🖊️துளி 6👑

தேர்தல் திருவிழா ஜரூராக நடைபெற ஸ்ராவணி அதில் கவனத்தை செலுத்தாமல் அவளின் வேலையைக் கவனிக்க தொடங்கினாள். அவளுக்கு விஷ்ணு கொடுத்த வேலை ஒரு முக்கிய நபரை பற்றிய தகவல்களை திரட்டுவது. அதற்காகத் தான் அவள் ஒரு முக்கியமான அதிகாரியை சந்திக்க சென்று கொண்டிருந்தாள்.

அலுவலகத்தினுள் நுழைந்தவள் “ஏ.சி.பி சாரை பாக்கணும்” என்று கேட்க அவர்கள் அவளை பற்றிய விவரத்தை கேட்கவும் தன்னுடைய ஐ.டி கார்டை எடுத்து காட்டினாள் ஸ்ராவணி.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்” என்றபடி உயரதிகாரியின் அறைக்குள் சென்றவர் சில நிமிடங்களில் திரும்பி வந்து அவளை உள்ளே செல்லுமாறு கூற ஸ்ராவணி ஒரு தலையசைப்புடன் அந்த அறையை நோக்கி நகர்ந்தாள்.

கதவைத் தட்டி “மே ஐ கம் இன் சார்?” என்றவளை உள்ளே வரச் சொன்ன அந்த உயரதிகாரிக்கு ஒரு நாற்பது  வயது இருக்கலாம். விஷ்ணுவின் நெருங்கிய நண்பர் அவர்.

ஏற்கெனவே மருத்துவர் கிரிதரனின் வழக்கில் விஷ்ணு திரட்டியிருந்த ஆதாரங்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததால் அவனுடன் ஆரம்பித்த பழக்கம். இப்போது வேறு ஒரு முக்கியமான நபரின் ஊழலைப் பற்றிய தகவலை அவன் அவரது காதில் போட்டுவைக்கவும் அவரும் தன்னாலான முயற்சிகளைச் செய்து கூடிய விரைவில் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கூறியிருந்தார்.

அந்த விஷயமாக தன்னைப் பார்க்க வந்திருந்த ஸ்ராவணியை அமருமாறு இருக்கையை காட்டிவிட்டு அவள் பேசுவதற்காக காத்திருந்தார்.

அவள் தன்னை பற்றி கூறிவிட்டு தான் வந்த விவரத்தை பேச “ஓகே! இது ரொம்பவே சீரியஸான விஷயம் தான். பட் இதுல அக்யூஸ்ட்னு நீங்க பாயிண்ட் அவுட் பண்ணுறவர் ஸ்டேட்டோட சீஃப்.  அவரை எந்த வித ஆதாரமும் இல்லாம அரெஸ்ட் பண்ண முடியாது இல்லையா?” என்றார் அவர் யோசனையுடன்.

ஸ்ராவணி “ஆமா சார்! அதுக்கு தான் விஷ்ணு சார் ஒரு யோசனை சொன்னார். அது சம்பந்தமா உங்க ஹெல்ப் கேட்டு தான் நான் இங்க வந்துருக்கேன்” என்று அவரிடம் விளக்க

“என்ன ஹெல்ப் மேடம்?” என்று அவர் கேட்டுவிட்டு ஸ்ராவணியை பார்த்தார்.

“போன் டேப்பிங் பண்ணணும் சார். இந்தியன் டெலிகிராப் ஆக்ட் படி அதுக்கு உங்களுக்கு மட்டும் தான் அத்தாரிட்டி இருக்கு. சோ நீங்க சீக்ரெட் ஆர்டர் இஸ்யூ பண்ணுனா டெலிபோன் நெட்வொர்க் கம்பெனி அதை பார்த்துப்பாங்க” என்று சொல்ல அவர் யோசனையுடன் பேனாவால் தலையில் தட்டிக் கொண்டார்.

