12 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 12

புகழேந்தி! சத்யா அறிந்த வரையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவில் நல்லவன் தான்!

எந்த உடல் குறையும் இல்லாத ஆரோக்கியமான மனிதன்!

அவளின் நல்ல நண்பனும் கூட…!

எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவளுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் மறுக்காமல் செய்து கொடுப்பவன்.

ஆண், பெண் பாலின பாகுபாடின்றி அவளிடம் நல்ல நட்புடன் மட்டும் பழகும் வெகு சிலரில் அவனும் ஒருவன்.

நட்பை தாண்டி அவர்களுக்குள் இதுவரை எதுவும் இருந்தது இல்லை. அதுவும் சத்யாவிற்கு ஒருவர் நல்லவர் என்று தோன்றி விட்டால் தயங்காமல் நட்பு பாராட்டுவாள்.

அப்படி அவள் நட்பு பாராட்டிய யாரும் அவளிடம் இதுவரை அவர்களின் வரைமுறையைத் தாண்டியது இல்லை.

ஆனால் இப்போது புகழேந்தி அந்த வரைமுறையைத் தாண்டி வந்ததை அவளால் இன்னும் நம்பக் கூட முடியவில்லை.

அவன் சொன்னதை நம்ப முடியாத அதிர்வில் இருந்து தெளியாமலேயே ‘உங்கள் ஆசை நிறைவேறாது’ என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டாள்.

சுற்றி உள்ளவர்கள் பார்க்கிறார்கள் அமருங்கள் என்றதும் மீண்டும் அமர்ந்தவள் அவனின் நிம்மதி பெருமூச்சை அகற்றுவது போல மீண்டும் “உங்கள் ஆசை நிறைவேறாது சார்…” என்று அழுத்தமாக வார்த்தை மாறாமல் சொல்ல புகழேந்தியின் முகம் வெளுத்துப் போனது.

“ஏன் சத்யா இப்படிச் சொல்றீங்க? இப்பதானே நான் என் மனசை சொல்லியிருக்கேன்… கொஞ்சம் யோசித்துச் சொல்லலாமே?” என்று தவிப்புடன் கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்த சத்யா பேச போகும் முன் “ப்ளீஸ் சத்யா… ஒரு நிமிஷம்…!” என்று அவளின் பேச்சை நிறுத்தியவன், “உங்க பதில் ‘மறுப்பு தான்’னு முடிவு பண்ணிட்டா தாராளமா சொல்லுங்க. பட்…! ஒரு இரண்டு நாள் நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க. அவசரப்பட்டுச் சொல்ல வேண்டாமே?” என்றான்.

அவனின் இறைஞ்சுதலான வார்த்தையில் சத்யா தவித்துத் தான் போனாள்.

அவளின் தவிப்பு அவனின் வார்த்தைக்காக மட்டும் இல்லை. அவனின் திருமணம் என்ற வார்த்தையில் வேறு ஒருவனை அவளின் மனம் நினைத்ததால் தான்!

ஆம்! புகழேந்தியின் திருமணக் கோரிக்கையைக் கேட்டதும் அவளின் மனதில் மின்னி மறைந்தது தர்மாவின் குரலும், அன்று தன் கையின் மேல் வைத்திருந்த அவனின் கையின் ஸ்பரிசமும், அவனின் உடலின் வாசனையும் மட்டுமே அவளின் மனதில் ஊர்வலம் போக ஆரம்பித்தது.

‘என்னை மனதில் வைத்துக் கொண்டு அவனிடம் என்ன திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்?’ என்று தர்மா தன்னை உள்ளுக்குள் இருந்து கேள்வி கேட்பது போலத் தோன்ற, அதன் உந்துதலில் சட்டெனப் புகழேந்தியின் கோரிக்கையை நிராகரித்திருந்தாள்.

ஆனால் அவன் யோசித்து விட்டுப் பதில் சொல் என்று சொல்ல, தர்மாவை மனதில் வைத்துக் கொண்டு புகழேந்தியிடம் அதற்கு மேல் பேச முடியாமல் அவளுக்குத் தவிப்பு உண்டாக ஆரம்பித்தது.

மனது தவித்தாலும் புகழேந்தியிடம் பட்டெனப் பதில் சொல்ல முடியாமல் தயங்கினாள்.

