10 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 10
“எப்படி இருக்க நித்திலா?” அலைபேசியில் அழைத்த அவனின் அன்னை கேட்க,
“இருக்கேன் மா…” என்றான் சோர்வாக.
“ஏன்பா எப்படியோ பேசுற? உடம்பு சரியில்லையா?” அவனின் குரல் மாற்றத்தை கவனித்து விசாரித்தார்.
“இல்லமா, உடம்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு…” என்றதிலும் ஒருவித சலிப்பு!
அவனின் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்தவர், “ஆனா உன் பேச்சு அப்படித் தெரியலையே நித்திலா, எதுவும் பிரச்சனைனா சொல்லு. தனியா வேற இருக்க. என்கிட்ட மறைக்காதே. என்னன்னு சொல்லுப்பா…” என்றார்.
“அம்மா, இங்கே வர்றீங்களா?” என்று அவருக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றினான் நித்திலன்.
‘தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் என்ன இது?’ என்பது போல் யோசித்தார் செவ்வந்தி.
“நான் என்ன கேட்டேன், நீ என்னப்பா கேட்குற?” என்றார்.
“அம்மா, ப்ளீஸ்! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. இங்கே வர்றீங்களா? எனக்கு உங்களைப் பார்க்கணும்…” என்றான் பிடிவாதமாக.
அவனிடம் இவ்வளவு பிடிவாதத்தை எதிர்பாராமல் முழித்தார் செவ்வந்தி.
“அம்மா…” அவரின் அமைதியைக் கலைக்க முயன்றான்.
“அது வந்துப்பா…” என்று வழக்கம் போல் அவர் தயங்க,
“நானும் உங்க வயித்துல பிறந்த பையன் தான்மா…” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அந்தப் பக்கம் செவ்வந்தி தவித்துப் போனார்.
எப்போதும் தன் இரண்டாவது மகன் இப்படித் தன்னிடம் பேசியதே இல்லை.
தன்னை ஊருக்கு வரச் சொல்வான் தான். ஆனால் இங்கே உள்ள சூழ்நிலை அவனுக்குப் புரியும் என்பதால் அவனே அந்தப் பேச்சையும் விட்டுவிடுவான்.
ஆனால் இன்றோ இப்படி வெடுக்கென்று பேசியது அவரின் மனதிற்குச் சரியாகப்படவில்லை.
அதோடு அவன் பேச்சிலும் இன்று ஒரு தெளிவில்லை என்பதை உணர்ந்தார்.
‘மகனுக்கு எதுவும் பிரச்சனையோ?’ என்று நினைத்துப் பரிதவித்துப் போனார் அன்னை.
என்ன செய்வது என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
இளைய மகனை பார்க்க செல்ல வேண்டும் என்று சொன்னால் மூத்த மருமகள் என்ன ஆட்டம் ஆடுவாளோ? என்று நினைத்தவருக்கு மனதுடன் வயிறும் கலங்கியது.
அதே நேரம் இளைய மகனின் கலங்கிய குரல் அவரை நிலையில்லாமல் தவிக்கச் செய்ய, மகனிடம் எப்படிச் செல்ல என்று யோசிக்க ஆரம்பித்தார் செவ்வந்தி.
“வழியில் யாரும் நின்னு பேச்சுக் கொடுத்தால் பேசாதேமா. நாம யாரோடும் பேசவும் வேண்டாம்! மனக்கஷ்டமும் வேண்டாம்!” என்று மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சபரிநாதன்.
“சரிப்பா. அந்தக் குணா தான்பா சும்மா சும்மா வழியில் நின்னு பேசுறான். இனி வழி மறைச்சால் நிக்காம வந்திடுறேன்…” என்று அமைதியாகச் சொன்னாள் துர்கா.
“சரிமா, பார்த்துப் போயிட்டு வா…” என்று மகளை அனுப்பி வைத்தார்.
“சரிப்பா, போயிட்டு வர்றேன். கண்ணுமா, தாத்தாவை படுத்தாம சமத்தா இருக்கணும். அம்மா வேலைக்குப் போயிட்டு வர்றேன்…” என்று மகளிடம் சொல்ல, அம்மா வேலைக்குச் செல்வதைப் பார்த்துப் பழகிப் போன வருணாவோ, அன்னையைப் பார்த்துச் சிரித்து வைத்தாள்.
“இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டால் நானும் கூட வர்றேன்னு அழ ஆரம்பிச்சுடுவா…” என்றார் சபரிநாதன்.
“ஆமாப்பா, இப்பவே நடக்குறேன்னு உங்களைச் சுத்தலில் விடுறா. இனி சேட்டை அதிகமாத்தான் இருக்கும். கவனமா பார்த்துக்கோங்கபா. எங்கேயும் விழுந்து வச்சுட போறா…” என்றாள்.
“நான் பார்த்துக்கிறேன்மா. நீ போயிட்டு வா…” என்று மகளை அனுப்பி வைத்தார்.
தந்தையிடம் சொல்லிவிட்டு வேலைக்குச் செல்ல வாசலில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்போது எதிரே வித்யா வர, அவளைப் பார்க்காதது போல் துர்கா விலகி நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் மீது கோபமும், வருத்தமும் இருந்தாலும் சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
‘துர்ஷ்டனை கண்டால் தூர விலகு!’ என்பதை மனதில் உருப்போட்டுக் கொண்டாள்.
விவகாரமானவர்களிடம் விலகி இருப்பதே நல்லது என்பதே அவளின் எண்ணம். அந்த எண்ணத்தைச் செயலிலும் காட்ட முடிவெடுத்தாள்.
வித்யாவும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு விலகிப் போனாள்.
துர்கா சாலையில் நடக்கத் துவங்க, இப்போது நித்திலன் எதிரே வந்தான். தூரத்தில் வரும் போதே அவளைப் பார்த்து விட்டவன், அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தான் தகுதியற்றவன் என்பது போல் தலையை லேசாகத் தாழ்த்தி அவளைக் கடந்து சென்றான்.
அவளும் அவனின் செய்கையைக் கவனித்தாள். ஆனால் அதற்காக என்ன செய்ய முடியும்? அவனும் பாவம் தான்! எந்தக் கல்மிஷமும் இல்லாதவன். தன்னோடு சேர்ந்து அவனுக்கும் கெட்டப் பெயர் தான் என்று நினைத்தவள் பெருமூச்சுடன் வேலைக்குச் சென்றாள்.
நித்திலனோ தவித்துப் போன உள்ளத்துடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
துர்காவின் முகத்தைப் பார்த்ததும் அவனின் மனம் அடங்காமல் எகிறிக் குதித்தது.
தன் மனதை உணராத வரை அவளின் முகத்தைத் தயங்காமல் ஏறிட்டுப் பார்த்தவன், இப்போது கள்ளம் கொண்ட உள்ளத்துடன் அவளின் முகத்தை அவனால் பார்க்கவே முடியவில்லை.
தன் ஆசை நிறைவேறாத ஆசை என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டாலும், அவனின் மனம் என்னவோ ஒரு கட்டுக்குள் அடங்காமல் திமிறிக் கொண்டு துள்ளி துடித்தது.
துள்ளும் மனதை அடக்க வழி தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.
அவன் வீட்டிற்குச் செல்லும் வழியில் தன் வீட்டு வாசல்படியில் பேத்தியுடன் நின்று கொண்டிருந்தார் சபரிநாதன்.
அவனைப் பார்த்ததும், மரியாதைக்குச் சிரிப்பது போல் சபரிநாதன் பார்க்க, வர்ணாவோ அவனைக் கண்டதும் தாத்தாவின் கைகளிலிருந்து துள்ளினாள்.
தங்கள் வீட்டை நெருங்கி வந்த போது அவனைத் தன்னைத் தூக்கச் சொல்லியும் கைகளை ஆட்டினாள்.
அதை எல்லாம் ஓரப்பார்வையில் கண்டாலும், மனதை கல்லாக்கி கொண்டு, கடந்து சென்று தன் வீட்டிற்குள் அடைந்து கொண்ட நித்திலனின் கண்களின் ஓரம் ஒற்றைத் துளி கண்ணீர் தேங்கி நின்றிருந்தது.
