1 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 1

அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன்.

அவனின் உறக்கத்தைக் கலைப்பது போல் வெளியே ஏதோ பேச்சு குரலும், உருட்டல் சப்தமுமாகக் கேட்க, அவனின் இமைகள் மெல்ல சுளித்துக் கொண்டன.

நேரம் செல்ல செல்ல சப்தம் அதிகமாகக் கேட்க ஆரம்பித்தது. அதிலும் ஒரு பெண் குரல் ஓங்கி ஒலிக்க, உறக்கத்தின் பிடியிலிருந்த அவனின் நெற்றி சுருங்கி விரிந்தது.

“டேய்… மெதுவா, பார்த்து எடுத்து வை…” என்று அந்தப் பெண் குரல் கத்தலாக ஒலிக்க, இப்போது முகத்தை லேசாகச் சுளித்துக் கொண்டான்.

“நான் பார்த்துதான் எடுத்து வைக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் ஒழுங்கா பாரு…” என்று இப்போது ஒரு ஆண் குரல் அடுத்ததாக அதை விட ஓங்கி ஒலிக்க, அவனின் தூக்கம் முற்றிலுமாகக் கலைந்து போனது.

“ஷ்ஷ்… இரண்டு பேரும் கத்தாம எடுத்து வைங்க. மத்த குடித்தனக்காரங்களுக்குத் தொந்தரவா இருக்கப் போகுது…” என்று மென்குரலில் அதட்டியது ஒரு பெண்மணியின் குரல்.

‘அந்த அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே இந்த வேலையைச் செய்திருந்தால் நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்…’ என்று முனகி கொண்டே கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டான்.

“டேய், அது என்னோட ஸ்பெஷல் திங்க்ஸ் பாக்ஸ். கீழே போட்டு உடைச்சுடாதே…” என்று அந்தப் பெண்மணியின் அதட்டலுக்குப் பின்பும் அந்தப் பெண்ணின் குரல் உயர்ந்து தான் ஒலித்தது.

“ஷ்ஷ், ஷப்பா… அந்தப் பொண்ணு நாலு ஸ்பீக்கரை தொண்டைக்குள் முழுங்கிட்டு தான் வந்திருக்கும் போல. இந்தக் கத்து கத்துது. புது வீட்டுக்கு குடிவரும் முதல் நாளே இந்தக் கத்துனா இனி போகப் போக எவ்வளவு கத்து கத்துமோ?” என்று புலம்பிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தான்.

இரவு அடிக்கடி மின்சாரம் சென்று கொண்டே இருந்ததால் காற்றுக்காகத் திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

அங்கே இருந்து பார்த்தால் வெளி வராண்டா நன்றாகத் தெரியும்.

வெளியே ஆட்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் நடப்பது தெரிந்தது. இருவர் ஒரு பீரோவை தூக்கிக் கொண்டு சென்றனர்.

அவர்களைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அப்போது அந்த ஜன்னலை தாண்டி மஞ்சள் வண்ண சுடிதார் அணிந்த பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிய, “இந்தப் பொண்ணு தான் அப்படிக் கத்துச்சு போல…” என்று நினைத்துக் கொண்டான்.

மேலும் பொருட்களை எடுத்து வைக்கும் சப்தமும், பேச்சுக் குரலும் தொடர்ந்து கொண்டே இருக்க, அதைக் கேட்டுக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து சென்று ஜன்னலை மூடி விட்டு குளியலறைக்குச் சென்றான்.

அவன் குளித்து முடித்து இடையில் துவாலையைக் கட்டிய படி வெளியே வந்த போது அவனின் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

‘இந்த நேரத்தில் யார்?’ என்று நினைத்துக் கொண்டே வேகமாக உடையை மாற்றி விட்டு கதவை லேசாகத் திறந்து பார்த்தான்.

