13 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 13

இரவு உண்ணும் போது எப்போதையும் விட மிகவும் அமைதியாக உண்டு கொண்டிருந்த மனைவியைக் கேள்வியுடன் பார்த்தான் சர்வேஸ்வரன்.

சக்தியின் முகத்தில் யோசனை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன.

அருகில் அமர்ந்திருந்தவளின் கையைப் பிடித்து லேசாக அழுத்தியவன், “என்ன சக்தி?” என்று கேட்டான்.

“ஹான், ஒன்னுமில்ல…” என்று தலையை அசைத்தவள், உண்டு முடித்து விட்டு எழுந்து சென்று கையைக் கழுவினாள்.

அவனும் உண்டு முடிக்க இருவரும் தங்கள் அறைக்குச் சென்றனர்.

சக்தி நேராகக் குளியலறைக்குச் சென்று உடுத்தியிருந்த சேலையைக் களைந்து விட்டு இரவு உடையை மாற்றிவிட்டு வெளியே வர, சர்வேஸ்வரன் அங்கிருந்த பால்கனியில் நடந்து கொண்டிருந்தான்.

அவள் வெளியே வந்ததைப் பார்த்தவன், “வா சக்தி. ரொம்பக் குளிராமல் இந்தக் காத்து இதமா இருக்கு பாரு…” என்று அவளையும் அழைத்தான்.

“இல்லை, நீங்க நடங்க. நான் படுக்கப் போறேன்…” என்றவள் படுக்கையில் சென்று படுத்தாள்.

அவள் படுத்ததும் பால்கனி கதவை மூடிவிட்டு உள்ளே வந்து தானும் படுத்தவன், “நானும் பஞ்சாயத்திலிருந்து வந்ததில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். உன் முகத்தில் ஏதோ யோசனை ஓடிட்டே இருக்கு. என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“பெருசா ஒன்னுமில்லை. இன்னைக்குப் பஞ்சாயத்தில் நடந்ததைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்…” மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்த வண்ணம் சொன்னாள்.

“ஓஹோ! இன்னைக்குப் பஞ்சாயத்துக்குள்ள நுழைஞ்சு உன்னால் எதுவும் குழப்பி விட முடியலைன்னு வருத்தமா இருக்கும்…” என்றவன் குரலில் நக்கல் இழந்தோடியதை கேட்டவள் வேகமாக அவனின் புறம் திரும்பி படுத்து முறைத்தாள்.

“என்னால் உள்ளே நுழைஞ்சிருக்க முடியாதுன்னு நினைச்சீங்களா? நீங்க மட்டும் மலர் காதலுக்கு ஏத்த மாதிரி தீர்ப்புச் சொல்லியிருக்கலைனா கண்டிப்பா உள்ளே நுழைந்து கேள்வி கேட்டுருப்பேன். சும்மா நக்கல் அடிக்காம படுத்து தூங்குங்க…” என்று கடுப்பாகச் சொன்னவள் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.

படபடவென்று பொரிந்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்ட சக்தியிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான் சர்வேஸ்வரன்.

அவளின் மனதில் ஏதோ குழப்பம் உள்ளது என்று புரிந்தது.

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அவனும் தூங்க ஆரம்பித்தான்.

காலையில் எழுந்ததும் கல்யாணத்திற்குச் செல்ல கிளம்பினர்.

“பட்டுச் சேலையா கட்டிக்கோ சக்தி. நாட்டாமை மனைவியா கல்யாணத்துக்கு நீயும் தான் என் கூட நிற்கணும்…” என்றான்.

‘சரி’ என்றவளும் பட்டுச்சேலை கட்டி தயாரானாள்.

அந்த ஊர் கோவிலில் ஊர்மக்கள் அனைவரும் கூடியிருக்கச் சர்வேஸ்வரனும் சக்தியும் சென்றதும் கல்யாண வேலையைத் துரிதப்படுத்தினர்.

சந்நதியில் வைத்து மலருக்கும், வரதனுக்கும் சர்வேஸ்வரன் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்ததும் “மனம் விரும்பியதில் இருந்த வைராக்கியம் வாழ்வதிலும் இருக்கணும் வரதா. கொஞ்ச நாளைக்கு மலர் வீட்டில் கோபம் இருக்கலாம். அன்பால் அவங்க மனசை மாத்து. வாழ்த்துகள்…” என்றான்.

