12 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்– 12

வினய் தன் மகனை காணொளியில் பார்க்கும் சந்தோஷத்துடனும், பவ்யாவின் மேல் வளர்த்துக் கொண்ட கோபத்துடனும் நாட்களைக் கடக்கப் பழகிக் கொண்டான்.

ஷீலு ‘தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்பற்ற தன்மை’ பற்றிச் சொன்னது வேறு அவ்வப்போது அவன் மனதை அழுத்திக் கொண்டுத்தான் இருந்தது.

ஆனால் அப்பா அவரின் மருமகளை அப்படிப் பாதுகாப்பு இல்லாமல் விட்டு விட மாட்டார் என்று ஏதோ நம்பிக்கை அவனை அதிகம் மாற விடவில்லை.

அதனால் எப்போதும் போல அவனின் நாட்கள் அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது.

மாதங்கள் கடந்த நிலையில் அன்று ரிதேஷ் வீட்டில் இருந்தான் வினய். அவன் அங்கே வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருக்க, உள்ளே படுக்கையறையில் இருந்து ரிதேஷும், ஷீலுவும் பேசும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“என்னால முடியல ரிஷி. ரொம்ப வலிக்குது. ஹாஸ்பிட்டல் போயிரலாம்” என்று ஷீலு பிரசவ வலி தாங்காமல் கணவனிடம் கெஞ்சல் குரலில் வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

“ஷீலும்மா கொஞ்சம் பொருத்துக்கோடா… பெயின் இண்டர்வெல்ல டைமிங் பண்ண சொன்னாங்கள்ள? இப்போ அதைத் தான் நோட் பண்றேன். இன்னும் ஹாஸ்பிடல்ல அவங்க சொன்ன ரேஞ்சுக்கு வரலை. ப்ளீஸ் டா…”

மனைவியின் கையை இறுக்கமாக பற்றி அழுத்திக் கொடுத்த ரிதேஷ் உள்ளுக்குள் பதற்றமாகத் தான் இருந்தான். அவளின் வலியும் துடிப்பும் இவனையும் தாக்கி வேதனை கொள்ளச் செய்தது. ஆனால் என்ன செய்வது?

முதல் பிரசவமும், உடன் வேறு துணை இல்லாததும் இருவரையும் லேசான பதட்டத்தில் வைத்திருந்தது. ஷீலுவின் அம்மா வருவதாக இருந்து விசா இழுப்படியில் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சொன்ன தேதிக்கு முன் பிரசவ வலி வந்து விட்டிருந்தது. நம் ஊர் போல அங்குக் கிடையாது. குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒரு முறை வலி வருமாயின் தான் மருத்துவமனைக்கு வரச் சொல்வார்கள்.

இதை ஏற்கெனவே அறிந்திருந்தாலும் ரிதேஷ் சில நிமிடங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்திருந்தான். மனைவி படும் பாட்டை அவனால் தாங்க முடியவில்லை.

நார்மல் டெலிவரியாகத் தான் இருக்கும்… வேறு சிக்கல்கள் ஏதும் தெரியவில்லை எனத் தங்கள் கடைசி மருத்துவ ஆலோசனையின் போது மகப்பேறு மருத்துவர் சொல்லி இருந்தார். அதனால் தற்போது வலி கூடுவதற்காகக் காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அமெரிக்க மருத்துவமனைகளில் இயற்கையாக நடக்கும் பிரசவங்களில், குழந்தைக்கும் அன்னைக்கும் வேறு பிரச்சனைகள் இல்லை எனும் போது ஒரு நாள் இரவு கண்காணிப்பில் வைத்து விட்டு மறுநாள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

செயற்கை முறையில் நடக்கும் பிரசவத்திற்கு மூன்று நாட்கள் வரை மருத்துவமனையில் வைத்திருப்பார்கள். இதெல்லாம் பேஷண்ட்ஸின் மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் பொருத்தது. ஆனால், மிகச் சிறப்பான வகையில் மருத்துவக் கவனிப்பு இருக்கும். மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்படுவார்கள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ரிதேஷ் மனைவியின் வலியின் இடைவெளியைப் பதிவு செய்வதிலும், அவளை ஆதரவாக முதுகை வருடிக் கொடுத்து, அருகில் வைத்திருந்த தண்ணீர், பழச்சாறு எனத் தந்து நேரத்தைக் கடத்தினான். அவனின் மனதில் ஆன்ட்டி வரும் வரை மருத்துவமனையில் இருந்து விட்டால் பிறகு அவரின் துணை இருக்கும் என ஓடிக் கொண்டிருந்தது.