எதிரே ஒரு பெண்மணி லேசாகப் புன்னகை தோன்றிய முகத்துடன் கையில் ஒரு ட்ரேயுடன் நின்று கொண்டிருந்தார்.

அந்த ட்ரேயில் ஒரு டம்ளரும், ஒரு சிறு கிண்ணமும் வீற்றிருந்தது.

லேசாக விழிகளை உயர்த்தி அவரைக் கேள்வியுடன் பார்த்தான்.

“வணக்கம் தம்பி. என் பேர் அபிராமி. எதிர் வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கோம். அதனால் பால் காய்ச்சினோம். அப்படியே அக்கம் பக்கம் வீடுகளுக்கும் கொடுப்போம்னு எடுத்துட்டு வந்தேன். வாங்கிக்கோங்க தம்பி…” என்று கையில் இருந்த தட்டை அவனின் புறம் நீட்டினார்.

“ஓ! ஸாரிங்க. எனக்கு இப்படி யார்கிட்டயும் வாங்கிப் பழக்கம் இல்லை. நீங்க எடுத்துட்டுப் போங்க…” என்றவன் அவரின் பதிலுக்குக் காத்திராமல் கதவை சாற்றிக் கொண்டான்.

அவனின் செயலில் திகைத்து விழித்த அபிராமி, பின் அங்கிருந்து நகர்ந்தார்.

“உங்களுக்கு இந்த அவமானம் தேவையாமா? பாலையும், நீங்க செய்த கேசரியையும் சாப்பிடத்தான் நாங்க இங்கே இரண்டு பேர் இருக்கோமே. அப்புறம் ஏன் தட்டை தூக்கிட்டு வீடு வீடா போய் இப்படி அவமானப்பட்டு நிற்கிறீங்க?” என்று அந்தப் பெண்ணின் குரல் உயர்ந்து ஒலிக்க,

அது உள்ளே இருந்தவன் காதுகளிலும் விழுந்தது. ஆனாலும் அதற்கு அவன் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

“ஷ்ஷ்! கத்தாதேடி. அப்பா காதில் விழுந்தால் பெரிய பிரச்சனை ஆகிப்போகும்…” என்று பதறினார் அபிராமி.

“விழட்டும்மா. அப்பத்தான் நீங்க இனியும் யார் வீட்டுக்கும் தட்டை தூக்கிட்டு போக மாட்டீங்க. அந்த ஆள் பெரிய இவரு. அவருக்கு இப்ப பாலும், ஸ்வீட்டும் கொடுத்தாகணும்னு என்ன கட்டாயம்னு நீங்க தட்டை தூக்கிட்டு போய் இப்படி அவமானப்பட்டு வர்றீங்க?” என்று கடுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஆமா நான் பெரிய இவன் தான்னு சொன்னால் அவள் என்ன செய்வாளாம்?’ என்று உள்ளே இவன் முணுமுணுத்துக் கொண்டான்.

“அந்தத் தம்பிக்கு இந்தப் பழக்கம் எல்லாம் பிடிக்கலை போல. அது தெரியாம நான் போய்த் தட்டை நீட்டியது என் தப்பு. அதுக்கு எதுக்கு அந்தத் தம்பியை திட்டணும்? விடு, நீ முதலில் உள்ளே போ. உன் சாமானை எல்லாம் அடுக்கி வச்சுட்டு காலேஜுக்கு கிளம்பு…” என்று மகளை விரட்டினார்.

“உங்க முகத்து மேலேயே கதவை அடைச்சுட்டு போறார். அவர் என்னவோ உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தது போலத் தம்பி தொம்பிங்கிறீங்க…” என்று அவள் கடுப்புடன் முனங்கி விட்டு உள்ளே செல்வதை அவளின் குரல் தேய்ந்து ஒலித்ததில் புரிந்து கொண்டான்.