பின்னர் “ஓகே மிஸ் ஸ்ராவணி! இது சம்பந்தமா ஹையர் அபிஷியல்ஸ் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு நான் ஆர்டர் இஸ்யூ பண்ணுறேன். எப்பிடியும் இது எங்களுக்கும் இந்த கேஸ்ல ஒரு ஸ்ட்ராங் எவிடென்ஸா இருக்கும். சோ நான் அது சம்பந்தமா விஷ்ணு கிட்டவே பேசிக்கிறேன்” என்று சொல்லவும் ஸ்ராவணி அவரிடம் கை குலுக்கிவிட்டு நம்பிக்கையுடன் வெளியேறினாள்.

வெளியே வந்தவள் விஷ்ணுவுக்குப் போன் செய்து காரியம் வெற்றிகரமாக முடிந்த தகவலை தெரிவித்துவிட்டு தொடுதிரையைக் கவனித்தாள். வர்தனும் ஹரியும் மிஸ்ட் கால்ஸ் கொடுத்திருக்க அவர்களை அழைத்தாள்.

விசயம் என்னவென கேட்டுக்கொண்டு “என்ன?  நீங்க ஃப்ளையிங் ஸ்குவாடுக்கு கால் பண்ணுனிங்களாடா?  ஓகே நான் பண்ணுறேன். யா! நான் வந்துட்டே இருக்கேன்” என்று சொன்னபடி ஸ்கூட்டியை அவர்கள் வரச் சொன்ன இடத்தை நோக்கி விரட்டினாள்.

அங்கே வந்து இறங்கியதும் இருவரையும் கண்டவள் “நீங்க உங்க கண்ணால அதை பார்த்தீங்களா?  ஏன்னா அவன் சரியான கேடி. விஷயத்தை தோசை திருப்புற மாதிரி திருப்பி போட்டிடுவான்!  அதான் கேக்குறேன்” என்றபடி அவர்களை பார்க்க

இருவரும் “எங்க கண்ணால பார்த்தோம் வனி. கேண்டிடேட் அவர் கையால பணம் குடுத்தார். ஓட்டுக்கு பணம் குடுக்கிறது இந்தியால ரொம்ப பெரிய குத்தம்னு அவருக்கு தெரியாதோ என்னவோ?” என்று சொல்லிவிட்டு ஸ்ராவணியை நோக்கினர்.

அவள் “இது கூட தெரியாம அவன் என்ன கேண்டிடேட்? அதுல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும். அவன் சரியான கேடி” என்றாள் கடுப்பான குரலில்.

அதற்குள் தேர்தல் பறக்கும் படை வந்துவிட கூட்டத்தின் நடுவில் அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடி நடந்து வந்த அபிமன்யூ அந்த அலுவலர்களைக் கண்டு திகைத்தான்.

பக்கத்தில் நிற்கும் அஸ்வினின் காதில் “ஆபிசர்ஸ் எதுக்குடா வந்திருக்காங்க? ஒரு வேளை விஷயம் தெரிஞ்சிருக்குமோ?” என்க அவன் “விஷயம் தெரிஞ்சு வந்தாங்களானு தெரியல. பட் அவங்க கூட வர்ற ஆளை பாரு! உன் சந்தேகம் கிளியர் ஆகும்” என்று முணுமுணுத்தான்.

