11 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 11

“என்ன சத்யா… விழா ஏற்பாடு எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்ட தலைமையாசிரியரிடம் “நல்லா போயிட்டு இருக்கு மேடம். நாடகம் ஒத்திகை ஆரம்பிச்சுட்டோம்…” என்று பதிலளித்தாள் சத்யவேணி.

“பசங்க எப்படிப் பண்றாங்க?”

“சூப்பரா பண்றாங்க மேடம். நீங்களே பாருங்க…” என்று குழந்தைகள் இருந்த புறம் கையைக் காட்டினாள்.

சிறுவரும் சிறுமியருமாக ஏழு வயதில் இருந்து பன்னிரெண்டு வயதிலான பார்வையற்ற குழந்தைகள் அரைவட்டமாக நின்றிருந்தனர். நடுவில் சத்யா நின்றிருந்தாள்.

பள்ளியின் ஆண்டு விழா வருவதால் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சி இன்னும் பத்து நாட்களில் நடப்பதாக இருந்தது.

பார்வையற்ற பிள்ளைகளால் என்ன முடியும்? என்று ஒதுக்கி வைக்காமல் அவர்களை உரிய முறையில் தயார் செய்து ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சி நடத்தி விடுவது அந்தப் பள்ளியின் நடைமுறை.

அதற்கான ஒத்திகை தான் அந்த அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. குழந்தைகள் அனைவருமே பங்கு கொள்ளும் வகையில் சிறு சிறு போட்டிகள், தனித் திறமை ஆக்கங்கள், பேச்சு போட்டி, பாட்டு, நாடகம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடகம் சத்யாவின் தலைமையில் தான் ஒத்திகை பார்க்க பட்டிருந்தது. சத்யாவும், மற்றும் ஒரு ஆசிரியரும் சேர்ந்து நாடகத்திற்கான தலைப்பாக மரம் நடுதலின் அவசியத்தைப் பற்றி எடுத்திருந்தனர்.

நம் முன்னோர்கள் மரம் நட்டதால் நமக்கு ஏற்பட்ட நன்மையும், தற்போது நம் தலை முறையில் அதை அழித்தால் வருங்காலச் சந்ததியினர் படப் போகும் துயரையும், அந்தத் துயர் வர கூடாது என்றால் நாம் நம் தலைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் முறையே நாடகத்தின் கருவாக இருந்தது.

சத்யாவிற்கு உதவும் ஆசிரியர் நாடகம் ஆரம்பித்ததும் யார் யார் எங்கே நிற்க வேண்டும் என்று சொல்லி அவர்களை நிறுத்திக் கொண்டிருந்தார்.

அவர்கள் நின்றதும் “சீதா நீ ஆரம்பி…” என்று சத்யா குரல் கொடுத்தாள்.

சீதாவின் கையில் மரக்கன்று ஒன்று இருந்தது அதைச் சிறிது தூரம் நடந்து வந்து ஒரு இடத்தில் குழி தோண்டி நடுவது போல நடித்தவள், “விஷ்ணு…” எனக் குரல் கொடுத்தாள்.

“இதோ வந்துட்டேன்மா…” என இன்னொரு சிறுவன் அவள் இருக்கும் இடம் வந்தவன் “என்னமா கூப்டீங்களா?”

“ஆமா… இந்தா இது இனி உன் செடி. இதுக்குத் தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும் நீ தான் தண்ணி ஊத்தணும். இதை நீ பத்திரமா பார்த்துக்கணும்…” என்று இன்னும் சில விஷயங்கள் அவள் தாயாகச் சொல்ல, விஷ்ணு அதை மகன் போலத் தலையை ஆட்டி கேட்டுக்கொண்டான்.

அதே போல் பலரும் தங்கள் வீடுகளில் மரம் நடுவது போலவும், அதைப் பெற்றவர்களும், பிள்ளைகளும் பராமரிப்பது போலவும், அவர்களுக்கு அந்த மரம் பல விதங்களில் பலன் அளிப்பது போலவும் நடித்துக் காட்டினார்கள்.