‘இவளே பெரிய கடுகா இருப்பாள் போல. இவள் என்னைக் குறை சொல்றாள்’ என்று நினைத்துக் கொண்டவன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

குளிர்சாதன பெட்டியிலிருந்து பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சுட வைத்தவன், காலை உணவுக்காக முட்டையையும், பிரட்டையும் எடுத்தான்.

முட்டையை ஊற்றி பிரட் ஆம்லேட் தயார் செய்து விட்டு, காய்ச்சிய பாலையும் ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் சென்று அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

‘இன்னைக்குச் சீக்கிரம் வந்து மாவு ஆட்டி வைக்கணும். பிரட் வரட்டி போல இருக்கு…’ என்று பிரட்டின் சுவையில் முகத்தைச் சுளித்தபடி நினைத்துக் கொண்டே உண்டு முடித்தான்.

காலை உணவை உண்டு விட்டு உபயோகப்படுத்திய பாத்திரங்களைக் கழுவி வைத்தவன் அறைக்குள் சென்றான்.

இலகுவாக உடுத்தியிருந்த உடையைக் கலைந்து விட்டு வேறு உடையை மாற்றினான்.

கண்ணாடியின் முன் நின்று தலையை வாரிக் கொண்டவன், மீசையையும் லேசாகச் சீப்பால் நீவி விட்டுக் கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்து விட்டு தன் வலது கையைக் கால்சட்டையின் பைக்குள் விட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை பிம்பத்தில் தன்னைத் திரும்பி திரும்பி பார்த்து விட்டு திருப்தியான ஒரு தலையசைவுடன் கண்ணாடியை விட்டு நகர்ந்தான்.

மேஜையின் மீதிருந்த தன் பையை எடுத்து இடது தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்து ஷாக்ஸ், சூவை மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டினான்.

அப்போது எதிர் வீட்டுக் கதவு லேசாகத் திறந்து வைத்திருப்பது தெரிந்தது.

அந்தப்பக்கம் அதிகம் திரும்பாமல் அந்த வீட்டை தாண்டி சென்றான். மொத்தம் ஏழு மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அது. ஒவ்வொரு தளத்திலும் நான்கு பிளாட் இருந்தது. அதில் ஐந்தாவது மாடியில் அவனின் பிளாட் இருந்தது.

ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டாக வாங்கியிருந்தான்.

ஒரு பெட்ரூமாக இருந்தாலும் அதுவும் சற்று பெரிய வீடாகவே இருந்தது.

விசாலமான வரவேற்பறையும், கச்சிதமான சமையல் அறையும், அதனை ஒட்டி சின்ன டைனிங் ஹாலும் இருந்தது. அதற்கு நேர் எதிராகப் படுக்கையறை இருந்தது.

படுக்கையறையும் விசாலமானதே. ஒற்றைக் கட்டில் மெத்தையும், ஒரு அலமாரியும் அதனை ஒட்டி மேஜையும் போட்டிருந்தான். மேஜையை ஒட்டித்தான் அந்தப் படுக்கையறையின் ஜன்னல் இருந்தது.

அந்த வீட்டில் அவனுக்கு இருக்கும் ஒரே சவுகரியமும், அசவுகரியமும் அந்த ஜன்னல் தான்.

அந்த ஜன்னல் வெளி வராண்டாவை ஒட்டி இருப்பதால் ஜன்னலை திறந்து வைத்தால் அந்தப்பக்கம் ஆட்கள் நடமாட்டம் நன்றாகத் தெரியும். அதனால் சற்று அசவுகரியமுமாக உணர்வான்.

ஆனால் உள்ளே இருந்து அவன் தான் வெளியே பார்க்க முடியும். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே பார்க்க முடியாத மாதிரியான கண்ணாடி போட்டிருந்ததால் அது அவனுக்குச் சற்றுச் சவுகரியமாக இருந்தது.

ஆனாலும் அந்த ஜன்னலை வேறு பக்கம் மாற்றி வைக்கும் முடிவும் அவனிடம் இருந்தது. அந்த வேலையைச் செய்ய இப்போது சந்தர்ப்பம் இல்லை என்பதால் தள்ளிப் போட்டிருந்தான்.

