16 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்- 16

தன் எதிரே நின்றிருந்த கணவனையும், மகனையும் வைத்த கண் வாங்காமல் பார்த்த பவ்யாவின் கண்கள் தான் நினைத்தது நடந்துவிட்டது என்ற நிறைவை பிரதிபலித்தது.

அவளையே பார்த்திருந்த வினய்யின் கண்களில் அது பட, யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்த படி இருவரும் மௌனத்தில் இருக்க, கவினுக்கு அவர்களில் அமைதி பிடிக்காமல் “ம்மா…” என்று சத்தமாக அழைத்தான்.

அதில் தன் நினைவை கலைந்தவள் “என்ன குட்டி…?” என்று நிதானமாகக் கேட்டாள்.

அவளின் நிதானம் கவினுக்கு எப்படி இருந்ததோ? தன் குட்டி கண்களைச் சுருக்கி அன்னையை முறைத்தவன் “ப்பாக்கு குட்மானி சொல்லு…!” என்றான் அதிகாரமாக.

மூன்று வயதை நெருங்கி விட்டதால் கொஞ்சம் பேச்சு நன்றாகவே வந்தது.

மகனின் அதிகாரத்தில் பவ்யா அயர்ந்து பார்க்க, வினய் வியப்பாகப் பார்த்தான்.

மகனின் இந்த அதிகார பேச்சு பவ்யாவிற்குப் புதிது. எப்போதும் அவன் இப்படிப் பேசி கேட்டிராததால் அதிசயமாக அதிர்ந்து மகனை பார்த்தாள்.

அவள் கணவனுக்கோ தன் மகன் தன்னை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறான். ஆனாலும் தன்னிடம் உடனே ஒட்டிக் கொண்டு இப்போது தனக்காக அவன் அம்மாவையே மிரட்டுவதைப் பார்க்கும் போது வினய்க்கு ஆச்சரியமாக இருந்தது.

அதோடு மகனின் பாசத்தில் மனம் உருகித்தான் போனது. வினய் அதே உருக்கத்துடன் மகனை பார்த்தான். கவினின் கவனம் எல்லாம் அவனின் அம்மா இன்னும் தந்தைக்குக் காலை வணக்கம் சொல்லாதிலேயே இருந்தது.

“ம்மா…!” என்று இன்னொரு முறை அழுத்தி அழைத்தான்.

மகனை மேலும் கத்த விடாமல் அவனுக்காக “குட்மார்னிங்” என்று மெதுவாகச் சொன்ன பவ்யா “உனக்கு அம்மா பால் எடுத்துட்டு வர்றேன் குட்டி” என்று அங்கிருந்து நழுவி சமையலறைக்குச் செல்ல… “ப்பாக்கு பால்…” என்ற கவினின் குரல் அவளின் முதுகுக்குப் பின்னால் ஒலித்தது.

“இந்தக் குட்டிக்கு ஆனாலும் இவ்வளவு அதிகாரம் ஆகாதுப்பா” என்று செல்லமாக உள்ளுக்குள் அழுத்துக் கொண்ட பவ்யா அப்போது தான் இன்னும் பால் பாக்கெட்டை எடுக்கவில்லை என்பதை உணர்ந்து வாசலில் இருக்கும் பையில் போட பட்டிருக்கும் பாலை எடுக்க வெளியே வந்தாள்.

ஹாலுக்கு வந்தவள் கண்கள் தன்னால் மகனை காண திரும்ப அங்கே கண்ட காட்சியில் மேலும் நடையைத் தொடராமல் அப்படியே நின்று விட்டாள்.

அங்கே கவினின் படுக்கையில் வினய் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க, அவன் மடியில் அமர்ந்து தன் விளையாட்டுப் பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து காட்டிக் கொண்டிருந்தான் கவின்.

