🖊️துளி 26👑

ஸ்ராவணி சொடக்கிட்டதும் திடுக்கிட்டு விழித்தான் அபிமன்யூ. அவளோ இவனுக்கு என்னவாயிற்று என்று எண்ணிக் கொண்டே எழும்ப அவனும் கூடவே சேர்ந்து எழுந்தான். கையில் வைத்திருந்த போனை ஸ்ராவணியிடம் நீட்ட அவள் வாங்க கையை நீட்டும் போது அவளது கையை பிடித்து சரியாக மோதிர விரலில் இருந்த மோதிரத்தை கழற்றிக் கொள்ள இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட ஸ்ராவணியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. ஏற்கெனவே அந்த மோதிரம் விரலுக்கு சற்று பெரிதாக இருப்பதால் அடிக்கடி அதை சரி செய்து கொள்பவள் அபிமன்யூ அதைப் போய் கழற்றுவான் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

இவ்வளவு நேரம் இருந்த அமைதியான முகபாவம் மாற கடுப்புடன் “எப்போ பாரு என் கிட்ட இருந்து எதையாச்சும் பிடுங்கிட்டே இருப்பியா நீ? ரிங்கை குடுடா” என்று கேட்க அவனோ அதை தன்னுடைய கையில் எந்த விரலுக்கு சரியாக இருக்கும் என்று போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை போட்டு பார்த்துக் கொண்டே “என்ன பண்ணுறது ரிப்போர்ட்டர் மேடம்? எதையாச்சும் என் கிட்ட குடுத்துட்டே இருக்கணும்கிறது உங்க தலையெழுத்து போல” என்று நக்கலடிக்க

ஸ்ராவணி முறைத்தவாறு  “நான் எங்கடா குடுத்தேன்? நீ தான் பிடுங்கிட்ட. ஃபர்ஸ்ட் என்னோட செயின், அப்புறம் ஃப்ளாட், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட மொபைல், இப்போ என் ரிங். நீ லாயர் இல்ல, திருடன்” என்று சொல்லிவிட்டு பப்பை நோக்கி நடை போட்டாள். அவனோ சுண்டுவிரலில் அந்த மோதிரத்தை மாட்டிப் பார்க்க அது அவனுக்கே அளவெடுத்தது போல சரியாக பொருந்த ஸ்ராவணியினை தொடர்ந்து அவனும் பப்புக்கு சென்றான்.

இருவரும் சென்றபோது நான்ஸி, மேனகா மற்றும் அஸ்வின் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க அஸ்வினை மட்டும் தனியாக அழைத்து சென்றான் அபிமன்யூ. ஸ்ராவணி விரலை தடவிக்கொண்டே அவர்களுடன் அமர்ந்து கொள்ள அவளை பார்த்தபடியே அஸ்வினிடம் “அச்சு! எனக்கு அந்த விக்ரமோட வீட்டு அட்ரஸ் வேணும்டா” என்றான் தீவிரமான குரலில்.

அஸ்வின் புரியாதவனாக “அது எதுக்குடா இப்போ?” என்க

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிப்போர்ட்டருக்கு கால் பண்ணுனான் அவன். அவ இல்லனா அவன் செத்து போயிடுவானாம்” என்று சாதாரணமாக அபிமன்யூ சொல்லிவிட்டு அஸ்வினை பார்க்க அவன் விக்ரமின் முகவரியை அபிமன்யூவுக்கு வாட்சப் செய்தான்.

யோசனையுடன் நெற்றியில் கீறியவனை பார்த்த அஸ்வின் “என்னாச்சு அபி? நீ ஏன்டா ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க? எனி பிராப்ளம்?” என்று கேட்க அபிமன்யூ தலையை அசைத்து “நத்திங் சீரியஸ்டா. டைம் ஆச்சு. வீட்டுக்கு கிளம்பலாம்” என்க

அஸ்வின் ஆச்சரியத்துடன் “நீயா பேசுறடா? நீ அபி தானே? நம்ம என்னைக்குடா மூனு மணிக்கு முன்னாடி பப்ல இருந்து வீட்டுக்கு போயிருக்கோம்? நான் வரலைப்பா” என்று சொல்லிவிட்டு மேனகாவை நோக்கிச் செல்ல அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றி இழுத்து நிறுத்தான் அபிமன்யூ.

