12 – மின்னல் பூவே

அத்தியாயம் – 12

அனைவரும் கலந்து பேசி, கமலினி அதிகம் விருப்பம் தெரிவித்த திருமணப் புடவையைத் தேர்ந்தெடுத்து முடித்தனர்.

வரவேற்பு சேலை, மற்ற சடங்கு சேலை என்று மேலும் நான்கு புடவைகள் மணப்பெண்ணிற்கு எடுக்கப்பட்டது.

மேலும், பெண் வீட்டு உறவு பெண்களுக்கு, மாப்பிள்ளை வீட்டு உறவு பெண்களுக்கு என்று அனைவருக்கும் புடவை எடுத்தனர்.

உத்ராவிற்கும், அஜந்தாவிற்கும் விமலா புடவை எடுத்துக் கொடுத்தார்.

புடவைகள் எடுத்து முடிக்கவே மதியம் ஆகியிருந்தது.

மதிய உணவு நேரம் தாண்டிக் கொண்டிருக்க, “சாப்பிட்டு வந்து அடுத்துப் பார்ப்போமா?” என்று கேட்டார் கமலினியின் தந்தை கிரிதரன்.

“ஆமா சம்பந்தி, சாப்பிடுற வேலையை முதலில் முடிப்போம்…” என்ற ரகுநாதன், “இன்னும் யார் யாருக்கு புடவை எடுக்கணும்?” என்று பெண்களிடம் விசாரித்தார்.

“புடவை எல்லாருக்கும் எடுத்தாச்சுங்க. அடுத்து முகிலுக்குத் தான் பார்க்கணும்…” என்றார் வளர்மதி.

“அப்போ எடுத்த புடவையை எல்லாம் காரில் வச்சுட்டு கிளம்புங்க. பக்கத்தில் தான் ஓட்டல் இருக்கு, சாப்பிட்டு வந்து முகிலுக்குப் பார்க்கலாம்…” என்றார்.

ஆடையகத்திற்கு அடுத்த இரண்டு கடை தள்ளித்தான் உணவகம் இருந்தது என்பதால் காரில் துணிகளை வைத்துவிட்டு மெல்ல நடந்து செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

இரண்டு வீட்டாரும் காரில் தான் வந்தனர் என்பதால் அவரவர் எடுத்த துணிகளைக் காரில் வைத்துவிட்டு உணவகத்திற்குச் செல்ல நினைத்தனர்.

அபிரூபாவிற்கு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை ஊட்டி விட்டிருந்தாள் இலக்கியா. அதனால் அவள் வயிறு நிரம்பியதும் தூங்க ஆரம்பித்திருந்தாள்.

“புடவை தான் எடுத்தாச்சே விமலா. நாங்க அப்படியே கிளம்புறோமே…” என்று துணிக் கடைக்கு வெளியே வந்ததும் விமலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அஜந்தா.

“இது நல்லா இருக்கே. இவ்வளவு தூரம் வந்துட்டு, அப்படியே கிளம்புறதா? இன்னும் எவ்வளவு வேலை இருக்கு. அடுத்து மாப்பிள்ளைக்கு ட்ரெஸ் எடுக்கப் போகணும்…” என்றார் விமலா.

“அது நீங்களே பாருங்களேன் விமலா. நாங்க இருந்து என்ன பண்ண போறோம்?” என அஜந்தா தயங்க,

“அடுத்து நகைக்கடைக்கு வேற போகணும் அக்கா…”

“நகைக்கடைக்கும் இன்னைக்கே போறீங்களா?”

“ஆமாக்கா, இன்னைக்கு நாள் நல்லா இருக்கு. அதனால் தாலிக்கு இன்னைக்கே செய்யச் சொல்லலாம்னு சம்பந்தி வீட்டில் விரும்புறாங்க. நாலு மணிக்கு மேல நல்ல நேரம். அப்போ நகைக்கடைக்குப் போகணும்…” என்று விவரம் தெரிவித்தார்.

“ஆனா அதுக்கு நாங்க எதுக்கு?” இதற்கு மேல் இருந்தால் மகள் மனம் என்ன பாடுபடுமோ என்று அஜந்தாவிற்குக் கவலையாக இருந்தது.

அவரும் மகளைக் கவனித்துக் கொண்டுதானே இருந்தார்.

