1 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 1

சூரியன் உதிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்த அந்தத் திங்களின் விடியலில் சமையலறையில் நின்று கொண்டு கத்தியால் காய்களை வெட்டிக் கொண்டிருந்த பெண்ணவள் முகத்தில் தேஜஸ் ஒளிர்ந்தது.

அவளின் இதழில் அவ்வப்போது எதையோ நினைத்து ஒரு குறும்புன்னகை பூத்தது.

காயை வெட்டிக் கொண்டே குளித்து விட்டுத் துண்டால் கட்டியிருந்த கொண்டையைத் தாண்டி முகத்தில் தவழ்ந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கி விட்டுக்கொண்டாள்.

எதையோ எதிர்பார்ப்பவள் போல அந்த மங்கையின் கண்கள் அவ்வப்போது அலைப்பாய்ந்தது.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் முதுகில் இதமான உரசலையும், தன் இடையில் சுகமான அழுத்தத்தையும் உணர்ந்தவள் மேனியில் சிலிர்ப்பு ஓடிச் சென்று மறைந்தது.

தன்னை அணைத்திருந்த கைகளைப் பார்த்தாள். கைகளில் ரோமங்கள் அடர்ந்து வளர்ந்திருக்க ஆணுக்கே உரிய வலிமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்தக் கைகளின் அணைப்பில் இன்பமாய் உணர்ந்தாள்.

தன் கழுத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பில் முகத்தை லேசாகத் திரும்பி அவனைப் பார்த்தவள் முகம் அதிர்வுக்கு மாறியது.

தன்னை அணைத்திருந்தவன் முகத்தில் தன்னைப் போல இன்பமான உணர்வு இல்லாமல் கடுமையான கோபம் தெரிந்தது தான் அவளின் அதிர்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

‘என்ன இது…? எதுக்கு இப்படி ஒரு கோபம்?’ என்று நினைத்தவள் திடீரென “ஸ்ஸ்… ஆ…!” என வலியுடன் கூடிய மெல்லிய சத்தத்தை வெளியிட்டாள் பவ்யா.

தன் கையை உதறிக்கொண்டு தன் விரலை பார்த்தாள். கத்தி செய்த காயத்தால் விரலில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

ரத்தத்தைப் பார்த்தும் அதை அலட்சியம் செய்துவிட்டு தன் பின்னால் திரும்பி பார்த்தாள். அந்த இடமே வெறுமையாக இருந்தது.

‘ச்சே… எல்லாம் கனவு. எப்படி இருந்த வாழ்வு. இப்போ கனவு கண்டே என் நாட்கள் போய்ருமோ?’ என்று நினைத்தவள் மனதிலும் அந்த இடத்தைப் போலவே வெறுமை உண்டானது.

அவளை மேலும் யோசிக்க விடாமல் காயம் பட்ட கை விரல் தன் இருப்பைக் காட்ட, ரத்தத்தைக் குழாய் நீரில் கழுவியவள் அலமாரியில் இருந்த மஞ்சள் பொடியை எடுத்துக் காயத்தில் வைத்து அழுத்தினாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அப்படிச் செய்யும் போதே மீண்டும் அவனின் நினைவு வந்தது.

இது போல முன்பு ஒரு முறை காயத்தில் மஞ்சள் பொடியை வைத்ததைப் பார்த்து ‘அப்படிச் செய்யாதே! பேண்டேஜ் போடு!’ என்று அவளைத் திட்டியிருக்கின்றான்.

‘மஞ்சள் கிருமி நாசினி பேண்டேஜை விட நல்லது!’ என அவள் சொன்னாலும் ‘நான் சொன்னதை மட்டும் செய்!’ என்று அவன் பிடியில் தான் நிற்பான்.

அதை நினைத்தவள் ‘எப்போதும் உங்க வார்த்தை தான் இறுதியாக இருக்கணும்னு எல்லா விஷயத்திலும் சாதிச்சிட்டீங்களே?’ என்று மெதுவாக முணுமுணுத்து விட்டு வறட்சியாகச் சிரித்தாள்.

‘ப்ச்ச்… தினமும் எனக்கு இதே வேலையா போயிருச்சு. நடப்பை பார்க்காம, கற்பனையிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன். நான் வருத்தப்பட்டா மட்டும் நடந்தது எல்லாம் மாறப் போகுதா? இல்ல அவன் தான் மாறப் போகின்றானா? நிச்சயம் இல்லை!

