14 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்– 14

பவ்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்து கொண்ட கிரண் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் யார் வந்திருப்பது என்று அறிந்து கொள்ளக் கதவின் லென்ஸ் வழியாகப் பார்த்தவன் வெளியே நின்றிருந்த வயதான பெண்மணியைப் பார்த்துச் சிறிது அசட்டையானவன் கதவை திறக்கவில்லை என்றால் சென்று விடுவார்கள் என்று நினைத்துச் சில நிமிடங்கள் கதவின் அருகிலேயே அமைதியாக நின்றான்.

ஆனால் வந்த பெண்மணியோ அடுத்தடுத்து அழைப்பு மணி சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க, பவ்யாவை மாட்டிவிட்டு தப்பி விட வேண்டியது தான் என்று நினைத்தவன் கதவை திறக்க முடிவு செய்து, மெல்ல கதவை திறந்தவன் வந்தது யார் என்று விசாரிக்கும் முன் கதவை திறந்த வேகத்தில் பல அடிகள் தள்ளி போய் மல்லாக்கில் விழுந்து கிடந்தான்.

விழுந்தவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. வலியில் கலங்கிய கண்களைத் திறந்து வாசலை பார்த்தான்.

அங்கே கண்ணில் அனலுடன், முகத்தில் ரௌத்திரம் பொங்க, முறுக்கேறிய கைகளுடன் நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்து, சட்டென எழுந்து அமர முயன்றான் கிரண்.

‘யாரோ ஒரு கிழவி தானே வந்திருந்தா. இது யாரு புதுசா வாட்ட சாட்டமா வந்துருக்கான்’ என்று கிரணின் மனதில் எண்ணம் ஓட வேகமாக எழுந்தவன் “டேய் யாருடா நீ…? என்னை எதுக்கு அடிக்கிற?” என்று கத்தினான்.

அப்படிக் கத்தவே அவன் கஷ்டப்பட வேண்டியிருந்தது. மூக்கில் இருந்து இன்னும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

வந்தவன் பேசவே இல்லை. அமைதியாகத் திரும்பி அருகில் இருந்த பெண்மணியைப் பார்த்தான். அவர் புரிந்தது என்னும் விதமாகத் தலையசைத்தவர் கதவை மூடினார்.

பின்பு ஹாலை தாண்டி சென்று பூட்டி இருந்த அறைகளைப் பார்த்தார். மூன்று அறைகளுமே பூட்டியிருக்க எந்த அறையில் பவ்யா இருக்கிறாள் என்று தெரியாமல் தயங்கி நின்றார்.

அதைக் கவனித்த அந்த ஆடவன் “மிசஸ்.பவ்யா! ஐயாம் ஷர்வஜித் ACP! வெளியே வாங்க!” என்று கம்பீரமாக அவனின் குரல் ஒலிக்க, அதில் பட்டெனக் கதவை திறந்து பவ்யா வெளியே வர, கிரண் தன் காதில் விழுந்த வார்த்தையில் இரண்டடி பயத்துடன் பின்னால் நகர்ந்தான்.
{*ஷர்வஜித் பனியில் உறைந்த சூரியனே கதையின் நாயகன்}

அவனைக் கண்டு கொள்ளாமல் வெளியே வந்த பவ்யாவை பார்த்த ஷர்வஜித்… இனி நான் பார்த்துக் கொள்வதாகத் தலையசைத்தான்.

பின்பு தன்னுடன் வந்த பெண்மணியைப் பார்த்தான். அவரும் புரிந்து கொண்டு பவ்யாவின் அருகில் சென்றவர் “குழந்தையைத் தாமா பவ்யா. நான் ACP சாரோட அம்மா சந்திரா. உனக்கு ஆதரவா இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்தான்.

