🖊️துளி 13👑

மேனகா ஸ்ராவணியை விரட்டிக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்க எடுத்தவள் “ஹலோ சீஃப்! எதும் இம்பார்டெண்ட் மேட்டரா? இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க?” என்று கேட்க இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் மாறி விஷ்ணு எதற்கு அழைத்திருப்பான் என்ற கேள்வியுடன் ஸ்ராவணியும் மேனகாவை கவனிக்க ஆரம்பித்தாள்.

“சீஃப் டென்சனாகுற அளவுக்கு எதுவும் இல்ல. இதுக்காகவா ஊட்டியில இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்க? கண்டிப்பா மதர் இந்தியா நாளைக்கு இதுக்கு ஒரு என்கொயரி கமிட்டிய வைப்பாங்க. நாளைக்கு எல்லா விஷயத்தையும் நானே எக்ஸ்பிளைன் பண்ணுறேன். இப்போ டென்சன் ஆகாம தூங்குங்க சீஃப்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் மேனகா.

அவளையே கண்ணில் கேள்வியுடன் பார்த்து கொண்டிருந்த ஸ்ராவணியிடம் “வனி! சீஃப் தான் கால் பண்ணுனாருடி. ரகு நடந்த விஷயத்தை சொல்லிருப்பான் போல. அவரும், பூர்வி மேமும் விஷயத்தை கேள்விப்பட்டு சென்னைக்கு அவசர அவசரமா வந்துருக்காங்க” என்று சொல்ல

ஸ்ராவணி பெருமூச்சுடன் “சரிடி. நாளைக்கு ஆபிஸ்ல போய் சீஃப்க்கு விஷயத்தை சொல்லிடலாம். இப்போ தூங்குவோம். ரெண்டு நாளா எனக்கு சரியாவே தூக்கம் இல்ல. இன்னைக்கு நல்லா தூங்கணும்” என்றபடி படுக்கையில் விழுந்து போர்வையைப் போர்த்திக் கொள்ள மேனகா அவளுக்கு அடுத்து படுத்துவிட்டு விளக்கை அணைத்தாள்.

மறுநாள் காலை தெம்பாக எழுந்த ஸ்ராவணிக்கு மனம் தெளிந்த நீரோடை போல இருக்க உற்சாகமாக அலுவலகத்துக்கு கிளம்பினாள். பேக்கை எடுத்துக் கொண்டவள் “மேகி! நான் கீழே போய் ஸ்கூட்டியோட வெயிட் பண்ணுறேன். சீக்கிரமா வந்துடு” என்று சொல்லிவிட்டு ஹாலில் அமர்ந்திருந்த வேதா, சுப்பிரமணியத்துக்கு ஒரு டாட்டா போட்டுவிட்டு லிஃப்டில் ஏறி கீழ்த்தளத்துக்கு வந்தாள்.

தரிப்பிடத்தில் நின்ற ஸ்கூட்டியை எடுத்தவள் அவளுக்கு அடுத்து நின்ற கார் அவளது ஸ்கூட்டியை இடிக்க வருவதைக் கவனிக்கவில்லை. காரும் பின்னோக்கி வர ஸ்கூட்டியின் பின்பகுதியில் இடிக்க சமநிலை தவறி கீழே விழுந்தாள் ஸ்ராவணி.

டொம்மென்ற சத்தத்துடன் ஸ்கூட்டி  விழுந்ததை கண்ட காரை எடுத்து கொண்டிருந்தவர் பதறிக்கொண்டு கார்க்கதவை திறந்து ஓடிவந்தார். மெதுவாக ஸ்கூட்டியை தூக்கியவர் “ஆர் யூ ஓகே ஸ்ராவணி?” என்று கேட்க

ஸ்ராவணி கையை ஊன்றி எழுந்து கொண்டே “ஐ அம் ஆல்ரைட் ராமன் சார். ஐ கேன் மேனேஜ்” என்று கூறியவள் அந்த ராமனின் முகத்திலிருந்த கவலையை கண்டு துணுக்குற்றவாறு

“உங்களுக்கு என்னாச்சு? நான் நல்லா தான் இருக்கேன் சார். நீங்க ஒரி பண்ணிக்காதீங்க. நீங்க காரை எடுத்ததை கவனிக்காம இருந்தது நான் தான்” என்று சொல்லி அவரது பதற்றத்தைப் போக்க முயற்சித்தாள்.

