13 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்- 13

அன்று முழுவதுமே பரபரப்பாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவ்யா.

அன்றைக்கு முழுவதும் அவளை அலுவலக வேலை வெளுத்து வாங்கியது.

கவினை மதியம் பார்க்க கூடச் செல்ல முடியாமல் வேலை இருக்க, இன்னொரு அலுவலகப் பெண்ணிடம் சிறிது நேரம் சமாளிக்கச் சொல்லிவிட்டு மகனுக்குச் சாப்பாடு கொடுத்து விட்டு வந்தாள்.

அன்று மாலை வரை விடாமல் வேலை இருக்க, வேலை முடிந்த நேரம் அலுத்து, களைத்துப் போனாள்.

அலுப்புடன் அலுவலகத்தில் இருந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றவள் காதில் நவிதா யாரிடமோ மெல்லிய குரலில் பேசியது கேட்டது.

“இத்தனை மாசம் ஆகிருச்சு நம்ம நாடகத்தை நடத்தி இன்னும் ஒரு பலனும் தெரியலையே? வேணும்னா திரும்ப ஒரு நாடகத்தை நடத்திருவோமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சுப் புரியாமல் பவ்யா முழித்தாள். ‘இவ என்ன டிராமா ஆர்டிஸ்ட்டா? நாடகம், அது இதுன்னு உளறிகிட்டு இருக்கா?’ என்று நினைத்த பவ்யா மேலும் அவளைக் கண்டு கொள்ளாமல், ஏற்கனவே வேலை முடிய நேரம் ஆகிவிட்டதால், கவின் தேடுவான் என்று உணர்ந்து, தன் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தவள் காதில் மீண்டும் நவிதாவின் வார்த்தைகள் விழுந்தன.

ஆனால் இந்த முறை விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் திகைத்து தான் போனாள்.

அவளின் திகைப்புக்குக் காரணம் அவளுக்குப் பரிச்சயமான பெயர் காதில் விழுந்ததால் தான்.

“ஆமா தாரா ஆன்ட்டி. கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. பவ்யா வழக்கம் போல வேலைக்கு வர்றாங்க… போறாங்க… என்னை எல்லாம் அதுக்குப் பிறகு சட்டையே செய்றது இல்லை. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்காங்க. நீங்க சொன்ன மாதிரி செய்தும், நான் சொன்ன கல்யாண விஷயத்தைப் பற்றி அதுக்குப் பிறகு அவங்க யோசிக்கக் கூட இல்லை போல. என்ன செய்யலாம் தாரா ஆன்ட்டி? மறுபடி நான் பேசட்டுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நவிதா.

அவளின் அந்தத் தாரா ஆன்ட்டியும், தன்னைப் பற்றிய பேச்சும், பவ்யாவை உறைய வைத்தது. ‘தாரா என்றால் என் அத்தை கனகதாராவா? இல்ல வேறு எவருமா?’ என்று அவள் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போதே, அவளுக்குப் பதில் சொல்வது போல…

“நீங்க கனடாவில் இருந்து வர்றதுக்குள்ள இங்க என் வேலையை முடிச்சு வச்சுறலாம்னு நினைச்சேன். ஆனா ஒன்னும் நடக்கலை. நீங்க அடுத்த மாசம் வந்துருவீங்க. அதுக்குள்ள திரும்ப முயற்சி பண்ணி பார்க்கிறேன்” என்று அவள் தொடர்ந்து பேசவும், பவ்யாவிற்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. அவளின் அத்தை கனகதாரா தான் என்று.

‘என் அத்தையா எனக்குக் கல்யாணம் பேச சொல்லி நவிதாவை அனுப்பியது? ஏன்…? ஏன் அப்படிச் செய்தார்? என்னைக் கணவனுடன் வாழ போகச் சொல்லியிருக்கிறார். நான் என் பக்க நியாயத்தைச் சொல்லவும் புரிஞ்சுகிட்டாரே! அப்புறமும் எப்படி இப்படி என்கிட்ட பேச சொல்ல மனசு வந்தது?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள்,

அந்தப் பக்கம் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த நவிதாவின் பின் புறம் சென்று நின்றாள்.

