17 – இதயத்திரை விலகிடாதோ?

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 17

கணவனின் மார்பில் கண் மூடி சாய்ந்திருந்த யுவஸ்ரீயின் கண்கள் அசதியில் உறக்கத்தைத் தழுவ இருந்த நேரத்தில், அவளின் கைபேசி ஒலி எழுப்பி அவளை உறங்க விடாமல் சதி செய்தது.

“போன் அடிக்கிதுடி பொண்டாட்டி…” என்ற சூர்யாவின் கண்களிலும் உறக்கத்தின் சாயல்.

“யார்னு பாருங்க…” என்றாள்.

கையை நீட்டி கட்டில் அருகில் இருந்த டீப்பாயின் மீதிருந்த போனை எடுத்து யார் எனப் பார்த்தான்.

நந்தினி தான் யுவஸ்ரீக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

“நந்தினி போன் பண்றாங்க…” என்றதும் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“அச்சோ! சூர்யா, நாம சாப்பிட போறதாக இருந்தோம். அதுக்குத்தான் கால் பண்றாள்னு நினைக்கிறேன்…” என்றவள் வேகமாகக் கைபேசியை வாங்கி அழைப்பை ஏற்றாள்.

“என்ன யுவா, இன்னும் குளிச்சு ரெடியாகி வரலையா? நீங்க வருவீங்கன்னு நாங்க ஒரு மணி நேரமா காத்திருக்கோம்…” என்றாள் நந்தினி.

“ஸாரி… ஸாரி நந்தினி. இதோ வந்துடுறோம்…” என்றாள் பதட்டமாக.

“ஹேய், ரிலாக்ஸ்! வெயிட் பண்றோம், நீங்க வாங்க…” என்ற நந்தினி அழைப்பை துண்டித்து விட்டாள்.

நந்தினி எதுவும் விளக்கம் கேட்காததில் சற்று நிம்மதியானது அவளுக்கு.

ஆனாலும் இப்படி நேரமாக்கி விட்டோமே என்று அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

அவள் படபடவென்று எழுந்து குளியலறைக்குள் செல்ல போக, “ஏன் இந்த ஓட்டம் பொண்டாட்டி? மெதுவா போ!” என்றான் சூர்யா.

“நாம ஏற்கெனவே லேட் ஆக்கிட்டோம். இதில் இன்னும் எப்படி லேட்டாகப் போறது? அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்றாள்.

“இதில் நினைக்க என்ன இருக்கு? நான் தினேஷ்கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன். நீ மெதுவாகக் குளிச்சுட்டு வா…” என்றான்.

‘என்ன சொல்லி சமாளிப்பானோ?’ என்று தோன்றினாலும் நின்று நேரத்தை வீணாக்காமல் குளிக்கச் சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வந்ததும், சூர்யாவும் குளித்து விட்டு வந்தான்.

ஒரு மாதத்திற்குப் பின் ஊடலை முடித்துக் கொண்டு மனைவியுடன் கூடியது அவனின் வதனத்தை ஜொலிக்க வைத்திருந்தது.

உல்லாச மனநிலையுடன் கிளம்பிக் கொண்டிருந்த கணவனைத் தவிப்புடன் பார்த்தாள் யுவஸ்ரீ.

“என்னடி இத்தனை தவிப்பு? பிடிக்கலையா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

தன்னுடன் பிடிக்காமல் தான் இருந்தாளோ என்று நினைத்ததும் அவனின் உல்லாசம் எல்லாம் எங்கோ செல்வது போல் இருந்தது.

“ம்ப்ச், அது இல்லை… இவ்வளவு லேட்டா போனால் அவங்க என்ன நினைப்பாங்களோன்னு சங்கடமா இருக்கு…” என்று தவிப்புடன் நகத்தைக் கடித்தாள்.

அவளின் தவிப்பு எதற்கு என்று தெரிந்ததும் அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

“நான் தினேஷ்கிட்ட பேசிட்டேன். ஒன்னும் பிரச்சினை இல்லை…” என்றான்.

