14 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 14

“அய்யோ! தாயி… என்ன சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டார் மீனாம்பிகை.

“சொல்றதுக்கு என்ன இருக்கு? என்னோட அப்பா உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு இந்த ஊருக்கு வர காத்துக்கிட்டு இருக்கார்…” என்றவள் கண்கள் கலங்கிப் போனது.

“ஆத்தாடி! எம் பொறப்புக்கா இந்த நிலைமை?” என்று கேட்ட மீனாம்பிகை கதறி அழ ஆரம்பித்தார்.

தம்பியின் மீது மிகுந்த பாசம் மிகுந்தவர் தான் மீனாம்பிகை. ஊருக்கு கட்டுப்பட்டே அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கசப்பாய் விழுங்கி கொண்டார்.

தம்பி எங்கிருந்தாலும் நன்றாக இருப்பான் என்ற எண்ணத்துடன் இத்தனை நாட்கள் இருந்து விட்டார்.

இப்போது தம்பி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் அவருக்குச் சர்வமும் ஆடிப் போனது.

அவரின் கதறலை கண்டு சக்தியின் கண்களும் உடைப்பெடுத்துக் கொண்டதில் கண்ணீர் கன்னம் வரை வழிந்தோடியது.

பதிவு திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்து அவள் தந்தையிடம் சொன்ன போது ‘அவசரப்பட்டீயே மா…’ என்ற தாமோதரன் அன்றே உண்மை அனைத்தையும் அவளுக்குச் சொல்லி விட்டார்.

“நீ காதலிக்கிற பையனை பத்தி சொன்னதுமே நான் விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன் சக்தி மா. அப்படி விசாரிச்ச போது தான் நீ காதலிச்சது என் அக்கா மகனைன்னு தெரிஞ்சிக்கிட்டேன்…” என்று அவர் சொல்லவும்,

“என்னப்பா சொல்றீங்க? ஈஸ்வர் உங்க அக்கா பையனா?” என்று அதிர்ந்து கேட்டாள்.

“ஆமாம்மா. என் கூடப் பிறந்தவளோட பையன் தான்…”

“ஆனா இத்தனை வருஷத்தில் உங்களுக்கு ஒரு அக்கா இருப்பதாக நீங்க சொன்னதே இல்லையே ப்பா?”

“சொல்ல வேண்டிய சூழ்நிலை வரலைமா. சொன்னாலும் அவளைப் பார்க்க முடியாது என்னும் போது சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு தான் சொல்லலைமா…”

“ஏன்பா அப்படிச் சொல்றீங்க? ஏன் பார்க்க முடியாது? அவங்களுக்கும் உங்களுக்கும் சண்டையா?”

“சண்டை எல்லாம் இல்லை சக்தி. உன் அப்பா ஒரு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன்…” என்று சொல்ல அதிர்ந்து போனாள்.

“என்னப்பா? எப்படிப்பா? ஏன்பா?” தந்தையிடம் எப்படிக் கேட்பது என்று கூட அறியாமல் அதிர்ச்சியில் இருந்தவள் விதவிதமாகக் கேட்டு வைக்க, ஊரில் நடந்த அனைத்தையும் சொன்னார்.

“மோகன் திரும்ப வரவும் அவங்க கூடவே நானும் சென்னை வந்துட்டேன் மா. அப்படியே இங்கேயே வேலையும் தேடிக்கிட்டேன். மோகன் கூட என் நட்பும் தொடர்ந்தது.

அவங்க காதலுக்காகப் பழியை ஏத்துக்கிட்ட என்னைத் தேவி அண்ணாவா ஏத்துக்கிட்டாள். அவங்க தான் எனக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமும் செய்து வைச்சாங்க.

உன் அம்மாவும் அவங்ககிட்ட உறவா பழகினாள். மோகனோட அப்பா, அம்மா அவனை ஏத்துக்கவே இல்லை. அதனால் எங்களுக்கு வேற உறவும் இல்லாம நாங்க உறவாகவே மாறிப் போய்ட்டோம்…” என்றார்.

“அவங்க சொன்னது தப்பான தீர்ப்புன்னு நீங்க திரும்பப் போய்ச் சொல்லியிருக்கலாமே பா? ஏன் சொல்லலை?” என்று கேட்டாள்.