வினய்யின் பார்வை அங்குல அங்குலமாக மகனையே வருடிச் சென்று கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் பார்க்காததற்கும் சேர்த்து இன்றே மொத்தமாகப் பார்த்துவிடத் துடிப்பது போல இருந்தது அவனின் பார்வை.

அதோடு சேர்ந்து வினய்யின் முகத்தில் ஒரு வித சோகமும் இழைந்தோடியது. அதனைக் கண்டு தான் பவ்யா அப்படியே நின்று விட்டாள்.

நின்றவள் தொடர்ந்து கணவனின் உருவத்தை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தாள். எப்போதும் போல அவனின் அலையலையான கேசம் இப்போது வசீகரமாக இருந்தது.

கேசத்திற்குக் கீழ் நெற்றியில் புதிதாக ஒரு தழும்பு தெரியவும், இது எப்போது வந்தது? என்ற யோசனையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் அது பற்றிக் கேட்க அவளின் நாவு துடித்தது.

சாதாரணத் தம்பதிக்காகப் பேசியிருந்தால் அவனின் கேசத்தைக் கலைத்து அந்தத் தழும்பை வருடி எப்படி வந்தது இது என்று உடனே கேட்டுருப்பாள். ஆனால் இப்போது ஏனோ சாதாரண விசாரிப்பு கூடச் செய்ய முடியாமல் தயக்கம் அவளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் தழும்பு பார்த்து அவனுக்கு எப்படி அடிப்பட்டதோ என்று பதட்டமடைய வைத்தது.

அவளுக்குக் கணவன் கணநேரத்தில் அந்தத் தலைகாயத்துடன் உயிர் தப்பி வந்த விஷயம் இன்னும் தெரியாது. கிரணின் விஷயத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியுல செய்தி எதையுமே அறிந்து கொள்ள வில்லை.

அப்படியே செய்தி பார்த்திருந்தாலும் அதில் மனம் பிறழ்ந்தவன் சுட்டதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற பொதுவான உலகச் செய்தி மட்டுமே அவள் அறிந்திருக்க முடியும்.

தகவல் சொல்ல வேண்டிய உடைமை பட்டவனே யாருக்கும் சொல்லவில்லை எனும் போது வேறு யார் சொல்வார்கள்?

எப்படியும் ஒரு நாள் கணவனிடம் அது பற்றிக் கேட்க வேண்டும் என்று மனைவியின் மனது குறித்துக் கொண்டது.

அடுத்து அலுப்பை பிரதிபலித்த கண்களைக் கண்டாள். பயண அலுப்பும், ஜெட்லாக்கும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்தடுத்து தலை முதல் கால் வரை கணவனை அணுஅணுவாகக் கணவனின் உருவத்தைப் பார்வையால் வருடினாள்.

வெளிநாட்டு வாசம் அவனின் தேகத்தைச் செழிப்பாகக் காட்டியது.

அவளின் பார்வை கணவனின் கண்ணைத் தாண்டியதுமே வினய்யின் கவனம் கலைந்து மனைவியைக் கண்டு விட்டான்.

அவள் தன்னை எடை போடுவதைக் கவனித்தவன் தானும் மனைவியைக் கவனிக்க ஆரம்பித்தான்.

முன்பு இருந்ததை விட மெலிந்திருந்தாள். இளம் பெண் தோற்றத்தில் இருந்து தாய்மையின் முதிர்ச்சியைக் காட்டிய முகம். அதையும் தாண்டி முகத்தில் மெல்லிய சோகம் இருந்ததையும் கவனித்தான்.

ஆனால் அதையும் மீறி ஏதோ தெளிவும் தெரிந்தது. அவளைப் போலவே உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடினான்.

இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்ற பிறகு தான் இப்போது கணவனின் பார்வையும் தன் மேல் இருப்பதைப் பவ்யா உணர்ந்தாள்.

இப்போது இருவரின் பார்வையும் நேர்க்கோட்டில் சந்திக்க ஆரம்பித்தது. வினய் மனைவியின் பார்வையைச் சளைக்காமல் எதிர்க்கொள்ள, பவ்யாதான் சில நொடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.

