🖊️துளி 11👑

“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதைக் கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான்.

“என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி லக்னபத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியைக் கேள்வியாய் நோக்கும்போதே லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.

அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு சொல்ல மேனகா அவளுடன் சென்றாள். அதே போல விக்ரமிடம் வேஷ்டி சட்டையை கொடுக்க அவனும் அறைக்கு அதை மாற்றிவர சென்றான்.

சந்திரா பூனை போல மேடையிலிருந்து நழுவியவர் அபிமன்யூவிடம் வந்து “நீங்க யார் தம்பி? கண்டிப்பா எங்க சொந்தகாரங்களா இருக்க முடியாது. வனியோட சொந்தகாரங்களா?” என்று கேட்க

அபிமன்யூ “என்னை போய் யார்னு கேட்டுட்டிங்களே ஆன்ட்டி? நான் வனியோட சொந்தகாரன்லாம் இல்ல. நான் அவளோட ஃப்ரெண்ட் ஆன்ட்டி” என்று சொல்லவும் அவர் முகம் சுளித்தார்.

அவரது முகச்சுளிப்பைக் குறித்துக் கொண்டவன் “ஃப்ரெண்டுனா சாதாரண ஃப்ரெண்ட் இல்ல ஆன்ட்டி. நாங்க ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எவ்ளோ குளோஸ்னா……” என்று சொல்லி நிறுத்தவும் அவருக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“என்ன தம்பி விஷயத்தை முழுசா சொல்லாம இப்பிடி பாதியிலேயே சஸ்பென்ஸ் வைக்கிறிங்க?” என்று அவர் குறைபட

அபிமன்யூ தன் வீசிய வலையில் நன்றாக மாட்டிக்கொண்டவரை பார்த்தபடியே “அதை இங்க வச்சு சொன்னா சரி வராதே. உங்க பையன் ரூம்ல போய் சொல்லவா?” என்று கேட்க அவனது புஜத்தில் அஸ்வினின் கை அழுத்தியது.

அபிமன்யூ அவனைப் பார்த்த பார்வையில் தான் வந்த காரியத்தை முடிக்காமல் செல்ல போவதில்லை என்ற உறுதி தெரியவே அஸ்வின் கையை எடுத்துக் கொண்டான்.

சந்திரா அபிமன்யூவுடன் விக்ரம் இருந்த அறை நோக்கி நகர, அதே நேரம் வேதா புதிதாக வந்தவனுடன் சம்பந்தியம்மாள் செல்வதைக் கண்டு குழம்பியவர் ஸ்ராவணியும் மேனகாவும் இருந்த அறையை  வந்தடைந்தார்.

கதவைத் தட்டவும் திறந்த மேனகா “அத்தை இன்னும் பத்து நிமிஷத்துல வனி வந்துடுவா” என்று சொன்னபடி நிற்க உள்ளே வந்த வேதா பட்டுப்புடவையில் மின்னிய மகளை கண்டு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

“இப்போ வந்த பையன் யாரு வனி? உன்னோட ஃப்ரெண்டா?” என்று கேட்க ஸ்ராவணியும் மேனகாவும் அவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.

அதே நேரம் விக்ரம் தன்  தாயுடன் வந்த அபிமன்யூவை யாரென்று நோக்க அவன் ஸ்ராவணியின் தோழன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

சந்திரா மோவாயைத் தோளில் இடித்தபடி “விக்கி அதுவும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டாம் உன் வருங்காலப்பொண்டாட்டியும், இந்தப் பையனும்” என்று சொல்ல விக்ரம் குழம்பியபடி அபிமன்யூவைப் பார்க்க அவன் புன்னகையுடன் சந்திரா சொன்னது உண்மையே என்று தலையாட்டினான்.