குழந்தை இது வரை பார்த்தது போதும். இனியும் எதுவும் பார்க்க வேண்டாம். நான் அவனை வச்சுக்கிட்டு கீழே இருக்குற பார்க்ல இருக்கேன்” என்று ஆறுதலாகப் பேசியவர் கவினை வாங்க கை நீட்டினார்.

பவ்யா திரும்பி ஷர்வஜித்தை பார்த்தாள். “என் அம்மா தான்! குடுங்க… இங்கே பைசல் பண்ணின பிறகு குழந்தை இங்க வந்தா போதும்” என்று சொல்ல கவினை சந்திராவிடம் கொடுத்தாள்.

கவின் இப்போது தூக்கத்தின் பிடியில் இருந்தான். அதிகம் அழுதது அவனுக்குத் தூக்கத்தை வர வைத்திருந்தது. கை மாறவும் மெல்ல சினுங்கினான். அவனை வாங்கித் தோளில் போட்டு தட்டிக் கொடுத்த சந்திரா “ஒன்னும் இல்லடா ராஜா. தூங்கு…! தூங்கு…!” எனச் சமாதானம் செய்த படி பவ்யாவை பார்த்து சிநேக புன்னகை ஒன்றை தந்துவிட்டு கதவை திறந்து வெளியே சென்றார்.

அவர் சென்றதும் கதவின் அருகில் நின்றிருந்த ஷர்வா கதவை தாழ் போட்டுவிட்டு அருகில் இருந்த சுவரில் ஒரு காலை மடித்து நின்று கையைக் கட்டிக்கொண்டு அதுவரை தன்னையே திகைத்து வாயடைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கிரணை கூர்மையாகப் பார்த்தான்.

கிரணுக்கு அப்பால் நின்றிருந்த பவ்யாவை பார்க்காமல் கிரணை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே “சொல்லுங்க மிசஸ்.பவ்யா இங்கே என்ன பிரச்சனை? சார் யாரு…? எதுக்கு இங்கே வந்திருக்கார்?” என்று நிதானமாக விசாரணையை ஆரம்பித்தான்.

ஷர்வாவின் கேள்விக்குப் பவ்யா பதில் சொல்லும் முன் “அதை நான் சொல்றேன் சார். நான் கிரண். பக்கத்து பிளாட்ல இருக்கேன். இந்தப் பவ்யாதான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. அவங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லவும் வந்தேன். ஆனா இவங்க என்கிட்டே தப்புத் தப்பா பேசினாங்க.

என் புருஷன் கூட இல்லாம நான் கஷ்டப்படுறேன். அந்த இடத்தில் நீ இருந்தா நீ கேட்குறதை எல்லாம் தர்றேன்னு சொன்னாங்க. ஆனா நான் தான் இதெல்லாம் தப்புன்னு புத்திமதி சொல்லிட்டு இருந்தேன்” என்று பவ்யாவை முந்திக் கொண்டு அப்படியே பழியை அவளின் மீது சுமத்தினான்.

அவனின் பதிலில் பவ்யாவின் மனது வலியால் குத்தியது. அதனை அவள் முகமும் பிரதிபலித்தாலும், கல்லாக இறுகி போய் நின்றிருந்தாள்.

அவன் சொன்னதைக் கேட்ட ஷர்வஜித் “ஓ…! அப்படியா…!” என்று வியப்பாகப் புருவத்தைத் தூக்கி கேட்டான்.

“ஆமா சார்…” என்று வேகமாகச் சொன்ன கிரணை தன் கையை நீட்டி காட்டி பேச்சை நிறுத்த சொன்ன ஷர்வா “நீ சொன்னது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஆனா நான் மிசஸ்.பவ்யாகிட்ட தானே கேள்வி கேட்டேன். நீ பதில் சொல்ற? அப்போ உன் பேரா பவ்யா? எனக்குப் போன் போட்டு இங்க வரசொன்னது நீயா…? ஹ்ம்ம்..?” என்று அதே வியப்பு மாறாமல் ஆச்சரியமாகக் கேட்டவன் தொடர்ந்து…

“அது சரி உன் உருவத்தைப் பார்த்தா ஆம்பிள மாதிரி தெரியுது. ஆனா என்கிட்ட ஒரு பொண்ணுதான் பேசினது. நீ எப்போ பொண்ணா மாறின?” என்று ஏற்ற இறக்கமாகக் கிரணை பார்வையிட்டவன் அழுத்தமாகக் கேட்டான்.

