15 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 15

கார்த்திகா பள்ளியின் இறுதி வருடத்தில் இருந்தாலும் அவள் கொஞ்சம் விவரமானவள் தான்.

சத்யா கண் தெரியாமல் இருப்பதாலோ என்னவோ, இருவருக்கும் இடையே வித்தியாசத்தை மற்றவர்கள் பார்க்கும் வழக்கம் உண்டு.

அதில் ஆரம்பத்தில் தன் அக்கா அப்படி இருப்பதை ஏற்கமுடியாமல் ஒதுங்கியும் இருந்து இருக்கின்றாள்.

அது எல்லாம் ஒரு புரியாத வயதில் தான். ஆனால் அவளை அப்படி இருக்க விடாமல் கார்த்திகாவை வசந்தா மாற்றியிருந்தார்.

“அவள் உன் அக்காவா இருந்தாலும் அவளுக்குக் கண் தெரியாததால் ரொம்பக் கஷ்டப்படுவா. அவளை நாம தான் பத்திரமா பார்த்துக்கணும்.

அதுவும் நீ அவளுக்குத் தங்கையா இருந்தாலும், நீ தான் அக்கா போல இருந்து அவளைப் பார்த்துக்கணும்.

அவளை நாம நல்லா பார்த்துக்குவோம்னு தான் கடவுள் அவளை நம்ம வீட்டுக்கு அனுப்பி இருக்கார்.

அதோட அவளுக்குத் தங்கையா மட்டும் இல்லாம நல்லா பிரண்டாவும் அவளுக்கு இருக்க ஆள் வேணும்னு தான் கடவுள் உன்னைச் சத்யாவிற்குத் தங்கையா கொடுத்துருக்கார்.

அதனால் அவளை நல்லபடியா பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கும் இருக்கு” என்று பேசி அவளின் மனதை சிறிது சிறிதாக மாற்றிச் சத்யாவின் மீது அக்கறை கொண்ட தங்கையாகக் கார்த்திகாவை மாற்றி வைத்திருந்தார் வசந்தா.

அதன் விளைவாகத் தங்கை ஒரு தாயை போல மாறியிருந்தாள்.

அதனால் தான் சத்யாவின் மன சுணக்கத்தைக் கூடக் கார்த்திகாவால் இனம் காண முடிந்தது.

பெரியவளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைத் தனக்குத் தரவும், எப்போதும் அதிகப் பொறுப்புணர்வுடனே நடந்து கொள்வாள்.

தர்மாவை இதுநாள் வரை யாரோ ஒரு மூன்றாவது மனிதர் என்ற நிலையில் வைத்து தான் பார்த்திருக்கின்றாள் கார்த்திகா.

அதையும் தாண்டி அவனின் திறப்பு விழா நிகழ்வுக்கு அவளின் அக்காவை தலைமை தாங்க வைக்கவும், அவள் மேல் அவருக்கு அவ்வளவு மரியாதை போல, அதனால் தான் அக்காவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள்.

அதனால் அவனின் மீது அவளுக்கும் மிகுந்த மரியாதை வந்திருந்தது.

ஆனால் இன்று அவனிடம் தெரிந்த மாற்றமும், பேசும் முறையும் அவளைச் சந்தேகத்துடன் பார்க்க வைத்தது.

ஆனால் இப்போது அம்மா அவனைப் பற்றிச் சொன்ன விவரத்தை கேட்டதும் முதலில் அக்காவை நினைத்து தான் பதறி தவித்துப் போனாள்.

வீட்டில் நடந்த கல்யாண பேச்சு அவளுக்கும் தெரியும். அதை அவளின் அக்கா மறுத்த காரணமும் அவளுக்குத் தெரியும். அன்று அவளுக்குக் கேட்க கூடாது என்று வசந்தாவும், சத்யாவும் அவளை அறையைப் பூட்டிக் கொள்ளச் சொன்னாலும், பூட்டிய அறைக்குள்ளும் அவளுக்கு அவர்கள் பேசியது கேட்டது.

அவர்கள் பேசியது கேட்க முடியாமல் போகும் அளவிற்கு அவர்கள் வீடு அப்படி ஒன்றும் பெரியது இல்லையே?

அதுவும் சத்யா அன்று உணர்ச்சி வசத்தில் இருந்ததால் சிறிது சத்தமாகத்தான் பேசினாள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரிந்தும் அவளிடம் இருந்த பக்குவத்தால் தனக்குத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கும் அக்காவிற்கு இரண்டாந்தாரம் வேண்டாம் என்று தான் எண்ணம் இருந்தது.

அப்படி இருக்க, ‘அந்த இரண்டாந்தாரமாகக் கேட்ட வரனின் மாப்பிள்ளையே தர்மா தான்!’ என்று தெரிந்ததும் உடைந்தே போனாள்.