அஸ்வின் அதற்கு மேல் நகர இயலாதவனாய் “ஏன்டா? நீ  போகணும்னா போயேன்! நான் அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்டா” என்று பாவமாகச் சொல்ல அபிமன்யூ கிண்டலாக நகைத்து “நீ ஒன்னும் பேசிக் கிழிக்க வேண்டாம். அவங்களும் நம்ம கூட தான் வரப் போறாங்க. கிளம்பு” என்று அவனை கையோடு ஸ்ராவணி இருக்கும் இடத்துக்கு இழுத்து சென்றான்.

அவர்களிடம் “ஹலோ கேர்ள்ஸ்! ரொம்ப லேட் ஆயிடுச்சு. நம்ம கிளம்புவோம்” என்று சொல்ல நான்ஸி எழவும் மற்ற இருவரும் சேர்ந்து அவளுடன் எழுந்தனர்.

வெளியே வந்ததும் மேனகா கால்டாக்சிக்கு போன் செய்ய போக அஸ்வின் “இங்க பாருங்க மேடம் எங்க பார்ட்டிக்கு வந்தவங்களை வீட்டுல கொண்டு போய் விடுற இந்த சின்ன வேலையா கூடவா நாங்க செய்ய மாட்டோம்?” என்று கேட்க

அவள் கிண்டலாக “அப்போ உங்க பார்ட்டிக்கு வர்ற எல்லா பொண்ணுங்களையும் அவங்க வீட்டுல நீங்களே கொண்டு போய் விடுவிங்க போல” என்று சொல்லிவிட்டு ஸ்ராவணியிடம் என்ன செய்ய என்று கேட்க அவள் ஏற்கெனவே நான்ஸி காரில் அபிமன்யூவுடன் சேர்ந்து ஏறப் போவதை சுட்டிக்காட்டி மேனகாவையும் அழைத்துச் சென்றாள்.

பெண்கள் மூவரும் பின்னே அமர அபிமன்யூ காரை ஸ்டார்ட் செய்தவன் ஏதோ யோசனையுடன் ரியர்வியூ மிர்ரரில் ஸ்ராவணியைப் பார்த்தபடியே வண்டியை ஓட்டினான். நேரே ஸ்ராவணியின் ஃப்ளாட்டின் முன் கொண்டு சென்று நிறுத்த இறங்கியவர்கள் அவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டுச்  செல்ல அபிமன்யூ காரை நேராக விக்ரமின் வீட்டிற்கு விட்டான்.

அவர்களைக் கண்டதும் கதவை அடைக்கப்போன விக்ரமை அலட்சியம் செய்தபடி அஸ்வினுடன் அவனது வீட்டிற்குள் நுழைந்தான் அபிமன்யூ. உள்ளே சென்றதும் சந்திராவை அழைத்து விக்ரம் ஸ்ராவணிக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியதைப் போட்டு உடைத்துவிட்டான்.

அவனை கூர்மையாகப் பார்த்தபடியே “இனிமே உங்க பையன் தேவை இல்லாம ரிப்போர்ட்டர் மேடம் கிட்ட போன் பேசுனாலோ, இல்ல காண்டாக்ட் பண்ண டிரை பண்ணுனாலோ அதோட விளைவுகள் மோசமா இருக்கும். பார்த்து நடந்துக்கச் சொல்லுங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து அஸ்வினுடன் கிளம்பி விட்டான். அஸ்வின் அவனை யோசனையுடன் பார்க்க அபிமன்யூவோ தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று புரியாமலே காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டை அடைந்ததும் பூனை போல தங்களிடம் உள்ள சாவியை வைத்துக் கதவைத் திறந்துவிட்டு மெதுவாக கதவைச் சாத்தியவர்கள் மாடியில் தங்கள் அறைக்குச் செல்ல முயலும் போது அந்த வீடே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.  திடீரென்று விளக்கெரிய அஸ்வினும் அபிமன்யூவும் திடுக்கிட்டுச் சிலையாய் நின்றனர்.

