💞PRE-FINAL💞

“அஸ்வினி மேடம்கு அனி என்னை அப்பானு கூப்பிடுறது சங்கடமா இருக்குது போல… அவங்க யோசிக்கிற அளவுக்கு இதுல என்ன இருக்குனு புரியல… நம்ம வாழ்க்கைல எதிர்பாராம வர்ற சில உறவுகள் நம்ம வாழ்கையைப் புரட்டிப் போடுறது இல்லையா? அதே போல தான் எனக்கு அமெரிக்கால கிடைச்ச நட்புக்கள் எல்லாருமே அப்பிடி தான்… அவங்க எல்லாரும் எனக்கு வாழ்க்கையை சந்தோசமா வாழணுங்கிற ஆசைய மறுபடியும் குடுத்தவங்க… ஆனா அதுல ஒருத்தவங்க என்னால சங்கடப்படுறது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு”

                                                           -தனஞ்செயன்

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்

ஹோட்டலின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஹோட்டலை நோக்கி நடந்தனர் சித்தார்த்தும் ஷான்வியும். அவளது நிசான் வழக்கம் போல அவளைப் பழிவாங்கிவிட்டது. அதைக் கூட பொறுத்துக் கொள்வாள்! ஆனால் அவளது நிசானைப் பற்றி அடிக்கடி பழைய ஈயம் பித்தளைக்குப் பேரீட்சம்பழம் என்ற வசனத்தை அவன் சொல்லும் போது அவளால் சும்மா விட முடியவில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா!

இப்போது இருவரும் வாதிடுவது கராஜுக்குக் கொடுக்கவேண்டிய கட்டணம் பற்றி. நிசானுக்கு ஏற்கெனவே அவள் கட்டணம் செலுத்திவந்த நிலையில் சித்தார்த் தான் அவனது காருக்குச் செலுத்த வேண்டும் என ஷான்வி கறாராகச் சொல்லிவிட்டாள்.

“எப்பிடி பாத்தாலும் நம்ம நெருங்கிட்டோம்.. ஐ மீன் வீ ஆர் ரிலேட்டிவ்ஸ்… எனக்காக கராஜ் ஃபீஸ் கூட பே பண்ண மாட்டியா? சரியான கல்நெஞ்சக்காரி” என்று சொன்னபடி நடந்தவனிடம்

“அக்ரிமெண்ட் படி அதை நீ தான் பே பண்ணணும்… அத நான் பே பண்ண மாட்டேன்பா” என்று சொன்னபடி தோளைக் குலுக்கியபடி கண்ணாடிக்கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தாள்.

சித்தார்த் உள்ளே நுழைந்தவன் இன்றைய தினம் ஹோட்டலில் ஊழியர்கள் ஒருவித படபடப்புடன் இருப்பது போல உணர்ந்தவன் ஷான்வியிடம் சொல்லிவிட்டுத் தனது வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

ஷான்வி நீண்டநாட்களுக்குப் பின்னர் ரெஸ்ட்ராண்டின் சமையலறை பகுதியில் நுழைந்தவள் தனஞ்செயனின் இடம் காலியாக இருக்கவும் துணுக்குற்றாள். இருந்தாலும் சிரித்த முகத்துடன் ஊழியர்களிடம் வணக்கம் சொன்னவள் அவர்கள் செய்யவேண்டியவற்றைக் கட்டளையிட்டுவிட்டுத் தனது சீருடையை அணிந்து கொண்டாள்.

அங்கே வீசும் வெண்ணெயின் நறுமணம், பழங்களின் வாசம், கேக்குகள் பேக் செய்யப்பட்டு வெளியே எடுக்கும் போது உண்டாகும் நறுமணம் அவளை மீண்டும் பழையபடி உற்சாகமாக வேலை செய்ய வைத்தது.

அது எல்லாமே சில நிமிடங்களுக்குத் தான். எண்ணெயில் பொறித்த டோனட்டுகளை பெரிய ட்ரேயில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளிடம் பாரிஸ்டா கென்னடி வரவும் கிளாராவைக் குறிப்பு காட்டி வழக்கம் போல கேலி செய்த ஷான்வி அவன் சொன்ன செய்தியில் நிலைகுலைந்து போனாள்.