“என் அத்தான் மேல இன்னும் எனக்கு ரொம்ப மதிப்பு இருக்குமா. என்னால் அவருக்குக் கெட்ட பெயர் வர வேண்டாம்னு தான் விலகி வந்துட்டேன்மா…”

“தப்பு செய்யாமலேயே நீங்க ஏன்பா தண்டனை அனுபவிக்கணும்?”

“அதை விடுமா. அதைப் பத்தி இப்ப பேசி என்ன ஆகப்போகுது? இப்ப உன்னை நினைச்சுத்தான் எனக்குக் கவலையே. எங்க ஊர் கட்டுப்பாடு படி என் மகளா நீயும் ஒதுக்கி வைக்கப்பட்டவள் தான். இந்த நிலையில் நீ இப்ப ஈஸ்வரை கல்யாணம் பண்ணிக்கிட்டயே. இப்ப நான் என்ன செய்வேன்?” என்று கவலை கொண்டார்.

“என்னப்பா சொல்றீங்க? நானும் ஒதுக்கி வைக்கப்பட்டவளா?” என்று அதிர்ந்து கேட்டாள்.

“ஆமாம்மா…” என்றவர் குரலில் ‘மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகப் போகிறதோ?’ என்ற கவலை இருந்தது.

“ஆனா தப்பு உங்க பக்கமும் இருக்கே பா. நீங்க அன்னைக்கே திரும்பப் போய்ச் சொல்லியிருந்தால் இப்போ இவ்வளவு கவலைப்படத் தேவையில்லையே? அதோட நான் என்ன தப்புச் செய்தேன் பா?”

“ஊரில் அத்தானுக்குன்னு ஒரு பேர் புகழ் இருக்குமா. அதை ஏற்கனவே பாதி நான் பஞ்சாயத்தில் நின்னு கெடுத்துட்டேன். அப்படி இருக்கும் போது திரும்பப் போய் நின்னு நீங்க சொன்னது தப்பான தீர்ப்புன்னு சொன்னால் அவருக்கு இருக்குற நல்ல பெயரை நானே கெடுத்தது போல் ஆகிடும். அது வேண்டாம்னு தான் விலகி வந்தேன். அதோட உன்னையும் ஒதுக்கி வைக்க நீ என் மகள் என்ற ஒரு காரணமே போதும். இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?” என்றவர் தளர்ந்து போனார்.

தானும் ஒதுக்கி வைக்கப்பட்டவள் என்று தந்தை சொன்ன விஷயத்தில் ஏற்பட்ட அதிர்வில் இருந்து மீண்டு வர சக்திக்கு வெகு நேரம் பிடித்தது.

“ஈஸ்வர் யாருன்னு தெரிஞ்சும் அன்னைக்கு அவர் வீட்டுக்கு வந்தப்ப ஏன்பா தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை? உண்மையான காரணத்தைச் சொல்லாம ஏன் என் மகள் அந்த ஊருக்கு வந்து இருக்க மாட்டாள்னு மட்டும் சொன்னீங்க?” என்று வெகு நேரத்திற்குப் பிறகு மெல்ல கேட்டாள்.

“ஈஸ்வருக்கு நான் யாருன்னு தெரிய வேண்டாம்னு நினைச்சேன். உனக்கும் உன் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன்னு தெரியவருவது உன்னை வருந்த வைக்கும்னு நினைச்சேன்.

அதே நேரம் உன்னையும் அவனுக்குக் கட்டிக் கொடுக்க முடியாத சூழ்நிலை என் கையைக் கட்டிப் போட்டது. அதான் என் பொண்ணு கிராமத்துக்கு எல்லாம் வாழ வர மாட்டாள்னு சொல்லி அவரை விலகி போக வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க இரண்டு பேரும் இப்படி அவசரமா கல்யாணம் முடிப்பீங்கன்னு நினைக்கவே இல்லை…” என்றார்.

“இனி நான் என்னப்பா பண்ணனும்?” என்று பரிதாபமாகக் கேட்டாள் சக்தி.

“என்ன பண்ண முடியும்னு எனக்கும் தெரியலையே மா…” என்று கையை விரித்தார் தாமோதரன்.