அந்த ஜன்னலுக்கு எதிர்பக்கமாகப் படுக்கையறையை ஒட்டி இன்னொரு அடுக்கு மாடி கட்டிடத்தின் சுவர் இருப்பதால் அந்தப் பக்கம் காற்றோட்டம் இருக்காது.

அதனால் மின்சாரம் இல்லை என்றால் அதிகப் புழுக்கமாக இருக்கும் சமயங்களில் ஜன்னலை லேசாகத் திறந்து வைத்து கொள்வான்.

‘நேத்து நைட் சும்மா சும்மா கரண்ட் போய்ட்டே இருந்தது. ஒரு இன்வென்டர் வாங்கி வைக்கணும்…’ என்று மனதில் நினைத்துக் கொண்டே படியிறங்கி சென்றான் அவன்.

அங்கே மின்தூக்கி இருந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் கூடுமான வரை படிக்கட்டை தான் அவன் பயன்படுத்துவான்.

தனியாக உடற்பயிற்சி செய்ய அவனுக்கு நேரமில்லை என்பதால் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வான். அருகில் இருக்கும் கடைகளுக்கு நடந்தே செல்வது. படிகளில் இறங்கி செல்வது என்று அவனின் உடலில் கூடுதல் சதை என்பதே இல்லாமல் பார்த்துக் கொண்டான்.

அது அவனை அழகான கட்டுக்கோப்பான ஆணாகக் காட்டியது.

அவசரமாகவும் இல்லாமல், நிதானமாகவும் இல்லாமல் சீரான வேகத்தில் படியின் வழியாகக் கீழே இறங்கி பார்க்கிங் சென்றான்.

அவனின் சில்வர் கலர் கார் தரிப்பிடத்தில் வீற்றிற்க அதன் அருகில் சென்றான்.

ஆனால் அருகில் செல்லும் போதே அவனின் முகம் லேசாக மாறியது.

காரணம் அவனின் காரின் அருகில் நின்றிருந்த ஒரு ஸ்கூட்டி.

அதுவும் அவனின் கார் கதவை திறக்க முடியாதவாறு காரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அவனின் முகம் இப்போது கடுமையாக மாறியது.

அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் சில விதிமுறைகள் உண்டு. அதில் ஒன்று வாகனங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

அந்த விதிமுறை குடியிருப்பில் இருக்கும் அத்தனை குடித்தனகாரர்களுக்கும் பொறுத்தமானது.

அதை யாரும் மீறி நடந்து கொள்வதும் இல்லை. அப்படியே தேவை இருந்தாலும் மற்றவர்களிடம் சம்மதம் கேட்காமல் நிறுத்தவும் மாட்டார்கள்.

ஆனால் இப்போது அவனின் வாகனங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் அவனின் அனுமதி பெறாமல் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை வெறித்துப் பார்த்தான்.

அது யாருடையதாக இருக்கும் என்று யோசிக்க அவனுக்கு அதிக நேரம் தேவையிருக்கவில்லை.

அந்த வரிசை தரிப்பிடம் எல்லாம் ஐந்தாவது மாடியில் குடியிருக்கும் குடித்தனகாரர்களுக்கு உரியது.

ஒவ்வொரு தரிப்பிடத்திற்கும் பிளாட் நம்பர் குறிக்கப்பட்டிருக்கும். இன்று புதிதாகக் குடிவந்த எதிர்வீட்டுக்குரியது தான் பக்கத்தில் இருக்கும் தரிப்பிடம்.

அவர்களின் தரிப்பிடத்தில் ஒரு கார், ஒரு பைக் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. அதே குடும்பத்தைச் சேர்ந்த ஸ்கூட்டியை நிறுத்த அங்கே இடம் இல்லை என்றதும் அவனின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அவனின் அனுமதியும் கேட்கவில்லை. தன் காரையும் எடுக்க முடியாத அளவும் நிறுத்தி வைத்திருப்பது அவனுக்குச் சினத்தை உண்டாக்கியது.

