🖊️துளி 20👑

ஸ்ராவணி இனி அவளும் மேனகாவும் அந்த ஃப்ளாட்டில் தான் இருக்க போவதாக சொல்ல அபிமன்யூ இவளுக்கு என்ன பைத்தியமா என்று எண்ணியபடி அவளை பார்க்க அவள் “என்னோட வீட்டுல நான் இருக்கிறதுக்கு எனக்கு எவனோட பெர்மிசனும் தேவை இல்ல” என்று சொல்லிவிட்டு மேனகாவுடன் அவர்களின் அறைக்குள் செல்ல எழும்ப அதற்குள் அவர்களை மறித்தான் அவன்.

“ஹலோ கொஞ்சம் நில்லு. அது எங்க ரூம். அதுக்குள்ள போக லேடிஸ்க்கு பெர்மிசன் கிடையாது” என்று சொன்னபடி அவர்களைப் பார்க்க

ஸ்ராவணி “அது எங்க ரூம். நாங்க அங்க தான் இருக்க போறோம்” என்று பிடிவாதத்துடன் சொல்லிவிட்டு வழிமறித்து நின்றவனை விலக்கிவிட்டு சென்றாள்.

உள்ளே சென்றவள் மேனகாவிடம் முதலில் அவர்களின் உடைகளை வார்ட்ரோபிலிருந்து எடுத்து வீசச் சொன்னவள் தங்களின் உடைகளை அதில் அடுக்க தொடங்கினாள். அபிமன்யூ இதை கண்டு எரிச்சலானவன் “இங்க பாரு ரிப்போர்ட்டர் மேடம் நீ உன் வீட்டை என் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணி குடுத்து ஒன் மன்த்க்கு மேலாகுது. இப்போ தேவை இல்லாம இங்க வந்து எங்க கிட்ட பிரச்சனை பண்ணுறனு நான் போலீசை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்க அவள் அதை கண்டுகொள்ளாமல் தங்களின் உடைமைகளை அடுக்கி முடித்தாள்.

பின்னர் அவளின் கண்கள் அறையை அளவிட அவன் மீண்டும் “ஸ்ராவணி….” என்று ஆரம்பிக்கவும் அவள் “போலீசை கூப்பிட போறியா? போ, போய் கூப்பிடு. அவங்க வரட்டும். நீ அவங்க கிட்ட வீட்டுப்பத்திரத்தை காட்டுனா நான் நம்ம மேரேஜ் சர்டிஃபிகேட்டை காட்டுவேன். அவங்க யாரு பக்கம் பேசுவாங்கன்னு அப்புறமா பாக்கலாம்” என்று அலட்சியமாக சொல்ல அவன் கோபத்துடன் அந்த அறையின் கதவை அறைந்து சாத்தியபடி வெளியேறினான்.

அவன் பின்னே அஸ்வின் வெளியேறிய பிறகு ஸ்ராவணியும், மேனகாவும் கதவை சாத்தியவர்கள் ஆற அமர குளித்துவிட்டு சாவகாசமாக வெளியே வந்து அவர்களின் உடைமைகளை ஹாலில் வைத்தனர்.

அபிமன்யூ இருவரையும் ஏறிட்டு பார்க்க மேனகா “என்னாச்சு எம்.எல்.ஏ சார்? ஏன் இப்பிடி பாக்குறிங்க? இது எல்லாமே உங்க ரெண்டு பேரோட திங்ஸ். அதுக்கு எங்க ரூம்ல என்ன வேலை? அதான் ஹால்ல கொண்டு வந்து வச்சுட்டோம். உங்க ரெண்டு பேருக்கும் அந்த ரூமை அலாட் பண்ணிட்டோம். அங்க இருக்கிறதும், இல்லனா ஹால்லயே இருக்கிறதும் உங்க இஷ்டம்” என்று கிண்டலாக உரைத்துவிட்டு ஸ்ராவணியுடன் கிச்சனை நோக்கி சென்றாள்.