உத்ரா அனைவரிடமும் சிரித்து, பேசி சகஜமாக இருந்தாலும் அவளின் கண்ணில் அவ்வப்போது ஏமாற்றத்தின் வலி வந்து போனதை அந்தத் தாய்க் கண்டுகொண்டிருந்தார்.

விரும்பியவன் திருமணத்திற்கு அவனின் வருங்கால மனைவிக்குப் புடவை தேர்ந்தெடுக்க உதவுவது எல்லாம் அவள் செய்ய வேண்டும் என்றால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று அறியாதவரா அவர்?

இதற்கு மேல் தாலிக்குச் செய்யக் கொடுக்கப் போவதை எல்லாம் மகள் முன்பு செய்தால் அவள் என்ன பாடுபடுவாளோ என்று பயந்தவர் விரைந்து அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் விமலா விட வேண்டுமே? அவர் மட்டுமில்லாமல், அவரின் கணவரும், கமலினியும் கூடத் தங்களுடன் இருக்குமாறு வலியுறுத்தினர்.

“இன்னைக்கு லீவ் நாள் தானே? வீட்டில் போய் இருந்து என்ன செய்யப் போறீங்க அண்ணி? இருங்க…” என்றார் கிரிதரன்.

அதற்கு மேல் எப்படி மறுப்பது என்ற தவிப்புடன் மகளைப் பார்த்தார் அஜந்தா.

அன்னையின் தவிப்புப் புரிந்தது போல் லேசாக உதட்டை இழுத்து சிரித்தாள்.

அவளுக்கு மனமெல்லாம் வலி தான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துப் பேச வேண்டிய கட்டாயம் அதை விட வலி நிறைந்ததாக இருந்தது.

அதிலும் கமலினியைத் தொடர்ந்த முகில்வண்ணனின் பார்வை?

அதற்கு மேல் நினைக்க முடியாமல் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

வீட்டிற்குச் சென்று தன் அறைக்குள் அடைந்து கொள்ள வேண்டும் என்ற நெஞ்சம் தவித்தது.

ஆனால் உறவுகளின் கட்டாயம் அதற்குத் தடையாக இருக்க, முயன்று தன்னைச் சமாளித்துக் கொண்டு அன்னையைப் பார்த்துச் சிரித்தாள்.

அப்போது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் வந்தார் வளர்மதி.

“என்னாச்சு, எதுவும் பிரச்சனையா?” என்று விசாரித்தார்.

“பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை அண்ணி. அக்காவும், உத்ராவும் வீட்டுக்குப் போறோம்னு சொல்லிட்டு இருக்காங்க. அதான் இருங்கனு சொல்லிட்டு இருக்கோம்…” என்று விவரம் தெரிவித்தார் விமலா.

“ஏன் அதுக்குள்ள போகணும்னு சொல்றீங்க? இன்னும் சாப்பிட கூட இல்லை. முதலில் வாங்க சாப்பிட போகலாம். இன்னைக்கு நைட் சாப்பாடும் எங்க கூடத்தான்.

தாலிக்குச் சொல்லிட்டு, அந்த வேலையெல்லாம் முடிந்ததும் நைட்டும் வெளியே சாப்பிட்டு தான் வீட்டுக்குப் போறோம்.

வாங்க, வாங்க… கமலி நீ உத்ராவை அழைச்சுட்டு வாமா…” என்று சொல்லிக் கொண்டே அதற்கு மேல் அவர்களைப் பேசிக் கொண்டு நிற்க விடாமல் அஜந்தாவின் கையைப் பற்றி அழைத்துப் போனார்.

வேறு வழியில்லாமல் அவருடன் நடந்தாலும் மகளைப் பார்த்தார்.

‘போங்கமா’ என்பது போல் தலையசைத்தாள் உத்ரா.

கமலினி உத்ராவுடன் நடக்கத் தொடங்க, அவர்களுக்குப் பின்னால் நடந்தான் முகில்வண்ணன்.

அவனும் கமலினியுடன் நேரம் கிடைக்காதா என்று காத்திருந்து ஏமாந்து தான் போனான்.

கமலினியின் செயலால் அவனுக்குக் கோபம் வந்தது என்னவோ உத்ராவின் மீது தான்.