அபிமன்யூ அவர்கள் வந்த திசையை நோக்க அவர்களுடன் நின்ற ஸ்ராவணியைக் கண்டதும்  “ஓ! இவ வேலை தானா இது? இந்த மாதிரி நேர்மைப் பைத்தியங்களை சமாளிக்க எனக்கு தனி மூளை வேணும்டா அச்சு” என்று அஸ்வினின் காதில் முணுமுணுத்துவிட்டு  அருகில் வந்து நின்ற ஆபிசரிடம்

“ஹலோ சார்!  என்ன விஷயம்?  எல்லாரும் ஒன்னா வந்திருக்கிங்க?” என்று கேட்டுவிட்டு அவரை நோக்கியவன் ஓரக்கண்ணால் ஸ்ராவணியின் முகபாவத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அந்த அதிகாரி அபிமன்யூவிடம் “சார் இங்க ஓட்டுக்குப் பணம் குடுக்கிறதா கம்ப்ளெயிண்ட் வந்துச்சு. அதான் நாங்க ரெயிட் வந்துருக்கோம்” என்று கடமை தவறாத அதிகாரியாக அவனிடம் விளக்க

அதற்குள் அவன் பின்னே நின்றிருந்த அஸ்வின் ” மச்சி! இப்போ என்ன பண்ணுறதுடா? நான் சொன்ன மாதிரி நைட்டோட நைட்டா குடுத்துருக்கலாம். இப்போ பாரு ஆபிசர்ஸ் வந்துட்டாங்க” என்று சொல்ல

அபிமன்யூ சாவகாசமாக “இதுக்கெல்லாம் என் கிட்ட ஐடியா இருக்காதுனா நினைக்கிற அச்சு?” என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடியே கண் சிமிட்ட அஸ்வின் குழம்பி போனான்.

அஸ்வின் மட்டுமல்ல அடுத்து அவன் செய்த காரியத்தில் ஸ்ராவணியும் தான் குழம்பி போனாள்.

அபிமன்யூ அதிகாரிகளிடம் விவரத்தைக் கேட்டவன் வர்தனும் ஹரியும் அவன் பணம் கொடுத்ததாக கூறிய வீட்டுக்கே அவர்களை அழைத்து செல்ல அதனுள் இருந்து ஒரு ஒல்லியான பெண் இடுப்பில் குழந்தையுடன் வெளியே வந்தவர் அபிமன்யூவுக்கு வணக்கம் சொல்ல அவனும் பதிலுக்கு வணங்கியவன் அவர் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டான்.

ஸ்ராவணியும் அவளது சக பணியாளர்களும் அந்த அதிகாரிகளுடன் சேர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க அபிமன்யூ அந்த குழந்தை கொஞ்சியவன்

“இந்த குட்டிப்பையனோட அப்பா ரொம்ப காலமா எங்க கட்சியோட அடிப்படை உறுப்பினரா இருந்துருக்கார். இப்போ அவர் இறந்து போனதால இந்த குடும்பம் ரொம்ப சிரமப்படுதுனு எனக்கு தொகுதி பக்கம் வந்த பிறகு  தான் தெரியும். இப்போ நான் அவங்களுக்கு உதவி ஏதாவது பண்ணுனா கூட அது நீங்க சொல்லுற மாதிரி தேர்தல் முறைகேடுனு வருங்கிறதால நான் சும்மா இவங்களை பார்த்துட்டுப் போகலாம்னு இந்த வீட்டுக்கு வந்தேன்.  அப்போ தான் தெரிஞ்சுது இன்னைக்கு குழந்தைக்கு பிறந்தநாள்னு. எங்க கட்சிக்காக வாழ்ந்து மறைஞ்சவர் பையனோட பிறந்தநாளைக் கொண்டாடக் கூட அவரோட மனைவிக்கு வசதியில்லனு தெரிஞ்சதும் எனக்கு மனசுக்கு ரொம்ப வருத்தமா போயிடுச்சு ஆபிசர் சார்” என்று கோர்வையாகப் பேச அதிகாரிகள் அவனது பேச்சில் மூழ்கி விட்டனர்.