வெளியே அமர்ந்திருந்த வினய்க்கு ஷீலுவின் வலியின் குரலும் கேட்டது. ரிதேஷின் சமாதானக் குரலும் கேட்டது. அவர்களின் உரையாடல் ஹிந்தியில் தான் இருந்தது. ஆனாலும் அவனால் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

அவனை வரச் சொன்னது ரிதேஷ் தான். பெரியவர்கள் யாரும் அருகில் இல்லாத இந்த நேரத்தில், தன் நண்பனாவது அருகில் இருந்தால் தனக்கு ஒரு பலமாக இருக்கும். அதோடு மருத்துவமனைக்கு ஷீலுவை அழைத்துச் செல்ல வினய்யின் உதவியும் இருந்தால் நல்லது என்று தான் வர வைத்திருந்தான்.

ஆனால் இப்போது அவனை வரச் சொன்னதையே மறந்தவனாக மனைவியின் வலியைத் தன் வலியாக நினைத்து, அவனின் ஷீலுவை தவிர எதுவும் ஞாபகம் இல்லாதவனாக இருந்தான். ஷீலு வலி வரும் போதெல்லாம் பல்லை கடித்து வலியைப் பொருத்தபடி ரிதேஷ் கையைப் பிடித்து மெல்ல நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நடந்து ஹாலின் பக்கம் வந்தாள்.

அவளுடனே வந்த ரிதேஷ் அப்போது தான் வினய்யைப் பார்த்தான். அவனைக் கண்டதும் தான் எதற்கு வரச் சொன்னோம் என்று நினைவிற்கு வந்தது.

“ஸாரி வினய்… உன்னை வரச் சொன்னதையே மறந்துட்டேன். ஷீலுக்கு வலியைத்‍ தாங்க முடியலை அதான்…” என்று நண்பனுக்கு விளக்கம் சொன்னான்.

புரிந்தது என்னும் விதமாய் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான் வினய். தன் எதிரே நின்றிருந்த ஷீலுவின் வலி தாங்கிய முகமும், அதற்குச் சற்றும் குறையாத முகப் பாவத்துடன் இருந்த ரிதேஷின் முகத்தையும் பார்த்தவனுக்கு வார்த்தையே வரவில்லை.

அவனைப் பார்த்த ஷீலு “அண்ணாவுக்கு குடிக்க…” என்று ரிஷியிடம் முணங்கல் குரலில் சொன்னாள்.

ரிதேஷுக்கும் நண்பனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் மனைவியைத் தனியாக நடக்க விட்டுச் செல்ல தயங்க, அந்த வலியிலும் கணவனைச் செல்லமாக முறைத்தாள் மனையாள்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வினய் இருக்கையை விட்டு எழுந்தான். அங்கே இருந்த சாப்பாட்டு மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகியவன் “போதுமா…? இந்த நேரத்திலும் உன் கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?” என்று ஷீலுவை விளையாட்டாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு ஒரு வலி வர “ஆ…!” என்று சத்தமாகக் கத்திவிட்டாள்.

இதற்கு முன் இல்லாத வகையில் வந்த அவளின் கத்தலில் “ஐயோ…! என்னடா…?” என்று ரிதேஷ் பதறிப் போக, அவளின் கத்தலில் பயந்து போன வினய்யின் முகமும் வெளுத்து, “ஹாஸ்பிட்டல் போய்ரலாமே ரிதேஷ்…?” என்று பதறினான்.