அதற்குள் கவினும் தந்தையின் கவனம் தன்னிடம் இல்லை என்பதைக் கண்டு வினய்யின் கன்னத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.

“ப்பா… கார் இந்தா…” என்று அவனின் காரை எடுத்து அதை ஓட்டு என்று கொடுத்தான். அதை வாங்கிக் கையில் வைத்து பார்த்த வினய்க்கு மெல்லிய புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

“நிஜ காரே வாங்கி ஓட்டுவோம்டா என் கண்ணா…” என்று மகனை கொஞ்சினான். அதைப் பார்த்துக் கொண்டே பாலை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள் பவ்யா.

மகனிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வினய்யின் பார்வையும் மனைவியின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

பாலை காய்ச்சி ஆற்றி மகனுக்கு எடுத்து வந்தவள் கூடவே கொண்டு வந்த இன்னொரு கப்பை வினய்யின் முன் நீட்டினாள்.

அதைக் கையில் வாங்கியவன் கப்பில் இருந்ததைப் பார்த்து விட்டு உடனே நிமிர்ந்து மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் அவனின் பார்வையைத் தவிர்த்து மகனை பார்த்தாள்.

கப்பில் வினய்க்குப் பிடித்த பில்டர் காபி மனம் பரப்பிக் கொண்டிருந்தது. ஒரு மாதமே தன்னுடன் வாழ்ந்த மனைவி மறக்காமல் தனக்குப் பிடித்ததைக் கொண்டு வந்ததை நினைத்து இமைக்காமல் அவளைப் பார்த்தான்.

கணவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும், அதனைப் பார்க்காதது போல “அங்கே வா குட்டியப்பா. அம்மா உன்னைப் பாலை குடிக்க வைக்கிறேன்” என்று சாப்பாட்டு மேஜையைக் காட்டி அழைத்தாள்.

ஆனால் அவனோ “ம்மா உட்காது…” என்று படுக்கையில் தந்தையின் அருகே அமர சொல்லி கையைக் காட்டினான் கவின்.

வினய் இப்போது மகனையும், மனைவியையும் ஆர்வமாகப் பார்க்க, பவ்யா “அடேய் மகனே…! என்னை இப்படிப் படுத்துறியே…” என்பது போல மகனை முறைத்தாள்.

அவளின் முறைப்பை கண்டுக்கொள்ளாத அவளின் செல்ல மகன் தந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவன் மடியில் அமர்ந்து கொண்டு எழவே இல்லை.

இப்படி அமர்ந்து எப்படித் தான் அவனுக்குப் பாலை கொடுக்க முடியும்? என்று பவ்யா முழிக்க, அதைக் கவனித்த வினய் தன் கையில் இருந்த காபியை அருகில் தரையில் வைத்து விட்டு, பவ்யாவிடம் மகனின் பாலை தர சொல்லி கையை நீட்டினான்.

அதைப் பார்த்துப் பவ்யா தயங்க “கொடு பவி! நான் குட்டிக்கு கொடுக்குறேன்” என்றான்.

அவனின் பவியில் அப்படியே நின்றுவிட்டாள் பவ்யா. அவனுக்கு மட்டுமேயான உரிமையான அழைப்பு. நீண்ட கொடிய வருடங்களுக்குப் பிறகு கேட்ட அழைப்பில் பவ்யாவின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

பின்பு வினய் இன்னும் கையை நீட்டியபடி இருப்பதைப் பார்த்து அவனின் கையில் கப்பை கொடுத்து விட்டு சமையலைறைக்குச் சென்றவளுக்கு இதயம் படப் படவென அடித்துக் கொண்டது.

அப்படியே சமையல் மேடையில் சாய்ந்து சிறிது நேரம் நின்று விட்டாள். கணவனின் திடீர் வருகையிலேயே தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது அவனின் உரிமையான பேச்சு இன்னும் தடுமாற வைத்தது.