அவனின் முடிவில் எவ்வளவு உறுதியாக இருந்து அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டிக் கொண்டிருப்பவன் மாறுவானா என்ன? நான் தான் மனசை தேத்திக்கிட்டு ஆக வேண்டியதை பார்க்கணும்’ என்று நினைத்த படி படுக்கை அறையை எட்டிப் பார்த்தாள்.

அங்கே கட்டிலில் தலையணைகள் பாதுகாப்பாய்ச் சூழ்ந்திருக்கத் தன் செப்பு இதழின் வழியே லேசாக உமிழ்நீரை வழிய விட்ட படி உறங்கிக் கொண்டு இருந்தான், அவளின் இரண்டரை வயது ஆண் குழந்தையான கவின்.

‘ம்ம்…! உன் மேல கூட உங்க அப்பாவுக்குப் பாசம் இல்லை போலடா?’ என்று தூங்கிக்கொண்டு இருந்தவனிடம் பேசியவள் அவன் எழுவதற்கு முன் வேலையை முடிப்போம் என்று திரும்பச் சமையலறைக்குச் சென்று தன் சமைக்கும் வேலையை ஆரம்பித்தாள்.

கைகள் தன்பாட்டில் வேலையில் ஈடுப்பட்டிருந்தாலும் அவளவன் நினைவு மட்டுமே அவள் மனதை ஆட்கொண்டிருந்தது.

அவளவன் வினய்! ‘இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? எங்கள் இருவர் நினைவும் சிறிதாவது இருக்குமா?’ என்று தன்போக்கில் நினைத்தவளின் கண்கள் தன்னால் கலங்க ஆரம்பித்தன.

‘ச்சே…! நான் திருந்தவே மாட்டேன். இந்தக் கண்ணீர் வேற’ என்று தன்னையே கடிந்து கொண்டு தன் கண்ணீரை துடைத்தபடி ‘மணி என்ன?’ என்று வரவேற்பறையில் எட்டிப் பார்த்தாள்.

மணி ஏழு எனக் காட்ட ‘அய்யோ! இவ்வளவு நேரமா தேவை இல்லாத சிந்தனையிலேயே நேரத்தை ஓட்டிட்டேனே. ஸ்கூல் போக டைம் ஆகிருச்சு. இன்னும் ஒரு வேலையும் செய்யலையே எனப் பதறியபடி அரைகுறையாக மட்டுமே முடிந்திருந்த சமையல் வேலையை வேகவேகமாகச் செய்துவிட்டு, பாலை எடுத்துக்கொண்டு கவினை எழுப்ப ஓடினாள்.

அங்கே தான் எழ போவதற்கு அடையாளமாகப் புரண்டு கொண்டிருந்தான் கவின்.

வேகமாக அவனின் அருகில் சென்றவள் பால் கப்பை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு “அடடே…! என் குட்டியப்பா எழுந்துடீங்களா? வாங்க! வாங்க! அம்மாகிட்ட வாங்க…!” எனப் பவ்யா குரல் கொடுத்ததும் புரண்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

எழுந்தவன் கையைச் சல்யூட் வைப்பது போல வைத்து “குட்டு ம்மா!” என்று குட்மார்னிங் அம்மா சொல்ல வராமல் அப்படிச் செய்ய, மகன் சொன்ன அழகை என்றும் போல இன்றும் ரசித்தவள் “குட்மார்னிங் கவின் குட்டி!” என்று அவனைக் கைகளில் அள்ளிக் கொண்டாள்.

தன் அம்மாவின் தோளில் சலுகையாகச் சாய்ந்து கொண்ட கவின் “ப்பாக்கு?” என்றான்.

அவன் கேள்வியில் மனம் வருந்திய பவ்யா தன் வருத்தத்தை அவனிடம் காட்டாமல் “அப்பாவுக்குத் தானே? சொல்லலாமே…” என்றவள் அங்கே மேஜையில் இருந்த வினய்யின் புகைப்படம் பக்கம் திரும்பினாள்.

தன் தாயின் தோளில் இருந்து நிமிர்ந்த கவின் மேஜையில் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து தன் அம்மாவிற்குக் காலை வணக்கம் சொன்னது போலச் சல்யூட் வைத்து “குட்டு ப்பா!” என்றான்.