“என்ன பேசினீங்க?” என்று அதையும் அவள் தவிப்புடன் கேட்க,

“அதுவா…? நானும் என் பொண்டாட்டியும் நைட் வரை ரூமில் தான் இருக்கப் போறோம். நீங்க இரண்டு பேரும் மட்டும் போய்ச் சுத்தி பார்த்துட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது எங்களைக் கூட்டிட்டு போக வந்திடுங்கன்னு சொன்னேன்…” என்றான் சீரியஸாக.

“என்ன சொல்லி வச்சுருக்கீங்க சூர்யா?” என்று அவள் பதட்டமாகக் கத்திய போது தான், அவன் உதடுகள் கேலி சிரிப்பில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“பொய்! பொய் தானே?” என்று கோபத்துடன் அவன் மார்பில் சட் சட்டென்று அடித்தாள்.

“ஹாஹா… என்ன நைட் வரை ரூமிலேயே இருப்போமா?” அவளின் அடியை வாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான்.

“உங்களை எல்லாம் என் பக்கத்துலயே வர விட்டிருக்கக் கூடாது…” என்று இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போட்டாள்.

“ஏய், வலிக்குதுடி…” என்று அவளின் கையைப் பிடித்துத் தடுத்தான்.

“தினேஷ்கிட்ட என்ன சொன்னீங்க? உண்மையைச் சொல்லுங்க…” என்றாள்.

“நந்தினி அவனை ரூமிற்குள் கூட விட யோசிச்சுருப்பாங்க போல. அதில் அவன் கொஞ்சம் மூட் அவுட்டா பேசினான். அதான் நாங்க வர கொஞ்ச நேரம் ஆகும்னு சொல்லி நந்தினியைத் தனியா நீ வெளியே கூட்டிட்டுப் போ. நீங்க இரண்டு பேரும் சுத்திட்டு வாங்க. ஈவ்னிங் நாம ஜாயின் பண்ணிக்குவோம்னு சொன்னேன்.

நந்தினி கூடத் தனியா சுத்தும் ஆசையில் வேற கேள்வி கேட்காம சந்தோஷமா நந்தினியை அழைச்சுட்டு கிளம்பிட்டான். அவங்க சாப்பிட்டு சுத்திப் பார்த்துட்டு வருவாங்க. நாமும் தனியா போய்ச் சாப்பிட்டு சுத்த போகலாம்…” என்றான்.

அதன் பிறகு தான் அவளுக்கு நிம்மதியான மூச்சே வந்தது.

“ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க. சரி, வாங்க சாப்பிட போவோம், பசிக்குது…” என்றாள்.

“இப்பவும் கூட ஒன்னும் குறைந்து விடவில்லை. இங்கேயே சாப்பாடு வர வச்சு சாப்பிட்டு, அவங்க வரும் வரை ரூமில் இருக்கலாம். என்ன சொல்ற?” என்று கண்சிமிட்டி சிரித்தான் சூர்யா.

“சூர்யா…” என்று பல்லை கடித்தவளுக்கும் சிரிப்பு வந்தது.

மனைவியிடம் சிரித்துப் பேசினாலும் சூர்யாவின் மனதில் ஏதோ யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

இருவரும் கிளம்பி சாப்பிட சென்றனர்.

ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு, சுற்றி பார்க்க கிளம்பினர்.

ரிச்சார்ட்டில் இருந்து ஒரு டாக்சி பிடித்துக் கிளம்பி சென்றவர்கள், ஒரே கல்லில் செதுக்கிய சிற்பங்கள், பெரிய கருங்கல் பந்து, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரைக் கோயில் எல்லாம் இருவரும் ஜோடியாகச் சுற்றி வந்தனர்.

கணவனுடன் அப்படிச் சுற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாள் யுவஸ்ரீ.

அவளின் முகம் புன்னகையில் மலர்ந்தே இருந்தது.

கணவனின் கையைத் தானே பற்றிக் கொண்டு வலம் வந்தாள்.