ஒரு நிமிடம் அவள் இதயம் நின்றது போல உணர்ந்தவள் “எப்போ நடந்துச்சு?” என்று தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கேட்க

“ஜஸ்ட் ஒன் ஹவர் பிஃபோர்… ஆல்ரெடி அஸ்வினியும் வீ.கேவும் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டாங்க ஷானு” என்றான் கென்னடி சோகம் கப்பிய குரலில்.

அவளது கையை ஆதரவாய் பற்றியவன் “ஆர் யூ ஓகே? ஒரு வேளை பண்ணு! நீ ஹாஸ்பிட்டலுக்குப் போ…. இங்க டெசர்ட்ஸ் எல்லாமே ப்ரிப்பேர் ஆகிடுச்சு… நான் பாத்துக்கிறேன்” என்று சொல்ல அவனை நன்றியுடன் பார்த்தவள் சீருடையைக் கூட கழற்றாது மின் தூக்கியை நோக்கி ஓடினாள்.

அது திறக்கவும் வெளியே வந்த சித்தார்த்தின் முகத்திலும் பதற்றம் அப்பியிருந்தது. அவளைக் கண்டதும் விசயம் இது தான் என புரிந்து கொண்டவன் “ஷானு டென்சன் ஆகாத… நம்ம ஹாஸ்பிட்டலுக்குப் போவோம்” என்று கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

அவர்கள் போவதைப் பார்த்தபடி நின்றிருந்த கென்னடி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடந்த அனர்த்தத்தை எண்ணி வருந்த ஆரம்பித்தான்.

அஸ்வினியும் விஸ்வஜித்தும் வழக்கம் போல பேசிக்கொண்டே ஹோட்டலினுள் நுழைந்தனர். அப்போது ஹோட்டலின் லாபிக்கு நேரெதிரே இருந்த பெரிய டிவியில் எப்போதும் செய்திகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அன்றைய தினம் இந்திய பிரதமர் ஹூஸ்டனுக்கு வருகை தரவிருப்பதால் பெரும்பாலான செய்தி சேனல்களில் நேரலை ஓடிக் கொண்டிருந்தது.  அதற்கிடையே மற்ற செய்திகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்போது திரையில் ஓடிய வீடியோவில் கார் ஒன்றின் மீது டிரக் ஒன்று மோத வர அந்தக் கார் மெதுவாக சாலைவளைவை விட்டுப் பக்கவாட்டில் நகர்ந்து வளைவில் இருந்த இரும்புத்தூண் மீது மோதி நின்றது.

மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட அக்காணொளியைக் கண்ட அஸ்வினியும் விஸ்வஜித்தும் பதறிப் போயினர். ஏனெனில் அதில் தெரிந்த கார் தனஞ்செயனுடையது. அஸ்வினிக்கு அதைக் கண்டதும் கண்கள் இருட்டி மயக்கம் வருவது போல இருந்தது. கண்ணீர் பளபளத்த கண்களுடன் அவனது காராக இருக்க கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டு மீண்டும் டிவியைப் பார்க்க அங்கே காரை அருகில் காண்பித்தனர்.

காரின் எண் பலகையை அருகில் காட்டும் போது அஸ்வினியின் நம்பிக்கை தகர்ந்தது. ஏனெனில் அது தனஞ்செயனின் காரே தான். செய்தியில் சொன்னபடி அந்தக் காரிலும் டிரக்கிலும் இருந்தவர்களை அனுமதித்த மருத்துவமனைக்கு விரைந்தனர் இருவரும்.

விஸ்வஜித் அஸ்வினியின் கண்ணிலிருந்து கண்ணீர் வருவது நிற்காததை கண்டவன் “அஸு! பயப்படுற மாதிரி எதுவும் இருக்காது… நீ ஃபீல் பண்ணாத” என்று ஆறுதல் சொன்னபடி காரை எடுத்துக் கொண்டான்.

இவ்வளவையும் பார்த்துவிட்டுக் கனத்த மனதுடன் கபேயின் சமையலறைக்குள் நுழைந்த கென்னடி ஷான்வி வந்ததும் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்.

