16 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 16
கதிர்நிலவன் தன் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த போது அந்தக் கட்டிடமே பரபரப்பாக இருப்பது போல் உணர்ந்தான்.
தரிப்பிடத்திலும், கேட் அருகிலும், படிக்கட்டின் அருகிலும் ஆட்கள் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்புடன் பார்த்தான்.
அந்த வளாகத்தில் எதுவும், விசேஷம் என்றாலோ, எதுவும் பிரச்சனை என்றாலோ தான் இப்படி ஆட்கள் நின்று பேசுவது வழக்கம்.
அவனுக்குத் தெரிந்து விசேஷம் என்று எதுவுமில்லை. அப்போ எதுவும் பிரச்சனையா? என்ற எண்ணத்துடன் காரை நிறுத்திவிட்டு மெல்ல நடந்தான்.
அங்கிருந்தவர்களின் பார்வை அவனின் மீது படிந்து மீள்வதை உணர்ந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனாலும் என்ன பிரச்சனை என்று யாரிடமும் கேட்கும் எண்ணமும் இல்லாமல் படியை நோக்கி நடந்தான்.
“யார் மனசுல என்ன இருக்குன்னு என்ன தெரியுது? பார்க்க அப்பாவி பொண்ணு போலத் தான் சுத்தி வருவாள். வம்பு தும்புன்னு எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்குற பொண்ணு வேறன்னு நினைச்சிருக்கேன்.
ஆனா இப்ப இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சே. நிறைய ரத்தம் வேற போயிருச்சு போல. பிழைக்கிறது சந்தேகம் தான்னு நினைக்கிறேன். சின்னப் பொண்ணு வேற. பாவம்!” என்று படியருகில் ஒரு பெண்மணி இன்னொரு பெண்மணியிடம் சொல்லிக் கொண்டிருக்க யோசனையில் சுருங்கிய புருவங்களுடன் அவர்களைத் தாண்டி சென்றான் கதிர்நிலவன்.
‘யாரை பத்தி பேசுறாங்க? யாருக்கு என்ன ஆச்சு? ரத்தம் வேற போயிருச்சுன்னு சொல்றாங்களே?’ என்ற கேள்வியுடன் மாடி ஏற, அனைத்து வளாகத்திலும் ஓரிருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவன், ‘எந்த வீட்டில் பிரச்சனைன்னு தெரியலையே?’ என்று நினைத்த படி தன் வளாகத்திற்குச் சென்றான்.
அங்கே நயனிகாவின் வீட்டை தவிர, மற்ற இரண்டு வீட்டு ஆட்களும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களின் பேச்சு நின்று பார்வை இவனின் புறம் திரும்பியது.
அதைக் கவனித்தாலும் ஒன்றும் கேட்காமல் அவன் தன் வீட்டை நோக்கி நடக்க, அப்போது தான் தரையைக் கவனித்தான்.
தரையில் திட்டுதிட்டாக ஆங்காங்கே ரத்தத்துளிகளைப் பார்த்தவன் விழிகள் நிலைக்குத்தி நின்றன.
ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அந்த ரத்தத்துளிகள் நீண்டு கொண்டே சென்றதை கவனித்தவன், திடுக்கிட்டு ரத்தத்துளிகள் இருந்த வழித்தடத்தில் நடந்தான்.
ரத்தத்துளிகள் சென்று முடிந்த இடத்தைக் கண்டவனின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
சட்டென்று மனதில் கலக்கம் சூழ, அந்தக் கலக்கம் அவனின் கால்களைத் துவள செய்வது போல் இருந்தது.
‘சின்னப் பொண்ணு, நிறைய ரத்தம் போயிருச்சு, யார் மனசில் என்ன இருக்கோ?’ என்று கீழே பேசியவர்களின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட இரத்தத்துளிகள் முடிந்த இடமான நயனிகாவின் வீட்டுக் கதவை வெறித்துப் பார்த்தான்.
“உங்களுக்கும் விஷயம் தெரியுமா தம்பி? இந்த நயனிகா பொண்ணு இப்படிப் பண்ணிருச்சே?” என்று அவன் நயனிகாவின் வீட்டு கதவை வெறிக்கவும் பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டார்.
அவரின் புறம் வேகமாகத் திரும்பியவன், “நயனிகாவுக்கு என்ன ஆச்சுங்க?” என்று பதட்டமாகக் கேட்டான்.
அவனின் பதட்டத்தை வித்தியாசமாகப் பார்த்தாலும், விவரம் சொல்ல ஆரம்பித்தார்.