“கண்டிப்பாங்க அய்யா. இப்ப எங்க கல்யாணம் நடந்து இருக்குனா அது உங்களால் தான். என் அம்மா, அப்பா வாழ்க்கையை உங்க அப்பா, பெரிய நாட்டாமை செழிக்க வச்சது போல, என் வாழ்க்கையை நீங்க செழிக்க வச்சுருக்கீங்க. ரொம்ப நன்றிங்கய்யா…” என்றான் வரதன்.

சர்வேஸ்வரன் அவனின் தோளை தட்டிவிட்டு நகர, சக்தியும் அவனுடன் சென்றாள்.

“என்ன இருந்தாலும் நம்ம நாட்டாமை நாட்டாமை தான். அவரு அப்பா போலச் சுத்தமான வார்த்தை தெளிவு. ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பெரிய நாட்டாமை என்னைக்குமே வித்தியாசம் பார்த்தது இல்லை. தீர்ப்பும் எப்பவும் நியாயமா இருக்கும். அதுபோலவே சின்ன நாட்டாமையும் இருக்கார்…” என்று அங்கிருந்த ஒருவர் அருகில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் காதில் வாங்கிய சக்தி தன் அருகில் வேஷ்டி சட்டையில் தன் மீசையை லேசாகச் சுருட்டி விட்டு வேக எட்டு எடுத்து வைத்த கணவனை ஓரப்பார்வை பார்த்தாள்.

அவனின் கம்பீரம் அவளைக் கவர்ந்தாலும் அதையும் மீறிய சிந்தனை அவளை ஆட்கொண்டது.

அங்கேயே உணவையும் உண்டு முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

சர்வேஸ்வரனும் சக்தியின் தீவிர சிந்தனையைக் கண்டவன் வீட்டிற்குள் சென்றதும், “என்ன தான் பிரச்சனை சக்தி? நேத்து இருந்தே உன் முகமே சரியில்லை. என்னன்னு சொன்னால் தானே தெரியும்…” என்று கேட்டான்.

“உங்க அப்பாவை பத்தி தான் யோசிச்சேன் சர்வேஸ்…” என்றாள்.

“அப்பாவைப் பத்தியா? அப்பாவைப் பத்தி என்ன?” கண்கள் சுருங்க கேட்டான்.

“நேத்து வழக்கில் வரதன் அப்பா, அம்மாவுக்கு ஜாதி, மதம் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வச்சுருக்கார். ஊரும் அவரின் தீர்ப்பு எப்பவும் நியாயமா இருக்கும்னு பேசியதை கேட்டேன். ஊருக்கே நியாயம் சொல்ற உங்க அப்பா, என் அப்பாவுக்கு மட்டும் ஏன் நியாயமான தீர்ப்பு சொல்லலைன்னு தான் என் யோசனை. எங்க அப்பா வழக்கில் மட்டும் உங்க அப்பாவோட நியாயம் செத்துப் போச்சே ஏன்?” என்று கேட்டாள்.

“என்னடி சொன்ன? என் வீட்டுக்காரர் நியாயம் செத்துப் போச்சா? யாரை என்ன குறை சொல்லிட்டு இருக்க?” என்று ஆவேசமாகக் கேட்டபடி அங்கே வந்தார் மீனாம்பிகை.

மாடியில் அறைக்குள் இல்லாமல் வராண்டாவில் நின்றே இருவரும் பேசிக் கொண்டிருக்க, தற்செயலாக மாடி ஏறி வந்த மீனாம்பிகையின் காதில் சக்தி தன் கணவனைக் குற்றம் சாட்டியது விழ, பொங்கி எழுந்து விட்டார்.

அவரை அங்கே எதிர்பாராமல் ஒரு நொடி தடுமாறினாலும் விறைத்து நிமிர்ந்தாள் சக்தி.

“அம்மா டென்சன் ஆகாதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்று அவரைச் சமாளிக்கப் பார்த்தான் சர்வேஸ்வரன்.

