16 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 16

“சக்தி… தாயி…” என்று அழைத்துக் கொண்டே வந்தார் மீனாம்பிகை.

ஆனால் அவரின் குரல் சக்தியிடம் சென்று சேரவில்லை. பிரேமிடம் தான் சீக்கிரம் ஏதாவது செய்வதாகச் சொல்லி அழைப்பை வைத்து விட்டு யோசனையுடன் அமர்ந்து விட்டிருந்தாள்.

“என்ன தாயி செய்ற?” என்று அறை வாசலிலிருந்து அழைக்கவும், சட்டென்று தன் நினைவிலிருந்து கலைந்தாள் சக்தி.

“என்ன அத்தை, சொல்லுங்க…”

“மணி ரெண்டு ஆகிப்போச்சு தாயி. சோறு உங்க வரலையா?”

“இதோ வர்றேன் அத்தை…” என்று எழுந்து சென்றாள்.

சக்தி தன் தம்பியின் மகள் என்று தெரிந்த பிறகு அவளுடன் இளக்கமாகவே பழகி வந்தார் மீனாம்பிகை.

சக்தியும் முன்பு அவர் மீது இருந்த கோபத்தை விட்டுவிட்டு சாதாரணமாகவே பேசினாள்.

அவள் கீழே சென்ற போது வழக்கமாக மதிய நேரத்தில் வீட்டிற்கு உணவு உண்ண வரும் சர்வேஸ்வரன் அன்று வீட்டிற்கு வரவில்லை.

வேலை அதிகம் இருந்தால் சற்று நேரம் சென்றும் வருவான் என்பதால் அதைப் பொருட்படுத்தாமல் சாப்பிட அமர்ந்து விட்டாள்.

இத்தனை நாட்களில் கணவன் உண்ட பிறகு தான் மனைவி உண்ண வேண்டும் என்ற மீனாம்பிகையின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தான் சர்வேஸ்வரன்.

அதனால் மருமகளுக்குத் தானே பரிமாறியவர் அவளுடன் தானும் உண்டார்.

சாப்பிட்டு முடித்ததும் அறைக்குச் சென்று விட்டாள்.

மாலை வரை ஒரு குட்டி தூக்கமும் போட்டு விட்டு எழுந்தாள். அப்போது மணி ஐந்து ஆகியிருக்க, கணவன் வந்திருப்பானோ என்று நினைத்து அறையை நோட்டமிட்டாள்.

ஆனால் அவன் வந்திருக்கவில்லை என்றதும் கீழே சென்றாள்.

இரவு உணவு வரையுமே கீழே இருந்தாள். இரவு உணவு உண்ண இப்போதும் மீனாம்பிகை அழைக்க, இப்போதாவது கணவன் வந்ததும் உண்போம் என்று நினைத்தவள், நேரம் சென்று சாப்பிடுவதாகச் சொன்னாள்.

ஆனால் ஒன்பது மணி வரையுமே அவளின் கணவன் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.

எட்டு மணிக்கு மேல் வெளி வேலைகளை வைத்துக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்து விடுபவன், இன்று ஒன்பது மணி ஆகியும் வரவில்லை என்றதும் ‘ஏன், என்னாச்சு?’ என்ற கேள்வியுடன் காத்திருந்தாள்.

“என்னமா தாயி இம்புட்டு நேரம் உங்காம இருக்க? வா, வயித்துக்குப் போட்டுட்டுப் போய்ப் படு…” என்று அழைத்தார் மீனாம்பிகை.

“அவர் இன்னும் வரலையே அத்தை. வரட்டும். அவர் கூடச் சாப்பிடுறேன்…” என்ற மருமகளைத் திகைத்துப் போய்ப் பார்த்தார்.

‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு அதிர்வாகப் பார்க்கிறார்?’ என்ற சிந்தனையுடன் மாமியாரை பார்த்தாள்.

“உமக்கும், தம்பிக்கும் இடைல எதுவும் மனஸ்தாபமா தாயி?” என்று பதறி போய்க் கேட்டார்.

“ஏன் அத்தை அப்படிக் கேட்கிறீங்க? அப்படி எதுவும் இல்லையே…” என்று புரியாமல் தலையை ஆட்டியவளின் சிந்தனையில் அன்று காலை வயலில் நடந்தது ஞாபகத்தில் வந்தது.