அவர்கள் குழுவாக நடித்து முடிக்கவும், அவர்கள் சென்று அமர, அதுவரை அமர்ந்திருந்த அடுத்தக் குழு வந்தவர்கள், அந்தச் செழிப்பான மரங்களை வெட்டுவதும், அதை வைத்து அழகு பொருள் செய்யவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி அனைத்து மரங்களையும் அழிப்பது போல நடித்துக் காட்டினார்கள்.

அவர்கள் அழித்து விட்டு செல்லவும், அடுத்து வந்த தலைமுறையினர் பசுமை என்பதையே இழந்து, கான்கிரீட் சுவர்கள் மட்டும் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்க, அதில் செயற்கையாகச் செய்து வைத்த பொருட்களை வைத்து அழகு பார்த்து இயற்கை என்பதனையே மறந்து, செயற்கையோடு செயற்கையாக வாழும் மனிதர்களும், ஒருபக்கம் தண்ணீர் பஞ்சமும், வறுமையும், இயற்கை காற்றே இல்லாமல் அவஸ்தை படுவதும், எனப் பல வழிகளில் அவர்களுக்கு வர போகும் துன்பத்தை எடுத்துக் காட்டி நடித்துக் காட்டினார்கள்.

ஒரு மணி நேரம் நடந்த அந்த நாடகத்தைப் பொறுமையாகப் பார்த்த தலைமையாசிரியர் அவர்கள் நடித்து முடித்ததும் வியந்து கை தட்டினார். பின்பு ஒவ்வொரு பிள்ளைகளின் அருகிலும் சென்று அவர்களுக்குக் கை கொடுத்து பாராட்ட, அவர்கள் கூச்சத்தில் நெளிந்த படி அதை ஏற்றுக் கொண்டனர்.

பின்பு சத்யாவின் அருகில் வந்தவர் “சூப்பர் சத்யா… பசங்க கலக்கிட்டாங்க. நல்லா ட்ரைன் பண்ணிருக்கீங்க…” என்று பாராட்டினார்.

“நன்றி மேடம்… இந்தப் பாராட்டு நம்ம புகழேந்தி சாருக்கும் போகணும் மேடம். அவர் ஹெல்ப் இல்லனா இது இவ்வளவு தூரம் சாத்தியம் இல்லை…” என்றாள்.

“என்ன சத்யா மேடம் எல்லாம் நீங்க செய்துட்டுப் பாராட்டை எனக்கும் தூக்கி கொடுக்குறீங்க? நான் சும்மா கூட நிற்கிறேன். அவ்வளவுதான்…!” என்று புகழேந்தி தன்மையாகச் சொல்ல,

“ஐடியா மட்டும் தானே என்னோடது. எல்லா ஒருங்கிணைப்பும் நீங்க தானே செய்றீங்க. அப்படிப் பார்த்தா முக்கால்வாசி உங்கள் பங்கு தான் இதில் அதிகம்…” என்றாள்.

அதற்குப் புகழேந்தி ஏதோ மறுப்பு சொல்ல வர, “அடடா…! இரண்டு பேருமே சிறப்பா செய்திருக்கீங்க. உங்க இரண்டு பேருக்குமே என்னோட பாராட்டுக்கள். போங்க… போங்க போய் வேலையைப் பாருங்க…” தலைமையாசிரியர் கண்டிப்பு கலந்த விளையாட்டாக இருவரிடமும் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல, புகழேந்தியும், சத்யாவும் சிரித்துக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் பள்ளி நேரமும் முடிய, பிள்ளைகளைப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு, வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சத்யாவின் அருகில் வந்த புகழேந்தி “என்ன சத்யா மேடம் கிளம்பியாச்சா?”

“ஆமா புகழ் சார்…” என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் அறையில் இருந்து வெளியே நடந்தாள் சத்யா.