“என்ன தம்பி பிரச்சனை இல்லைன்னு சொல்ற? உம்ம அய்யன் நியாயம் செத்துப் போச்சுன்னு நாக்கு மேல பல்லு போட்டு பேசுறா. நீயும் ஒண்ணுமில்லன்னு சாதாரணமா சொல்லிட்டு இருக்க? என்ன இதெல்லாம்? உம் பொஞ்சாதி நாக்கை அடக்கி வைக்கச் சொல்லு…” என்று மகனின் மீது பாய்ந்தார்.

அவருக்கு ஒன்றும் சொல்ல முடியாமல் அவன் நிற்க, அவனின் மௌனம் எதற்கு என்று அறிந்த சக்தி அலட்சியமாக உதட்டை சுளித்தாள்.

“உங்க மகன் எப்படிப் பேசுவார்? அவருக்குத்தான் உண்மை நல்லா தெரியுமே…” என்றாள் சக்தி.

“அப்படி என்ன பெருசா உண்மையைக் கண்டுக்கிட்டான்?” என்று இடுங்கிய கண்களுடன் கேட்டார்.

“அது தான் அவரு அப்பா தப்பான தீர்ப்பு சொன்னார்னு அவருக்கே நல்லா தெரியுமே. அப்படி இருக்கும் போது எப்படிப் பேசுவார்?” என்று கேட்டாள்.

“சக்தி, ரொம்பப் பேசாதே! சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மட்டுமே காரணமே தவிர, என்னோட அப்பா வாக்கு தவறலை. அதை முதலில் ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு…” என்று அதட்டினான்.

“என்னடா நடக்குது இங்கன? ஏ புருஷன் தப்பான தீர்ப்பு சொல்லிட்டார்னு இவ சொல்றா? நீ என்னென்னா சந்தர்ப்பம், சூழ்நிலைன்னு சொல்லிட்டு இருக்குற? யாருடா இவ? இவ அய்யன் யாரு? எதுக்கு இவ இப்படிச் சொல்லிட்டு இருக்குறா?” என்று கோபத்தில் சிவந்து போன முகத்துடன் கேட்டார் மீனாம்பிகை.

“சக்தி தாமு மாமா பொண்ணு மா…” என்று சர்வேஸ்வரன் சொல்ல,

“அடி ஆத்தி!” என்று அதிர்ந்து நெஞ்சில் கைவைத்தார்.

“தாமு மவளா நீ?” என்று கேட்டார்.

“ஆமா, நான் உங்க தம்பி தாமோதரன் மகள் தான். இதைக் கூட நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதாக இருக்கு…” என்ற சக்தி விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்.

தம்பி மகள் என்றதும் சக்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தார் மீனாம்பிகை.

அவளின் கன்னத்தில் கை வைத்து மெல்ல வருடியவர், “என்ன செய்றது ஆத்தா, என்னென்னவோ நடந்து எப்படி எப்படியோ ஆகிப்போச்சு. உம்ம அப்பன் எப்படி இருக்கான்?” என்று கேட்டார்.

“உயிரோட தான் இருக்கார்…” என்று வேதனையுடன் சொன்ன சக்தி, அவரை விட்டு விலகி நின்றாள்.

“என்ன தாயி எப்படியோ சொல்ற? தாயில்லா புள்ளன்னு சொன்னியே. தேவி எப்படி இறந்தா? என்னாச்சு அவளுக்கு?” என்று கேட்டார்.

“என்னோட அம்மா தேவின்னு உங்களுக்கு யார் சொன்னது?”

“என்ன கேள்வி இது தாயி? என் தம்பியும் தேவியும் தானே விருப்பப்பட்டாக…”

“அப்படின்னு அவங்க வந்து உங்ககிட்ட சொன்னாங்களா என்ன?” என்று சக்தி கேட்க, மீனாம்பிகை அவளைக் கேள்வியுடன் பார்த்தவர்,

“இவ ஏன் இப்படிப் பேசுறா தம்பி?” என்று மகனின் புறம் திரும்பி கேட்டார்.

அவனோ அவர்களைப் பேச விட்டு பார்வையாளனாக மாறி நின்றான்.