அவர் சிரமத்துடன் புன்னகைத்தவர் “இன்னைக்கு மார்னிங்ல இருந்தே எதுவும் சரியில்லமா. அந்த டென்சன்ல……” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் டிரக் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியவர்கள் அவரை நோக்கி வந்து “சார் நீங்க தானே ராமன்” என்று பேச ஆரம்பிக்கவும் அவர் விவரத்தை கூறி தன்னுடைய வீடு மூன்றாவது தளத்தில் G3 என்று சொல்லி அவர்களை அங்கே அனுப்பி வைத்தார்.

ஸ்ராவணிக்கு அவர் வீட்டை காலி செய்ய போகிறாரா என்ற ஆச்சரியம். அவரும் அவரது மனைவி சுஜாதாவும் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். ஒரே மகள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற கையோடு இந்த அப்பார்ட்மெண்டுக்கு குடிபெயர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இருவருமே அடுத்தவர் வம்புக்கு போகாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர் அந்த ஃப்ளாட்டில். ஸ்ராவணியும், மேனகாவும் அவர்களின் ஃப்ளாட்டுக்கு போகும் போது எதிர்ப்பட்டால் புன்னகைப்பதோடு சரி.

சில நேரங்களில் செல்போன் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு சுஜாதா இவர்களை அணுகுவதுண்டு. மற்றபடி இருவருமே ஒரு அமைதியான வாழ்க்கையை மற்றவர்கள் கண்ணை உறுத்தாவண்ணம் வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்படி இருக்கையில் திடீரென்று ஃப்ளாட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று ஸ்ராவணி யோசிக்கையிலேயே மேனகா வந்து சேர்ந்தாள்.

அவள் ராமனிடம் “சார் வீட்டை யாருக்கோ வாடகைக்கு விடப் போறீங்களாமே? ஆன்ட்டி சொன்னாங்க. அப்போ நீங்க வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகப் போறீங்களா?” என்று விஷயத்தை வினவ

அவர் “ஆமாம்மா! நாங்க இரும்புலியூர் பக்கம் போலாம்னு இருக்கோம். அங்க இருந்து பொண்ணோட வீடு வாக்கபிள் டிஸ்டென்ஸ் தான். அவசரம்னா  அவ வந்து பாத்துப்பாங்கிறதால இந்த ஃப்ளாட்டை வாடகைக்கு விட்டுட்டு போறோம்” என்று சோர்வான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சில வாலிபர்கள் வந்து அவரிடம் ஃப்ளாட் சாவியைக் கேட்க அவர்களை முதல் முறை பார்த்த போதே ஸ்ராவணிக்கும் மேனகாவுக்கும் பிடிக்காமல் போய்விட்டது.

மேனகா ஸ்ராவணியின் காதில் “வனி இவனுங்க பாக்குறதுக்கு பக்கா ரவுடி பசங்க மாதிரி இருக்கானுங்க. இவங்களுக்கு போயா ராமன் சார் வீட்டை வாடகைக்கு குடுக்கணும்? சம்திங் ராங்டி” என்று சொல்ல ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த ஸ்ராவணிக்கும் அதே யோசனை தான்.

இருவரும் ராமனிடம் புன்னகையை வீசிவிட்டு வெளியேற அவர் கல் போன்ற முகத்துடன் காரில் சென்று அமர்ந்தார்.

************

அலுவலகத்தினுள் நுழைந்த ஸ்ராவணியை அங்கிருந்தவர்களின் பார்வை மொய்க்க அவள் அதை கண்டுகொள்ளாமல் அனுராதாவை அழைத்தாள். அவள் வந்ததும் தன்னை அழைத்ததை நினைத்து அனுவுக்கு திக்கென்று இருந்தாலும் முகத்தின் உணர்ச்சிகளை மறைத்தவாறு அவளிடம் சென்றாள்.

“என்ன வனி? எதுக்கு என்னை கூப்பிட்ட?” என்று கேட்டுவிட்டு ஒருவித பதற்றத்துடன் ஸ்ராவணியை எதிர்கொள்ள அவளது இந்தப் பதற்றத்தை கண்டுகொண்ட மேனகா “நீ ஏன் இப்பிடி டென்சனா இருக்க? இஸ் எனிதிங் ராங்?” என்று கேட்டுவிட்டு அவளையே ஊடுருவிப் பார்த்தாள்.