ஷர்வா போன் எனச் சொன்னதும் வேகமாகத் திரும்பி பவ்யாவை பார்த்தான். அவள் கையில் போன் இருந்தது. அவனுக்கு அவளின் போன் இருந்திருக்கும் என்றே ஞாபகத்திற்கு வர வில்லை. அவனுக்கு இருந்த பெண் ஆசை வேறு எதையும் ஆராய விடவில்லை. என்னதான் திட்டம் போட்டு சில காரியங்கள் செய்தாலும் சில விஷயங்களில் சறுக்கி விடுவது போலக் கிரண் போன் விஷயத்தில் சறுக்கியிருந்தான்.

அதோடு தான் மாட்டினால் எப்படித் தப்ப வேண்டும் என்று அவன் முடிவு செய்திருந்ததாலும், பவ்யாவிற்கு இப்போது உதவி செய்யும் நபர் யாரும் இல்லை என்ற நம்பிக்கையாலும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டான். அவள் போலீஸ் வரை போவாள் என்று அவன் சிறிதும் எண்ணவில்லை.

அவனின் அலட்சிய போக்கே அவனை இப்போது மாட்ட வைத்திருந்தது. அதோடு ஷர்வா தன்னைப் பொம்பளை என்று சொல்லவும், கோபம் பொங்கி கொண்டு வர,

“சார்… பொண்ணு போன் போட்டு சொன்னா அது எல்லாம் உண்மை ஆகிருமா என்ன? இந்தப் பொம்பளை தான் சரியான அலைஞ்சான் பொண்ணு. நான் சிஸ்டர்னு கூப்பிட்டு மரியாதையா தான் பழகினேன்.

ஆனா என்னை இந்தப் பவ்யா அப்படி நினைக்காம புருஷனா இருக்க வான்னு கூப்பிட்டுச்சு. இந்தப் பிளாட்ல யார்கிட்ட வேணும்னாலும் விசாரிங்க சார். நான் இவங்ககிட்ட சிஸ்டரா பழகினேனா இல்ல தப்பா பழகினேனானு” என்று ஆவேசமாகப் பேசி தன்னை நியாயப்படுத்த பார்த்து, பவ்யாவை மேலும் மேலும் அசிங்கப்படுத்திக் கொண்டு இருந்தான்.

அதுவரை நிதானமாக நின்று கொண்டிருந்த ஷர்வா காலை அழுத்தமாக வைத்து கிரணின் அருகில் வந்து, பின்னால் நகர்ந்த கிரணை ஒரு கையால் நகரமுடியாமல் பிடித்தவன், இன்னொரு கையின் உள்ளங்கையை இறுக மூடி அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

அதில் கிரண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் கத்தினான். ஆனால் அவனை அடக்கிய ஷர்வா “இனி நானா கேள்வி கேட்குற வரை உன் வாயில் இருந்து ஒரு வார்த்தை வந்தது. உன்னைச் சுட்டு என்கவுண்டர்னு கேசை குளோஸ் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று கடுமையாகச் சொன்னவன்,

பவ்யாவின் புறம் திரும்பி “நீங்க சொல்லுங்க பவ்யா! இந்தச் சாருக்கு அவர் பேசினது எல்லாம் மறந்துருச்சு. அதனால நீங்க எனக்கு அனுப்பின ஆதாரத்தையும் போட்டு காட்டுங்க” என்றவன் கிரணை முட்டி போட சொல்லிவிட்டு அவன் எதிரே ஒரு சேரை போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