“வேற எப்படிப் பேச முடியும்? விரும்பாத இரண்டு பேரை விரும்பினவங்களா இந்த ஊரே அவங்களைத் தவறா நினைச்சது. அந்தத் தவறை சரின்னு சொல்றது போல உங்க வீட்டுக்காரர் தப்பான தீர்ப்பும் சொல்லிட்டார். இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரிய போகுது? உங்களுக்கு என்ன உங்க தம்பி மேல அவ்வளவு அக்கறையா என்ன?” என்று கேட்டாள்.

“என்ன நீ திரும்பத் திரும்பத் தப்பான தீர்ப்புன்னு சொல்லிட்டு கிடக்குற? அப்படித் தப்பான தீர்ப்பு சொல்றவர் கிடையாது எம் புருஷன். எதுவும் ஆராயாம எதுவும் சொல்ல மாட்டார். இந்த ஊருக்கே தெரியும் என் தம்பி தாமுவும், தேவியும் விரும்பினாங்கன்னு.

விரும்பினவங்களைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னா இல்லை நாங்க விரும்பவே இல்லைனு கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு பிடிவாதம் பிடிச்சாக. அப்போ தேவி மாசமா வேற இருந்தா.

இதை என்னன்னு எடுத்துக்கிறது? என் தம்பி அவளைக் கைவிடத் துணிஞ்சதை எம் புருஷனால ஏத்துக்க முடியாம, சொந்த மச்சினன்னு கூடப் பார்க்காம ஊரை விட்டு ஒதுக்கி வச்சார். நியாயம்னு வந்துட்டா சொந்த பந்தம்னு கூடப் பிரிச்சி பார்க்காம தீர்ப்பு சொல்ற எம் புருஷனை குறை சொல்ல உமக்கு என்ன தெனாவட்டு இருக்கணும்?” என்று கோபமாகக் கேட்டார்.

“அந்தத் தீர்ப்பைத்தான் தப்புன்னு நான் அடிச்சு சொல்றேன். தேவி அத்தை விரும்பியது பக்கத்து ஊரை சேர்ந்த மோகன் மாமாவை. அவங்க காதலுக்கு உதவி செய்தவர் என்னோட அப்பா. அவங்க காதலுக்கு உதவப் போய்த் தேவி அத்தையும், எங்க அப்பாவையும் லவ்வர்ஸா இந்த ஊரும், நீங்களும் நினைச்சுட்டீங்க…” என்று சக்தி சொல்ல,

‘அப்படியா?’ என்று அதிர்ந்து மகனைப் பார்த்தார்.

அவனும் ‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.

மீனாம்பிகையின் உடன் பிறந்த சகோதரன் தான் சக்தியின் தந்தை தாமோதரன்.

அதே ஊரை சேர்ந்த மீனாம்பிகையைச் சர்வேஸ்வரனின் தந்தை கரம் பிடித்த போது தாமோதரன் மதுரை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

அதே ஊரை சேர்ந்த தேவியும் தாமோதரன் படித்த அதே கல்லூரியில் படித்தார். தேவியின் தந்தை இறந்து விட அவளின் தாய் மட்டுமே அவளுக்கு உறவாக இருந்தார்.

பக்கத்து ஊரை சேர்ந்த மோகனும் அதே கல்லூரியில் படிக்க, மோகனுக்கும், தாமோதரனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்த போது மோகனும், தேவியும் விரும்ப ஆரம்பித்தனர்.

தேவி விடுமுறை எடுக்கும் நேரத்தில் மோகன் தாமோதரனிடம் ஏதாவது தகவல் சொல்லிவிடுவார். தேவியும் அதே போல் தாமோதரனிடம் சொல்லி விட அக்காதலர்களுக்குத் தூதுவர் போல் ஆனார்.

அப்படித் தகவல் பரிமாறிக் கொள்ளும் நேரத்தில் தாமோதரனும், தேவியும் சந்தித்துப் பேச நாளடைவில் ஊராருக்கு அவர்கள் இருவரும் விரும்புவது போலான பிம்பத்தை உண்டாக்கியது.

ஊராரின் எண்ணம் பற்றி அறியாமல் நண்பனுக்கு உதவி செய்வதாக நினைத்து தாமோதரன் தொடர்ந்து உதவி கொண்டிருந்தார்.

ஊராரின் எண்ணம் பெரிய நாட்டாமை, மீனாம்பிகையின் காது வரை வந்து சேர்ந்தது. தாமுவாக எப்படியும் தன் காதல் விஷயத்தைச் சொல்ல வருவார். அப்போது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர்.