அவன் பெருமூச்சுடன்  “அதனால தான் என் பாக்கெட்ல என்னோட சொந்தச் செலவுக்கு நான் வச்சிருந்த பணத்தை குழந்தை கையில குடுத்தேன். இது தப்பானு எனக்கு தெரியல. உங்களுக்கு சந்தேகம்னா இவங்க கிட்டவே கேளுங்க” என்றபடி அந்த பெண்ணை காட்ட அதிகாரிகளின் கவனம் அவரிடம் சென்ற இடைவெளியில் ஸ்ராவணியிடம் வந்தவன் தோளில் கிடந்த குழந்தையை தட்டியபடி

“இந்த வேகாத வெயில்ல உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்று கேலியாக கேட்டுச் சிரிக்கவும் அவள் இவ்வளவு நேரம் இவன் சொன்ன கதையை உண்மையென்று நம்பியவள் இப்போது பொய்யென்று தெரிந்ததும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.

“குளோஸ் யுவர் மவுத். அண்ட சராசரமும் தெரியுது” என்று அவளின் தலையில் கை வைத்துத் தட்ட அவனது கையைத் தட்டிவிட்டாள் அவள்.

“இது தான் நீ லண்டன்ல பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்ச லெட்சணமா?” என்று கேட்க

அவனோ சாவகாசமாக “யாரோ சொன்னாங்க ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுனு. அதான் படிச்ச விஷயத்தை எல்லாம் மனசுல போட்டுப் புதைச்சுட்டு களத்துல என்ன செய்யணுமோ அதை செய்யுறேன்” என்று சொல்லிவிட்டு அழுத குழந்தையை சமாதானப்படுத்தினான்.

அதற்குள் அதிகாரிகள் அவனை சிரமப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டவர்கள் ஸ்ராவணியின் நண்பர்களின் கடமை உணர்ச்சியை பாராட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

அபிமன்யூ குழந்தையை தாயின் வசம் ஒப்படைத்துவிட்டு புன்னகை சிந்தியவன் ஸ்ராவணியை நோக்கி தலை மேல் கையை குவித்து ஒரு கும்பிடு போட்டபடி நகர அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான் அஸ்வின்.

இவ்வாறு பலவித கலவரங்களுக்கு நடுவில் தேர்தல் நாளும் வந்தது. ஓட்டு போட்டு விட்டு வந்த ஸ்ராவணிக்கு அந்த ஏ.சி.பியிடம் இருந்து போன் வந்தது.

“மேடம் நான் ஆர்டர் இஸ்யூ பண்ணிட்டேன். இனிமே நடக்க வேண்டிய விஷயங்கள் சரியா நடக்கும்” என்று அவர் சொல்லவும் மகிழ்ந்த ஸ்ராவணி தேர்தல் முடிவு வரும் நாளை நோக்கி ஆவலுடன் காத்திருந்தாள்.

தேர்தல் முடிவு வரும்  நாளில் அதை ஆவலுடன் எதிர்பார்த்த இன்னும் சில ஜீவன்களும் இருந்தன.  அபிமன்யூவின் வீட்டில் இரவிலிருந்தே யாரும் உறங்கவில்லை. கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருந்த அன்னையையும் தங்கையையும் பார்த்தவன்

“எலக்சன் ரிசல்ட் நாளைக்கு தான். இன்னைக்கு நைட் ஃபுல்லா இப்பிடி தான் டிவியை பாத்துட்டே இருக்க போறீங்களா?” என்று கிண்டலடித்து அவர்களை உறங்குவதற்காக அறைக்குள் அனுப்பிவிட்டு வந்தான்.

நேரே மாடிக்கு சென்றவன் அங்கே மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்த அஸ்வினையும்,  தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும் அப்பா மற்றும் சித்தப்பாவையும் பார்த்துவிட்டு  “சோ இன்னைக்கு இங்க யாருமே தூங்க போறது இல்லையா?  நாளைக்கு தான் ரிசல்ட். இப்போ போய் தூங்குங்க” என்று சொல்லி தந்தை மற்றும் சித்தப்பாவை அனுப்பி வைத்தான்.