அவனின் வருகை எதற்கு என்று தெரியவில்லை. ஒருவேளை மனம் மாறி வந்து விட்டானா? இல்லை வேறு எதுவும் காரணம் இருக்கின்றதா? எப்படி இப்படித் திடீர் வருகை நிகழ்ந்தது?

ஒருவேளை தன்னைப் போலவே அவனின் மனதிலும் எதுவும் மாற்றம் வந்திருக்குமோ? என்று எண்ணினாள்.

ஆம்…! அவளின் மனதில் மாற்றம் வந்திருந்தது. அது எந்த வகையான மாற்றம் என்பதை வினய்யும் அறியும் நேரமும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

கவின் பாலை குடித்து விட்டானா என்று அறிந்து கொள்ள மெல்ல வாசலில் இருந்து எட்டி பார்த்தாள். அங்கே கவினுக்குப் பாலை கொடுத்து விட்டு அவன் வாயை தன் கை குட்டையால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தான் வினய்.

அவனின் இந்த அணுகுமுறையை வியந்து போய்ப் பார்த்தாள் பவ்யா. வந்த சிறிது நேரத்தில் உரிமையுடன் ஒட்டிக் கொண்ட மகனையும், கணவனையும் பார்க்க பார்க்க அவளுக்கு நிறைவாகவும் இருந்தது.

அதுவும் வினய்? அவனைப் பற்றிப் பவ்யாவிற்குக் கேள்வி நீண்டு கொண்டே தான் சென்றது.

மீண்டும் சமையல் வேலையைப் பவ்யா ஆரம்பித்துச் செய்து கொண்டிருந்த போது அவளுக்குப் பின்னால் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள்.

வினய் கையில் காபி கப்புடன் நின்றிருந்தான். அதைப் பார்த்து அமைதியாகத் தர சொல்லி கையை நீட்டினாள்.

அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கையில் கொடுத்தவன் அப்படியே அருகில் இருந்த சுவரில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு மனைவியையே பார்த்தான்.

கப்பை கழுவி வைத்து விட்டு மீண்டும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் ஊடுருவும் பார்வையைக் கணிக்க முடிந்தது.

எதற்கு இங்கே நிற்கிறான் என்று எண்ணமிட்ட படி இருந்தாள்.

தன்னைத் திரும்பி பார்க்காத மனைவியைத் தொண்டையைக் கமறி திரும்பி பார்க்க வைக்க வினய் முயற்சி செய்ய, அவனின் முயற்சியை வீணாக்கினாள் அவனின் மனையாள்.

இப்போது கமறலை விடுத்து, “பவி…” என்றழைத்தான்.

பெயர் சொல்லி அழைத்த பிறகும் அவனைத் தவிர்க்க முடியாமல் திரும்பி பார்க்காமலேயே “ம்ம்…” என்றாள்.

“நான் இங்கே வந்துருக்கிறது உனக்கு எதுவும் பிடிக்காம டிஸ்டபென்சா இருக்கா?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் பட்டெனத் திரும்பியவள் ‘இது என்ன கேள்வி?’ என்பது போல முகம் சுருக்கி பார்த்தாள்.

அவளின் முகச் சுருக்கத்தைக் கண்டாலும் விடாமல் இப்போது அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே “சொல்லு பவி! டிஸ்டபென்சா இருக்கா?” என்று திரும்பவும் கேட்டான்.

தன் கணவன் தன்னைத் தேடி அவனாக வர வேண்டும் என்று வைராக்கியமாகக் காத்திருந்த பவ்யாவிற்கு அவனின் வருகை கசந்து விடவா போகின்றது?

அதனால் வாயை திறக்காமல் இல்லை என்னும் விதமாகத் தலையசைத்தாள்.