இந்தப் பழக்கத்தைப் பவ்யா தான் தன் மகனுக்குப் பழக்கி விட்டாள். ஆனாலும் தன் தந்தைக்கு நேரில் காலை வணக்கம் சொல்ல முடியாமல் புகைப்படம் பார்த்தே சொல்ல வேண்டிய நிலை வந்ததில் அவளின் மனம் துயரம் கொண்டது.

திடீரெனக் கவினின் கைகள் பவ்யாவின் கண்ணைத் தடவியது. மகன் தன் கண்ணைத் துடைக்கவும் தான் தன் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உணர்ந்து வேகமாகக் கண்ணீரை துடைத்தாள்.

கவின் அவளின் நெற்றியிலும், கழுத்திலும் மாறி, மாறி கை வைத்து பார்த்தவன் “பீவா மா…?” என்று உதட்டை பிதுக்கி அழப்போவவன் போலக் கேட்டான்.

‘தான் அழுததைப் பார்த்து மகன் தனக்குக் காய்ச்சலா என்று கேட்கிறான்’ என்று புரிந்தவள் மனம் நெகிழ அவனை லேசாக அணைத்து “இல்லடா என் செல்லக்குட்டி. நீ என் கூட இருக்கும் போது பீவர் எல்லாம் எனக்கு வருமா என்ன? அம்மா கண்ணுல தூசி விழுந்துருச்சுடா குட்டி. அம்மாக்கு ஒன்னும் இல்லை” என்று அவனைச் சமாதானப் படுத்தினாள்.

தூசி என்றதும் தன் அம்மாவின் கண்ணைப் பார்த்து “பூ… பூ…” என்று ஊதுவது போலச் செய்தான்.

“அட…! என் குட்டியப்பா. உன்கிட்ட ஒன்னும் சொல்ல முடியலடா. அம்மாக்கு தூசினு சொன்னதும் ஊதுறிங்களா? அம்மாவுக்குத் தூசி போச்சு” என்றவள் ‘நல்ல வேளை இவன் இன்னும் என் விரலை பார்க்கலை. இல்லனா அதுக்கும் அழுவான்’ என்று மகனை நினைத்து மனதில் சந்தோசமாக அலுத்துக் கொண்டவள் “அச்சோ…!” என்றாள் திடீரென.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

‘இப்ப என்ன?’ என்பது போலக் கவின் அவளின் முகத்தைப் பார்க்க “என் குட்டிக்கு பசிக்குமே? பேசியே ரொம்ப நேரம் போய்ருச்சே. இந்தக் குட்டி வயித்துக்குப் பசிக்கலையா?” என்று கேட்டு அவனின் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டினாள்.

அதில் கிளுங்கி சிரித்தவன் “பா… பா…” என்று பால் இருந்த பக்கம் கைக் காட்டினான்.

“பால் எங்க குட்டிக்கு மட்டும் தான். ஆனா அதுக்கு முன்ன என்ன செய்யணும்?” என்று யோசிப்பது போன்ற பாவனையில் கேட்க…

கவின் வேகமாகக் குளியலறை பக்கம் கையைக் காட்டி நான் சரியா சொல்லிட்டேனா? என்பது போலப் பவ்யாவின் முகத்தைப் பார்த்தான்.

“என் குட்டியப்பா சரியா சொல்லிட்டாங்களே!” என்று அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க அவனும் திருப்பி ஒரு முத்தம் கொடுத்தான்.

“சரி… சரி…! வாங்க…! வாங்க…! போகலாம்” என்றவள் குளியலறைக்கு அழைத்துச் சென்று கவினை சுத்தம் செய்து அழைத்து வந்தவள் பாலை குடிக்க வைத்தாள்.

அவன் குடித்து முடித்ததும் வரவேற்பறைக்குத் தூக்கிக்கொண்டு வந்து அங்கே அவனுக்காகக் கீழே விரித்து வைத்திருந்த மெத்தையில் விட்டு சில விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அமர வைத்து, “கொஞ்ச நேரம் நீங்க விளையாடுவிங்கலாம் அம்மா இன்னும் கொஞ்சுண்டு இருக்குற வேலையை முடிச்சுட்டு ஓடி வருவேனாம்” என்றாள்.

அவள் சொன்னதும் ‘சரி’ என்பது போலக் கவின் வேகமாகத் தலையாட்ட “என் சமத்துக் சக்கரக்கட்டி!” என்று கொஞ்சியவள் மதியத்திற்குத் தேவையான உணவை தனக்கும் கவினுக்கும் எனத் தனித் தனியே எடுத்து வைத்தாள்.

