1 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 1

“சொல்லுங்க சார்… என்ன வேணும்?” என அந்தப் பெண் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் கேட்டாள்.

“A4 பேப்பர் ஐஞ்சு, ஒரு பேனா, ஒரு ஸ்டேப்ளர், ஒரு பின் பாக்ஸ் கொடுங்க…” என்று அந்த வாடிக்கையாளர் கேட்கவும்,

அவர் கேட்ட பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து, அதற்கான பணமும் வாங்கி வைத்தாள் சத்யவேணி.

பொருட்களை வாங்கி விட்டு அவர் கிளம்பும் முன் “ஏன்மா, கடையில் உனக்குத் துணைக்கு வேற யாரும் இல்லையா?” என்ற கேள்வியில் கடையின் மேஜையின் மீதிருந்த ஒரு பொருளை எடுத்து நேராக வைத்துக் கொண்டிருந்தவள் கைகள் அப்படியே நின்றது.

அவருக்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பியவள் “எனக்குத் துணைக்கு ஆள் தேவைப்படாதுங்க…” என்றாள் வெடுக்கென.

அவளின் வெடுக்கென்ற பதில் எதிரில் இருந்தவருக்குத் திமிராகவே பட்டது.

“நல்லதுக்குச் சொன்னா… மூஞ்சில அடிக்கிற மாதிரி பேச்சை பார்! இந்த நிலையிலும் திமிர் அதிகம் தான்…!” என்று அவளுக்கும் கேட்கும் படி முனங்கியவர் அங்கிருந்து நகர்ந்தார்.

அவரின் முனங்களைக் கேட்டு சத்யவேணிக்குச் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது. அந்தக் கோபத்தைத் தன் கையிலிருந்த பொருளின் மீது காட்டியவள் அதைப் பட்டென மேஜையின் ஒரு ஓரத்தில் போட்டாள்.

“என்னம்மா… இப்ப என்ன கோபம்?” என்று அவள் பொருளை போட்ட வேகத்தைப் பார்த்து, அப்பொழுதுதான் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்த அவளின் தந்தை தியாகராஜன் கேட்டார்.

தந்தையின் கேள்வி காதில் விழுந்தும் பதிலே சொல்லாமல் கடையின் உட்பக்கம் இன்னும் கொஞ்சம் நகர்ந்து சென்று அலமாரியில் ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த சில பொருட்களைக் கையிலெடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

“என்ன சத்யாமா, வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த கோபம் இன்னும் உனக்குக் குறையலையா?” என்று கேட்டார்.

அதற்கும் அவள் பதில் சொல்லாமல் போகவே “ஹம்ம்…!” என்று ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு, கடையில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவர் திரும்பி மகளைப் பார்த்தார்.

அவள் அவரின் பக்கமே திரும்பாமல் முதுகை காட்டிக்கொண்டு பொருட்களை வைத்துக்கொண்டிருந்தாள்.

இனி தான் பேச்சுக் கொடுத்தாலும் அவள் பேச மாட்டாள் என்பதை அறிந்தவருக்கு அவளின் கோபத்தை எப்படிக் குறைப்பது என்று தான் தெரியவில்லை.

அவளின் கோபமும் நியாயமானதுதான். அதேநேரம் தங்களின் நிலையும் பரிதாபத்துக்குரியது தானே?

இருபத்து ஆறு வயது முடிந்து இருப்பத்தி ஏழு வயது ஆரம்பித்த பிறகும் இன்னமும் அவளைத் தங்கள் மகளாக மட்டுமே வைத்துக் கொண்டிருப்பது பெற்றவருக்கு அளவில்லா வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

ஒரு உள் அறையும், சின்னக் கூடமும், சமையலறை என்ற பெயரில் ஒரு தடுப்பு வைத்து மறைத்தும் மட்டுமே இருக்கும் ஒரு சின்ன ஓட்டு வீடும், அந்த ஸ்டேஷ்னரி கடையில் இருக்கும் பொருட்களும் மட்டுமே தியாகராஜனின் சொத்து.

கடையின் இடம் கூட வாடகைக்கு எடுத்த இடம்தான். தியாகராஜனின் மனைவி வசந்தா வீட்டிலிருந்தே மெழுகுவர்த்திச் செய்யும் கைத்தொழில் பார்த்துக்கொண்டு வீட்டையும் கவனித்துக் கொள்பவர்.

தியாகராஜன், வசந்தா தம்பதியரின் மூத்த பெண் தான் சத்யவேணி. அடுத்து பள்ளியின் கடைசி வருடத்தில் இருக்கும் இன்னொரு பெண்ணான கார்த்திகாவும் இருக்கின்றாள்.