இவள் வந்ததால் தானே அவளுடன் ஒட்டிக் கொண்டே அவளும் திரிகிறாள். இவளை யார் இங்கே வரச் சொன்னது? என்று நினைத்தவனுக்கு உத்ராவின் மீது ஆத்திர ஆத்திரமாக வந்தது.

அவன் தங்களின் பின் வருவதை உணர்ந்து “கமலி அவர் உன்கிட்ட தான் பேச நினைக்கிறார் போல. நான் முன்னாடி போறேன்…” என்று அங்கிருந்து செல்ல நினைத்தாள் உத்ரா.

ஆனால் கமலினியோ, “அதெல்லாம் ஒன்னுமில்லை உத்ரா. நாம பார்த்து எவ்வளவு நாளாச்சு? என் கூடப் பேசிட்டு இரு…” என்று உத்ராவை செல்ல விடாமல் அவளின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

கமலினி தன் தம்பியைத் தவிர்ப்பதையும், அவன் அவள் பின்னே வருவதையும் கவனித்துக் கொண்டே இருந்தாள் இலக்கியா.

அவளின் முகத்தில் சிந்தனை முடிச்சு விழுந்தது.

எதுவோ சரியில்லை என்பதாக அவளுக்கு மனம் உறுத்தியது. எதுவும் உறுதியாகத் தெரியாமல் யாரிடம் அதைப் பற்றிப் பேசவும் அவளுக்கு விருப்பமில்லை.

உணவகத்திற்குள் சென்றதும் ரகுநாதன், வளர்மதி, கார்த்திக், இலக்கியா என்று ஒரு டேபிளில் அமர, கிரிதரன், விமலா, அஜந்தா இன்னொரு டேபிளில் அமர்ந்தனர். அஜந்தாவின் அருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.

இன்னொரு டேபிளில் அமர சென்ற முகில், திரும்பிக் கமலினியைப் பார்த்தான். அவளோ தன் அன்னையின் அருகில் சென்றாள்.

அதைக் கவனித்த இலக்கியா, “நீ முகில் கூட உட்கார் கமலி…” என்றாள்.

“அது வந்து அண்ணி…” என்று தயக்கமாக இழுத்த கமலினி தன் பெற்றோரைப் பார்த்தாள்.

“போமா, போய் மாப்பிள்ளை பக்கத்தில் உட்கார்…” என்றார் கிரிதரன்.

தந்தையே சொன்ன பிறகு அதற்கு மேல் தயங்காமல் முகிலின் அருகில் அமரப் போனாள்.

ஆனால் உத்ராவையும் தனக்கு எதிரே அமர சொல்ல, நிச்சயமாகப் பொறுமை இழந்து போனான் முகில்வண்ணன்.

“இல்ல கமலி, அவள் என் கூட உட்காருவாள்…” என்று வேகமாகச் சொல்லி மகளைத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார் அஜந்தா.

“என்ன நினைச்சுட்டு இருக்கக் கமலி? நானும் நீ வந்ததிலிருந்து பார்த்துட்டு இருக்கேன். என் பக்கத்திலேயே வர மாட்டேங்கிற? பார்க்கவும் மாட்டேங்கிற?” என்று தன் அருகில் அமர்ந்திருந்தவளிடம் கேட்டான் முகில்வண்ணன்.

அவனின் குரலில் கோபம் தெரிய, மிரண்டு விழித்து அவனைப் பயப்பார்வை பார்த்தாள்.

அவளின் பயத்தைக் கண்டு சட்டென்று தணிந்தான் முகில்.

ஆனாலும் காரணம் சொல்லியே ஆகவேண்டும் என்பது போல் அவளைப் பார்த்தான்.

“இல்லைங்க, அப்பா, அம்மா முன்னாடி எனக்கும் கூச்சமா இருக்காதா? அதான்…” என்று அவள் தயங்கிக் கொண்டே சொன்னாள்.

“நமக்குத் தான் நிச்சயம் ஆகிருச்சே? அப்புறம் அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிற?” என்று கேட்டான்.

“ஒன்னும் சொல்ல மாட்டாங்க தான்…” என்று அதற்கும் அவள் தயக்கத்துடன் பதில் கொடுத்தாள்.

முதல் முறையாக அவள் தயங்கித் தயங்கிப் பேசுவது முகிலுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

அமைதியானவளாக இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்காகத் தன்னிடம் கூட அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? என்று நினைத்தான்.

