🖊️துளி 32👑

அபிமன்யூ அஸ்வினிடம் வந்தவன் “அச்சு! எனக்கென்னமோ இன்னைக்கு எல்லா பிராப்ளமும் சரியாயிடும்னு தோணுதுடா. இன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் ராயல் பார்க்ல நடக்குற பார்ட்டிக்கு நம்ம போகப் போறோம்” என்று சொல்லியபடி காரில் அமர அவனைத் தொடர்ந்து அமர்ந்த அஸ்வின் “அங்கே ஏன் நம்ம போகணும் அபி?” என்று குழப்பமாய் கேட்டபடி அபிமன்யூவை பார்த்தான்.

அவன் காரை ஓட்டியபடியே “வனியோட பாஸ் விஷ்ணுபிரகாஷோட டாட்டருக்கு அங்கே இன்னைக்கு ஈவினிங் பர்த் டே பார்ட்டி நடக்கப்போகுது. அதுல நம்ம கலந்துக்கப் போறோம்” என்று சொல்ல அஸ்வின் அதைக் கேட்டபடி தலையாட்டினான்.

அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்த ஸ்ராவணியையும் அவளது நண்பர்களையும் வரவேற்ற பூர்வியும் விஷ்ணுவும் அவர்களின் குடும்பத்தினருக்கு அறிமுகப் படுத்தி வைக்க ஸ்ராவணிக்குச் சற்றுமுன் இருந்த மனநிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது.

அதிலும் அந்த வீட்டில் கேட்ட குழந்தைகளின் சத்தமே அனைவருக்குள்ளும் இனம் புரியா உற்சாகத்தை ஏற்படுத்த ஸ்ராவணியும் அவளின் நண்பர்களும் ஷிவானிக்காக வாங்கிய பரிசுப்பொருட்களை அவளிடம் நீட்ட அவள் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டாள். பூர்வி ஷிவானிக்கு என்னென்ன பிடிக்கும் என்று அவ்வப்போது பேச்சுவாக்கில் சொல்லுவதைக் கவனித்தவர்கள் அவளுக்குப் பிடித்தவையாகவே வாங்கி பரிசளித்திருந்தனர்.

சுலைகா ஸ்ராவணியிடம் “சீஃப் ஃபேமிலி மெம்பர்ஸ்லாம் செம ஜாலி டைப்ல வனி. இப்பிடி ஒரு குடும்பம் இருந்தா எந்த கவலையும் இல்ல” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் மீது மோதுவது போல வாசலில் இருந்து ஓடி வந்தான் ஒரு சிறுவன்.

அவனைத் துரத்தியபடி அவன் சாயலை ஒத்த ஒரு சிறுமி ஓடி வர அவன் சுலைகா மற்றும் ஸ்ராவணியின் பின் மறைந்து கொண்டு அவர்களை சுற்றி ஓட அந்த சிறுமி “அக்கா நீங்க தள்ளிப் போங்க. இன்னைக்கு அவனை நான் விடமாட்டேன்” என்று முகத்தைச் சுருக்கியபடி கூறிவிட்டு ஸ்ராவணியின் பின்னால் நின்று அவளது பெரிய டாப்பால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை முறைத்தாள்.

சுலைகா அந்த சிறுமியிடம் “என்னடா ஆச்சு? அவன் உன்னை என்ன பண்ணுனான்?” என்று கேட்க

அந்த சிறுமி போனிடெயில் அசைய “அக்கா நான் ரொம்ப கஷ்டப்பட்டு டெடிபியர் பிக்சர் வரைஞ்சேன். இவன் அதை மங்கி மாதிரி ஆக்கிட்டான்” என்றுச் சொல்லி உதட்டைப் பிதுக்க

ஸ்ராவணி தனது டாப்பை பிடித்தபடி ஒளிந்திருந்தவனிடம் “நீ ஏன் டெடிபியரை மங்கி மாதிரி மாத்துன?” என்று ரகசியகுரலில் கேட்க அவன் சாதாரணமாக “நான் ஒன்னும் டெடிபியரை மங்கியாக்கல. அவ வரைஞ்ச டெடிபியர் பிக்சர் பார்க்குறதுக்கு மங்கி மாதிரி தான் இருந்துச்சு. நான் அதை கொஞ்சம் அழகா மாத்திட்டேன்” என்று ஸ்ராவணியைப் போலவே பேசிக் காட்ட இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மேனகா அந்த சிறுவனின் முகபாவத்தில் சிரித்துவிட்டாள்.

