🖊️துளி 42👑

ஸ்ராவணியும் மேனகாவும் ஷாப்பிங் வந்திருந்தனர். மேனகா ஒவ்வொரு கடையாக அலசிக் கொண்டே செல்ல ஸ்ராவணி அவளைத் தொடர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ஒவ்வொரு உடையிலும் அவள் ஏதாவது ஒரு குறையாகச் சொல்லிக் கழிக்க ஸ்ராவணி “மேகி ஒரு ஈவினிங் போடப் போற டிரஸ்ஸுக்கு இவ்ளோ பில்டப் தேவை இல்லடி. சும்மா எதாச்சும் ஒன்னை எடு” என்க மேனகா மறுப்பாகத் தலையசைத்தாள்.

“நோ வனி! எதுலயும் ஒரு பெர்ஃபெக்சன் வேணும். லெஹங்கா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். பட் இங்கே எல்லாமே ஹெவி வொர்க்கா இருக்கே” என்று அவளுக்குப் பதிலளித்தபடியே விற்பனைப்பணியாளரிடம் “அண்ணா லைட் வெயிட் சிம்பிள் லெஹங்கா இருந்தா எடுத்துப் போடுங்க. இதுல்லாம் கல்யாணப்பொண்ணு போடுற மாதிரி இருக்கு” என்று வேறு டிசைனைக் காட்டச் சொன்னாள். அவர்களின் தோழியான சுலைகாவின் திருமண வரவேற்புக்குப் போட்டுச் செல்ல உடை எடுப்பதற்காக காலையிலிருந்து அந்த ஏரியாவில் உள்ள அனைத்துக் கடைகளையும் புரட்டிப் போட்டுவிட்டாள் மேனகா.

ஒரு வழியாக அவளுக்குப் பிடித்தமாதிரி எளிமையான லெஹங்காக்களை அவரும் எடுத்துப் போடவே அதில் திருப்தியானவள் ஸ்ராவணியிடமும் காட்டித் திருப்திப்பட்டுவிட்டு அதையே பேக் செய்யச் சொன்னாள்.

அதை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியேறினர் இருவரும். ஸ்ராவணிக்கு சுலைகாவிடம் இருந்து போன் வரவே அதை எடுத்தவள் “சொல்லு சுகா! கல்யாணப்பொண்ணு என்ன பண்ணிட்டு இருக்குது?” என்று கேலி செய்தபடியே மேனகாவின் பின்னே அமர மேனகா ஸ்கூட்டியை ஓட்டத் துவங்கினாள்.

சுலைகா ஸ்ராவணியிடம் “வனி ஒரு ஹெல்ப்டி” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க ஸ்ராவணி “சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வா” என்று கிண்டலடிக்க அவள் ஸ்ராவணியிடம் என்ன உதவி என்றுச் சொல்லத் தொடங்கினாள். சுலைகாவின் தந்தை அவரது சொந்தக்காரர்களை நேரில் பார்த்து மகளின் திருமணப்பத்திரிக்கையைக் கொடுப்பதற்காக திருநெல்வேலி சென்று ஒரு வாரமாகிறது.

“அத்தாக்கு திருநெல்வேலியில ஏதோ வேலை வனி. அவரால சில முக்கியமான ஆட்களுக்குப் இன்விடேசன் குடுக்க முடியல. அதுல எம்.எல்.ஏ சாரும் ஒருத்தர்” என்றுச் சொல்லிவிட்டு நிறுத்த

ஸ்ராவணி “உங்க அப்பா பார்த்திபன் சாருக்கு குடுத்திருப்பாரே! அப்போ என்ன?” என்று கேட்க அவள் “அத்தா அவங்க வீட்டுக்குப் போறப்போ அவர் அங்க இல்லையாம் வனி. அவரை இன்வைட் பண்ணலைனா நல்லா இருக்காதுனு அத்தாவும் அம்மாவும் நினைக்கிறாங்கடி” என்று சொல்ல ஸ்ராவணிக்கும் கல்யாணப்பெண்ணே சொல்லும் போது அதை மீறும் எண்ணம் இல்லை.