“இல்லை ஆன்ட்டி… இன்னும் பவ்யாவோட வேலை முடியல. இன்னைக்கு ரொம்ப வேலை. அதான் நீங்க போன் போட்டப்ப பேசமுடியாம இப்ப வந்து பேசுறேன். நான் வெளியே வரும் போது பவ்யா இன்னும் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு சொல்லுங்க ஆன்ட்டி. செய்துறலாம்” என்று இன்னும் தொடர்ந்து தாராவிடம் பேசிக் கொண்டிருந்த நவிதா பின்னால் வந்து நின்ற பவ்யாவை கவனிக்கவே இல்லை.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பவ்யா திரும்பி நின்றிருந்தவளின் தோளின் மீது கை வைத்தாள்.

மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்த நவிதா யாரது என்பது போலத் திரும்பி பார்த்தவள், எதிரே பவ்யாவை கண்டதும் அதிர்ந்து விழித்தாள்.

நவிதாவை உறுத்துப் பார்த்த பவ்யாவின் முகம் இறுகிப் போய் இருந்தது. நவிதா அதிர்ந்து நிற்பதை கண்டு கொள்ளாமல் தன் ஒரு கையை அவள் முன் நீட்டியவள் போனை பார்த்தாள்.

பவ்யாவை எதிர்பாராமல் பார்த்ததிலேயே மிரண்டிருந்த நவிதா அவள் கையை நீட்டியதும் புரியாமல் முழித்தாள். அவள் முழியைப் பார்த்து பவ்யா அவளின் போனை கை நீட்டி குறிப்பிட்டு கேட்க, அதிர்வு மாறாமல் போனை பவ்யாவிடம் கொடுத்தாள்.

நவிதா இப்படி மாட்டி கொள்வோம் என்று சிறிதும் நினைக்காததால் என்ன செய்வது என்று அறியாமல் கையைப் பிசைந்தப்படி நின்றாள்.

நவிதாவின் போனை வாங்கிப் பவ்யா காதில் வைக்கும் போது ‘என்ன நவி. பேசிட்டே இருந்துட்டு சட்டுனு நிறுத்திட்ட…. என்னாச்சு?’ என்று கேட்டுக் கொண்டிருந்த கனகதாராவின் குரல் கேட்கவும், தன் அத்தை தான் என்று உறுதியாகத் தெரிந்து விடக் கண்ணை இறுக மூடி தான் அறிந்ததை ஜீரணித்துக் கொள்ள முயன்றாள்.

அவள் அமைதியில் “நவி?” என்று அவர் திரும்பவும் அழைக்க, கண்களைத் திறந்த பவ்யா அடைத்த தொண்டையைச் சரி செய்து கொண்டே “நீங்களா அத்தை இப்படி? ஏன் அத்தை? நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. என்னை உங்க பொண்ணா பார்க்குறீங்கன்னு இத்தனை நாளும் சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ…?” என்று நிறுத்திய பவ்யா மேலும் பேச முடியாமல் தடுமாறி நின்றாள்.

அந்தப்பக்கம் தாராவும் அவளின் குரல் கேட்கவும் ஒரு நிமிடம் அதிர்ந்தவர் பின் சமாளித்துக் கொண்டு “யாரு பவ்யாவா…? பவ்யாமா எல்லாம் உன் நல்லதுக்குதான்டா…” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

“எது நல்லது அத்தை? என் புருஷனை நான் டிவோர்ஸ் பண்றதா? இல்லை நான் வேற கல்யாணம் பண்ணிக்கிறதா? இரண்டுமே நடக்காதுன்னு ஏன் உங்களுக்குப் புரியாம போச்சு? என்னை இப்படிப் பேசி கஷ்டப்படுத்திப் பார்க்குறதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?” என்று மனம் பொறுக்காமல் அவரிடம் நியாயம் கேட்டவள், தாரா ஏதோ சொல்ல வருவதைப் பொருட்படுத்தாமல்,