அவளை முதல் முறையாக அவ்வளவு மலர்ச்சியுடன் பார்த்தான் சூர்யா.

அவ்வப்போது பட்பட்டென்று பேசி விடும் மனைவியின் முகத்தில் இருக்கும் ஏதோ வருத்தமும், இப்போது அவளின் முகத்தில் இருக்கும் மலர்ச்சியும் அவனுக்கு யோசனையைக் கொடுத்தது.

ஆறு மணி வரை சுற்றியவர்களைத் தினேஷ் அழைக்க, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்தான்.

அவர்கள் இருக்கும் இடம் சொன்னதும் தாங்களும் அங்கே சென்றனர்.

அதன் பிறகு ரிச்சார்ட் சென்று அறையைக் காலி செய்து விட்டு, சென்னையை நோக்கி கிளம்பினர்.

“சேர்ந்து சுத்துவோம்னு வந்துட்டுத் தனித்தனியா போயிட்டோம். இதில் உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே?” என்று நந்தினியிடம் கேட்டாள் யுவஸ்ரீ.

“எனக்கும் முதலில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது யுவா. ஆனால் தினுவை நான் ஏற்கெனவே ரொம்பத் தவிக்க விடுறேன். இப்போ நான் அவர் கூடத் தனியா சுத்திப் பார்த்ததில் அவர் ரொம்ப ஹேப்பி. எனக்கும் இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…” என்றாள் நந்தினி.

தாங்களும் உடன் வந்ததால் தான் நந்தினி இங்கே வரவே சம்மதம் சொல்லியிருந்தாள். அப்படியிருக்க, தான் அவளைத் தனியாக விட்டுவிட்டோமே என்று அவளுக்கு உள்ளுக்குள் சிறிது தவிப்பு இருக்கத்தான் செய்தது.

அவள் அப்படிச் சொன்னபிறகு தான் யுவஸ்ரீயின் தவிப்பும் அடங்கியது.

வழியில் ஒரு உணவகத்தில் உணவையும் முடித்துக் கொண்டனர்.

முதலில் நந்தினியை அவள் வீடு இருக்கும் ஏரியாவில் இறக்கி விட்டனர்.

பின்பு சூர்யாவையும், யுவஸ்ரீயையும் இறக்கி விட்டுச் சென்றான் தினேஷ்.

“நாமும் ஒரு கார் சீக்கிரம் வாங்கணும். அப்போது தான் வெளியே போக யூஸ் ஆகும்…” தங்கள் வீட்டிற்குச் செல்ல மின்தூக்கியில் ஏறிய பின் மனைவியிடம் சொன்னான் சூர்யா.

அவனுக்கு யுவஸ்ரீ எந்தப் பதிலும் சொல்லவில்லை.

இன்று இருந்த மனநிலையில் தன்னுடன் ஊர் சுற்றினான். இதுவே இனி வரும் நாட்களிலும் அப்படி இருப்பானா என்பது கேள்வி குறியே!

அதனால் அவள் அதீத ஆசை எதுவும் மனதில் வளர்த்துக் கொள்ளவில்லை.

வீட்டிற்குச் சென்று வெளியே சுற்றிய அலுப்பு தீர குளித்து விட்டு வந்து, இருவரும் படுக்கையில் விழுந்தனர்.

அவள் நைட்டி போட்டிருப்பதைப் பார்த்தவன், “சாக்கு மூட்டை மாதிரி இதைப் போடாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்வது?” என்று கடிந்து கொண்டே அருகில் இழுத்தான்.

“ஏன் போட்டா என்ன? அது உங்களை என்ன செய்தாம்?”

“ஒன்னுமே தெரியலை. எல்லாத்தையும் இழுத்து மூடிக்கிட்டு…” என்று கடுப்பாகச் சொன்னான்.

“அதுக்காக… எல்லாம் தெரியுற மாதிரியா ட்ரெஸ் போட முடியும்?”

“என் முன்னாடி அப்படிப் போடலாம் தப்பில்லை…”

“ஆனா அது எனக்குத் தப்பு தான்…”

“என் முன்னாடி போடுவதில் என்ன தப்பு?”