“சரி! இப்போ நான் நேரா உங்க வீட்டுக்கு வர்றேன். நானே இன்விடேசனை வாங்கிட்டுப் போய் அவன் கிட்ட குடுத்துடுறேன்” என்று சொல்லவும் தான் கல்யாணப்பெண்ணுக்குச் சந்தோசம் வந்தது.

ஸ்ராவணியின் வருகைக்காகக் காத்திருந்தவள் அவளது ஸ்கூட்டி சத்தம் கேட்டதும் அவளது அம்மாவிடம் “மா! வனியும் மேகியும் வந்துட்டாங்கனு நெனைக்கிறேன்” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேனகாவும், ஸ்ராவணியும் கையில் ஷாப்பிங் பேக்குகளுடன் வரவே சுலைகாவின் அம்மா பாத்திமா இருவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.

“வாங்கம்மா! ரெண்டு பேரும் உக்காருங்க. நான் ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று அவர்கள் மறுக்க மறுக்க ஜூஸை எடுத்துவந்து அவர்களின் கைகளில் திணித்தவர் சுலைகாவுடன் சேர்ந்து மேனகா தேர்வு செய்திருந்த லெஹங்காவைப் பார்வையிடத் தொடங்கினார்

ஆடைத்தேர்வைப் பாராட்டியவர் “வனிம்மா! இவங்க அத்தா முக்கிய வேலையா திருநெல்வேலி போயிருக்காங்க. அதான் முக்கியமான ஆள் யாரும் விடுப்பட்டுடக் கூடாதுனு அவங்களுக்கு டென்சன். அப்போ தான் உன் நியாபகம் வந்துச்சு. உன் கிட்ட குடுத்தா என்ன, எம்,எல்.ஏ கிட்ட குடுத்தா என்ன ரெண்டும் ஒன்னு தானேனு நான் சொன்னேன். இவரு தான் நம்ம குடுக்கலனா தம்பி தப்பா நெனைச்சுக்கப் போறாருனு ஒரே புலம்பல். அதான் இங்கேயும் குடுக்க வேற ஆள் இல்லனு உன் கிட்ட குடுத்துவிடச் சொன்னேன்” என்று சொல்ல ஸ்ராவணி அவரிடமிருந்து பத்திரிக்கையை வாங்கிக் கொண்டாள்.

பத்திரிக்கையுடன் எழுந்தவள் பாத்திமாவிடமும், சுலைகாவிடமும் விடைபெற்றுக்கொண்டு நேரே அபிமன்யூவின் அலுவலகத்தை நோக்கி வண்டியை விடுமாறு சொல்லிவிட்டு பின்னே அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் அலுவலக வளாகத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர். மேனகா சுற்றி முற்று வேடிக்கை பார்த்தபடி வந்தவள் உள்ளே இருவரும் பேசி சிரிக்கும் சத்தம் கேட்க ஸ்ராவணியிடம் “இவனுங்க சிரிப்பைப் பார்த்தா லாயருக்குப் பிராக்டிஸ் பண்ணுற மாதிரி தெரியலடி. ஏதோ ரிலாக்சேசனுக்குத் தான் இந்த ஆபிஸை நடத்துறானுங்க போல” என்று கேலி செய்தபடியே அவர்களின் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.

அபிமன்யூவும் அஸ்வினும் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இருவரையும் பார்த்ததும் ஆச்சரியத்துடன் இவ்வளவு நேரம் மேஜை மீது வைத்திருந்த காலை மெதுவாக கீழே இறக்கி வைத்துவிட்டு நேராக அமர்ந்தனர்.