“நீங்க எனக்கு எந்த விளக்கமும் சொல்ல தேவை இல்லை அத்தை. என்ன இருந்தாலும் நீங்க எனக்கு அத்தை தான்னு நிரூபிச்சுட்டீங்க” என்று கண்ணில் கண்ணீர் பெருக சொல்லிவிட்டு சட்டென நவிதாவின் கையில் போனை திணித்து விட்டு தன் வண்டி இருக்கும் இடம் சென்று அதைக் கிளப்பினாள்.

அவளின் அந்த வேகத்தில் கொஞ்சம் தெளிந்த நவிதா வேகமாகப் பவ்யாவின் அருகில் ஓடியவள் “பிளீஸ் பவ்யா நில்லுங்க… உங்க நல்லதுக்குனு நினைச்சுதான் நானும் ஆன்ட்டியும் இப்படிச் செய்தோம். நான் என்ன சொல்ல வர்றேன்னு பொறுமையா கேளுங்க” அவளை நிறுத்த பார்த்தாள்.

கிளப்பி இருந்த வண்டியை கால் ஊன்றி நின்று நிறுத்திய பவ்யா தன் எதிரே இருந்த நவிதாவை உறுத்து விழித்துப் பார்த்து முறைத்தாள். அவள் முறைப்பில் நவிதாவின் பேச்சு அப்படியே நின்று போனது.

நவிதாவின் முகத்தையே கூர்மையாகப் பார்த்த பவ்யா “என் மேல பாசமா இருந்தவங்களே இப்ப என்னைக் காயப்படுத்தும் போது, நீ என் நல்லதுக்குச் செய்யப் போறீயா?” என்று கேட்டவள், தன்னை நிதானப்படுத்த முயன்றபடி “இப்ப நான் உன்கிட்ட எதுவும் பேசுற மனநிலையில் இல்லை. வழி விடு…!” என்றவள் வழியில் நின்றிருந்த நவிதாவை தாண்டி வண்டியை திருப்பிக் கொண்டு நிற்காமல் சென்று விட்டாள் பவ்யா.

மகனை அழைத்துக் கொண்டு வண்டியில் சென்று கொண்டிருந்த பவ்யாவின் மனது வெறுமையாக இருந்தது. அந்த வெறுமை அவளிடம் சில நாட்களாகத் தங்கி விட்டது என்று கூடச் சொல்லலாம்.

மாதங்கள் கடந்தும் அவளை இன்னும் தொடரும் பார்வையை மட்டும் அவளால் இன்னும் கண்டறிய முடியவில்லை. யாரோ தன்னைப் பின் தொடர்கிறார்கள் என்று உணர்ந்தவளால் அந்த யாரோ எவர் என்று உணர முடியவில்லை. அதுவே அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது. அதோடு இன்று தான் அறிந்து கொண்ட தாரா பற்றிய உண்மையும் அவளை விரக்தியில் தள்ளி இருந்தது.

அவளின் முன் அமர்ந்திருந்த கவின் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தது கூடக் காதில் விழாமல், தன் போக்கில் ‘ம்ம்’ கொட்டிக் கொண்டு வந்தாள்.

எண்ணங்களின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவித்த படி வீடு வந்து சேர்ந்தவள், கதவை திறந்து கொண்டே கவினை இறக்கி விட்டு “பெட்ரூம்க்குப் போடா குட்டி. அம்மா வீட்டை பூட்டிட்டு வந்து ட்ரெஸ் மாத்தி விடுறேன்” என்று அவனிடம் பேசிக்கொண்டே உள்ளே சென்று கதவை பூட்டும் முன் பாதி மூடிய கதவை ‘தடார்’ எனத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.

அந்த அதிவேகத்தில் பவ்யா அதிர்ந்துப் போய் ஒரு அடி பின்னால் நகர்ந்தாள். தளிர் நடை போட்டு உள்ளே சென்று கொண்டிருந்த கவின் பயந்து போய் அழ ஆரம்பித்தான்.