சுபத்ரா முறைத்தபடி நிற்க பார்த்திபன் என்னடா பண்ணி வச்சிருக்க என்ற முகபாவத்துடன் அவருடன் நின்றார். சுபத்ரா இருவரையும் பார்த்து “எங்கடா போயிட்டு வர்றிங்க? கட்சி ஆபிஸுக்கு போயிட்டு வர்றோம்னு மட்டும் சொல்லாதிங்க. இவ்ளோ நேரம் கட்சி ஆபிஸ்ல வேலை இருக்காதுங்கிறது எனக்கு நல்லாவே தெரியும். சொல்லுங்க! ரெண்டு பேரும் எங்க போயிட்டு வர்றிங்க?” என்றபடி அவர்கள் அருகில் வர இருவருக்கும் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

திருதிருவென்று இருவரும் விழிக்க சுபத்ரா அபிமன்யூவின் அருகில் வர அவனுக்கு அன்னையின் மீது இருந்த பயத்தில் “மா…நான்…ப..” என்று ஆரம்பிக்கும் போதே அவனது நெற்றியில் முத்தமிட்டவர் “என் செல்ல பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று சொல்ல அவரது பாசத்தில் நெகிழ்ந்தவனுக்கு கண்ணில் நீர் நிரம்ப அன்னையை அணைத்து கொண்டான்.

அவர் அவனது தலையை தடவிக்கொடுத்தபடி “என்னடா இப்போ எதுக்கு என் செல்லக்குட்டி கண்ணீர் விடுறான்?” என்று அவனை பார்த்து கேட்க அவன் தளுதளுத்த குரலில் “மா! நீங்க இப்பிடி பேசி எத்தனை நாளாகுது தெரியுமா?” என்றபடி கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொள்ள பார்த்திபன் மகனது தோளில் தட்டிக் கொடுத்தார்.

அதற்குள் ஜனனி கேக்கை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வர கூடவே ஸ்டிக்குடன் வந்து சேர்ந்த சகாதேவன் தன் பங்குக்கு அண்ணன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அஸ்வின் அபிமன்யூவின் காதில் “அபி! நமக்கு ஏன்டா நியாபகம் இல்லாம போச்சு?” என்று கேட்க அவன் “நம்ம இந்த உலகத்துல இருந்தா தானே! நம்ம தான் கண்ணாடி போட்டவங்களை பார்த்ததும் மயங்கிடுறோமே” என்று அவனை கேலி செய்தான்.

ஜனனி அபிமன்யூவிடம் “அண்ணா கேக் கட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி கடவுள் கிட்ட வேண்டிகிட்டு கட் பண்ணுங்க” என்று சொல்ல அவன் கண்ணை மூட ஏனோ அவன் மனக்கண்ணில் ஸ்ராவணியின் முகம் வந்து  செல்லக் குழப்பத்துடன் எதுவும் வேண்டாமலே கண்ணைத் திறந்தவன் மெழுகுவர்த்தியை ஊதி கேக்கை வெட்டினான்.

முதல் துண்டை எடுத்து பார்த்திபனுக்கு ஊட்ட அவர் அதை அவனுக்கே ஊட்டிவிட்டபடி “இந்த பிறந்தநாள்ல இருந்து உன் வாழ்க்கையில் நீ நினைச்சது எல்லாம் நடக்கும்பா” என்று சொல்லி வாழ்த்தினார். சுபத்ராவும் அதையே செய்ய அடுத்து சித்தப்பா அவனுக்கு ஊட்ட அஸ்வின் கேக்கை எடுத்து அவன் முகத்தில் பூசிவிட்டு ஓடினான்.

அபிமன்யூ “டேய் உன்னை விட மாட்டேன்டா” என்று துரத்தி அவன் முகத்திலும் பூசி அலங்கோலமாக்கிவிட்டு ஜனனியிடம் “என்ன உனக்கும் முகத்துல பூசனும்னு ஆசை இருக்கா?” என்று புருவம் உயர்த்தி கேட்க ஜனனி “இல்லவே இல்ல அண்ணா! நான் இந்த வாரம் தான் ஃபேஷியல் பண்ணிட்டு வந்தேன்” என்று சொல்லிவிட்டு கேக்கை எடுத்து நல்ல பிள்ளையாக அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

சுபத்ரா அஸ்வினை பார்த்து சிரித்தவர் “ரெண்டு பேரும் முதல்ல போய் குளிங்க. மறந்து கூட கண்ணாடியை பார்த்துடாதிங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு மற்றவர்களை உறங்கச் சொல்லிவிட்டு அவரும் தூங்க சென்றார்.