ரிதேஷுக்கும் அதுதான் சரி என்று தோன்ற “போகலாம்டா ஷீலு. இப்போ கிளம்பினா சரியா இருக்கும்” என்று கிளம்பினார்கள்.

வினய் காரை ஓட்ட, ரிதேஷ் மனைவியைத் தன் கைத் தாங்கலில் வைத்துச் சமாதானம் செய்தப் படி வந்தான்.

விரைவில் மருத்துவமனை வந்துவிட ஷீலுவை மெதுவாகக் காரில் இருந்து இறக்கி விட்ட ரிதேஷ், “காரை பார்க் பண்ணிட்டு வா வினய்!” என்றவன் உள்ளே மனைவியை அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றதும் முதலில் ஷீலுவிற்கான மருத்துவ உதவி ஆரம்பிக்கப்பட்டது.

பிரசவ நேரத்தில் அங்கே கணவனும் உடன் இருக்கலாம் என்பதால், ரிதேஷும் உள்ளே செல்லத் தயாராக இருந்தான். அப்போது வினய்யும் அங்கே வர ரிதேஷ் நண்பனின் கையை இறுக பற்றிக் கொண்டான்.

தன் கையில் இருந்த நண்பனின் கை நடுங்குவதை உணர்ந்த வினய் அவனை வியப்பாகப் பார்த்தான்.

ரிதேஷை ஜாலியான ஆளாகத் தான் இதுவரை வினய் பார்த்திருக்கின்றான். இப்போது அவன் இப்படி நடுங்குவது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

நண்பனை ஆச்சரியமாகப் பார்த்தாலும் அவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அவன் தோளைச் சுற்றி கைப் போட்டு “ரிலாக்ஸ் ரிதேஷ்…” என்று தோளை அழுத்திக் கொடுத்தான்.

வினய்யின் முகத்தைப் பார்த்த ரிதேஷ் அவனின் ஆறுதலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையசைத்தவன், “என் குழந்தை வரப் போவதை நினைச்சு ஹேப்பியாவும் இருக்கு. அதை விட ஷீலு வலியில் துடிக்கிறது என்னையும் துடிக்க வைக்குது” என்று குரல் கரகரக்கச் சொன்ன ரிதேஷ் லேசாகக் கலங்கி இருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்த நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது கூடத் தெரியாமல் முழித்த வினய் அவனின் தோளை மட்டும் அழுத்திக் கொடுத்த படி நின்றான்.

சிறிது நேரத்தில் ரிதேஷ் பிரசவ அறைக்கு அழைக்கப்பட உள்ளே சென்றான்.

வெளியில் காத்திருந்த வினய்க்கு ‘ஷீலுக்கு வலி வந்து விட்டது. நீ இங்கே வந்தா எனக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும்’ என்று ரிதேஷ் அவனின் வீட்டிற்கு வரச் சொன்னதில் இருந்து, இங்கே பிரசவ அறைக்கு ரிதேஷ் நுழைந்தது வரை நடந்தவை எல்லாம் மனக் கண்ணில் உலாப் போனது.

ஷீலு வலியால் பட்ட கஷ்டமும், அதனைத் தாங்க முடியாமல் கண்கலங்க நின்ற நண்பனின் உணர்வுகளும், வினய்யின் மனதை பலமாகத் தாக்கியிருந்தன.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவனுக்கு அந்த உணர்வுகள் புதுமையானவை. இதற்கு முன் வினய் அறியாத உணர்வுகள். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர்கல்வி கற்க அமெரிக்கா வந்துவிட்டான்.

கல்லூரி காலங்களில் அவன் கண்டது எல்லாம் படிப்பு, நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல் என்று மட்டுமே இருந்தவன், படிப்பு முடிந்ததும், திருமணம், பின்பு பிரிவு என்று நாட்கள் சென்று விட்டன.

கல்லூரி கால நண்பர்கள் இப்போதும் வெறும் போன் தொடர்பில் மட்டுமே இருந்தார்கள். மனைவியைப் பிரிந்து வந்த பிறகு யாரோடும் ஒட்டத் தோன்றாமல், தனக்கு என்று ஒரு தனித் தீவு போல அமைத்துக் கொண்டு வேலை, மது, ஊர் சுற்றல் என்று மட்டும் இருந்தவனைத் தன் நட்பால் ஈர்த்தவன் தான் ரிதேஷ்.