சந்திரா ஆர்வமாக “அது சரிப்பா! நீ ஏதோ சொல்ல வந்து நிறுத்துன மாதிரி இருந்துச்சு! அதை சொல்லுப்பா. என்னால ரொம்ப நேரத்துக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியாது” என்று வேண்ட

அபிமன்யூ ஒரு மர்ம புன்னகையுடன் போனை எடுத்தவன் “நானும் வனியும் ரொம்ப குளோஸ்னு சொன்னேன்ல. அது எவ்ளோனு இதை பாத்தா தெரியும்” என்று அவனுடன் அவள் பப்பில் நடனமாடிய வீடியோவைக் காட்ட சந்திராவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய,  விக்ரமால் அதை நம்பவே முடியவில்லை.

அபிமன்யூவின் கையிலிருந்து போனை பிடுங்கி ரிவைண்ட் செய்து பார்க்க அதில் அவனுடன் நடனமாடிக் கொண்டிருந்தது சாட்சாத் ஸ்ராவணி தான்.

அதைப் பார்த்தபடி நேற்று தோளில் கை போட்டதற்கு அவள் பேசிய பேச்சு என்ன, இந்த வீடியோவில் இவனுடன் சேர்ந்து ஆடுவது என்ன என்று பொருமியவன் ஸ்ராவணியின் போனுக்கு அழைத்தான்.

அதே நேரம் வேதாவோ தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திருதிருவென்று விழிக்கும் ஸ்ராவணியையும் மேனகாவையும் பார்க்க போன் அடிக்கவும் ஸ்ராவணி போனை எடுத்து “ஹலோ விக்கி” என்று பேச ஆரம்பித்தாள்.

“வனி நீ உடனே என்னோட ரூம்கு வா. இங்க அம்மா உன் கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லுறாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

ஸ்ராவணி அன்னையிடம் அவன் பேசிய விவரத்தை தெரிவித்துவிட்டு மேனகாவுடன் சேர்ந்து விக்ரம் இருக்கும் அறைக்கு வந்தாள்.

அங்கே அபிமன்யூவை அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவளின் பார்வையிலிருந்த திகைப்பே உணர்த்த, விக்ரம் மற்றும் சந்திராவின் முகத்திலிருந்த சுளிப்புக்குக்  காரணம் தெரியாமல் உள்ளே சென்றாள் அவள்.

அபிமன்யூவை பார்த்து கொண்டே “என்னை எதுக்கு வரச் சொன்ன விக்கி?” என்று கேட்க அதற்கு அவன் பதிலளிக்கும் முன் முந்திக்கொண்டார் அவனது அன்னை சந்திரா .

“இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிடு” என்று சொல்லிவிட்டு அவளை ஏளனமாகப் பார்க்க மேனகா அதிர்ந்தபடி ஸ்ராவணியின் கையைப் பற்றிக் கொண்டாள். ஸ்ராவணி குழப்பத்துடன் விக்ரமை பார்த்தாள்.

அதற்குள் மகள் சென்று நேரமாகியும் இன்னும் வராததால் அவளைத் தொடர்ந்து வந்த வேதாவின் காதில் சந்திரா சொன்ன வார்த்தைகள் விழ அந்த அறையின் வாயிலிலேயே சிலையானார் அவர். கீழே இருந்து வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சேகரனும், சுப்பிரமணியமும் ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வருமாறு கூற விக்ரமின் அறை நோக்கி சென்றனர்.

சுப்பிரமணியம் வாசலில் சிலையாக நின்ற மனைவியை கண்டதும் “என்னாச்சு வேதா?” என்று ஆரம்பித்தவர் உள்ளே கேட்ட சந்திராவின் குரலில் தெறித்த ஏளனத்தில் திகைத்தார். சேகரனோ மனைவியின் வார்த்தைகளில் பிடித்தமின்றி முகம் சுளித்தார்.