“அச்சோ! எதுக்கு இத்தனை பேச்சு? பேசாமல் தூங்குங்க. எனக்கு டயர்டா இருக்கு…”

“ஏய், தூங்கவா இவ்வளவு நேரம் உன் சாக்கு மூட்டையைப் பத்தி பேசினேன்?” என்றவன் கைகள் செயலில் இறங்க, பொழுது இனிமையாக நகர்ந்தது.

சற்று நேரத்தில் அவளைத் தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டவன், “நான் உன்கிட்ட இப்படி இருப்பது உனக்குப் பிடிக்கலைன்னு நினைச்சேன். ஆனால் உனக்குப் பிடிக்காதது போல் தெரியலை. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்படிப் பேசின, உன்கிட்ட நான் வருவது பிடிக்காதது போல?” என்று கேட்டான்.

“இது பிடிக்காதுன்னு நான் சொன்னதே இல்லைங்க. இது மட்டும்னு நீங்க என்கிட்ட வருது பிடிக்கலைன்னு தான் சொன்னேன்…” என்றாள்.

அவள் பேச்சுப் புரியாமல் கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.

“நீ என்ன சொல்றன்னு எனக்குப் புரியலை. புரியும் படியா சொல்லு…” என்றான்.

“சொல்லி சில விஷயங்களைப் புரிய வைக்க முடியாதுங்க. நீங்களே புரிந்து கொள்வது தான் எனக்குச் சந்தோஷம் தரும்…”

“ஏன்டி இப்படிப் பண்ற? நானா புரிந்து கொள்ளும் வரை எதுக்கு வெயிட் பண்ணி சந்தோஷப்படணும்? நீ இப்ப சொன்னால் இப்பவே சந்தோஷப்படலாம்…” என்றான்.

“நீங்க இப்படிக் கேட்டதே எனக்குச் சந்தோஷம் தான் சூர்யா. இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்!” என்றாள்.

தன் முகத்திற்கு நேராக இருந்த அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சூர்யா.

அவன் பார்வையுடன் தன் பார்வையைச் சளைக்காமல் மோத விட்டாள் யுவஸ்ரீ.

அவளின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனைத் தாக்கியது.

அவள் தன்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறாள் என்று புரிந்தது. ஆனால் என்ன என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.

அதை அவன் தெரிந்து கொள்ள நினைப்பதே யுவஸ்ரீக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வளவு நாளும் மனதில் இருந்த அழுத்தம் சிறிது குறைவது போல் இருக்க, அவனைப் பார்த்து மோகனமாகப் புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகை சூர்யாவின் மனதை குளிர்வித்தது.

இருவரும் மனதில் இருந்த கசடுகளை நினைக்காமல் மெல்ல நித்திரையைத் தழுவினர்.

அடுத்து வந்த நாட்கள் பெரிய பூசல் எதுவும் இல்லாமல் இலகுவாகவே சென்று கொண்டிருந்தது.

இதற்கிடையே தைப்பொங்கல் வர, விடுமுறைக்குச் சேலத்தில் இருக்கும் அவளின் தாய் வீடு சென்றனர்.

தாங்கள் மட்டும் இருக்கும் நாட்களை விட, இது போல் ஊர் செல்லும் நாட்களை மிகவும் விரும்புவாள் யுவஸ்ரீ.

அந்த நாட்களில் தான் சூர்யா அவளுடனே இருப்பான். அதுவும் அவன் வீட்டை விட, அவள் வீட்டிற்குச் செல்லும் போது அங்கே அவனுக்குப் பழக யாரும் இல்லாததால் அவளுடனே தான் ஒட்டிக் கொண்டு இருப்பான்.

அதனால் அந்தப் பொழுதை அவள் மிகவுமே ரசிப்பாள்.