ஸ்ராவணி நேராக அபிமன்யூவிடம் இன்விடேசனை நீட்டி விட்டு “இது சுகாவோட மேரேஜ் அண்ட் ரிசப்சன் இன்விடேசன். உங்க அப்பா கிட்ட குடுக்க வீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையாம். அதான் அவங்க அப்பா உனக்கு குடுக்கச் சொல்லி என்னை அனுப்பிச்சாங்க” என்று சொல்ல அவன் இன்விடேசனை வாங்கிப் படித்தவன் அஸ்வினை நோக்கி “அச்சு இந்த மாசம் 24ல நமக்கு நெறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கே. இந்த கல்யாணத்துக்குப் போற அளவுக்கு நம்ம ஃப்ரீ இல்லயே” என்று சொல்ல ஸ்ராவணி கேலியாக உச்சுக் கொட்டினாள்.

அவளைப் பார்த்தபடி “அட நம்புமா. அன்னைக்கு எனக்கு ஏகப்பட்ட புரோகிராம்ஸ் இருக்கு. என்னோட ஷெட்யூல் ரொம்ப டைட். சோ என்னை எதிர்ப்பார்க்க வேண்டாம்னு நஸ்ரூதீன் சார் கிட்ட சொல்லிடு” என்க

அவள் “ஏன் உனக்கு வாய் இல்லையா? இல்ல நான் உன்னோட ஸ்பீக்கரா? அவர் நம்பர் இருந்தா நீயே கால் பண்ணி சொல்லிடு. நீ எவ்ளோ பிஸினு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ உக்காந்திட்டிருந்த போஸை பார்த்தாலே தெரியுது. அதனால நீங்க வந்து தான் ஆகணும்னு ஒரு கட்டாயமும் இல்ல எம்.எல்.ஏ சார். நாலு பேர் சாப்பிடுற பிரியாணி மிச்சம்” என்றுச் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க அபிமன்யூ வேகமாக எழுந்து வந்து அவள் கையைப் பிடித்தான்.

அவள் என்ன என்று ஏறிட்டுப் பார்க்க “நிஜமா எனக்கு அன்னைக்கு காலேஜ்ல ஒரு ஃபங்சன் இருக்கு வனி. பட் நான் கண்டிப்பா ரிசப்சனுக்கு வந்துடுவேனு அவர் கிட்ட நானே சொல்லிடுறேன்! ஓகே” என்று கேட்டுவிட்டு அவளது முகத்தை நோக்க

ஸ்ராவணி “சரி! இப்போ கையை விடுறியா? நான் போகணும்” என்று கேட்க அவன் மறுப்பாய் தலையாட்டிவிட்டு அவளை அணைத்துக் கொள்ள அஸ்வின் அதைப் பார்த்துச் சிரித்தான்.

“டேய் நானும் இங்கே தான்டா இருக்கேன்” என்று சொல்ல அவனை நோக்கித் திரும்பியவன் “நீ இல்லாமலாடா? கம் ஹியர்” என்று அவனது தோளிலும் ஒரு கையைப் போட்டு அணைத்துக் கொள்ள மேனகா மட்டும் தனியாக நின்று மூவரையும் முறைக்க ஆரம்பித்தாள்.

ஸ்ராவணி அபிமன்யூவின் கைகளை விலக்கிவிட்டு மேனகாவின் அருகில் சென்று நின்று கொண்டபடி “சொல்லாம கொள்ளாம அடிக்கடி என்னை ஹக் பண்ணாதடா. முக்கியமா இப்பிடி எல்லாரும் இருக்கிறப்போ” என்று விரலை நீட்டி எச்சரிக்க

அபிமன்யூ சரியென்று தலையாட்டிவிட்டு “அப்போ யாரும் இல்லனா ஹக் பண்ணலாம்ல வனி?” என்க ஸ்ராவணி தலையிலடித்துவிட்டு “உன்னைல்லாம் திருத்தவே முடியாதுடா. நான் கிளம்புறேன்” என்று மேனகாவுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

இருவரும் சென்ற பின்னர் தான் அபிமன்யூ மேனகா கையில் வைத்திருந்த ஷாப்பிங் பைகளை அவர்களின் அலுவலகத்திலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றதைக் கவனித்தான். அவன் ஸ்ராவணிக்குப் போன் செய்ய அவளின் போன் பிஸியாக இருக்கவே அவள் எடுக்கவில்லை.