காலம் விரைந்து ஓட, மூவரும் கல்லூரி படிப்பை முடித்தனர். தாமோதரன் மதுரையில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்க, மோகனுக்குச் சென்னையில் வேலை கிடைத்தது.

தேவிக்கு நேரடியாகத் தன் நலத்தைப் பற்றிக் கடிதம் எழுத முடியாமல் தாமோதரனுக்கு அனுப்பி, அதை அவர் தேவியிடம் ஒப்படைப்பது போலச் சூழ்நிலை அமைந்தது.

கடிதம் கொடுக்கும் போதும் தேவியைத் தாமோதரன் சந்திக்க ஊராரின் எண்ணம் வலுவானது.

மேலும் நாட்கள் கடந்த நிலையில் தேவியின் அன்னை திடீர் உடல் நல குறைவால் இறந்து விடத் தனித்து நின்று போனார் தேவி.

அதைக் கேட்டு துடித்த மோகன் உடனே வந்து அவளைப் பார்த்தார்.

இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசினர்.

தேவி இனி தான் எப்படித் தனியாக வாழப்போகிறோமோ என்று பயந்தார். அதை மோகனிடம் சொல்ல அவர் தன் வீட்டில் விரைவில் பேசி திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார்.

அவளிடம் சொன்ன படி மோகனும் தன் வீட்டில் பேச அவரின் பெற்றோரோ அவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதில் வீட்டினருடன் சண்டை போட்டு விட்டுச் சென்னை சென்று விட்டார்.

அதன் பிறகு வீட்டினருடன் பேசுவதை அவர் குறைத்துக் கொள்ள, அவரை விட அவரின் பெற்றோர் வீம்பு பிடித்துக் கொண்டிருந்தனர்.

நாட்கள் தான் சென்றதே தவிர அவரின் பெற்றோர் இறங்கி வரும் வழியைக் காணோம் என்றதும் மோகன் துணிந்து ஒரு முடிவு எடுத்தார்.

அதன் படி தாமோதரனை சாட்சியாக வைத்துக் கோவிலில் வைத்து தேவியை மணம் முடித்துக் கொண்டார். அன்றே அவர் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார். மறுநாளே சென்னையில் வீடு பார்த்து வைத்திருப்பதாகவும் அதில் அடுத்த வாரம் தான் குடிபுக முடியும் என்பதால் அதுவரை தேவி மட்டும் அதே ஊரில் இருக்கும் படியும் சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன் என்ற மோகன் அந்த வாரம் வரவே இல்லை. தேவியும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால் ஒரு மாதம் சென்ற நிலையிலும் மோகன் வராமல் போக முதல் முறையாகத் தேவிக்கு மனதில் பயம் உண்டானது.

அவரின் கவலையைப் பார்த்து தாமோதரன் மோகனை பற்றி விசாரிக்க, அவருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சாலையில் நடந்து சென்ற போது தேவிக்கு மயக்கம் வந்து விட, அவளுக்கு உதவி செய்தவர்கள் அவளைக் கவனித்ததில் அவள் கர்ப்பமான செய்தி கிடைத்தது.

அவளுக்குத் திருமணம் ஆன செய்தி யாருக்கும் தெரியாது என்பதால் தாலியை மறைத்து தான் வைத்திருந்தார்.

திருமணம் ஆகாமல் தேவி கர்ப்பம் தாங்கி நிற்கும் நிலையை அறிந்து உடனே பஞ்சாயத்துக் கூடியது.

அந்தப் பஞ்சாயத்து தான் தாமோதரனின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது.

“தேவியும், மோகனும் தான் விரும்பப் பட்டாகன்னு இப்ப நீ சொல்லி தான் எனக்கே தெரியும் தாயி. நான் தேவியும், என் தம்பி தாமுவும் தான் விரும்புறாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

நான் மட்டுமில்ல ஊரே அப்படித்தேன் நினைச்சது. அப்படி நினைக்கும் படியாத்தான் இரண்டு பேரு பழக்கமும் இருந்துச்சு. மோகனுக்கும், தேவிக்கும் கல்யாணம் ஆனதும் தெரியாது. பஞ்சாயத்தில் கூட அவனைப் பத்தி ஒன்னுமே தேவியும் தாமுவும் சொல்லலை…” என்றார் மீனாம்பிகை.