ஷான்வியும் சித்தார்த்தும் பதறியவர்களாய் மருத்துவமனை ரிசப்சனில் தனஞ்செயனின் விபத்து விபரத்தைக் குறிப்பிட்டுக் கேட்டு அவனை வைத்திருந்த இடத்தை நோக்கி விரைந்தனர். சித்தார்த்துக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு தான் அந்த அறைக்குள் நுழைந்தான். ஷான்வி முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாது கல் போன்ற முகத்துடன் அவனைத் தொடர்ந்தாள்.

உள்ளே சென்றவளின் பார்வையில் நெற்றியில் சிறு பேண்டேஜும் கையில் ஆர்ம் ஸ்லிங்குமாய் படுக்கையில் சாய்ந்திருந்த தனஞ்செயனும் அவனது மற்றொரு கரத்தைப் பற்றியபடி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்த அஸ்வினியும், அவளருகே நின்று கொண்டிருந்த விஸ்வஜித்தும், அதே அறையில் ஒரு ஓரமாய் ஸ்டூலில் அமர்ந்திருந்த மோகனும் பட்டனர்.

அஸ்வினியின் அழுகை கலந்த குரல் தெளிவாய் இருவரது செவியிலும் விழுந்தது.

“உங்களுக்கு எதுவும் ஆகிருந்துச்சுனா நான் உடைஞ்சு போயிருப்பேன் தனா… நான் துரதிர்ஷ்டசாலினு எனக்கு ஏற்கெனவே தெரியும்… ஆனா என் கூட இருக்கிறவங்களையும் அந்த துரதிர்ஷ்டம் விடாம துரத்துதே!” என்றவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான் தனஞ்செயன்.

“இன்னும் எத்தனை நாளுக்கு நீங்க துரதிர்ஷ்டசாலினு உங்களையே குறை சொல்லிட்டிருக்கப் போறிங்க அஸ்வினி? உங்கள நான் என் வாழ்க்கைல கிடச்ச அதிர்ஷ்டமா தான் பாக்குறேன்… அனிகாங்கிற குட்டி தேவதையைக் குடுத்த அதிர்ஷ்டம் நீங்க… சும்மா சும்மா கண் கலங்காதிங்க” என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அஸ்வினி. அவளது விசும்பல் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட அப்போது தான் தனஞ்செயன் சித்தார்த்தையும் ஷான்வியையும் நோக்கினான்.

“போச்சுடா! கென் உங்களையும் பயமுறுத்திட்டானா? இது சின்ன அடி தான் சித்து” என்று கேலி போலச் சொன்னாலும் அவனது ஆர்ம் ஸ்லிங் அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.

சித்தார்த் மோகனிடம் “உங்களுக்கு எப்பிடி இருக்கு ப்ரோ?” என்று கேட்க அவனோ “ஏர்பேக் என்னை காப்பாத்திடுச்சு சித்து” என்று பதிலளித்தான். தன்னால் தான் தனஞ்செயனுக்கு இந்த விபத்து நேர்ந்துவிட்டது என்ற குற்றவுணர்ச்சி அவனுக்கு.

விஸ்வஜித் அவனைச் சமாதானம் செய்ய ஷான்வியோ தனஞ்செயனின் தோளில் கண் மூடிச் சாய்ந்திருக்கும் அஸ்வினியை கலக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது சிவந்த மூக்குநுனியும், கண்ணீர்க்கோடுகள் படிந்த கன்னங்களும் நீண்டநேரம் அவள் அழுதிருக்கிறாள் என்பதைப் படம் போட்டுக் காட்டியது.

 தனஞ்செயன் அவள் எதுவும் பேசாமலே ஷான்வியின் மன நிலையை அறிந்து கொண்டான். விபத்தில் பெற்றோரை பறி கொடுத்திருந்ததால் அவளுக்கு மருத்துவமனை ஒரு வித இறுக்கத்தைக் கொடுத்திருந்தது.