உள்ளே நுழைந்தவன் பவ்யாவின் அதிர்வை கண்டு கொள்ளாமல் கோணலான சிரிப்பு ஒன்றை சிந்தியவன் பின் பக்கம் திரும்பி பார்க்காமலேயே கையை மட்டும் பின்னால் செலுத்தி கதவை பூட்டினான்.

சில நொடிகள் அதிர்ந்திருந்த பவ்யா “ஏய் கிரண்! என்ன பண்ற? எதுக்கு இப்படி வந்து கதவை மூடுற? வெளியே போ…!” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள்.

அவள் கத்தலை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் அதே கோணல் சிரிப்புடன் நின்றவன் “ஹா…! நீ சொன்னதும் வெளியே போறதுகா மாசகணக்கா இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன்? ஹ்ம்ம்…” என்று புருவத்தைத் தூக்கி திமிராகக் கேட்டான்.

அவன் பேச்சில் “என்ன…?” என்று அதிர்ந்து விழித்த பவ்யா அவனைச் சந்தேகமாகப் பார்த்து “அப்போ நீதான் இத்தனை நாளும் என்னைப் ஃபாலோ பண்ணினதா?” என்று திணறலாகக் கேட்டாள்.

“ஹய்யோ…! எப்படிச் சிஸ்டர் கரெக்ட்டா கண்டு பிடிச்ச? கெட்டிகாரி தான் போ” என்று வெகுவாக வியந்தவன், “ஆமா நான்தான் உன்னை ஃபாலோ பண்ணினேன் சிஸ்டர்” என்றவன் அந்தச் சிஸ்டரில் அழுத்தம் கொடுத்து நக்கலாகச் சொன்னான்.

பவ்யாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கெனவே மனம் துவள வீட்டிற்குள் நுழைந்தவள் கிரண் இப்படி அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இப்படி எல்லாம் பேசுவான் என்று எதிர் பார்க்கவேயில்லை. அதனுடன் இத்தனை நாளும் தன்னைப் பின் தொடர்ந்தவன் அவன் தான் என்று அறிந்ததும், அவளுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.

அதுவும் அவனின் சிஸ்டர் என்ற நக்கல் பேச்சு? அதை நம்பி தானே அவனை நல்லவன் என்று நினைத்தாள். அதுவும் பார்வையில் கூடக் கண்ணியம் காட்டினானே? அதுவும் பொய் தானா? இப்போ எதுக்கு இங்கே வந்திருக்கிறான்? எதுக்கு இந்தத் துரத்தல்? என்று பவ்யாவிற்குக் கேள்விகள் வரிசை கட்டி முளைத்தன.

ஆனால் இப்போது அதை ஆராய்வதை விட அத்துமீறி நுழைந்திருக்கும் அவனை விரட்டுவதே பெரிதாகத் தோன்ற, “ஒழுங்கா வெளியே போயிரு கிரண்! இது என்ன அநாகரிகமா வீட்டுக்குள்ள வந்துட்டு அத்துமீறி நடந்துகிற? இப்ப நீ போகலை… நான் கத்துவேன். அப்புறம் அசிங்கப்பட்டுத் தான் போவ” என்று சொல்லிக் கொண்டே பின்னால் நகர்ந்தவள் அங்கே நின்று அழுது கொண்டிருந்த கவின் அருகில் சென்று அவனைக் கைகளில் தூக்கிக் கொண்டாள்.

அவள் தூக்கியதும் கவின் அழுகையைக் குறைக்க, சிறிதும் தன் பாவனையை மாற்றாமல் அப்படியே தான் நின்றிருந்தான் கிரண். அவனின் அந்தத் தோற்றம் பவ்யாவை திகிலடைய வைத்தது.