மீதம் இருந்த அனைத்து வேலைகளையும் முடித்தவள் கவினை குளித்துக் கிளம்பவைத்து, சாப்பாடு ஊட்டிவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு, மதியத்திற்குத் தேவையானதையும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு தான் இருந்த அப்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்தவள், தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தனக்கு முன்னால் கவினை அமர வைத்து தன்னையும் அவனையும் சேர்த்து ஒரு துணியால் இறுக கட்டிக் கொண்டு வண்டியை கிளப்பிக் கொண்டு தான் வேலை பார்க்கும் பள்ளியை நோக்கி வண்டியை விட்டாள்.

பவ்யா அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ள மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்டில் வசிக்கின்றாள்.

அந்த வீட்டில் பவ்யாவும், கவினும் மட்டுமே இருப்பதால் தங்களுக்கு என்று ஒரு அறையை மட்டும் உபயோகித்துக் கொண்டு மற்ற இரு அறைகளையும் பூட்டி வைத்திருந்தாள்.

அவ்வப்போது அந்த அறைகளைச் சுத்தம் செய்து வைக்க மட்டுமே அந்த அறைக்குள் செல்வாள்.

அதிலும் ஒரு அறை அவளும் வினய்யும் முன்பு உபயோகித்தது. அந்த அறைக்குள் சென்றாலே பல இனிய நினைவுகள் ஆட்டிப்படைக்கும். அதன் தொடர்ச்சி இரண்டு நாட்களாவது அவளைத் துரத்தும். நேற்று லீவ் நாள் என்பதால் அந்த அறையைச் சுத்தம் செய்யப் போக இரவெல்லாம் அவளைத் துரத்திய நினைவுகள் மறுநாள் காலையும் தொடர்ந்து விட்டது.

பவ்யா வேலை பார்ப்பது ஒரு பெயர் பெற்ற பள்ளியில். அங்கே உள்ள அலுவலகத்தில் கணக்கு வழக்குப் பார்ப்பது அவளின் அன்றாடப் பணி.

அதிலும் அவளுக்குக் கணினி நல்ல பரிச்சியம் என்பதால், அங்கே உள்ள கணினி சம்பந்தமான பொறுப்புகளும் அவளுக்கு உண்டு.

வேலைக்குச் செல்லும் முன் கவினை பள்ளி அருகிலேயே இருக்கும் ஒரு சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் நர்சரி பள்ளியில் கொண்டு போய் விடுவாள். தான் வேலை பார்க்கும் பள்ளி அருகில் இருப்பதால் இடைவேளை சமயமும் அவனைச் சென்று பார்த்து வர வசதியாக இருந்ததால் அவளுக்கு அதில் எப்போதும் ஒரு திருப்தி உண்டு.

இன்றும் அதே போல அவனை அந்தச் சிறார் பள்ளியில் கவினை விட்டுவிட்டு தான் வேலை பார்க்கும் பள்ளிக்குச் சென்றாள்.

அன்று முழுவதும் வழக்கமான தன் வேலைகளை முடித்து விட்டு மாலையில் கவினையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

அன்று இரவும் வினய்யின் நினைவு அவளை ஆட்டிப் படைத்தது.

கவின் உறங்கியிருக்க அவனுக்கு அணைவாகத் தலையணையை வைத்து விட்டுக் கட்டில் அருகில் இருந்த மேஜையின் முன் அமர்ந்து அங்கே இருந்த வினய்யின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.

“இப்போ என்ன செய்துட்டு இருப்பிங்க வினு? நான் இங்க உங்க நினைவா தூங்காம இருக்கேன். ஆனா உங்க மனதின் சிறு மூலையிலாவது நான் இருக்கேனா?” என்று புகைப்படத்தில் வசீகரமாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தவனிடம் கேட்டாள் பவ்யா.

என்னவன் எங்கே என்று தேடித்தான் பார்க்கின்றேன்!
தொலைந்தவன் தொலைதூரத்தில் இருக்க…
எப்போது வருவானோ?
என் கண்ணீர் துடைக்க!!!

*****

ஞாயிற்றுக்கிழமையான அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த ஒரு இரவு நேர விடுதியில் அமர்ந்து ஒரு பாட்டில் முழுவதும் இருந்த மதுபானத்தைச் சிறிது சிறிதாக ஊற்றி காலி செய்து கொண்டிருந்தான் பவ்யாவின் நாயகன் வினய்.