அதைப் புரிந்து கொண்டவனாய் “குட்டிம்மா எனக்கு ஒன்னும் இல்லடா! இந்த ஃப்ராக்சர் கூட சீக்கிரமே சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு… டிரக்ல ப்ரேக் பிடிக்காததால நடந்த ஆக்சிடெண்ட் இது… கடவுள் புண்ணியத்தால சின்ன அடியோட தப்பிச்சிட்டேன்” என்றவனை நோக்கியவள் அவன் தோளில் சாய்ந்திருக்கும் அஸ்வினியைக் காட்டி

“சில நேரம் ஆக்சிடெண்ட் கூட நல்லதுக்கு தான் நடக்குது அண்ணா! இந்த மாதிரி நேரத்துல நமக்குச் சொந்தமானவங்க மேல நம்ம எவ்ளோ அன்பு வச்சிருக்கோம்னு புரிஞ்சிடும்… அஸுக்கா இனிமே மனசைப் போட்டுக் குழப்பிக்க மாட்டாங்கனு நம்புறேன்… நான் என்ன சொல்ல வர்றேனு உங்களுக்குப் புரியுதுல்ல?” என்று கேட்க அஸ்வினி விழிகளை திறந்தாள்.

“நீ சொல்லுறது நூறு சதவீதம் உண்மை ஷானு! கார் அந்த போஸ்ட்ல முட்டி நின்னப்போ என் இதயமே நின்னு போச்சு… இங்க வந்து தனாவையும் மோகன் அண்ணாவையும் பாத்ததுக்கு அப்புறமும் எனக்கு மனசு முழுசா நிம்மதியாகல… டாக்டர் இன்னைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நான் மூச்சே விட்டேன்… ஒரு நிமிசம் எல்லாமே என்னை விட்டுப் போன மாதிரி தோணிடுச்சு” என்றவளின் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டான் தனஞ்செயன்.

“இனிமே எதுவும் எப்போவும் உன்னை விட்டுப் போகாது அஸ்வினி” என்று முதல் முறையாக அவளை உரிமையாய் பெயர் சொல்லி அழைத்தவன், இனி தானும் அவளும் வெவ்வேறு மனிதர்கள் அல்ல என்பதை மறைமுகமாய் உணர்த்திவிட்டான் தனஞ்செயன்.

அந்த அறையிலிருந்த அனைவரும் அதைக் கேட்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சித்தார்த்தும் விஸ்வஜித்தும் தங்களின் அஸுவுக்கு நல்ல வாழ்க்கை இனியாவது அமையட்டும் என ஆனந்தப்பட்டனர்.

மோகனோ இத்தனை நாட்கள் ஏன் வாழ்கிறோம் என தெரியாது விரக்தியாய் காலத்தை ஓட்டிய நண்பனுக்கு வாழ்வில் அஸ்வினி ரூபத்தில் ஒரு பிடிப்பு உண்டானதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஷான்வி இந்த இருவரிடையே இத்தனை நாட்கள் இருந்த குழப்பம் அகன்று இன்று தெளிவாக இருவரும் வருங்காலத்தை பற்றி யோசித்து நல்ல முடிவுக்கு வந்ததில் மனம் நிறைந்தாள்.

அவர்களைக் குறுகுறுவென பார்த்த சித்தார்த் கேலியாக “ஆனா ஒன்னு ப்ரோ, இன்னைக்கு நம்ம ஹோட்டல்ல ஹாட் டாபிக் நீங்க தான்… இதுக்கு எல்லாம் காரணம் மிஸ்டர் கென்னடி… பேசாம அவனை உங்க கொள்கை பரப்பு செயலாளரா அப்பாயிண்ட் பண்ணிடுங்க” என்று சொல்ல

“நீ வேற சித்து… அவன் ஆக்சிடெண்ட் விசயத்தைச் சொல்லாதது தனு, கிளாரா கிட்ட மட்டும் தான்” என்று அலுத்துக் கொண்டான் தனஞ்செயன்.

அதில் குறுக்கிட்ட விஸ்வஜித் “திருத்தம் ப்ரோ! ஆல்ரெடி ஐயா கிளாராவுக்கு கால் பண்ணிச் சொல்லிட்டாரு… ஐ திங்க் இன்னும் கொஞ்சநேரத்துல தனுவும் கிளாராவும் இங்க வந்துடுவாங்க” என்று சொல்ல

தனஞ்செயன் “ஐயோ அவனை என்ன தான்டா பண்ணுறது?” என்று புலம்ப அங்கே இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மாறி சிரிப்பலை எழுந்தது.