அவனால் ஷீலுவும் நல்ல தோழியாக அவனுக்குக் கிடைக்க, வேறு நண்பர்கள் பற்றி அவன் நினைத்துப் பார்த்ததும் இல்லை. நினைத்துப் பார்க்க அவனுக்கு விருப்பமும் இல்லாமல் போது தான் விந்தையிலும் விந்தை.

ரிதேஷின் அறிமுகத்திற்குப் பிறகு தன் அன்றாட வேலைகளுடன், கணவன், மனைவி இருவரின் நட்பும், அவன் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.

உலக நியதியான ஆண், பெண் உறவு… குழந்தை பிறப்பு என எல்லாம் அறிந்தவன் தான். ஆண், பெண் உறவில் அவன் அறிந்ததை அனுபவித்தும் இருக்கின்றான். ஆனால் அதன் பின்னான குழந்தை பிறப்பு பற்றி வெறும் கேள்வி ஞானம் மட்டுமே அவன் அறிந்தது.

கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளும் அவன் அறிந்ததில்லை. அந்தக் காலத்தில் ஆணும் தாயுமானவனாக மாறிப்போவதையும் அவன் உணர்ந்தது இல்லை.

கேள்வி ஞானம் வேறு. உயிருடன் ஊடுருவி அந்த உணர்வுகளை உணர்வது என்பது வேறு.

இன்று தன் தோழமை தம்பதிகள் மூலம் அவன் கண்ட உணர்வுகள் அவனின் உணர்வுகளைத் தூண்டி அவனை அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

தன்னை அசைத்துப் பார்த்த உணர்வுகளை அசைப் போட்டபடி நேரம் கடப்பது கூடத் தெரியாமல் வினய் அமர்ந்திருக்க, பூரிப்பை தாங்கிய முகப் பாவத்துடன் வெளியே வந்தான் ரிதேஷ்.

வினய்யின் அருகில் வந்த ரிதேஷ் அமர்ந்திருந்த நண்பனை எழுப்பி இறுக அணைத்துக் கொண்டான்.

யோசனையில் இருந்த வினய் நொடி பொழுதில் நடந்தது அறியாமல் விழிக்க, “ஐயாம் வெரி வெரி ஹேப்பி வினய்!” என்று தன் மகிழ்வை நண்பனிடம் பகிர்ந்து கொண்டான்.

தானும் திரும்ப அணைத்த வினய் “என்ன குழந்தை ரிதேஷ்? ஷீலு எப்படி இருக்கா?” என்று விசாரித்தான்.

“பாய் சைல்ட். ஷீலு இஸ் ஃபைன்” என்று பதில் சொன்ன ரிதேஷ். அவனை விட்டு தள்ளிப் போய் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் தன் முகத்தை மூடி ஆழ்ந்த மூச்சு ஒன்றை வெளியிட்டவன், தன் அருகில் வந்து அமர்ந்த வினய்யை பார்த்துச் சிரித்தவன் கண்கள் கலங்கி இருந்தது.

வினய்யின் கண்கள் நண்பனின் உணர்வுகளைத் தான் படம்பிடித்துக் கொண்டிருந்தன.

ரிதேஷின் சிரிப்புடன் சேர்ந்த கண் கலங்கல் அவனை ஏதோ செய்ய “என்னாச்சு ரிதேஷ்? அப்பா ஆகிட்ட ஹேப்பி தானே? இப்போ ஏன் உன் கண்ணு எல்லாம் கலங்கியிருக்கு?” என்று கேட்டவனைப் பார்த்து, அதே சிரிப்பை வெளியிட்டான் ரிதேஷ்.