மதுவை குடித்துக் கொண்டே தன்னைச் சுற்றிலும் பார்த்தான். சிலர் நண்பர்களாக வந்திருக்க, சிலர் ஜோடிகளாக அமர்ந்து மதுவில் மூழ்கி இருந்தனர்.

அவன் மட்டும் தனியே வந்திருக்க, அவனைக் கவனித்த ஒரு பெண் வினய்யின் எதிரே வந்து அமர்ந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன? என்று கூடக் கேட்காமல் அமைதியாக இருக்க, அந்தப் பெண் அங்கே ஒரு சிலர் ஆடிக்கொண்டு இருக்கும் இடத்தைக் காட்டி, அவனையும் ஆட அழைப்பு விடுத்தாள்.

அவளின் அழைப்பிற்கு மறுப்பாகத் தலையாட்டியவன், மதுவே இப்போது என் உயிர் என்பது போல அதில் மூழ்க ஆரம்பித்தான்.

மதுவுடன் நள்ளிரவு வரை கழித்தவன் வெளியே வந்து ஒரு வாடகை வண்டியை பிடித்துத் தன் வீட்டை நோக்கி சென்றான்.

அவனுக்கு அங்கே சொந்தமாகக் கார் இருந்தாலும் இது போலக் குடிக்கும் போது வண்டி ஓட்ட முடியாமல் போவதால் அந்த நேரத்திற்கு மட்டும் வாடகை வண்டியை பயன்படுத்திக் கொள்வான்.

நள்ளிரவை தாண்டி தான் மட்டுமே வசிக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்தவன் லேசாகத் தள்ளாடிய படி நேராகப் படுக்கையில் சென்று விழுந்தான்.

படுத்த சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவியவன் “ச்சு…! அமைதியா இரு பேபி. தள்ளிப்போகாதே! இங்கே வா…!” என்று உறக்கத்தில் உளற ஆரம்பித்தான்.

அவனின் உளறல்கள் சில அந்தரங்கமாகவும் மாற ஆரம்பித்தன. உளறல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

இரவு முழுவதும் அவ்வப்போது தொடர்ந்த உளறலை நிறுத்தவென்றே அவனின் போன் அழைத்தது.

“ச்சை…! மனுஷன் நிம்மதியா தூங்க முடியாம இதுவேற…” என்ற புலம்பலுடன் தீயாய் எரிந்த கண்களைத் தேய்த்து விட்டுக்கொண்டு எழுந்து போனை பார்த்தான்.

அழைப்பில் இருந்த பெயரை பார்த்ததும் ‘மணி என்ன ஆச்சு?’ என்று மணியைப் பார்க்க அது ஆறரை என்றது.

“இப்ப இவர் எதுக்குப் போன் பண்றார்? காலைலயே கச்சேரி வைப்பாரே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் எடுப்பதா வேண்டாமா எனப் போனையே பார்த்துக் கொண்டிருக்கும் போது அழைப்பு நின்று விட்டது.

“ஹப்பா…! நின்னுருச்சு… இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோம்” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட படி மீண்டும் படுத்தான்.

‘அப்படி நிம்மதியாக உன்னை விட்டுவிடுவேனா என்ன?’ என்பது போல மீண்டும் போன் அழைத்தது.

இன்னும் எடுக்காமல் விட்டால் இன்று முழுவதும் இந்தப் போன் அடித்துக் கொண்டே இருக்கும் என்று அறிந்தவன் போனை ஆன் செய்து காதில் வைத்து ‘ஹலோ’ என்று கூடச் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அந்தப் பக்கம் அழைத்த அவனின் தந்தை ரங்கநாதன் “எப்ப தம்பி ஊருக்கு வர போற?” என்று நேராக விஷயத்திற்கு வந்தார்.

“இதுக்குப் பதில் நான் முன்பே சொல்லிட்டேன். அப்புறம் ஏன் என்னைத் திரும்பத் திரும்பத் தொந்தரவு பண்றீங்க?” என்று வினய்யும் சுத்தி வளைக்காமல் பட்டெனப் பேசினான்.

“இங்க உனக்குன்னு உன் மனைவியும், உன் பிள்ளையும் காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்க நினைப்புனாலும் உனக்கு இருக்கா இல்லையா?”