“போன் போட்டாலும் கூச்சமா இருக்குன்னு சொல்ற? நேரில் பார்த்தாலும் கூச்சம்னு ஒதுங்கிப் போற? ஏன் இப்படிச் செய்ற?” என்று கடுப்புடன் கேட்டான்.

அவனின் கோபமும், கடுப்பும் சட்டென்று கமலினியின் கண்களைக் கலங்க வைத்தது.

இப்படித் தொட்டாசிணுங்கியாக இருக்கிறாளே… என்று அதற்கும் அவனுக்குக் கோபம் தான் வந்தது.

“சரி, சரி… உன்னை ஒன்னும் சொல்லலை. இன்னைக்கு நைட் போன் போடுவேன். பேசணும் சரியா?” என்று கேட்டு அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.

“ம்ம்…” என்று தலையை உருட்டினாள் கமலினி.

“சரி, கண்ணைத் துடை! என்ன சாப்பிடுற?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினான்.

அதன் பிறகு அவளுடன் பேச முயன்று கொண்டே சாப்பிட்டு முடித்தான். அவன் கேட்ட கேள்விக்குக் கமலினி பதில் சொன்னாளே தவிர, அவளாக ஆர்வத்துடன் எதுவும் அவனிடம் பேசவில்லை.

ஒரு வழி பாதை என்பது போல் அவன் மட்டும் அதிகம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற, அதன் பிறகு அவளிடம் பேசும் ஆர்வமே அவனுக்குக் குறைந்து போனது.

‘என்னடா இது?’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு அனைவரும் மீண்டும் ஆடையகத்திற்குக் கிளம்பினர்.

உள்ளே செல்லும் போதே, “நீ தான் எனக்கு ட்ரெஸ் எடுக்க ஹெல்ப் செய்யணும்…” என்று கமலினியிடம் சொல்லித்தான் அவளுடன் சென்றான்.

ஆனால் அங்கே போனதும் அவனுக்கு எது சரியாக இருக்கும் என்று சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழித்தாள்.

திருமணத்திற்கு வேட்டி சட்டை என்பதால் அதை எந்தக் குழப்பமும் இல்லாமல் எடுத்து விட்டார்கள். ஆனால் வரவேற்பிற்குக் கோட், பேன்ட் என்பதால் எதை எடுப்பது என்று சற்று குழப்பத்துடன் கமலினியிடம் அபிப்பிராயம் கேட்டான் முகில்.

அவளோ “எனக்குத் தெரியலையே…” என்று அப்பாவியாகக் கையை விரித்தாள்.

‘நல்லா இருக்குமா, இருக்காதா என்று ஒரு கருத்துக் கூடவா தெரியாது?’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

அவர்கள் பார்க்கட்டும் என்று பெரியவர்களும் சிறியவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால் தானே பார்க்க வேண்டியது இருக்கே, உதவ வேண்டியவளும் கையை விரிக்கிறாளே என்று கடுப்பானவன் பார்வையைச் சுழற்றினான்.

அங்கே தன் அன்னையுடன் ஒரு இருக்கையில் அமர்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.

காலையில் புடவை எடுக்க அவள் சொன்ன டிப்ஸ் எல்லாம் ஞாபகத்தில் வந்தது. அப்போது எப்படிச் சட்சட்டென்று தன் கருத்துக்களைச் சொல்லி, விரைவில் புடவைகளை எடுக்க உதவினாள் என்று நினைத்துப் பார்த்தான்.

‘ச்சே, அவளைப் பத்தி எதுக்கு நினைக்கிறேன்?’ என்று சட்டென்று தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டவன் கார்த்திக்கை தேடினான்.

கார்த்திக் வேறு ஒரு பக்கம் சட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அத்தான், இங்கே வாங்க…” என்று அவனை அழைத்தவன், அவனின் உதவியுடன் ஒரு உடையைத் தேர்ந்தெடுத்தான்.

கார்த்திக் அங்கே வந்ததுமே மெல்ல நழுவி அங்கிருந்து சென்று தன் அன்னையுடன் நின்று கொண்டாள் கமலினி.

“எப்ப சமயம் கிடைக்கும்னு காத்திருந்தாள் போல…” அவளை நினைத்து உள்ளுக்குள் பல்லைக் கடித்தான் முகில்வண்ணன்.