இதுவரை ஊருக்குச் செல்லும் போது மனைவியின் மனநிலையைப் பற்றிப் பொருட்படுத்தாதவன், இப்போது அவளைக் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

அவளின் முகத்தில் இருந்த ஜொலிஜொலிப்பு அவளின் மகிழ்ச்சியை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

ரயிலில் சேலம் சென்று, அங்கிருந்து டாக்சி பிடித்து யுவஸ்ரீயின் வீடு சென்றனர்.

அன்னையைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்துடன் வீட்டிற்குள் நுழைந்த யுவஸ்ரீக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நன்றாக இருந்த அவளின் அம்மா பரிமளா அவளையும், மாப்பிள்ளையையும் கையில் பெரிய கட்டுடன் வரவேற்க அதிர்ந்தே போனாள்.

“அம்மா, என்ன இது? இவ்வளவு பெரிய கட்டு, என்னாச்சு?” என்று பதட்டமாகக் கேட்டாள்.

“முதலில் நீயும், மாப்பிள்ளையும் உட்காருங்க. உட்காருங்க மாப்பிள்ளை. உங்களுக்குக் குடிக்கக் காஃபி கொண்டு வரவா?” என்று கேட்டார்.

“காஃபி எல்லாம் இருக்கட்டும் அத்தை. கையில் எப்படி அடிபட்டது?” என்று கேட்டான் சூர்யா.

“இரண்டு நாளைக்கு முன்னாடி பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் மாப்பிள்ளை. கையை எப்படியோ எசகுபிசக்கா ஊனிட்டேன். அதில் கையில் அடிபட்டுருச்சு. மாவு கட்டு போட்டுருக்கேன்…” என்றார்.

“என்னம்மா சொல்றீங்க? இரண்டு நாள் ஆச்சா? என்கிட்ட ஏன் சொல்லலை?” என்று கேட்டாள் யுவஸ்ரீ.

“எப்படியும் பொங்கலுக்கு நீயும், மாப்பிள்ளையும் இங்கே தானே வருவதாக இருந்தீங்க. அதான் ஏன் சொல்லி பதட்டப்பட வைக்கணும்னு சொல்லலை…” என்றார்.

“ஏன்மா இப்படிச் செய்தீங்க? சொல்லியிருந்தால் நான் முன்னாடியே வந்திருப்பேன்ல? தனியா எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ?” என்று பரிதவித்துப் போனாள் யுவஸ்ரீ.

“தனியா என்ன கஷ்டம்? பக்கத்து வீட்டு ஆளுங்க எல்லாம் உதவி செய்தாங்க. அதோட உன்னோட மாமா, அத்தை இரண்டு நாள் என் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க. பொங்கலுக்கு ஊருக்குப் போகணும்னு இன்னைக்குத்தான் கிளம்பினாங்க…” என்றார்.

பரிமளாவின் தம்பி பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்தார். அவர் வந்து உதவியதை சொன்ன பிறகும் யுவஸ்ரீயின் முகம் தெளியவில்லை.

“மாமா வந்தால் என்ன? நீங்க என்கிட்டயும் சொல்லியிருக்கணும் தானே?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.

தாய் தனியாக இருக்கிறார் என்று அவளுக்கு ஏற்கெனவே வருத்தம் உண்டு.

இப்போது அவர் அடிபட்டுத் தனியாகக் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை அவளால் தாளவே முடியவில்லை.

“அதான் என் கூட இரண்டு நாள் இருக்கப் போற தானே? விடுமா. நீ உட்காரு. நான் போய் மாப்பிள்ளைக்கும் உனக்கும் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்றார்.

“இந்தக் கையை வச்சுக்கிட்டு தனியா என்ன செய்வீங்க? நானே போடுறேன். நீங்க உட்காருங்க…” என்றவள், சமையலறைக்குள் சென்றாள்.

“இதோ வர்றேன் மாப்பிள்ளை…” என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டு மகளின் பின் சென்றார் பரிமளா.

காஃபி குடித்ததும், சூர்யா அறைக்குள் செல்ல, தானும் பின்னால் சென்றாள்.