இந்தச் சண்டையைத் தடுத்து நிறுத்த முடிந்தவள் அவர்கள் இருவரின் அன்னை மட்டுமே. அவள் பூர்வியிடமும், ரகுவிடமும் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்க அபிமன்யூவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த சிபு அவன் பெற்ற செல்வங்களின் சண்டைக்கு நடுவில் மாட்டிக்கொண்ட சுலைகாவையும், ஸ்ராவணியையும் பார்த்ததும் அவர்களிடம் வர ஸ்ராவணியின் பின்னே ஒளிந்திருந்தவன் சிபுவைக் கண்டதும் ஓட எத்தனிக்க அதற்குள் சிபு அவனைப் பிடித்துக் கொண்டான்.

அதற்குள் அந்த சிறுமியும் அவனைப் பிடித்துக் கொள்ள இருவரும் மீண்டும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். ஸ்ராவணியும், சுலைகாவும் வாயில் கைவைத்து ஆச்சரியப்பட்டபடி இந்த சண்டையை வேடிக்கைப் பார்க்க சிபு கடுப்புடன் “மனு! இங்க வந்து கொஞ்சம் இவங்களை பிரிச்சு விடு. என்னால முடியல” என்று கத்தினான்.

மானஸ்வி இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அவன் போட்ட காட்டுக்கத்தலில் அங்கே வந்தவள் “டேய் என்ன பண்ணுறிங்க ரெண்டு பேரும்? தர்ஷினி நீ குட் கேர்ள் தானே! அவனை விடு” என்று அந்த சிறுமியின் பிடியில் சிக்கியிருந்த அவனது சட்டையை விடுவிக்க முயல அவளோ முடியாது என்று தலையாட்டியபடி அதை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

மானஸ்வி அந்த சிறுவனிடம் திரும்பி “தர்ஷ்! அம்மா சொன்னா கேப்ப தானே! அவ போனிடெயிலை விடுடா” என்று சொல்ல அவனும் மறுக்க சிபு தலையிலடித்துக் கொண்டபடி தர்ஷினியின் போனிடெயிலை பிடித்திருந்த தர்ஷனின் கையை விலக்கிவிட்டு அவளைத் தூக்கினான்.

மானஸ்வி தர்ஷனை சமாதானப்படுத்தி ஷிவானியிடம் சென்று விளையாடுமாறு அனுப்பி வைத்தாள்.

சிபு தர்ஷினியின் கலைந்த கூந்தலை ஒழுங்குப்படுத்தியவன் “நீ வேற டெடிபியர் வரைடாமா! அவன் இனிமே அதை எடுக்க வந்தான்னா டாடி பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

குழந்தைகளை அனுப்பிவைத்துவிட்டு களைத்துப் போய் நின்ற இருவரையும் பார்த்து ஸ்ராவணி, சுலைகாவின் முகத்தில் புன்னகை அரும்ப மேனகாவும், அனுராதாவும் கூட சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் சிரிப்பதைக் கண்ட சிபு “போதும்! ரொம்ப சிரிக்காதிங்கம்மா. இன்னும் மூனு இல்ல நாலு வருஷத்துல இந்த சண்டைக்காட்சிகள் எல்லாமே உங்க வீடுகள்லயும் நடக்கும்” என்று சொல்ல சுலைகா “அதுக்கு தான் சார் நாங்க இப்போவே அந்த சண்டைய விலக்க நீங்க என்னென்ன டெக்னிக் யூஸ் பண்ணுறிங்கன்னு வேடிக்கை பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது. ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டு பேருக்கும் செம டேலண்ட்” என்று கேலி செய்தாள்.