தான் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் சக்தி இருந்த போதே நாட்கள் நகர்ந்து ஒரு வாரம் ஆக, சர்வேஸ்வரன் அவளுக்கு அழைத்தான்.

முதல் முறை அவன் அழைத்த போது அவளுக்கு வந்தது அழுகை மட்டுமே.

அவனின் காதலும் வேண்டும், அவன் ஊரிலும் தான் சென்று இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது இப்போது நான் ஈஸ்வருக்கு என்ன பதில் சொல்வது? என்று தயங்கினாள்.

அது தவிர அவளுக்கு உள்ளுக்குள் ஒரு உறுத்தலும் இருந்தது. தந்தைக்குத் தெரியாமல் அவசரப்பட்டுத் தான் பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

ஈஸ்வர் மேல் இருந்த காதலை பற்றி மட்டுமே யோசித்த நான் தந்தையின் பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் போனேனே என்று இந்தச் சில நாட்களாக வருந்தி கொண்டிருந்தாள்.

எனக்குச் சிறுவயதிலிருந்து பார்த்து பார்த்துச் செய்து தாய் இல்லாத தன்னைத் தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்ட தந்தை தன் காதலை மறுக்கிறார் என்றால் அதுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று தான் யோசித்திருக்க வேண்டும்.

அதை விட்டு எல்லாம் செய்த தந்தை தன் காதலுக்கு மட்டும் மறுப்பு தெரிவிக்கிறாரே என்ற கோபத்தில் தானே பதிவு திருமணத்திற்கே சம்மதம் சொன்னேன் என்று எண்ணினாள்.

சர்வேஸ்வரனின் மீதான காதல் அப்படியே இருந்தாலும் தந்தை ஒதுக்கி வைக்கப்பட்டுக் கஷ்டப்பட்டிருக்கிறார். அதுவும் தந்தையை ஒதுக்கி வைத்ததே சர்வேஸ்வரனின் தந்தை தான் என்று அறிந்து கொண்ட கோபம் அவளைத் திடனாக ஒரு முடிவு எடுக்க வைத்தது.

அதன் விளைவாகச் சர்வேஸ்வரன் அன்னையிடம் பேசுவதாகச் சொன்ன போது மறுத்தவள் அவனின் ஊருக்கும் வர முடியாது. அந்தப் பட்டிக்காட்டில் என்னால் வாழ முடியாது என்று கடுமையாகச் சொன்னாள்.

அதன் பிறகு அவன் அழைத்த போது சூழ்நிலையும் சக்தியை அவனுக்கு மறுப்பு தெரிவிக்க வைத்தது.

காரணம் தாமோதரனுக்குத் திடீர் உடல்நலம் பாதிக்கப்படச் சிகிச்சைக்குச் சென்ற போது தான் அவருக்கு வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது.

அதன் பிறகு சக்தியின் உலகம் முழுவதும் தந்தையை மருத்துவமனை அழைத்துச் செல்வதும், மருத்துவமனையில் தங்க நேர்ந்த நேரத்தில் கூட இருப்பதுமாக அவளின் நாட்கள் நகர்ந்தன.

அதில் அவளின் திருமண வாழ்வை பற்றியோ, சர்வேஸ்வரன் கூடச் செல்வது பற்றியோ அவளால் சிந்திக்கக் கூட முடியவில்லை.

தேவியும், மோகனும், பிரேமும் தான் அவள் உடைந்து விடாமல் தாங்கினார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் தேவி, மோகனிடம் தன் கடைசி ஆசையாகத் தன் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று அவள் தந்தை சொல்வதைக் கேட்டு விட்டிருந்தாள் சக்தி.

அவரின் ஆசையைத் தெரிந்து கொண்டவள் எப்பாட்டு பட்டாவது தந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவெடுத்தாள்.

தன்னுடைய மென்மையான குணத்தைத் தனக்குள் புதைத்துக் கொண்டவள், தந்தைக்கு நீதி கேட்டுச் செல்லும் மகளாக மாறிப்போனாள்.

தந்தையிடமும் மெல்ல தான் ஊருக்குச் செல்லும் விஷயத்தைக் கூறினாள்.

ஆசை மனதில் மண்டி கிடந்தாலும் ஊர் கட்டுப்பாட்டை நன்றாக அறிந்தவர் என்பதால் முதலில் மறுப்பு தான் தெரிவித்தார்.