அக்காவின் சலனத்தை ஓரளவு உணர்ந்தவள் ஆகிற்றே? தர்மாவை பற்றி அவள் கவலைப்பட்ட போதே கார்த்திகா அக்காவின் மனம் செல்லும் பாதையை உணர்ந்து கொண்டாள்.

ஆனாலும் ஒருவேளை அக்கா ஆசைப் பட்டது போல் நடக்கவில்லை என்றால் உடைந்து போவாளே என்று தான் அன்று ‘தர்மா நமக்கு யாரோ ஒருவர். அவரைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றாய்?’ என்று சொல்லி அவளின் மனதை திசை திருப்பி விட்டாள்.

ஆனாலும் தர்மாவை பற்றிப் பேசும் போதெல்லாம் மலர்ந்து போன சத்யாவின் முகமும், அவனின் பெயரை உச்சரிக்கும் போது அவளின் குரலில் தெரிந்த இனிமையையும் உணர்ந்து இருக்கின்றாள்.

அதுவே சொன்னது அக்காவின் மனம் தர்மாவின் புறம் சாய்கின்றது என்று.

அதோடு தர்மாவும் பார்த்த வரையில் நல்லவனாகத் தெரியவும், இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் சந்தோசம் தான் என்று நினைத்திருக்கின்றாள்.

ஆனால் இப்போது தெரிய வந்த உண்மையில் உள்ளுக்குள் உடைந்து போனாள். தனக்கே இப்படி இருக்கின்றது என்றால் சத்யா நிச்சயம் இந்த உண்மையைத் தாங்க மாட்டாள் என்று தெரிந்தவளுக்குப் பெற்றோரின் மீதும், தர்மாவின் மீதும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

அக்கா அவ்வளவு சொன்ன பிறகும் இந்த அம்மா என்ன செய்து வைத்திருக்கிறார்? என்று நினைத்தவள் தர்மாவை விட்டுவிட்டு வசந்தாவை முறைக்க ஆரம்பித்தாள்.

அவள் தன்னையும், வசந்தாவையும் முறைப்பதை யோசனையுடன பார்த்தான் தர்மா.

‘இந்தச் சின்ன வாண்டு என்ன இந்த முறை முறைக்கிது? என் பொண்டாட்டியை விட இந்த வாண்டை சமாளிக்கிறது கஷ்டம் போலயே?’ என்று நினைத்துக் கொண்டான்.

அவளின் முறைப்பை பார்த்து வசந்தா “என்னடி…?” என்று ஆரம்பிக்க, அதற்குள் வெளியே வந்த செவிலி “சத்யவேணிக்கு ஆப்ரேஷனுக்கு எல்லாம் தயார். இதில் அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ் சைன் பண்ணுங்க…” என்றபடி அங்கே வந்தார்.

அவரிடம் தியாகராஜன் கையெழுத்து போட்டுக் கொடுக்க, “எங்க பொண்ணைப் பார்க்கணும் நர்சம்மா…” எனக் கேட்டார் வசந்தா.

“ஆப்ரேஷனுக்குத் தயார் படுத்திட்டோம். இப்போ தியேட்டர் போக வெளியே கூப்பிட்டு வருவோம். அப்போ பாருங்க. ஆனா ரொம்ப நேரம் பேசக்கூடாது…” என்று தர்மாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விறைப்பாகச் சொல்லிச் சென்றார்.

‘என்னடா தர்மா உனக்கு வந்த சோதனை? ஒரு பக்கம் உன் மச்சினிச்சி முறைக்குறா. ஒரு பக்கம் இந்த நர்சம்மா முறைக்கிது. இவங்களே இப்படினா, விஷயம் தெரிஞ்சதும் சத்யா என்ன செய்யக் காத்திருக்காள்னு தெரியலையே?’ என்று தன்னையே நொந்து கொண்டு புலம்பிக் கொண்டான் தர்மா.

சிறிது நேரத்தில் சத்யாவை சக்கர நாற்காலியில் அழைத்து வர அவள் குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

“சத்யா என்னடி இப்படி விழுந்து வச்சுருக்க? கவனமா வந்திருக்கக் கூடாதா?” என்று வசந்தா கண்கலங்க, மகளின் தலையை வாஞ்சையுடன் கண் கலங்க தடவினார் தியாகராஜன்.

கார்த்திகா அழுது கொண்டே அக்காவின் அடி படாத கையை இறுக பற்றிக் கொண்டாள்.

தன்னைச் சுற்றிலும் உள்ள உறவுகள் தனக்காகக் கண்ணீர் சிந்தவும், சத்யாவிற்கும் அழுகை வந்தது.