வினய் அவனை இன்னும் புரியாமல் பார்க்க, “வார்த்தையில் விளக்க முடியா நிமிடங்கள் வினய். ஒரு ஆணின் நிமிட நேர உணர்ச்சிக்கு பிறகு பலனாய் கிடைக்கும் குழந்தை செல்வம். அதை ஒரு பெண் தாங்கும் நொடியில் இருந்து, அதை ஒரு முழு உயிராகக் கையில் ஏந்தும் வரைக்கும், அவள் படும் கஷ்டங்கள், அவஸ்தைகள் எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்துத் தவிக்கும் ஆணின் மனநிலை எல்லாமே, பொக்கிஷமான நாட்கள் வினய்.

குழந்தை வரப் போவதை நினைத்துச் சந்தோஷமாகவும் இருக்கும்… மனைவி படும் அவஸ்தையைப் பார்த்து வருத்தமாகவும் இருக்கும். அந்த நிலையை எல்லாம் கடந்து இப்போ என் மகனை பார்த்து, அவனைக் கையில் ஏந்திய நொடி, ஹப்பா…! இப்போ எப்படி இருக்கு தெரியுமா…?” என்று மேலும் சொல்ல முடியாமல் உடல் சிலிர்த்து தான் தந்தையாக மாறிய நிலையை ரிதேஷ் மெய் மறந்து சொல்லிக் கொண்டிருக்க…

அந்தச் சந்தோஷத்தில் தானும் இணைந்துக் கொண்டவன் போல மோன நிலையில் ரிதேஷின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் வினய்.

பின்பு சிறிது நேரம் நண்பர்கள் அவரவர் சிந்தனையில் இருக்க, அதனை முதலில் கலைத்த வினய் “குழந்தையை எப்போ பார்க்கலாம் ரிதேஷ்?” என்று கேட்டவனின் குரலில் அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்க்கும் ஆர்வம் மிளிர்ந்தது.

“இதோ கொஞ்ச நேரத்தில் பார்க்கலாம் வினய்…” என்றான்.

அதே போல் சிறிது நேரத்தில் ஷீலுவையும், குழந்தையையும் பார்க்க அனுமதி கிடைக்க, இருவரும் உள்ளே சென்றார்கள்.

உள்ளே சென்ற ரிதேஷ் முதலில் மனைவியின் அருகில் செல்ல, செவிலியின் கையில் பஞ்சு பொதி போல முகம் மட்டும் வெளியே தெரிய, கழுத்தில் இருந்து கால் வரை முழுமையாகச் சுருட்டி வைத்து தன் கைகளில் பாந்தமாகக் குழந்தையை வைத்திருந்ததைப் பார்த்து வினய்யின் கண்கள் ஒளிர்ந்தது.

குழந்தையைப் பார்க்க பார்க்க வினய்யின் உடலும், மனமும் பரபரத்துப் போனது.

தான் கண்ட மகனின் காணொளி கண்ணின் முன் காட்சிகளாக விரிந்தது. கணினி வழியாகத் தன் பிள்ளையைத் தொட முயன்று தோற்று போன வினய் இப்போது நண்பனின் குழந்தையைத் தொட முயன்றான்.

அதற்குள் பிள்ளையிடம் வந்த ரிதேஷ் நண்பனின் பரபரப்பை பார்த்து “என்ன வினய் குழந்தையைத் தூக்கணுமா?” என்று வினவ, வினய்யின் தலை மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போலத் தன்னால் ஆடியது.

வினய் கையை நீட்டியதிலும், ரிதேஷ் கேட்ட கேள்வியையும் கவனித்த செவிலி குழந்தையை வினய்யிடம் கொடுத்தாள்.

குழந்தையைக் கையில் ஏந்திய வினய்யின் கைகள் அவன் அறியாமலேயே நடுங்க ஆரம்பித்தது. உடலிலும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு சிலிர்ப்பு ஓடி செல்ல, உடலை லேசாகச் சிலிர்த்துக் கொண்டான்.

அவனின் அருகில் இருந்த ரிதேஷிற்கு ஏதோ வித்தியாசமாகத் தோன்ற, வினய்யின் முகத்தைப் பார்த்தான்.