விஸ்வஜித் சொன்னபடியே சிறிது நேரத்தில் கிளாராவும் தன்வியும் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் பதினைந்து நிமிடங்களுக்குக் குறையாது கண்ணீர் சிந்திவிட்டு பின்னர் ஷான்வியின் அதட்டலில் அமைதியாயினர்.

தனஞ்செயனை மோகன் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல மற்றவர்கள் பல்கலைகழகத்துக்கும் ஹோட்டலுக்கும் புறப்பட்டனர். சொன்னபடியே மாலை அவனை டிஸ்சார்ஜ் செய்த டாக்டர் தினசரி பரிசோதனைக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தினார்.

அவர்களை அழைத்துச் செல்ல அஸ்வினி காரோடு காத்திருக்கவும் தனஞ்செயன் அவளுக்கு எதற்கு சிரமம் என்று சொல்லி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்ள மோகன் நமட்டுச்சிரிப்புடன் காரில் அமர்ந்தான்.

அஸ்வினி “கை சரியாகுற வரைக்கும் நீங்க ஹோட்டலுக்கு வரவேண்டாம்னு அட்மினிஸ்ட்ரேசன் ஹெட் சொல்லிட்டாரு… சோ ஆக்சிடெண்ட் ஆன அதிர்ச்சில எனக்கு எதுக்கு கஷ்டம்னு உளறிக் கொட்டாம ஒழுங்கா கார்ல உக்காருங்க… நம்ம அனிகுட்டி வேற வந்திருப்பா” என்று கண்டிப்புடன் கூற அதற்கு மறுபேச்சு பேசாமல் காரில் அமர்ந்தான்.

வீட்டுக்கு அஸ்வினியுடன் வந்தவனைக் கண்டதும் அனிகா குதூகலித்தவள் பின்னர் கைக்கட்டைப் பார்த்துவிட்டு “என்னாச்சுப்பா?” என்று கண் கலங்க அவள் கேட்ட விதத்தில் தனஞ்செயனுக்கும் கண் கலங்கி விட்டது.

அன்புக்கும் பாசத்துக்கும் இரத்தச்சம்பந்தம் தேவை இல்லை என்பது எவ்வளவு உண்மை என்பதை அதன் பின்னர் வந்த நாட்களில் தனஞ்செயன் புரிந்துகொண்டான். அவன் அங்கே தங்கியதில் அனிகா மிகவும் மகிழ்ந்து போனாள். ஒரு நாள் அவளது விளையாட்டுத்தோழன் பீட்டரை அழைத்துவந்து தனஞ்செயனை தன் தந்தையென அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அஸ்வினி தனஞ்செயனை பொறுப்பாக கவனித்துக் கொண்டாள். அவளது அன்பிலும் அக்கறையிலும் அவன் உடல்நலம் வெகு சீக்கிரமாய் தேறியது. அவனும் ஹோட்டலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டிருந்தான்.

அப்போது தான் சித்தார்த்தும் ஷான்வியும் ஒரே வீட்டைப் பகிர்ந்து வாழ்வது அவனுக்குத் தெரியவந்தது. அதை அவன் தவறாக கருதவில்லை. ஏனெனில் இருவருமே அவனது நம்பிக்கையை வென்றவர்கள்!

அந்த இருவரும் தங்களது வாழ்க்கையில் நாளோரு சண்டையும் பொழுதொரு சமாதானமுமாய் ஜெகஜோதியாகப் போய்க் கொண்டிருந்தது. இருவரும் ஒரே வீட்டில் இருந்த செய்தி இந்தியாவையும் எட்டியது. வள்ளியும் கார்த்திக்கேயனும் சித்தார்த்தை வறுத்தெடுத்தனர்.