அபிமன்யூ அவனது அறைக்கு சென்று முதலில் குளியலை போட்டுவிட்டு வந்தவன் கண்ணாடி முன் நின்று சிகையைக் கோதும் போது சுண்டுவிரலில் இருந்த மோதிரம் கண்ணில் பட கையை மடக்கி அதையே பார்த்து கொண்டிருந்தான்.

அடுத்து டிசர்ட்டை எடுக்க செல்லும் போது ஸ்ராவணியின் செயின் நினைவுக்கு வர அதை எடுத்தவன் மோதிரத்தையும் செயினையும் மாற்றி மாற்றி பார்த்தவன் “நெக்ஸ்ட் டைம் இதை ரிப்போர்ட்டர் கிட்ட குடுத்துடணும் அபி” என்று சொல்லிவிட்டு அவனது வெள்ளை சட்டையில் அதைப் பத்திரப்படுத்தி விட்டு உடையை மாற்றிவிட்டு உறங்கத் தொடங்கினான்.

**********************************************************************************

மறுநாள் காலை விழித்ததும் சுபத்ரா அவனிடம் இன்று கட்சி வேலை என்று அலையக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவனும் நல்ல பிள்ளையாக சரியென்று சொல்லிவிட்டு அறைக்கு செல்ல நான்ஸி போன் செய்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க “தேங்க்யூ டார்லிங்” என்றவன் திடீரென்று நினைவு வந்தவனாக தான் குடும்பத்துடன் கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்லப் போவதாக கூறியவன் நான்ஸியையும் அழைக்க அவளுக்கும் இந்திய வழிப்பாட்டுத்தலங்கள் மீது ஆர்வம் இருந்ததால் கட்டாயம் வருவதாக ஒத்துக்கொண்டாள்.

நேரே ஸ்ராவணியிடம் சென்று தனக்கு கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றும் தன்னுடன் துணைக்கு வருமாறு அவளையும் மேனகாவையும் அழைக்க இருவருமே முதலில் தயங்கியவர்கள் அலுவலகத்துக்கு போன் செய்து அரை நாள் விடுப்பு அறிவித்து விட்டு கோயிலுக்கு புறப்பட தயாராயினர்.

நான்ஸி தனக்கு பாரம்பரிய உடை அணிய விருப்பம் என்று சொல்ல ஸ்ராவணி அவளுக்கு தன்னுடைய புடவையை அவளுக்கு கட்டிவிட்டு சுடிதாருடன் வந்து நிற்க நான்ஸி முகம் சுளித்தாள்.

“வனி கோ டு சேன்ஜ் யுவர் காஸ்ட்யூம். ஐ டோன்ட் லைக் திஸ். அண்ட் யூ டூ மேகி. போத் ஆஃப் யூ ஹேவ் டு சேன்ஜ் யுவர் காஸ்ட்யூம் ரைட் நவ்” என்று பிடிவாதம் பிடிக்க மேனகா பச்சை வண்ண எளிய டிசைனரில் வர ஸ்ராவணி மாம்பழ வண்ண ஷிபானில் தயாரானாள்.

அதே நேரம் சுபத்ரா “ஏன்டா பிறந்தநாளைக்கு கூடவா ஒயிட் அண்ட் பிளாக்ல வருவ?” என்று வெள்ளை சட்டை கருப்பு ஜீன்ஸில் வந்த அபிமன்யூவை கேலி செய்ய அஸ்வின் கிண்டலாக “மா! அது அவனோட யூனிஃபார்ம்! கிண்டல் பண்ணாதிங்க” என்று எடுத்துக் கொடுத்தான்.

அதற்குள் ஜனனியும் சகாதேவனுடன் வர சோஃபாவில் அமர்ந்திருந்த பார்த்திபன் தம்பிக்கு துணையாக எழுந்து அவர் அருகில் சென்று நின்றவர் “சரி சுபிம்மா! கிளம்புவோமா” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தார்.

அபிமன்யூவை அமரச் சொல்லிவிட்டு அஸ்வினே காரை எடுத்தான் அன்று.  அடுத்த சில மணி நேரங்களில் கோயிலில் நுழைந்தனர் பார்த்திபனின் குடும்பத்தினர். சுபத்ரா அர்ச்சகரிடம் அபிமன்யூவின் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்லி கொடுக்க மற்றவர்கள் கண்ணை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருக்கும் போது தான் நான்ஸியுடன் கோயிலுக்குள் நுழைந்தனர் ஸ்ராவணியும், மேனகாவும்.