“என்னங்க இங்கே வந்தால் வெளியே போக ஆசைப்படுவீங்க. இப்ப அம்மாவுக்கு அடிபட்டுருக்கு. என்னால் அம்மாவை தனியா விட்டு வெளியே வர முடியாது. இப்ப என்ன பண்ணலாம்?” என்று கேட்டாள்.

“இப்ப நான் ஊர் சுத்தணும்னு உன்கிட்ட சொன்னேனா பொண்டாட்டி? போ, போய் வேலையைப் பாரு. நான் சமாளிச்சுப்பேன்…” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் நிம்மதியாக இருக்க, “தேங்க்ஸ் சூர்யா…” என்றவள் அவன் கன்னத்தில் தன் இதழை பதித்து விட்டு ஓடினாள் யுவஸ்ரீ.

மலைத்து நின்றான் சூர்யா. அவள் இது போல் தானாக வந்து முத்தமிட்ட பொழுதுகள் எல்லாம் அபூர்வமானது.

அங்கே இருந்த இரண்டு நாட்களும் அவனைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்டாள்.

இங்கே வந்தால் பரிமளா மகளை ஒரு வேலை பார்க்க விடாமல் அவர் தான் மாப்பிள்ளைக்கு நன்றாகச் செய்ய வேண்டும் என்று விழுந்து விழுந்து கவனிப்பார்.

ஆனால் இந்த முறை அவரால் முடியாமல் போக, அன்னைக்கு ஓய்வு கொடுத்து விட்டு தானே அனைத்தையும் கவனித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

சூர்யாவும் ஏனோ இந்த முறையை வெளியே போக வேண்டும். மனைவி தன்னுடனே இருக்க வேண்டும் என்று நினைக்காமல் அனுசரித்து நடந்து கொண்டான்.

அதுவே யுவஸ்ரீக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

இருவரும் மறுநாள் இரவே கிளம்புவதாக இருந்தது. ஆனால் கிளம்பும் போது கணவனிடம் வந்தவள், தான் இங்கே இருந்து விட்டு வருவதாகத் தெரிவித்தாள் யுவஸ்ரீ.

“இங்கே இருக்கப் போறீயா? நாளைக்கு நாம கம்பெனிக்குப் போகணும் யுவா…” என்றான்.

“அம்மா இப்படி இருக்கும் போது எப்படி விட்டுட்டு வர முடியும் சூர்யா? இன்னும் இரண்டு நாள் தானே ஆபீஸ். அதுக்குப் பிறகு சனி, ஞாயிறு லீவ் தானே? நான் சண்டே நைட் கிளம்பி வந்துடுறேன். ப்ளீஸ் சூர்யா…” என்றாள்.

“வேலை நிறைய இருக்குடி. அதனால் தானே இந்த வாரம் முழுவதும் லீவ் போடாமல் பொங்கலுக்கு இரண்டு நாள் லீவ்விற்கு மட்டும் ஊருக்கு வந்தோம்…” என்றான்.

“எனக்கும் அது புரியுது சூர்யா. ஆனால் அம்மாவை இப்படி விட்டுட்டு வரவும் எனக்குக் கஷ்டமா இருக்கு…” என்றாள்.

“அப்ப ஒன்னு செய்! வியாழன், வெள்ளி வொர்க் ப்ரம் ஹோம் செய். அப்பத்தான் சமாளிக்க முடியும்…” என்றான்.

“அது எனக்கு ஓகே சூர்யா. நான் இங்கே இருந்தே வேலை பார்க்கிறேன். ஆனால் நீங்க இந்த நாலு நாள் தனியா சமாளிச்சுப்பீங்க தானே?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன? இரண்டு நாள் வேலை. அடுத்த இரண்டு நாள் ஃபிரண்ட்ஸ் கூடச் சுத்துவேன். எனக்கு நேரம் ஓடிடும்…” என்றான்.

‘அதானே! நீங்க என்னை மிஸ் பண்ணிட்டாலும்…’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

மனைவியை மிஸ் செய்வதைப் பற்றிச் சிறிதும் யோசிக்காத சூர்யா, அவளை அம்மா வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் ஊருக்குக் கிளம்பினான்.