அவன் அஸ்வினிடம் சொல்லிக் கொண்டு நேரே அவளின் ஃபிளாட்டுக்குக் காரைச் செலுத்தினான். ஸ்ராவணியும் மேனகாவும் வீடு திரும்பியதும் மேனகா தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொல்லி உறங்கச் சென்றுவிட ஸ்ராவணிக்கு மதியம் உறக்கம் வராது என்பதால் அவள் டிவியில் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று காலிங் பெல் அடிக்க யாரென்று எண்ணிக்கொண்டு கதைவைத் திறந்தவள் கையில் ஷாப்பிங் பைகளுடன் வாயில் நிலையை இடித்தபடி நின்றவனைக் கண்டதும் “ஐயோ மறந்து அங்கேயே வச்சிட்டு வந்துட்டேனு நினைக்கிறேன்” என்று அவனிடமிருந்து பைகளை வாங்கிவிட்டு கதவைச் சாத்த எத்தனித்தாள்.

அபிமன்யூ “அவ்ளோ தூரத்துல இருந்து உனக்காக இதைச் சுமந்துட்டு வந்திருக்கேன். நீ என்னடானா டெலிவரி பாய் மாதிரி டிரீட் பண்ணுற. இட்ஸ் டூ பேட் வனி” என்று சொன்னபடி அவளை விலக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவன் நன்றாகச் சாய்ந்து கொண்டு சட்டையின் மேல் இரண்டு பட்டன்களைக் கழட்டிவிட்டு கையாலே காற்றை வீச ஸ்ராவணி அவனைப் பார்த்தபடியே ஏ.சியை போட்டுவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்துவந்து கொடுத்தாள்.

அவளிடமிருந்து வாங்கி அருந்திவிட்டு டம்ளரை நீட்டிவிட்டு “பிளீஸ் சிட் ஹியர்” என்று சோஃபாவை காட்ட அவள் கவனமாக அவனுக்கு எதிர்ப்புறம் சென்று அமரவே அவன் குறும்புப்பார்வையுடன் சென்று அவள் அருகில் அமர்ந்து தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.

ஸ்ராவணி “இதுக்கு தான் சார் இவ்ளோ பில்டப் குடுத்திங்களோ? கையை எடு” என்று மிரட்ட அவன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்ததும் “சரி சரி! மூஞ்சிய அப்பிடி வச்சிக்காதே தெய்வமே” என்று சொல்ல அவன் மீண்டும் அவளை தோளோடு அணைத்துக் கொண்டபடி “வனி நான் இன்னும் இந்த டிரஸ்ஸைப் பார்க்கல. கொஞ்சம் காட்டுறியா?” என்க அவளும் ஆர்வத்துடன் அதை பிரித்துக் காட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்தவனிடம் “நல்லா இருக்கா?” என்று பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் கேட்க அவன் யோசித்த படியே “ம்ம்ம்…நாட் பேட். நீ இதைப் போட்டா நார்மலா இருக்கிறதை விட கொஞ்சம் வித்தியாசமா இருப்ப. அவ்ளோ தான்” என்று சாதாரணமாகச் சொல்ல அவளுக்குக் கடுப்பாகிவிட்டது.

உதட்டைச் சுளித்துவிட்டு “போதும்டா. நீ அப்பிடியே அழகன். என்னைச் சொல்ல வந்துட்டான். மேகி இதைச் செலக்ட் பண்ணுறப்போ என்ன சொன்னா தெரியுமா? வனி இந்த டிரஸ்ல நீ ஏஞ்சல் மாதிரி இருப்பனு” என்று சொல்ல அவளின் “ஏஞ்சல்” என்ற வார்த்தையில் அவன் குபீரென்று பீரிட்டுச் சிரிக்க ஸ்ராவணியின் கண்களில் எரிமலைக்குழம்பு.