பவ்யா தன்னை யாரோ பல நாட்கள் பின் தொடர்ந்ததையும், அதைத் தன்னால் கண்டு பிடிக்க முடியாமல் போனதையும், கிரண் தன்னிடம் சிஸ்டர் என்று பழகினதிலேயும், அவன் வக்கிரமாகப் பார்க்காமல் கண்ணியமாக நடந்ததினாலும் அவன் மீது தனக்குச் சந்தேகம் வராமல் போனதையும் சொன்னவள்,

சற்று முன் தன்னிடம் நடந்து கொண்ட முறையைச் சொன்னவள் “அவன் என்னவெல்லாம் என்கிட்டே பேசினான்னு நான் சொல்றதை விட நீங்களே கேளுங்க சார்” என்று சொல்லி தன் போனில் இருந்த அவள் பதிந்து வைத்திருந்த ஒலிப்பதிவை ஒலிக்க விட்டாள்.

அதில் “தாராளமா கத்து. நான் அசிங்கப்பட்டுப் போக மாட்டேன். ஆனா நீ அசிங்கம் மட்டும் இல்ல. அவமானப்பட்டும் போவ” என்று கிரண் பேசினதில் இருந்து அவன் பேசிய அத்தனை வக்கிரமான பேச்சும் பதிவாகி இருந்தது.

அதோடு கவினின் அழுகை சத்தமும், பவ்யா தன்னை விட்டு விடச் சொல்லி கதறியதும் கேட்க, ஷர்வாவின் கண்கள் தணலாக ஜொலித்தது.

அதே தணலுடன் தன்னிடம் இருந்த அத்தனை ஆத்திரத்தையும் கூட்டி தன் முன்னால் முட்டி போட்டு அமர்ந்திருந்தவனை ஓங்கி ஒரு எத்து எத்தினான்.

பவ்யா ஒலிப்பரப்பிக் காட்டினதிலே ‘தன் கதி அதோ கதி தான்’ என்று கலங்க ஆரம்பித்திருந்த கிரண் இந்தத் திடீர் தாக்குதலில் “ஐயோ…! அம்மா…!” என்று கத்திய படி மல்லாக்காக விழுந்தான்.

“ஸ்ஸ்… சத்தம் வரக் கூடாது… அப்படிச் சத்தம் வெளியே எதுவும் கேட்டுச்சு. உன்னை ஒன்னும் இல்லாதவனா ஆக்கிபுடுவேன்” என்று கடுமையாகச் சொன்ன ஷர்வா தன் துப்பாக்கியை தூக்கி காட்டியதிலேயே, கிரணுக்கு புரிந்து போனது. தன் உயிர் ஒன்னும் இல்லாமல் போகும் என்று.

கிரணை மிரட்டி மீண்டும் முட்டி போடவைத்த ஷர்வா பவ்யாவின் புறம் திரும்பி “ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துட்டு வாங்க” என்றான்.

அவள் எடுத்து வந்து கொடுத்ததும், அதை வாங்கிக் கிரணின் புறம் நீட்டி “இந்தப் பேப்பர்ல ஒரு கையெழுத்து போடு” என்றான்.

அவன் என்ன வெத்துப் பேப்பரில் கையெழுத்தா என்று லேசாகப் பின் வாங்கினான்.

அதைப் பார்த்த ஷர்வா “இந்தப் பேப்பர்ல கையெழுத்து போட்டா உன் உயிராவது மிஞ்சும். அதுவும் வேணாம்னா சொல்லு! அதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்று அலட்டாமல் கேட்க,

வேகமாக அந்தக் காகிதத்தைக் கையில் வாங்கிய கிரண் தன் கையெழுத்தை போட்டுக் கொடுத்தான்.

