க. மண்டபத்தில் போய்ப் பார்க்கலாம்…” என்றாள் இலக்கியா.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அனைவரும் மண்டபத்திற்குக் கிளம்பினர்.

பெண்ணை அழைத்து வந்த சிறிது நேரத்தில் பெண் வீட்டார் சார்பில் கமலினிக்கு நலுங்கு வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

பெண் வீட்டு உறவு பெண்கள் கமலினியை மேடைக்கு அழைத்துச் செல்ல வந்த போது மெல்ல ஒதுங்கி கொள்ள நினைத்தாள் உத்ரா.

ஆனால் அதற்கு விடாமல் அவளின் உறவு பெண்கள் அவளைப் பிடித்துக் கொள்ள வேறு வழி இல்லாமல் அவர்களுடன் சென்றாள்.

உறவுகள் கமலினிக்கு நலுங்கு வைக்க ஆரம்பித்தனர்.

முகில்வண்ணன் கீழே அமர்ந்து நடந்த சடங்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

உத்ராவும் அவனைக் கவனித்தாள். ஆனாலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் அவளின் ஒவ்வொரு அணுவும் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

மேலே நின்ற படி கீழே இருந்தவனைக் கட்டுப்பாடு இல்லாமல் பார்க்கும் தன் கண்களை அடக்க முடியாமல் தவித்தவள் மெல்ல மேடையை விட்டு கீழே இறங்கி அன்னையின் அருகில் சென்று அமர்ந்துவிட்டாள்.

நலுங்கும் நடந்து முடிந்தது.

இரவு முடிந்து விடியலும் வந்தது.

ஆறுமணிக்கு முகூர்த்தம் என்பதால் காலை நாலு மணிக்கே பெண்ணைத் தயார் செய்ய நினைத்த விமலா முதலில் எழுந்தார்.

மண்டபத்தில் பெண் மாப்பிள்ளைக்கு மட்டுமில்லாமல் உறவினர்களுக்கும் தங்கும் அறைகள் இருந்தன.

சில நெருங்கிய உறவினர்கள் அந்த அறைகளில் தான் தங்கியிருந்தனர்.

பெண் அறையில் கமலினியும், விமலாவும் மட்டும் தங்கியிருந்தனர். கிரிதரன் இன்னொரு அறையில் தங்கியிருந்தார்.

முதலில் எழுந்த விமலா, மகளை எழுப்ப அவளின் படுக்கையின் அருகில் வர, அவள் படுத்திருந்த படுக்கை வெறுமையாக இருந்தது.

‘எனக்கு முன்னாடியே எழுந்து குளிக்க ஆரம்பிச்சுட்டாளா?’ என்று நினைத்துக் கொண்டே அந்த அறையில் இருந்த குளியலறை கதவைப் பார்த்தார்.

ஆனால் கதவு வெளியே தாழ் போட்டப்பட்டிருந்தது.

‘எங்கே போனாள் இவள்?’ என்று யோசித்துக் கொண்டே அறை கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தார்.

மண்டபத்தில் ஆங்காங்கே சில உறவினர்கள் படுத்திருக்க, மண்டபம் வெகு அமைதியாக இருந்தது.

‘ஒருவேளை உத்ராகிட்ட எதுவும் வாங்க போயிருப்பாளோ?’ என்று நினைத்து உத்ரா குடும்பத்தினர் தங்கியிருந்த அறையை நோக்கி சென்றார்.

அங்கே சென்று கதவைத் தட்டி விசாரிக்க, கமலினி அங்கேயும் வந்திருக்கவில்லை என்று அறிந்ததும் முதல் முறையாகப் பதற ஆரம்பித்தார் விமலா.

“பதறாதீங்க சித்தி. அவள் போன் எங்கே இருக்குன்னு பாருங்க. இங்கே தான் எங்கயாவது இருப்பாள். போன் பண்ணிப் பார்ப்போம்…” என்றாள் உத்ரா.

மீண்டும் தங்கள் அறைக்கு ஓடிய விமலா தன் கைபேசியை எடுத்து ஆன் செய்த உடனேயே அவரின் கைபேசிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் மகளிடம் இருந்து ஏற்கனவே வந்திருப்பதைப் பார்த்தவர் வேகமாக அதைத் திறந்து பார்த்தார்.

“ஸாரி மா. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. நான் வேற ஒருத்தரை விரும்புறேன். நான் அவர் கூடப் போறேன். அவருக்கும், எனக்கும் இன்னைக்குக் கல்யாணம்…” என்ற செய்தியைக் கமலினி அனுப்பி வைத்திருக்க, அதைப் படித்த விமலா அதிர்ந்து அழ ஆரம்பித்தார்.

மணப்பெண்ணான கமலினி காணாமல் போன செய்தி சற்று நேரத்தில் மண்டபம் முழுவதும் தீயாகப் பரவ ஆரம்பித்தது.