‘உனக்கு நான் வேண்டாம் குட்டிம்மா’ என்று மனதிற்குள் குழந்தையிடம் சொல்லிக் கொண்டான்.
அவன் அப்படிப் பார்க்காதது போல் சென்றது சபரிநாதனின் முகத்தை மாற வைத்தது. ஆனாலும் நடந்த பிரச்சனைகளின் வீரியம் புரிந்ததால் அவன் விலகிச் செல்லும் காரணமும் அவருக்குப் புரிந்தது.
பெரிய மனிதர் சூழ்நிலை புரிந்து மனதை தேறிக் கொள்ள, சின்னக் குழந்தையான வருணாவோ தன்னைத் தூக்காமல் சென்று விட்டான் என்று கத்தி அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகை ஒலி அவன் வீடு வரை சென்று அவனின் காதுகளில் விழ, நரக வேதனையை அனுபவித்தான் நித்திலன்.
அவளைத் தூக்கி கொஞ்சி, சமாதானம் செய்ய மனம் துடித்தது. ஆனாலும், தான் இனி அவளுடன் நெருங்குவது தனக்கு மட்டுமல்ல, குழந்தைக்குமே நல்லது இல்லை என்று தன் மனதை அடக்க முயன்றான்.
சிறிது நேரம் அழுத வருணாவை எப்படியோ சமாளித்து அழுகையை நிறுத்தியிருந்தார்.
அவள் அழுகையை நிறுத்திய பிறகுதான் அவன் சற்று நிம்மதியாக மூச்சு விட்டான்.
நாட்கள் அதன் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருந்தது.
அன்றைக்குப் பிறகு தன் அன்னைக்கு நித்திலன் அழைக்கவே இல்லை. அவர் அழைத்தாலும் எடுக்கவில்லை.
கலங்கிப் போயிருந்த மனதிற்கு அன்னையின் ஆறுதலை தான் மனம் தேடியது.
கைபேசியில் அவர் சொல்லும் சமாளிப்புக் காரணங்கள் வேண்டாம் என்று நினைத்தவன் ஒரு வாரமாக அவரிடம் பேசாமல் தவிர்த்தான்.
அதோடு தன் மனதில் உள்ளதை எங்கே போனில் பேசும் போது உளறிக் கொட்டி விடுவோமோ என்று நினைத்தவன் பேச முயலவில்லை.
தன் எண்ணப்போக்கு தன் அன்னைக்குத் தெரியக்கூடாது என்று நினைத்த அதே நேரத்தில், அவர் அருகாமையும் வேண்டும் என்று மனம் கேட்க, அன்னை வந்தால் தான் என்ன என்ற வீம்பும் அவனைப் பிடித்துக் கொண்டது.
அதோடு முன் போல யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தான்.
துர்கா, சபரிநாதனை பார்த்தாலும் பார்க்காதது போல் கடக்கத் துவங்கினான்.
அவர்களும் இனியும் மற்றவர்களின் எந்தப் பேச்சுக்கும் இடம் தரக்கூடாது என்று நினைத்து விலகி இருந்தனர்.
குழந்தை வருணா தான் அவனைப் பார்க்கும் போதெல்லாம் தூக்கச் சொல்லி அழ ஆரம்பித்தாள். அது ரண வேதனையாகவே இருந்தாலும் நித்திலன் தன் விலகலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.
அன்று இரவு உணவகத்திற்குச் சென்று உணவு உண்டு விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் நித்திலன்.
அப்போது வாசலில் பாயை விரித்து அதில் சில பொம்மைகளைப் போட்டு குழந்தையை விளையாட விட்டிருந்தாள் துர்கா.
சற்று நேரம் வரை பேத்தியின் அருகில் இருந்த சபரிநாதன் கழிவறைக்குச் சென்று விட, நித்திலன் வந்து கொண்டிருந்த நேரம் துர்கா மகள் அருகில் நின்றிருந்தாள்.
அவளுக்கு உள்ளே வேலை இருந்ததால் தந்தை வரும் வரை மகளைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்போது தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த நித்திலனை பார்த்ததும், அதுவரை அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த வருணா வேகமாக எழுந்து அவனிடம் தளிர்நடை போட்டு நடந்து வந்தாள்.