‘இனி நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று தானே சொல்லி விட்டுச் சென்றான். வேறு எதுவும் கோபமாகக் கூடப் பேசவில்லையே. ஒருவேளை என்னைக் கட்டுப்படுத்த முடியாத கோபமா?’ என்று யோசித்தாள்.

“மனஸ்தாபம் இல்லைனா அப்புறம் ஏன் தாயி அவன் வெளியூரு போனது கூட உமக்குத் தெரியலை?” என்று மருமகளைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

‘என்ன வெளியூர் சென்றிருக்கிறானா? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே’ அதிர்ச்சியானாள் சக்தி.

மருமகளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த மீனாம்பிகைக்கு அதன் பிறகு ஒன்றும் விசாரிக்க மனது வரவில்லை. மகன் வந்த பிறகு பேசிக் கொள்வோம் என்று ஒத்திப்போட்டார்.

“மதுர வரை போயிருக்கான் தாயி. ஏதோ விவசாயிக கூட்டம் நடக்குதாம். இன்னைக்கு அங்கனயே தங்கிட்டு நாளைக்கும் கூட்டத்துக்குப் போயிட்டுத்தான் வருவேன்னு சொல்லிட்டு நீ வயலுல இருந்து வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிட்டான். வயலுல உன்னைப் பார்த்ததா சொன்னான். அப்போ உம்மகிட்ட விசயத்தைச் சொல்லியிருப்பான்னு நினைச்சுப்புட்டேன்…” என்று விவரம் சொன்னார் மீனாம்பிகை.

‘இதைச் சொல்லத்தான் வயலுக்குத் தன்னைப் பார்க்க வந்திருப்பானோ? தான் அவனிடம் பேசிய பேச்சில் கோபத்துடன் சொல்லாமல் சென்று விட்டான் போல் இருக்கிறது…’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் அவன் அப்படித் தன்னிடம் சொல்லாமல் சென்றது அவளுக்கு வருத்தத்தையும் தந்தது.

அதோடு அவன் ஊரில் இல்லை என்றால் தான் எடுத்த முடிவை நாளை எப்படிச் செயல்படுத்துவது? ஏற்கனவே தான் நிறைய நாட்களை வீணாக்கியது போல் இருந்தது. இப்போது தன் தந்தையின் உடல்நிலை பின்னடைவு அடையவும் தன் முடிவை நாளையே செயல்படுத்திவிட நினைத்திருந்தாள்.

இப்போது சர்வேஸ்வரன் ஊரில் இல்லாததால் தன் முடிவை இன்னும் ஒரு நாள் தள்ளி போட வேண்டும் என்ற நினைவில் பெருமூச்சுடன் படுக்க எழுந்தாள்.

“சக்தி…” என்றழைத்து அவளை நிறுத்தினார் மீனாம்பிகை.

“என்ன அத்தை?”

“எம் பொறப்புக்கிட்ட பேசணும் போல இருக்கு தாயி. உம்ம பிடிவாதத்தை விட்டுப்புட்டு ஒரே ஒரு தடவை என்னைப் பேச வையேன்…” என்று கெஞ்சலாகக் கேட்டார்.

“இன்னும் இரண்டு நாள் பொறுங்க அத்தை பேசலாம்…” என்று உறுதியாகச் சொன்னாள் சக்தி.

“நிசமா தாயி?” என்று ஆவலாகக் கேட்டார் மீனாம்பிகை.

அவரும் தன் தம்பியைப் பற்றித் தெரிந்த நாளில் இருந்து அவளிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள்.

ஆனால் இன்றோ இரண்டு நாளில் பேசலாம் என்கிறாளே என்று நினைத்து மகிழ்ந்து போனார்.

அந்த மகிழ்ச்சியுடனே படுக்கச் சென்றார்.

‘பேச மட்டும் இல்லை. சீக்கிரமே நீங்க நேரிலேயே என் அப்பாவை பார்க்கலாம் அத்தை. அதுவும் இதே ஊரில்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தானும் படுக்கச் சென்றாள் சக்தி.

படுக்கையில் விழுந்ததும் முதலில் தந்தையின் ஞாபகம் வந்தது. அவரின் உடல்நிலையைக் குறித்து யோசித்துக் கலங்கினாள்.