இரு பெண்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் தானே தவிர அவர் இரண்டு பெண்களையும் ஒன்றுபோல்தான் பாவித்தார்.

ஆனால் தன் மூத்த பெண்ணிற்குத் தான் நியாயம் செய்யவில்லை என்பது அவளின் கருத்தாக இருக்கின்றது என்பதை இன்று அறிந்து கொண்டார்.

ஆனால் ‘எனக்கும் தான் வேறு வழி இல்லையே? நான் என்ன செய்வேன்?’ என்று அவரின் மனது தவித்துக் கொண்டுதான் இருந்தது.

காலையில் வீட்டில் நடந்த காரசாரமான பேச்சு ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அதைப்பற்றி மேலும் சிந்திக்கும் முன் கடைக்கு வாடிக்கையாளர் வர, தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தார்.

“என்ன வேணும் தம்பி?” என்று வாடிக்கையாளரிடம் கேட்டு அவர் கேட்ட பொருளை எடுத்துக் கொடுத்துவிட்டு “சத்யாமா இங்கே வா…!” என்று மகளை அழைத்தார்.

மீண்டும் அவள் காது கேளாதது போல் இருக்க, இந்த முறை அவருக்கே கோபம் வந்தது.

“பிடிவாதத்திற்கும் ஒரு அளவு இருக்கு சத்யா. எங்களையும் வேற என்னதான் பண்ண சொல்ற? இந்தக் கடை வருமானத்தை வச்சு இந்த அப்பனால என்ன செய்ய முடியுமோ அதை நான் சரியாத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

என் வருமானத்திற்கும், நீ இருக்கும் நிலைக்கும் இந்தச் சம்மந்தம் விட்டா வேற நல்ல சம்மந்தம் கிடைக்கிறது கஷ்டம் தான். அவங்களே விரும்பி வந்து கேட்டிருக்காங்க. அப்படி இருக்கும்போது ஒரேடியா வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிறது உன் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது இல்லை. யோசிச்சு முடிவு பண்ணு…!” என்று கடுமையாகச் சொன்னவர் செய்தித்தாளை எடுத்து வைத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு திரும்பி நின்றிருந்த சத்யவேணியின் முகம் கலங்கித் தவித்தது.

இத்தனை நாளும் இளகியே பேசி வந்த தந்தை இன்று கடுமையாகப் பேசியதில் தான் அதிகமாகத்தான் பிடிவாதம் பிடிக்கின்றோமோ என்று நினைத்தாள். ஆனால் மறு நிமிடமே ‘என்னால் இதைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையே… நான் என்ன செய்வேன்?’ என்று அவளின் மனது முரண்டு பிடித்தது.

அவளின் முரண்டு பிடித்த மனமே வெல்ல, “என் முடிவில் மாற்றம் இல்லைப்பா…” என்று அவரின் புறம் திரும்பி நின்று உறுதியாகச் சொன்னாள்.

“ம்ப்ச்…! நல்லா யோசிச்சு, விவரத்தை மேலும் கேட்டுட்டு உன் பதிலைச் சொல்லுமா…” என்று அலுப்பாகச் சொன்னார்.

“யோசிக்க எல்லாம் ஒன்னும் இல்லைப்பா. இதுக்கு மேலயும் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். இதுதான் என் முடிவு…! நான் இப்படியே உங்கள் பெண்ணா மட்டுமே இருந்திட்டு போய்றேன். என்னை விட்டுருங்க…” என்று அவளும் சலிப்புடன் சொன்னாள்.

” என்னம்மா நீ…” என்று எதுவோ கோபமாகச் சொல்லப் போக “இந்தப் பேப்பர்ஸ் எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துக் குடுங்க…” என்ற குரல் அவரை மேலும் பேச விடாமல் செய்தது.

வாடிக்கையாளர் கொடுத்த காகிதங்களைக் கையில் வாங்கியவர் எழுந்து நின்று பிரதி எடுக்க ஆரம்பித்தார்.

கடைக்கு ஆள் வந்ததால் வேறு பேச முடியவில்லை என்றாலும் அவரின் முகத்தில் ஒட்டிக்கொண்ட கோபம் மட்டும் சிறிதும் குறையவில்லை.

ஆனால் சத்யா புதிய குரல் கேட்கவும் தன் முகத்தை நிர்மலமாக வைத்து எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

கடை வாசலில் நின்றிருந்தவன் தந்தை, மகள் இருவர் முகத்தையும் ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

தான் வரும்போது அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வளவு கோபம் இருந்தது என்று நன்றாகவே பார்த்தான். ஆனால் இப்பொழுது தன் குரலில் அப்படியே நிர்மலமாக மாறிய அவளின் முகத்தைப் பார்த்து அவனின் கண்களில் ஆச்சரியம் குடிபுகுந்தது.