“அவங்க நினைப்பு எனக்கு எதுக்கு?” என்று வினய் அலட்சியமாகச் சொல்ல…

“டேய் தம்பி…! அது உன் பிள்ளைடா. உன் ரத்தம். அது என்ன தப்பு பண்ணுச்சுன்னு இப்படி அந்தப் பிள்ளை முகத்தைக் கூடப் பார்க்க வராம இருக்க?” என்று கேட்டார்.

“எல்லாம் நீங்க செய்த குளறுபடியால தானே இப்படி ஆச்சு? என்னமோ எல்லாம் என் தப்பு போல ஏன் அடிக்கடி போன் போட்டுத் தொந்தரவு செய்றீங்க?” என்று கோபத்துடன் பதிலுக்குக் கத்தினான்.

“சரிடா என் தப்பாவே இருந்துட்டு போகட்டும். உன் பிள்ளைகிட்டயாவது போன்ல பேசலாம்ல? அந்தப் பிள்ளை ராசா மாதிரி. உன்னைப் போலவே லட்சணமா இருக்கான். இப்படிப் பிள்ளையைக் கூட நீ வெறுப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை” என்று அந்தப் பக்கம் இருந்து அவர் வருந்த…

வினய் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதித்தான்.

அவன் அமைதியில் கோபம் அடைந்து “இவ்வளவு வீம்பா இருக்கிறவன் அந்தப் பிள்ளை பிறக்குற அளவுக்கு நடந்திருக்கவே கூடாது…” என்று கடுமையாகச் சொன்னார்.

“ஹா…! அதுக்கு நான் என்ன செய்ய? கல்யாணம் முடிச்சு வச்சா குழந்தை பிறக்க தான் செய்யும். இதை என்னவோ பெரிய விஷயம் போலப் பேசுறீங்க?” என்று நக்கலாகச் சொன்னான்.

“எப்ப இருந்துடா, இப்படிப் பேச கத்துக்கிட்ட?” என்று அவன் நக்கல் பொறுக்காமல் வருத்தமாகக் கேட்டார்.

“ஹ்ம்ம்…! எப்ப இருந்து என் ஆசையையெல்லாம் குழி தோண்டி புதைச்சீங்களோ அப்ப இருந்து” என்றான் கடுமையாக.

அதில் அவரின் வேதனை அதிகரிக்க, “ப்ச்ச்…! உங்க அம்மா நம்மளை விட்டு போய்ருக்கவே கூடாதுடா. அவ மட்டும் இருந்திருந்தா இப்ப நீ அங்க உட்கார்ந்துக்கிட்டு இப்படிப் பேசிருக்க மாட்ட. உங்க அம்மா பேச்சை கேட்காம போனதால் வந்த பலனை இப்ப அனுபவிக்கிறேன்.

நான் மட்டும் இல்லாம உன்னோட பொண்டாடி, பிள்ளையும் தனியா தவிக்கக் காரணம் ஆகிட்டேன்” என்று வருத்தத்துடன் பேசியவர் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.

அவர் வருத்தம் தன்னைச் சிறிதும் பாதிக்காதது போல நேரம் ஆகியிருந்ததால் எழுந்து குளித்துச் சாண்ட்விச் செய்து சாப்பிட்டு, தன் காலை உணவை முடித்துக் கொண்டு தன் காரில் அலுவலகம் நோக்கி பயணித்தான்.

காலையில் வேலைக்குச் செல்லும் உற்சாகம் குறைந்து தந்தையிடம் பேசியது அவன் நினைக்காமலேயே நினைவில் வந்து அவனைத் துரத்தியது.

‘பொண்டாட்டி… பிள்ளை…’ என்று தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு மேல் எதையும் நினைக்கப் பிடிக்காமல் காரில் இருந்த இசையை ஒலிக்க விட்டு அதில் தன் கவனத்தைத் திருப்பினான்.

சிறிது நேரத்தில் தான் வேலை செய்யும் அலுவலத்தில் நுழைந்தான். கலிபோர்னியா மாகாணத்தின் அந்தப் பெயர்பெற்ற அலுவலகத்தில் மேனேஜ்மென்ட் பிரிவில் நல்ல உத்தியோகத்தில் இருந்தான்.

அன்றைய பணியை ஆரம்பித்து விட்டு கிடைத்த இடைவெளியில் சொந்த மின்னஞ்சல்களை ஒரு பார்வை பார்த்தான்.