வெறும் தலையசைப்பு மட்டும் அவனுக்குப் போதவில்லை. அதனால் “வாய் வார்த்தையா சொல்லு பவி. சொல்லாம கொள்ளாம நான் திடீர்னு கிளம்பி வந்துட்டேன். இப்ப உன் மனநிலை என்னனு எனக்குத் தெரியலை. என் மேல கோபமா கூட இருக்கலாம். உனக்கு விருப்பம் இல்லைனா சொல்லிரு. நான் போய்டுறேன்” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த பவ்யாவின் பார்வை கோபமாக மாறியது.

அதே கோபத்துடன் “நீங்க இங்க வந்தது பிடிக்கலைனா நீங்க வாசல்ல பெட்டியோட நிக்கும் போதே வெளியே போங்கன்னு சொல்லிருப்பேன். அப்படி நடந்திருந்தா இப்படி நின்னு கேள்வி கேட்டுட்டு இருந்துருக்க மாட்டீங்க” என்று கையை நீட்டி அவன் நின்ற நிலையைக் காட்டினாள்.

அவளின் அந்தக் கோபத்தைப் பார்த்து வினய்யின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அதே புன்னகையுடன் “நன்றி” என்றான்.

தான் கோபப்பட்டும் புன்னகை சிந்தும் கணவனின் செய்கையை அதிர்வாய் பார்த்தாள்.

இப்ப எதுக்கு நன்றி சொல்றான்? நான் கோபப்பட்டதுக்கா? என்ற எண்ணமும் மனதில் ஓடியது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வினய் “அதற்கும் சேர்த்து தான்” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

“ஹா…” என்று அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவ்யா.

காலை சமையலை முடித்துவிட்டு வெளியே வந்த போதும் இன்னும் தந்தையும், மகனும் அவர்கள் உலகத்தில் இருந்து வந்திருக்க வில்லை.

எல்லாவற்றையும் எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டுக் கவினிடம் வந்து “கவின் குட்டி வாங்க. குளிக்கப் போகலாம்” என்றாள்.

உடனே அன்னையை நிமிர்ந்து பார்த்த கவின் படுக்கையில் அமர்ந்து அவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக எழுந்து தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டான்.

அதில் பவ்யா கையை இடுப்பில் வைத்து மகனை செல்லமாக முறைக்க, கவின் இன்னும் தந்தையிடம் ஒட்டிக்கொண்டு அவனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு “போ வதமாட்டே” என்றான்.

சிறிது நேரம் கூடப் பிரிய மறுக்கும் மகனின் பிரியத்தில் வினய்யின் மனம் உருகி கரைந்தே போனது.

தானும் கவினை அணைத்துக் கொண்டு “உன் இந்தப் பாசத்துக்கு நான் தகுதியானவனே இல்லைடா குட்டி” என்று மெல்ல முணங்கிய வினய்யின் கண்கள் ரத்தம் நிறம் கொண்டு கலங்கி இருந்தது.

அவனின் முணங்கல் பவ்யாவிற்கும் கேட்டது. அதனுடன் வினய் மகனை அணைத்து குனிந்திருந்ததில் கண்கலங்கள் தெரியவில்லை என்றாலும், அவனின் கரகரப்பான குரல் அவனின் நிலையைச் சொல்ல,

வேகமாக வினய்யின் முன் மண்டியிட்டு அமர்ந்த பவ்யா அவனின் காதின் பக்கம் குனிந்து, “ஸ்ஸ்…! குட்டி முன்னாடி இப்படிப் பேசக்கூடாது” என்று கட்டளை போல அழுத்தமாகச் சொன்னாள்.

அவள் குரல் அருகில் கேட்கவும் வினய் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான்.

அவனின் முகத்தில் இருந்த சோகத்தையும், கண்ணீர் தேங்கிய கண்களையும் பார்த்துப் பதறிப் போன பவ்யா உயிர் உருக “வினு…” என்று அழைத்தாள்.