அபிமன்யூ ஏதோ சொல்ல வருவதற்குள் அஸ்வின் அவனை சாந்தப்படுத்தி தங்கள் உடைமைகளை வேறு அறைக்கு கொண்டு சென்றான்.

அவர்கள் வந்த நாளிலேயே ஸ்ராவணி மீண்டும் அந்த வீட்டை அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு பழையபடி மாற்ற முனைந்தாள்.

ஸ்ராவணியும், மேனகாவும் கிச்சனில் நுழைந்தவர்கள் ஃப்ரிட்ஜில் ஏதாவது இருக்குமா என்று திறந்து பார்க்க அதில் இருந்த அழகான பாட்டில்களை கண்டு திகைத்தனர். ஸ்ராவணி “மேகி! சரியான மொடாக்குடிகாரனா இருப்பான் போல. ஒரு ஊருக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வச்சிருக்கான்டி” என்று சொல்லிவிட்டு அந்த பாட்டில்களை கிச்சன் மேடையில் மேல் எடுத்துவைத்துவிட்டு “முதல்ல ஃப்ரிட்ஜை கிளீன் பண்ணனும்” என்று முகத்தை சுளித்து உரைத்துவிட்டு அத்தனை பாட்டில்களையும் ஹாலில் கொண்டு வைத்துவிட்டாள்.

அஸ்வின் அவர்களின் தற்போதைய அறையிலிருந்து வெளியே வந்தவன் ஹாலில் அடுக்கிவைக்க பட்ட பாட்டில்களை கண்டதும் “என்னமா பண்ணி வச்சிருக்க நீ? இதெல்லாம் எதுக்கு வெளியே எடுத்து வச்சிருக்க?” என்றபடி தலையில் கை வைத்து கொண்டான்.

அவன் பின்னோடு வெளியே வந்த அபிமன்யூ அதை கண்டு இன்னும் டென்சனாக கிச்சனுக்குள் சென்று ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்த ஸ்ராவணியிடம் “யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட். அதோட விலை என்ன தெரியுமா உனக்கு? அதெல்லாம் லோக்கல் பிராண்ட் இல்ல” என்றபடி கடுகடுக்க

அவள் மேனகாவை அந்த வேலையை கவனிக்குமாறு சொல்லிவிட்டு அவனை ஹாலுக்கு வருமாறு சொல்லிவிட்டு செல்ல அவன் கடுப்புடன் அவளை பின்தொடர்ந்தான்.

ஸ்ராவணி அமைதியாக இருவரையும் பார்த்தபடி “லுக்! எனக்கு இங்க வந்து இப்பிடி டிராமா பண்ணனும்னு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. இது ஸ்டாப் ஆகுறதும், கண்டினியூ ஆகுறதும் எம்.எல்.ஏ சார் கையில தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு அபிமன்யூவை பார்க்க அவன் புருவம் உயர்த்தி தோளை குலுக்கிவிட்டுச் சென்றான். அஸ்வினும் அவனைத் தொடர்ந்துச் சென்றான்.

அதன் பின் இருவரும் தயாராகி வழக்கம் போல கட்சி அலுவலகம் சென்று விட ஸ்ராவணியும் மேனகாவும் அவர்களின் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அன்று சனிக்கிழமை என்பதால் மாலையிலும் சீக்கிரமாவே வீடு திரும்பிவிட்டனர் இருவரும். அவர்களின் வழக்கமான சனிக்கிழமை மாலை பால்கனியில் டீ கப்புடன் அமர்ந்து கதை பேசுவதை தொடர்ந்தவர்கள் நேரம் போவதையே அறியவில்லை.

அதன் பின் மேனகா இரவுணவு தயார் செய்ய செல்ல ஸ்ராவணியும் அவளுடன் கிச்சனுக்குச் சென்று உதவிக் கொண்டிருந்தாள். அதே நேரம் வீட்டினுள் நுழைந்த அபிமன்யூ அஸ்வினிடம் “டேய் அச்சு ரெண்டு வயசுப்பசங்க இருக்கிற வீட்டுல கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்பிடிடா இருக்க முடியுது இந்தப் பொண்ணுங்களால?” என்று கடுப்புடன் கேட்டபடி வந்து சோஃபாவில் அமர்ந்தான்.

