🖊️துளி 25👑

மூவரும் டாக்சியிலிருந்து இறங்கி பப்பை நோக்கி நடைபோட்டனர். மேனகா ஜீன்ஸின் பாக்கெட்டில் கைகளை வைத்து கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தபடி நடக்க நான்ஸி உற்சாகமாக முன்னேறினாள். ஸ்ராவணி யாருக்கு வந்த வாழ்வோ என்று இருவரையும் பின் தொடர்ந்தாள். வழக்கம் போல பப்பின் பவுண்சர்கள் வழிமறிக்க நான்ஸி கெஸ்ட் லிஸ்டில் தன்னுடைய பெயர் இருப்பதாக கூற அவர்கள் அனுமதித்ததும் மூவரும் உள்ளே சென்றனர்.

மேனகாவுக்கு ஏற்கெனவே வந்த இடம் என்பதால் சென்ற முறை போலவே ஒரு இருக்கையை கண்டுபிடித்து அக்கடாவென்று அமர்ந்துவிட்டாள். ஸ்ராவணியும் அவள் அருகே அமர நான்ஸி இருவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க அவளை என்ஜாய் பண்ணுமாறு சொல்லிவிட்டு இருவரும் அமர்ந்து கொண்டனர்.

மேனகாவும் ஸ்ராவணியும் எப்போதும் போல ஊர்க்கதைகளை பேச ஆரம்பிக்க நான்ஸி அபிமன்யூவிடம் வந்து கைகுலுக்கியவள் டிரிங்ஸை ஆர்டர் செய்துவிட்டு அவனிடமும் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு அவளின் தங்குமிடத்தை பற்றி செல்லவும், அவள் ஸ்ராவணியின் ஃப்ளாட் தனக்கு வசதியாக இருப்பதாக கூறியவள் அவர்கள் இருவரை பற்றியும் சிலாகித்து பேச அபிமன்யூவுக்கு காதில் இருந்து இரத்தம் வராத குறை.

காதுமடலை தேய்த்துவிட்டபடி அஸ்வினிடம் “இப்போ தெரியுதாடா நான் ஏன் பிரேக் அப் பண்ணுனேன்னு? இவளுக்கு ஒருத்தவங்களை பிடிச்சா அவங்களை பத்தியே பேசி நம்ம காதை கடிச்சு வைக்க வேண்டியது! வந்ததுல இருந்து அபி நீ எப்பிடி இருக்க? உன் லைஃப் எப்பிடி போகுது? இந்த மாதிரி எதாச்சும் கேட்டாளா பாரு. ஒன்னு அவளை பத்தி பேசுவா, இல்லன்னா அவளுக்கு பிடிச்சவங்களை பத்தி பேசுவா” என்று நக்கலாக உரைக்க அஸ்வின் அதை கேட்டு சிரித்தபடியே திரும்ப அங்கே கண்ணாடியை கழற்றி ஊதிவிட்டு மீண்டும் போட்டுக்கொண்டபடி ஸ்ராவணியிடம் கதையளந்து கொண்டிருந்த மேனகா படவே “அபி நான் இப்போ வந்துடுறேன்டா” என்று சொல்லிவிட்டு விலகினான் அவன்.

அதற்குள் நான்ஸி “சால் வீ டான்ஸ்?” என்று கையை நீட்ட அபிமன்யூ அவள் கையை பற்றி அழைத்து செல்ல அஸ்வின் மேனகாவையும் ஸ்ராவணியையும் நோக்கி சென்றான்.