“இந்த இடத்தில் தான் விதி நல்லா விளையாடிருச்சுமா. மோகன் அங்கிளுக்கு அந்த நேரம் திடீர்ன்னு வேலை போயிருச்சு. வேற வீட்டுக்கு மாறுவதாக இருந்ததால் அவர் தங்கியிருந்த ரூமையும் உடனே காலி பண்ண வேண்டிய நிலை. புது வீட்டு அட்ரஸ் தாமு மாமாவுக்குத் தெரியலை.

அவர் போய் விசாரிச்சப்ப கம்பெனியில் இல்லை, ரூமிலும் இல்லங்கவும் மோகன் அங்கிள் என்ன ஆனார்னே அவருக்குத் தெரியலை. அவரும் இவங்களுக்கு எதுவும் தகவல் அனுப்பலை. அதனால் தேவி ஆன்ட்டி அவர் தன்னைக் கை விட்டுட்டாரோன்னு பயந்துட்டாங்க.

தாமு மாமாவுக்கும் அதே எண்ணம் தான். அதனால் தான் திடீர்ன்னு பஞ்சாயத்துக் கூடியதும் அவருக்கு ஒன்னும் புரியலை போல…” என்றான் சர்வேஸ்வரன்.

“அது தான் உண்மை. மோகன் மாமாவைப்பத்தி பஞ்சாயத்தில் சொல்லிடலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் ஊரே தேவி அத்தை கர்ப்பத்துக்கு என்னோட அப்பா தான் காரணம்னு கை காட்டிருச்சு. மோகன் மாமாவை பத்தி ஒரு விவரமும் தெரியலை.

அவர் தேவி அத்தையை ஏமாத்திட்டு போயிட்டாரோன்னு சந்தேகம் இருந்ததால் அவரையும் கை காட்ட முடியாம அப்பா தடுமாறி போயிட்டார். தேவி அத்தைக்கும் என்ன செய்றதுன்னு தெரியலை. தான் இப்படி ஏமாந்து ஊர் முன்னாடி அவமானப்பட்டு நிற்கிறோமேன்னு கூனி குறுகி போயிட்டாங்க.

அவங்க அமைதியைப் பார்த்து உடனே தேவி அத்தை கழுத்தில் தாலி கட்ட சொல்லி தீர்ப்பு சொல்லிட்டார் நாட்டாமை. அப்போத்தான் உசாராகி அந்தக் கர்ப்பத்துக்குத் தான் காரணமில்லைன்னு மோகன் மாமா தான்னு சொன்னார் என்னோட அப்பா…” என்றாள் சக்தி.

“அவன் திடீர்ன்னு மாத்தி பேசுவான்னு நாங்க எதிர்பார்க்கலை தாயி. கண்ணு முன்னாடி பொண்ணு கர்ப்பமா நிக்குது. அதைப் போய் இப்படிக் கை கழுவ நினைக்கிறானேன்னு தான் நாங்க நினைச்சோம்…” என்றார் மீனாம்பிகை.

“தேவி அத்தையும் தானே தன்னோட கர்ப்பத்துக்குக் காரணம் மோகன் மாமா தான். என்னோட அப்பா இல்லைன்னு சொன்னாங்க தானே?” என்று சக்தி கேட்க,

“அவள் மோகனை கை காட்டவும் அப்போ அவனை வர சொல்லுங்கன்னு தாமுக்கிட்டயும், தேவிகிட்டயும் கேட்டோம். ஆனா மோகன் எங்கேன்னு தெரியலைன்னு கையை விரிச்சாங்க. சம்பந்தப்பட்ட ஆள் இல்லைன்னு சொன்னதும் பழகிட்டு தப்பும் பண்ணிட்டு இப்படிப் பொய் வேற சொல்றாங்களேன்னு எங்களுக்கு எல்லாம் கோபம்.

ஏன்னா அவங்க அடிக்கடி பார்த்து பேசிக்கிட்டது ஊரில் பலருக்கு தெரியும். இப்ப திடீர்ன்னு இன்னொரு ஆளை கையைக் காட்டிட்டு இப்ப அந்த ஆளை காணோம்னு வேற சொன்னா என்ன நினைக்கிறது சொல்லு? பழக மட்டும் தான் செய்வோம். கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு சொன்னா யாருக்குத்தான் சந்தேகம் வராது?