கூடவே நடந்தவன் “உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணுமே சத்யா…” என்று லேசாகத் தயங்கி கொண்டே பேச்சை ஆரம்பிக்க, கேள்வியுடன் முகத்தைச் சுருக்கி, நடையை நிறுத்தி அவனின் புறம் முகத்தைத் திருப்பினாள்.

“என்ன விஷயம் புகழ் சார்? சொல்லுங்க…” என்று கேட்டாள்.

தங்களைக் கடந்து செல்லும் மற்ற ஆசிரியர்களின் பார்வை தங்கள் மேல் படிந்து மீள்வதைக் கண்ட புகழேந்தி “இங்க வேண்டாம் சத்யா. உங்க வீட்டுக்கு போற வழியில் ஒரு ஜூஸ் கடை இருக்கே… அங்கே போகலாமா?” என்று கேட்டான்.

‘வெளியே சென்று பேசும் அளவிற்கு அப்படி என்ன விஷயம்?’ என்று தோன்ற யோசனையுடன் நின்றாள். அதோடு அவன் மேடம் என்று அழைப்பதை தவிர்க்கவும் இன்னும் யோசனை கூடத்தான் செய்தது.

அவளின் முகத்தில் படிந்த யோசனையைப் பார்த்தவன், “என் மேல நம்பிக்கை இருந்தா வாங்க சத்யா…” என்றான்.

நம்பிக்கையானவன் தான். இதுவரை எந்தத் தவறான சொல், செயல் எதுவும் அவனிடமிருந்து வெளிப்பட்டது இல்லை.

தன்னிடம் தனித்துப் பேச என்ன இருக்கின்றது? என்பதே அவளின் தயக்கத்திற்கான காரணமாக இருந்தது. ஆனாலும் உடன் பணி புரியும் ஆசிரியன். நல்லவன்! அவனிடம் ஓரளவிற்கு மேல் மறுக்கத் தோன்றாமல் “சரிங்க புகழ் சார்…” என்றாள்.

பழச்சாறு கடைக்கு வரும் வரை பொறுமையாக, அவளுக்கு இணையாக நடந்து வந்தான் புகழேந்தி.

கடைக்குச் சென்ற பிறகு மட்டும் அவள் அமரும் வரை உதவியவன், “உங்களுக்கு என்ன ஜூஸ் சொல்லட்டும் சத்யா?” எனக் கேட்டான்.

சத்யா தயங்க, “கடைக்குள் உட்கார்ந்துகிட்டு எதுவும் வாங்காம இருக்குறது நல்லா இருக்காது சத்யா…” என்று எடுத்துச் சொன்னான்.

அவன் சொன்னது புரிய தயக்கத்தை விடுத்து “மாதுளம் ஜூஸ் சொல்லுங்க சார்…” என்றாள்.

அவளுக்குச் சொன்னதையே தனக்கும் சொன்ன புகழேந்தி ஜூஸ் வந்ததும் அருந்திக் கொண்டே “அப்புறம் உங்க அடுத்தப் பிளான் என்ன சத்யா?” என்று கேட்டான்.

“என்ன பிளானை சொல்றீங்க சார்? புரியலையே…”

“கல்யாணம் பத்தி தான் கேட்கிறேன் சத்யா…” நேராக விஷயத்திற்கு வந்தான் புகழேந்தி.

அவன் அப்படிப் பளிச்சென்று கேட்கவும், உள்ளுக்குள் திடுக்கிட்டாள் சத்யவேணி.

‘அதைப் பற்றி இவன் ஏன் கேட்கிறான்?’ என்று யோசனை ஓடினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வீட்டில் பார்த்துக்கிட்டு இருக்காங்க சார்…” என்று அமைதியாகச் சொன்னாள்.