“ஹலோ கேர்ள்ஸ்!” என்று அழைத்தபடி வந்து அவர்களுடன் அமர மேனகா “எங்கே அந்த இன்னொருத்தன்? எப்போவும் மாற்றான் படத்துல வர்ற ஒட்டிப்பிறந்த சூரியா மாதிரி ஒன்னா தானே சுத்துவிங்க. எங்க உங்க எம்.எல்.ஏ?” என்று நக்கலாக கேட்க அஸ்வின் தன் பெருவிரலால் அங்கே நடனமாடிக்கொண்டிருக்கும் நான்ஸி மற்றும் அபிமன்யூவை காண்பிக்க மேனகா உதட்டை சுளித்து அழகு காட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அஸ்வின் கிண்டலாக “ஒரு நிமிசத்துல முகத்துல நவரசத்தையும் காட்டுறியேம்மா? எப்பிடி நீ பொறந்ததுல இருந்தே இப்பிடியா இல்ல ஆக்சிடெண்ட் எதுலயும் மாட்டிக்கிட்டதால…” என்று இழுத்தபடியே தலையை சுட்டிக்காட்ட ஸ்ராவணி அவன் பாவனை செய்த விதத்தில் நகைக்க மேனகா இருவரையும் முறைக்க ஆரம்பித்தாள்.

ஸ்ராவணி உதட்டின் மீது கையை வைத்து “ஓகே ஓகே கூல் டவுன் மேகி. நாங்க சிரிக்கல! சரியா” என்று சொல்ல

அஸ்வின் கிண்டலாக “அது என்ன செல்ல பேரு? மேகி, இப்பி, டாப் ராமென்னு? இதுக்கே இன்னும் அரைமணி நேரம் விடாம சிரிக்கலாம்” என்று கலாய்க்க மேனகா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

அஸ்வின் அவளது தலைமுடியை கலைத்துவிட அவள் கடுப்புடன் “ஹலோ! டோண்ட் டச் மீ மேன்” என்று விரலை நீட்டி எச்சரித்துவிட்டு ஸ்ராவணியிடம் “வனி! வா நம்மளும் எதாச்சும் டிரிங்ஸ் சாப்பிடுவோம்” என்று சொல்ல ஸ்ராவணி அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.

“மேகி ஆர் யூ ஆல்ரைட்? நீயா இப்பிடி பேசுற?” என்றாள் நம்ப இயலாதவளாய்.

“ஆமாடி! லாஸ்ட் டைம் நீ என்னவோ ஆர்டர் பண்ணுனியே?…அது பேரு…..”

“ரெட் ஒயின் மேகி”

“யெஸ்! அதே தான். வா! எதுக்கு வெட்டியா இந்த தண்டத்துக்கிட்ட பேசி  டைமை வேஸ்ட் பண்ணனும்?” என்று அவளது கையை பிடித்து இழுத்து சென்று ரெட் ஒயினை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தாள் மேனகா.

அஸ்வின் தோளை குலுக்கிவிட்டு எழுந்தவன் வேறு ஒரு பெண் அவன் அருகில் வர “ஹாய் தீபிகா!” என்றவாறு அவளுடன் சென்றுவிட மேனகா “இந்த எம்.எல்.ஏவுக்கும் அவன் கூட இருக்கிற எருமைக்கும் ஆம்பிளைங்க யாருமே கண்ணுக்கு தெரிய மாட்டங்க போல” என்று கலாய்த்தாள் ஸ்ராவணியிடம்.

அந்நேரம் பார்த்து ஸ்ராவணிக்கு போனில் கால் வர “மேகி வெளியே போய் கால் பேசிட்டு வர்றேன்டி. இந்த சவுண்ட்ல எதுவுமே கேக்கல” என்றபடி காதில் போனை வைத்துக் கொண்டு வெளியேறினாள்.

நான்ஸியுடன் ஆடினாலும் ஸ்ராவணியின் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டிருந்த அபிமன்யூ அவள் போனுடன் வெளியேற மனதிற்குள் “ரிப்போர்ட்டர் இப்போ என்ன பிளானோட வந்திருக்கானு தெரியலயே. அபி அவளை விட்டுட்டா போன தடவை மாதிரி எதாச்சும் ஆயிடப் போகுது. எதாச்சும் பண்ணு” என்று யோசித்தவன் நான்ஸியிடம் தான் வந்துவிடுவதாக கூறி அவளை தொடர்ந்து சென்றான்.

ஸ்ராவணி வேகமாக வெளியே வந்தவள் போனில் “ஹலோ” என்க மறுமுனையில் வேகமாக ஒரு குரல் “ஹலோ வனி! போனை வச்சிடாதே” என்று குழறலாக கேட்க ஸ்ராவணி குரலுக்கு சொந்தகாரனை கண்டுபிடித்துவிட்டாள்.