“மூஞ்சிய இப்பிடி அப்பாவி மாதிரி வச்சுகிட்டு நைட் கிளப், பப்னு போய் ஆட்டம் போடுறவளை என் மருமகளா ஏத்துக்க முடியாது. நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். இவ உனக்கு வேண்டாம்டா, நேரம் காலம் இல்லாம ஊர் சுத்துறானு அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க பேசுனதால தான் இவளை பெத்தவர் அண்ணா நகர் வீட்டை விட்டுட்டு சிட்டிக்குள்ள ப்ளாட் வாங்குனார்னு நான் சொன்னப்போ அப்பாவும் பிள்ளையும் என்னை கொஞ்சமாச்சும் நம்புனீங்களா? இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்திட்டா” என்று வாய்க்கு வந்தபடி சந்திரா பேச அதற்கு மேல் பொறுக்க முடியாத சுப்பிரமணியம் உள்ளே சென்றுவிட்டார்.

அவரை தொடர்ந்து வந்த சேகரன் “சந்திரா வாய்க்கு வந்தபடி பேசாத. அவ வேலை அப்பிடி. அதை புரிஞ்சிக்காம இப்பிடி மோசமா ஒரு பொண்ணை பேசாதடி” என்று அவரை கடிந்து கொள்ள

சந்திராவோ “எது வேலை? நைட்ல பப்புக்கு போய் கூத்தடிக்கிறதுக்கு பேர் வேலையா? அடேங்கப்பா வந்துட்டாரு நியாயம் சொல்ல. பொண்ணை பெத்தவரே வாயை மூடிட்டு இருக்கிறப்போ உங்களுக்கு மட்டும் என்ன அவ மேல பாசம் பொத்துக்கிட்டு வருது?” என்று அவரைத் திட்டிவிட்டு ஸ்ராவணியை பார்த்தார்.

ஸ்ராவணி விக்ரமிடம் “விக்கி! நீ என்ன சொல்லணும்னு நினைக்கிற?” என்று அவனை கேட்க அந்த அறையிலிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீது திரும்பியது.

அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு “எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு ஸ்ராவணி” என்று சொல்லவும் அபிமன்யூவின் முகம் கறுத்தது.

சந்திராவோ “டேய் உனக்கு புத்தி இல்ல? அவ இப்பிடி கண்டவன் கூட ஆடி பாடிட்டு வருவா. இவளை நான் மருமகளா ஏத்துக்கணுமா?” என்று ஆங்காரத்துடன் கத்தினார்.

விக்ரம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நிதானமாக ஸ்ராவணியிடம் “நான் உன்னை எப்போவுமே நம்புவேன் வனி. ஆனா உன்னோட ரிப்போர்ட்டர் வேலையை என்னால கொஞ்சமும் நம்ப முடியாது. அதனால இந்த வேலைய விட்டுடு. நான் சம்பாதிக்கிறதே நம்ம ரெண்டு பேருக்கும் போதும். நீ ஒரு அன்பான மனைவியா வீட்டில இருந்து என்னை கவனிச்சிகிட்டா  போதும்” என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல பேச ஸ்ராவணியால் அவனது நவீன பிளாக்மெயிலை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

அபிமன்யூ நடக்கின்ற நிகழ்வுகளை சினிமா பார்ப்பது போல பார்த்தவன் விக்ரமை நினைத்து மனதுற்குள் சிரித்து கொண்டான். “முட்டாள்! நீ சொல்லுற விஷயத்தை கண்டிப்பா அவ கேக்க மாட்டாடா. இது கூட தெரியாம நீ என்ன காதலிச்சியோ?” என்று நினைத்தபடி அவனை கேலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ராவணி கையை கட்டிக்கொண்டு “சோ மிஸ்டர் விக்ரம் நீங்க பெரிய மனசு பண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா நான் என்னோட ஜாபை ரிசைன் பண்ணனும். அதானே நீ சொல்ல வர்ற?” என்று சொல்லிவிட்டு கூரியவிழிகளால் நோக்க அவன் அதையே ஆமோதித்தான்.

அவனை இறுகிய முகத்துடன் பார்த்துவிட்டு தெளிவான குரலில் “அவ்ளோ கஷ்டப்பட்டு நீ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீ உன் அப்பா அம்மாவை கூட்டிட்டு இந்த மண்டபத்தை விட்டு கிளம்பு” என்று சொல்ல அதைல் கேட்டு விக்ரம் அதிர்ந்தான்.

அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேதா பதறிக்கொண்டு உள்ளே வந்து ஸ்ராவணியை சமாதானப்படுத்த முயல அவளோ

“இந்தக் கண்றாவிக்கு தான் கல்யாணமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்னு சொன்னேன். நீங்க தானே விக்ரம் உன் ஃப்ரெண்ட், உன்னோட ஒர்க் நேச்சரை புரிஞ்சுப்பான்னு சொல்லி என்னை சம்மதிக்க வச்சீங்க. இதுக்கு மேல இந்த மாதிரி ஒருத்தனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா” என்று பிடிவாதமாக கூற சந்திரா வெகுண்டார்.

“நீ இருக்கிற லெட்சணத்துக்கு நீ என்னடி வேண்டாங்கிறது? நானே சொல்லுறேன் என் மகனுக்கு இந்த மாதிரி ஒரு ஒழுக்கம் கெட்ட, கலாச்சாரம் இல்லாத பொண்டாட்டி தேவை இல்ல. வாடா போகலாம்” என்று மகன் கையை பிடித்தவர்

சேகரனிடம் “உங்களுக்கு தனியா சொல்லணுமா? கிளம்புங்க” என்று அவரையும் அழைத்துக்கொண்டு வெளியேற மண்டபத்தில் விருந்தினர் மத்தியில் மாப்பிள்ளை வீட்டார் வெளியேறுவதைக் கண்டதும் சலசலப்பு எழுந்தது.

அஸ்வினுக்கு அபிமன்யூவின் வேலை தான் இது என்று தெரிந்ததும் மனம் சஞ்சலப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் என்றுமே தோழனை அவனால் விட்டுக்கொடுக்க முடியாது என்பதால் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

“எங்க வீட்டு ஃபங்சனுக்கு வந்த எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். தவிர்க்க முடியாத காரணத்தால இந்த நிச்சயதார்த்தம் நின்னு போச்சு. நீங்க புரிஞ்சிப்பிங்கன்னு நம்புறோம்” என்று மேனகா சொல்லவும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

ஸ்ராவணி அந்த அறையில் இருக்கும் பெற்றோரை பார்த்தபடி “நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் ரகு கூட போய் மண்டப ஓனர் கிட்ட டெக்கரேசனை கலைக்க சொல்லிட்டு இந்த திங்க்ஸை சரி பாத்துட்டு வந்துடுறேன்” என்று சாதாரணமாகப் பேசவும் வேதாவும், சுப்பிரமணியமும் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியறினர்.

ஸ்ராவணி நெஞ்சைத் தடவி விட்டபடி செல்லும் தந்தையை  பார்த்து கலங்கியவள் சமாளித்துக்கொண்டு ரகுவை அழைத்தாள்.

ஹால் ஓனரிடம் பேசுமாறு சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

இவ்வளவுக்கும் அந்த அறையில் அபிமன்யூ என்ற ஒருவன் இருப்பதையே அவள் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்ள அவன் வெளியே வந்து அவனுக்காக காத்திருக்கும் அஸ்வினை கண்டவன் “வந்த வேலை சிறப்பா முடிஞ்சுது அச்சு. கிளம்புவோமா?” என்று சொல்ல ஸ்ராவணியின் காதில் அவனது குரல் தெளிவாகவே விழுந்தது.

ரகு ஹால் ஓனரிடம் பேச சென்று விட வர்தனும், மேனகாவும் ஸ்ரீநிதியை அவளின் அத்தை வீட்டில் விடச் சென்றுவிட்டனர்.

மீதமிருந்தது இவர்கள் மூவர் மட்டுமே. அபிமன்யூ வேண்டும் என்றே அவள் காதில் விழுமாறு சத்தமாகப் பேசவும் அவன் அருகில் வந்தவள் இருவரையும் முறைத்தாள்.