‘இவளை நிறைய மாத்தணும் போல இருக்கே. இப்ப மட்டுமா இல்ல கல்யாணத்துக்குப் பின்னாடியும் இப்படித்தான் என்கிட்ட பழகத் தயக்கம் காட்டுவாளா?’ என்று கவலை கொண்டான்.

அவனுக்கான உடையும், வீட்டு ஆண்களுக்கான உடைகளும் எடுத்து முடிய நான்கு மணிக்கு மேல் ஆனது.

ரகுநாதனும், கிரிதரனும் பில் போட சென்றனர்.

குழந்தையைக் கணவனிடம் கொடுத்துவிட்டுத் தம்பியின் அருகில் வந்தாள் இலக்கியா.

“என்னடா நடக்குது இங்கே?” என்று ஒரு சட்டையைப் பார்ப்பது போல் தம்பியைத் தனியே அழைத்துச் சென்று கேட்டாள்.

“என்னக்கா? என்ன கேட்குற?” அவன் குழப்பத்துடன் கேட்டான்.

“நானும் காலையிலிருந்து உனக்கும், கமலிக்கும் நடந்துட்டு இருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பார்த்துட்டுத் தான் இருக்கேன். உங்க இரண்டு பேருக்கு இடையே என்ன பிரச்சனை? எதுவும் சண்டையா?” என்று கவலையுடன் கேட்டாள்.

‘அக்காவும் கவனித்தாளா?’ என்பது போல் ஒரு நொடி அதிர்ந்தவன், அடுத்த நொடி தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டு, “சண்டையா? நீ வேற ஏன்கா காமெடி பண்ணிட்டு இருக்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டுச் சமாளிக்கப் பார்த்தான்.

‘அவள் தன்னிடம் சகஜமாகப் பேசினாலே அதிசயம். இதில் எங்கிருந்து சண்டைப் போட்டுக் கொள்வது?’ என்று நினைத்துக் கொண்டான்.

“அப்போ நான் பார்த்தது பொய்யா? நீ தான் அவ பின்னாடி சுத்திட்டு இருக்க. அவள் உன் பக்கம் திரும்பவே இல்லை. இதுக்கு என்ன அர்த்தம்? ஒருவேளை அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் எதுவுமில்லையா?” என்று விடாமல் கேட்டாள் இலக்கியா.

“அக்கா, என்ன என்னென்னவோ சிந்திக்கிற? அவளுக்குக் கூச்ச சுபாவம் கா. அதான் உங்க எல்லார் முன்னாடியும் என்னைப் பார்க்க தயங்குறா…” என்றான்.

‘கூச்ச சுபாவம் இருக்கலாம். அதற்காக ஒரு கள்ளப் பார்வை, ஓரப்பார்வை கூட வருகாலக் கணவனைப் பார்க்க முடியாத அளவிற்கா இருக்கும்?’ என்று நினைத்தாள் இலக்கியா.

“போன்ல உன்கிட்ட எப்படிப் பேசுவாள்?” என்று கேட்டாள்.

அவளுக்கே தம்பியின் ப்ரைவேசியில் அதிகமாகத் தலையிடுகிறோம் என்று புரிந்தது. ஆனாலும் ஏனோ இவ்விஷயத்தை அவ்வளவு சாதாரணமாக விட்டுவிட முடியவில்லை.

தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் அவளின் உள்ளம் கவலை கொண்டது.

அக்கா தேவையில்லாமல் கவலைப்படுவதாகத் தோன்ற, “அதெல்லாம் நல்லா பேசுவாள் கா. எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் ஸ்மூத்தா தான் போயிட்டு இருக்கு. இன்னைக்கு நைட் கூட என்கிட்ட பேசுறதா சொல்லியிருக்காள்…” என்றான்.

அதற்கு மேல் என்ன விசாரிப்பது என்று அவளுக்கும் தெரியவில்லை.

அதனால் ‘சரி’ என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.

உடைகள் எடுத்து முடித்ததும் அடுத்ததாக நகைக்கடைக்குச் செல்ல கிளம்பினர்.

ஆடையகத்திற்கு எதிரே தான் நகைக்கடை இருந்தது.

சாலையை மட்டும் கடந்து செல்ல வேண்டும் என்பதால் சாலையோரமாக நின்றனர்.