“விக்ரம்! இப்போ எதுக்கு கால் பண்ணிருக்க? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல. மறுபடி ஏன் கால் பண்ணுற? அன்னைக்கு பேசாதது எதுவும் பாக்கி இருக்கா?” என்று கடுப்புடன் அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே வந்து சேர்ந்தான் அபிமன்யூ.

அவளோ அவன் வந்ததை அறியாமல் “உன் கிட்ட பேச எனக்கும் எதுவும் இல்ல விக்ரம். இவ்ளோ குறுகிய மனப்பான்மை உள்ள ஒருத்தன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சதுக்கும், அவனை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்ததுக்கும் எனக்கு நீ நல்ல பாடத்தை கத்துக் குடுத்துட்ட. இனிமே கல்யாணம், குடும்பம் இந்த இடியட்டிக் செண்டிமென்ட்ஸ் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண நான் தயாரா இல்ல” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

அவள் பேசுவது அட்சர சுத்தமாக காதில் விழ அபிமன்யூ “விக்ரமா? இவன் எதுக்கு கால் பண்ணிருக்கான்? அது தான் அந்த நிச்சயதார்த்தத்துலயே அவன் காதலுக்கு சமாதி கட்டியாச்சே!” என்று யோசிக்க அதற்குள் ஸ்ராவணி பதறும் குரல் அவன் காதில் விழுந்தது.

“இங்க பாரு விக்ரம். பைத்தியகாரத்தனமா பண்ணாதடா. ஒரு ஃப்ரெண்டா சொல்லுறேன். நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது. லூசுத்தனமா பேசாம பிராக்டிக்கலா திங் பண்ணு. இப்பிடி செத்துடுவேனு மிரட்டி என்னை சம்மதிக்க வைக்கலானு நெனைச்சா அது முட்டாள்தனம் இடியட். உன் அப்பா அம்மாவ நினைச்சு பாத்தியா?” என்று விக்ரமுக்கு பதற்றத்துடன் அறிவுரை சொல்ல அதை கேட்ட அபிமன்யூ “ஓ சாகப் போறானா அவன்? இதோ வர்றேன்” என்றபடி ஸ்ராவணியை நெருங்கி அவள் பேசிக் கொண்டிருந்த போனைப் பறிக்க அவள் திடுக்கிட்டுப் போனாள்.

அவனோ போனை காதில் வைத்து “ஹலோ! என்னடா வேணும் உனக்கு? இப்போ என்ன சாகப் போறியா? போய் சாவு போ! இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதும், நீ சூசைட் பண்ணிக்கிறதும் ஒன்னு தான்டா முட்டாள்” என்று கிண்டலடிக்க ஸ்ராவணி அவன் கையிலிருந்து போனை வாங்க முயல அவளை ஒரு கையால் சமாளித்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.

மறுமுனையில் விக்ரம் அவனது குரலை எதிர்ப்பார்க்காததால் “வனி கூட இந்த நேரத்துல நீ என்ன பண்ணுற? நீயும் அவளும் எப்பிடி…” என்று பதற

அபிமன்யூ சாவகாசமாக “நான் அவ கூட இல்லாம வேற யாரு ப்ரோ இருப்பாங்க? அதுல்லாம் உனக்கு எதுக்கு இப்போ? நீ தான் சாகப் போறியே! சீக்கிரமா போய் செத்துடு! நான் போய் மலர்வளையம் ஆர்டர் பண்ணிட்டு வர்றேன். உன் சாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் ப்ரோ” என்றபடி இணைப்பை துண்டித்தவன் போனை சுவிட்ச் ஆஃப் செய்து அவனது சட்டை பாக்கெட்டிலேயே போட்டுக் கொள்ள ஸ்ராவணி திகைத்தவாறே நின்றவள் அவன் சட்டையிலிருந்து போனை எடுக்க முயன்றாள்.