அஸ்வின் நக்கலுடன் “இருக்க முடியும்டா. அந்த ரெண்டு பையன்ல ஒருத்தன் அந்தப் பொண்ணோட புருசனா இருந்தா தாராளமா இருக்கலாம்” என்று கேலி செய்ய

அபிமன்யூ கடுப்புடன் “நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லு. ஆனா என்னைப் போய் அவளோட புருஷன்னு சொல்லாதடா. இந்தக் கொடுமையை என்னால கேக்க முடியாது” என்று காதைப் பொத்திக் கொண்டான்.

ஸ்ராவணிக்கு அவன் கூறியது நன்றாகவே காதில் விழுந்தது. ஆனால் அவள் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவளும் மேனகாவைப் போல வீடு கைக்கு வந்தால் போதும் என்று எண்ண பழகிக் கொண்டாள்.

அதன் பின் வந்த நாட்கள் அபிமன்யூவிற்கு எவ்வளவு இடைஞ்சல்கள் தர முடியுமோ அவ்வளவையும் கொடுத்தாள் ஸ்ராவணி. சில நாட்கள் அவனும் அஸ்வினும் கட்சி ஆபிஸுக்கு சென்றுவிட்டுத் திரும்ப காலதாமதம் ஆகிவிடும். அப்போதெல்லாம் வீட்டின் கதவை அடைத்துவிட்டு ஸ்ராவணியும், மேனகாவும் உறங்கிவிடுவர். அதன் பின் அவர்களின் உறக்கம் என்னவோ காரில் தான் கழியும். ஒவ்வொரு முறையும் அபிமன்யூ ஆத்திரத்தில் ஸ்ராவணியை எதாவது சொல்லப் போனால் அஸ்வின் குறுக்கே வந்து தடுத்து நண்பனை சமாதானப்படுத்தி விடுவான்.

ஸ்ராவணி மனதிற்குள் “இந்த வீட்டை விட்டு நாங்க போகணும்னு என்னென்ன குட்டிக்கலாட்டாலாம் பண்ணுன? அந்த வானரங்களை வச்சு எங்களை டார்ச்சர் பண்ணி, அப்பாவை, மேகியைனு எல்லாரையும் கொஞ்சநஞ்சமா கஷ்டப்படுத்துன? எல்லாத்துக்கும் அனுபவிடா” என்று மனதிற்குள் கறுவிக் கொள்வாள்.  

ஒரு நாள் வாஷிங் மெஷினில் அவனது வெள்ளை சட்டைகள் இருப்பது தெரியாமல் தன்னுடையை உடைகளையும் உள்ளே போட்டுவிட அவளது உடைகளின் சாயம் இறங்கி அவனது வெள்ளை சட்டைகள் அனைத்தும் வண்ணமயமாகி விட்டது.

அபிமன்யூ கடுப்புடன் துணி மடித்து வைத்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் வெள்ளை சட்டைகளை வீச ஸ்ராவணி திடீரென்று தன் மீது எதுவோ விழுந்ததில் திடுக்கிட்டு விட்டாள்.

கடுப்புடன் அவனை முறைத்து “அறிவில்ல! இப்பிடியா சொல்லாம கொல்லாம என் மேல சட்டையை வீசுவ?” என்க அவன் அவளுக்குச் சிறிதும் குறையாத சீற்றத்துடன் “உனக்கு அறிவு இருந்திருந்தா என் ஒயிட் ஷேர்ட் கூட உன்னோட் கலர் டிரஸ்ஸை போட்டுருப்பியா?” என்று கத்த ஹாலில் ஒரு போர்க்களம் ஆரம்பித்தது.