அதில் பவ்யாவின் மின்னஞ்சல் ஒன்றும் இருந்தது. அவளின் பெயரை பார்த்தவனின் கண்ணில் எந்தச் சலனமும் இல்லை. வெறுமையுடன் அவளின் பெயரை வெறித்தான். மாதம் ஒரு முறை அவளிடம் இருந்து வரும் மின்னஞ்சல் வழமை தான் என்பதால் அதை அவன் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.

ஆனால் அவன் தந்தை காலையில் பேசியதும், இப்போது வந்த பவ்யாவின் மின்னஞ்சலும் அவனின் நினைவுகளைக் கிளற முயல, அதை அப்படியே அடக்கி வைத்தவன், பவ்யாவின் மின்னஞ்சலை திறக்காமல் அப்படியே அதைக் கண்டு கொள்ளாமல் மற்ற மின்னஞ்சல்களைப் பார்த்து விட்டு லாக்அவுட் செய்துவிட்டு தன் அலுவலக வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

*****

மறுநாள் செவ்வாய் அன்று மாலை பவ்யா வேலை முடிந்து வீட்டிற்கு வர, அங்கே ஏற்கனவே அவளின் பிளாட்டினுள் வந்து அமர்ந்திருந்தார் ரங்கநாதன்.

கதவை திறந்து உள்ளே வந்த பவ்யா அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த தன் மாமனாரை பார்த்ததும் “வாங்க மாமா… எப்போ வந்தீங்க?” என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே… “தத்தா…!” என்று அழைத்துக்கொண்டே தூக்கி வைத்திருந்த பவ்யாவின் இடுப்பில் இருந்து இறங்கி அவரிடம் ஓடினான் கவின்.

பவ்யாவின் கேள்விக்கு “இப்போதான்மா…” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் இருந்து எழுந்து தன்னை நோக்கி ஆசையாய் ஓடி வந்த பேரனை கையில் தூக்கி அள்ளி அணைத்துக் கொண்டார்.

இனி அவர்கள் இருவரின் உலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் தன் அறையினுள் நுழைந்து வேறு உடைக்கு மாறி சுத்தம் செய்து கொண்டு வந்தவள் சமையலறைக்குச் செல்ல போக, வழியில் இருந்த சாப்பாட்டு மேஜையில் ஒரு பிளாஸ்க்கும், இரண்டு ஹாட்பாக்ஸும் இருப்பதைப் பார்த்து நின்றாள்.

‘இன்னைக்கும் கொண்டு வந்துட்டாரா இந்த மாமா? எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டாரே…’ என்று உள்ளுக்குள் அலுத்தபடி ஹாட்பாக்ஸை திறந்துப் பார்த்தாள். ஒன்றில் சப்பாத்தியும், ஒன்றில் குருமாவும் இருந்தது. பிளாஸ்கில் காபியும் இருந்தது.

திரும்ப அதை மூடி வைத்தவள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து மகனுக்கு மட்டும் காய்ச்ச ஆரம்பித்தாள்.

ரங்கநாதன் வாரத்திற்கு இரண்டு முறையாவது மருமகள், பேரனை பார்க்க வந்துவிடுவார். பவ்யா வேலையிலிருந்து வர தாமதமானால் அவரிடம் எப்போதும் ஒரு சாவி இருப்பதால் அதை வைத்து உள்ளே அமர்ந்துக் காத்திருப்பார்.

ஒரே ஊரில் இருந்தும் தனி வீட்டில் தங்கியிருக்கும் மருமகளுக்கு அவர் வரும் போதே, அவர் மட்டும் இப்போது இருக்கும் வீட்டில் இருந்து மருமகள் கஷ்டப்படக் கூடாது என இரவுக்கு உணவும், காபியையும் எடுத்து வந்துவிடுவார்.

அப்படிக் கொண்டு வர வேண்டாம் எனப் பவ்யா தடுத்தும் ரங்கநாதன் தன் இந்தப் பழக்கத்தை விட்டு விடுவதாக இல்லை.

கவினுக்குப் பாலை ஆற்றி எடுத்து வந்து மேஜையில் வைத்து விட்டு, மெத்தையில் குழந்தையுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த மாமனாருக்கு முதலில் காபியை ஊற்றிக் கொடுத்து “இத குடிச்சிட்டு இருங்க மாமா. அதுக்குள்ள நான் கவினுக்கு ட்ரஸ் மாத்தி விட்டுக் கொண்டு வர்றேன்” என்றவள் கவினை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

கவினை சுத்தம் செய்து உடையை மாற்றி விட்டு வெளியே வந்து பாலை பருக வைத்து அவனிடம் சில விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விளையாட விட்டவள், தன் மாமனாரின் எதிரே அமர்ந்து “அப்புறம் சொல்லுங்க மாமா! உங்க உடம்புக்கு எப்படி இருக்கு? வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று விசாரித்தாள்.