அதை வாங்கி வைத்துக் கொண்ட ஷர்வா, “இந்தக் கையெழுத்து தான் இனி உன் தலையெழுத்து. இனி மிசஸ்.பவ்யாவுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதுக்கு நீ தான் முழுக் காரணம்னு எழுதி உன்னைத் தான் பொறுப்பாக்குவேன். அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ” என்றவன்,

பவ்யாவை பார்த்து “இனி யாரும் உங்களைப் பின் தொடர்வதா தோணுச்சுனா உடனே எனக்குப் போன் பண்ணுங்க. இவனை நிஜமாவே ஒன்னும் இல்லாம ஆக்கிருவோம்” என்றான்.

அவன் சொன்னதற்குப் பவ்யா சம்மதமாகத் தலையசைக்க, கிரண் உயிர் பயத்தில் நடுங்கிப் போனான்.

பின்பு இருக்கையை விட்டு எழுந்து, கிரணையும் நிற்க வைத்தவன், “சிஸ்டர்னு சொல்லிட்டு சில்லி தனமா நடந்துக்கிட்ட உன்னை இப்ப எனக்கு என்னவெல்லாமோ செய்யத் தோணுது. ஏண்டா… டேய்…! ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா உடனே அவளை அடுத்தவனுக்குச் சொந்தமானவளா நினைக்கத் தோணுதோ?” என்று ஆத்திரமாகக் கேட்டுக் கொண்டே இன்னொரு குத்து வயிற்றில் விட்டான்.

அதில் கத்த முடியாமலும் வலியை தாங்க முடியாமலும் கிரண் அப்படியே தரையில் அமர போக, அவனை விடாமல் சட்டையைப் பிடித்துத் தூக்கிய ஷர்வஜித் “இனி உன் நிழல் கூட இந்த வீட்டுப் பக்கம் படக் கூடாது. முகத்தைத் துடைச்சுட்டுக் கிளம்பு. நீ இன்னும் இரண்டு நாள் என் இடத்தில் இருந்தா தான் இனி எந்தப் பெண்ணையும் தப்பா நினைக்க மாட்ட” என்று கிரணிடம் சொன்னவன்,

பவ்யாவின் புறம் திரும்பி, “அம்மா வருவாங்க. நான் போயிட்டு கொஞ்ச நேரத்தில் திரும்ப வர்றேன் மிசஸ்.பவ்யா” என்று சொன்னவன் கிரணின் கையைப் பின்னால் முறுக்கி அவனை அணைத்தது போலக் கையைப் போட்டு வெளியே யார் பார்த்தாலும் சந்தேகம் வராத வகையில் அவனை வெளியே அழைத்துப் போனான்.

வெளியே செல்லும் போது ஷர்வா கதவை மூடிவிட்டு செல்ல, அந்தத் தானியங்கி கதவு தன்னால் பூட்டிக் கொண்டது.

கதவு மூடினதும் தன்னிடம் இருந்த அத்தனை சக்தியும் வடிந்தது போலத் தரையில் தொப்பென அமர்ந்த பவ்யா இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த தன் மன ரணத்தைக் கண்ணீராக வெளியிட ஆரம்பித்தாள்.

கவின் இருந்ததால் அவனுக்காகவும் தன்னை அடக்கி அழாமல் இருந்தவள், இப்போது இந்த யாரும் இல்லாத தனிமை கூட அவளுக்குத் தேவையாய் இருந்தது.

கவின் பிறந்த பிறகு அவனுக்காகவே பல நேரங்களில் தன் கண்ணீர் தடங்களைக் காட்டாமல் மறைத்து வந்தவள் இன்று அவளுக்கு அடுத்தடுத்து நேர்ந்த அதிர்ச்சியும், கிரணிடம் தான் மாட்டியிருந்தால் இப்போது தன் நிலை என்ன ஆகியிருக்கும் என்று எண்ணியவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்து ஓடியது.

அதுவும் கிரண் தன்னை இழிவுப்படுத்த பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அவள் இதயத்தையே குத்தீட்டியால் குத்தி கிழித்தது போல் வலிக்க வைத்தது.