பின் அவளின் நினைவடுக்கில் வந்தான் அவளின் கணவன். வெளியூர் செல்கிறேன் என்றும் அவளிடம் சொல்லவில்லை. அங்கே சென்ற பிறகும் தொலைபேசியில் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.

அது அவளின் மனதை உறுத்தியது. அப்படி என்ன என் மேல் கோபம்? தான் விறைத்துக் கொண்டு சுற்றினாலும் அவன் தன்னை நெருங்கி நெருங்கி வருவான். அப்படிப்பட்டவன் வெளியூர் செல்வதைக் கூடச் சொல்லாமல் சென்று இருக்கிறான். ஏன்? என்று நினைத்துக் கொண்டாள்.

அங்கே சென்ற பிறகாவது அழைத்துச் சொல்லியிருக்கலாம் இல்லையா? அதை ஏன் செய்யவில்லை? என்று நினைத்தாள்.

அதேநேரம் தானும் அவனுக்கு அழைத்துப் பேசவில்லை என்பதை மறந்து போனாள்.

‘அவன் சொல்லாமல் சென்றதற்குத் தான் அவன் மீது கோபப்படத்தான் முடியும். நானேவா அழைத்துப் பேச முடியும்?’ என்றும் நினைத்துக் கொண்டாள்.

கணவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் அருகில் இல்லாத படுக்கை வெறுமை உணர்வை தந்தது.

இடைவெளி விட்டுப் படுத்தாலும் அவனின் வாசம் அறை முழுவதும் நிறைந்திருப்பதாக உணர்ந்திருக்கிறாள்.

தனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்ன ஒரே காரணத்திற்காகப் பகலில் சீண்டினாலும் இரவில் தன் அருகில் கூட வராத அவனின் கட்டுப்பாடு அவளுக்கு வியப்பையும் தந்திருக்கிறது.

அவனின் அந்தக் கட்டுப்பாடே அவளை அவனை நெருங்கி படுக்கத் தூண்டியிருக்கிறது. கட்டுமஸ்தாக இருக்கும் அவனின் புஜத்தின் அணைப்பிலும், உரமேறி இருக்கும் அவனின் நெஞ்சத்தில் தலைவைத்து படுக்கவும் எத்தனையோ நாட்கள் ஆவல் எழும்பியிருக்கிறது.

அப்படி அவள் படுத்திருந்தாலும் அவன் தடுத்திருக்க மாட்டான் என்றும் அவளுக்குத் தெரியும். ‘ஆனால் அதன் பிறகு?’ என்ற கேள்வி தான் அவனை நெருங்க விடாமல் அவளைத் தடை செய்திருக்கிறது.

தானே விலக்கியும் வைத்து, தானே நெருங்கவும் செய்தால் அவனின் செயல் எப்படி இருக்கும் என்று அவளால் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

கணவனைப் பற்றியே வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு மெல்ல மெல்ல நித்திரையைத் தழுவினாள் சக்தி.

மறுநாளும் சக்திக்கு சர்வேஸ்வரன் அழைக்கவே இல்லை.

இன்றாவது அவனின் கோபம் குறைந்து அழைப்பான் என்று சக்தியின் மனதில் சிறு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவளின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை தந்திருந்தான் அவளின் கணவன்.

மாலை வந்துவிடுவான் என்று காத்திருந்தாள். ஆனால் இரவு உணவு நேரமும் முடிந்த பிறகும் அவன் வரவில்லை என்றதும் அவளின் முகம் சோர்ந்தது.

‘அவனைக் காணாமல் ஒருநாள் கூடத் தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லையே. இதில் நாளை நடக்கப் போகும் சம்பவங்களுக்குப் பிறகு அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிய வேண்டியது வந்தால் தான் எப்படி அதைத் தாங்க போகிறோம்?’ என்று நினைத்தவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

காதல் கொண்ட மனம் மெல்லினமாய் இளகி அவளைத் தவிக்க வைத்தது.

அதே நேரம் தந்தையை நினைத்ததும் வல்லினமாய் மாறி மனதை இறுக்கிப் பிடித்துத் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.

இரவு உணவையும் மாமியாருக்காக ஏனோ தானோ என்று முடித்து விட்டுப் படுக்கையில் விட்டத்தைப் பார்த்து படுத்துவிட்டாள்.

நாளைய நிகழ்வுகள் எப்படி இருக்குமோ என்று நினைத்தவளுக்குத் தூக்கம் தொலை தூரம் சென்றது.