அவன் வேண்டுமானால் திருமணக் கோரிக்கை வைத்திருக்கலாம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனின் நட்பு இன்றியமையாதது. அவன் அந்த நட்பை மீறி விட்டான் என்பதற்காகத் தன் நட்பு பொய்யாகப் போகாதே?

நட்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொறுமையாகப் பேச முடிவெடுத்தாள் சத்யா.

ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், தன் மனதை நிதானத்திற்குக் கொண்டு வந்தாள்.

“என்னைத் திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு எப்படி எண்ணம் வந்தது புகழ் சார்? என் மேல் பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்க இந்த முடிவா?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“இல்லை சத்யா… நிச்சயமா இல்லை… பரிதாபத்தினால் உண்டாகும் குடும்பம் மகிழ்ச்சியைத் தராது. உங்களை எனக்குப் பிடிச்சுருக்கு. அந்த ஒரு காரணத்துக்காகத் தான் திருமணத்திற்குக் கேட்டேன்…” என்று பளிச்சென்று பதில் சொன்னான்.

அவனின் பதிலைக் கேட்டு ஏன்தான், தான் இந்தக் கேள்வி கேட்டோமோ என்று உள்ளுக்குள் நொந்து போனாள் சத்யா.

ஆனால் எதுவாக இருந்தாலும் பேசி முடிவெடுத்து விடுவதே நல்லது என்று நினைத்தவள் “எனக்கும் உங்களைப் பிடிக்கும் புகழ் சார். ஆனா வெறும் பிரண்டா மட்டும்தான்…!” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

அவனைப் பிடிக்கும் என்றதும் மலர்ந்த புகழின் முகம் நண்பனாக என்று மட்டும் சொல்லவும் விழுந்தே விட்டது.

“ப்ரண்டை தாண்டியும் யோசித்துப் பார்க்கலாமே சத்யா?”

“இல்லை புகழ் சார்…” என்று சத்யா வேகமாக மறுக்க, “இந்த இல்லை என்பதைத் தான் உடனே சொல்லாம யோசிச்சு சொல்லுங்கனு சொல்றேன் சத்யா…” அவளின் மறுப்பை அவளை விட வேகமாக இடையிட்டு நிறுத்தினான் புகழேந்தி.

அவனின் மறுப்பில் சத்யாவிற்கு ஏனோ அலுப்பாக இருந்தது. அவளுக்கு இன்றைக்கே இந்தப் பேச்சை முடித்து விட வேண்டும் என்று தோன்றியது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த விஷயத்தை இழுக்க அவளுக்கு விருப்பமே இல்லை.

அவளுக்கு இப்போது நினைவில் இருந்தவன் எல்லாம் தர்மா மட்டும் தான். வெறும் சலனம் என்பதைத் தாண்டி இப்போது புகழ் வந்து திருமணம் பற்றிப் பேசவும், அந்த இடத்திற்கு உரியவன் தர்மா மட்டுமே என்று மனம் வெளிச்சம் போட்டு காட்டிய இந்த நொடியை இன்னும் ஆராய வேண்டும் என்று அவளின் மூளை அவளைப் பிராண்டியது.

அதைப் பற்றி அசைவு போட அவளுக்குத் தனிமை வேண்டும் என்று மனது துடித்தது. புகழ் விஷயத்திற்கு முடிவு கட்டிவிட்டுச் செல்வோம் என்றால் அவன் இரண்டு நாள் ஆகட்டும் என்கிறானே என்று இருந்தது.

தர்மா பற்றி அவள் மனம் என்ன முடிவெடுக்கும் என்பதையும் தாண்டி இரண்டு நாட்கள் இல்லை. இன்னும் எத்தனை நாட்கள் ஆனாலும் அவளின் மனது புகழின் புறம் திரும்பாது என்பது மட்டும் உறுதி. அப்படி இருக்கும் போது ‘இந்தப் பேச்சை ஏன் வளர்ப்பானேன்?’ என்று தான் தோன்றியது.

அவளின் யோசனையான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த புகழுக்கு மேலும் பேசி அவளைக் குழப்ப எண்ணம் இல்லாததால் அமைதியாக இருந்தான்.