“ஓ…!” என்றவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பின்பு லேசாகச் செருமிக் கொண்டவன் “நான் சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வர்றேன் சத்யா. என்னைப் பத்தி உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இருந்தாலும் நானே இன்னும் விவரமா சொல்லிடுறேன். என்னோட அப்பா, அம்மா யாருன்னு எனக்குத் தெரியாது. நான் சின்ன வயசில் இருந்தே வளர்ந்தது எல்லாம் அனாதை ஆசிரமத்தில் தான்.

என்னைப் படிக்க வச்சு இப்போ நான் மேக்ஸ் டீச்சரா இருக்குற அளவுக்கு என்னை வளர்த்து விட்டது எல்லாம் ஆசிரம நிர்வாகி தான். நானும் ஏதாவது அர்த்தமுள்ளதா செய்யணும்னு தான் இங்கே பார்வையற்றோர் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன்.

நான் இப்போ இருக்குறது வாடகை வீட்டில் தான். கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு. வீட்டில் நான் மட்டும் தான் தனியா இருக்கேன். ஆசிரமத்தில் இருந்த வரை சுத்தி உள்ள பல பிள்ளைகளில் நானும் ஒருவனா வளர்ந்தேன். படிச்சு முடிச்சு வெளியே வந்து எனக்குன்னு வேலை தேடிட்டு இப்போ தனியா தான் இருக்கேன். அதுவும் ஆகி போயிருச்சு சில வருஷங்கள்.

இப்போ தனிமை வாழ்க்கை வெறுத்து போயிருச்சு. நானும் ஒரு குடும்பமா வாழ ஆசைப்படுறேன்…” என்று நிறுத்தியவன் சத்யாவின் முகத்தைப் பார்த்தான்.

‘இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறான்?’ என்று நினைத்தாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்யா அவன் நிறுத்தவும், “நல்ல விஷயம் தானே புகழ் சார்? சீக்கிரம் உங்களுக்குன்னு ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறம் என்ன… மனைவி, குழந்தைகள்னு வந்துட்டா உங்களுக்குக் குடும்பம் கிடைச்சுரும்…” என்றாள்.

“அதைத் தான் நானும் முடிவு பண்ணிருக்கேன் சத்யா…”

“அப்போ ஒரு நல்ல பொண்ணா தேடிற வேண்டியது தானே சார்?”

“தேட வேண்டிய அவசியம் இல்லை சத்யா…”

“என்ன சார் சொல்றீங்க? தேட வேண்டிய அவசியம் இல்லையா? அப்புறம் எப்படிக் குடும்பமா வாழ்வீங்க?” குழப்பத்துடன் கேட்டாள்.

“ஏற்கனவே தேடியாச்சு சத்யா…”

“வாவ்…! சூப்பர் சார்…! வாழ்த்துகள்…! யார் சார் பொண்ணு? எப்போ கல்யாணம்?” ஆர்வமாகக் கேட்டாள்.

அவளின் ஆர்வத்தைப் பார்த்து சிரித்தவன் “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்க தான் சொல்லணும் சத்யா…” என்றவனுக்கு அவள் என்ன சொல்ல போகின்றாளோ என்ற தவிப்புக் குரலில் வெளிப்பட்டது.

அவனின் பேச்சில் சத்யாவின் மலர்ந்த முகமும், ஆர்வமும் சட்டென அடங்கிப் போனது.

“என்ன சொல்றீங்க சார்? நான் ஏன் சொல்லணும்?” என்று கேட்டாள்.

“ஏன்னா? நான் தேடி கண்டு பிடிச்ச கல்யாண பொண்ணே நீங்க தான் சத்யா…” என்று பட்டெனச் சொல்லி முடித்தான்.

“என்… என்ன?” உச்சக் கட்ட அதிர்வாய் கேட்டாள்.

“யெஸ் சத்யா… உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்…” என்று ஆசையுடன் சொன்னான். அவனின் கண்கள் காதலுடன் சத்யாவின் முகத்தைப் பார்த்தது.