அஸ்வினின் எதிரில் ஒரு நாற்காலியைப்  போட்டு அமர்ந்தவன் “அச்சு! சப்போஸ் நான் ஜெயிக்கலன்னா என்னடா பண்ணுறது?” என்று சீரியஸான குரலில் கேட்க அவ்வளவு நேரம் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வின் திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரே இருந்தவனின் முதுகில் பட்டென்று ஒரு அறை வைத்தான்.

அஸ்வின் “டேய் நீ ஜெயிக்காம வேற யாருடா ஜெயிக்க போறா?  நீ தோத்து போக மாட்ட அபி. நீ ஜெயிக்கிறதுக்குப் பிறந்தவன்டா” என்று சொல்லி அவன் தோளைத் தட்டிக் கொடுக்க அபிமன்யூவுக்கும் தன்னுடைய இந்த குழப்பம் தேவையற்றது என்று தோன்ற இருவரும் எழுந்து அவரவர் அறைக்குச் சென்றனர்.

மறுநாள் விடியல் அவர்களில் சிலருக்கு அளவற்ற ஆனந்தத்தையும் பலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது என்றால் மிகையில்லை. அனைவரும் தேர்தல் முடிவுகள் வெளியாக அமைச்சர் பார்த்திபனின் கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான வாசுதேவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

அவர்களின் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரத்துக்கு வர பார்த்திபனின் எதிர்பார்ப்பு படி அபிமன்யூ அவனது தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றான். 

அவனது இந்த வெற்றி அவனது தந்தைக்கு ஒரு புது நம்பிக்கையை அளித்தது. ஊழல் புகார் காரணமாக அவர் போட்டியிடாமல் போனதால் அவரைக் கேலி செய்தவர்கள் கூட அவரை அன்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அபிமன்யூ மகிழ்ச்சியுடன் தந்தையிடமும் சித்தப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கியவன் மறக்காமல் அன்னை பூசிவிட்ட விபூதியுடன் கட்சி அலுவலகத்துக்கு அஸ்வினுடன் புறப்பட்டான். அங்கே மீண்டும் ஆட்சியமைக்க போகும் வாசுதேவனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தவன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கவும் தயங்கவில்லை.

“முதல் தேர்தல்லயே ஜெயிச்சிட்டடா. இனிமே உனக்கு எல்லாமே ஜெயம் தான்.  உன்னை வச்சி தான் இளைஞர்களோட கவனத்தை நம்ம கட்சி பக்கமா திருப்பணும். அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு கிடைக்கும்னு நம்புறேன்” என்று சொன்ன வாசுதேவனை பார்த்தவன் “இதை நீங்க சொல்லணும்னு அவசியம் இல்ல அங்கிள். நான் கண்டிப்பா நீங்க சொல்லுறதை ஃபாலோ பண்ணுவேன்” என்று உறுதியளித்தான்.

“இன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் ராயல் பார்க்ல நான் ஜெயிச்சதுக்கு பார்ட்டி குடுக்கிறேன் அங்கிள்!  நீங்களும் வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று பணிவுடன் சொல்ல

அவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவர் “கட்டாயமா வர்றேன்பா!  உங்க அப்பா கூட சில விஷயங்களை நானும் பேச வேண்டியதிருக்கு” என்றுச் சொல்லிவிட்டு புன்னகைத்தபடி அவரின் அறைக்குள் சென்றார்.

இந்த காட்சிகளை இன்னும் ஒரு ஜீவன் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அது வேறு யாருமல்ல,  முன்னாள் அமைச்சர் ஜெகதீசன் தான்.

அபிமன்யூ கூலர்ஸை கண்ணில் மாட்டி கொண்டவன் அவர் அருகில் சென்று “அங்கிள் நீங்களும் பார்ட்டிக்கு கட்டாயமா வரணும்.  இப்போ உங்களுக்கு சில விஷயங்கள் நல்லா மண்டையில உரைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.  பிளான் போடுற எல்லாரும் பார்த்திபன் ஆயிட முடியாது அங்கிள்!  வரட்டுமா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  நகர்ந்தான்.