இவ்வாறு காலை நேரம் கலகலப்பாகச் செல்ல காலையுணவை முடித்துவிட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஸ்ராவணி ஷிவானியிடம் சென்று அமர்ந்தாள். ஏழு வயது சிறுமி தானே, ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பாள் என்று எண்ணியவள் ஷிவானி ஏதோ நோட்டில் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் “குட்டிமா! என்ன பண்ணுறிங்க?” என்று கேட்க குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் ஸ்ராவணியை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்தாள்.

“எனக்கு தோணுறதை எழுதுறேன் அக்கா” என்று தெளிவான குரலில் கூறிவிட்டுத் தான் எழுதியதை ஸ்ராவணியிடம் காட்டினாள். அந்த நோட்டில் அவள் ஏகப்பட்ட விஷயங்களை எழுதியிருந்தாள். அதில் அடிக்கடி மம்மி, டாடி, மனும்மா, சித்து என்ற வார்த்தைகளும் தர்ஷ், தர்ஷினி என்ற பெயர்களும் வந்திருக்க அதை வாசித்து முடித்தவள் ஷிவானியின் கன்னத்தில் முத்தமிட்டு “உனக்கு மம்மி டாடினா அவ்ளோ இஷ்டமா?” என்று அவளைப் போலவே கண்ணை விரித்துக் கேட்டாள்.

அவளைப் பார்த்து தலையாட்டிய சிறுமி “ஆமாக்கா. எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க தான் என் கூட இருக்கிறதே இல்ல. ஆனா மனும்மாவும், சித்தப்பாவும் இருப்பாங்க. இந்த தடவை சம்மர் லீவுக்கு நான் மம்மி டாடி கூட தான் இருக்கப் போறேன்” என்று சொல்ல ஸ்ராவணி அவளின் தலையைத் தடவிக் கொடுத்தாள்.

அந்தப் பக்கமாய் வந்த சிபுவின் பார்வையில் இக்காட்சி விழ அவன் “இந்த பொண்ணு ஒன்னும் அவ்ளோ டெரர் இல்ல போல. அப்போ ஏன் அந்த எம்.எல்.ஏவை இந்த பேச்சு பேசுனா?” என்று யோசித்தவாறு அவர்களிடம் வந்தவனைப் பார்த்ததும் “சித்தப்பா நீங்க என்னைக் கேக் வெட்டவா கூப்பிட வந்திங்க?” என்று கேட்டு முகத்தைச் சுருக்கினாள். ஏனோ அவளுக்குச் சிறுவயதில் இருந்தே கேக் வெட்டுவது பிடிக்காத விஷயம் தான். ஒரு முறை அவள் கேக் வெட்டி கொண்டாடும் போது அவளது பெற்றோர் இருவரும் ஏதோ ஒரு முக்கிய விஷயமாகப் பாதியிலே சென்று விட அன்றிலிருந்து அவளுக்கு கேக் வெட்டுவது பிடிக்காமல் போய்விட்டது.

அவள் பக்கம் வந்தவன் அவளின் தலையை வருடிக் கொடுத்தப்படி “ஷிவி குட்டி! சித்தப்பா என்னைக்காச்சும் உன்னை கம்பெல் பண்ணிருக்கேனா? உனக்கு கேக் வேண்டான்னா எனக்கும் வேண்டாம். உன்னை தர்ஷ் தேடுனான். என்னன்னு போய் பாரு” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.

ஸ்ராவணி அவனை கேள்வியாகப் பார்க்க அவளைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தவன் “காலையில வந்தானே அந்த பையன்..ப்ச்..சாரி..எம்.எல்.ஏ அவனுக்கும் உனக்கும் அப்பிடி தான் தகராறு? ஏன் அவனைப் போட்டு வறுத்தெடுத்த?” என்று கேட்க

ஸ்ராவணி சிறிதும் யோசிக்காமல் “எனக்கு அவனைப் பிடிக்காது ப்ரோ” என்றாள் சட்டென்று.