சுற்றி முற்றி பார்த்தான். அங்கே வழக்கமாக இருக்கும் காவலாளியை காணவில்லை.

‘எங்கே போய்த் தொலைந்தான்…’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான்.

‘அந்த ஸ்பீக்கரை முழுங்கியவளுக்குக் கொழுப்பு அதிகம் தான். வண்டியை எப்படி நிறுத்தியிருக்காள் பார். அவளை…’ என்று பல்லைக் கடித்தப்படி அவன் நின்றிருந்த போது அவனின் முதுகின் பின்னால் தடதடவெனச் சப்தம் கேட்டது.

“ஹலோ சார், ஒரு நிமிஷம், இதோ என் வண்டியை எடுத்துடுறேன்…” என்று சொல்லிய படி ஓடி வந்து கொண்டிருந்தாள் எதிர்வீட்டு ஸ்பீக்கர்.

மூச்சு வாங்க ஓடி வந்தவள் அவனைத் தாண்டி வந்து அவளின் ஸ்கூட்டியில் கை வைத்தாள்.

“ஹலோ, யாரைக் கேட்டு இங்கே உங்க ஸ்கூட்டியை நிறுத்தினீங்க?” என்று கடுப்புடன் கேட்டான்.

வண்டியில் சாவியைத் திணித்துக் கொண்டிருந்தவள் வியப்பாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“யாரை கேட்கணும்?” என்று விழி உயர்த்திக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் அவனுக்குச் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.

“என்கிட்ட கேட்கணும். இது என் பார்க்கிங் ஏரியா…” என்றான் கடுமையாக.

“உங்களோடது தான் சார். அதை யார் இல்லைன்னு சொன்னது? எங்க பார்க்கிங் ஏரியாவில் இடம் பத்தலை. இங்கே உங்க பார்க்கிங்ல உங்க கார் மட்டும் தான் நின்னுச்சு. சரி இங்கே கொஞ்சம் இடம் இருக்கேன்னு நிறுத்தினேன்…” என்றாள் கூலாக.

“இடம் இருக்கேன்னு நிறுத்த இது ஒன்னும் உங்க இடம் இல்லை. என் இடம். இங்கே அடுத்தவங்க இடத்தில் அவங்க அனுமதி இல்லாம நிறுத்த கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. குடி வரும் போது இங்கே என்னென்ன ரூல்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு வர மாட்டீங்களா?” என்று கேட்டான்.

“இங்கே என்ன ரூல்ஸ் இருக்குனு என் அப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சால் போதும் சார். காலேஜ் போற பொண்ணு நான் தெரிஞ்சி என்ன பண்ண போறேன்?” என்று அசால்டாகத் தோளை குலுக்கிக் கொண்டு கேட்டாள்.

“ஹலோ, என்ன திமிரா? என் அனுமதி இல்லாம இங்கே நிறுத்தியதும் இல்லாம ரொம்பக் கூலா பேசிட்டு நிற்கிறீங்க. வாட்ச்மேன்… வாட்ச்மேன்…” அவளிடம் கோபமாகக் கேட்டவன் காவலாளியையும் அழைத்தான்.

“சார்… சார்… இப்ப எதுக்கு வாட்ச்மேனை கூப்பிடுறீங்க?” என்று கேட்டாள்.

“ம்ம்… உங்களுக்கு இந்த அப்பார்மென்ட் ரூல்ஸ் பத்தி பாடம் எடுக்க…” என்றான்.

“அய்யோ! சார், நான் ஏற்கனவே காலேஜ் போய் அங்கே ப்ரொபசர்ஸ் போடும் அறுவையை எல்லாம் கேட்க போறேன். இந்த இலட்சணத்தில் இங்கேயும் பாடமா? தொடர்ந்து பாடம் அறுவையா கேட்டால் என் காது சவ்வு கிழிஞ்சிடும் சார்.