அவள் பயத்தைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட கிரண் நக்கலாக உதட்டை சுளித்து “தாராளமா கத்து. நான் அசிங்கப்பட்டுப் போக மாட்டேன். ஆனா நீ அசிங்கம் மட்டும் இல்ல. அவமானப்பட்டும் போவ” என்று சொன்னவன் பவ்யாவின் புரியாத முகப் பாவனையைப் பார்த்து, “என்ன புரியலையா? இப்போ இந்தப் பிளாக்ல நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். பக்கத்து வீட்டு பெரியவங்களும் இல்ல. எதிர் வீட்டு புருஷன் பொண்டாடியும் இல்ல. இப்படி எல்லாரும் இல்லாத தனிமைக்காகத் தானே இத்தனை நாளும் காத்திருந்தேன்.

முதலில் நீ கத்துறது கீழ உள்ள பிளாக் வரை சத்தம் போகுமா என்ன? அப்படியே சத்தம் போனாலும், வர்ற ஆளுங்ககிட்ட நான் என்ன சொல்வேன் தெரியுமா? ஹ்ம்ம்…?” என்று கேட்டு நிறுத்தியவன் நிதானமாக நடந்து வந்து அங்கே இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்,

“ஹா…! எங்க விட்டேன்?” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், பவ்யாவை பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். அதைக் கண்ட பவ்யா முகத்தைச் சுளித்துக் கவினை இறுக பற்றிக் கொண்டாள். “ஹ்ம்ம்… ஞாபகம் வந்துருச்சு. ஆளுங்க கிட்ட என்ன சொல்லுவேன் தெரியுமா? புருஷனை விட்டு தனியா இருக்கிறதால பவ்யாவுக்கு ஆண் துணை தேவைப்பட்டது. அந்த ஆண் துணையா என்னைத் தேர்ந்தெடுத்து வச்சுக்கிட்டாங்கனு சொல்லுவேன்” என்று சொன்னவன் புருவத்தைத் தூக்கிப் பார்த்தான்.

அவன் பேச பேச அவனின் முகத்தையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பவ்யா “வச்சுக்கிட்டாங்க” என்று அவன் அழுத்தி நக்கலாகச் சொன்னதில் துடித்தே போனாள்.

‘என்ன தைரியம் இருந்தால் வீட்டுக்குள் வந்ததும் இல்லாமல் இவ்வளவு தெனாவெட்டாகப் பேசுவான். எதனால் இவனுக்கு இவ்வளவு தைரியம் வந்தது. நான் தனியாக இருப்பதினாலா? ஒரு பெண் இந்தச் சமூகத்தில் தனியாக வாழவே மமுடியாதா’ என்று பவ்யாவிற்குச் சிந்தனை ஓடினாலும் அதையும் விட ‘இப்போது இவனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது? எப்படி அவனைத் தனி ஆளாக எதிர்த்து நின்று வெளியே அனுப்புவது?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளின் யோசனையைப் பற்றி அறியாதவன் மேலும் பேச்சை தொடர்ந்தான். “என்ன வாயடைச்சு போயிட்ட போல? ஆமா என் நடிப்பு இத்தனை நாளும் எப்படி இருந்துச்சு? சிஸ்டர்னு கூப்பிட்டு கண்ணியமா உன்னைப் பார்த்து வச்சு, நீ வீதியை விட்டு தாண்டினதும் உன்னைப் ஃபாலோ பண்ணி, எப்படி நீயே நம்புற போல நடந்துக்கிட்டேனா? அதே போலத் தான் நீ கத்தினா உன் மேல பழியைப் போட்டு நான் ஈஸியா தப்பிச்சுருவேன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டான்.

அவனைப் பேச விட்டு பார்த்துக் கொண்டிருந்த பவ்யா தன் கலக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ஏன் இத்தனை நாளும் என்னைப் பின் தொடர்ந்து வந்த? இப்ப எதுக்கு வந்திருக்க?” என்று கவினை அணைத்து தனக்கு ஒன்றும் இல்லை என மகனுக்குப் புரியவைக்கும் வகையில் சாதாரணமாகப் பேசினாள்.