சட்டென்று எழுந்தவள் “பார்க்கலாம்டா! நான் அந்த டிரஸ்ஸைப் போட்டுட்டு வந்தா அங்க இருக்கிற எல்லாரோட பார்வையும் என் மேல தான் இருக்கும்” என்றாள் சவாலிடும் குரலில்.

அவன் கிண்டலாக அவளைப் பார்த்தபடி எழுந்தவன் “கண்டிப்பா இருக்கும். யாரு இந்த உள்நாட்டு வினோதம்னு நினைப்பாங்க” என்றுச் சொல்ல அவன் தோளில் பட்படென்று அடித்தவள் அவனை அடித்து அவள் கைகள் வலிக்க ஆரம்பிக்கவே நிறுத்திக் கொண்டாள்.

அவன் அவளது கைகளில் முத்தமிட்டவன் “இது அயர்ன் பாடி. இந்த அடில்லாம் எனக்கு கொசு கடிக்கிற மாதிரி வனி. வீணா என்னை அடிச்சு ஏன் கையைக் காயப்படுத்தற?” என்று சொன்னபடி விடுவித்தபடி கதவை நோக்கிச் செல்ல ஸ்ராவணி மனதில் கறுவிக் கொண்டபடி நின்றாள்.

அவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சுலைகா மற்றும் ரஹ்மானின் திருமணநாளும் வந்தது. அபிமன்யூவால் சொன்னபடியே திருமணத்துக்கு வர இயலாததால் அவனும் அஸ்வினும் மாலை வரவேற்புக்கு வந்தனர். அபிமன்யூ மேடைக்குச் சென்று மணமக்களுக்கு பரிசை கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு கீழே வந்தவன் வாசலில் அனுராதாவுடன் பேசிக் கொண்டிருந்த ஸ்ராவணியைப் பார்த்ததும் ஸ்தம்பித்துப் போனான்.

மஞ்சள் நிற லெஹங்காவில் அவள் பொன்னிற அப்சரஸாக ஜொலிக்க அவனது கால்கள் அவளிடம் அவனை தானாக இழுத்துச் சென்றன. ஸ்ராவணி திடீரென்று அனுவின் பேச்சு தடைபட திரும்பிப் பார்த்தவள் அங்கே அவளைப் பார்த்தபடி நின்ற அபிமன்யூவைக் கண்டதும் அழகாகப் புன்னகைத்தாள். அனுராதா மேனகாவை நோக்கிச் சென்று விட அபிமன்யூ ஸ்ராவணியின் அருகில் வர அவள் “என்ன எம்.எல்.ஏ சார் எதுக்கு உள்நாட்டு வினோதத்தை இப்பிடி வச்ச கண் வாங்காம பாக்கிறிங்க?” என்று புருவம் உயர்த்தி வினவ அவன் தலையை உலுக்கித் தன்னை சமனப்படுத்திக் கொண்டான்.

ஸ்ராவணியின் அருகில் நின்றவன் அவள் காதில் “வனி நீ பாக்கிறதுக்கு அப்பிடியே அப்சரஸ் மாதிரி இருக்க தெரியுமா? இப்போவோ உன்னைக் கடத்திட்டுப் போகணும் போல இருக்கு” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல அவனது குரலும் காதுமடலில் உரசிய அவனது உதடுகளும் அவளுக்குள் ஏதோ மாயாஜாலத்தை நிகழ்த்த தொடங்கியது என்னவோ உண்மை.

அதே உணர்வுடன் அவனைப் பார்த்து அழகாக முறுவலிக்க தன்னவளின் முத்துப்பல் சிரிப்பில் தன்னை மறந்து இலயித்தவன் அவளுடன் சேர்ந்து அவளின் சிரிப்பில் கலந்துக் கொண்டான்.