அவளின் அந்த ஸ்கேன் செய்யும் பார்வையை மிக சிரமத்துடன் தவிர்த்துவிட்டு “ஒன்னும் இல்ல மேகி. நீ என்ன விஷயமா கூப்பிட்ட வனி?” என்க

“சீஃப் வந்தாச்சானு கேக்க தான் உன்னை கூப்பிட்டேன். நீ என்னவோ உன் கையில இருக்கிற டைமண்ட் ப்ரேஸ்லெட்டை பிடுங்க கூப்பிட்ட மாதிரி ரியாக்ட் பண்ணுற. கொஞ்ச நாளாவே நீ சரியில்ல. ம்ம்ம்ம்… பாத்துக்கிறேன்” என்று புருவத்தை உயர்த்திச் சொல்லிவிட்டு மேனகாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

இருவரும் அவரவர் கேபினில் சென்று பேக்கை வைத்துவிட்டு விஷ்ணுவின் கேபினை நோக்கி நடைபோட்டனர். கதவை தட்டிவிட்டு நுழைந்தவர்கள் அங்கே இருந்த ரகு, விஷ்ணு, பூர்வி மூவருக்கும் ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு நாற்காலியில் அமர விஷ்ணு கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் பார்த்து கொண்டிருந்தான்.

ஸ்ராவணி மேனகாவைப் பார்க்க அவளோ மேஜையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை காலி செய்துவிட்டு தன்னுடைய கண்ணாடியை சரி செய்து கொண்டாள்.

பின்னர் தொண்டையை செருமிவிட்டு “ஆக்சுவலி சீஃப் நேத்து என்ன நடந்துச்சுனா…..” என்று ஆரம்பித்து அபிமன்யூ செய்த கலகம், விக்ரமின் முட்டாள்தனம் முதற்கொண்டு சொல்லிமுடித்துவிட்டு மூச்சு விட்டுக் கொண்டாள்.

பூர்வி அவள் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டுவிட்டு “இப்பிடி ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிக்காம போனது கூட நல்லது தான். ஆனா அந்த எம்.எல்.ஏ கூட நீ இதுக்கு மேல எந்த பிரச்சனைக்கும் போகாதடா! இன்னைக்கு நிச்சயதார்த்தத்தை நிறுத்துனவன் நாளைக்கு எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகலாம்” என்றாள் ஸ்ராவணியின் மீது அக்கறை கொண்டவளாக.

அதன் பின் விஷ்ணுவும் அவன் பங்குக்கு அறிவுரை சொல்ல இருவரும் தலையாட்டி அதைக் கேட்டுவிட்டு தங்களின் வேலையை கவனிக்க சென்றனர். ஆனால் மேனகாவுக்கு மட்டும் அனுராதா தங்களையே கவனித்து கொண்டிருப்பது போல தோன்ற எல்லாம் மனப்பிரமை என்று அதை ஒதுக்கி விட்டாள்.

இவ்வாறு இருக்க அபிமன்யூ அன்று நேரம் கழித்து எழுந்தவன் வழக்கமான வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு கீழே ஹாலுக்கு வர அங்கே அஸ்வின் சகாதேவனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அபிமன்யூவின் கண்கள் அவனது அன்னையை தேட அவர் பூஜையறையில் பிசியாக இருந்தார்.

பார்த்திபன் சிறைக்குச் சென்றதிலிருந்து பெரும்பாலான நேரங்களில் பூஜையறையே கதியென்று கிடந்தார் அந்த பெண்மணி. மீதமிருந்த நேரங்களில் தனது அறையை விட்டு வெளியேறவில்லை. அப்படி வந்தாலும் அபிமன்யூவிடம் பேசுவதை தவிர்த்தார் அவர்.  இருபத்தெட்டு வருட நம்பிக்கையைக் குலைத்த மகனிடம் முகம் கொடுத்து பேசுவதை அவர் தவிர்த்தாலும் உள்ளுக்குள் அவனைப் பற்றிய கவலை அவரை அரித்தது என்னவோ உண்மை.

அவ்வபோது ஜனனியும், அஸ்வினும் அவரைக் கலகலப்பாக்க முயற்சிக்க சகாதேவன் அண்ணியிடம் அபிமன்யூவிடம் பேசுமாறு தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே தான் இருந்தார். ஆனால் சுபத்ராவின் ஆதங்கம் இன்னும் அபிமன்யூவை மன்னிக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

அபிமன்யூ டைனிங் டேபிளில் சென்று அமர ஜனனி “அண்ணா! நாளைக்கு இந்நேரம் பெரியப்பா வீட்டுக்கு வந்துடுவாங்கல்ல” என்று சந்தோசமாக கேட்க

அவனும் அவளின் தலையை வருடிக்கொடுத்தபடி “கண்டிப்பா வந்துடுவாரு ஜானு. நான் இருக்கிறப்போ அவரை ரொம்ப நாள் ஜெயில்ல இருக்க விடுவேனா என்ன?” என்று பாசத்துடன் பதிலளித்தான்.

அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சி “அதானே! என் அண்ணாவால முடியாதது எதுவும் இல்ல. ஐ லைக் யூ அண்ணா” என்று சொல்ல அபிமன்யூ மற்றும் அஸ்வினுடன் சேர்ந்து சகாதேவனும் மகளின் பேச்சில் கவலையை மறந்தார்.

அபிமன்யூ தங்கையிடம் அவளின் படிப்பை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் போது போன் வர அதை எடுத்தவன் “ஹலோ! எல்லாம் சரியா நடக்குதுல்ல? ம்ம்…. ஓகே ஓகே. ரெண்டு நாள் தான் டைம். அதுக்குள்ள நான் நினைச்சது நடக்கணும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் ஒரு வித ஏளனமான உதட்டுவளைவுடன் கட்சி அலுவலகம் செல்ல தயாரானான்.

சிறிது நேரத்தில் கீழே வந்தவன் சகாதேவனிடம் தான் அஸ்வினுடன் கட்சி அலுவலகம் செல்வதாகக் கூறி கிளம்பினான். ஆனால் அங்கே அவன் எதிர்ப்பார்த்த நபர் இல்லை.

அவரது பி.ஏவிடம் “வாசு அங்கிள் எங்கே?” என்று கேட்க அவரோ “சார் உங்க மாமா உங்க அப்பாவைப் பாக்க போயிருக்கார்” என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

அபிமன்யூ அஸ்வினிடம் “அப்பா நாளைக்கு ஜாமின்ல வரப் போறார் தானே. இப்போ எதுக்கு இந்த அங்கிள் அப்பாவைப் போய் பாக்கணும்? ஒன்னுமே புரியலயே அச்சு?” என்று குழம்பியவாறு சொல்ல

அஸ்வின் “அபி அவர் இந்தக் கட்சியோட தலைவர் மட்டும் இல்லடா. உங்க அம்மாவோட அண்ணன். தங்கச்சி கணவர் ஜெயில்ல இருக்கிறப்போ எந்தப் பாசமுள்ள அண்ணனும் பதறி போகத் தான் செய்வாங்க. அவர் அபிஷியல் ஃபாரின் டிரிப் முடிச்சிட்டு நேத்து தானே வந்தார். அதான் போய் அங்கிளை பாத்துட்டு வருவோமேனு நினைச்சிருப்பார். இதுல குழம்புறதுக்கு எதுவும் இல்லடா” என்று அவனுக்குப் பதிலளித்தான்.

அபிமன்யூ சமாதானமாகாதவனாய் “என்னோட வீடியோ வந்ததுக்கு அப்புறமா ஒரு வாரம் அவர் இங்க தானே இருந்தார் அச்சு. அப்போ போய் அப்பாவை பாத்திருக்கலாமே” என்று சொல்ல அஸ்வினுக்கும் அப்போது குழப்பம் ஆரம்பித்தது.

இருவரும் குழப்பத்துடன் இருக்க அங்கே வாசுதேவன் பார்த்திபனிடம் “நீ எதையும் மறந்திருக்க மாட்டேனு நெனைக்கிறேன் பார்த்தி. கவனமா இருந்துக்கோ. என்னோட முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி உன்னை இந்த கேஸ்ல இருந்து வெளியே எடுக்க முயற்சி பண்ணுறேன். அஸ்வின் ஆல்ரெடி உன்னோட ஜாமின் சம்பந்தப்பட்ட பேப்பர்சை கோர்ட்ல சப்மிட் பண்ணிட்டான். நாளைக்கு இந்நேரம் நீ நம்ம கட்சி ஆபிஸ்ல என் கூட இருப்ப”  என்று தைரியம் சொல்ல

பார்த்திபன் விரக்தியான புன்னகையுடன் “உங்களை நம்பாம நான் வேற யாரை நம்ப போறேன்? ஆனா என்னோட பயம் சுபிம்மாவை நெனைச்சு தான். இன்னைக்கு வரைக்கும் எங்க ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன கருத்து வேறுபாடு கூட வந்தது இல்ல. ஆனா இந்த பிரச்சனையால நான் என்னோட சுபிம்மாவை இழந்துட்டேனோனு மனசுக்குள்ள பயமா இருக்கு. என்னோட பலம், பலகீனம் ரெண்டுமே என் சுபிம்மாவும், என் குடும்பமும் தான். நீங்க தான் உங்க தங்கச்சிக்கு பேசி புரியவைக்கணும்” என்று சொல்லிவிட்டு அவரையே எதிர்ப்பார்ப்புடன் பார்த்தார்.