இன்றைய இரவு தான் கணவனுடன் இருக்க முடியும். நாளை எப்படியோ? இன்றாவது அவனின் வாசத்தையும் அருகாமையையும் உணர வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் மணி பதினொன்று ஆன பிறகும் கணவன் வரவில்லை என்றதும் படுக்கையை விட்டு எழுந்தாள்.

‘எங்கே இருக்கிறான் என்று போன் போட்டு கேட்கலாமா?’ என்ற எண்ணத்துடன் தன் கைபேசியைக் கையில் எடுத்தாள்.

‘உன்னிடம் சொல்லாமல் சென்றவனிடம் நீயே வழிய சென்று பேச போகிறாயா?’ என்று மனம் இடிந்துரைத்தது.

ஆனால் இன்றே கண் நிறையப் பார்த்து மனம் முழுவதும் அவனின் உருவத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அவனின் அருகாமையில் தன் வாழ்நாளுக்கான நினைவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அவளை உந்தி தள்ள தன் வீராப்பை விட்டுவிட்டு கணவனுக்கு அழைத்தாள்.

அழைப்பு ஓசை ஒலித்துக் கொண்டே இருந்ததே தவிர அவன் எடுப்பது போலவே இல்லை. கடைசி ரிங் கேட்கும் வரை பொறுமையாகவே காத்திருந்தாள்.

கடைசி ரிங் முடியும் முன்பே அந்தப் பக்கம் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. அதே நேரம் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சர்வேஸ்வரன்.

அவன் அழைப்பை ஏற்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் போனையே பார்த்துக் கொண்டிருந்த சக்தி அறைகதவு திறக்கும் ஓசையில் சிலிர்த்து திரும்பி வாசலை பார்த்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே கையில் கைபேசியுடன் வந்த கணவனை விழி சிமிட்டாமல் பார்த்தாள்.

“என்ன சக்தியாருக்கு இன்னைக்குத் தான் என் ஞாபகம் வந்தது போல?” என்று கேட்டுக் கொண்டே படுக்கையின் அருகில் வந்தான்.

ஆனால் அவனுக்குப் பதில் சொல்லாமல் இமைத்தட்டாமல் அவனைப் பார்த்தாள்.

வேஷ்டி, சட்டையில் இல்லாமல் ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட்டில் இருந்தான். அவ்வுடை அவளுக்கு அவளின் பழைய ஈஸ்வரை கண் முன் கொண்டு வந்தது.

பயணத்தினாலோ? வேலையினாலோ? அவனின் முகத்தில் சோர்வு தெரிந்தது.

“சாப்டீங்களா?”

‘இப்பவாவது எனக்கு உன் ஞாபகம் வந்தது. உனக்கு அதுவும் கூட வரவில்லையே. என்னிடம் சொல்லாமல் தானே சென்றாய்?’ என்று கேட்கத்தான் அவளின் நாவு துடித்தது.

ஆனால் கணவனிடம் தெரிந்த சோர்வு அவனின் உணவைப் பற்றித்தான் விசாரிக்கத் தூண்டியது.

மனைவியின் குரலில் இருந்த இளக்கம் அவள் தன்னைத் தேடியிருக்கிறாள் என்ற உணர்வை அவனுக்குத் தர, மெல்லிய புன்னகையை உதட்டோரம் கசியவிட்டான்.

மெல்ல படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்றவன் அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.

முத்தமிடத்தான் வருகிறானோ என்று எண்ணியவள் இமைகளை மெல்ல மூடிக் கொண்டாள்.

இன்று அவனுக்கு எதையும் மறுக்கவோ, அவனை விலக்கவோ அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

அவளின் ஒப்புக்கொடுத்தலை உணர்ந்தவன் வியப்புடன் மனைவியைப் பார்த்தான். அடுத்த நொடி அவனின் புருவங்கள் சிந்தனையின் அடையாளத்தைப் பிரதிப்பலித்தன.

கணவனின் தீண்டலை தன்னில் உணராத சக்தி விழிகளை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே அவளின் முகத்தில் தவழ்ந்த முடியை ஒதுக்கி விட்டவன் “டிராவல் பண்ணியது அலுப்பா இருக்கு. போய்க் குளிச்சுட்டு வர்றேன். நீ தூங்கு…” என்றவன் அவளை விட்டு விலகி குளியலறை நோக்கி நடந்தான்.