“ஓகே! பிடிக்காமலே போகட்டும். பட் அவன் சொல்ல வர்றதை ஒரு தடவை காது குடுத்துக் கேக்கலாமே” என்று கொஞ்சம் தீவிரமான குரலில் சொன்னவன் “அவன் ஏதோ சொல்ல ஆசைப்படுறான். இப்போ நீ அதை கேக்க விரும்பாம இருக்கலாம். பட் அதை நீ கேக்க விரும்புறப்போ அவன் உன் பக்கத்துல இல்லாம கூடப் போகலாம். ஏன்னா மனுசங்களோட வாழ்க்கை நிலையில்லாதது. விஷ்ணு அடிக்கடி உன்னைப் பத்தி பேசுவான். அவனுக்கு மனுனா உயிரு. அதுக்கு அப்புறம் அவன் ஒரு பொண்ணை சகோதரியா நெனைச்சான்னா அது நீ தான். அதுவும் உங்க அம்மா அப்பா அவனையும் அண்ணியையும் நம்பித் தான் உன்னையும் உன் கஸினையும் விட்டுட்டுப் போயிருக்காங்கனு சொல்லுவான். அவன் சொல்லுறதை வச்சுப் பார்த்தா நீ தெளிவா யோசிக்கிற தைரியமான பொண்ணா இருப்பன்னு நெனைச்சென். பட் நீ அப்பிடி இல்ல” என்று சொல்ல ஸ்ராவணி துணுக்குற்று அவனைப் பார்த்தாள்.

“என்ன பார்க்குறம்மா? நீ இப்போ கொஞ்சம் கூட தெளிவா இல்ல. அதே மாதிரி நீ தைரியசாலியும் இல்ல. சப்போஸ் நீ தைரியமான பொண்ணா இருந்தா அவனை ஃபேஸ் பண்ணிருப்ப. இப்பிடி ஓடி ஒளிஞ்சிருக்க மாட்ட” என்று சிபு அவளைச் சீண்டிவிட அது நன்றாகவே வேலை செய்தது.

அவள் “இங்கப் பாருங்க ப்ரோ! எனக்கு ஒன்னும் அவனைப் பார்த்து பயம் இல்ல. ஆனா எரிச்சலா வருது ப்ரோ. அவன் என்ன பண்ணுனானு உங்களுக்குத் தெரியாது” என்று சொல்ல

சிபு நிதானமாக “அவன் என்ன பண்ணுனானு எனக்குத் தெரியாது. பட் அவன் உன் கிட்ட எதையோ ஷேர் பண்ணிக்க விரும்புறான். கொஞ்சம் காது குடுத்து கேட்டா ஸ்டார் ரிப்போர்ட்டர் கெத்து ஒன்னும் குறைஞ்சுப் போகாதுனு நெனைக்கிறேன். அப்புறம் உன் இஷ்டம்” என்று தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றான்.

ஸ்ராவணி அவன் சீண்டிவிட்டுப் போனதிலிருந்து குழப்பத்துடன் வலம் வர மேனகா குழந்தைகளுடன் குழந்தையாக மாறியதில் பழையபடி இயல்பாக பேச ஆரம்பித்தாள். அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அனுராதா வந்து “வனி உனக்கு என் மேல கோவம் தானே?” என்று கேட்க

அவள் “உன் மேல கோவப்பட்டு என்ன ஆகப் போகுது அனு?” என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டு நகர முயன்றாள். ஆனால் அவளை நகரவிடாமல் அவள் கைகளைப் பற்றிய அனு “அபி சார்….” என்று ஆரம்பிக்க ஸ்ராவணி “ஆல்ரெடி அவன் சீஃபோட பிரதரை என்ன சொல்லி ஏமாத்திட்டுப் போனானு தெரியல. அவரு என் கிட்ட அவனுக்குச் சப்போர்ட் பண்ணி பேசிட்டுப் போறாரு. இப்போ நீயுமா? பிளீஸ் அனு. நான் அவன் கிட்ட பேசுறேன். இனிமே இது சம்பந்தமா யாரும் எனக்கு அட்வைஸ் பண்ணாதிங்கப்பா. காது வலிக்குது” என்று முகத்தைச் சுருக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

இவ்வாறு நேரம் செல்ல மாலை நேரம் அனைவரும் ஹோட்டலுக்குச் செல்வதற்காகத் தயாராக ஸ்ராவணியும் தயாரானாள். அவளது அறையை விட்டு வெளியே வந்தவள் மேனகாவைத் தேட அவள் தர்ஷனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தவள் “என்ன மேகி இப்போ தான் உனக்கு வாய்ப்பூட்டு திறந்துச்சோ?” என்று கேலி செய்ய

மேனகா கண்ணாடியைச் சரி செய்தவாறு “போடி! உனக்கு என்னை கிண்டலடிக்காம பொழுதே போகாதே” என்று குறைபட்டுக் கொண்டாள். அதற்குள் மற்றவர்களும் வந்துவிட அனைவரும் காரில் ஹோட்டலை சென்றடைந்தனர்.