ஆனால் தான் அழுதால் அவர்களின் கவலை இன்னும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து அடக்கிக் கொண்டவள், “ஒன்னுமில்லைமா… நான் கவனமா தான் இருந்தேன். பாதையில் புதுசா ஒரு கல்லு இருக்கவும் என் கவனம் சிதறிடுச்சு…” என்று சாதாரணக் குரலிலேயே முயன்று சொன்னாள்.

தன்னைச் சுற்றி குடும்பத்தினர் இருந்தாலும் சத்யாவின் மனது தன் அருகில் இல்லாத தர்மாவை தேடியது.

அவனிடம் வீம்பாக யாரோ போல் பேசினாலும், அவனின் ஆறுதலை தேடும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினாள்.

தர்மா அவளின் வலது பக்கம் தான் நின்றிருந்தான். அவனுக்கும் அவளின் அருகில் சென்று கையைப் பிடித்துக் கொள்ள ஆவல் வந்தது.

ஆனால் அவர்கள் மூவரும் அவளைச் சுற்றி நிற்கும் போது அப்படி உரிமையாகப் போக முடியாமல் பின் தங்கினான். ஆனாலும் அவள் உள்ளே போகும் முன் அவளிடம் தன் இருப்பைக் காட்டி விட வேண்டும் என்று நினைத்தவன் சற்று நகர்ந்து முன்னால் சென்றான்.

அவனின் நடையின் சத்தத்தை வைத்து அவனை உணர்ந்து கொண்டவள் காதுகள் விடைத்துக் கொள்ள ஆவலுடன் அவன் நடை தொடர்ந்த பக்கம் முகத்தைத் திருப்பினாள்.

அக்காவின் ஆர்வத்தைக் கவனித்த கார்த்திகாவின் முகம் சுருங்கியது.

‘மனசுல ஆசையை வளர்த்துக்காதே அக்கா. உண்மை தெரிஞ்சா தாங்க மாட்ட’ என்று அவளிடம் சொல்லவேண்டும் போல இருந்தது.

இருக்கும் இடம் கட்டிப் போட அமைதியாக இருந்தாள். ஆனால் விரைவில் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதி மட்டும் மனதில் இருந்தது.

“பேசியது போதும்ங்க…” என்ற செவிலி சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போக அறுவை சிகிச்சை அறை வாசலில் நின்றிருந்த தர்மா அவளை உள்ளே அழைத்துச் செல்லும் முன் நாற்காலியின் மேல் இருந்த சத்யாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவனின் ஸ்பரிசம் பட்டதும் சத்யா தன்னையறியாமல் அவனின் கையை இறுக்கி பிடித்தாள். இப்போது அவனை விலக்கும் ஞாபகம் கூட அவளிடம் இல்லை. ஆப்ரேஷன் பற்றிய பயத்தின் வெளிப்பாடு அந்தக் கை இறுக்கத்தில் தெரிய அவளின் உள்ளங்கையை அழுத்திக் கொடுத்தவன் “ரிலாக்ஸ்டா சத்யாமா…” என்றான்.

அவனின் ஒற்றை வார்த்தை அவளின் பயத்தைக் குறைப்பது போல இருக்க “ம்ம்…” என்றாள்.

அவர்களைப் பின்னால் நின்றிருந்த அவளின் குடும்பமே பார்த்தது.

தர்மாவின் கண்ணில் தெரிந்த அன்பை பார்த்துத் ‘தங்கள் மகளின் வாழ்க்கை மலர்ந்து விடும்’ என்ற நிம்மதியில் பெற்றவர்கள் இருக்க, ‘என் அக்காவை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாயே’ என்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

“டைம் ஆகுதுங்க…” எனச் செவிலி அவசரப்படுத்த மீண்டும் அவளின் கையை இறுக பிடித்து விட்டு விடுவித்தான்.

சத்யாவை அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில் அங்கே சிவா வந்தான்.

வந்தவனிடம் விவரத்தைச் சொல்லி சாலையோரம் நிறுத்தி விட்டு வந்த தன் வாகனத்தை எடுத்து வரச் சொன்னான்.

“வண்டியை இங்கே கொண்டு வந்து நிறுத்திடு சிவா. இன்னைக்கு டிரைவிங் கிளாஸ் பொறுப்பை நீ பார்த்துக்கோ. கிளாஸ் முடிஞ்சதும் கடை சாவியை இங்க வந்து கொடுத்துட்டு நீ வீட்டுக்கு கிளம்பு…” என்றான்.