வாசுதேவன் அவர் கைகளை பிடித்து தட்டி கொடுத்தவாறே “நீ எனக்காக எவ்ளோ பெரிய விஷயத்தைப் பண்ணிருக்க பார்த்தி. உனக்காக நான் தங்கச்சி கிட்ட பேச மாட்டேனா? நான் பேசி அவளுக்கு புரியவைக்கிறேன். நீ வெளியே வர்றப்போ பழைய சுபத்ராவை பார்ப்ப. மனசைப் போட்டு குழப்பிக்காதே! நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன். நாளைக்கு கட்சி ஆபிஸ்ல சந்திப்போம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப பார்த்திபன் மனதில் சின்னதாக ஒரு நம்பிக்கை மலர்ந்தது.

மாலையில் ஸ்ராவணியும் மேனகாவும் வீடு திரும்பியவர்கள் அவர்களது தளத்தை அடைந்ததும் செவிப்பறை கிழியும் அளவுக்கு கேட்ட ஆங்கிலப்பாடலின் இசையில் அதிர்ந்தனர்.

சத்தம் என்னவோ அவர்களுக்கு அடுத்த ஃப்ளாட்டான G3யிலிருந்து வர ராமன் குடியமர்த்திவிட்டு சென்ற நபர்கள் தான் இதற்கு காரணகர்த்தா என்று எண்ணியபடியே தங்களின் வீட்டிற்குள் சென்றனர்.

காதுகளைப் கரங்களால் பொத்திக்கொண்ட மேனகா வேதாவிடம் “அத்தை எவ்ளோ நேரமா இந்தச் சத்தம் கேக்குது? யாராச்சும் போய் சொன்னாங்களா? இப்பிடியே இதைக் கேட்டுட்டே இருந்தா நம்ம எல்லாருக்கும் ஒரு கட்டத்துல பைத்தியம் பிடிச்சிடும் அத்தை” என்று சொல்ல

அவர் “நீங்க போன நேரத்துல இருந்து இந்தக் கூத்து தான் மேகிம்மா. எனக்கு தலைவலியே வந்துடுச்சு” என்றார் தைலத்தை நெற்றியில் தடவியபடி.

சுப்பிரமணியம் ஒரு துணியை தலையில் கட்டிக்கொண்டு தலையை தாங்கியவாறு இருக்க ஸ்ராவணி அந்தச் சத்தம் இன்னும் அதிகரித்ததில் கடுப்பானவள் விறுவிறுவென்று கதவைத் திறந்து அடுத்த ஃப்ளாட்டின் கதவு முன் நின்றவள் கதவை ஓங்கித் தட்ட கதவு திறக்கவில்லை.

அவள் பின்னோடு வந்த மேனகாவும் சேர்ந்து கதவை தட்ட சிறிது நேரத்தில் கதவை திறந்தான் ஒரு வாலிபன். அவர்களை கேள்வியோடு நோக்கியவன் “ஏன் கதவை தட்டுனீங்க?” என்று திமிராக கேட்க

ஸ்ராவணி கடுப்புடன் “உங்க வீட்டுல எல்லாரும் காது கேக்காம சுத்துறீங்களோ? இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன், உனக்குலாம் இயர் டிரம் கிழிஞ்சு போகல? இவ்ளோ லவுடா சவுண்ட் வச்சு கேட்டா தான் உங்க காதுல விழுமோ? மரியாதையா வால்யூமை கம்மி பண்ணு. உன் வீட்டுக்கு மட்டும் கேக்குற மாதிரி சத்தம் வச்சு பாட்டை கேளு. இல்லன்னு வையேன், பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணுறீங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியிருக்கும்” என்று விரலை நீட்டி எச்சரிக்க அவன் உள்ளே சென்று என்ன  சொன்னானோ தெரியவில்லை. ஆனால் சத்தம் சுத்தமாக நின்றுவிட்டது.

பின்னர் ஸ்ராவணி அவர்கள் ஃப்ளாட்டுக்குள் சென்று சமையலறையில் தேநீர் போட ஆரம்பித்தாள். தலைவலி  என்று சொன்ன பெற்றோருக்கு கொடுத்தவள் தனக்கும் மேனகாவுக்கும் கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு அவர்கள் அறையை  நோக்கி சென்றாள்.  இருவரும் தேநீரை அருந்திவிட்டு இதற்கு மேல் தங்களுக்கு வரப்போகிற பெரிய தலைவலியைப் பற்றி தெரியாமல் அரட்டை அடிக்கத் தொடங்கினர்.