இருவரும் பதிலுக்குப் பதில் பேச அஸ்வின் அபிமன்யூவை சமாதானப்படுத்த முயல அவனோ பல்லைக் கடித்தபடி “இவ டார்ச்சர் எல்லையை மீறிப் போகுதுடா. என் ஷேர்ட்ஸ் எல்லாமே நாசம் பண்ணிவச்சிருக்கா” என்று கடுப்புடன் உரைக்க

ஸ்ராவணி “அப்பிடி தான்டா பண்ணுவேன். நான் அமைதியா இருக்கணும்னா இந்த வீட்டை அகெய்ன் எனக்கே வித்துடுங்க. நானும் டிவோர்ஸ் குடுத்துடுவேன். நீயும் இந்த டார்ச்சர்ஸ் எதையும் அனுபவிக்க வேண்டாம். இல்லன்னா…..” என்று இழுக்க

அவன் “என்ன பண்ணுவடி? நீ என்ன பண்ணுனாலும் நான் வீட்டை உனக்கு தர்றதா இல்ல. அப்புறம் டிவோர்ஸ்கு நீ சம்மதிக்கணும்னு எனக்கு அவசியமே இல்ல. நீ சம்மதிக்கவே இல்லனாலும் கூட என்னால டிவோர்ஸ் வாங்கிக்க முடியும்” என்று சவால் விட்டு கையை கட்டிக் கொண்டான்.

ஸ்ராவணி உச்சு கொட்டியபடி எழுந்தவள் “சரி அப்போ உன் இஷ்டம். இனிமே நான் சுபத்ரா ஆன்ட்டி கிட்ட பேசிக்கிறேன்” என்று சொல்லவும் அபிமன்யூ தாயின் பெயரைக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவன் பின்னர் கோபத்துடன் அவள் கழுத்தில் கையை வைக்க அஸ்வின் விபரீதமாக அவன் எதுவும் செய்வதற்குள் ஓடிவந்து அவனை விலக்க முயல அவனது பிடி இறுக்கமாக இருந்தது.

“அபி! என்னடா பண்ணுற? விடுடா அந்த பொண்ணை” என்று அஸ்வின் விலக்க முயல

அபிமன்யூ “இன்னொரு தடவை எங்க அம்மாவை நம்ம ரெண்டு பேருக்கு இடையில் கொண்டு வந்தா ஐ வில் கில் யூ ஸ்ராவணி” என்று எச்சரித்துவிட்டு அவளின் கழுத்தை இன்னும் இறுக்கமாகப் பற்ற அஸ்வின் அவனை வேகமாக பிடித்து இழுத்தவன் பளாரென்று கன்னத்தில் அறைந்தான்.

அவனது செய்கையால் அந்த அறையிலிருந்த அனைவரும் அதிர சத்தம் கேட்டு ஹாலுக்கு ஓடி வந்த மேனகா கண்ணில் கனலுடன் நின்ற அஸ்வினையும், கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ச்சியுடன் நின்ற அபிமன்யூவையும் பார்த்தவள் கழுத்தைத் தடவிய வண்ணம் இருமிய ஸ்ராவணியிடம் ஓடிச் சென்று “வனி என்னடி ஆச்சு?” என்று கவலையுடன் வினவ ஸ்ராவணி இருமிவிட்டு நிமிர்ந்தவள் மேஜையிலிருந்து கிளாசிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு தன்னை சமனப்படுத்திக் கொண்டாள்.

அவள் பதில் பேசாமலிருக்க அஸ்வினையும் அபிமன்யூவையும் பார்க்க அஸ்வின் முகம் கோபத்தில் சிவந்திருப்பதை கண்டு மனதிற்குள் “இவனுக்கு இவ்ளோ கோவம் வருமா?” என்று எண்ணிக் கொண்டாள்.