அவள் தன்னை நோக்கித்தான் வருகிறாள் என்று தெரிந்தாலும் நித்திலன் நிற்காமல் நடக்க, துர்காவோ வேகமாக மகளைத் தூக்கி பாயில் விட்டவள் “இங்கேயே உட்கார்ந்து விளையாடு கண்ணுமா…” என்றாள்.
நித்திலன் தூக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும் என்பதால் மகள் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்தாள்.
ஆனால் துர்காவின் செய்கையில் நித்திலன் மனம் அடிப்பட்டுப் போனது.
அவனே விலகிப் போகிறவன் தான். ஆனாலும் விலக்கி வைப்பது போல் துர்காவின் செய்கையை உணர்ந்தான். அதேநேரம் நிதர்சனம் உறைத்ததால் மனதை தேற்றிக் கொண்டான்.
வருணாவோ தன்னை அவனிடம் போக விடாமல் அம்மா தடுத்துவிட்டாளே என்று அழ போகிறவள் போல் உதட்டை பிதுக்கினாள்.
அதனுடன் நித்திலனும் நிற்காமல் செல்ல, “பா…” என்று அவனை அழைத்தாள் வருணா.
அவள் அழைப்பு கேட்டு நித்திலன் சட்டென்று சிலை போல் நின்றான்.
என்ன சொல்லி அழைத்தாள்? என்ன சொல்லி அழைத்தாள்? என்று பரிதவித்தது அவனின் மனம்!
அவனுக்குப் பதில் சொல்வது போல் மீண்டும் அழைத்தாள் குழந்தை.
“பா… ப்பா…” என்று வருணா மீண்டும் அழைக்க ஆரம்பிக்க, அவள் புறம் திரும்பாமலே உறைந்து போய் நின்றிருந்தான்.
துர்காவிற்கும் திகைப்பு தான். தன் மகள் எப்படி அவனை அப்பா என்று அழைத்தாள்? அவளுக்குப் புரியவே இல்லை.
அவளும் ஒரு நொடி உறைந்து போனவள், பின் சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டு மகளை அதட்ட துர்கா வாயைத் திறந்த நேரம், அதுவரை சிலையாக நின்றிருந்த நித்திலன் உயிர் பெற்றது போல், படபடவென்று வேகமாகத் தன் வீட்டிற்குள் ஓடிச் சென்று கதவைப் படீரென்று அடித்துச் சாற்றினான்.
அவன் சென்ற வேகத்தைப் பார்த்துப் புரியாமல் மகளை அதட்டுவதை மறந்து விக்கித்து அவன் வீட்டு மூடிய கதவையே பார்த்தாள் துர்கா.
நித்திலன் உள்ளே சென்ற வேகத்தில் உள்ளே இருந்து ‘படீர்’ என்று எதையோ அறையும் சத்தம் வெளியே வரை கேட்க, திகைத்துப் போனாள் துர்கா. என்ன செய்கிறான்? என்ற கேள்வியுடன் கதவை வெறித்துக் கொண்டிருந்தாள்.
உள்ளேயோ நித்திலன் கதவை மூடிய வேகத்தில் கதவின் அருகிலேயே அப்படியே மண்டியிட்டு மடங்கி அமர்ந்தான்.
‘ப்பா…’ மீண்டும் வருணாவின் அழைப்பு காதிற்குள் ரீங்காரமிடுவது போல் இருக்க, தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன், ஒரு வேகத்துடன் தரையில் ஓங்கி கையால் அடித்தான்.
பலமான அடி! கையே உடைந்து போனது போல் வலித்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு வலி உணர்வே இல்லை.
மனம் முழுவதும் ஒருவித பரவசம்!
என்னை எப்படி அழைத்தாள்? என்று நினைக்கும் போதே, ‘ப்பா…’ மீண்டும் வருணாவின் குரல் மனதிற்குள் எதிரொலித்தது!
“ஆஆஆஆ…” என்று வீடே அதிரும் வண்ணம் வாய் விட்டுக் கத்தினான்.
வாசலில் நின்றிருந்த துர்கா திடுக்கிட்டுப் போனாள்.
அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பயந்து போனாள். அவனின் சத்தத்தைக் கேட்டு மகளைக் கண்டிக்க வேண்டும் என்பதே அவளுக்கு மறந்து போனது.