ஜெகதீசன் அவன் சென்றதை வெறித்தவர் “அப்பனும் மகனும் நல்லா ஆடுங்கடா!  எனக்கும் ஒரு காலம் வரும். அப்போ நான் யார்னு உங்க ரெண்டு பேருக்கும் காட்டுறேன்” என்று கறுவிக்கொண்டார்.

அதே நேரம் ஜஸ்டிஸ் டுடேயில் அபிமன்யூ வெற்றி பெற்ற விஷயம் பரவி விட்டது. விஷ்ணுவுக்கு இப்படி தான் நடக்கும் என்று முன்னரே தெரிந்து விட்டதால் அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஸ்ராவணியால் தான் ஆதங்கத்தை அடக்க முடியவில்லை.

மேனகாவிடம் “சும்மாவே அவன் ஓவரா பண்ணுவான்டி! இனி எம்.எல்.ஏ வேற. ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கும்” என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அதேநேரம் அபிமன்யூவின் பார்ட்டியில் கலந்து கொள்ள விஷ்ணுவுக்கும், அவனுடைய குழுவுக்கும் அழைப்பு வர விஷ்ணு அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.

பூர்வி தான் “ஏன் விச்சு நம்ம அங்கே போகணும்? எதுவும் தேவையில்லாத பிரச்சனை வந்தா என்ன பண்ணுறது” என்றாள் கவலையாக.

விஷ்ணு அவளின் கையைப் பிடித்து அழுத்தியவன் “உன்னை நான் வரச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன் பூர்வி. ஆனா இது எங்க அடுத்த அசைன்மெண்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும். சோ நான், வனி, மேகி அண்ட் ரகு கண்டிப்பா அட்டெண்ட் பண்ணியே ஆகணும்” என்று சொல்லிவிட்டு அவளது கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அவன் சொன்ன மாதிரியே மாலை ஐந்து மணியளவில் அபிமன்யூவின் பார்ட்டியில் நால்வரும் கலந்து கொள்ள ஹோட்டலை அடைந்தனர். அவர்களை அஸ்வின் பணிவுடன் வரவேற்க  மேனகா ஸ்ராவணியின் காதில் “இவன் பணிவைப் பார்த்தா எனக்குச் சந்தேகமா இருக்குடி” என்று சொல்லத் தவறவில்லை.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தவர்கள் பார்ட்டியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

ஸ்ராவணியும் மேனகாவும் அங்கிருந்து வெளியேறி மற்ற இடங்களை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தவர்கள் அபிமன்யூ மற்றும் அஸ்வினின் பார்வையில் விழுந்தனர்.

இருவருக்கும் இந்தப் பெண்களை ஏதாவது சொல்லி கடுப்பேற்றினால் என்ன என்று ஒரே நேரத்தில் தோண அதை செயல்படுத்துவதற்காக அவர்களை நோக்கி நடைப்போட்டனர்.

“ஹாய்! இங்க என்ன பண்ணுறீங்க?” என்றபடி வந்த அவர்கள் இருவரிடமும் ஸ்ராவணியும் மேனகாவும் பேச விரும்பவில்லை என்பதை அவர்களின் முகபாவத்திலிருந்தே தெரிந்து கொண்டனர் அபிமன்யூவும் அஸ்வினும்.