“நீங்க நினைச்சா எந்தக் குறையும் இல்லாத ஆரோக்கியமான பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணலாமே சார்? ஏன் எதுக்கும் உதவாத இந்தக் குருடியை உங்க வாழ்க்கையோட இணைச்சுக்கணும்னு நினைக்கிறீங்க? என்னால் எப்பவும் உங்களுக்குப் பாரம் வருமே தவிர, உங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது…” அவனைத் தன் வழியில் இருந்து விலக வைக்க எதார்த்தத்தைச் சொன்னாள்.

“நான் என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணைத் தான் தேடுறேனே தவிர, அந்தப் பொண்ணு உடல் குறையில்லாமல் தான் இருக்கணும்னு எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை சத்யா. அதோட உங்களை என்னைக்கும் நான் பாரமா நினைக்க மாட்டேன். கண் இல்லாம என்னென்ன சிரமங்கள் இருக்கும்னு நானும் அறிந்தவன் தான் சத்யா. நான் அந்த நிலையை அனுபவித்தது இல்லையே தவிர, நம்ம ஸ்கூலில் அனுதினமும் அத்தனை பேரை பார்க்கிறேனே சத்யா? அவங்க சிரமத்தை என்னால் உணர கூடவா முடியாது?

உங்கள் குறை எனக்குப் பொருட்டே இல்லை. அதோட இன்னொரு விஷயமும் சொல்லிடுறேன் சத்யா. இந்த முடிவை நான் ஏனோதானோனு எடுத்து சொல்லலை. நல்லா யோசிச்சு பிற்காலத்திலும் என் மனசு மாறாதுங்கிற உறுதியான முடிவு எடுத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசுறேன். அதனால என் பேச்சை மேம்போக்கா எடுத்துக்காம கொஞ்சம் நல்லா யோசிச்சு அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க சத்யா…” என்று ஒவ்வொரு சொல்லிலும் அவனின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாகப் பேசினான் புகழேந்தி.

அவன் பேசியதை கேட்டதும் ‘அய்யோ!’ என்று சத்யாவின் மனது அலறியது. அதோடு அவனிடம் இவ்வளவு உறுதியை எதிர்பார்க்காதவள் திண்டாடி போனாள். இப்படிப் பேசுபவனை எப்படிச் சரிக்கட்ட என்று புரியாமல் குழம்பிப் போனாள்.

ஒரு நிலையில் தனக்குள்ளேயே குழம்பி தவித்து வெளியில் வந்த சத்யா “உங்களுக்கு இப்போ நான் என்ன பதில் சொல்றதுன்னு கூட எனக்குத் தெரியலை புகழ் சார். நீங்க சொன்ன மாதிரி இரண்டு நாள் ஆகட்டும். ஆனா என் முடிவு என்னவாக இருந்தாலும் நீங்க ஏத்துக்கணும். என் மனசும், என் முடிவும் மாறாதுன்னு எனக்கு உறுதியா தெரியும். ஆனாலும் இந்த இரண்டு நாள் உங்களுக்கும் டைம் சார். உங்க மனசை மாத்திக்க இந்த நாளில் முயற்சி பண்ணுங்க…” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் இருக்கையில் இருந்து எழுந்தாள்.

கூடவே எழுந்த புகழ் ‘என் முடிவிலும் மாற்றம் இல்லை சத்யா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.

கடையை விட்டு வெளியே வந்ததும் “இனி நானே போய்க்கிறேன் புகழ் சார்…” என்று அவனிடம் அங்கேயே விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிற்கு‌ உதவி கோலின் உதவியுடன் சீராக நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மனம் கனத்துப் போயிருந்தது.

தெளிந்த நீரோடை போல அமைதியாகச் சென்று கொண்டிருந்த தன் வாழ்வில் கடந்த சில நாட்களாகக் கல்லை விட்டெரிந்தது போலக் கலங்கி போய் இருப்பதாக நினைத்தவளின் மனமும் அதே போல் கலங்கி தவித்துக் கொண்டு தான் இருந்தது.

தன் மனம் எதை நோக்கி பயணிக்கின்றது? தானாகத் தேடி வந்த சம்பந்தத்தை இரண்டாம் தாரம் என்று சொல்லி தட்டிக் கழித்து நிறுத்தியவள் அவள்தான்.

பின்பு தர்மாவை நினைத்து சில நாட்களாகக் குழம்பித் தவித்தாள்.