இப்ப என்ன உங்ககிட்ட அனுமதி கேட்டு வண்டியை நிறுத்தணும். அவ்வளவு தானே? இதோ இப்ப கேட்குறேன் சார். எங்க இடத்தில் என் ஸ்கூட்டி நிறுத்த இடம் இல்லை சார். அதனால் நான் உங்க இடத்தில் வண்டியை நிறுத்திக்கிறேன் சார். சரிதானே சார்? உங்ககிட்ட அனுமதி கேட்டுட்டேன். இனி இங்கேயே நிறுத்திக்கிறேன். பை சார்…” என்று அவனிடம் படபடவென்று பேசிக் கொண்டே தன் வண்டியை இயக்கியவள் அடுத்த நொடி நிற்காமல் அங்கிருந்து பறந்தாள்.

அவள் அனுமதி கேட்ட லட்சணத்தில் அவன் தான் மலைத்துப் போய் நின்றிருந்தான்.

‘அட ஸ்பீக்கரு…’ என்று நினைத்தவன், ‘அவளா வந்தாள், கடுகை அள்ளிப் போட்ட மாதிரி பொரிஞ்சாள். வண்டியை கிளப்பிக்கிட்டு போயிட்டாள். அவளா அதிகாரமா இங்கே வண்டியை நிறுத்திக்கிறேன்னு சொல்லிட்டு போறாள். இதுவா என்கிட்ட அனுமதி கேட்கும் லட்சணம்?’ என்று கடுப்புடன் முனங்கி கொண்டான்.

அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டதை உணர்ந்தவன், இன்னும் நேரத்தை வீணடிக்காமல் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“ஹாய்… ஹாய்…” என்று உற்சாகமாகக் கல்லூரிக்குள் நுழைந்தாள் அவள்.

“வா… வா நயனி…” என்று அவளின் தோழிகளும் அதே உற்சாகத்துடன் வரவேற்றனர்.

“வர்றேன்… வர்றேன்…” என்று அவர்களின் அருகில் அமர்ந்தாள்.

“இன்னைக்குப் புது வீடு போறதா சொன்னியே நயனி. போகலையா? என்று விசாரித்தாள் அவளின் தோழி பானு.

“காலையில் சீக்கிரமே போயிட்டோம் பானு…”

“அப்புறம் ஏன் லீவ் போடாம காலேஜ் வந்துட்ட நயனி. இன்னைக்கு நிறைய வேலை இருக்குமே?”

“பெரிய சாமான் எல்லாம் அடுக்க அப்பா ஆள் போட்டுட்டார் பானு. சின்னப் பொருட்களைத் தான் எடுத்து வைக்கணும். நானும் தம்பி, அம்மாவுமே பாதி எடுத்து வச்சுட்டோம். மீதி ஈவ்னிங் எடுத்து வச்சால் போதும். நீ காலேஜ் போயிட்டு வான்னு அம்மா தான் விரட்டி விட்டாங்க. சரி வீட்டிலேயே இருந்தால் இன்னைக்கு வேலை பெண்ட்டை நிமிர்த்திடும்னு தான் நானும் காலேஜ் ஒடி வந்துட்டேன்…” என்றாள் நயனிகா.

“எப்படியோ ஒரு புதுப் பிளாட் வாங்கிக் குடி போயிட்டீங்க. கன்கிராட்ஸ் நயனி…” என்று வாழ்த்தினாள் பானு.

“அது என்னவோ சரிதான். இத்தனை வருஷமா அப்பாவுக்குக் கம்பெனியில் கொடுத்த குவாட்டரஸ்ல காலத்தை ஓட்டிட்டோம். இனி சொந்த பிளாட்ல இருக்கப்போறோம்…” என்றாள்.