ஆனால் சக்தி பிடிவாதமாக இருக்க, அவருக்கும் சாவு நெருங்கி கொண்டிருக்கும் சமயம் தன் ஊரில் எப்படியாவது காலடி வைத்து விட வேண்டும் என்ற ஆசை மலையளவு எழுந்து நிற்க, மகளை ஊருக்கு செல்ல அனுமதித்தார்.

தந்தை சம்மதம் கிடைத்ததும் உடனே செயலில் இறங்கினாள். பிரேமிடம் பேசி அங்கே தாங்கள் இருவரும் காதலர்கள் போல நடித்து, பஞ்சாயத்தைக் கூட்ட வைத்து நாங்கள் காதலர்கள் இல்லை.

நீங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். இதே போல் தான் இந்த ஊர் என் தந்தையின் மீதும் தவறான பழி சுமத்தி ஊரை விட்டு விலக்கி வைத்தது என்று சொல்வது தான் அவளின் திட்டமாக இருந்தது.

ஆனால் அவளின் திட்டத்தைச் செயல்பட விடாமல் மாற்றியிருந்தான் சர்வேஸ்வரன்.

அதனாலேயே அவனுடன் ஏட்டிக் போட்டி மல்லுக்கு நின்றாள்.

ஆனாலும் அவனின் மீதிருந்த அவளின் காதல் அவளைத் தடுமாறவும் வைத்துக் கொண்டிருந்தது.

“எம்மா சக்தி, எனக்கு எம் உடன்பிறப்பை பார்க்கணும் தாயி…” என்று இப்பொழுது அழுது கொண்டிருந்த மீனாம்பிகை கேட்க, மறுப்பாகத் தலையை அசைத்தாள் சக்தி.

“ஏன் தாயி?” அவர் பரிதாபமாகக் கேட்க,

“அப்பா இப்ப ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கார். இப்ப பேச முடியாது…” என்றாள்.

“வேற எப்ப பேசலாம் தாயி?”

“எப்பன்னு உறுதியா சொல்ல முடியாது…” என்றவளின் பேச்சில் ஒரு வித விட்டேத்தி தன்மை இருப்பதைப் புரிந்து கொண்ட சர்வேஸ்வரன் கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.

“நீ வேணும்னே அவாய்ட் பண்ற மாதிரி இருக்கே சக்தி?” என்று கேட்டான்.

‘அப்படித்தான்’ என்பது போல் அவள் அலட்சியமாக நிற்க,

“என் மேல சடவா இருக்கும். அப்படித்தானே தாயி?” என்று கேட்ட மீனாம்பிகை அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டார்.

“உம்ம கோபம் நியாயந்தேன் தாயி. இம்புட்டு வருசமா தம்பியைப் பத்தி கவலைப்படாதவக இப்ப மட்டும் கேக்குறாகன்னு நினைப்ப. உம்ம நினைப்பு சரிதேன். ஆனா எனக்கும் வேற வழி இல்லையே தாயி?” என்று கையை விரித்தார்.

“இத்தனை வருஷமா பேசலைனா காலச் சூழ்நிலை அப்படி. ஆனா இப்ப அம்மா பேச ஆசைப்படும் போது பேசட்டுமே சக்தி…” என்றான் சர்வேஸ்வரன்.

“ஓஹோ! அவங்க ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? நீங்க உத்தரவு கொடுத்துட்டீங்களா மிஸ்டர் நாட்டாமை?” என்று கேட்டாள்.

“என்ன உத்தரவு?” என்று கேட்டவனுக்கே அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து போனது.

“அதுதான் ஊரை விட்டு ஒதுக்கி வச்சவங்ககிட்ட பேசலாம்னு ஊர் கூடி உத்தரவு கொடுத்துட்டீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

சர்வேஸ்வரன் பதில் சொல்லாமல் உறுத்துப் பார்த்தான்.

“பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டால் முறைக்க வேண்டியது. இந்த முறைப்பை எல்லாம் வேற எங்கயாவது போய் வச்சுக்கோங்க நாட்டாமை…” என்றாள் இன்னும் அலட்சியமாக.

அதற்கு அவன் ஏதோ பதில் சொல்ல வர, அவனைக் கண்டுகொள்ளாமல் மீனாம்பிகையின் புறம் திரும்பினாள்.