வினய்யின் முகத்தில் இதுவரை காணாத உணர்ச்சிகளைக் கண்ட ரிதேஷின் கண்கள் வியப்பாக உயர்ந்தது.

மெல்ல அவனின் தோளில் கைவைத்து “வினய்…?” என்று அழைக்க, கனவில் இருந்து வெளியே வந்தவன் போல “ஹா…!” என்று பட்டென விழித்தான்.

“என்ன வினய்… என்னாச்சு? எப்படி இருக்கான் என் மகன்?” என்ற ரிதேஷின் கேள்வியில் இதுவரை ஏதோ உணர்வில் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த வினய் இன்னும் அந்த முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

குழந்தையின் முகத்தைப் பார்த்தவன் கண்கள் வியப்பாக விரிந்தன. ரோஸ் நிறத்தில் தன் குட்டி கண்களை இறுக மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தான் ஜூனியர் ரிதேஷ்.

ரிதேஷ், ஷீலு இருவருமே வட மாநிலத்தவர் என்பதால் அவர்கள் இருவருமே நல்ல மாநிறம் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளை இருவரின் நிறத்தையும் ஒன்றாக வாங்கி வந்தவன் போல அத்தனை நிறமாக இருந்தான்.

“குழந்தை ரொம்ப அழகா இருக்கான் ரிதேஷ்!” என்று வினய் வியப்புடன் சொல்ல… “என் பிள்ளையாக்கும்!” என்று பெருமையாகத் தன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

அவனின் பெருமையை எல்லாம் வினய் கண்டு கொள்ளவே இல்லை. அவன் கவனம் எல்லாம் குழந்தையின் மீது மட்டுமே இருந்தது.

சில நொடிகளில் குழந்தை சிணுங்க ஆரம்பிக்க, செவிலி குழந்தையை வாங்கிக் கொண்டார்.

பிள்ளையை இன்னும் சிறிது நேரம் வைத்துக் கொள்ள வினய்யின் மனம் விரும்பியது.

இதுவரை எந்தக் கைக்குழந்தையையும் அவன் தூக்கியதில்லை. தன் குழந்தையைத் தூக்க வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவற விட்டிருந்தான்.

ரிதேஷின் குழந்தையைத் தூக்கியது அவனைப் பரவசமடையச் செய்திருந்தது.

குழந்தை இன்னும் தொடர்ந்து அழ, அதை அன்னையிடம் கொடுக்க வேண்டியது இருந்ததால், செவிலி ஷீலுவிடம் செல்ல, அதை உணர்ந்து வினய் தோழியிடம் நலம் விசாரித்து விட்டு வீட்டிற்குச் செல்ல அழைத்துப் போக வருகிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

சொன்னது போலவே மறுநாள் சரியாக அவர்களை அழைத்துச் செல்ல வந்தான் வினய்.

டிஸ்சார்ஜ் ஆனதும் மனைவி குழந்தையைக் காருக்கு அழைத்து வந்த ரிதேஷ் “குழந்தையைப் பிடி வினய்! நான் ஷீலு காரில் உட்கார ஹெல்ப் பண்ணிட்டு வாங்கிக்கிறேன்” என்றவன் அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் பஞ்சு போலான துணியில் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை நண்பனிடம் நீட்ட, வினய்யின் கைகள் தன்னால் உயர்ந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டது.

ரிதேஷ் அவனைக் காரிலேயே காத்திரு… நாங்கள் இப்போது வந்து விடுவோம் என்று சொல்லவும், காத்திருந்த வினய்க்கு நண்பன் கையில் குழந்தையைப் பார்க்கவுமே மனம் நேற்று போலப் பரபரத்துப் போனது.

இப்போது அவனே தன் கையில் குழந்தையைக் கொடுக்கவும், ஆர்வம் கண்ணில் மின்ன அணைவாக வாங்கிக் கொண்டான்.

அதைக் காரில் உள்ளே இருந்து கண்ட ஷீலு திரும்பி கணவனை அர்த்தத்துடன் பார்த்தாள்.