‘நொடியில் தன் முகப் பாவனையை மாற்றி விட்டாளே! இவள் மிகவும் அழுத்தமானவளாகத் தான் இருப்பாள்…’ என்று நினைத்துக்கொண்டான்.

அவன் கொடுத்த காகிதங்களைப் பிரதி எடுத்துக் கொடுத்தவர் அவன் கொடுத்த பணத்திற்கு மீதம் தர சில்லறையை எடுத்துக் கொண்டிருக்கும் போது, பிரதியை சரி பார்த்து முடித்தவன் “சார்… எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?” என்று தியாகராஜனை பார்த்துக் கேட்டான்.

இதுவரை பழக்கமில்லாதவன் கேட்ட உதவியில் எதிரில் இருந்தவனை யோசனையுடன் பார்த்தார்.

அதரங்கள் பிரியாத மென் புன்னகையுடனும், சினேக பாவத்துடனும் நின்றிருந்தவனைப் பார்த்து “என்ன தம்பி?” என்று கேட்டார்.

“என் பேரு தர்மேந்திரன். பக்கத்துத் தெருவில் புதுசா ‘தர்மா’ என்ற பெயரில் ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பித்து இரண்டு நாள் தான் ஆகுது. இங்கே டிரைவிங் ஸ்கூல் இருக்குங்கிறதை தெரியப்படுத்த சின்ன நோட்டீஸ் அடிச்சு கொடுத்துட்டு இருக்கோம்.

இந்தத் தெருவில் உங்க கடை கொஞ்சம் மெயினா இருக்கு. நான் கொஞ்ச நோட்டீஸ் கொடுத்தா… இதோ இந்த டேபிள் ஓரத்தில் வைத்துக் கொள்ள அனுமதி தர முடியுமா? உங்க கடைக்கு வர்றவங்களுக்கு நீங்க ‌பொருள் எடுத்துத் தர்ற நேரத்தில் அவங்க அந்த ‌நோட்டீஸ் எடுத்துப் பார்த்தால் எனக்கு உதவியா இருக்கும்…” என்றான்.

தன்மையாக அவன் கேட்ட விதத்தில் அவனைப் பார்த்துச் சினேகமாகச் சிரித்தவர் “தாராளமா வச்சுட்டு போங்க தம்பி…” என்றவர் மீதி சில்லறை கொடுக்க, மேஜையின் அருகில் வந்தார். அவனும் விளம்பர காகிதங்களை வைக்க நகர்ந்து வர, அப்பொழுது தான் அவனை நன்றாகப் பார்த்தார்.

பார்த்தவர் கண்கள் ஆச்சரியமாக விரிந்தது. அதேநேரம் சத்யாவின் முகத்திலும் ஆச்சரியம் மின்னல் வேகத்தில் மின்னி மறைந்தது.

இருவரின் முகத்திலும் தோன்றிய ஆச்சரியத்தைத் தர்மாவும் கண்டு கொண்டான். அவர்களின் ஆச்சரியத்திற்கான காரணம் புரிந்தது.

புரிந்ததும் அவனின் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. ஆனால் அது வலியை வெளிப்படுத்தும் சிரிப்பு இல்லை என்று நிச்சயம் கூறமுடியும்!

அது தன்னம்பிக்கை சிரிப்பு!

ஆம்! தன் குறையையும் நிறையாக மாற்றும் தன்னம்பிக்கை சிரிப்பு!

அவனின் தன்னம்பிக்கை தான் இன்றைக்கு அவனை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அந்தத் தன்னம்பிக்கை இன்னும் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற உறுதியை அவனுக்குக் கொடுத்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

தர்மா! பெயரை சொல்லும் போதே எப்படிக் கம்பீரமாகத் தெரிகின்றதோ, அதே போலத் தானும் கம்பீரமாகத் திகழும் ஆண்மகனாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு நிறைய உண்டு.

அவர்களின் ஆச்சரியம் கண்டு இதழ் பிரியாமல் சிரித்தவன், மேலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடையில் இருந்த அந்த நீண்ட ‌மேஜையின் ஓரத்தில் காகிதங்களை வைத்துவிட்டு, தியாகராஜன் கொடுத்த சில்லறையை வாங்கிக் கொண்டு “நன்றி சார்…” என்றவன், விடை பெறும் விதமாகச் சிறு புன்னகை ‌சிந்திவிட்டு திரும்பி நடந்தான்.

அவன் நடந்து செல்லும் போது ஒலித்த அவனின் மூன்றாம் காலின் சத்தம் அதிர்வாகச் சத்யவேணியின் காதில் வெகு நேரம் ஒலித்தது.