அபிமன்யூ கிண்டலாக “கர்சீஃப் வேணுமா? இல்லன்னா டிஸ்யூ?” என்று கேட்டுவிட்டு அவளது முகத்தை ஆராய்ந்தான். அங்கே முறைப்பு இருந்ததேயன்றி அவன் எதிர்ப்பார்த்த அதிர்ச்சி, வருத்தம், சோகம் எதுவுமே இல்லாமல் இன்னும் தெளிவாக இருந்தது.

அதைக் கண்டு அவனுக்கு உள்ளே புகைந்தது என்னவோ உண்மை.

ஸ்ராவணி பெருமூச்சுடன் “எனக்கு இந்த மாதிரி உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் அழுது பழக்கம் இல்ல. சோ எனக்கு கர்சீஃப், டிஸ்யூ எதுவும் வேண்டாம். பை த வே கை குடுங்க” என்று சொல்ல அவன் நீட்டாமல் கையை கட்டிக் கொள்ள அவள் வலுக்கட்டாயமாக அவனது கரத்தை இழுத்துப் பிடித்துக் குலுக்கினாள்.

அஸ்வின் மனதிற்குள் “ஒரு வேளை இந்த பொண்ணுக்கு நிச்சயம் நின்னு போன ஷாக்ல மண்டை குழம்பிடுச்சோ” என்று எண்ணியபடி பார்க்க

அவள் உற்சாகமாக “இங்க பாருங்க எம்.எல்.ஏ சார், எனக்கு இந்த கல்யாணம்கிற கான்செப்ட்ல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. என்னோட புரொபசனை புரிஞ்சுக்கிற ஒருத்தன் கிடைக்கிறது கஷ்டம்னு எனக்கே தெரியும். ஆனா என்ன பண்ணுறது விக்கி என்னோட ஃப்ரெண்டா போயிட்டான். அவனோட ப்ரபோசலை ரிஜெக்ட் பண்ண நான் எவ்ளவோ டிரை பண்ணியும் அவன் ரொம்ப பிடிவாதமா இருந்தான். வேற வழியில்லாம விஷயம் என்கேஜ்மெண்ட் வரைக்கும் வந்துடுச்சு. நேத்து காலைல வரைக்கும் கூட இந்த விஷயத்துல எனக்கு குழப்பம் தான். இருந்தாலும் பேரண்ட்ஸ்காக ஓகே சொன்னேன்.  தேங்க் காட்! நீங்க ஒரு அம்மா கோண்டு கிட்ட இருந்து என்னை காப்பாத்திட்டீங்க” என்று சொல்லிவிட்டு சிரிக்க அபிமன்யூவால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

அவனது இறுகிப் போன முகம் மனதுக்கு இதமளிக்க “நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. இன்னைக்கு அபிமன்யூ பண்ணுன கலகமும் நன்மைல தான் முடிஞ்சுருக்கு. என்ன இதுல நன்மை எனக்கு மட்டும் தான். சோ இனிமே பழிவாங்கணும்னா எதாச்சும் புதுசா டிரை பண்ணுங்க. உங்க ஃப்ரெண்டுக்கு புத்தி சொல்லி புரியவைங்க லாயர் சார்” என்று அஸ்வினை நோக்கி புன்னகையை சிந்தியவள் போனில் மேனகா அழைக்க போனை காதில் வைத்தாள்.

“ஹலோ மேகி! நோ பிராப்ளம்டி. நான் டாக்சில போய்க்கிறேன்” என்று கூறி போனை வைத்துவிட்டு அபியமன்யூ மற்றும் அஸ்வின் இருவருக்கும் கையை குவித்து வணக்கத்தைப் போட்டு விட்டு கிளம்பினாள் ஸ்ராவணி. அவள் பேசிவிட்டுச் சென்ற தொனியில் எரிச்சலடைந்த அபிமன்யூ கோபத்தில் அருகிலிருந்த நாற்காலியை உதைக்க அது தூரத்தில் சென்று விழுந்தது. அஸ்வின் அவனைச் சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றான். ஆனால் இந்த நிகழ்வால் அபிமன்யூவின் மனதில் எரிந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி இன்னும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது தான் உண்மை!