அவனோ “மா! காலம் மாறிடுச்சு… நாங்க ஒன்னும் லிவின் கபிள்ஸ் இல்ல… ஜஸ்ட் நான் அவளோட வீட்டுல பேயிங் கெஸ்டா மட்டும் தான் இருக்கேன்… அதோட உங்க சின்னமருமகளை பத்தி உங்களுக்குச் சரியா தெரியல… நான் என் மனசுல உள்ள காதலை அவளுக்கு புரியவைக்காம இதயம் முரளி மாதிரி காத்திருந்தா உங்க மகனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது” என்று சொல்லிவிட்டான்.

வள்ளி இதற்கெல்லாம் அசருபவர் இல்லை. இளையமகனைப் பற்றி அவருக்கு இருக்கும் கவலையே அவனது மிதமிஞ்சிய குறும்புத்தனம் தான். அவனது குறும்புத்தனத்துக்கு ஷான்வியைப் போன்ற ஒரு கறார் பேர்வழி மனைவியாக வந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் வேறு வழியின்றி தலையாட்டி வைத்தார்.

அவரே ஒப்புக்கொண்ட பின்னர் ஷான்வியும் இப்போதெல்லாம் சித்தார்த்தை வேறு வீடு பார்த்துச் செல் என்று அவனிடம் சண்டை பிடிப்பதில்லை.

நாட்கள் அழகாய் கடக்க மூன்று ஜோடிகளின் வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே வந்தன. அதை அவர்கள் தங்களது முதிர்ந்த அணுகுமுறையாலும் புரிதலினாலும் சமமாய் பாவித்துக் கடந்தனர்.

இதற்கிடையே கென்னடியும் கிளாராவும் மணமுடித்துக் கொண்டனர். காதலும் சரி திருமணமும் சரி இலட்சியத்தை அடைய ஒரு தடையில்லை என்பதற்கு விஸ்வஜித் தன்வி ஜோடியும், கென்னடி கிளாரா ஜோடியும் தான் சிறந்த உதாரணம். ஆடவர்கள் இருவரும் தத்தம் மனைவிகளின் படிப்பு தங்களால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தனர்.

அதே நேரம் அஸ்வினியும் தனஞ்செயனும் சீக்கிரமே மணமுடித்துக் கொள்ளவேண்டும் என்பது அவர்களது நண்பர்கள் மட்டுமல்ல பெற்றோரின் ஆசையும் கூட. கமலாவும் குமரனும் தேஜஸ்வினி மூலமாக இதனை அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். தனஞ்செயனும் சீக்கிரமே அந்த நன்னாள் வந்துவிடுமென பெரியவர்களிடம் நம்பிக்கையாய் உரைப்பான்.

இவ்வாறிருக்க ஷான்வியின் பிறந்த நாளும் அருகில் வந்துவிட்டது. அதற்காக சித்தார்த் விஸ்வஜித் மற்றும் தனஞ்செயன் உதவியுடன் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க தயாரானான். அவளது பிறந்தநாளுக்கு முந்தைய தினம் வழக்கம் போல சித்தார்த்தின் காரில் ஹோட்டலுக்குச் சென்றவள் தனது சீருடையை மாட்டிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

சித்தார்த் இரகசியமாய் தனஞ்செயனை அழைத்தவன் அவனிடம் “நான் ஷானுவோட பர்த்டேக்கு இன்னொரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணிருக்கேன் ப்ரோ” என்று சொல்லிவிட்டு அது என்ன என்பதையும் சொல்ல

“வாவ்! இது அவளோட வாழ்க்கைல மறக்க முடியாத கிப்டா இருக்கும் சித்து… ஐ திங்க் ஷானு அத கிளம்புற டென்சன்ல மறந்துட்டா போல” என்று சொல்ல அதை ஆமோதித்தவன் தனது வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

அன்று மாலை வரை ஒரு வித குதூகலத்துடன் இருந்தவன் அன்று பல்கலைகழகத்துக்குப் போகாமல் ஷான்வியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தான்.

வேலை முடித்து வந்த ஷான்வி அவனைக் கேள்வியாய் நோக்கவும் எதுவும் பேசாது அவளை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.

வீட்டுக்கு வந்தவனிடம் அவள் எதுவும் பேசாது தனது அறைக்குச் சென்றுவிட்டாள். அவன் சமையலறையில் எதையோ உருட்டும் சத்தம் கேட்ட போது ஷான்வி அதை பெரிதுபடுத்தவில்லை.

இரவுணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் முடங்கினர் இருவரும். ஷான்வி ஆழ்ந்த துயிலில் இருந்தபோது அவளது அறைக்கதவு தட்டப்பட எழுந்தவள் இந்நேரத்தில் தனது அறைக்கதவை சித்தார்த் ஏன் தட்டுகிறான் என்ற கேள்வியும் தூக்கம் கலைந்த எரிச்சலும் ஒருங்கே எழ கடுப்புடன் கதவைத் திறந்தாள்.

அங்கே நின்றவனிடம் கத்தப் போனவளின் இதழில் ஆட்காட்டிவிரலை வைத்து பேசாதே என்று சைகைமொழியில் சொன்னவன் தனது மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு முகம் விகசிக்க நிமிர்ந்தான்.

“ஹேப்பி பர்த் டே ஷானு!”

வாழ்த்தோடு சேர்த்து அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன் “உன் வாழ்க்கைல நீ ஆசைப்படுறது எல்லாம் உனக்குக் கிடைக்கணும் பேபி” என்று பரவசக்குரலில் உரைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்தவளுக்கு உடல் சிலிர்க்க அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவளது பார்வையில் மாற்றம் தெரியவே விடுவித்தவன் சமையலறையை நோக்கிச் சென்றான். திரும்பி வரும் போது அவன் கையில் கேக்குடன் வந்தான்.

அழகான சாக்லேட் கேக். அவளுக்காகவே அவனது கையால் செய்தது. இதற்காக இருபது நாட்கள் விஸ்வஜித்தையும் தனஞ்செயனையும் அவன்  படுத்திய பாடு அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

கேக்குடன் தன்னெதிரே நின்றவனை அதே சிலிர்ப்புடன் நோக்கினாள் ஷான்வி. அவன் கேக்கை டேபிளில் வைத்துவிட்டு டேபில் வீடியோ கால் செய்யத் தொடங்கினான்.

தனஞ்செயன், அஸ்வினி, அனிகா, விஸ்வஜித், தன்வி, கிளாரா, கென்னடி என ஒட்டுமொத்த நண்பர்குழாமும் வீடியோ காலில் ஆஜராக அனைவரும் ஒரே குரலில் “ஹேப்பி பர்த்டே ஷான்வி” என்றதும் அவள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.

அனிகா கேக் வெட்டுமாறு கூறவும் சித்தார்த் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தவன் கத்தியை நீட்ட கேக்கின் முன்னே நின்றவள் ஒரு நிமிடம் கேக்கின் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு புன்சிரிப்பில் உதடு துடிக்க நின்றாள்.

ஆனால் சித்தார்த்தின் பார்வையைச் சந்தித்த பின்னர் அவளது இதழ்கள் தானாகவே “கேக் ரொம்ப அழகா இருக்கு சித்து” என்று சொல்லவே அவனுக்கு உலகத்தை ஜெயித்த மகிழ்ச்சி.

அப்போதே அவளை அணைத்துக் கொண்டவன் “கேக் கட் பண்ணு ஷானு” என்று சொல்ல வீடியோவில் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் பாட மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தாள் ஷான்வி.

பின்னர் கேக்கை வெட்டியவள் முதல் துண்டை சித்தார்த்திடம் நீட்ட அவனோ அதை ஷான்விக்கு ஊட்டிவிட்டான். அதை அவள் ருசித்து உண்ணவும் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஷான்விக்கோ தனக்காக இவ்வளவு மெனக்கெடும் அவனது காதல் தனக்கானது மட்டுமே என்ற மகிழ்ச்சி. கூடவே அவனது அணைப்பில் உண்டான சிலிர்ப்போடு முதல் முறையாக அவனைக் காதலுடன் நோக்கினாள் ஷான்வி.

தன்வி தங்கையின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தில் மகிழ்ந்தவள் இந்நேரம் பெற்றோர் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்க அடுத்த நொடி ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது. விஸ்வஜித் அவளை நோக்கியவன் கண்ணீரைத் துடைத்துவிட்டான். மனைவியின் கண்ணீருக்கு அர்த்தம் தெரியாதவனா அவன்!

நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொன்ன பின்னர் வீடியோ கால் துண்டிக்கப்பட சித்தார்த் மீதமிருந்த கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து மூடிவிட்டு தனது அறைக்குச் சென்றவன் கையில் ஒரு பரிசுப்பெட்டியுடன் வந்தான்.

ஷான்வி என்னவென்று அதிசயமாய் நோக்க அவளைத் திறந்து பார்க்குமாறு கூறினான் அவன். அவள் ஆவலுடன் அதைத் திறந்து பார்க்க உள்ளே மணிகண்டனும் பூர்ணாவும் புன்னகை முகமாய் இருக்கும் புகைப்படம் அவளைப் பார்த்துச் சிரித்தது.

அதைப் பார்த்ததும் இத்தனை நாட்கள் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் உடைப்பெடுத்துக் கண்ணீராய் வெளியே வந்தது. ஆம்! பெற்றோரின் இறப்பின் போது இறுகிப் போனவள் இன்று தனது பிறந்தநாளின் போது அவர்களின் புகைப்படத்தைக் கண்டதும் கலங்கிவிட்டாள்.

ஏனெனில் அதில் பூர்ணா மணிகண்டனுடன் இளம்வயது தன்வியும் ஷான்வியும் இருக்கும் புகைப்படம் அது! அமெரிக்காவுக்கு வரும் போது அதைக் காணாது தேடிப் பார்த்தவள் கைக்குச் சிக்கிய புகைப்படத்துடன் வந்து சேர்ந்தாள்.

இம்முறை இந்தியா சென்ற போது அவள் சித்தார்த்தின் வீட்டில் நேரம் செலவிட்ட இடைவெளியில் சித்தார்த் மணிகண்டனின் ஃப்ளாட்டுக்குச் சென்றவன் அங்கே பழைய பொருட்களை அடுக்கி வைத்திருந்த அறையை எதற்காகவோ திறந்து பார்க்க அங்கே இந்தப் புகைப்படம் கிடைத்தது.

அப்போதே அவளிடம் காண்பிக்க எண்ணியவன் ஏனோ மறந்து போனான். இன்று தான் அதற்கு நேரம் வாய்த்தது. ஷான்வியோ அப்புகைப்படத்தை பார்த்ததும் கண் கலங்கி அழத் தொடங்கிவிட்டாள்.

சித்தார்த் அவளை அணைத்தவன் தோளைத் தட்டிக் கொடுத்தான். கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஷான்வி “நீ எனக்கு குடுத்த இந்த கிப்டை நான் நம்ம வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன் சித்து… ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

சித்தார்த்துக்கு அவளது ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையில் ரெக்கை முளைத்தது போன்ற உணர்வு. அவனது மனம் இறகு போல இலேசாகிப் பறக்க ஆரம்பிக்க அவளது வதனத்தைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டவன் “ஐ லவ் யூ சோ மச் ஷானு… மை டியர் ஊர்மிளா” என்று சொல்ல அவள் முகம் செவ்வானமென சிவந்து போனது.

இதழில் குட்டிச்சிரிப்பு அமர்ந்து கொள்ள “ஓகே மை டியர் லெட்சுமணா! எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்க சித்தார்த் கேலியாக

“ஐயோ! இப்போ டைம் ட்வெல் தேர்ட்டி ஆகுதே… இங்க இருக்கிற கோயில் எல்லாம் இப்போ லாக் பண்ணிருப்பாங்க… நம்ம நாளைக்கு மார்னிங் அம்மா, அப்பா, தேஜூ எல்லாரையும் வீடியோ கால்ல கனெக்ட் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பதிலளிக்க “டபுள் ஓகே!” என்று கன்னம் குழியச் சொன்னவளை காதலுடன் அணைத்துக் கொண்டான் அவளது சித்தார்த். அந்த லெட்சுமணனுக்கு அவனது ஊர்மிளா கிடைத்த மகிழ்ச்சியில் வேறு எதுவும் பெரிதாகத் தோணவில்லை. நாம் காதலிப்பவரின் வாயால் நம்மைக் காதலிப்பதாகச் சொல்வதைக் கேட்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா!