14 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 14
முகில்வண்ணனின் கோபம் நியாயமற்றதாக இருந்தது.
நியாயமாகப் பார்த்தால் அவனின் கோபம் முழுவதும் கமலினியின் மீது தான் வந்திருக்க வேண்டும்.
ஆனால் அவள் பேசாமல் போனதற்கு, காரணமே இல்லாமல் உத்ராவின் மீது கோபப்பட்டான் முகில்வண்ணன்.
அந்தக் கோபத்தின் விளைவாக வேலையில் உத்ரா கேட்டு வந்த உதவியைச் செய்யாமல் தவிர்த்தான்.
அவள் அங்கிருந்து சென்று என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையுடன் அமர்ந்துவிட்டாள்.
அவனின் அர்த்தமற்ற கோபம் எதற்கு என்று தெரியாமல் அது வேறு குழப்பமாக இருந்தது.
‘இப்போது நான் என்ன தவறு செய்து விட்டேன் என இப்படிக் காய்கிறான்? அவனிடமிருந்து ஒதுங்கித் தானே போய்க் கொண்டு இருக்கிறேன்? பிறகும் ஏன் இந்த விரோதம்?’ என்று நினைத்தவண்ணம் கணினி திரையை வெறித்துப் பார்த்தாள்.
‘இந்த வேலையை அவள் தான் முடிக்க வேண்டும். அதற்கு உதவியும் வேண்டும். வேலையை முடிக்கவில்லை என்றால் அதற்கும் தன்னைத்தான் திட்டுவான். இப்போது என்ன செய்வது?’ என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர வருண் வரும் வழியைக் காணவில்லை.
மாதவனிடம் கேட்கலாம் என்றால் அவன் வேறு ஏதோ வேலையை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தானே முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைத்துக் கணினியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மேலும் ஒரு மணிநேரம் அந்த ப்ரோகிராமுடன் போராடிப் பார்த்தும் அவளால் சரி செய்ய முடியாமல் போக, நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். தலைவலி வரும் போல் இருந்தது.
“ப்ச்ச்…” என்று சலித்துக் கொண்டாள்.
“என்னாச்சு உத்ரா, இன்னும் எரர் கண்டுபிடிக்க முடியலையா?” என்று புவனா வந்து கேட்டாள்.
“இல்லை புவனா. நாம பாடம் படிச்சது எல்லாம் வெறும் ஏட்டுப்பாடமாகத் தான் இருந்திருக்கு. இப்போ வேலை செய்யும் போது எல்லாமே புதுசா இருக்கு. நானும் ஏதேதோ செய்து பார்த்துட்டேன். ஒன்னும் சரி பண்ண முடியலை…” என்றாள்.
“எனக்கும் அப்படித்தான் இருக்கு உத்ரா. இப்போ எனக்கும் ஒரு எரர் வந்திருக்கு. யார்க்கிட்ட கேட்குறதுன்னு தெரியலை. வருண் இன்னைக்கு வருவார்னு நம்பிக்கை இல்லை. இப்ப என்ன செய்றது உத்ரா?” என்று கேட்டாள்.
உத்ராவும் அதே நிலையில் தானே இருக்கிறாள். அப்படி இருக்கும் போது அவளும் தான் என்ன செய்ய முடியும்?
திரும்பி முகிலைப் பார்த்தாள். அவனின் கணினியில் ஏதோ தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ போய் முகில்கிட்ட கேளு புவனா…” என்றாள்.
“முகில்கிட்டயா? அவர் தான் நீ போய்க் கேட்டதுக்கு ஹெல்ப் செய்யலையே. எனக்கு மட்டும் எப்படிச் செய்வார்?”
“உனக்குச் செய்வார்னு தோணுது. போ, போய்க் கேளு…”
“அதெப்படி?” என்று புவனா தயங்க,
“தயங்காதே புவனா, போ…” என்று உத்ரா சொல்லவும்,
தயக்கத்துடனே முகிலின் அருகில் சென்றாள் புவனா.
“முகில்…” என்று புவனா தயக்கத்துடன் அழைக்க,
கணினியை விட்டு நிமிர்ந்து பார்த்தவன், “என்ன புவனா, சொல்லுங்க…” என்றான்.
“வொர்கில் ஒரு ப்ராப்ளம் முகில். அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு…” என்று இழுக்க,
“போங்க, வந்து பார்க்கிறேன்…” என்று உடனே சொன்னவனை விழிகளை விரித்து நம்ப முடியாமல் பார்த்தாள்.
புவனாவின் பார்வை உடனே உத்ராவின் பக்கம் திரும்பியது.
அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும் புவனாவின் பார்வை அவன் என்ன பதில் சொல்லியிருப்பான் என்பதை எடுத்துரைக்க, உதட்டை இழுத்து அலட்சியமாகச் சிரித்துக் கொண்டாள் உத்ரா.
அவர்களின் பார்வை பரிமாற்றத்தை முகிலும் கவனித்தான் தான். ஆனால் அதற்காக அவன் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.
புவனா தன் இருக்கைக்குச் செல்ல, சற்று நேரத்தில் உத்ராவின் இருக்கையைத் தாண்டிச் சென்று புவனாவின் கணினியைப் பார்த்து அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.
விரைவிலேயே புவனாவின் வேலையில் என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிந்து சொல்லிவிட்டு மீண்டும் தன் இருக்கைக்குச் சென்றான்.
அவன் சென்றதும் புவனா தோழியை இரக்கத்துடன் பார்த்தாள்.
தோழியை முகில் வேண்டுமென்றே நிராகரிப்பது அவளுக்குப் புரிய, அவளுக்காக வருத்தப்பட்டாள் புவனா.
புவனாவின் பார்வையை உணர்ந்தாலும், அவளின் இரக்கப்பார்வையை எதிர்கொள்ளத் திராணியற்று நிமிர்ந்து அவளைப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள் உத்ரா.
மெல்ல திரும்பி முகிலை பார்த்தாள். அவன் யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.
‘நீங்க என்னை இவ்வளவு விரோதியா நினைப்பீங்கனு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை முகில்’ என்று அவனைப் பார்த்துக் கொண்டே நினைத்தவளின் கண்ணில் வலி விரைந்தொடியது.
அதே நேரம் சரியாக முகிலும் தொலைபேசியில் பேசிக் கொண்டே அவளின் புறம் திரும்பியிருந்தான்.
அவளின் கண்களின் தெரிந்த வலி அவனின் பார்வையிலும் பட, நெற்றியைச் சுருக்கிப் பார்த்தான்.
அவன் தன்னைப் பார்த்ததும் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் உத்ரா.
மீண்டும் அவள் கணினியுடன் போராட ஆரம்பிக்க, சற்று நேரத்தில் “என்ன பிரச்சனை? காட்டு…” என்ற குரல் அவளின் எதிரே கேட்டது.
குரலே வந்தது யார் என்று அவளுக்கு எடுத்துரைக்க, நம்ப முடியாத பார்வையுடன் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டிருந்த முகில்வண்ணனின் முகம் பார்த்தாள்.
“வருண் இன்னைக்கு லீவ் சொல்லியிருக்கார். நான் தான் பார்த்தாகணும்…” என்று சொல்லிக் கொண்டே அவளின் இருக்கை அருகில் வந்தான்.
‘அதனால் தான் உனக்கு உதவி செய்ய வந்தேன். இல்லையென்றால் இப்போது வந்திருக்க மாட்டேன்’ என்ற அர்த்தத்தில் அவளைப் பார்த்தான்.
அவளோ முகத்தில் எந்தப் பாவனையும் காட்டாமல் கணினியின் புறம் திரும்பி “இந்த எரர்…” என்று சுட்டிக் காட்டினாள்.
அவளின் அருகில் இன்னொரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் கணினி திரையைத் தன் பக்கம் திருப்பிப் பார்த்தான்.
என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க அவனுக்கு அரைமணிநேரம் ஆகியது.
“இந்த இடத்தில் தான் ப்ராப்ளம். இதை இங்கே இப்படிப் போடணும்…” என்று அவளுக்குச் செய்து காட்டினான்.
அவன் சொல்லித் தந்த விதம் சுலபமாகப் புரியும் விதமாக இருந்தது.
சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டியதை மட்டும் சரியாகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தான்.
‘இதில் எல்லாம் திறமைசாலி தான். ஆனா என்னைப் பார்த்தால் மட்டும் தான் காரணமே இல்லாமல் காய்வான் போல’ என்று நினைத்துக் கொண்டே அவன் சொல்லித் தந்த வேலையைச் சரியாகப் புரிந்து கொண்டாள்.
தன் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.
“இனி இதை இப்படிக் கொண்டு போனாலே போதும்…” என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான்.
“தேங்க்யூ முகில்…” என்று அவனின் முகம் பார்த்து அவள் சொன்ன போது அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான் முகில்வண்ணன்.
அப்போது போல் அவளின் கண்களில் வலி எதுவும் தெரியாமல் இருக்க, யோசனையுடன் அவளைப் பார்த்து விட்டு தன் இருக்கைக்குச் சென்று விட்டான்.
அன்றைய நாள் இருவருக்குமிடையே கோபம், நிராகரிப்பு, எரிச்சல் என்று ஆரம்பித்திருந்தாலும் அதற்குப் பிறகு எந்தப் பூசலும் எழவில்லை.
அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று மாலை உத்ரா வீட்டிற்குக் கிளம்பிய போது தான் முகிலின் முகம் மீண்டும் மாறியது.
கமலினியைத் தான் சந்திக்கப் போகிறாள் என்று தெரிந்த பிறகு அவனால் ஏனோ அமைதியாக இருக்க முடியவில்லை.
கமலினி வேறு அவளாக ஒரு குறுஞ்செய்தியோ, போனோ போடாமல் இருந்தது வேறு ஒருபக்கம் உறுத்தியது.
அவள் மீதிருந்த கோபத்தில் அவனும் மீண்டும் தொடர்பு கொள்ளாமல் இருந்தான்.
இப்போது நேரிலேயே சென்று அவளிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது.
ஆனால் இப்போது செல்ல முடியாத அளவிற்கு அவனுக்கு வேலை இருந்தது. அதை முடித்து விட்டுத் தான் கிளம்ப முடியும் என்பதால் உத்ராவின் பின் போகும் எண்ணத்தைக் கை விட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவன் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் போது அரைமணி நேரம் கடந்திருந்தது.
வீட்டிற்குச் செல்ல பாதித் தூரம் கடந்த நிலையில் ஒரு சிக்னல் இருக்க அதில் சிவப்பு விளக்கு எரிந்ததால் பச்சை விளக்கு எரிய காத்திருந்தான்.
அவன் நின்றிருந்த சாலையின் அருகில் ஒரு காஃபி ஷாப் இருந்தது.
அதன் உள்ளே தற்செயலாகப் பார்த்த முகிலின் புருவங்கள் யோசனையுடன் சுருங்கின.
ஒரு டேபிளில் உத்ரா, கமலினி மட்டும் இல்லாமல் ஒரு ஆடவனும் அவர்களுடன் அமர்ந்திருந்தான்.
அவர்கள் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது.
அப்போது தன் கைபேசியைக் காட்டி அந்த ஆடவன் ஏதோ சொல்ல, உத்ராவும் ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.
‘யார் அவன்?’ என்பது போல் பார்த்தான் முகில்வண்ணன்.
அவனை இதற்கு முன் பார்த்தது இல்லை. ஒருவேளை அவர்களின் உறவினனாக இருப்பானோ என்று நினைத்துக் கொண்டே அவர்களைக் கவனித்தான்.
உத்ரா கமலினியிடம் எதையோ கேட்க, அதற்கு அவள் சிரித்த படி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘இவளுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா என்ன? என்னிடம் ஒருமுறை கூட இப்படிச் சிரித்துப் பேசவில்லையே, ஏன்?’ என்பது போல் கமலினியைப் பார்த்தான் முகில்.
அவளின் உதடுகளுடன் கண்களும் சேர்ந்து சிரிக்க அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள் கமலினி.
சாலையின் பக்கம் பார்த்தவண்ணம் தான் அவள் அமர்ந்திருந்ததால், அவளின் முகத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
ஆனால் அவள் பேசும் மும்முரத்தில் அவனைக் கவனிக்கவில்லை.
அப்போது பச்சை விளக்கு எரிந்து பின்னால் இருப்பவர்கள் எல்லாம் ஹார்ன் அடிக்க ஆரம்பிக்க, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வண்டியைக் கிளப்பினான் முகில்வண்ணன்.
அன்றிரவு முகிலே எதிர்பாராத விதமாகக் கமலினி அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள்.
தன் கைபேசியில் ஒளிர்ந்த அவளின் பெயரை பார்த்ததும் நம்பமுடியாமல் விழிகளைச் சிமிட்டிப் பார்த்தான்.
முதல்முறையாக அவளே அழைக்கிறாளே அதிசயம் தான் என்று நினைத்துக் கொண்டே அழைப்பை ஏற்றான்.
அழைப்பை ஏற்று விட்டாலும் உடனே பேசாமல் அவன் அமைதியாக இருக்க, “ஹலோ…” என்ற மென்மையான கமலினியின் குரல் கேட்டது.
தன் கோபத்தைக் காட்டும் விதமாக அப்போதும் பேசாமல் இருந்தான்.
“ஸாரிங்க, என்மேல கோபமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நேத்து என் கசின் உத்ரா அந்த நேரம் பார்த்து எனக்குப் போன் போட்டு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாள். என்னால் தவிர்க்க முடியலை. அவர்கிட்ட பேசணும் உத்ரா, நீ போனை வைன்னு அவள்கிட்ட சொல்ல வெட்கமா இருந்துச்சு…” என்றாள் நீண்ட விளக்கமாக.
‘நீ அதைச் சொல்லியிருந்தாலும் வேணும்னே என்கிட்ட பேச விடாமல் செய்திருந்தாலும் அவள் செய்திருப்பாள். அப்படிப்பட்ட ஆள் தான் அவள்’ என்று தனக்குள் பொருமிக் கொண்டான் முகில்.
“இன்னும் கோபமா இருக்கீங்களா?” அவன் அமைதியை உணர்ந்து கேட்டாள்.
“ம்கூம்… இல்லை. கோபமா இருந்தேன். இப்போ நீயே போன் போட்டதும் அந்தக் கோபம் போயிருச்சு…” என்றான்.
“ஷப்பா!” என்று அந்தப் பக்கம் அவள் லேசாகப் பெருமூச்சு விட்டுக் கொள்வது முகிலுக்கு லேசாகக் கேட்டது.
‘பேசாமல் இருந்து கோபத்தைக் காட்டுவேன் என்று பயந்திருப்பாள் போல?’ என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“அப்புறம் சாப்பிட்டீங்களா?” என்று இப்போது அவளே மேலும் பேச்சை வளர்த்தாள்.
“இன்னைக்கு மழை எங்க வீட்ட சுத்தி மட்டும் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது…” என்றான்.
“என்ன?” என்று அவள் கேட்ட விதத்திலேயே அவன் சொன்னது புரியாமல் அந்தப் பக்கம் முழிக்கிறாள் என்று தெரிந்து சிரித்துக் கொண்டான்.
“இல்ல, இன்னைக்கு நீயா போன் போட்ட. இப்ப அக்கறையா என் சாப்பாட்டைப் பத்தியெல்லாம் விசாரிக்கிற, நீ செய்றது எல்லாமே புதுசா இருந்தா மழை வரத்தானே செய்யும்!” என்றான் விளக்கமாக.
“ஓ! அது…” என்று என்ன சொல்வது என்று அறியாமல் இழுத்தாள்.
“இன்னைக்கு உன் அப்பா அம்மா பக்கத்தில் இல்லையா? அவங்க பக்கத்தில் இருந்தால் நீ என்கிட்ட இவ்வளவு கேசுவலா பேச மாட்டியே?” என்று கேட்டான்.
“கீழே இருக்காங்க. நான் மாடியில் இருக்கேன்…” என்றாள்.
“அதானே பார்த்தேன். நானும் இப்போ மாடியில் தான் இருக்கேன்…” என்றான்.
“சரி, நான் வச்சுரட்டுமா?” என்று கேட்டாள்.
“அதுக்குள்ளவா?”
“இல்ல, இன்னொரு கால் வருது. அதான்…”
“இந்த நேரம் யார் போன் போடுறாங்க?”
“உத்ரா தான். கல்யாணத்துக்கு எனக்குச் சில திங்க்ஸ் வாங்க அவள்கிட்ட தான் ஹெல்ப் கேட்டுருக்கேன். அது சம்பந்தமா பேச தான் கூப்பிடுறாள்னு நினைக்கிறேன்…” என்றாள்.
“அப்போ ஈவ்னிங் காஃபி ஷாப்ல என்ன பேசினீங்க? அப்போ பேசாத பேச்சா இந்த நேரம் பேசப் போறீங்க?” என்று கேட்டான்.
இப்படி விசாரிப்பது எல்லாம் அவனின் பழக்கத்திலேயே இல்லாதது. ஆனால் உத்ரா தன் வாழ்க்கையில் தேவையில்லாமல் குறிக்கிட்டு விடுவாளோ என்று அவனுக்கு ஏனோ தோன்றியது.
காதல் சொன்னவள், இப்போது இப்படி ஒதுங்கி இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.
கமலினியுடன் அவள் அதிகம் ஒட்டுதலுடன் இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஓ காஃபி ஷாப்ல எங்களைப் பார்த்தீங்களா?”