“அவங்க அப்பா திடீர்ன்னு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணிட்டாராம். அது பிடிக்காம இந்தப் பொண்ணு ரூமுக்குள்ள போய்ப் பூட்டிக்கிட்டு வெளியே வரவே இல்லை. கதவை தட்டிப் பார்த்தும் பலன் இல்லன்னு கதவை உடைச்சு உள்ளே போய்ப் பார்த்தா அந்தப் பொண்ணு கையை அறுத்துக்கிட்டு அரை உயிரா கிடந்துருக்கு.
அதைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பயந்து உங்க சம்பந்தமே வேண்டாம்னு ஓடிட்டாங்க. நயனிகாவை இப்ப ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. கொண்டு போகும் போதே பாதி உயிர் இல்லாத மாதிரி தான் இருந்தாள். பிழைப்பாளோன்னு நாங்க பயந்து போய்க் கிடக்கோம்…” என்று அந்தப் பெண்மணி சொன்னதைக் கேட்டு உயிரே ஆடிப் போனது போல் உறைந்து போனான் கதிர்நிலவன்.
அவனின் கை லேசாக நடுங்க ஆரம்பிக்க, அவன் முகம் உயிர்ப்பை தொலைத்தது போல் ஆனது.
“எந்த ஹாஸ்பிட்டல் போயிருக்காங்கன்னு தெரியுமா?” என்று கேட்டான்.
அவர்கள் ஹாஸ்பிட்டல் பெயரை சொல்ல, வேகமாக மின்தூக்கியை நோக்கி ஓடினான்.
அவனின் ஓட்டத்தைக் கண்டு அதிர்ந்து புரியாமல் பார்த்தனர் அந்தப் பெண்மணிகள்.
காரை சரியாக ஓட்டினானா? சிக்னலில் நின்றானா? என்ற எந்த உணர்வுமே அவனிடத்தில் இல்லை.
அவன் முகம் ஆத்திரத்தில் இறுகி போயிருந்தது.
“ஏன்டி இப்படிச் செய்த?” என்று ஆக்ரோஷமாகத் தன் இடது கையை ஸ்டேரிங்கில் குத்திக் கொண்டான்.
காரை அதிவேகமாகப் பறக்க விட்டவன் சற்று நேரத்திலேயே மருத்துவமனை சென்று சேர்ந்தான்.
ரிஷப்ஷன் சென்று விசாரிக்கச் சென்றவன் சற்றுத் தூரத்தில் தயா செல்வதைப் பார்த்து அவனிடம் ஓடினான்.
ஏதோ மருந்தை வாங்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாகச் சென்று கொண்டிருந்த தயாவின் முன் சென்று நின்றவன், “தயா, நயனிகா எப்படி இருக்கா?” என்று மூச்சு வாங்க கேட்டவனைக் கோபமாக முறைத்தவன், அவனைத் தாண்டி சென்றான்.
“தயா, சொல்லிட்டு போ…” கதிர்நிலவன் பிடிவாதமாகக் கேட்க,
“என்ன சார் சொல்ல சொல்றீங்க? சொல்றதுக்கு இனி என்ன இருக்கு? உயிருக்கு போராடிட்டு இருக்காள். டாக்டர் எதுமே இப்ப சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார். இப்ப சந்தோஷமா சார் உங்களுக்கு?” என்று ஆத்திரமாகக் கேட்டவன் நிற்காமல் அங்கிருந்து சென்று விட, சில நொடிகள் விக்கித்து நின்ற கதிர்நிலவன் தானும் அவனைப் பின் தொடர ஆரம்பித்தான்.
அவசர சிகிச்சை பிரிவில் நயனிகா அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் அபிராமி.
தயா தன் கையிலிருந்த மருந்துக்களைச் செவிலியிடம் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கே சென்றான் கதிர்நிலவன்.
அப்போது வேகமாக எங்கிருந்தோ வந்த ஞானசேகரன், “ஏய், நீ எங்கடா இங்கே வந்த? எல்லாம் உன்னால் தான். என் பொண்ணு மனசை கெடுத்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டுட்டு, இப்போ துக்கம் விசாரிக்க வந்தியோ? ஒழுங்கா இங்க இருந்து போடா…” என்று ஆத்திரமாகக் கத்தி அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளினார்.
கதிர்நிலவன் லேசாக அசைந்தானே தவிர ஒரு அடி கூடப் பின்னால் நகரவில்லை.
அழுத்தமாக நின்றான்.