வீட்டினரின் விடாத கேள்வியில் இருந்து தப்பிக்க அதிலிருந்து வெளியே வந்ததாகக் காட்டிக்கொண்டு சாதாரணமாக நடக்கத் தொடங்கி அமைதியாகச் சில நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அந்த அமைதியையும் குலைக்கும் வகையில் இன்றைய புகழின் பேச்சின் மூலம் தன் மனம் தர்மாவை விரும்ப ஆரம்பித்து விட்டது என்பதை உறுதியாக அறிந்து கொண்டாள்.

அதேநேரம் புகழின் உறுதியையும் கண்டு கலங்கிப் போயிருந்தாள்.

அதோடு தர்மாவை பற்றிய தன் எண்ணம் போகும் பாதை சரிதானா? இப்போது புகழை தான் நண்பனாக நினைத்துக் கொண்டிருப்பது போலத் தானே தர்மாவும் தன்னை நினைத்துக் கொண்டிருப்பார்?

நண்பனான புகழை எப்படி அவளால் சொந்த வாழ்க்கையோடு இணைத்து யோசிக்க முடியவில்லையோ அதைப் போல் தானே தர்மாவிற்கும் தன்னை ஏற்க முடியாமல் போகும்?

தான் இப்போது புகழை நிராகரிப்பது போல் நாளை தர்மாவும் என்னை நிராகரிப்பாரோ? அப்படி அவர் நிராகரித்தால் அதைத் தாங்கும் சக்தி தனக்கு இருக்குமா? அவன் நிராகரிப்பானோ என்று நினைத்துப் பார்த்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமா? என்று தன்னையே தாழ்ந்தவளாக நினைத்துக் கொண்டாள்.

தன் குறையை ஏற்றுக் கொண்டு பழகி கொண்டவளுக்குத் திருமண வாழ்க்கை என்ற அத்தியாயத்தை நெருங்கும் போது அந்தக் குறையே அவளுக்குப் பூதாகரமாகத் தெரிந்தது. அதுவே அவளையே தாழ்த்திக் கொள்ளத் தூண்டியது.

அதே போல் புகழ், தர்மா இருவரின் நட்பு நிலையை வைத்து ஒப்பிட்டு பார்த்து குழம்பினாளே தவிர இருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிச் சத்யா ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

தர்மாவின் கால் ஊனத்தை அவளின் மனது நினைத்துப் பார்க்கவே இல்லை. அதனால் தான் அவனை விரும்புவது அதிகப்படி என்று நினைத்துக் கொண்டாள்.

தர்மாவை பற்றி நினைத்ததுமே அவனின் வாசனையை நுகர வேண்டும், அவனின் குரலை கேட்க வேண்டும் என்று சத்யாவின் மனம் ஆவலுடன் துடிக்க ஆரம்பித்தது.

அவனை மறுபடி சந்திக்கும் போது தன்னால் தடுமாறாமல் பேச முடியுமா? என்று அவளின் சிந்தனைப் போனது.

இப்படியே ஏதேதோ நினைத்து மனதில் போட்டு குழம்பி கொண்டே நடந்து கொண்டிருந்தவளுக்கு நடையில் சிறிது நிதானம் தப்பியது.

நடைபாதையில் நிதானமாக நடந்து கொண்டிருந்தாலும் யோசனையுடன் நடந்ததால் அவள் எப்போதும் நடக்கும் அந்தப் பாதையில் புதிதாக முளைத்த கல்லை கவனிக்க முடியாமல் போனாள்.

எந்தப் புண்ணியவானோ நடை பாதையில் ஒரு பெரிய கல்லை போட்டு வைத்திருக்க, அது சத்யாவிற்கு வினையாக வந்து முடிந்தது.

அவளின் உதவிகோலை வைத்து எப்பொழுதும் முன்னால் என்ன இருக்கின்றது என்று அனுமானித்து விட்டு அடுத்தக் காலடியை எடுத்து வைப்பவள் அன்று யோசனையில் அவளின் கவனம் சிறிது பிசக்கியிருக்க, அந்தக்கல்லில் கால் இடித்துக் கொண்டதில் தலைக்குப்புற முன்னால் விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் அவளின் கை எசக்குபிசக்காக மடங்க, கையில் மடக்கென்று எலும்பு முறியும் சத்தம் கேட்க, அது கொடுத்த வலி தாங்க முடியாமல் “அம்மா..மா..மா…” என்று அலறினாள் சத்யவேணி.