நான்ஸியிடம் கோயில் கோபுரத்தை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டே வந்தனர் இருவரும். நான்ஸி கேமராவை வைத்து ஒவ்வொரு இடமாக புகைப்படம் எடுக்க மேனகா ஸ்ராவணியிடம் “வனி! இந்த சாரி வழுகுதுடி. என்னால மேனேஜ் பண்ணவே முடியல. விழுந்துருவேனோன்னு பயமா இருக்கு” என்று புலம்பியபடியே கொசுவத்தைப் பிடித்தபடி அன்னநடை நடந்து வந்தாள்.

அர்ச்சகர் சுபத்ராவிடம் விபூதியை கொடுக்க அவர் தன் பிள்ளைகள் மூவருக்கும் வைத்துவிட்டு “பகவானே இந்த மூனு பேருக்கும் நல்ல புத்தியை குடுப்பா” என்று வேண்ட மூவரும் “என்னம்மா நீங்க..” என்று சிணுங்கினர். பார்த்திபனுக்கும் சகாதேவனுக்கு விபூதியை கொடுத்தவர் ஜனனியை அழைத்து கொண்டு எப்போதும் போல அடிபிரதட்சணம் வைக்க செல்ல சுற்றி முற்றி வேடிக்கை பார்த்த அபிமன்யூவின் கண்ணில் சேலையில் தேவதையாக கையை ஆட்டி எதையோ காட்டிச் சிரித்த வண்ணம் வந்த ஸ்ராவணி விழ அவளின் அழகில் மெய்மறந்து நின்றான் அபிமன்யூ.

அவள் நடந்து வந்த விதம், காற்றில் படபடத்த முந்தானையை இழுத்து பிடித்தபடி கூந்தலை ஒதுக்கியவாறு பேசிய விதத்தில் இலயித்தவனாய்  அவளை நோக்கி நடந்தான் அபிமன்யூ.

ஸ்ராவணி தோழிகளிடம் பேசிக்கொண்டு வந்தவள் திடீரென்று தன் முன் வந்து நின்ற அபிமன்யூவை கண்டதும் திகைத்தாள் ஒரு நிமிடம். மேனகாவுக்கும், நான்ஸிக்கும் கூட அவனைப் பார்த்ததும் ஏதோ வித்தியாசமாக தோன்ற அவர்களை நோக்கி புன்னகை செய்தபடி பார்வையை ஸ்ராவணி மட்டும் பதித்தான் அபிமன்யூ.

ஸ்ராவணிக்கு நெற்றியில் விபூதியுடன் வழக்கமான அலட்டல், கேலி எதுவுமின்றி நின்ற அபிமன்யூவின் இந்த புதிய அவதாரம் வித்தியாசமாக தோன்ற அவளின் உள்மனது “வனி! என்னாச்சு இன்னைக்கு எம்.எல்.ஏ முகத்துல ஒரு தெய்வீகக் கலை பொங்குது? இவன் இப்பிடிலாம் இருக்க மாட்டானே?” என்று அவளுக்கு எச்சரித்தது.

அதற்குள் அவனை தேடி வந்த அஸ்வின் பெண்கள் மூவரையும் கண்டதும் மகிழ்ந்தவன் மேனகாவை மட்டும் அவனது கண்ணில் படம்பிடித்து கொண்டான். அவள் கொசுவத்தை பிடித்தபடி கண்ணில் அவஸ்தையுடன் நிற்பதை பார்த்து கேலியாய் சிரிக்க தவறவில்லை. அவனது சிரிப்பை கண்டவள் ஆவேசத்துடன் ஏதோ சொல்ல வர அதற்குள் அபிமன்யூ ஸ்ராவணியிடம் “ரிப்போர்ட்டர் மேடம் நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சொல்லிவிட்டுச் செல்ல அவள் கேள்வியுடன் தோழிகளிடம் கண் காட்டிவிட்டு அவனை தொடர்ந்து சென்றாள்.