கார்த்திக்கும், முகிலும் எடுத்த உடைகளைக் காரில் வைக்கச் சென்றிருக்க, பெண்களுடன், கிரிதரனும், ரகுநாதனும் இருந்தனர்.

அவர்களும் பெண்களைக் கவனமாகச் சாலையைக் கடக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையில் கவனமாக இருந்தனர்.

கடைவீதிகளுக்கே உண்டான பரபரப்புடன் இருந்த சாலை அது.

வண்டிக்கள் விரைந்து சென்ற அந்தச் சாலையைக் கடக்க அவர்கள் காத்திருந்த நேரத்தில் எதிர்பாரா வண்ணம் ஒரு அசம்பாவிதம் நடந்தேறியது.

எப்போதும் நகைகளாக வாங்காமல் தங்ககாசுகளாக வாங்கி வைப்பது வளர்மதியின் வழக்கம்.

இலக்கியாவின் திருமணத்திற்குச் சேர்த்து வைத்த தங்ககாசுகளை எல்லாம் அவளின் திருமணச் சமயத்தில் மொத்தமாக மாற்றி மகளுக்குப் பிடித்தமான, லேட்டஸ்ட் நகைகளாகச் செய்து கொடுத்தனர்.

அதே போல் முகில் கல்யாணத்திற்குப் பெண்ணிற்குத் தாலி மாப்பிள்ளை வீட்டில் தான் வாங்கும் முறை என்பதால் அவனுக்காகவும் தனியாகத் தங்ககாசுகளைச் சேர்த்து வைத்திருந்தார்.

பத்துப் பவுனில் தங்கதாலி செய்வதாக இருந்தனர். அதனால் பத்து பவுன் பெறுமானம் உள்ள தங்ககாசை வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தனர்.

அந்தத் தங்ககாசுகளை எல்லாம் ஒரு சின்னப் பையில் போட்டு, அதைத் தன் கை பையில் பத்திரமாக வைத்திருந்தார் வளர்மதி.

இப்போது நகைக்கடைக்குச் செல்ல நிற்கும் போது பையைத் தோளில் மாட்டியிருந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் இருந்து அவரின் தோள் பையை யாரோ இழுப்பது போல் இருக்க, அதில் அவர் தடுமாறிய அதே நேரத்தில் அவரின் கைபையை ஒருவன் உருவி கொண்டு ஓடினான்.

“ஐயோ! பை… திருடன்…” என்று கத்திக் கொண்டே அவன் இழுத்த வேகத்தில் கீழே விழுந்து விட்டார் வளர்மதி.

கண் இமைக்கும் நேரத்தில் இந்நிகழ்வு நடந்து விட, அனைவரும் உறைந்து நின்றனர்.

வளர்மதியை கவனிப்பதா, திருடனை பிடிப்பதா என்று மூத்த ஆண்மக்கள் இருவரும் தடுமாறிய நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டாள் உத்ரா.

ஓடியவனை நொடியும் தாமதிக்காமல் துரத்த ஆரம்பித்தாள்.

ஓடியவன், தயாராக இருந்த அவனின் கூட்டாளியின் பைக்கில் தாவி ஏற போன கடைசி நொடியில் அவனின் சட்டைப் பிடித்து ஏற விடாமல் தடுத்தவள் அவனின் பொடதியில் ஒரு கராத்தே வெட்டு போட்டாள்.

அதில் அவன் சுருண்டு மடங்க, அவனின் கூட்டாளி அங்கிருந்து பைக்கில் பறந்து விட்டான்.

அப்போது விஷயம் தெரிந்து முகிலும், கார்த்திக்கும் அங்கே ஓடி வர, அதற்குள் திருடனின் கையில் இருந்து பையைப் பெற்றிருந்தாள் உத்ரா.

ஆட்களும் கூடிவிட அந்தத் திருடனை மேலும் ஓட விடாமல் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

“உனக்கு ஒன்னும் அடிப்படலையே உத்ரா?” முகில் அவளிடம் முதலில் கேட்ட கேள்வி அதுவாகத்தான் இருந்தது.

“ஒண்ணுமில்லை முகில். இந்தாங்க…” என்று நகை இருந்த பையை அவனிடம் ஒப்படைத்தாள் உத்ரா.