“என்ன வார்த்தை எல்லாம் தெளிவா வருது. தெளிஞ்சுட்ட போல?” என்று அவளைச் சந்தேகமாகப் பார்த்தவன், அலட்சியமாகத் தோளை குலுக்கி, “உன் தெளிவு என்னை என்ன செய்யும்? உனக்கு இப்ப எதுவும் ஆனா ஏன்னு கேட்க ஆள் இல்லாதவத் தானே நீ…” என்று பேசினவனை உறுத்து பார்த்தாள்.

“என்ன இவனுக்கு எப்படித் தெரியும்னு பார்க்குறீயா? உன் பின்னாடி பிறகு எதுக்குச் சுத்தினேன்னு நினைக்கிற? நீ எங்கே எல்லாம் போற? உனக்கு யாரு கூட எல்லாம் பழக்கம். இங்க உனக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்காங்களா எல்லாம் தெரிஞ்சுக்கத்தான். உன் பின்னாடி சுத்தினதோட உன்னைப் பத்தி தகவலை விசாரிச்சேன். இப்ப உன்னைப் பத்தி உனக்கே தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும். அதோட நீ என்கிட்ட தனியா மாட்டிக்கிற நாளுக்காகக் காத்திருந்தேன்.

உன் மாமனார்னு ஒரு கிழம் வேற இருக்கே… அது இடைஞ்சலா வந்துச்சுனா என்ன பண்றதுனு தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். இப்ப தான் அந்தக் கிழம் ஊரில் இல்லையே? வர இன்னும் ஒரு வாரம் ஆகும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இந்த நாள்தானே சரியான நாள். உன்னை என் வழிக்குக் கொண்டு வர இந்த ஒரு நாள் போதாது? ஹ்ம்ம்… அப்புறம் வேற என்ன கேட்ட? எதுக்கு வந்துருக்கேன்னு தானே. எதுக்குனு இன்னுமா உனக்குப் புரியலை?” என்று கேட்டவனின் வக்கிரமான பார்வை பவ்யாவின் உடல் முழுவதும் சென்றது.

அவனின் பார்வையில் அவமானமாக உணர்ந்த பவ்யா தன் உடலை குறுக்கி எதையோ வேகவேகமாகச் சிந்தித்தாள்.

அப்போது அவ்வளவு நேரமாக அமர்ந்திருந்த கிரண் நிதானமாக எழுந்து வந்து “என்ன என் வழிக்கு வர்றீயா? உன் புருஷனும் வெளிநாட்டை விட்டு வர மாட்டான். நீயும் அங்க போக மாட்ட. இந்நேரம் உன் புருஷன் அங்க ஏதாவது வெள்ளைக்காரியை பார்த்துச் செட்டில் ஆகியிருப்பான். நீயும் என் கூடச் செட்டில் ஆகிரு. உனக்கு ஆம்பிளை துணையும் ஆச்சு. எனக்கும் உன்னால ஆதாயம் ஆச்சு. என்ன சொல்ற? இந்த முடிவுல உனக்கும் சுகம். எனக்கும் சுகம். எப்படி நம்ம கொடுக்கல் வாங்கல்…?” என்று விகாரமாகச் சிரித்துக் கொண்டே அருகில் வர பவ்யா அப்படியே பின்னால் நகர்ந்தாள்.

அவள் இப்போது எதுவும் பேசும் நிலையில் கூட இல்லை. தான் தப்பிக்கும் மார்க்கத்தை மட்டுமே அவள் மனது அலசிக் கொண்டிருந்தது. கிரண் நெருங்கி வர வர பின்னால் சென்றவள் கவினை இறுக பற்றிக் கொண்டாள். இவ்வளவு நேரம் அவள் தடவி கொடுத்ததில் சமாதானமாகி அமைதியாக இருந்த கவின், இப்போது அன்னையின் பய முகமும், கிரண் அருகில் வரும் போது அன்னை தன்னை இறுக அணைத்ததிலும் பயந்து போனவன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

“ஒன்னும் இல்லடா! ஒன்னும் இல்லடா!” என்று கவினை சமாதானம் செய்து கொண்டே பின்னால் நகர, “ஹா… ஹா…! ஒன்னும் இல்லையா…? உன்னை ஒன்னும் இல்லாம ஆக்கத்தானே நானே வந்திருக்கேன்” என்று கிண்டலாகச் சொன்ன கிரண் அவளைத் தொட நெருங்கினான்.

“ஒழுங்கா போயிரு கிரண். நீ நினைச்சது எதுவும் என்கிட்ட நடக்காது” என்று பவ்யா சொல்லும் போதே, “ஏன் நடக்காது நான் நடத்தி காட்டுறேன் பார்” என்றவன் மூர்க்கத்தனமாக அவள் கையை எட்டி பிடித்துத் தன் அருகில் இழுத்தான்.

அவனின் அத்துமீறலில் அரண்டு போன பவ்யா “டேய்…! என்னை விடுடா நாயே…!” என்று கத்திய படி தன் கையை விடுவிக்கப் போராடினாள். “இன்னைக்கு ஒரு நாள் என் கூட இருந்துட்டினா அப்புறம் வாழ்நாள் முழுக்க நான் ஒருத்தனே உனக்குப் போதும்னு நினைப்ப…” என்று அசிங்கமாகப் பேசிக்கொண்டே கவின் அவள் கையில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர பார்த்தான்.

அவனின் தொடுகையில் துடித்துப் போன பவ்யா கவினையும் விடாமல் கையை விடுவிக்கப் பார்த்தாள். ஆனால் அவனின் பிடி மிக அழுத்தமாக இருக்க, சட்டெனக் குனிந்து பலம் கொண்ட மட்டும் அழுந்த அவன் கையைக் கடித்தாள்.

அதை எதிர்பார்க்காத கிரண் பட்டெனத் தன் கையை உதற, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட பவ்யா மகனுடன் வேகமாக ஓடி, அருகில் இருந்த அறைக்குள் புகுந்து அதி வேகமாகக் கதவையும் சாற்றிக் கொண்டாள்.

குழந்தையுடன் அவள் என்ன செய்து விட முடியும்… அதுவும் தன் பலத்திற்கு முன்…. என்று நினைத்து அசால்ட்டாக இருந்த கிரண், அவள் கதவை மூடிக் கொள்ளவும், “ஹேய் கதவை திறடி…! நீ உள்ள போய்ப் பூட்டிக்கிட்டா என் கிட்ட இருந்து தப்பிச்சுருவியா? எத்தனை நாள் ஆனாலும் சரி உன்னை அடையாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன். கேட்க ஆள் இல்லாத அனாதை நாயி. உனக்கு எல்லாம் மானம் பெருசா இருக்கோ?” என்று கத்தியவன் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டினான்.

உள்ளே கதவை மூடி அதன் மேல் சாய்ந்த பவ்யா தன் நிலையை எண்ணி சத்தமாக அழுதாள். அவள் அழுகையைப் பார்த்து கவினும் கத்தி அழ ஆரம்பித்தான்.
பவ்யா மகனின் அழுகையைப் பார்த்து தன் அழுகையைக் குறைத்து “ஒன்னும் இல்லடா குட்டி. அம்மாவுக்கு ஒன்னும் இல்லை. நீ அழாதே…” என்று அவனை அமைதிபடுத்த முயலும் போதே அவளுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

ஆனாலும் தன் உதட்டை கடித்து அழுகையை அடக்கியவள் “ஒன்னும் இல்லை… ஒன்னுமே இல்லை…” என்று ஜெபம் போல மகனுக்குச் சொல்வது போலத் தனக்கும் சொல்லிக் கொண்ட பவ்யாவிற்குத் திடம் கொஞ்ச கொஞ்சமாக வர ஆரம்பித்தது.