இருவரும் தெப்பக்குளத்தின் அருகில் நிற்க அபிமன்யூ ரசனையோடு அவளை பார்த்தபடி “ஐயாம் ரியலி சாரி” என்றான் ஆழ்ந்த குரலில். ஸ்ராவணிக்கு அவனது குரலில் தெரிந்த வேறுபாடு மனதை உறுத்த நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவன் அதே குரலில் “நான் உன்னோட விஷயத்துல நிறைய தப்பு பண்ணிருக்கேன். அதனால சில நேரங்கள்ல உன்னோட மனசு கஷ்டப்பட்டிருக்கலாம். அது எல்லாத்துக்குமே சாரி” என்று மனதார மன்னிப்பு கேட்க ஸ்ராவணி சினேகமாக புன்னகைத்து அவனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டாள்.

இருந்தாலும் கண்ணில் குறும்புடன் தலையை சரித்து “இன்னைக்கு என்னாச்சு எம்.எல்.ஏ சாருக்கு? காலையில ஏதாச்சும் போதிமரத்துக்கு அடியில உக்காந்துட்டு வந்திங்களா? இந்த திடீர் ஞானோதயத்துக்கு என்ன காரணம்?” என்று கேட்க அவள் கேட்ட பாணியில் சிரித்தவன் “நத்திங் சீரியஸ். சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன்” என்றான்.

ஸ்ராவணிக்கு அந்த வார்த்தையில் பொய்யில்லை என்பது புரிந்துவிட்டதால் தலையசைத்து அவனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டாள். அவள் திரும்பி நடக்க முயல அபிமன்யூ சட்டென்று “வனி ஒரு நிமிசம்” என்று சொல்ல திரும்பி மீண்டும் அவனிடம் வந்தாள் அவள்.

“உன்னோட திங்ஸ் என் கிட்ட இருந்துச்சு” என்றபடி அவளது செயினை எடுத்து அவள் கையில் கொடுக்க ஸ்ராவணிக்கு தந்தையின் பரிசு மீண்டும் தன்னை வந்தடைந்த மகிழ்ச்சி கண்ணில் மின்ன அதை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டாள்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகர முயன்றவளை “வனி ஒரு நிமிசம்” என்ற அவனது குரல் மீண்டும் தடுத்து நிறுத்த இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியவாறு என்னவென்று விழியாலே கேட்க அவன் அவளது மோதிரத்தை அவனது சுண்டுவிரலில் இருந்து கழற்றினான்.

அதை கழற்றவும் அவள் வாங்குவதற்காக கையை நீட்ட அவன் தலையை மறுப்பாக அசைத்து “செயின் தானா என் பாக்கெட்ல விழுந்துச்சு. சோ உன் கையில அப்பிடியே குடுத்துட்டேன்.  பட் இந்த ரிங் நானா தானே கழட்டுனேன். சோ நானே போட்டுவிடுறேனே” என்று சொன்னவன் அவள் மறுக்கும் முன் அவளது கையை பிடிக்க பார்த்திபனுடன் கோயிலை வலம் வந்த சுபத்ராவின் கண்ணில் இந்த காட்சி சிக்கியது.

அபிமன்யூ இது எதையும் கவனிக்காதவனாய் ஸ்ராவணியின் விரலில் அந்த மோதிரத்தை மாட்டிவிட சுபசகுனமாக கோயில் மணி அடித்தது. அந்த காட்சியை கண்ட சுபத்ரா கணவரிடம் “இவங்க ரெண்டு பேரும் காலம் முழுக்க இப்பிடியே இருந்தா நல்லா இருக்கும்லாங்க” என்றார் ஆவலுடன். பார்த்திபனின் கண்ணிலும் மகனின் முகத்தில் விகசித்த உணர்வு புரியாமல் இல்லை. அவரும் காதல் திருமணம் புரிந்தவராயிற்றே! மனைவியின் கூற்றை ஆமோதித்தவர் மனதிற்குள் இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

அதே நேரம் மேனகா மற்றும் நான்ஸி அஸ்வினுடன் தெப்பக்குளத்தை காண வந்தவர்கள் அபிமன்யூ ஸ்ராவணிக்கு மோதிரம் போட்டுவிட்டதை கண்டதும் திகைப்பில் சிலையாயினர். அஸ்வின் மட்டும் நண்பனின் முகத்திலிருந்தே அவனது மனதை அறிந்து அவனுக்காக சந்தோசப்பட்டான். இதை எதையும் அறியாத ஸ்ராவணியோ தன்னுடைய கையை பற்றியிருப்பவனிடம் இருந்து அதை விலக்காமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.