“ம்ம், சிக்னலில் நிக்கும் போது பார்த்தேன்…”
“ஸாரிங்க, நான் உங்களைக் கவனிக்கலை…” என்றவள்,
“அப்போ அவளோட ஃபிரண்டு ஒருத்தர் வேறு விஷயமா பேச அங்கே வந்திட்டார். அவர் கூட இருந்ததால் எங்களால் திங்க்ஸ் பத்தி பேச முடியலை. இப்போ பேசி முடிவு பண்ணிட்டு வீக் எண்ட் ஷாப்பிங் போறதா இருக்கோம்…” என்றாள்.
“ஏன் அதை நீயே வாங்க முடியாதா? அதுக்கு அவள் எதுக்கு?” என்று கேட்டான்.
“புடவை எடுத்தப்பயே கவனிச்சிருப்பீங்க தானே? அவளுக்கு நிறைய டீடைல்ஸ் தெரியும். அதுதான் அவள்கிட்ட ஹெல்ப் கேட்டுருக்கேன்…” என்றாள்.
புடவை எடுக்க உத்ரா நன்றாக உதவியதையும், தனக்கு ட்ரெஸ் எடுக்கத் தெரியாமல் கமலினி முழித்ததையும் நினைத்துப் பார்த்தான் முகில்வண்ணன்.
கமலினி கண்டிப்பாகக் கல்யாணத்திற்குத் தேவையானதை நல்லதாகச் செலக்ட் செய்ய மாட்டாள், உத்ராவின் உதவி தேவையான ஒன்று தான் என்று தோன்றவும் அதற்கு மேல் துருவி கேள்வி கேட்காமல் விட்டுவிட்டான்.
காலையில் அவளுக்கு உதவி செய்யாமல் வார்த்தையால் கடித்துக் குதறி இழுத்தடித்துவிட்டு, இப்போது மட்டும் அவளின் உதவி உன் வருங்கால மனைவிக்குத் தேவை என்று போனால் போகட்டும் என்று சொல்கிறாயே என்று அவனின் மனசாட்சியே கேள்வி கேட்டது.
‘நீ ரொம்பச் சுயநலமாக யோசிக்கிறாய் முகில்’ என்று இடிந்துரைக்கவும் செய்தது.
ஆனால் அதை அசட்டையாக ஒதுக்கித் தள்ளினான்.
“நான் அவள் போன் கால் அட்டன்ட் பண்ணட்டுமா?” அவனுக்குத் தான் போனை வைப்பது பிடிக்கவில்லையோ என்று நினைத்துத் தயக்கமாகக் கேட்டாள்.
“ஓகே, பை… இன்னொரு நாள் பேசுவோம்…” என்று தொடர்பை துண்டித்தான் முகில்வண்ணன்.
“என்னடா முகில், நீ எப்போ மாடிக்கு வந்த? தூங்க போய்ட்டன்னு நினைச்சேன்…” என்று கேட்டுக் கொண்டே முகிலின் அருகில் வந்தாள் இலக்கியா.
“என்னக்கா நீ இன்னும் தூங்கலையா?” என்று முகில் கேட்க,
“தூக்கம் வரலைடா. குட்டி இப்ப தான் தூங்கினாள். உன் அத்தான் போன் பேசிட்டு இருக்கார். அதான் நான் கொஞ்ச நேரம் மாடியில் நடக்கலாம்னு வந்தேன். வந்து பார்த்தால் நீ இங்க இருக்க…” என்றாள்.
“கமலி போன் போட்டாள். பேசிட்டு இருந்தேன். இப்பத்தான் போனை வைத்தாள்…” என்றாள்.
“என்ன கமலி போட்டாளா? அவளே போட்டாளா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“அதை ஏன்கா இவ்வளவு சந்தேகமா கேட்குற?”
“வேற என்ன செய்றது? நேரிலேயே அவள் விலகி விலகி போறதை பார்த்தானே. அப்புறம் அவளா உன்கிட்ட பேசினாள்னு சொன்னால் எனக்குச் சந்தேகமாத்தான் இருக்கு…” என்றாள்.
“அக்கா, அக்கா… நீ ரொம்பக் கற்பனை பண்ற. இப்ப கூட அவள் என்கிட்ட நல்லா பேசினாள். என்ன அவங்க அப்பா, அம்மா வேற ஆளுங்க பக்கத்தில் இருந்தால் சங்கடப்படுறாள் அவ்வளவு தான்…” என்றான்.
“உன்கிட்ட நல்லா பேசினால் சரிதான். எனக்கு வேற என்ன வேணும்?” என்று இலக்கியாவும் முடித்துக் கொண்டாள்.
கமலினி அவளாகத் தம்பிக்குப் போன் செய்தாள் என்பதில் இலக்கியாவிற்குச் சிறிது நிம்மதியும் உண்டானது.