அவளால் அவனின் அந்தப் பார்வையைப் பார்க்க முடியாது என்றாலும் குரல் வேறுபாட்டைக் கணிக்க முடிந்தது..

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை. இத்தனை நாளும் ஒரு நண்பனை போலத் தன்மையாக நடந்து கொண்டவன் இன்று இப்படிச் சொல்வான் என்று நினைத்து பார்த்ததே இல்லை.

அவன் பேச்சை ஆரம்பித்த விதமே ஏதோ உறுத்தலாக இருந்தது. ஆனாலும் அவனிடம் பேசுவதைத் தவிர்க்க முடியாமல் தான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனின் கல்யாணம் பற்றிய பேச்சு வந்த போது இந்த நல்ல விஷயத்தைத் தன்னிடம் சொல்ல தான் அழைத்திருப்பான் போல என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் அப்படி நினைக்க அவளின் நிலையும் காரணமாக இருந்தது. இப்படி இருக்கும் தன்னிடம் வேறு மாதிரி பேச மாட்டான் என்று நினைத்தாள்.

ஆனால் அவளின் நினைப்பை பொய்யாக்கி அவன் தன்னைத் திருமணம் செய்யக் கேட்பான் என்று எதிர் பார்க்காமல் அதிர்ந்து தான் போனாள்.

‘எப்படி இது சாத்தியம்?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவளின் அமைதியை பார்த்து மேஜையின் மேல் இருந்த அவளின் கையை உரிமையுடன் மென்மையாகத் தொட்டு “சத்யா…” என்றழைத்தான்.

அவன் தொட்டதும் யோசனையில் இருந்தவள் கலைந்து வேகமாகச் சுதாரித்தவள் வெடுக்கென அவனின் பிடியில் இருந்து கையை உருவி கொண்டாள்.

அவன் தொட்டது பிடிக்காமல் அவளின் முகம் அசூசையைக் காட்டியது. அதோடு அதிகப் பதட்டத்திற்கு உள்ளானவள் அவன் புறம் இருந்த முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

கை அவளின் உதவிகோலை இறுக பற்றியது.

அவளின் பதட்டத்தைக் கண்ட புகழேந்தியின் முகம் வேதனையுடன் சுருங்கியது. ஆனாலும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் அதனால் இப்படி இருக்கின்றாள் என்பதனை உணர்ந்தவன் “ரிலாக்ஸ் சத்யா… எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்று மென்மையாகக் கேட்டான்.

அவனின் அந்த மென்மை குரலை கேட்க பிடிக்காமல் சட்டென எழுந்தாள்.

அவள் அப்படி எழவும் “என்ன சத்யா?” என்று தானும் பதறி எழுந்தான்.

“வீட்டு… வீட்டுக்கு போறேன் சார்…” என்றவள் இருக்கையைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே சத்யா?” பரிதவிப்புடன் கேட்டான்.

“உங்க ஆசை நிறைவேறாது சார். நான் கிளம்புறேன்…” என்றாள்.

“ப்ளீஸ் சத்யா… உட்காருங்க…! ஏன்? ஏன் நிறைவேறாது?” ஏற்றுச் சிறு பதட்டத்துடன் கேட்டான்.

“எனக்கு விளக்கம் எல்லாம் சொல்ல தெரியலை சார். ஏனோ இந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கலை. பிடிக்காததை ஏன் பேசணும்?” என்று இறுகிய முகத்துடன் கேட்டாள்.

“சத்யா ப்ளீஸ்… முதலில் உட்காருங்க பேசலாம். பக்கத்து டேபிளில் இருக்குறவங்க நம்மையே பார்க்குறாங்க…” என்றான்.

காட்சி பொருளாகி கொண்டிருக்கிறோம் என்று அறிந்ததும் முயன்று தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் மீண்டும் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டான் புகழேந்தி. ஆனால் அடுத்து அவள் உறுதியாகச் சொன்ன வார்த்தையில் அவனின் நிம்மதி பறிபோனது.