அவனும் இப்போது ஷீலுவிற்குத் தான் கண்களால் ஏதோ செய்தி சொல்லிக் கொண்டிருந்தான்.

மனைவிக்குச் செய்தி சொல்லிவிட்டு வினய்யின் புறம் திரும்பிய ரிதேஷ், “குழந்தையைக் கொடு வினய்! வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி குழந்தையைத் தன் கையில் வாங்க கை நீட்ட, மனமே இல்லாமல் குழந்தையைத் தகப்பனிடம் கொடுத்துவிட்டு காரை கிளப்பினான் வினய்.

வீடு வந்ததும் காரை நிறுத்தி ரிதேஷின் பக்கம் வந்து “நீ ஷீலுவுக்கு ஹெல்ப் பண்ணு” என்று சொல்லி முதல் ஆளாகக் குழந்தையை வாங்கிக் கொண்டான் வினய்.

அவனின் ஆர்வத்தைப் பார்த்து மலைத்தே போனான் ரிதேஷ்.

கதவை திறந்து மனைவியை உள்ளே அழைத்துச் சென்று தங்கள் படுக்கையறையில் விட்டவன், குழந்தையை வாங்க வெளியே வர, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அந்தப் புத்தம் புதிய முகத்தைத் தன் விரலைக் கொண்டு வருடிக் கொண்டிருந்தான் வினய்.

நண்பனின் செயலைப் பார்த்துக் கொண்டே அருகில் வந்த ரிதேஷ் அவனின் அருகில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்து அமர்ந்ததைக் கூட உணராமல் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும், “உன்னோட மகன் பிறந்தப்பவும் இப்படித்தான் அழகா இருந்திருப்பான்ல வினய்?” என்று மெல்ல கேட்டான்.

“ஹா…! என்ன…?” என்று வேகமாகத் தலையை உயர்த்தி வினய் கேட்கவும், திரும்பி அதே கேள்வியை ரிதேஷ் கேட்க…

“ஹ்ம்ம்…! இப்படித் தான் இருந்தான்” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான். அவனின் பதில் ரிதேஷுக்கு ஆச்சரியத்தைத் தர, “என்ன சொல்ற வினய்? நீ நேரில் இன்னும் பார்க்கவே இல்லைனு சொன்ன. அப்படி இருக்கும் போது அவன் பிறந்தப்ப எப்படி இருந்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று அதிர்வாய் கேட்டான்.

அவனுக்கு இன்னும் அந்தக் காணொளி விஷயத்தை வினய் சொல்லிருக்கவில்லை. இப்போதும் சொல்ல மனம் ஏதோ தடை விதிக்க “என் மகன் என்னைப் போல அழகா தானே இருப்பான். அதை வச்சு சொன்னேன்” என்று அப்போது ரிதேஷ் சொன்னதை வைத்தே பதிலை சொல்லி மழுப்பியவன் மீண்டும் குழந்தையின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

நண்பனின் மழுப்பலை நம்ப முடியாமல் அவனையே ரிதேஷ் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்க… குட்டி ரிதேஷ் கண்ணைத் திறக்க முயற்சி செய்து கொண்டே பசியில் அழ ஆரம்பித்தான்.

அவனின் அந்த அழுகை கூட வினய்க்கு ரசனையாகத் தெரிய, தகப்பன் பிள்ளையின் அழுகையில் பதறி போய் அவனைத் தூக்கிக்கொண்டான்.

“குட்டிக்கு பசிக்குது வினய். நான் போய் ஷீலுகிட்ட கொடுத்துட்டு வர்றேன்” என்று அங்கிருந்து செல்லப் போக… புரிந்து கொண்ட வினய்யும் “அப்போ நான் கிளம்புறேன் ரிதேஷ். அப்புறம் வர்றேன். ஷீலுகிட்ட சொல்லிரு” என்றுவிட்டு அங்கிருந்து ஏற்கனவே அங்கே நிறுத்தி வைத்திருந்த தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

வினய்யை அனுப்பி விட்டு மகனை உள்ளே தூக்கிச் சென்று படுத்திருந்த ஷீலுவை எழுப்பிக் குழந்தையைக் கொடுத்து, குழந்தை பசியாறியதும் வாங்கி மகனுக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தொட்டிலில் சென்று படுக்க வைத்து விட்டு ஷீலுவிடம் வந்தவன், “கவனிச்சியா ஷீலுமா?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்… கவனிச்சேன் ரிஷி. கல்லு உருக ஆரம்பிச்சுருச்சு போல?” என்று கேட்டாள்.