அஸ்வின் சும்மா இருக்காமல் “நீங்க ரெண்டு பேரும் தமிழ்ப்பொண்ணுங்க தானே?  என்னோட மச்சான் முதல் எலக்சன்லயே எவ்ளோ ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சிருக்கான்!  அவனுக்கு வாழ்த்து சொல்லணும்கிற அடிப்படை பண்பாடு கூட தெரியலயே உங்களுக்கு” என்று அவர்களை தூண்டிவிட

அவனது பேச்சில் கடுப்பா மேனகா “ஆமா! உன்னோட ஃப்ரெண்ட் போர்ல ஜெயிச்சிட்டு வந்துருக்கார்! இவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்காதது ஒன்னு தான் குறை. ஏய் காசைக் குடுத்து ஓட்டை வாங்குனவனுக்கு வாழ்த்து ஒன்னு தான் இப்போ இல்லன்னு வருத்தம்.  எரிச்சலைக் கிளப்பாம நகருங்க” என்று பல்லைக் கடித்தபடி கூறிவிட்டு ஸ்ராவணியுடன் நகர முற்பட்டாள்.

இப்போது வழியை மறித்தது அபிமன்யூ.

“அட நில்லுங்கம்மா” என்று அவன் சொல்ல ஸ்ராவணி மேனகாவை கண்காட்டி அவளை இங்கிருந்து செல்லுமாறு சொல்ல அவள் இருவரையும் முறைத்தபடி நகர்ந்தாள்.

ஸ்ராவணி அவள் சென்றதும் கையை குறுக்காக கட்டிக் கொண்டவள் அபிமன்யூவையும் அஸ்வினையும் கூரியவிழிகளால் அளவிடவே, அபிமன்யூ கேலியாக “சரி பார்ட்டிக்கு வந்துட்டிங்க. என்ன சாப்பிடுறிங்க?  ஹாட் ஆர் கோல்ட்? ஸ்காட்ச், ரம், பிராண்டி ஆர் விஸ்கி….” என்று அவன் வரிசைப்படுத்த

அவள் சட்டென்று  “செருப்பு” என்று இறுகிய குரலில் சொல்ல அதை கேட்ட இருவரும் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலச் சிரிக்க ஸ்ராவணி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அபிமன்யூ கிண்டலாக “செருப்புங்கிற பேருல எந்த டிரிங்க்சும் இல்லையேம்மா!  நீ வேற எதாச்சும் டிரை பண்ணுறியா?” என்க

அஸ்வினோ “மச்சி! ரிப்போர்ட்டர் மேடம்கு ரெட் ஒயின் தான் பிடிக்கும்டா” என்று சொல்ல அபிமன்யூ பொய்யாக ஆச்சரியம் காட்டினான்.

அஸ்வின் அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஓகே மேடம் நான் உங்களுக்காக ரெட் ஒயின் எடுத்துட்டு வர்றேன்” என்றபடி நகர ஸ்ராவணியை நேருக்கு நேராக பார்த்தபடி நின்றான் அபிமன்யூ.

“லுக் மேடம்! நீயும் ரொம்ப தான் டிரை பண்ணுன. பட் நோ யூஸ். இப்போ பாரேன்! நான் நினைச்சது தான் நடந்திருக்கு. உன்னால இந்த அபிமன்யூவை ஜெயிக்கவே முடியாது. ஐ வாஸ் பார்ன் டூ ரூல்” என்று கர்வமாக உரைத்தவனை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் அவள்.

“நல்ல காமெடி பண்ணுறீங்க சார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஃபேனோ? இல்ல கலீஸி டயலாக்கை பேசுறீங்களே அதான் கேட்டேன்” என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றியவள் அவனை கடுமையாக பார்த்தவாறே

“நாற்காலில உக்காரணும்கிற உன்னோட ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நான் பிறந்திருக்கேன் மிஸ்டர் அபிமன்யூ பார்த்திபன். இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம். பட் அந்த நாற்காலி உனக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

அவளைக் கேலியாக பார்த்துவிட்டு அவன் நகர அவளும் இடத்தை காலி செய்யப் போனவள் அங்கே கேட்ட பார்த்திபன் மற்றும் விஷ்ணுவின் குரலில் கால்கள் தானாகவே நிற்க அங்கேயே சிலையானாள் ஸ்ராவணி.