அவன் அவளது கையை தட்டிவிட்டவாறே “ரிப்போர்ட்டர் மேடம் இப்போ எதுக்கு கிச்சுகிச்சு மூட்டிட்டு இருக்க?” என்க

அவள் கடுப்புடன் “நான் போனை எடுக்க டிரை பண்ணுறது உனக்கு கிச்சுகிச்சு மூட்டுற மாதிரியா இருக்கு? ஒழுங்கா போனை குடுத்துடு” என்று விரலை நீட்டி மிரட்ட அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து நீட்டினான்.

அவள் வாங்க முயல, அதற்குள் அதை உயரே தூக்கிப் பிடிக்க அவள் இடுப்பில் கை வைத்து முறைத்தாள். அவள் ஐந்தரையடி தான். ஆனால் அவன் தான் பனைமரத்துக்கு பாதி வளர்ந்திருந்தானே!

கேலியாக அவளது முறைப்பை பார்த்தபடி “அன்னைக்கு மாதிரி ஹைஹீல்ஸ் போட்டிருந்தா கூட கொஞ்சம் எட்டியிருக்கும். இந்த மாதிரி இன்னும் பத்து ஸ்னிக்கர்ஸை போட்டு டிரை பண்ணிப் பாரு. ஒரு வேளை எட்டலாம்” என்று சொல்ல ஸ்ராவணி அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் நடந்துச் செல்ல அவளைத் தொடர்ந்து ஓடி வந்தபடியே “என்ன ரிப்போர்ட்டர் மேடம் சீரியஸா உனக்கு போன் வேண்டாமா? இப்பிடி தோல்வியை ஒத்துக்கிட்டா அது உனக்கு அழகு இல்லயே” என்று சொன்னபடி அவளுடன் சேர்ந்து நடந்தான்.

அவள் பொய்யாக முகம் மலர்ந்தவளாய் “என்ன பண்ணுறது மிஸ்டர் எம்.எல்.ஏ? ஒரு வளர்ந்து கெட்டவன் எப்போ பாரு என் வழிக்கே வர்றான். அவன் கிட்ட ஆர்கியூ பண்ணி என் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்கிற விட்டுட்டு வாக்கிங் போனாலாச்சும் கொஞ்சம் வெயிட் குறையுமேனு பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

அவன் அவள் பின்னே வந்தபடியே “இந்த ஏரியா சேஃப் கெடயாது மேடம். ஒழுங்கா என் கூட பப்புக்கே வந்துடு” என்று அவன் சீரியசாக சொல்ல அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி திரும்பினாள். ஒரு கேலிப்புன்னகையுடன் “சேஃப்டி கெடயாதுனு நீ உன்னை மனசுல வச்சிட்டு தானே சொன்னே” என்று கேட்க

அவன் குறும்பாய் அவளை பார்த்தபடி “அப்பிடியும் வச்சுக்கலாம் மேடம். நீ பாக்க பேரழகியா இல்லைனாலும் ஏதோ பரவால்லாம இருக்க. மனுசன் மனசு எப்போ மாறும்னு யாருக்குமே தெரியாது. வேற ஒரு பொண்ணுனா கூட பரவால்ல. நீ அஃபிஷியல் ஒய்ஃபா வேற போயிட்ட. இந்த அழகான தனிமை, ஜில்லுனு காத்து இதுல்லாம் என்னை அப்பிடியே வேற உலகத்துக்கு கொண்டு போகுது. சோ என்னோட மைண்ட் வேற விதமா யோசிக்கிறதுக்குள்ள நம்ம பப்புக்கு போறது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது” என்று சொல்லிவிட்டு புருவத்தை உயர்த்த ஸ்ராவணி காதுகளை பொத்திக் கொண்டாள்.

“அட வீணா போனவனே! இன்னொரு தடவை உன் வாயால என்னை ஒய்ஃப்னு சொல்லாத! கேக்கவே நாராசமா இருக்கு. இந்த லெட்சணத்துல உன் மைண்ட் வேற மாதிரி வேற சிந்திக்குமோ? உன்னை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல. கையெழுத்து போடுறத்துக்கு முன்னாடி ஒரு தடவை பேப்பரை பார்த்திருந்தா இந்த நிலமை எனக்கு வந்திருக்குமா? அடியே மேகி! கல்யாணமே வேண்டானு இருந்த என்னை பிடிச்சு இப்பிடி ஒரு பிளேபாய் தலையில கட்டி வச்சிட்டியேடி” என்று மேனகாவையும் நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாள்.