“சாப்டீங்களான்னு கேட்டேனே?” என்று தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் கேட்டாள்.

நின்று திரும்பி பார்த்து மெல்லிய புன்னகையுடன் “சாப்பிட்டேன் சக்தி…” என்றவன் குளிக்கச் சென்றான்.

அவன் குளித்து விட்டு வந்த போது கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள் சக்தி.

அவளை வியப்பாய் பார்த்தவன், “இன்னும் தூங்கலையா நீ?” என்று கேட்டான்.

“இல்லை, தூக்கம் வரலை…” என்றாள்.

“ஏன்?” என்றவன் ஈரத்துவாலையைக் கலைந்து விட்டு இலகுவான உடைக்கு மாற ஆரம்பித்தான்.

அவன் உடை மாற்றுவதை முகத்தைத் திருப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

அதுவும் அவனுக்கு வியப்பையே தந்தது.

‘நேற்று காலையில் தான் உடை மாற்றுவதைப் பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவள், தான் அரைகுறை ஆடையில் நின்ற போதும் ‘ச்சீ’ என்றவள், இன்று தான் நிதானமாக உடை மாற்றுவதை இமைசிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்ன ஆனது இவளுக்கு?’ என்று ஓரப்பார்வையாக அவளைப் பார்த்தான்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்று அறிந்தும் சக்தி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.

“என்ன விஷயம் சக்தி?” என்று கேட்டுக் கொண்டே உடையை மாற்றி விட்டு அவளின் அருகில் வந்தான்.

“என்ன? என்ன விஷயம்? ஒன்னுமில்லையே…” என்றாள்.

“ஒன்னுமில்லையா? அப்படியா? ஆனா உன் பார்வை ஏதோ இருக்குன்னு சொல்லுதே…” என்றவன் அவளின் அருகில் தானும் கால் நீட்டி அமர்ந்து கொண்டு கேட்டான்.

“என் பார்வை என்ன சொல்ல போகுது? நான் எப்பவும் போல் தான் இருக்கேன்…” என்றாள்.

“ம்கூம்… அப்படியா? ஆனா நீ சொல்வதை நம்பத்தான் முடியலை…”

“ஏன்?”

“ஏன்னா… என் சக்தியாரோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி சக்தி. இன்னைக்கு உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுது…” என்றான்.

அவன் தன்னை உணர்ந்து கொண்டதில் உள்ளம் திடுக்கிட்டவள், முயன்று தன்னைச் சாதாரணமாகக் காட்டிக் கொண்டாள்.

“என்கிட்ட என்ன வித்தியாசம் இருக்கப் போகுது? நீங்க தான் வித்தியாச வித்தியாசமா நடந்துகிறீங்க…” என்றாள்.

“அப்படி என்ன சக்தியாரே நான் வித்தியாசமா நடந்துகிட்டேன்?”

“அது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியுமா என்ன? எல்லாம் நீங்க தெரிஞ்சே தானே செய்றீங்க. அப்ப நான் எதைச் சொல்றேன்னு தெரியாது?” என்று மனத்தாங்கலுடன் கேட்டவளை அழுத்தமாகப் பார்த்தான்.

“நான் உன்கிட்ட சொல்லாமல் ஊருக்கு போனதை சொல்ற போல இருக்கு…” என்று சரியாகச் சொன்னவன், “உன்கிட்ட சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது சக்தி? என் பிரிவை நினைச்சு ஏங்க போறீயா? இல்ல நம்மை விட்டுட்டு இரண்டு நாள் ஊருக்குப் போறானேன்னு தவிக்கப் போறீயா? இல்ல, நான் என்ன செய்றேன், என்ன சாப்பிட்டேன், வேலை எப்ப முடிஞ்சு ஊருக்கு வரப் போறேன்னு நேரா நேரத்துக்குப் போன் போட்டுக் கேட்கத்தான் போறீயா?

இதில் எதுவுமே நடக்காது, இல்லையா? நான் எங்க இருந்தாலும் நமக்குள் பெரிய இடைவெளி இருக்கப் போறது என்னவோ உண்மை. அப்படி இருக்க, நான் உன்கிட்ட சொல்லிட்டுப் போனால் என்ன? சொல்லாமல் போனால் என்ன?” என்று கேட்டவன் குரலில் இருந்த விரக்தியை உணர்ந்து விக்கித்து அவனைப் பார்த்தாள்.