அவனின் கண்கள் கோபத்தை வெளிப்படுத்தியதா? வருத்தத்தை வெளிப்படுத்தியதா? என்று அறிய முடியாத வகையில் சிவந்து இமைகள் தடித்திருந்தன.
“போடா இங்கிருந்து. நீ இப்ப போகலைனா நான் பொல்லாதவனா மாறிடுவேன்…” அவனைத் தள்ள முடியவில்லை என்றதும் அவரின் ஆத்திரம் அதிகரித்தது.
தயா தந்தையின் செய்கையை வேடிக்கை பார்த்தானே தவிர அவரைத் தடுக்க முயலவில்லை.
அபிராமியோ என்ன செய்வது என்று அறியாமல் அழுது கொண்டிருந்தார்.
தான் தடுத்தால் கணவனின் கோபம் இன்னும் அதிகரிக்கும் என்று அவருக்குத் தெரியும் என்பதால் தடுக்கும் வகையறியாது அமர்ந்திருந்தார்.
அப்போது சப்தம் கேட்டு அங்கே வந்த செவிலி, “ஹலோ சார், இங்கே இப்படிக் கத்த கூடாது. அமைதியா இருங்க. இல்லனா வெளியே போங்க…” என்றார்.
“இவனை வெளியே போகச் சொல்லுங்க சிஸ்டர். இவனால் தான் என் பொண்ணு இப்ப சாகக் கிடக்குறா…” என்றார் ஞானசேகரன்.
செவிலி கதிர்நிலவனைப் பார்க்க, “நயனிகாவிற்கு எப்படி இருக்குன்னு தெரியாம நான் இங்கிருந்து போக மாட்டேன் சிஸ்டர். இவரை மட்டும் கத்தாம இருக்கச் சொல்லுங்க. நான் இங்கே அமைதியா ஓரமாகத்தான் இருப்பேன்…” என்றான் அழுத்தமாக.
அவன் நின்ற தோரணை அவனை வெளியே அனுப்ப முடியாது என்பதை எடுத்துரைக்க, “சத்தம் போடாம இருங்க சார்…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் நகர்ந்து விட்டார்.
ஞானசேகரன் அமைதியானாலும் அவனை முறைத்துக் கொண்டே இருந்தார்.
கதிர்நிலவன் அவரைச் சட்டையே செய்யவில்லை. இருக்கையில் அமரவும் இல்லை. ஓரமாகச் சென்று சுவற்றில் சாய்ந்து நின்றவன் தலையையும் பின்னால் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டான்.
வெளியே அமைதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அவனின் இதயம் அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.
மூடிய இமைகளுக்குள் அவனின் கண்மணிகள் அவஸ்தையுடன் உருண்டு கொண்டிருந்தன.
அவனின் மனம் மட்டும் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஏன்டி இப்படிச் செய்த?” என்ற கேள்வியைத் தாண்டி அவன் மனம் எதையும் யோசிக்கவில்லை.
அழுத்தமான காலடி ஓசையும், கதவை திறக்கும் சப்தமும் கேட்க, பட்டென்று விழிகளைத் திறந்தான்.
அவன் நினைத்தது போல மருத்துவர் தான் வெளியே வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் செல்ல கால்கள் பரபரக்க, அவனுக்கு முன் ஞானசேகரன் மருத்துவரிடம் ஓட, செவிகளைத் தீட்டிக் கொண்டு அதே இடத்தில் நின்றான்.
“டாக்டர், என் பொண்ணு எப்படி இருக்காள்?” என்று ஞானசேகரன் விசாரிக்க,
“இன்னும் கிரிட்டிகலா தான் இருக்காங்க. பல்ஸ் இன்னும் நார்மலுக்கு வரலை. பல்ஸ் கூடினால் தான் எதுவும் சொல்ல முடியும். ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு தான் இருக்கோம். பல்ஸ் கூட ஆரம்பிச்சால் எந்தப் பிரச்சனையும் இல்லை. காலை வரை பார்ப்போம்…” என்று மருத்துவர் சொல்ல, அபிராமி கதறி அழ ஆரம்பிக்க, தயாவோ கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்தான்.
மருத்துவர் சொன்ன செய்தியில் மேலும் முகம் இறுகி போக நின்றிருந்த கதிர்நிலவன் விழிகளோ கண்ணீர் கடலில் மூழ்கியிருந்தன.
“என்னைப் பாவம் செய்தவனா மாத்திடாதேடி. நான் தாங்க மாட்டேன்…” என்று மனதோடு அவளிடம் பேசினான்.