ஹோட்டலில் பார்ட்டி ஹால் பிறந்தநாளுக்காக அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்க அதைப் பார்த்தவாறே மேனகாவுடன் உள்ளே சென்ற ஸ்ராவணி தர்ஷனை அழைத்தாள். அவன் அருகில் வர அவன் உயரத்துக்கு குனிந்து “உனக்குலாம் யாருடா கோட் போட்டுவிட்டது? இந்த பட்டர்ஃப்ளை போ சரியா இல்ல பாரு” என்றபடி அவன் கழுத்திலிருந்த போவை சரிச் செய்து விட்டாள்.

பார்ட்டிக்கு விஷ்ணுபிரகாஷின் குடும்பத்தினரும், அவனது தொழில்முறை நண்பர்களும் தவிர்த்து ஷிவானி, தர்ஷன் மற்றும் தர்ஷினியினுடன் பயிலும் குழந்தைகளின் குடும்பத்தினரும் வந்திருக்க அந்த பார்ட்டி ஹாலே கலகலப்பாக இருந்தது.

ஸ்ராவணி மேனகாவிடம் போனை கேட்க அவள் மறந்து போய் காரில் வைத்துவிட்டு வந்ததாகச் சொல்ல அதை எடுத்துவர பார்ட்டி ஹாலை விட்டு வெளியே வரும் போது தான் அங்கே குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த அபிமன்யூவும், அஸ்வினும் அவளின் கண்ணில் பட்டனர். “இவனுங்களை….” என்று பல்லைக் கடித்தவாறு அவர்கள் நிற்குமிடத்துக்கு விரைந்தாள் அவள்.

அபிமன்யூ ஒரு சிறுவனிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் “இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்கடா?” என்ற ஸ்ராவணியின் குரலில் திரும்பினான்.

எப்போதும் போல எளிமையான அலங்காரத்தில் மிளிர்ந்தவளின் காதில் ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது அவனது கவனம். ஸ்ராவணியோ தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்தவனின் கண் முன் சொடக்கிட்டவள் “நான் இங்கே நிக்கிறேன்டா. உனக்கு அங்கே என்ன பார்வை?” என்று கேட்க

அவன் அந்த ஜிமிக்கியில் பார்வையைப் பதித்தவாறே “வாவ்! பியூட்டிஃபுல்” என்று சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் பின்னால் திரும்பி பார்க்கவும் அங்கே விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி வரவும் சரியாக இருந்தது.

அஸ்வின் இந்த விபரீதத்தை உணர்ந்து எச்சரிக்கும் முன்னரே ஸ்ராவணி கடுப்புடன் “சை! நீயெல்லாம் திருந்தவே மாட்ட. உன் கண்ணுக்கு ஆம்பிளைங்கல்லாம் தெரியவே மாட்டாங்களா? எப்பிடியோ போ” என்றவாறு வாயிலை நோக்கிச் செல்ல அபிமன்யூ குழப்பமடைந்தான்.

“அச்சு! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இவ கோவப்பட்டுட்டு போறா?” என்க அஸ்வின் அவன் தாடையைப் பற்றி அவனது பார்வை இவ்வளவு நேரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது.

“டேய் அம்மா சத்தியமா நான் அந்தப் பொண்ணைப் பாக்கலடா. நான் வனியோட ஜிமிக்கியை தான் பார்த்தேன். எனக்கு மட்டும் ஏன்டா இப்பிடி நடக்குது?” என்று ஆதங்கத்துடன் பேச அஸ்வின் “இதுக்கே பொங்குனா எப்பிடி? இன்னும் நீ வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு!” என்று கேலி செய்தான்.