தன்னிடமிருந்து ஒரு மனைவியாக அவன் எதிர்பார்க்கும் உணர்வுகள், அவனின் ஆசைகள், விருப்பங்கள் அவனின் பேச்சில் இருந்ததை உணர்ந்தவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

மகளாக அவளுக்கு ஒரு கடமை இல்லாமல் இருந்திருந்தால் இப்போது தானும் ஒரு மனைவியாக அவனின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்திருக்க முடியும்.

ஆனால் அதற்குத் தான் வாய்ப்பு இல்லாமல் போனதே. இனிமேலும் வருமா என்றும் தெரியவில்லையே… என்று நினைத்தவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

பதில் இல்லாத மனைவியின் மௌன நிலையைக் கண்டவன் விரக்தி சிரிப்பொன்றை சிந்தி விட்டுப் படுக்கையில் படுத்து விட்டான்.

அலைச்சலில் படுத்ததுமே உறக்கத்தையும் அவன் தழுவ ஆரம்பிக்க, சக்தியோ உறக்கம் வராமல் மனசஞ்சலத்துடன் அவனின் முகம் பார்த்து விழித்தே கிடந்தாள்.

நேரம் கடந்து செல்ல கணவன் நன்றாக உறங்கியதை அவனின் சீரான சுவாசத்தில் கண்டவளுக்கு மனதின் ஆசை துளிர்விட ஆரம்பிக்க, அவனை நெருங்கி படுத்தாள்.

‘நாளைக்கு நீங்க என்னை மொத்தமா வெறுத்து ஒதுக்கலாம் ஈஸ்வர். இன்னைக்கு மட்டுமாவது உங்க அருகாமையை உணர்ந்துகிறேன்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் தலையணை அருகில் இருந்த அவனின் கையை எடுத்து தன் கன்னத்துடன் அழுத்தி வைத்துக் கொண்டாள்.

ஆனால் அவனின் கை மட்டுமே அவளின் ஆசைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. காதல் கொண்ட மனம் கிடந்து தவியாய்த் தவித்தது.

இன்னும் இன்னும் அவனின் அருகாமை வேண்டும் என்று உள்ளம் கூப்பாடு போட, அவனின் உடல் சூட்டை உணர ஆசை கொண்டாள்.

அவனை நெருங்கினால் விழித்து விடுவான் என்று மூளை அறிவுறுத்தினாலும், மனம் அவனின் அருகாமைக்கு ஏங்கி தவித்தது.

அவன் விழித்துத் தன்னை என்ன செய்தாலும் சரி என்று நினைத்தவள் மெல்ல கணவனின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டவள் அவனின் மார்பின் மீது தலையை வைத்து அணைத்து படுத்துக் கொண்டாள்.

அவள் கையை மேலே போட்டதுமே விழித்துக் கொண்டான் சர்வேஸ்வரன்.

அடுத்து அவள் மார்பில் தலை வைத்துப் படுத்ததும் மிச்சமிருந்த அரைகுறை உறக்கமும் ஓடிவிட, தன் மார்பின் மீதிருந்த அவளின் தலையையே வெறித்துப் பார்த்தான்.

அவளின் இன்றைய செய்கைகளில் இருந்த வேறுபாடு அவனை யோசிக்க வைத்தது.

அவளின் அருகாமைக்கு அனுதினமும் தவித்தவன் தான் என்றாலும் இன்று அவளே அருகில் வரும் போது அவனால் மேற்கொண்டு அவளை அணுக முடியவில்லை.

அவளின் செய்கைகளின் பின்னால் ஏதோ காரணம் இருக்கிறது என்று உடனே புரிந்து கொண்டவனுக்கு அணுக விருப்பமும் இல்லை.

அவளை அணைக்கத் துடித்த கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளை விலக்கவும் முயலவில்லை.

‘உன்னை விட்டுவிட உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலை சக்தியாரே. நீ என்ன செய்தாலும் என்னை விட்டு போய்விட முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கணவனின் எண்ணம் அறியாமல் தங்கள் பிரிவை நினைத்து கலங்கி போய் இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டு நித்திரை இல்லா இரவை கழித்தாள் சக்தி.