“இல்லடா ஆரம்பிக்கலை. முழுசா உருகிருச்சு” என்றான் ரிதேஷ்.

அவன் பதிலை கேட்டு “ஹே…! நிஜமாவா ரிஷி…?” என்று ஷீலு சத்தமாக ஆர்ப்பரிக்க…

“ஆமா ஷீலுமா. அப்படித் தான் தெரியுது” என்றான்.

“வாவ்…! சூப்பர்…! அப்போ சீக்கிரம் இது நடக்கும்னு சொல்லுங்க” என்றவள் கையை விமானம் பறப்பது போலச் செய்து காட்டினாள்.

மேலும் தம்பதிகள் வினய்யின் மாற்றத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்க… அங்கே காரில் சென்று கொண்டிருந்த வினய் தன் மகன் ஞாபகத்தில் மூழ்கியப் படி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

அப்படிச் செல்லும் போது இடையில் ஒரு பூங்கா வர, தன் நினைவுகளை இன்னும் நிதானமாக அசைப் போடுவதற்கு ஏதுவாக அங்கே செல்ல முடிவெடுத்து, காரை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே செல்ல பார்க்கிங்கில் இருந்து சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதே தன் கைப்பேசியைக் கையில் எடுத்தவன் அதில் இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தப் படியே சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்தான்.

அவன் கவனம் எல்லாம் கைபேசியில் இருந்த புகைப்படத்தில் இருக்க, அவனைச் சுற்றி நடக்க ஆரம்பித்த விபரீதத்தை அவன் உணரவே இல்லை.

கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த வினய்யின் கையை விட்டு அது திடீரெனத் தவறி விழுந்தது.

‘ஐயோ போன் உடைய போகுதோ?’ என்று பதறிப் போய்ப் போனை எடுக்க அவன் குனியும் முன் அவன் மேல் தடார் என விழுந்தான் ஒரு ஆள்.

அந்த ஆள் அவன் மேல் விழுந்ததில் வினய்யும் தலை குப்புற விழுந்தவன், சில நொடியில் மயக்க நிலைக்குச் சென்றான்.

என்ன நடந்தது என்று அவனுக்குக் கிச்சித்தும் புரியவேயில்லை. அவன் முதுகில் ரத்தத்தை உணர முடிந்தது. என்ன நடந்தது என்று அறிந்தே ஆக வேண்டும் என்று மயக்கத்திற்குச் சென்ற கண்களைக் கஷ்டப்பட்டு திறந்து தன்னைச் சுற்றிலும் பார்த்தான்.

அந்தச் சாலை முழுவதும் ஒரே கலவரம் போல மக்கள் அலறி ஓடினார்கள். சிலர் கதறி அழும் சத்தம் கேட்டது. ‘என்னாச்சு? ஏன் இந்தக் கலவரம்?’ என்று ஆராய வினய் முயல, யாரோ ஆங்கிலத்தில் பேசியது காதில் விழுந்தது.

எவனோ மனம் பிறழ்ந்தவன் சாலையில் சென்று கொண்டே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றான் என்னும் செய்தி வினய்க்கு முழுதாகத் தெரிய வந்த போது அவன் முழு மயக்கத்திற்குச் சென்றிருந்தான்.

வினய் இங்கே உயிர் ஆபத்தில் மாட்டிக் கொள்ள… அங்கே அவனின் மனைவி பவ்யா மானத்திற்குப் போராடிக் கொண்டிருந்தாள்.

“டேய்…! என்னை விடுடா நாயே…!” என்று அந்தக் கயவனிடம் மாட்டிக் கொண்டு புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள் பவ்யா.