அஸ்வின் அபிமன்யூவை பார்த்து “என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இந்த மாதிரி ரூடா பிஹேவ் பண்ணுற? நீ ரொம்ப மாறிட்ட அபி. அந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சுனா அவங்க பேரண்ட்ஸ்கு யாருடா பதில் சொல்லுவாங்க? இவ்ளோ கோவம் நல்லது இல்ல அபி” என்று ஒரு நண்பனாக அவனை கடிந்து கொள்ள

அபிமன்யூ மனம் பொறுக்காதவனாய் “நீயுமா அச்சு? அச்சு இவ என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்காடா. இவளால தான் அம்மா என்னை பத்தி தப்பா நெனைச்சிட்டு இருக்காங்க. அம்மா இன்னைக்கு வரைக்கு என் கிட்ட முகம் குடுத்து பேசாததுக்கு இவ மட்டும் தான்டா காரணம்” என்று சொன்னபடி மீண்டும் கோபத்துடன் ஸ்ராவணியை நெருங்க அஸ்வின் அவனைப் பிடித்து இழுத்தான்.

“போதும் அபி. எல்லாம் எங்க ஆரம்பிச்சுதுனு உனக்கு நியாபகம் இல்ல? உனக்கு ஏன்டா புரியல அந்த பொண்ணு அவளுக்கு குடுத்த வேலையை தான் செஞ்சா. பெர்சனலா உனக்கும் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நீ தான் முதல்ல அவளோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ள மூக்கை நுழைச்சு அவ நிச்சயதார்த்தத்தை நிறுத்துன. அதோட விட்டுருக்கலாமே. இந்த வீடு நமக்கு தேவையே இல்லாத விஷயம். அவங்க அப்பா அன்னைக்கு நீ பேசுன பேச்சுக்கு நெஞ்சை பிடிச்சுட்டு போனாரே அப்போ கூடவா உனக்கு புரியல, அவங்களுக்கு இந்த வீடு எவ்ளோ முக்கியம்னு. இந்த கல்யாணத்தை பத்தி நான் பேச விரும்பல. ஆனா கண்டிப்பா இது மிஸ் ஸ்ராவணியோட வேலையா இருக்காதுனு மட்டும் எனக்கு தெரியும்” என்று முதல் முறையாக நண்பனின்  தவறுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டியவன் மேனகாவை நோட்டமிட அவள் திருதிருவென்று விழித்தாள்.

அவளின் பார்வையில் இருந்த பதற்றமே அஸ்வினுக்கு போதுமானதாக தோன்ற அவன் அபிமன்யூவை பார்த்து “உனக்கு அப்பானா எவ்ளோ இஷ்டம்னு எனக்கு தெரியும் அபி. ஆனா நமக்கு பிடிச்சவங்க எல்லாருக்கும் பிடித்தமானவங்களா இருக்கணும்னு எதிர்ப்பார்க்குறது முட்டாள்தனம். அப்பாவோட கேஸ் வேற விஷயம். அதை பெர்சனல் லைஃப்ல போட்டு குழப்பிக்காத” என்று அறிவுரை சொல்ல அபிமன்யூ அவனை தீர்க்கமாக பார்த்தபடி நின்றான்.

“இப்போ நான் என்ன பண்ணனும் அச்சு?” என்று பொறுமையாகக் கேட்க அஸ்வின் நிதானமாக அவனை பார்த்தபடி “இந்த வீட்டை அவங்க கிட்ட குடுத்துடு அபி. நம்ம நம்மளோட வீட்டுக்கே போயிடலாம். அங்க போனதுக்கு அப்புறமா அம்மாக்கு விஷயத்தை சொல்லி புரியவைக்கலாம். இந்த பழிவாங்குற டிராமா, கல்யாணம் இதெல்லாம் மறந்துடு! எனக்காகடா பிளீஸ்!” என்று கேட்க அபிமன்யூ நண்பனை பார்த்தபடி சிலையாக நின்றான்.

சில நிமிட அமைதிக்கு பிறகு தொண்டையை செருமியவன் “ஓகேடா! இந்த வீட்டை அவளுக்கே குடுத்துடுறேன். ஆனா இதெல்லாம் உனக்காக மட்டும் தான்” என்று சொல்ல அஸ்வின் முகத்தில் மலர்ச்சியுடன் ஸ்ராவணி புறம் திரும்பி ஏதோ சொல்லவர அவள் அதற்குள் “நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது டியூட்! என் வீடு எனக்கு கிடைச்சிட்டா நான் டிவோர்ஸ் குடுக்க ரெடியா தான் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்றாள்.