“நான் உங்களை உங்க தம்பிகிட்ட பேச விடக்கூடாதுன்னு நினைச்சு சொல்லலை. உங்ககிட்ட பேசினால் அதன் பிறகு அப்பாவுக்கு இந்த ஊர் மண்ணை மிதிக்கணும்னு இன்னும் ஏக்கம் அதிகம் வரும். அந்த ஏக்கத்தை உங்க ஊர் நாட்டாமை தீர்த்து வைப்பாரா? அப்படி வைப்பார்னா சொல்லுங்க. இப்ப இந்த நிமிஷமே கூட அப்பாகிட்ட உங்களைப் பேச வைக்கிறேன்…” என்று மாமியாரிடம் சொல்ல,

அவரோ மகனை ஏக்கத்துடன் பார்த்து கைகளைப் பிசைந்தார்.

“தம்பி, எய்யா…” என்று மகனிடம் கோரிக்கை வைக்கப் போக,

“அம்மா ப்ளீஸ், நீங்க கேட்டு என்னை மறுக்கும் நிலைக்குத் தள்ளாதீங்க. எனக்கு மட்டும் மாமா ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு ஆசை இல்லையா என்ன?

எனக்கும் அவரைப் பார்க்கணும், பேசணும்னு நினைப்பு நிறைய இருக்கு. ஆனா நாம ஒரு விஷயத்தை யோசிச்சே ஆகணுமே மா. மாமா இந்த ஊருக்கு வரணும்னா அப்பாவோட வாக்கு பொய்த்து போயிடும் மா.

அப்பா தப்பான தீர்ப்பு சொன்னவர்னு இந்த ஊரே அவரைத் தூற்றும். இப்ப நான் இரண்டாங்கெட்ட நிலையில் நிற்கிறேன் மா. நான் அப்பா கௌரவத்தைப் பார்ப்பேனா? மாமா ஆசையைப் பார்ப்பேனா? நீங்களே சொல்லுங்க…” என்று கேட்டான்.

மகனின் வார்த்தைகளில் இருந்த உண்மை உறைக்க, இப்போது கணவனின் கௌரவமா? தம்பியின் விருப்பமா? என்று இரட்டை தராசில் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனார் மீனாம்பிகை.

“இறந்தவரை விட உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரின் கடைசி ஆசை முக்கியம் இல்லையா மிஸ்டர் நாட்டாமை?” என்று கேட்டாள் சக்தி.

“மாமாவோட கடைசி ஆசையை அவரோட மருமகனா நிறைவேத்தி வைக்கணும்னு எனக்கும் விருப்பம் தான் சக்தி…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் முகம் மலர ஆரம்பித்தது.

“நல்லா கேளு சக்தி. மருமகனா என் மாமாவுக்குக் கடமையைச் செய்ய வேண்டிய அதே நேரத்தில் ஒரு மகனா என் அப்பாவோட கௌரவத்தைக் கட்டி காப்பது என் பொறுப்பு இல்லையா சக்தி?” என்று கேட்டான்.

“அப்போ உங்களுக்குக் கௌரவம் தான் முக்கியம் இல்லையா?” என்று அழுத்தமாக வித்தியாசமான குரலில் கேட்டாள்.

“என்ன செய்யப் போற நீ?” அவள் தோரணையிலேயே ஏதோ செய்ய முடிவு எடுத்துவிட்டாள் என்று புரிந்து கொண்டான்.

“நானே ஊரைக் கூட்டி உண்மையைச் சொல்ல போறேன். முக்கியமா ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர் மகளையே கல்யாணம் பண்ணியிருக்கீங்கன்னு இந்த ஊர் முன்னாடி சொல்லப் போறேன். உங்களுக்கு உங்க அப்பா கௌரவம் எவ்வளவு முக்கியமோ, அதை விட என் அப்பாவோட கடைசி ஆசை எனக்கு முக்கியம். அதை நிறைவேத்தி வைக்காம ஓய மாட்டேன்…” என்றாள் உறுதியாக.

“சக்தி…” என்று சர்வேஸ்வரன் அதட்டலாக அழைக்க, அவளோ அலட்சியமாகத் தலையைச் சிலுப்பி விட்டு அங்கிருந்து சென்றாள்.