தேவியை நீ கல்யாணம் பண்ணியே தீரணும்னு ஏ புருஷன் தீர்ப்பு சொன்னார். ஆனா தாமு தாலி கட்ட மாட்டேன்னு சொல்லவும், ஒழுக்கக்கேடான யாரும் இந்த ஊரில் இருக்கக் கூடாதுன்னு இரண்டு பேரையும் ஊரை விட்டு தள்ளி வச்சார். அதுக்குப் பிறகு அவங்க எங்கே போனாங்க என்ன ஆனாங்க எதுவும் தெரியலை…” என்றார் மீனாம்பிகை.

“அந்தத் தீர்ப்பை ஏன் அவசரப்பட்டுக் கொடுக்கணும் என்பது தான் என் கேள்வி. அப்பாவும், தேவி அத்தையும் ஊரை விட்டு போன மறுநாளே மோகன் மாமா வந்துட்டார். தேவி அத்தையைக் கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி எப்படியாவது வேலை வாங்கிடணும்னு அலைந்ததில் இவங்களுக்குத் தகவல் சொல்லாம விட்டுட்டார்.

அவர் திரும்பி வந்த போது இங்கே எல்லாமே கை மீறி போயிருச்சு. விஷயம் கேள்விப்பட்டு வாங்க நான் ஊருக்குள் வந்து சொல்றேன்னு மாமா சொன்னப்ப அப்பா அதை ஏத்துக்கலை. நாட்டாமையாவும் என்னோட அத்தான் என்னை நம்பலை. மச்சினனாகவும் நம்பலை. இந்த நிலையில் ஊருக்குள் போய்த் திரும்பச் சொன்னா அவர் சொன்ன தீர்ப்பு தப்புன்னு அவருக்குத் தான் கெட்ட பெயர் வந்திரும்.

என்னால் அவருக்கு அந்தக் கெட்ட பெயர் வர வேண்டாம்னு சொல்லி அவங்க கூடவே என்னோட அப்பாவும் சென்னை போயிட்டார். நாட்டாமை கொஞ்சம் பொறுமையா விசாரிச்சி இருந்தால் கூட என்னோட அப்பாவுக்கு அந்த நிலை வந்திருக்காது. அப்பாவும், தேவி அத்தையும் மறுப்பு சொல்லும் போது ஏன் அப்படி விசாரிக்காம போனாங்க?” என்று கேட்டாள் சக்தி.

“சக்தி, ஒரு விஷயத்தைப் புரிஞ்சிகிட்டு பேசு. கோர்ட்டில் கூட வலுவான சாட்சி இருந்தால் அந்தப் பக்கம் தான் தீர்ப்பு வரும். தாமு மாமா, தேவி ஆன்ட்டி பழக்கத்துக்கு இந்த ஊரே சாட்சி. அப்படி இருக்கும் போது இதில் குற்றம் சொல்ல ஒன்னுமில்லை…” என்றான் சர்வேஸ்வரன்.

“எது எப்படியோ… உங்க ஊர் கட்டுப்பாடு, உங்க ஊர் சட்டம்னு நீங்க இருந்ததில் கஷ்டம் என்னமோ என் அப்பாவுக்குத்தான். கடைசி ஆசையா இந்த ஊர் மண்ணைக் கூட அவரால் மிதிக்க முடியலையே…” என்று வேதனையுடன் சொன்னாள் சக்தி.

“என்ன தாயி சொல்ற கடைசி ஆசையா?” என்று அதிர்ந்து கேட்டார் மீனாம்பிகை.

“ஆமாம் கடைசி ஆசை தான். கேன்சர் வந்து என்னோட அப்பா நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். மரணம் அருகில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு இருக்கும் ஒரே ஆசை கடைசியா இந்த ஊர் மண்ணை மிதிக்கணும்னு தான். அந்த ஆசையை எப்படியாவது நிறைவேத்தி வைக்கணும்னு தான் நான் இந்த ஊருக்கே வந்திருக்கேன்…” என்றாள் சக்தி.