அவள் சென்றதும் அபிமன்யூவும் அவனது அறைக்கு செல்ல ஹாலில் மீதமிருந்தது மேனகாவும் அஸ்வினும் மட்டும் தான். அஸ்வின் அவளையே கூரிய விழிகளால் நோக்க மேனகா அவனிடமிருந்து பார்வையை விலக்கி கொண்டு சுவர், ஜன்னல், கதவு என்று ஒவ்வொரு பொருட்களாக பார்வையிட ஆரம்பித்தாள்.

அஸ்வின் யோசனையுடன் “உங்க ஃப்ரெண்ட் டிவோர்ஸ் பண்ணிக்க போறது பத்தி நீங்க ஃபீல் பண்ணலயா மிஸ் மேனகா?” என்று கேட்க

மேனகா சாதாரணமாக தோளை குலுக்கிவிட்டு “இது என்ன அக்னிசாட்சியா, அம்மி மிதிச்சு, அருந்ததி பாத்து நடந்த கல்யாணமா ஃபீல் பண்ணி அழுறதுக்கு? எனக்கு எந்த வருத்தமும் இல்லப்பா” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

அஸ்வின் அவள் சென்றபிறகு “இந்த பொண்ணு கிட்ட எதோ தப்பு இருக்கு அஸ்வின். இவ தான் இந்த மேரேஜ் விஷயத்துல எதோ பண்ணிருக்கா” என்று சொல்லிக்கொண்டான் தனக்கு தானே!

******

அதன் பின் வேலைகள் விறுவிறுவென்று நடந்தது. அபிமன்யூ அஸ்வினுக்கு வாக்களித்தபடி அன்று மாலையே ஃப்ளாட்டை காலி செய்துவிட்டு அஸ்வினுடன் அவர்களின் வீட்டுக்கே திரும்பினான். சுபத்ராவை சமாதானம் செய்ய முயன்று கொண்டே இருக்க அவரோ அவனது சொல்லப்படாத திடீர் திருமணம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அஸ்வினுக்கு தன் நண்பன் இன்னும் பெரிய தவறு எதுவும் செய்யும் முன்னர் அவனை தடுத்த நிம்மதி.

பின்னர் ஒரு வாரத்தில் மறுபடியும் ஃப்ளாட் ஸ்ராவணியின் பெயருக்கே மாற்றிக் கொடுக்கப்பட அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே தந்தைக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தாள் அவள். நீண்டநாள் கழித்து தந்தையின் மனபாரம் இறங்கிய மகிழ்ச்சியில் அவளுடைய அன்றாட வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி நகர்ந்தது. மேனகாவும் தான் செய்த காரியம் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று மனதை சமாதானப்படுத்தியவள் மாமாவின் கனவு இல்லம் அவர் வசம் திரும்பியதற்கு மகிழ்ந்து போனாள்.

ஸ்ராவணியின் ஃப்ளாட் அவள் வசம் வந்துவிட்டதால் அடுத்த நிகழ்வாக விவாகரத்துக்கு இருவரும் ஒருமித்த மனதினராய் மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனில் கையெழுத்திட கோர்ட்டில் டிரையல் போய்க் கொண்டிருந்தது. அன்றைய டிரையைலில் அவர்களுக்கு முதல் ஹியரிங்குக்கு பிறகு அவர்களது முடிவை மறுபரிசீலனை செய்ய ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அபிமன்யூவும் ஸ்ராவணியும் கோர்ட்டிலிருந்து வெளியே வந்தவர்கள் இருவரின் மனதிலும் வெவ்வேறு விதமான யோசனைகள், அன்றாட அலுவல்கள் ஓட அவரவர் நண்பர்களுடன் வெவ்வேறு திசைகளில் பயணித்தனர் காலம் அவர்களைச் சேர்த்து வைக்கப் போட்டிருக்கும் திட்டத்தை அறியாதவர்களாய்…