இப்போது உள்ளே இருந்து, “ஹா…ஹா…ஹா…” என்று அவன் சிரிக்கும் சப்தம் பலமாகக் கேட்க, ‘அவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?’ என்பது போல் குழம்பிப் போனாள் துர்கா.
அவன் ஏன் இப்படிச் செய்து கொண்டிருக்கிறான்? அவளுக்குப் புரியவே இல்லை.
ஏதோ வினோத நிகழ்வு நடந்து விட்டது போல் புரியாமல் குழம்பிப் போனாள் துர்கா.
அவள் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்த போதே உள்ளே சென்ற அதே வேகத்துடன் வெளியே வந்தான் நித்திலன்.
அவன் இருந்த கோலத்தைப் பார்த்து பயந்து ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் துர்கா.
தலை கலைந்து, முகத்தில் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்க, கண்கள் சிவந்து காட்சி தந்தான்.
அவனின் கண்கள் இருந்த இருப்பே அவன் அழுதிருக்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
‘ஏன் இப்படி இருக்கிறான்?’ துர்காவிற்குப் புரியவே இல்லை.
துர்காவின் அருகில் வந்தவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பாராமல் எங்கோ பார்த்துக் கொண்டு, “என்னை மன்னிச்சுடுங்க. ஒரே ஒரு முறை ப்ளீஸ்…” என்றான்.
அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கீழே அமர்ந்திருந்த வருணாவை கைகளில் ஆசையாக அள்ளிக்கொண்டு அவளின் பிஞ்சு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றவன் திரும்பி வந்து கொஞ்சியதும் மகிழ்ந்த வருணா, தானும் அவன் கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களைப் பதித்து, “ப்பா…” என்றாள் மீண்டும்!
நித்திலனிடம் விவரிக்க முடியா உணர்வு!
அப்போது அவனின் மேனி சிலிர்த்து அடங்கியதை கண் கூடாகக் கண்டாள் துர்கா.
‘இவன் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான்?’ மகள் அவனை அப்பா என்று அழைத்ததை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தக் கேள்வி தான் அவளுக்கு முதன்மையாகத் தோன்றியது.
வருணாவின் ‘அப்பா’ என்ற அழைப்பில் மேனி சிலிர்க்க, அவனின் கண்களிலிருந்து கடகடவெனக் கண்ணீர் இறங்கி வந்தது.
ஒரு ஆண்மகன் அழுவான் என்பதை அன்று தான் கண்கூடாகக் கண்டாள் துர்கா.
“பா, ஊ ஊ…” அவன் அழவும் அடிப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தில் குழந்தை கேட்க, “ஹாஹா…” என்று வாய் விட்டுச் சிரித்தவன், மீண்டும் குழந்தையின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
“அப்பா வாடா? நான் அப்பா வாடா?” என்று குழந்தையிடம் மனமுருக கேட்டான்.
அவன் கேள்வி புரிந்தது போல் “ப்பா…” என்றழைத்து உறுதியளித்தாள் வருணா.
பரவசத்துடன் குழந்தையின் முகத்தைப் பார்த்தவன், “இந்த ஜென்மத்தில் நான் பிறந்த பலனை அடைந்து விட்டேன்டா குட்டிம்மா…” என்று கரகரப்பான குரலில் சொன்னவன் அவளைத் தன் தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
குழந்தையும் கொண்டாட்டமாக அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அப்போது எதிரே இருந்த துர்காவைப் பார்த்து தளர்ந்த நித்திலன், தயக்கத்துடன் வருணாவை கீழே இறக்கி விட்டான்.
வருணாவும் அவன் தன்னைத் தூக்கி விட்டான் என்ற மகிழ்வில் விட்ட விளையாட்டைத் தொடர ஆரம்பித்தாள்.
‘என்னடா நடக்குது இங்கே?’ ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் நின்றிருந்தாள் துர்கா.
அவளின் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்த நித்திலன், அதற்கு மேல் அங்கே நிற்காமல் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்க, தன் மலைப்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, “நில்லுங்க!” என்று கோபத்துடன் அழைத்தாள் துர்கா.