வாளாகத் தன்னைத் தாக்கிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் சத்தம் போட்டு கத்தி அழுதாள்.

அவளின் அழுகை அரைமணி நேரமாகத் தொடர்ந்தது. கேட்பார் யாரும் இன்றிக் கண்ணீரை மட்டுமே சொந்தமாகக் கொண்டு கதறி தீர்த்தாள் பவ்யா.

அரைமணி நேரம் கடந்த நிலையில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அப்போது தான் தன் உணர்வுக்கு வந்த பவ்யாவிற்கு மகனின் ஞாபகம் வர வேகவேகமாகக் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

பின்பு விரைந்து குளியலறை சென்று முகத்தைக் கழுவி கொண்டு வந்து லென்ஸ் வழியாகப் பார்த்தாள். சந்திரா தெரிய, கதவை திறந்ததும் அவர் கையில் இருந்த கவின் தாவி கொண்டு அன்னையிடம் தொற்றினான்.

“எழுந்திட்டிடா குட்டியப்பா?” என்று மகனின் முன் தன் வலியை மறைத்துக் கொண்டு கொஞ்சியவள் “உள்ளே வாங்க மேடம்…” என்று சந்திராவை வரவேற்றாள்.

சிநேகமாகச் சிரித்த படி உள்ளே வந்த சந்திரா அவள் முகத்தைப் பார்த்தே அவளின் அழுகையைக் கணித்தவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் “அவன் அப்போவே எழுந்துட்டான்மா. உன்கிட்ட வரணும்னு அடம் பிடிச்சான். உனக்கும் கொஞ்சம் டைம் வேணும்னு தான் லேட்டா வந்தேன்” என்று சொல்ல அவரை நன்றியாகப் பார்த்தாள்.

பின்பு “நீங்க உட்காருங்க மேடம்” என்று சொல்லிவிட்டுக் கவினை அவனின் படுக்கையில் விட்டு விளையாட்டு பொருளை கொடுத்து விளையாட விட்டவள் சந்திராவிடம் வந்து, “ரொம்ப நன்றி மேடம். சார் உங்களை அழைச்சுட்டு வந்ததும் நல்லதா போயிருச்சு.

இல்லனா என் பிள்ளை மனசில் இன்னைக்கு நடந்த சம்பவம் வடுவை வர வச்சுருக்கும். அப்படி நடக்காம உதவி செய்த உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்றாள்.

சந்திராவின் சாந்தமான முகத்தில் ஒரு ஆறுதலான புன்னகை வந்து பவ்யாவை வருடி சென்றது. “மேடம் எல்லாம் வேண்டாம்மா சும்மா ஆன்ட்டினே சொல்லு. நீ போன்ல தனியா குழந்தையோட மாட்டிகிட்டேன்னு சொல்லவுமே ஷர்வா என்னையும் கிளம்பச் சொல்லிட்டான்.

நல்லவேளை நீ போன் பண்ணும் போது அவன் வீட்டில் இருந்ததால இரண்டு பேருமே சேர்ந்து வர முடிஞ்சது. இனி உன் வாழ்க்கையில் அந்த ஆளோட பிரச்சனை இருக்காதுமா. ஷர்வா இனி அதைச் சரி பண்ணிருவான்” என்று ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஷர்வஜித்தும் வந்து விட்டான்.

“அந்தக் கிரணை என் கஷ்டடியில் வச்சுட்டு வந்திருக்கேன் மிசஸ்.பவ்யா. இனி அவன் உங்க வழிக்கே வர மாட்டான். நீங்களும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். யாரோ ஃபாலோ பண்றாங்கனு உணர்ந்த போதே நீங்க அதுக்கு ஏத்தாப்புல ஏற்பாடு பண்ணிருக்கணும். பரவாயில்லை இன்னைக்குச் சமோஜிதமா செயல்பட்டு என்னை வர வைத்தீங்க” என்றான்.