“சரிண்ணா…” என்று சொல்லி விட்டு அவன் கிளம்பியதும், சத்யாவின் வீட்டார் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

அவன் கிளம்பாமல் அங்கேயே அமர்ந்ததைப் பார்த்து “அதான் எங்க அக்காவுக்குத் துணையா நாங்க இருக்கோமே தர்மா சார். நீங்க ஏன் உங்க வேலையை விட்டுட்டு இங்கே இருக்கணும்? பாவம் உங்க வேலை கெடுது. நீங்க கிளம்பலாமே?” என்று உதட்டை இழுத்து வைத்துச் சிரித்துக் கொண்டே ‘இனி உனக்கு என்ன இங்கே வேலை? கிளம்பு!’ என்று மறைமுகமாகச் சொன்னவளை பார்த்து தர்மாவிற்குச் சிரிப்பு தான் வந்தது.

அவளின் பேச்சைக் கேட்டு மாப்பிள்ளையை மகள் விரட்டுவது போலப் பேசுகின்றாளே என்று பதறிய வசந்தா “ஏய்…! சும்மா இருடி…” என்று அதட்டினார்.

அதில் கார்த்திகா அன்னையை முறைத்துக் கொண்டே முகத்தைச் சுருக்கினாள்.

“பரவாயில்லை அத்தை. மாமா வேலை கெடக் கூடாதுனு என் மச்சினிச்சி எனக்காகப் பார்க்கிறாள். அவளை ஏன் அடக்குறீங்க?” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன் கார்த்திகாவை பார்த்து குறும்பாகக் கண்களைச் சிமிட்டி, “அப்படித்தானே மச்சினி?” என்று கேட்டான்.

அவனின் உரிமையான அழைப்பில் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள் கார்த்திகா.

அவளின் விழிகளை மேலும் விரிய வைக்கும் வண்ணம் “ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ கார்த்திமா. வேலையா, சத்யாவானு வந்தா நான் முதலில் சத்யாவிற்குத் தான் முதலிடம் கொடுப்பேன். இனி என் வாழ்க்கையில் சத்யாவை தாண்டி தான் எதுவுமே…” என்று அழுத்தமாகச் சொன்னான்.

அப்பட்டமான மனம் திறப்பு!

சிறு பெண்ணிடம் ஏன் தன் மனநிலையைச் சொல்ல வேண்டும் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் சொன்னான்.

அவன் சொல்ல முக்கியக் காரணமே கார்த்திகாவிற்கு இருக்கும் சத்யாவின் மீதான அக்கறை புரிந்ததால் தான்!

அவளுக்கும் அவன் மனம் புரிந்தது. ஆனால் அதை விட அவளின் அக்காவின் மனம் அவளுக்கு முக்கியமாகப்பட்டது. நல்லவன் தான். அன்பு காரனாகவும் தெரிகின்றான் தான்.

ஆனால் அதையும் தாண்டி அக்கா வெறுக்கும் அடையாளம் அவனுக்கு இருக்கின்றதே? இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்தவன் எனக்குப் பிடிக்காது என்று அக்கா சொன்னாளே. அப்படி இருக்கும் போது எப்படி அவனின் அன்பை சரி என்று ஏற்றுக் கொள்வது? என்று தான் அவளின் எண்ணம் போனது.

அவள் இந்த யோசனையில் இருக்கும் போதே “உங்களோட இந்த அன்புக்காகத் தான் எங்க சத்யாவோட நீங்க சேரணும்னு நினைக்கிறோம் மாப்பிள்ளை. நீங்க ஏன் இந்தச் சின்னவளுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்கீங்க? விடுங்க…” என்று சொல்லிக் கொண்டிருந்தார் தியாகராஜன்.

“அப்படி இல்லை மாமா. சின்னவளா இருந்தாலும் சத்யா மேல இருக்குற அக்கறையினால் தானே பேசுறாள். அவளுக்கு இருக்கும் அக்கறைக்கு நான் விளக்கம் சொல்றது தப்பே இல்லை…” என்றான் தர்மா.

அவனின் பேச்சை கேட்ட கார்த்திகாவிற்கு ‘இவர் எதை வைத்து இப்படி உரிமை பாராட்டுகிறார்? என் அக்காவை என்னவோ இப்போதே திருமணம் முடித்துக் கொண்டதை போல இது என்ன இவ்வளவு அதிகாரம், உரிமை?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அதோடு அக்காவிற்கு விருப்பமில்லை என்று தெரிந்த பிறகும் எந்தத் தைரியத்தில் அம்மாவும், அப்பாவும் இவரிடம் மாப்பிள்ளை உறவு பாராட்டுகிறார்கள்? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.

அக்காவிடம் தனியே பேசி இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற உறுதி கார்த்திகாவிடம் இன்னும் வலுப்பெற்றுப் போனது.

அவளின் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்டது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த தர்மா ‘இனி உன் அக்கா முழுக்க முழுக்க என் பொறுப்பு கார்த்தி. அதை நீ மட்டும் இல்லை, உங்க அக்காவே நினைச்சா கூட மாத்த முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் கார்த்திகாவை பார்த்து இன்னும் குறும்பாகச் சிரித்தான்.