“அது எப்பயும் போலத் தான்மா இருக்கு. அது எல்லாம் ஒரு குறையும் இல்லாம தான் போகுது” என்று லேசாகச் சலித்த படி சொன்னார்.

“ஏன் மாமா இவ்வளவு சலிப்பு?” என்று பவ்யா கேட்கவும்,

“ஏன்னு உனக்குத் தெரியாதாமா?” என்று அவளைக் கூர்ந்துப் பார்த்த படி அவரும் கேட்டார்.

அவர் கேள்வியில் மகனின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் பவ்யா.

அவளின் மௌனத்தைப் பார்த்து “இருந்தாலும் உங்க இரண்டு பேருக்கும் ஒன்னு போல இவ்வளவு வீம்பு இருக்கக் கூடாதுமா…” என்றார்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு “அவனுக்குப் போன் எதுவும் போட்டியா?” என்ற அவரின் கேள்வியில் மகனிடம் இருந்து பார்வையைத் திருப்பி ‘உங்களுக்குத் தெரியாததா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.

அதில் அவரின் முகம் வாட “அவனும் போன் போட மாட்டான். நீயும் போட மாட்ட. உங்க வீம்புனால இந்தப் பிள்ளை தான் இப்ப அப்பாவை பிரிஞ்சியிருக்கு” என்று அவர் சொல்லவும்,

“இந்த நிலைமைக்கு மூலக் காரணம் யார் மாமா?”என்று கண்ணில் லேசான கோபத்துடன் கேட்டாள்.

“ஆமா… என்னையே இரண்டு பேரும் குறை சொல்லுங்க. நான் ஏதோ நினைச்சு ஒன்னு செய்ய. அது எங்கேயோ போய் நிக்கிது. இரண்டு பேருமே இறங்கி வராம உச்சாணி கொம்புல நின்னா எப்படிம்மா?” என்று அவர் வருத்ததுடன் கேட்டார்

‘பாவம் அவரும் தான் என்ன செய்வார்?’ என்று தணிந்த பவ்யா அமைதியானாள்.

“நான் அவனுக்குப் போன் போட்டேன்” என்று மெதுவாக ஆரம்பித்துப் பவ்யாவின் மனநிலையைக் கணிக்க முயன்றார்.

அவர் சொன்னதிற்கு எந்தப் பாவனையும் காட்டாமல் அமைதியாகப் பவ்யா இருக்க… அவளிடம் எந்த மாற்றமும் தெரியாமல் போனதில் மனம் சோர்ந்தவர் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் “கவின் குட்டி வாங்க கடைக்குப் போய்ட்டு வரலாம்” என்று பேரனை தூக்கிக் கொண்டு வெளியில் சென்றார்.

வெளியே போகும் போது மகன் சொன்ன டாட்டாவை கூடக் கருத்தில் கொள்ளாமல் அவளவனின் நினைவில் ஆழ்ந்தாள்.

மாமனார் கணவனைப் பற்றிச் சொல்ல வரும் போது வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் கணவன் என்ன பேசியிருப்பான் என்று அறிய ஆவல் அவளுக்கு மிகுதியாகவே இருந்தது.

ஆனால் அதனைத் தான் வெளியே காட்டினால் மாமனார், மகனை எப்படியாவது இங்கே வர வைத்து விடுவார். அதுவும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நிச்சயம் அது அவளுக்குச் சந்தோசத்தைத் தராது. அவனாக விரும்பி வர வேண்டும். அதைத் தான் அவள் எதிர்ப்பார்க்கின்றாள்.

அதுவும் தான் வினய்க்கு மின்னஞ்சல் அனுப்புவதை மாமனாருக்கு சொல்லியதில்லை.

அந்த மின்னஞ்சல் என்றாவது வினய்யின் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள் பவ்யா.

வினய் அந்த மின்னஞ்சலை திறந்துக் கூடப் பார்ப்பதில்லை என்று தெரிந்தால் பவ்யாவின் நம்பிக்கை என்னாகுமோ?