“உண்மை தான் சார். நானும் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். சில நாளுக்கு முன்னாடி பேப்பர்ல உங்க பேட்டி பார்த்தேன். அதில் உங்க பெர்சனல் நம்பர் கொடுத்து, பெண்களுக்கு இப்படி எதுவும் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை வந்தா என்னைக் காண்டாக்ட் பண்ணலாம்னு சொல்லிருந்திங்க. அந்த நம்பரை குறிச்சு வச்சது தான் இன்னைக்கு என்னைக் காப்பாத்திருக்கு” என்றாள்.

“ஹ்ம்ம்…! பெண்கள் பிரச்சனை எப்பவும் சீக்கிரம் கண், காது வச்சு பறந்து பரவிரும். அதான் நானே தனிப்பட்ட முறையில் வந்து டீல் செய்தேன். இப்படி ஒரு விஷயம் நடந்துன்னு கூட வெளியே தெரிய வேண்டாம்” என்றவன், மேலும் அவளின் கணவனைப் பற்றியும், சொந்தங்கள் பற்றியும் விசாரித்தான்.

அவள் கணவனிடம் மனஸ்தாபத்தில் பிரிந்திருப்பதாகவும், மாமனார் தான் தந்தை ஸ்தானத்தில் தன்னைப் பாதுகாத்து வருபவர் வெளியூர் சென்றிருப்பதையும், பிறந்த வீட்டு நெருங்கிய உறவும் கனடா சென்றிருப்பதைச் சொன்னாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஷர்வா, அதற்கு மேல் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசாமல் “இனி கவனமா இருங்க மிசஸ்.பவ்யா. இனி எதுவும் பிரச்சனைனாலும் கூப்பிடுங்க” என்றவன் அம்மாவை பார்க்க, அவர் எழுந்து “சரிமா… நாங்க கிளம்புறோம்…” என்றவர் விளையாடிக் கொண்டிருந்த கவின் புறம் சென்று “டாட்டா குட்டி ராஜா…” என்றார்.

அவனும் வேகமாக விளையாட்டை விட்டுவிட்டு “டாட்டா” காட்ட, சந்திரா புன்னகையுடன் கிளம்பினார்.

பவ்யா மீண்டும் அவளின் நன்றியை சொல்ல அதை ஏற்றுக் கொண்டு தாயும், மகனும் கிளம்பி விட்டனர்.

அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த பவ்யாவிற்குப் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த உணர்வு வந்தது.

**

அங்கே வினய் வீட்டில் தலையில் கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்தான்.

அவனின் அருகில் ரிதேஷ் அமர்ந்து, வினய் உயிர் தப்பி வந்த சூழ்நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததான்.

“சஸ்ட் மிஸ் வினய்! உன் பின்னாடி வந்தவனுக்கு நெஞ்சில் பாய்ந்த குண்டு உனக்கு வராம தப்பிச்சதே பெரிய விஷயம் வினய். அவன் குண்டடி பட்டு உன் மேல விழுந்ததுனால நீ கீழே விழுந்து அங்கே இருந்த லைட் போஸ்ட்ல மோதி வெறும் தலை காயத்தோட தப்பிச்ச” என்று நிம்மதி பெருமூச்சுவிட,

அவன் பேசுவதைக் காதில் வாங்கினாலும், ‘இல்லை ரிதேஷ்! நான் போனில் பார்த்துக்கிட்டு இருந்த போட்டோவில் இருந்த நபர் தான் என்னைக் காப்பாற்றியது. என் கையை விட்டு போன் போகுதேனு நான் பதறியதை விட அந்தப் போட்டோ போகுதேனு தான் நான் குனிஞ்சேன். நான் குனியலைனா கண்டிப்பா நான் இந்நேரம் பிணம் தான்” என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டான்.