அதற்கு அவன் சிரிக்க திரும்பி நடக்க ஆரம்பித்தாள் ஸ்ராவணி. அவனும் கூடவே வந்தபடி “நீ ஆல்ரெடி கமிட்டட் தானே ரிப்போர்ட்டர். அப்புறம் என்ன கல்யாணமே வேண்டானு இருந்தேனு சொல்லுறே?” என்று கேட்டபடி நடக்க ஸ்ராவணி கால் வலித்ததால் நடக்கும் வழியில் இருந்த சிமெண்ட் நடைபாதையில் அமர்ந்து கால்முட்டிகளை கட்டிக் கொண்டாள்.

அபிமன்யூவும் அவளுடன் அங்கே அமர அவள் பொறுமையாக “நான் கமிட்டெட்னு உனக்கு யாரு சொன்னாங்க?” என்று கேட்டுவிட்டு சட்டையின் ஸ்லீவை மடித்துவிட்டுக்கொண்டாள்.

அவன் “இப்போ ஒருத்தன் போன் பண்ணி நீ இல்லனா செத்துடுவேனு சொல்லுறானே அவன் உனக்கு யாரு? உன்னோட எக்ஸ் தானே?” என்று கேலியாய் கேட்க

ஸ்ராவணி தலையசைத்து மறுத்துவிட்டு “இல்ல! அவன் என்னோட ஃப்ரெண்ட். அவன் தான் பிரபோஸ் பண்ணுனானே தவிர நான் அவனை லவ் பண்ணவே இல்ல. ஆனா அப்பா அம்மா கிட்ட பேசி அவங்களை ஒத்துக்க வச்சதால நானும் சரினு சொல்லிட்டேன். பட் ஒரு கண்டிசனோட தான். எப்போவுமே என் புரஃபசனல் லைஃப்ல அவன் தலையிட கூடாதுனு. மத்தபடி எனக்கு கல்யாண வாழ்க்கையில சுத்தமா நம்பிக்கை இல்ல” என்று சொல்லிவிட்டு ஸ்னிக்கர்ஸை கழற்றி கழற்றி மாட்ட அவன் ஏதோ புரிந்தது போல தலையசைத்தான்.

“அப்போ நம்ம டிவோர்ஸுக்கு அப்புறமா கூட நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்லையா ரிப்போர்ட்டர் மேடம்?”

“இல்லவே இல்ல! நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்பா! கல்யாணம் பண்ணிகிட்டேனு வையேன் புருசன், குழந்தை, குடும்பம்னு மொத்த பாரமும் என் தலையில தான் விழும். புருஷனா வர்றவன் அக்கடானு அவன் சௌகரியத்தை மட்டு தான் பார்ப்பானே தவிர என்னை பத்தியோ என்னோட கனவுகளை பத்தியோ அவனுக்கு அக்கறை இருக்காது. அப்புறம் எங்கே இருந்து நான் என் புரஃபசனை பார்க்கிறது?” என்றாள் ஸ்ராவணி தீர்மானமாக.

அபிமன்யூ நக்கலாக “எதுல ஒத்து போறோமோ இல்லயோ இதுல நம்ம ரெண்டு பேரும் நல்லாவே ஒத்து போறோம்” என்று சொல்ல முதல் முறையாக அவன் சொன்ன ஒரு விஷயத்துக்கு அவள் முகம் மலர்ந்து சிரித்தாள். கள்ளமற்ற அந்த சிரிப்பை கவனித்தவன் அவள் முகத்தை பார்த்தபடியே இருக்க ஸ்ராவணி அவனை அழைத்தது அவன் காதில் விழவே இல்லை. அவள் அவனது கண் முன் சொடக்கிட திடுக்கிட்டு விழித்தவன் ஸ்ராவணியின் “என்னாச்சு உனக்கு?” என்ற கேள்வியில் சுயநினைவுக்கு வந்தான்.