“ஏய் நயனி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று பின் வரிசையில் அமர்ந்திருந்த அனிதா கேட்க,

“எனக்கு என்னடி தெரியும்? நம்ம கிளாஸ் நியூஸ் சேனல் நீ தானே. நீ நியூஸை ஆரம்பி. நாங்க தெரிஞ்சிக்கிறோம்…”

“இதோ…” என்ற அனிதா, “டொட்டடொய்… வணக்கம் செய்திகள் வாசிப்பது உங்கள் அனிதா. மூன்றாமாண்டு கணித பிரிவு பேராசிரியை துர்கா அவர்கள் தனது பிரசவத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு செல்வதால் அவருக்குப் பதிலாக, அழகான, இளமையான, ஹேன்ட்சம்மான, கட்டிளம் காளை, கல்யாணம் ஆகாத கட்டப்பிரச்சாரி, களையான இளம் வாலிபர் கணித பேராசிரியராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்ர்ர்ர்ர்…” என்று ராகமாக அனிதா வாசித்து முடிக்க, அவளைச் சுற்றிலும் அமர்ந்திருந்த இளம்பெண்கள் கூட்டம் ஆஆ…வென்று வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ஏய்… நிஜமாவாடி?” என்று ஆர்வமாகக் கேட்டாள் நயனிகா.

“நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல் நயனி. முற்றிலும் உண்மை…” என்று அனிதா கண்சிமிட்டி சிரிக்க,

“சூப்பர்டி, கல்யாணம் ஆன அங்கிள்களையும், ஆன்ட்டிகளையும் பார்த்து பார்த்து கண்ணு பூத்துப் போச்சு. இனி கண்ணுக்குக் குளிர்ச்சியா கட்டிளம் காளையைப் பார்க்கலாம்னு சொல்லு…” என்றாள்.

“ஆமா…” என்றாள் அனிதா.

மாணவிகள் அனைவரும் வரப்போகும் இளமையான கணித பேராசிரியருக்காகக் காத்திருந்தனர்.

முதல் வகுப்பே கணித வகுப்பாக இருக்க, கணித பேராசிரியை துர்காவுடன் புதுப் பேராசிரியரும் உள்ளே வர, அவனை அனைத்து மாணவிகளும் கண்களை விரித்து, முகம் ஜொலிக்க ஆர்வமாகப் பார்க்க ஒருத்தி மட்டும் வெளுத்துப் போன முகத்துடன் பேராசிரியரை பார்த்தாள்.

“ஹாய் ஸ்டுடெண்ட்ஸ்… நான் நாளையில் இருந்து டெலிவரிக்காக லீவ்ல போறேன். இன்னைக்கு இருந்து எனக்குப் பதில் உங்க ப்ரொபஸரா வரப்போவது இவர் தான். இவர் பெயர் கதிர்நிலவன். மேத்ஸ்ல கோல்ட் மெடல் வாங்கியிருக்கார். சார் இனி கிளாஸ் பார்த்துப்பார். நான் கிளம்புறேன் ஸ்டுடெண்ட்ஸ்… என்று மாணவர்களிடம் சொன்ன மேடிட்ட வயிறுடன் இருந்த துர்கா, கதிர்நிலவனின் புறம் திரும்பி, “ஆல் தி பெஸ்ட் சார்…” என்று வாழ்த்தினார்.

“தேங்க்யூ மேடம்…” என்று அவருக்கு அவன் பதில் சொன்னதும் துர்கா கிளம்பி விட, கதிர்நிலவன் மாணவர்களின் புறம் திரும்பி ஒவ்வொரு வரிசையாகப் பார்த்தான்.

அவனின் பார்வை இரண்டாவது வரிசையில் இருந்த மாணவிகள் புறம் திரும்பிய போது,

‘அட! இந்தச் சுடுதண்ணியா புது ப்ரொபஸர்?’ என்று அவனைத் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டாவது வரிசையில் இருந்த நயனிகா.