“அம்மா, நீங்க தான் அவளைக் காப்பாத்தணும். உங்களை மாதிரி எந்தச் சுயநலமும் இல்லாமல் என்னை எனக்காகவே நேசிச்சவமா அவள். என் குறை எல்லாம் அவள் கண்ணுக்கே தெரியலைமா. அப்படிப்பட்டவளை விலக்கி வச்சது கூட அவள் நல்லா வாழணும்னு தான்மா.
ஆனா இப்ப எனக்காக அவள் உயிரையே விடத் துணிஞ்சிட்டாள்மா. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னே தெரியலை. அதை நான் செய்யவாவது அவள் உயிர் எனக்கு வேணும்மா. அவளைக் காப்பாத்தி கொடுங்கமா…” என்று கண்களை மூடி தன் அன்னையிடம் வேண்டுதல் வைத்தான்.
அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்தவன், தலையைக் கையில் தாங்கி குனிந்து அமர்ந்து கொண்டான்.
அவனின் வேண்டுதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நயனிகாவை பார்க்க அவளின் அன்னையை மட்டும் அனுமதிக்க, அபிராமி மட்டும் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தார்.
வெளியே வந்ததும் உடைந்து அழ ஆரம்பித்தார்.
“தயா என் பொண்ணை என்னால் இப்படிப் பார்க்க முடியலைடா. முகம் எல்லாம் வெளுத்து போய் மூச்சுக்குச் சிரமப்பட்டுச் சுத்தியிலும் மருந்து குழாய்னு அவள் படுத்திருப்பதை என்னால் கண் கொண்டு பார்க்க முடியலை தயா. அவளுக்கு ஏதாவது ஆச்சுனா இந்த அம்மாவும் இருக்க மாட்டேன்டா.
நானும் இல்லனா, நீ அந்த வீட்டில் இருக்காதடா. வேற எங்கயாவது போய்ப் பொழைச்சுக்கோ. அந்த வீட்டில் இருந்தால் உன் உயிருக்கும் உத்திரவாதம் இல்லைடா…” என்று அபிராமி புலம்பி அழ,
“ஏய், அபிராமி. என்ன பேசிட்டு இருக்குற? அப்போ நம்ம மகள் நிலைக்கு நான் தான் காரணம்னு சொல்றீயா?” என்று அதிர்ந்து கேட்டார் ஞானசேகரன்.
“அது தாங்க உண்மை. எங்கே இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்?” என்று கோபமாகக் கணவனிடம் நியாயம் கேட்டார்.
“நானா அவள் கையை வெட்டிக்கோன்னு சொன்னேன்? அவள் நல்லா இருக்கணும். எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கை வாழணும்னு அவளுக்காகத் தானே யோசிச்சேன். அவள் எந்தக் குறையும் இல்லாத பையனை கல்யாணம் பண்ணிட்டு வாழணும்னு நினைச்சதா என் தப்பு?” என்று கேட்டார்.
ஆனால் அவருக்குப் பதில் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் அபிராமி.
“நீ ரொம்பப் பண்ற அபிராமி. நான் என் பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு தான் எல்லாமே செய்வேன்னு இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்த உனக்குப் புரியவே இல்லையா?” என்று மனத்தாங்கலுடன் கேட்டார் ஞானசேகரன்.
ஆனால் அவரின் பேச்சுக்கு அபிராமி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
“இந்த மருந்து வாங்கிட்டு வாங்க…” என்று ஒரு செவிலி அங்கே வர, அவர்களின் பேச்சும் அத்துடன் நின்றது.
அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும் சிறிதும் சலனம் இல்லாமல் தன் வேண்டுதலை தொடர்ந்து கொண்டிருந்தான் கதிர்நிலவன்.
இரவு முழுவதும் மருத்துவர் வந்து நயனிகாவின் நாடித்துடிப்பை கவனித்துக் கொண்டே இருந்தார். மருந்து மாத்திரைகளும் அவ்வப்போது உள்ளே சென்று கொண்டிருக்க, நயனிகா பிழைத்து விட வேண்டும் என்று நால்வரும் வெளியே தவமிருந்தனர்.
நயனிகாவின் குடும்பத்தினர் அதன் பிறகு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.
தந்தையின் மீது கோபம் இருந்தாலும் அன்னைக்கு மட்டும் இல்லாது, தந்தைக்கும் ஏதாவது குடிக்க வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான் தயா.
கதிர்நிலவனோ அமர்ந்திருந்த இடத்தை விட்டு சிறிதும் நகரவில்லை.
தண்ணீர் கூட அருந்தாமல் அமர்ந்திருந்தான்.
அன்னை, தந்தைக்கு வாங்கிக் கொடுத்த போது தயாவின் கண்கள் அவனின் மீது படிந்து மீண்டது. ஆனாலும் அவனின் அருகிலேயே செல்லவில்லை அவன்.
இரவும் முடிந்து சூரியனும் தன் கதிர்களை வீச துவங்க, காலையில் பரிசோதனை செய்ய மருத்துவர் உள்ளே சென்றதும், அவர் வெளியே வரும் நேரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
மருத்துவரும் வெளியே வர, “டாக்டர் என் பொண்ணு இப்ப எப்படி இருக்காள்?” என்று ஓடி சென்று கேட்டார் அபிராமி.
அவரின் பேச்சுச் சப்தத்தில் அதுவரை கண்களை மூடி அமர்ந்திருந்த கதிர்நிலவன் விலுக்கென்று எழுந்து நின்றான்.
“இப்ப பல்ஸ் நார்மல் லெவலுக்கு வந்திருக்கு. இனி பயப்பட வேண்டியது இல்லை. மதியம் போல வார்ட்க்கு மாத்திடுவாங்க. அப்போ நீங்க பார்க்கலாம்…” என்று சொல்லி விட்டு சென்றார் மருத்துவர்.
சட்டென்று மனம் முழுவதும் நிம்மதி உணர்வு பரவி கொள்ளத் தளர்ந்து இருக்கையில் அமர்ந்தான் கதிர்நிலவன்.
“அம்மா, நன்றிமா…” என்று மெல்ல முனங்கி கொண்டான்.
மதியம் நயனிகாவை அறைக்கு மாற்ற அவளின் குடும்பத்தினர் வேகமாகச் சென்று அவளைப் பார்த்தனர்.
கதிர்நிலவனும் மெல்ல அறை வாயிலுக்குச் செல்ல, அவனைக் கண்டதும் கோபமாக வெளியே வந்தார் ஞானசேகரன்.
“இதோ பார், அவள் ஏற்கனவே செத்து பிழைச்சு வந்திருக்காள். இனியும் அவள் வாழ்க்கையில் நீ குறுக்கிட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். பேசாம இங்கே இருந்து போய்டு…” என்று அவனின் வழியை மறைத்துக் கொண்டு வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.
கதிர்நிலவனோ கூர்மையாக அவரைப் பார்த்தான்.
ஆனால் அவனின் பார்வைக்கு எல்லாம் அவர் சிறிதும் அசரவில்லை. அவனை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.
மகள் பிழைத்து விட்டாள் என்றதும் அவனுக்காகத் தான் அவள் உயிரை விடத் துணிந்தாள் என்பதெல்லாம் அவருக்கு மறந்து போனது.
அவரின் விழிகளை ஊடுருவி பார்த்த கதிர்நிலவன் “வழியை விடுங்க சார்…” என்றான் அழுத்தமாக.
“என்னடா திமிரா? உன்னை இங்கிருந்து போன்னு சொன்னேன்…” என்று அவர் இன்னும் கோபத்தில் எகுற,
“என்னை உங்களைத் தள்ளி விட்டு உள்ளே போகும் நிலைக்குத் தள்ளாதீங்க சார். வழியை விடுங்க…” என்றவன் வார்த்தைகள் எஃகிரும்பாக இறுகி போய் ஒலித்தது.
“என்ன என்னைத் தள்ளிடுவியா? எங்கே தள்ளுடா பார்ப்போம்…” என்றார்.
அவரின் எண்ணம் எல்லாம் மீண்டும் அவன் தன் மகளின் மனதை கலைத்து விடக்கூடாது என்பதிலேயே இருந்தது.
“ஒத்த கையை வச்சுக்கிட்டு இவன் எப்படி நம்மைத் தள்ள முடியும்னு நினைக்கிறீங்க போல?” என்று கேட்டவன் தன் செயற்கை கையை நீட்டி அவரின் தோளில் அழுத்தமாக வைத்து அவரைத் தன் வழியிலிருந்து விலக்கி நிறுத்தினான் கதிர்நிலவன்.
“உங்க கூட இதுவரைக்கும் இருந்தது உங்க பொண்ணு நயனிகா. ஆனா எப்ப எனக்காகச் சாவிடம் போராடி மீண்டு வந்தாளோ இனி அவள் என் நயனிகா!
என்னோட நயனிகாவை பார்க்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. அவளைப் பார்க்க இனி நீங்க தான் என்கிட்ட அனுமதி கேட்கணும்…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி நிதானமாக உரைத்தான் கதிர்நிலவன்