அதனால் கிரண் கதவை தட்டுவதைப் பொருட்படுத்தாமல், கவினை இன்னும் அமைதிப்படுத்தி அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து மகனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தவள் தோளில் இருந்து சரிந்தது அவளின் கைப்பை.

ஆம்…! அவளின் கைப்பை அவளிடம் தான் இருந்தது. வீட்டிற்குள் நுழையும் போது அந்தக் கயவனும் நுழைந்து விட்டதால் வெளியே இருந்து வரும் போது தொங்கிய அவளின் பை அப்படியே அவளின் தோளின் மீது இருக்க, அது இருந்த பக்கமே கவினையும் தூக்கி பையை மறைத்துக்கொண்டாள்.

அது மட்டும் இல்லாமல் கவினை அணைத்துப் பிடிப்பது போலக் கையைப் பையினுள் விட்டு அவளின் கைபேசியில் சில வேலைகள் செய்து வைத்திருந்தாள்.

இப்போது கவினை மடியில் வைத்து அமர்ந்த படி ஏற்கனவே திறந்திருந்த பையினுள் கைவிட்டு கைபேசியை எடுத்து தான் செய்தது சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.

அவள் நினைத்தது சரியாக வந்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவள், கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து கவினையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவள் சில நாட்களுக்கு முன் போனில் சேமித்து வைத்திருந்த நம்பருக்கு அழைத்தாள்.

வெளியே கிரணுக்கு தான் பேசுவது கேட்க கூடாது என்று நினைத்து மெதுவாகப் பேசிவிட்டு, திரும்பி வெளியே வந்து, ஜன்னல் பக்கம் வந்து நின்று பார்த்தாள்.

அதுவரை கதவை திறக்க சொல்லி கத்திக் கொண்டே இருந்த கிரண் “திமிரு பிடிச்சவளே! கதவை திறக்க மாட்ட இல்லை. இன்னைக்கு நீயா நானானு பார்த்துருவோம். உள்ளேயே உன்னால எவ்வளவு நேரம் இருக்க முடியும்? நீ எப்படியும் வெளியே வந்து தானே ஆகும். வாடி… உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று வெளியே இருந்து கத்தியவன் கதவிற்கு நேரே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து விட்டான்.

அனைத்தையும் காதில் வாங்கினாலும் பல்லை கடித்துப் பொறுமை காத்த பவ்யா “ம்மா… ம்மா…” என்று இன்னும் சிணுங்கிக் கொண்டிருந்த மகனை ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க சொல்லி திசை திருப்ப பார்த்தவளின் அதிகக் கவனம் வீட்டின் உள்ளே தான் இருந்தது.

ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில் வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்க, பவ்யாவின் அனைத்து உணர்வுகளும் சுறுசுறுப்பாகின.

வேகமாக எழுந்தவள் மகனை தூக்கிக் கொண்டு கதவின் அருகில் போய் நின்றாள்.

அழைப்பு மணி சத்தத்தில் கிரணும் பரபரப்புடன் எழுந்து அறையின் பக்கம் வந்தான். “ஏய் பவ்யா… யாருடி அது…? இந்த நேரம் வந்துருக்கிறது? அப்படி யாரும் இதுவரை வந்தது இல்லையே? நீ எதுவும் தகடுத்தித்தம் செய்துருக்கியா?” என்று கேட்டான்.

பவ்யா வாயே திறக்காமல் அமைதியாக இருந்தாள். மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, “யார் வந்திருந்தாலும் சரி. நீ தான் என்னை உன் கூட இருக்கக் கூப்பிட்டன்னு உன்னைத் தான் அவமானப்படுத்துவேன்டி” என்று சுளுரைத்தது போலக் கத்தியவன் வாசல் கதவு பக்கம் சென்று அங்கிருந்த லென்ஸ் வழியாகப் பார்த்தான்.

வெளியே ஒரு வயதான பெண் நின்றிருந்தார். அவர் புதிய முகமாகத் தெரியவும், சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு நின்றான் கிரண்.